கருக்கிருட்டு மழை (குறு நாவல்)

1

“நீ ஆத்தூர்க்காரியைக் கொண்டுவா, வேறொன்னும் வேண்டாம்”.

மாசத்துக்கு ரெண்டு தவணை போய்வருகிற ‘வெற்றிலைத் தாவளத்துக்கு’ அப்படியான கிராக்கி. மிஞ்சிப் போனால் பத்துநாட்களுக்கு மேல் கடைகளில் வெற்றிலை தங்காது. ஆத்தூர் கொடிக்கால் வெற்றிலை குளத்தூர் போனாலும், விருதுபட்டி போனாலும், தரைக்குடி எருதுகட்டு என்றாலும்
“ஆத்தூர்ச் சரக்கு வருதா?” என்று ஊர் ஊருக்கு கடைக்காரர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

“வியாபாரிகள் நம்ம சரக்குக் கேட்கிறாங்க;நயம் சரக்குன்னு தெரிஞ்சிதான் நம்மகிட்ட வர்றான். நமக்குக் கொடுக்க வக்கில்லைன்னா, அவனா ஜவாப்தாரி. யார் கொண்டுவந்து போட்டாலும் வாங்கிட்டுப் போவான்”.

சோழவந்தான், உப்பத்தூர் தோட்டக்காரர்கள் தயராயிருக்கிறார்கள்.

கொடிக்கால் முதலாளி முருகவேல் மனசுக்குள் தாவளத்துக்குப் போகக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்ததார்.

சங்கரக்கா, மாதாயி, லிங்கம்மா, ஜக்கு, சிவனீஸ்வரி, சரசு அஞ்சாறு பேர் கைகாலுடைய பொம்பிளைகள்மட்டும் அல்லர்; கை நகக்கண்களில் கருக்குடைய வெட்டுக்கிளிகள். மும்மரமாய் வெற்றிலைகிள்ளிப் போட்டுக் கொண்டிருந்தனர். நகங்கள் கொழுந் தண்டைக் கத்தரிக்க, விரல்கள் முதுகில் தொங்கும் ஓலைக் கூடைக்கு ஓடும்.

“லிங்கம்மா, இங்ங வா”

நிரை பின்னிருந்து சத்தங்கொடுத்த முருகவேல் முதலாளியை ஏறிட்டாள் லிங்கம்மா.

“யாருக்கு இது?” ஆயப்படாமல் விட்டிருந்த கொழுந்து வெற்றிலைகளைக் காட்டிக் கேட்டார்.

“தப்புக் களை’ன்னா போகட்டும்னு விட்டிரலாம். இது களை இல்ல, மகளே விலை”

அவள் அச்சப்பட்டதே ஆயிற்று.சின்னப்பிள்ளை நாக்குப் போல பளபளப்பான கொளுந்துகளைக் கிள்ளப் பரிதாபப்பட்டு அப்படியே விட்டு வந்த வினை அவள்மேல் தாவிக்கொண்டது.

“இதுகளுக்கு ஆயிசு அம்புட்டுத்தான்” முணுமுணுத்தாள்.

தப்புவெற்றிலைகளைக் கிள்ளி விட்டு, முன்னால் போய் நிரையில் கோர்த்துக் கொண்ட லிங்கம்மா கேட்டாள்,
“அக்கா, முதலாளி முகத்தைப் பாத்தீகளா?”

“என்ன சங்கதி?” காதுகடித்தாள் சங்கரக்கா.

“பெரிய பூவு - அது மொகமா விரிஞ்சாப் போலத் தெரியுது”

லிஙம்மாவுக்கு இன்னும் ஒன்னு தோணினது, இப்போது கிள்ளிப் போட்ட அந்தக் கொழுந்துக முதலாளி முகப் பளபளப்புக்கு ஆகுமா?

இந்தப் பூ மலர்வுக்கான ஊட்டம் எங்கிருந்து கிடைத்தது? இந்தப் பூ விரிய எத்தனை நாட்கள் உரம் இடப்பட்டது?தோட்டக்காலில் இருக்கிற அத்தனை பெண்களுக்கும் தெரியும். அவர்களிடம் கொழுந்து பறிக்கும் இரு கைகள் மட்டுமில்லை; கதை பேச ஒரு வாயும் கேட்க இரு காதுகளும் இருந்தன. ‘நீ ஒன்னு சொல்ல, நா ஒன்னு சொல்ல’ன்னு கூடிக்கொண்டு போகும்.

எல்லா வசதிவாய்ப்பும் கொண்டிருக்கிறார்கள் கொடிக்கால் முதலாளிமார்கள். அவர்களுக்கு எத்தனை கப்பல்களிலும் கால்வைத்துச் செலுத்த முடியும். ஒன்னுக்கு இரண்டு மூணு என்று தொடுப்புவைத்துக் கொள்வார்கள். வெற்றிலைத் தோட்டக்காட்டுப் பெண்டுகள் தமது பேச்சில் அதுக்கு ஒரு சமாதானம் வைத்திருந்தனர்.

“அதுக்கெல்லாம் ஒரு லவிப்பு இருக்கனும்.”

நாள்பட்ட அனுபவமும் வயது மூப்புமான சங்கரக்கா கேட்பாள்,
“இப்ப நமக்கும் தான் கேக்குது. நாம நெனைச்சாலும் அப்படி வச்சிக்கிற ஏலுமா?”

“என்னத்தா நா சொல்றது” சங்கரக்கா கேட்டாள். என்னத்தா என்பது அங்கே ஓருழைப்பில் கவிந்திருக்கும் அத்தனை பேருக்குமான வார்த்தை.

“வாஸ்தவம்” சிவனீஸ் சொன்னாள்.

“அதான் சொல்லீட்டமில்ல வாஸ்தவம்னு. சும்மாவா? கிளி மாதிரி ஒரு பொண்டாட்டி இருந்தாலும், கொரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டியும் இருக்கனும்’னு சொல்றாங்கள்ளே”

மாதாயி எடுத்துக் கொடுக்கிறாள்.

லிங்கம்மா இடைமறித்தாள். பின்னால் முதலாளி அசைவு தென்படுகிறதா என்று சுத்துமுத்தும் நோட்டமிட்டுக் கன்னங்குழி விழச் சொன்னாள் “சே. நம்ம முதலாளிய வீணால பழி போடக் கூடாது. புளியம்பட்டி அக்கா அவ்வளவு அழகா இருப்பாங்க. முன்னால் நடக்கவிட்டு பின்னால பாக்கனும்னு தோனும்.”

முதலாளி முருகவேலுக்குக் கொடிக்கால் தெரியும்: தோட்டத்தில் பலகாலமாகப் பதிவாய் வேலைபார்த்து வருகிற பெண்மக்களைத் தெரியும். இப்பெண்மக்கள் கிள்ளி முதுகுக் கூடைக்குள் வீசிஎறியும் கொழுந்துகளைத் தெரியும். முதலில் ஓலைப்பாய், இரண்டாவதாய் வாழைமட்டைகள் வைத்துக் கட்டி, சின்னப்பிள்ளை ஏணை போல் சுருட்டி வண்டியில் ஏற்றி ’தாவளம்‘ போகும் வண்டிஓட்டி பச்சையைத் தெரியும். யார்யாருக்கு எந்தெந்த ஊரில் கடை என்று அறிந்தவன் பச்சை.

எல்லோருடைய உழைப்பும் சிரத்தையுமிருந்தால் வெற்றிலைத் தாவளம் ஒழுங்கா முறையா போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரும். அந்தந்த வேலைக்குரிய ஆட்களைத்தான் செய்யப்போடுவார்.

அவர்களுக்கு உழைப்பு கொடுப்பது தவிர ஏமாத்தத் தெரியாது.

உழைப்புக்கேற்ற கூலி தொழிலாளிக்கு; ஏமாத்தமில்லாத உழைப்பு முதலாளிக்கு. கொடிக்கால் முதலாளிக்கு நம்பிக்கையின் அச்சாரங்கள் பெண்டுகளும் பச்சையும். அதற்காக அப்படியே விட்டிரவுமாட்டார். சரியாய்ச் செய்கிறார்களா இல்லையா என்று போய்ப்போய்ப் பார்ப்பார். அது அவர்கள் மீதான கண் இல்லை. அவர்கள் உழைப்பின் மேல் வைக்கும் கண்.

இவர்களைத் தன் பிள்ளைகளாய்ப் பார்த்தார். இந்தப் பிள்ளைகள் மேல் அவர் கோபப்பட்டுக் கண்டதில்லை.

வயிற்றைத் தள்ளிக்கொண்டு வந்தாள் ஏழுமாதக் கர்ப்பிணி லிங்கம்மா. சரிக்குச் சரி உயரமான கொடி என்றால் பரவாயில்லை; கொஞ்சம் தாழ்வான கொடியில் குனிந்து கொழுந்து பறித்து, நிமிர்ந்து பின்னால் மாட்டிய கூடையில் போட்டாள்.

“ஏ…ஏ…நில்லு”

முதலாளி அதறப்பதற ஓடிவந்தார்.அன்னையோடு லிங்கம்மாவுக்கு சீட்டுக் கிழிக்கப்பட்டது. முதலாளி சொன்னார்;
“ஒன்னையப் போயி குனிஞ்சி நிமிர அனுப்புனாராக்கும் ஒன்வூட்டுக்காரர், நல்ல யோசனைதான். பேசாம வீடு போய்ச் சேரு.”

கொடிக்காலில் கால்வைத்தால் என்ன கூலி உண்டுமோ, அதை அவளுக்கு அன்னாடம் சேரும்படி செய்தார்.

“நாந்தான் ஒன்னுமே செய்யலியே, எனக்கு எதுக்கு?” லிங்கம்மா எவ்வளவோ மறுத்துப் பார்த்தாள்.

ஒற்றைப்பதில் முதலாளியின் மனசுக்குள்ளிருந்தது; “ஒரு உசிருன்னாலும் பரவாயில்லை, ஈருசுரு.”

நாலுமாசம் பேறுகால விடுப்புக் கொடுத்து, அன்னாடம் உலைவைக்கவும் குறையேதுமில்லாமல் பார்த்துக் கொண்டவர் அவர்.

அந்த லிங்கம்மாதான் “எக்கா…மொதலாளி மொகத்தைப் பாத்திகளா” என்று மலர்ச்சியாய் வந்து பங்கு வைத்தாள்.

“புளியம்பட்டி போய் தாமசித்து வந்த ஆறு நாட்களில்,அந்தத் தங்கச்சி நல்லா மந்திரிச்சி அனுப்பிருக்கா” சங்கரக்கா வாய் திறந்து வாழ்த்தினாள்.

முகம் தெரியாது. முன்னப்பின்ன அறிஞ்சதில்லை. ஆனாலும் முதலாளியைப் பிரியமாகப் பார்த்துக் கொள்கிறாள் என்பதினால் அவர்களுக்கு தன்னறியாத பந்தம் உண்டாகியிருந்தது. எங்கோ இருக்கும் ஒரு மகராசி, நடுத்தர வயசுள்ள முதலாளியின் மனசு கனறாமல் பார்த்துக் கொள்கிறாள்; முதலாளி மாறியிருந்தார். செக்கச் சிவந்த மேனி: ஆறு நாள் தாமசம் கூடுதல் சிவப்பாக்கிவிட்டது. எப்போதும் புன்னகை வழியும் முகம்: இப்போது கூடுதலாய் மலர்ந்துகிடந்தது.

2

‘ஜம்’மென்று வீசியடித்துக் காடுமேடு, மலை பள்ளத்தாக்கு என வனவெளி எல்லாவற்றுக்கும் கூட்டிப்போகிறது கனிமர வாசனை. எங்கெங்கு பறக்குமினங்கள் உண்டோ அங்கெல்லாம் காற்றில் சவ்வாரி ஏறி நா வந்திருக்கேன் என்று கூப்பிடும்; மயக்கும் பழவாசனை கூப்பிட்ட வழி தெரியாமல் ஆகாயமார்க்கம் ஓடி, கண்மாய்க்கரையில் ஓங்கி உயர்ந்து, தாட்டியமாய் நிற்கும் கனிமரங்களுக்குள் மொதுமொதுவென மோதும் பறைவைக் கூட்டம்.

கொடுக்க ரம்மியமான கதைகளோடு தயாராயிருக்கிற ’பச்சை’ ஒரு கனிமரம்.

கதைக் கனிகளைக் கொத்திக் கொண்டு போக, அவனைச் சுற்றிக் கும்மரிச்சம் போடுகின்றன சின்னஞ்சிறு குஞ்சுகள்.

பாலியகாலம் கதை கேட்பினால் நிரம்பியவை; ஊருக்கு எத்தனை திசைகள் உண்டுமோ அத்தனையிலிருந்தும், எத்தனை பாதைகளுண்டுமோ அத்தனையிலிருந்தும் கதைகேட்கக் கூடும் சிறிய குஞ்சுகள். அந்தக் காரை வீட்டிலிருந்து கதை கேட்க வரும் தேவி என்னும் ராணித்தேனீயைச் சுற்றி ‘காச், மூச்’ என்று சத்தக்காடு போட்டு வருது கூட்டம். ராணித்தேனீ தென்படாதபோது மற்ற தேனீக்களும் கண்மறைந்திடும். ராணித்தேனீ இல்லையெனில் பச்சை என்ற கதைமரம் ஊருக்குப் போய்விட்டது என்று பொருள்.

காத்திருக்கும் சிறுசிறு உயிரிகளைப் பச்சை , அங்கு தங்கல் போடும் நாட்களில் ஏமாற்றியதில்லை.

ஓசையில்லாத ஒரு விசில் சத்தம் மனசுக்கு மட்டும் அந்நேரத்துக்கு கேட்கும் போல ; மனசின் விசில் கூப்பிட, காடுகரை, கிணறு, தோட்டம், கம்மாய் என எவ்வெவ்விடத்தில் நின்றார்களோ, அதுகளை அனாதையாக்கி தங்களின் கதைசொல்லி தேடி ஓடிவந்தார்கள். தேவியின் வீடென்பதால் அவளும் கதைகேட்க எந்நேரமும் அங்கன தொழுவத்தில் கிடப்பாள். நிறையக் கதைகள் சொல்லி, பிள்ளைகளை யோசிக்க வைக்க ஒரு கொக்கி போடுவது அவன் வழக்கம். ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் ஒரு கேள்வியைத் தொங்கவிட்டு எழுந்து போய் விடுவான். ஊடேஊடே கதைக் கணக்குகள் போடுவதுண்டு. சிறுசுகள் ஒவ்வொரு முகமும் யோசனைகளின் கூடாரமாய் ஆகி விடும்.

“ஒரு சந்தைக்கு 40 வாசல்.ஒருவன் 40 தேங்காய் கொண்ட இரண்டு சுமைகள் சந்தைக்குக் கொண்டுபோனான். ஒவ்வொரு வாசலுக்கும் ஒரு சுமைக்கு ஒருதேங்காய் வரிகொடுக்கவேண்டும். வாசலுக்கு ஒன்று கொடுத்துவிட்டு, 40 வாசலைக் கடந்து மிச்சத் தேங்காயை விற்று லாபமும் பார்த்து வந்தான். எப்படி?”

கதைசொல்லி பிறகு உலாத்தப்போனான்.தேங்காயைச் சந்தைக்குக் கொண்டுபோன ஆள் ஏப்பைசாப்பையான விவசாயி இல்லை. கணக்குப் போடத் தெரிந்த புத்திசாலி. வியாபார நுட்பம், சூட்சுமம் அறிந்தவன்னு சிறுசுகள் காதில் போட்டுவிட்டு அகன்றான்.

பிள்ளைகள் நீ சொல்லு, நா சொல்லு என்று மல்லாடிக்கொண்டிருந்தனர்.

“ஒன்னுக்கும் வரமாட்டேங்குதே” முகத்தைக் கோணலாக்கிச் சடைத்துக் கொண்டான் காசி.

“நீங்க ஒன்னுக்கும் போக வேண்டாம்; ரெண்டுக்கும் போகவேண்டாம். கேட்டதுக்கு விடையைக் கொண்டுவாங்க முதலாளி”

காசிக்கு எட்டுவயசு.பச்சைக்கு முவ்வெட்டு இருபத்திநாலு. ஊழியம் செய்கிறவன் உயர்சாதிக் கணக்குவைத்துத்தான் பேசவேண்டியிருக்கிறது; அந்த ஊர் மட்டுமென்ன, அனைத்துக் கிராமங்களிலும் பச்சைகளின் வயசுக் கணக்கு செல்லுபடியாவதில்லை.

“முதலாளி ஒன்னும் முடியலயா, கொஞ்சம் மூளைக்கு மேலே போங்க, முதலாளி”

அவன் சொன்னது யோசிப்பில் மேலே போகச் சொல்லி; ஒன்னுமறியாப் பயல் நிசமா மேலே இருக்குப்போல என்று தலைக்கு மேல் தடவினான்.

எப்போதும் கடைசியாய் தேவியைக் கேட்கும் வழக்கம் உண்டு, அந்த முறையை மறந்து போகாத பச்சை தேவியைப் பார்த்துக் கேட்டான்
“அம்மணி, ஒங்களுக்கு ஒன்னும் தோணலையா?”

கழுத்து சுளுக்கிக்கொள்வது மாதிரி அம்மணியிடமிருந்து தலையசைப்பு வந்தது.

‘ம்க்கும்’ பரிதாபமாய் பார்த்தாள். இப்ப நா சொல்லப்போறேன் என்பது போல் ஒரு பார்வை பார்த்து விடுவிப்பான்.

“ஒரு வாசலுக்கு ஒரு மூடைக்கு ஒரு தேங்காய் வரி. 40 வாசல். ரெண்டு மூடை கொண்டுபோனானா, 20 வாசல்வரை ஒரு சுமையிலிருந்து இரண்டிரண்டு காயாகக் கொடுத்துவந்தான். 21-வது வாசலில் ஒரு சுமை காலியாச்சு, ஒரு சுமை மீதியிருக்கு. அப்ப இந்த ஒரு சுமையிலிருந்து வாசலுக்கு ஒன்னாக் கொடுத்துட்டு, மீதி 20 தேங்காயை வித்து லாபமும் பாத்துட்டு வந்துட்டான்”

சின்னப்பிள்ளை தேவி வெட்கத்தால் சுண்டிப் போனாள். இது கூட தெரியலயா ‘மடச் சாம்பிராணி’ என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாரித்தாயை முழங்கையால் ஒரு இடி இடித்தாள்.

“இவ என்னையக் குத்துறா” மாரி கத்தினாள்.உடனே கேட்டுக் கொடுக்கனுமா என்ன? பெரியவீட்டுப் பிள்ளையின் குத்து அது; நீதி எடுபடத் தோதில்லை.

3

வெத்திலைத் தாவளம் போய் விட்டுத் திரும்பிய இரவில் பச்சையின் கண்ணில் தேவி தென்படவில்லை.

ஒன்னோ ரெண்டோ நாளிருந்துவிட்டு ஆத்தூருக்குத் திரும்ப வண்டி கட்டவேணும். அதுக்குமுன் தேவியைத் தரிசித்துவிட்டுப் போக நினைக்கிறான். காலைமுதல் ரவ்வு வரை அவனைச் சுற்றிச் சுற்றி வரும் மைனாக் குஞ்சு, அன்று ஒரு அலுக்கமும் இல்லாமல் எந்தக் கூட்டில் போய் ஒதுங்கியது? ஊர் அடங்கும் நேரத்துக்கு மேலாக தொழுவத்தில் அவன் விழித்திருந்தான்.

அவனிருக்கும் நாட்களில் வேளாவேளைக்கு சாப்பாடு கொடுக்க வேலைக்கார ஆவுடை தொழுவத்துக்கு வந்து போனாள். பச்சைக்கு வேளை தவறாமல் சாப்பாடு கொடுக்க கொடிக்கால் முதலாளி கட்டளை. வீட்டு முதலாளியும் எழுத்துப் பிசகாமல் எல்லாம் நடக்கிறதா என்று அப்பப்ப விசாரித்துப் போவார். அவனிருக்கும் தொழுவுப் பக்கம் வந்து வந்து பார்வையிடுவார்.

பகல்பட்டு முழுசும் அந்தச் சிறுஉரு தென்படக் காணோம்.

“தாயி, சின்னம்மணியைக் காணோம்?”

ராத்திரிச் சாப்பாடு கொடுக்க வந்த ஆவுடைக்கு, சாதாரணமாய் வந்த கேள்வியைக் கண்டு சிரிப்பு புறண்டது.

“ஒனக்குச் சொல்லாம விட்டாச்சா, பாப்பா பெரிய மனுசியாயிட்டா”.

பச்சை எதிர்பார்க்கவில்லை.

அக்கக்காய்ப் பிரித்துக் கூறுபோட்டு அச்சொல்லின் உள் அர்த்ததைத் தேடினான். காலங்கள்தோறும் ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டானதுதான். ஆனால் தேவிக்கு என நினைத்துப் பார்க்கையில் குதூகலிப்பு நடுத்தண்டில் ஓடிற்று. இனி இவளிடத்திருந்த ஒரு சிறுபெண் கண்மறைவாகி ஒரு முழுப் பொம்பிளை உண்டாகிவிடுவாள். பெரியமனுசித் தோரணையெல்லாமும் அச்சிறு உருவிடம் கவிந்து கொள்ளும். சிறுபிள்ளைகளது தேவதைக் கதைகளில் வருகிற - ஒரே நாளில் ஆகாசத்துக்கும் பூமிக்கும் வளர்ந்து படரும் அவரைக் கொடி போல், அதிசயக் கொடியாய் வளர்ந்துவிடுவாள்.

வெற்றிலைச் சிப்பம் ஏத்தி ஊர் ஊராய் வியாபாரம் செய்யப்போயிருந்ததால் சேதி பகிராமல் ஆகியிருக்குமோ? மூணாம் நாள் தலைக்குத் தண்னி விடும் விசேசம் நடந்திருக்கும்.

“அப்ப வெத்திலைக்கு என்ன பண்ணுனீங்க தாயி?”

“அப்ப பாத்து நீ காணாமப்போயிட்டா நாங்க என்ன செய்ய?வீட்டுக்குள்ள வெத்திலை வண்டியை வச்சிக்கிட்டு ஓங்கிட்டச் சொல்லாம வேற யார்ட்ட சொல்லப் போறாங்க. எப்படியும் ஒரு சிப்பம் கணக்கு வரும். தலைக்குத் தண்ணி ஊத்தியாச்சு. வீடு கூட்டிறன்னைக்கு ஓங்கிட்டச் சொல்லலாம்னு இருப்பாங்க” ஆவுடை சொன்னாள்.

சுற்றம் சொந்தத்துக்குச் சொல்லி ஆளும்பேருமாய் மொய்க்கிறபோது வெற்றிலை கட்டுக்கட்டாய் அருவாகிப் போகும்.

“அதுவரைக்கும் குச்சில் கட்டி ராசாத்தியை வச்சிருப்பாங்க. பொம்பிளைங்க தவிர வேற யாரும் பாக்கக்கூடாது.”

“அதெப்படீ தாயி, பெத்த அய்யா?”

கேள்வியை நாக்கில் அடக்கிக் கொண்டான். கேட்காமல் போனது நல்லது.இல்லையென்றால் எதிர்த்தாப்பிலிருக்கும் ஆவுடை சந்தேகக் கண் விரித்திருப்பாள். பாக்கனும் போல இருக்கு என்றால் “என்ன பைத்தியக் காரனாட்டம்” என்று சத்தம் போடாமல் அடங்கமாட்டாள்.

எச்சரிக்கையாய் பின்கட்டில் தேவியை சிறை வைத்துக் காத்தார்கள்.

இரவின் அமைதியில் கை நிறைய அடுக்கிய கண்ணாடி வளையல்கள் பின்கட்டிலிருந்து பேசின. தேவி இருக்குமிடம் வளையல் இசையால் அடையாளமாகியது. அவளுடைய நடையோடு வளையல் ஓசையும் கூடவே போனது.வளையல் இசை அவனைப் பேதலிக்கச் செய்தது.

தொழுவத்தில் அவனுக்குச் சாப்பாடு வைக்கையில், வேலைக்கார ஆவுடை சொன்னாள், “சின்னம்மணி, பால் பீய்ச்சப் பழகிட்டாங்க.”
காலை, முன்னந்தி இருநேரமும் தொழுவத்தில் கட்டப்பட்டட பசு காணாமல் போய், திரும்பத் தொழுவத்தில் மாட்டப்படுவதின் மர்மம் பச்சைக்கு வெளிப்பட்டது. காலை, அந்தி இருவேளையும் தொழுவத்திலிருந்து ஒத்தைக் கறவைப் பசு பின்கட்டுத் தாழ்வாரத்துக்குப் போய் வந்தது. தொழுவத்தில் உழவு காளைகள் அல்லாமல் இரண்டு கறவைப் பசுக்கள். ஒரு பசு சுரப்பு நின்னு போன நாட்களில், இன்னொன்று பால் கொடுப்பது போல், கால மாறுபாடு இருக்கும்படி தோதாய் பசுக்களை வாங்கி விட்டிருந்தார்கள். ஒரு பசு சினை பிடித்துப் பயிராகி, தட்டுக்குழி நெறிந்து கன்று கீழே விழுகிறவரை, மற்றொன்று பல்கிப் பெருகிப் பாலாய்ச் சொரிந்து கொண்டிருக்கும்.

பச்சையின் குலத்துப் பெண்டிருக்குக் பால் கறத்தல் கல்லாமல் பாகம்பட்ட தொழில். பாவாடையில் இருக்கிறபோதே பால் கறந்தவர்கள்; சில பசுக்கள் பொம்பிளைக பால் கறந்தால் ஆடாமல் அசையாமல் நிற்கும்.பெண்டுகள் கைகளின் மிருதுத் தன்மையைப் பசுக்கள் அறிந்திருந்தன.

ஆட்டில் பால் கறப்பது லேசுப்பட்ட காரியமில்லை; பசுவுக்கு ஒத்தை ஆள், வெள்ளாட்டுக்கு ரெட்டை ஆள். வெள்ளாடு ஒரு இடத்தில் தரிக்காது: எக்குப் போட்டுத் தாவித் தாவி ஓடிக்கொண்டே இருக்கும். பின்னங்கால்களை லாவிப் பிடித்து, இரண்டு கால் மூட்டுகளுக்கிடையே இடுக்கி பாத்திரத்தில் பால் பீய்ச்சிக் கொண்டுவந்து விட்டால், பெரிய சாதனை. பிடித்து நிறுத்த முன்னுக்கு ஒரு ஆள் வேண்டும்.

இன்னொரு நாள் செடிகளின், மரங்களின் பசிய இலைகளில், கண்ணாடிகளாய்த் தகதகத்த வெண்பனி முத்துக்களை உறிஞ்சியபடி வந்தது ஏறுவெயில். இளங்கோழிக்குஞ்சுகள் இரண்டை முடிந்து தொங்கவிட்டு ஆவுடை வீட்டுக்குள் நுழைந்தாள்.

“எதுக்கு?”

“வந்து சொல்றன்” கடந்து போனாள்.

“குமராகிட்டா இல்லையா, பச்சை உடம்பு. கோழிக்குஞ்சு சாறு உடம்புச் சூட்டை உண்டாக்கும்,குளுச்சிய அண்ட விடாது”

“பிள்ளை பெத்த பச்சை உடம்புக்குத் தான அந்த மருத்துவம்”

“இதுவும் பச்சை உடம்பு தான”

பூப்பெய்திய உடம்பு பச்சைமாவு. இடுப்பு எலும்பு வலுக்கொண்டு சதைத் திரட்சி கொள்ள நாளெடுக்கும்.முதலாளி நாச்சியம்மா ஒரு சாட்சி. அவ அம்மாக்காரி உளுந்தும் பச்சரிசியும் கலந்து ஊறவைத்து அரைத்த மாவில் களி செய்து, நடுவில் சிறு குழி எடுத்து நல்லெண்ணை ஊற்றித் தொட்டு தொட்டுச் சாப்பிட வைத்து நாச்சியம்மாவை ஆளாக்கினாள். கடித்துக் கொள்ள கறுப்பட்டி வெகு தோது. இடுப்பெலும்பு வலுக்கொண்டு சினை பிடிக்கத் தயாராகி விடும். இத்தனை குழந்தைகள் பெற்ற பின்னும் கல்லுக்குத்தியாட்டம் நிற்கிறாள் நாச்சியம்மா என்றால் அதுக்கு இந்தப் பண்டுவம் காரணம்.

“சின்னம்மிணிக்கு விரல்ல நகச்சித்து வந்திருக்கு” பின்புறத் தாழ்வாரத்தைக் காட்டினாள். தற்செயலாய்ப் பேசுவது போல் நிறைய சேதிகளை சொல்லிவிட்டுப் போவாள் ஆவுடை.

நகச் சீக்கு ‘நகச்சித்து’ ஆகிவிட்டது. எலுமிச்சம் பழத்தைத் துளை செய்து விரலை அதற்குள் சொருகிக் கொள்ளச் செய்தார்கள்.நாளாக ஆக விரல் புடைத்துக் கொண்டு போயிருக்கிறது. ஏதோ ‘புறப்பாடு’ என்று சந்தேகம் வந்தது: லேசாய்க் காய்ச்சல் அடித்தது. காய்ச்சல் வந்தாலே அம்மனுடைய விளையாட்டுத்தான். வேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்து ‘புறப்பாடு’ கண்ட விரலில் ‘அம்மங்காப்பு’ போட்டார்கள். வேப்பிலையும் மஞ்சளும் சேர்ந்து, காயக்காய விறு விறுவென்று இழுத்து உடலே ஒரு குலுக்கு குலுக்கியதாம்.

“பரிதாபமா இருந்துச்சு. சின்னம்மணி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க”

4

பிடித்த பிடியை விடத்தெரியாது ஐப்பசி, கார்த்திகை அடைமழைக்கு. மாசிமழை அஞ்சாறு தூத்தல்போட்டு முத்தம் தெளிச்சிட்டு உடன் உள்வாங்கிவிடும். ஐப்பசி, கார்த்திகை அடைமழை கிளம்பிப் போகிற மாதிரித் தெரியவில்லை. நாற்புறமும் சூழ்ந்த தீவாகியிருந்தது ஊர்; “ஊருன்னு சொல்லவா? சத்தா சமுத்திரம்னு சொல்லவா?” என்று ஆத்திரப்பட்டாள் ஆவுடை. இருக்க இருக்க கருக்கிருட்டாகிக் கொண்டுபோனது.

ஒத்தை வீடு தெருவாகியிருந்தது: கொடி அத்தி விளார்கள், வெள்ளை நொச்சிமார்கள் தரித்து, வீட்டைச் சுற்றிலும் பனைமட்டைகள் குறுக்காய்ப் பிடித்துக்கட்டிய படல். வாசல்படலைத் தூக்கி நுழைந்தால், இடது பக்கம் தொழுவம்.இரண்டு ஜோடி உழவு மாடுகள், ‘சிவனேன்னு’ படுத்துச் சுகம் கொண்ட மாடுகளை ஏர் பூட்ட, உழவுஅடிக்க, தட்டுவண்டி பூட்டிக் காடுகரைக்குப் போகத் தோதில்லை. லம்பாடி மாடுகளுக்கு இரட்டைக் கலப்பைதான் தோது; கொட்டாரத்துக்குப் பக்கம் மரக்கொப்பில் தூக்கிக் கட்டியிருந்தன இரட்டைக் கலப்பைகள். மழைக்கு ஈரப்பதமாகி, ஓதமேறி கரையான் அரிக்கக்கூடுமென ஏணைகட்டித் தூக்கியிருந்தது.தூக்கிக் கட்டிய மரத்தை ஒட்டி இடது பக்கம் ஒரு தட்டு வண்டி: ஒரு கூட்டுவண்டி. தாவளத்துக்குப் போகும் பார வண்டி. பச்சையின் கைவிரல் பட்டதும், பதறி எழுந்து தாவளத்துக்குப் பாய்ந்து செல்லக்காத்திருக்கும் காளைகள், இப்போது கட்டுக்கிடையாய்க் கிடந்தன.

ஆகாயத்துக்கும் பூமிக்கும் தைத்துப் போட்டதுபோல் ‘சொர்’ரென்று நெய்து கொண்டிருந்தது மழை. மனுசர்களை முடக்கிச் சிக்கு எடுப்பதில் மழைக்கு ஒரு சந்தோசம். நல்லநேரம், வண்டியில் அடைபட்டுக்கிடந்த வெற்றிலைச் சிப்பங்கள் அடைமழை தொடங்கு முன்பாகத் தீர்ந்துவிட்டன. ‘கொடுங்கொடுங்’ன்னு ஆடுகிற மழையில் அழுகி நாறிப்போயிருக்கும். பச்சை ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டம். ஊரூருக்கு வெத்தலை போடுவது முடிந்து விட்டதால், கொடிக்கால் முதலாளி புளியம்பட்டியில் தஞ்சம்.

‘வெருக், வெருக்’-கென்று உட்கார்ந்திருந்தான் பச்சை.

“என்ன தனியா”

கோணிப்பைக் கொங்காணி போட்டபடி ஆவுடை வந்தாள்.

என்ன கேள்வி? லேசாய்ச் சிரித்தான். யாருமே இல்லாதபோது தனியாய்த்தான் உட்கார்ந்திருப்பான்; மழை உண்டாக்கிவிட்டிருந்த தண்ணீர்த் தீவின் நடுவில் அவனுக்கு ஒரு மனிதத் துணை தேவைப்பட்டது.

“மரமிருக்கு,வௌவால்களக் காணமேன்னுதான் கேக்கன்”

அந்தக் கனிமரத்தைச் சுற்றி எப்போதும் ஜேஜே-ன்னு குவியும் வௌவால் குஞ்சுகளைக் காணமே என்று கேட்பது ஆவுடையின் குசும்புத்தனம்.

“அதான் தெரியுதே” என்றான் ஈரெட்டாய்.

அப்போதுதான் வேகவைத்திருக்க வேண்டும். கார வீட்டிலிருந்து அவித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொண்டுவந்திருக்கிறாள் ஆவுடை. முந்தானையில் கட்டிக் கொண்டுவந்த கிழங்கை, “துண்டைப்பிடி” என்று சூடாய் ஆவி பறக்க கொட்டினாள்.

“எனக்குப் போட்டுட்டா, எப்பிடி?”

“நானுந்தான்”

அவனுடைய துண்டிலிருந்து ஒரு கிழங்கை எடுத்து உரித்தாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், என்னவோ தோன்றியிருக்க வேண்டும் ஆவுடைக்கு.

“எங்க கையைக் காட்டு?”

அவனுடைய வலது கையை விரித்தாள்: பக்கமாகத் தன்னுடைய கையை வைத்துப் பார்த்தாள்.

“ரெண்டும் ஒன்னா இருக்கு, சரிதான்.”

“என்ன சரி?”

“நா நெனைச்சது சரியா இருக்கு. ஒங்கையில ஏன் ஒன்னு கூட இருக்கு?” கட்டைவிரல் பக்கம் இன்னொன்னு சிறுசாய் ஒட்டிக்கிடந்தது.

“ஒனக்குமட்டும் ஏன் அப்படின்னு பாப்பா கேட்டாளா?”

தேவியைத் தான் குறிப்பிடுகிறாள்.

“ஆமா, கேட்டா.”

“அப்ப ஒங்கையத் தொட்டாளா?”

ஆவுடைக்கு அவன் தலையசைப்பு, பார்வை,முகம் எல்லாமும் ஆச்சரியக் காடு போல் விரிந்தது. அவன் கையைத் தேவி தொட்டது, புரட்டிப் பார்த்தது, அந்த மிச்ச விரலை அதிசயிப்பாய்த் தடவிக் கொடுத்தது, வலிக்குமா என்று கேட்டது – எல்லாக் காட்சிகளும் ஓடின.

“என்னையே தொட விடுறதில்லை.”

தீண்டாமைப் புள்ளியின் சொல்லப்படாத கதைகள் அடங்கிக் கிடந்தன.

இருவரது கைகளையும் பக்கம்பக்கம் வைத்து உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் ஆவுடை. பச்சையின் கைகளில் நரம்போட்டம் அறிய இயலாதபடி கறுப்பு அப்பியிருந்தது. கைகளின் கறுப்பை உற்றுநோக்கிக் கொண்டிருந்தாள்: அவன் கைகளின் கறுப்பில் மனசின் வெண்மையைக் கண்டாள்.

“சோசியம் தெரியுமா” கேட்டான்.

பற்கள் ’தேங்காய்ச் சில்லுகளாய்’ ஒளியடித்தன. அவள் சிரித்தாள்:

“தெரியும் கொஞ்சம்”

“எங்க, கை பாத்துச் சொல்லு”.

அவனுடைய நீட்டிய கையை ஒதுக்கினாள்.அவளுக்கு மனசு ஓட்டம் பார்த்துச் சொல்லத் தெரியும்.

“மனசுக்குள்ள தான எல்லாமும் கிடக்கு”

“என்ன மாதிரி?” கேட்கிறான் பச்சை.

“நீ கறுப்பு, நா சிவப்பு. நீ சாதியத்தவன்.நாங்க சாதியில வந்தவங்க. நீ தரித்திர சென்மம்; நாங்க சொத்துபத்து, நிலம்நீச்சு உள்ள பிறவிக. இந்த நினைப்பு மனுசப் பிறவிகளுக்குள்ள தானே இருக்கு.”

ஆமாம்; மனிதர்களைச் சுற்றி அலைகிற ஆடுமாடுகளுக்கும் பறவைகளுக்கும் இந்த வேத்துமை கிடையாது; எல்லாம் ஒன்னாய் அலைகின்றன. எல்லாம் ஒன்னாய் அணைகின்றன. வெயிலடிப்புப் போல ஒளிவீச்சுக் காட்டும் அவள் பற்களில் மயங்கி பச்சை கேட்டான்,
“மிச்சம் ஜோசியம் என்ன சொல்லுது?”

இந்த சோசியக்காரியின் கையில் குறிசொல்லும் பூண் பிடித்த சின்னக் கோலில்லை; கோலினை ஆட்டி ஆட்டி, நீட்டி நீட்டிச் சொல்லும் வாக்கில்லை. அதற்கென்று வாக்குப் பெற்று வந்தவர்களிருக்கிறார்கள். அவர்கள் சொல் பலிதமாகும் என்பது அவள் கேள்விப்பட்டது. ஆனால் மனசின் அசைவுகளை அட்சரசுத்தமாய் ஆவுடை படித்துக்காட்டுகிறாள்; அவளில் அவனுக்குப் பிடித்த விசயம் இந்த மனுசப் படிப்புத்தான். அவனுடைய விரித்த கைக்குள் காணும் அந்த நிறம்தான் சந்தன நிறத்துச் சாமிமார்களுக்கு ஆகாத நிறம். நிறத்தினால் அவர்கள் உயரத்தில் வாழ்கிறார்கள். நிறமும் பிறப்பும் அவர்களை உயரத்தில் வைத்துவிடுகிறது என்கிறாள்.

அவனுடைய விரித்த கையை, இன்னும் தன் கையில் ஏந்திக் கொண்டிருந்தாள்; அந்த வெதுவெதுப்பை இருவரும் உணர்ந்தார்கள். பனைமட்டைக்குள் பச்சையாய் ஓடும் நார்கணக்காய் உள்ளங்கை நரம்புகள் ஓடியிருந்தன.

அவர்களுடைய பேச்சுக்கு அடைமழை தோது போட்டுக் கொண்டிருக்க, முன்னிருட்டுக் கவிந்து கொண்டிருந்தது.

“நீ இனிமே தேவியைத் தொடாதே”

சின்னம்மணியை இனி கண்ணுல காணவே ஏலாதுங்கிற நிலையில் தொடுவது எப்படி? பச்சை சிரித்துக்கொண்டே பார்த்தான். தொடாதே என்பதின் அர்த்தம் கண்ணால் தொடாதே என்பது. பயலுக்குப் புத்தியில் தட்டுப்படவேயில்லை.

உழைப்பு, விசுவாசம் இரண்டு மட்டும் போதுமென நினைக்கிற அவனொரு வெள்ளந்தி. வெள்ளந்திக்கு விநயமிருக்காது. ஆவுடைக்கு வடக்குந்தெரியும், தெற்குந்தெரியும். உழைக்கத்தெரிஞ்ச பிள்ளை என்பதினூடாக விநயமும் கொண்டிருந்தாள். அவள் ஒரு கேள்வி வைத்தாள். இந்த உஷ்ணப் பிரதேசத்தின் ஆதிவாசிகள் நாம்; இந்த வெப்பப் பிரதேசம் நமக்கு முகமும் உடலும் நிறமும் என்ன வடிவில் கொடுத்ததோ அது மாறாதவர்கள். ஆனால் உடலுக்குள் பொதிந்துள்ள மனசு மட்டும் மேனத்தானவர்களுக்குப் பிறத்தாலேயே போகிறதே, அது எதுக்கு? தேவியைத் தேடுகிற பச்சை மாதிரி! இதுதான் அவன் புத்தியில் ஆவுடை கண்ட ஒரு ‘டொக்கு’ (கோணல்).

அவனுக்குப் பக்கலில் இருக்கிற ஒரு பொருள் பற்றி அவன் கவலைப்பட்டதில்லை. தொடமுடியாத தொலைவில் வானத்தில் நின்று ஜொலிப்புக் காட்டும் நட்சத்திரத்தைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறான். அவன் தேவியைப் பற்றியே, அவள் ஆளான இந்த அஞ்சாறு மாசமாய் நினைத்துக் கொண்டிருக்கிறான். கொஞ்சம் அவன் பார்வை கிழக்குப் பக்கமாய்த் தைக்க வாய்ப்புக் கிட்டினால் சிறையெடுத்துப் போய்விடுவான் என்று பட்டது.
ஆவுடை படக்கென்று சொல்வாள் “முதல்ல தனதாள், வேத்தாள்ங்கிற உணத்தி வேணும்”

பிறகென்ன, எப்பேர்ப்பட்ட பயலானாலும் பச்சைத்தண்ணி கூடத் தரமாட்டாள் ஆவுடை.

கருத்த மைனாக்குருவி மாதிரியான அவள் சொன்ன அந்தச் சொல்லின் அர்த்தமென்ன?

வேறொன்னையும்தெரிவித்திருக்கிறாள். பார்க்காதே, கேட்காதே, பழகாதே. அந்தத் திசை நினைப்பே கூடாது.

மழைத்தண்ணீர் சொளப் சொளப்பென்று சத்தம்கொடுக்க, எழுந்து திரும்பி கார வீட்டுக்குள் போனாள். மிச்ச சொச்ச வேலைகளை முடிக்க வேண்டும்.

காரவீட்டுக்குள் நாள்முழுசும் முடக்கம். இருட்டின பிற்பாடும் திரும்ப ஏலாமல் மறித்தது மழை. மிகுந்த எச்சரிக்கையாய் காரைவீட்டை மேடு ஏற்றி உயரத்தில் எடுத்திருந்தனர். கெத், கெத்-தென தாவிய கடல் அலை போலத்தண்ணீர் கனத்த சுவர்கள் மேல் மண்டிபோட்டுப் பணிந்தது. தொழுவிருந்த இடம் கொஞ்சம் தாவு.வேலை முடித்து திரும்பிய ஆவுடை வெளியேற வழியற்று தொழுவத்துக்குள் ஒண்டிக்கொண்டாள்.

இந்தக் கொட்டும் மழை வெள்ளத்தில் வீட்டுக்குத் திரும்பிப் போய் ஒன்றும் ஆகப் போவதில்லை. அவளை வா என்று சொல் சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள். அவள் கழுத்தில் முடிச்சுப் போட்டவன், கழுத்தைக் கட்டிக்கொண்டு பேச அங்கிருக்கமாட்டான். இந்த மழையில் காட்டில், அல்லது கண்மாய்க் கரை மரத்தடியில் ஆட்டுகிடை தாமசிக்க முடியாது. ஆட்டுக் கீதாரி, வெம்பூர் ஊருக்கு மேற்கில் மழைக்கால ஆடுகள் அடைப்புக்கு என்றே தொழுவம் உண்டாக்கிவிட்டிருந்தான். அங்கே ஆடுகளின் கதகதப்பில் கிறங்கிக் கிடப்பான் கட்டினவன். இங்கிருந்து வெம்பூர் மூன்று கல் தொலைவு.

வேற வேற நிறங்கள் அருகணைந்தால் அது பெரிய குற்றம். நிறங்களாலும் தீர்மானிக்கப் படுகின்றன பிரியங்கள். ஒருநிறமாதலால் வேற்றுமைக்கு வழியில்லை. கூரைக்கு அடியில் மழைக் குளியல் நடத்திக்கொண்டிருந்த செம்பருத்தியின் சிறு கொப்பை எட்டி முறித்தாள் ஆவுடை: ஈரத்துளிகளை பச்சைமேல் உதறினாள். உடம்பு சில்லிடக் கூசி இருகைகளாலும் தோள் போர்த்திக் கொண்டான் பச்சை. நுனி இலைகளால் அவன் கன்னத்தை வருடியபோது இன்னும் ‘ஜில்’லென்று குளிர்ந்தது. பிடரி வரை இறங்கியிருந்த அவனுடைய தலைமுடியை விரல்களால் அளைந்தாள்.

5

அப்போதுதான் ஈத்தான ஆட்டுக்குட்டியைக் கையிலேந்தி, கொழகொழவென்றிருந்த இளங்கொடியை வழித்தெடுத்தான் குமராண்டி. கால்நடுக்கம் கொண்டு தத்தக்கா புத்தக்கா போட்ட குட்டியை தாய் மடிக்குக் கொண்டுபோனான். பால் குடியானதும் துடிப்புடன் நிற்க முயன்றது குட்டி.பால் குடிப்பிக்கும் தாயையும் மொச்மொச்சென்று சப்பிக் குடிக்கப் பழகும் குட்டியையும் விட்டுவிட்டு, ஓடைக்கரைமேலுள்ள அரசமரத்தைப் பார்த்து ஓடினான். இளங்கொடியை நாய் நரி இழுத்துப்போய்ச் சாப்பிட்டுவிட்டால், அது ஆடு மாடு, மனுசன் எல்லாத்துக்கும் சீர் அடித்துவிடும் என்றோரு நம்பிக்கை அவர்களிடத்து வாழுகிறது. ‘சரசர’வென மரத்திலேறி மேக்கொப்பில் ‘இளங்கொடி’ ஓலைக் கொட்டானைக் கட்டினான்.

வெள்ளன கிடைக்கு வந்த ஆவுடை வெகுநேரம் காத்திருந்தாள். கிடை ஆள் நடமாட்டம் அத்துக் கிடந்தது.கழுத்தில் ஏறிய புது மஞ்சள் சரடு அவளை அங்கு கூட்டிவந்திருந்தது. வாராத நோய் வந்தால் சேராத மருந்தெல்லாம் சேர்த்து ஆகனும்; காலை அகட்டி பாசத்தோடு பால் குடுக்கும் ஆடு, பிறந்த உதடுகளால் மொச் மொச்சென்று சப்பும் குட்டி; இரண்டினையும் குத்துக்காலிட்டு உட்கார்ந்து தடவிக் கொடுத்தாள். ஒரு பெண்ணின் மிருது அந்தச் சீவன்களுக்குத் தேவையாயிருந்தது. ஆடு அவளுடைய கையை நக்கிக் கொடுத்தது.

திருமி ஓடிவந்த குமராண்டி ஆவுடையை அந்த இடத்தில், அந்நேரம் எதிர்பார்க்கவில்லை. அவளைக் கிடையில் கண்டதும் திக்குமுக்காடி நின்றான். கழுத்தின் அந்தப் புதுச்சரடுதான் அவளை அவளை அங்கு கூட்டிவந்தது; தேடிவரச் செய்தது அதுதான் என என அவனுக்குப் புலப்பட்டது. ஒவ்வொரு இரவையும் அவள் காத்திருந்து கழித்துக் கொண்டிருக்கிறாள். ஒரு ஆணின் துணையற்ற இரவுகள். பகலில், அதுவும் ஆடெழும்ப நேரத்தில் அவள் வந்து நின்றாள்.

இவனுக்குத் துணைசெய்ய 14 வயதுச் சிறுவனை அமர்த்தியிருந்தார் கீதாரி.கிடைக்கு உரியதாரி அவர். விளையாட்டுப் பருவம் சிறுபயலை இன்னும் முழுசாக விட்டுப் போகவில்லை. அவன் ஊருக்குள் போயிருக்க வேண்டும்.இதே 14 வயசில் குமராண்டி கையில் ஆடு மேய்க்கிற தொரட்டி ஏந்தினான். பகலில் ஆட்டுக்குப் பிறத்தாலே அலைதல்; ராத்திரி கிடைக்காவல். பகலும் இரவும் ஒரு ஆட்டுக்காரனுக்கு இல்லை. அவனுடைய பகலைக் கிழக்கில் உதிக்கிற சூரியன் பறித்துவிடுகிறான். மனுசர்களை எழுப்புவது போல ஆடு மாடு ஜீவன்களையும் எழுப்பி விடுகிறான். இரவும் பகலுமற்றவாழ்க்கைக்குள் தள்ளப்பட்ட ஒரு ஆட்டுக்காரனுக்கு ஆவுடை நேர்ந்து விடப்பட்டிருந்தாள்.

அவன் ஒரு காட்டாள். ஊரையே கிறங்க வைக்கும் கல்யாண நாட்கள் கூட அவனுக்கு ஒதுக்கப்படவில்லை. அவனுக்குச் சமமான இன்னொரு ஆளை நியமித்தால் தனக்கு இரவைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியுமென நினைத்துக் கேட்டான். கீதாரிஅதற்கு இடங்கொடுக்கவில்லை.

“ஆட்டுக்காரனுக்கு அளந்து வச்சிருக்கான் ஆண்டவன்.“

கீதாரி ஒரேயடியாய்த் திரும்பி நின்றுகொண்டான்.

கல்யாணம் நடந்த காலத்தை ஆவுடை நினைத்துப் பார்த்தாள். ஆத்தா, அப்பனில்லை. அக்கா ஆதரவில் வளர்ந்தாள். கல்யாணம் முடிந்து, அவளை வீடு கூட்டி விடுகிறபோது, அக்கா சொன்னாள் “ஞாபகமாப் பிழைச்சிக்கோ”. ஆட்டுக்காரனுக்கு அரைப்புத்தி என்பார்கள். கட்டிக்கொண்டவனுக்கு முழுப்புத்தியும் ஆட்டுப் பின்னாலயே போய்க் கொண்டிருந்தது. ஆவுடையின் கவனமும் சூதானமும் முக்காத்துட்டுக்குப் பிரயோசனமில்லாமல் போனது.

எக்காலம் எவ்வேளை கழுத்தில் கயிறு ஏறியது என்பதும் அவளுக்கு நினைப்பிலிருந்து மறைவாகி வந்தது.

தீண்டாமை ராத்திரிகள் அவளைத் துக்கம் கொண்டாடியாய் ஆக்கின. ஒரு துக்கம் கொண்டாடியின் கூட்டுத்தொகையாய் நிகழ்வாகிக் கொண்டிருந்தது வாழ்வு. “ஆட்டுப் பொச்சுப்பெறத்தால அலையறதை என்னைக்கு விடறயோ, அதைக் கண்ணால காணுறப்போ ஜீவிதம் அர்த்தத்துக்கு வரும்” என்று சபித்தாள்.

குமராண்டிக்கு வேற புகலில்லை. ஆடுகளுக்குப் பின்னால் நடந்து நடந்து, ஓடிஓடி, ’ ம்…பா, ம்..பா’ என்று குரல்ஓட்டி, கட்டினவளை ஒரு பொழுதும் கவனிக்க முடியாமல் ஆனது. கலப்பை பிடிக்கக் கூடத் தெரியாது. ஆடையும் கோடையும் கிடைக்கிற வேலை ஆடு மேய்ப்பு ஒன்னுதான். ஆனால் ஆட்டுக்கார கோபால் கீதாரியாக மட்டுமில்லை, வியாபாரியாகவும் ஆகிவிட்டான்; வியாபாரி முதலாளியாகவும் ஆகியிருந்தான். குமராண்டி மேய்ப்பனாகவே இருந்தான்.

இப்போது அவனுக்கு எல்லாவற்றையும் கடக்க சாராயமும் கள்ளும்: கள்ளும் நாட்டுச் சாராயமும் அவனுக்குக் காதலியாயும் கட்டிய பெண்டாட்டியுமாய் ஆகிவிட்டன. ஆட்டுக்குப் பிறத்தாலேயே கண்களைப் பதித்து, கள்ளுக்கும் சாராயத்துக்கும் வாழ்வு தொலைந்து கொண்டிருந்தது.

“இந்நேரம் அது எங்ஙன உருண்டு கெடக்குதோ” ஆவுடை சடைத்தாள்.

அந்தச் சடைப்பிலிருந்து வேறொரு பெண் வந்து கொண்டிருக்கிறாள் என்பது பசைக்குப் புரிந்தது. முணுமுணுத்த உதடுகள், பச்சையின் கழுத்தில் ஒட்டிப் புறுபுறுத்தன.

அவனை நெருக்கி அவன்முகத்தில் வெப்பச்சுவாசம் விட்டுக் கொண்டிருந்த வேளையில், கழுத்துச் சரடு முகத்துக்கு எதிரில் ஆடியது. “இது?” எனக் கேட்ட போது, இந்த வேளையிலும் அவள் சொல்ல வந்தது,
“நீ இனிமே தேவியைத் தேடாதே.”

“அதான், அம்மணியைக் காணலையே?”

அவள் குரல் கறாராக வந்தது. “கண்டாலும் பேசாதே”.

அவள் உடலில் புளித்த கள்ளின் வீச்சம் அடித்தது. உடலுக்குள் அடைகாத்த வெக்கை, இப்படியொரு வாசனையாய் வருகிறதோ என நினைத்தான்.

அயற்சியாகி விழித்தவேளையில், அடைமழை நீங்கியிருக்கவில்லை. அவளும் நீங்கியிருக்க முடியாமல் ஆயிற்று.

6

மறு சாயந்தரம் லேசாய் வெறித்து மஞ்சள் பரவியிருந்தது.

பச்சைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது தொழுவம்; ஆவுடைக்குப் பின்வாசல். அவர்களின் மனசில், நடத்தையில், பேசும் லாவகத்தில் எல்லாவற்றிலும் நடமாட்ட அளவைகள் வரையறுக்கப் பட்டிருந்தன. பல்லாண்டுக் காலமாய் வலியுறுத்தப்பட்ட நியமங்கள் தப்ப வழியில்லை; அன்றும் பின்வாசல்வழி வெளியேறின ஆவுடை, நேராக தொழுவத்தில் பச்சையின் முன்நின்றாள்.

“சட்டி உடைஞ்சிருச்சி” என்றாள்.

இனியொருக் காலத்தும் அவ்வீட்டுக்குள் ஆவுடை அடி எடுத்து வைக்க லாயக்கில்லை. ஊரில் அந்த ஒருவீட்டில் மட்டும் ‘பதிவாய்’ வீட்டுவேலை; அவள் சடங்காகு முன் அக்கா சேர்த்து விட்ட காலத்தில் ஆரம்பித்த வேலை; கோணல்மாணல் ஆகாமல் நேர்சீராய்ப் போய்க்கொண்டிருந்தது. காடுகரைக்கு, களையெடுக்க, கதிரறுக்க எத்தனையானாலும் அந்த ஒரு வீடு. வேறு அயல்வேலை அவளுக்குப் பழக்கமில்லை.

“அவங்களுக்கு என்ன ஞானக்கண்ணா?”

பச்சை மனசில் வைத்துக் கேட்டான். ஆவுடைக்குப் பதிலிருந்தது.

“இதே நோக்கமா அலையறவங்க தான. தாயறியாச் சூலுண்டா?”

“பெறகு?”

“ஒரே முட்டாப் போயிருன்னு சொல்லீட்டாங்க”

இனிமேல் அவனையும் ஊருக்குள் வரவிடமாட்டர்கள்.

”அப்படித்தான் நோக்கம் தெரியுது. ஒங்க பேரில்தான் காட்டமா இருக்கிறாங்க” தெரிவித்தாள்.

பச்சை யோசனையாய் நின்றான்.

பச்சையும் ஆவுடையும் இரவு ரொம்பநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

7

சூரியன் முதற்கால் ஊன்றுதற்கு முன்பு அவர்கள் புறப்பட்டிருந்தார்கள். வண்டி ஆத்தூர் கொடிக்கால் சென்றடைகிற போது ‘பெரும்பானை’ வைக்கிற நேரமாகிப் போகும். (பெரும்பானை – இரவுக்கு உலைவைப்பு நேரம்) முகம் அறியா மங்கலில் புறப்பட்டு, ஊர் அடைகையில் அதே மாதிரி முகம் அறியாப்பொழுது வந்து நிற்கும்.

பள்ளத்தாக்குப் போன்ற ஓடையில் வண்டிமூழ்கி மேலெழுந்தபோது, உடைமரத்தடி நின்றிருந்த ஆவுடை, சக்கரத்தின் ஆரக்காலில் கால்வைத்து ஏறினாள். இறுக்கிப்பிடித்த கயிறுகளுக்குள் அசையாது நின்றன மாடுகள். ஏறியவளை லாவகமாய் கைக்கொடுத்துச் சேர்த்துக்கொண்டான் பச்சை. அவன் தோள்பட்டைகள் வழியாகப் பின்புற மாலையாய்க் கைகளைக் கோர்த்தாள்.

உழைப்பாளி ஒருபாறை போல. எங்கு வேண்டுமானாலும் போய் வாழ முடியும்; ஒருபாறை - மண்டபத்துத் தூணாகும்; கோயில் சிற்பமாகும். ஆட்டுரலாக, அம்மியாக, பட்டியல் கல்லாக, வீட்டுப் பயன்படு பொருளாக எத்தனை வகையினதாகவும் மாறும்.

ஆவுடை கடின உழைப்பாளி. நல்ல வேலையாளைக் கொடிக்கால் முதலாளி போன்ற மனுசர்களுக்குப் பிடித்துப் போகும். கொடிக்கால் முதலாளி வேலைக்கு எடுத்துக் கொள்வார்.

பச்சைக்குக் கொடிக்கால் முதலாளியிடம் ஒரு பொய்சொல்ல வேண்டியிருந்தது - ஆவுடை தாலிச்சரடு கண்டவளில்லை என்பதாக.

பச்சை பின்னால் திரும்பிப்பார்த்தான். ஆவுடை கழுத்தில் சரடு இல்லை.

(கணையாழி - செப்டெம்பர் 2019 இதழில் வெளியான குறு நாவல்).

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

நூல்நோக்கு: கி.ரா.வின் கடைசி ஆண்டுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசம் (எ) சூரியதீபன்