ஜெயந்தன் - நினைக்கப்படும்

மதுரை வடக்கு மாசி வீதியில் பேரா.துளசிராமசாமியின் ‘அரூசா’ அச்சகத்தின் படியில் அவர் நின்று கொண்டிருந்தார். நிஜ நாடக இயக்கம் பேரா.மு.ராமசாமியின் ‘விழிகள்’ மாத இதழும் அச்சாகியதால் மு.ரா.வும் இருந்தார். மதுரையில் கோயில்களுக்கும் சாமி வலங்களுக்கும் குறைவில்லை. முன் மாலையை லேசாய் அசைத்துத் தள்ளியபடி இரவு பின்னால் மெதுவாக வந்தது. அது குளிர்காலமில்லை. கோடைகாலம். மதுரைக் கோடையில் இரவு அப்படித்தான் ஆடி அசைந்து வரும். ‘பெட்ரோமாக்ஸ்’ – விளக்கு வெளிச்சத்தில் வடக்கு மாசி வீதியில், கிழக்கிலிருந்து மேற்காக ‘அம்மன்’ சப்பரத்தில் வந்து கொண்டிருந்தாள். ஒவ்வொருவரது கைகளும் கன்னங்களும் இதற்காகவே இருப்பது போல் கூப்புவதும் கன்னத்தில் போடுவதுமாய் இருந்தார்கள்.

“எவ்வளவு பெரிய தேர். எத்தனை பெரிய கூட்டம். இவ்வளவு பெரிய தேரில் அம்மன் உரு மட்டும் கண்ணுக்குத் தெரியலே. இந்த மனுசப்பயல்களைப் பார்த்து பயந்து ஒரு மூலையில் ஒடுங்கி உக்காந்திட்டா போல” - அவர் பேசினார்.

கூட்டத்திலிருந்து அவர் பேச்சு விலகியதாய்க் காணப்பட்டது. எதுவொன்றையும் பொதுப்புத்திப் பார்வையிலல்லாமல் புதிய கோணமாய் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருந்தார் எனப் புலப்பட்டது. ஒரு விசயத்தைச் சுற்றி அடைத்திருக்கிற புதர் விலக்கி அகழி கடந்து அதை மூடியிருக்கிற இருட்டிலிருந்து வெளிச்சத்தை எடுத்துவர முயல்கிற ஒருவர் என அறிய வாய்த்தது. அவர் ஜெயந்தன், அப்போது 1976. நெருக்கடி நிலை (EMERGENCY) அறிவிப்பால் அரசுப்பணியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு நொறுங்கிப் போயிருந்தேன். நெருக்கடி நிலை தாண்டவத்தின் பாதிப்புக்குள்ளான லட்சக்கணக்கான மக்கள் கடலில் சிறுதுளி நான். ஜெயந்தன் அப்போது மதுரை திருமங்கலம் அருகே குன்னத்தூரில் கால்நடை மருத்துவ ஆய்வாளராக (VETERINARY INSPECTOR) பணி செய்து கொண்டிருந்தார். எங்கள் தலைமுறையினர் ஏறக்குறைய எழுபதுகளில் எழுதத் தொடங்கியிருந்தோம். எல்லோரும் சிற்றிதழ்களில் முளைவிட்டு பின்னர் கால இடைவெளிகளில் - வணிக இதழ்களுக்கு அல்லது வெகுசன இதழ்களுக்கு நகருவது வழக்கம். வித்தியாசப்பட்ட ஒருவராக ஜெயந்தன் வெகுசன இதழ்களில் இடம் பிடித்து பின்னர் சிற்றிதழ்களுக்கு வந்தார். சமுதாய விமர்சனமுள்ள ‘நினைக்கப்படும்’ என்ற அவரது ஓரங்க நாடகங்கள் அப்போது குமுதத்தில் வந்து கொண்டிருந்தன. ‘சம்மதங்கள்’ - தொகுப்பிலுள்ள கதைகள், துப்பாக்கி நாயக்கர் போன்ற கதைகள் குமுதம், விகடன் என்று மாறி மாறி வந்தன. தன் பெயர் போலவே வைத்துக்கொண்டு தனக்குப் போட்டியாக எழுதுகிறார் என ஜெயகாந்தன் கூறியதாக ஒரு முறை என்னிடம் குறைப்பட்டுள்ளார் ஜெயந்தன்.

‘ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது’ – போன்ற காத்திரமிக்க படைப்புக்கள் தாமரையில் வந்தது இக்கால கட்டத்தில் தான்.

1980-களின் இறுதியில் அவரிடம் ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது. வெகுசன இதழ்களில் எழுதியவர்கள் அருவறுக்கத் தக்கவர்கள் என அப்போதைய இலக்கிய உலகம் ஒதுக்கியது. வெகுசன இதழ்களின் வாடையே இல்லாமல் சிற்றிதழ்களில் எழுதிய படைப்பாளிகள் மட்டுமே படைப்பாளிகள் என்ற பதிவு அவரிடம் உட்புகுந்தது. வெகுசன இதழ்ப் பங்கேற்பால் - அங்கீகரிக்கப்பட்ட படைப்பாளிகளிடம் தனக்கொரு பெயரில்லாமல் போகிறதோ என்று அவர் சிந்திக்க ஆரம்பித்தார். சிந்திப்பு பேனாவை அசைத்தது. சமூக யதார்த்தத்திலிருந்து நகர்ந்து தத்துவ விசாரணைக்குள் போய் எழுத்து சிக்கியது.

இத்தகைய தலைகீழ் மாற்றத்தை அவர் விரும்பியே தேர்வு செய்தார் எனத் தோன்றுகிறது. எண்பதுகளின் மத்தியில் தொடங்கி இறுதிக்காலம் வரை உலகத் தரவரிசையான இலக்கியங்களில், தமிழின் தலைகள் என்று கருதப்பட்டோரின் படைப்புகளில், வாசிப்பில் கவனம் குவித்தார். தமிழின் முதலிட எழுத்தாளர்களுடன் சந்திப்பு உரையாடல் நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ள முனைப்பாக இருந்தார். எழுத்துலகில் ஏற்கனவே அறிந்தவர்களாதலால் தொடர்புகள் எளிதாகவே கைகூடிற்று. சமூக யதார்த்தப் படைப்புக்களின் இலகுத் தன்மையிலிருந்து விலகிய எழுத்துக்கள், ஏற்கனவே ஈர்க்கப்பட்ட வாசகர்களை விலக்கியது. 90-களில் அவருடைய ஞானக்கிறுக்கன் கதைகள் வெளியானபோது விரல் விட்டு எண்ணக்கூடிய மேநிலை வாசகர்கள் கிடைத்திருந்தார்கள். பரவலான வாசகர்கள் காணாமல் போயிருந்தார்கள்.

அவருடைய எழுத்தில் முன்பை விட தீவிரப் பயணத்தை மேற்கொண்டிருந்தார் எனலாம். எதிலும் முழுமையைத் தேடும் தீவிரப் பயணமாக இருந்தது. அதைச் சென்று சேராமல் தன்னால் எழுத முடியவில்லை என்றார் அவர். அனைத்து வகை ஆய்வுகளும் விவரங்களும்இ தரவுகளும் தன் விரல் நுனியில் இருந்தால் தவிர அவர் எழுதத் தொடங்க மாட்டார். இடையில் தடைப்பட்டால் அந்த விசயத்தைப் பற்றிய தெளிவு கிடைக்கிறவரை தொடரமாட்டார். கடந்த பத்து ஆண்டுகளின் எழுத்து முறையாக இதுவே ஆனது.

‘தனது ஜென்மப் பயன்’ - என்று அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த ‘நித்யா’ என்ற நெடுங்கதையைக் கூட இப்படித்தான் நகர்த்திக் கொண்டிருந்தார். பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு ஊழியர், தனது கடந்த காலம் பற்றிய மீள் நினைவுகளில் மூழ்குவதாக ஒரு பாத்திரம் வரும். வழக்கு மன்றம் செல்கிறார். வாய்தா வாய்தா என்று இழுத்தடிக்கிறார்கள். அரசுத் தரப்பு வழக்குரைஞர் மட்டுமல்ல, தனது வழக்குரைஞரும் வாய்தா என்ற இழுத்தடிப்புக்கு காரணம் என அறிகிறார். வாதி, பிரதிவாதி இரண்டு பேருக்கும் வாதிட வழக்குரைஞர்களை அரசே நியமித்து, அரசே ஊதியம் வழங்கினால் என்ன? நீதிக்குப் புறம்பான செயல்கள் நீதித்துறையிலே நடைபெறுவதாக அந்தப் பாத்திரம் கருதுவது மட்டுமல்ல, ஜெயந்தன் அவ்வாறு எண்ணினார். நீதித்துறையின் கட்டமைப்பை மாற்றுவது குறித்து சிந்திக்கத் தொடங்கி வழக்குரைஞர் ஆ.தமிழ்மணியிடம் இரண்டு மூன்று நாட்கள் விவாதித்தார். அவரிடமிருந்து ‘சட்ட இயல்’ என்ற நூலைப் பெற்று வாசிக்கத் தொடங்கினார். நீதிமன்றம் நீதி வழங்குதல் முறை பற்றிய தெளிவு அந்த நெடுங்கதைக்கே தேவைப்பட்டது. அது பற்றிய முழுமையான பார்வை கிடைக்கிற ஒரு வாரம் அவர் பேனாவைத் தொடவில்லை.

ஜெயந்தன் என்ற என் இனிய தோழமையே! ஒன்றை நீங்கள் கருதிப் பார்க்கவில்லை. நீங்களோ நானோ எழுபதுகளில் தொடங்கிய நம் தலை முறையோடு எழுத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊர் போய்ச் சேர வேண்டிய காலம் சமீபத்திருக்கிறது என்ற உண்மையை – நினைக்கப்படும் எழுதிய தாங்கள் நினைக்காமலே இருந்து விட்டீர்கள். தங்கள் துணைவியாரிடம் அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் “நாகு (நாகலட்சுமி) என் காலம் முடியப் போகிறது. இது போனஸ் காலம். இந்த போனஸ் காலத்தில் தான் நான் வாழ்கிறேன்”.

முழுமை (PERFECTION) என்பது ஒரு போதும் நம் கைவசமாவதில்லை. முழுமையை நோக்கிய தேடல் மட்டுமே எப்போதும் நிகழ்ந்து கொண்டிருப்பது. முழுமைபோல் தென்படும், ஆனால் முழுமையல்ல; அது ஒரு தோற்றமே. தெளிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிற நடைமுறையாக (PROCESS), போராட்டமாக அது இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஓரிடத்தில் நின்று அதுவரையான செழுமையை சரியாக்கி , நிறைவுகொண்டு எழுத்தாக்கிவிடுவதே உருப்படியான காரியம். “எங்கே மேலே எழுத முடியாமல் போகிறதோ அந்த இடத்தில் நிறுத்தி அதுவரையிலான நாவலை முதல்பாகம் என்று கொண்டு வந்துவிட வேண்டும்” - என்று கி.ரா ஆலோசனை சொல்வார்.

ஒரு செயலில் தலைக்கொடுத்து விட்டால் தன் பங்குக்கு ஏதோ செய்தோம் என்ற எண்ணம் கொள்ளாமல் முழு மூச்சையும் பிரயோகிப்பவர் என்பதற்கு “காட்டூப் பூக்கள்” கவிதைத் தொகுப்பு ஒரு இலக்கிய சாட்சி. அவ்வப்போது கவிதை எழுதி வந்தாலும் எளிய அர்த்த வீச்சுள்ள நாட்டுப்புறப் பாடல்கள் வெளிப்பாட்டில் ஈர்க்கப்பட்டிருந்தார். புரிதலுக்கு அடங்காத சொற்களுடன் நவீன கவிதைகள் வெளிப்பட்ட போது நாட்டுப்புறச் சொல்முறையை இணைத்து கவிதைகள் ஆக்கினார். கவிதைப் படைப்பில் மட்டுமே மூழ்கி முழுதும் கவனம் கொண்டு ஓராண்டு உழைப்பு ஒரு தொகுதியாய் வந்தது. சமுதாய அக்கறை கொண்ட அத்தனை செய்திகளை, குறிப்புக்களை அவர் சேகரித்தும் உள்மனதில் ஊறப்போட்டும் வைத்திருந்தால் கவிதைகள் சாத்தியமாயின.

சில்லுண்டி வாழக்கையே அனுபவங்களின் கொடையை வழங்கும் என்றாகி விட்ட சில எழுத்தாளர்களின் நிலையில் - பரிசோதனைக்காகக் கூட சில்லுண்டி வாழ்க்கையை விரும்பியவர் அல்ல அவர். சில்லுண்டி வாழ்க்கை என்கிறபோது, கள், சாரயம், விஸ்கி, பிராந்தி குடிவகைகள் மட்டுமல்ல இன்றைய சமுதாய நன்மதிப்பீடுகளாகக் கருதப்படுகிற லஞ்சம் ஊழல் இவைகளிலிருந்து வெகுதொலைவிலிருந்தார். அவர் பணியாற்றிய துறையில் ஊழலுக்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக இருந்தன. மனச்சாட்சிப்படி இயங்கும் எழுத்தாளனாக இருந்ததால், அவர் சமரசப்படுதலுக்கான சாத்தியங்கள் இருந்தும் புறமொதுக்கி இலக்கியப் படைப்பாளன் என்ற கம்பீரத்தில் நின்றார். இறுதிப் பயணம் வரை இந்தக் கம்பீரமே துணைவந்தது.

அவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக செலய்பட்டமை இந்த நற்போக்குக்கு அடித்தளமானது. த.மு.எ.ச.வில் அவர் பணியாற்றுகையில் காந்திக் கிராமத்தில் ஜி.ராமானுஜம் நடத்திய நாடகப் பயிற்சிப் பட்டறையில் ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டார். அப்போது அவர் திசை நிகழ்த்துகலை நோக்கித் திரும்பிற்று. நவின நாடகம் தொடர்பான பல பயிற்சிகளையும் அளிக்கத் தொடங்கினார். பல புதிய நாடகங்கள் உருவாக்கம் செய்தவராக அத்துறையில் அவரது வளர்ச்சி நிகழ்ந்தது. அதன் காரணமாக – எந்த ஒரு நவீன நாடகத்தையும் விமரிசிக்கிற திறன் கைகூடியது. 90-களின் பின்னான காலத்தில் அவற்றைப் பதிவு செய்யாத போதும், நண்பர்களுடனான வாய்மொழி விமரிசனத்தின் நிகழ்வுப்பாடு சரியாகவே இருந்தது.

ஜெயந்தன் த.மு.எ.ச.வில் இயங்கிய போது பெ.மணியரசன், இராசேந்திரசோழன், கவிஞர் தணிகைச் செல்வன் எனத் தனித்துவமிக்க பலர் வெளியேறினார்கள். இவருடைய விலகல் இன்னொரு கட்டத்தில் நிகழ்ந்தது.

வாழ்க்கை ஓடும், ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது, துப்பாக்கி நாயக்கர், சம்மதங்கள், மொட்டை, அவள் இவன் - போன்ற பல சிறுகதைகள், பாவப்பட்ட ஜீவன்கள் முறிவு - போன்ற குறு நாவல்கள், காட்டுப் பூக்கள் - கவிதைத் தொகுப்பு, கடைசியாய் தோழமை வெளியீடாய் வெளியான ‘இந்தச் சக்கரங்கள்’ - எனும் நெடுங்கதை இவர் வாழ்நாள் சாதனையைப் பேசுபவை.

பள்ளிக் கல்வி கற்றல் அவருக்கு எளிதாய் இல்லை. போதிய பொருளாதாரப் பின்புலம் இல்லாமல் போயிற்று. படிப்பை இடையில் நிறுத்தி ஒரு கடையில் இரண்டாண்டுகள் வேலை செய்து அந்த சம்பாத்தியத்தைக் கொண்டு படிப்பை மீண்டும் தொடர்ந்திருக்கிறார். ஜெயந்தனும் யுனெஸ்கோ கூரியர் மணவை முஸ்தபாவும் ஒரு வகுப்பு. பள்ளிப் படிப்பை முடித்ததும் இருவரும் இணைந்து தொடங்கியது மணவைத் தமிழ் மன்றம்.

2007-ல் மணப்பாறை சென்றடைந்த பின் அறிவுத்தளத்தில் செயற்பட்ட பல நண்பர்களை இணைத்து சிந்தனைக் கூடல் எனும் புதிய செயற்தளம் இவருடைய முயற்சியால் பிறப்பெடுத்தது. மாதம் ஒரு முறை கூடி – புதிய முறைகளைக் கண்டறிவதில் மற்றும் பிரச்சனைகள், விசயங்களைப் புரிந்து கொள்வதில் புதியவர்களின் போதாமை கண்டு வளர்த்தெடுப்பதில் முனைந்தார்; மணப்பாறை சென்ற பின் இதுவே பிரதான சமூக உறவாயிற்று.

முத்துக்குமார் ஓராண்டு நினைவு நிகழ்வு மணப்பாறையில் ஏற்பாடு செய்யப்பட்ட முறை அவரை வேதனைக்குள்ளாக்கியது. ஏற்பாடு செய்த காவேரி இலக்கியப் பேரவையினர் நண்பர்கள் தாம். நகர தி.மு.க கட்சியின் மூத்த தலைவரை நினைவேந்தல் நிகழச்சிக்குத் தலைமை போட்டிருந்தார்கள். மூன்று நாட்கள் முன் தொலைபேசியில் பேசிய போது அது பற்றி என்னிடம் குறிப்பிட்டார்.

“கிரிக்கெட் பார்ப்பது போல தேநீர்க் கடைக்கு சேர்ந்து போவது போல பொழுது போக்கு நிகழ்ச்சி போல நினைத்து விட்டார்களா? அவன் உயிரைக் கொடுத்தவன். தன் சகோதர மக்களைக் காப்பதற்காக - அந்த உயிர் அழியக் காரணமான இயக்கத்தைச் சேர்ந்தவரை தலைமை தாங்கப் பண்ணி தமாஷ் பண்ணி விட்டார்கள். நான் போகவில்லை”
கொதிப்படைந்து பேசினார். கடைசி நாட்களில் அவரை நிம்மதி இழக்கச் செய்தது இது.

இடைப்பட்ட காலத்தில் எழுத்தோட்டத்தை அவர் நிறுத்தியிருக்கக்கூடாது; ஓடிய நாட்களில் அவர் எழுத்தும் வாழ்வும் துதிபாடவும் அதிகார வர்க்கத்தைக் சொறிந்து விடவும் ஒருக்காலும் விலை போனதில்லை.

(தீராநதி)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை