வாழ்விலிருந்து இலக்கியம்


மாலைப் பொழுதில் வீட்டு முற்றங்கள் கதைகளால் நிரம்பிக் கிடந்தன. உட்காரப்போட்ட பட்டறைக் கல் கதை கேட்டுப் படுத்திருந்தது. குத்துகாலிட்டு உட்காரவோ, கொஞ்சம் புட்டத்தை வைக்கவோ, ஒத்தைக் கால் சிம்மாசனமாய் சாய்ந்து கொள்ளவோ இடம் கிடைத்தால் கதை சொல்ல ஒரு வாயும் கதை கேட்க காதுகளும் கலந்தன. சுற்றிலும் உலகம் இல்லை.

“நேத்துச் சொன்னேனே, அது நெஜக் கதையில்லே, நானாச் சொன்னது” போட்டக் கதையைப் பெறகு எடுத்துக்கொள்கிறவர்களும் உண்டு.

“ஒங்கம்மா மேல ஆணையா?”

“ஆணை” என்று அவன் ஒப்புக்கொண்ட பிறகும், அது குற்றமாகவோ, குற்ற சம்மதமாகவோ எடுத்துக்கொள்ளப்படாமல் மறக்கப்பட்டது. கதை என்றால் நாலும்தான் இருக்கும். ஆனா, நெஜக்கதை மாதிரி உருட்டுனானே, அதுக்குக் கொடுக்கலாம் என்று தோணும்.

காலைச் சுவாசத்தை அசுத்தப்படுத்தும் வேலைகள் துப்புரவாய் கிடையாது. உப்பு, புளிக்குக் கூட ஆகாமல், வேகு வேகு என்று ஓடித்தவிக்கிற வாழ்க்கை இல்லை. வாழ்க்கையும் வேலையும் அளந்தே வைக்கப்பட்டிருந்தன. அதனால் கிராமத்தில் கதைகள் சொல்லவும், கேட்கவும் மனசும் நேரமும் நிறையக் கிடைந்தது.

1

“தம்பி, அம்மா செத்துப் போயிட்டா.”

மேல் சட்டை இல்லாமல், அரை டிராயருடன் மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த அவனை வெளியே கூப்பிட்டு அண்ணன் சொன்னான். அண்ணனின் இடுப்பில் இரண்டு வயதுப் பெண் குட்டி.

முதல் நாள்தான் அன்னப்பால் விட்டிருந்தார்கள். இந்த உலகின் கடைசி நினைவுச் சங்கிலியையும் அறுத்தபடி, எல்லா வகையிலும் மரணத்தின் குகையில் நுழைந்து கொண்டிருந்தாள் அம்மா.

“வெள்ளையம்மா, வெள்ளையம்மா”

யாரோ பாதாளக் கிணற்றுக்குள்ளிருந்து கூப்பிடுகிற குரல்; கண்ணிமைகள் பிரிபடாமல் கிடந்தன. அம்மா லேசாக வாயைத் திறந்தபோது, பஞ்சில் பால் தொட்டு பிள்ளைகளை ஒவ்வொருத்தராய் பிழியச் சொன்னார்கள். பிள்ளைகளின் பாசத்தையும் அன்பையும் கண் மூடும் வேளையில் நினைவாகக் கொண்டு செல்வாள்.

அன்னப்பால் விடும்போது, மடை திறந்தது போல் அவன் அழுதான். ஒரு உயிரை நம் கைவசமிருந்து, நேரே வழியனுப்பும் காட்சி.

மறுநாள் வீட்டில் பிடித்த அழுகை சுடுகாடு வரை ஓயாமல் நீடித்தது. அம்மாவைச் சிதையில் படுக்கவைத்து, கொள்ளி உடைத்து, தீ மூட்டி, சிதை கருகி…

மனது உடைந்து, துயரத் தீ வைத்து, வாழ்க்கை கருகிக் கதறுகிற சிறிசுகளை அணைத்தபடி அம்மாவை பெற்ற பாட்டி சுடுகாட்டிலிருந்து திரும்பினாள்.

நீங்கள் சொல்லச் சொல்கிற மனிதனின் கதை நினைவு அலைகளில் மூழ்கி மேலெழுந்து வருகிறபோது, சோகம் நிறைந்த இந்த ஆழத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது.

வாழ்வின் சிறுதுளிர் எட்டிப் பார்க்க அனுமதிக்காத பூமியொன்றுண்டோ?

அதுதான் அவன்.

ஒரு சந்தோச மலர் பூக்கும் கரை தொடமுடியாமல், கங்குகள் மூடிய தீக்கிடங்கில் வாழ்க்கை மிதித்த இனம் பருவம் உண்டோ?

அது அவன்.

கருவேலமரத்தின் ‘காக்காய் முள்ளும்’, 'நெருஞ்சியும்', ‘ஒடமுள்ளும்’ அப்பும் காட்டில், காலில் செருப்பில்லாமல் அவன் மாடு மேய்த்தான்.

கோவணம் இடுப்பில்; துண்டு தலையில்; பகல் சூரியன் முதுகில் - உழவு கட்டிகளிடையே நடந்து கலப்பை பிடித்திருக்கிறான்.

கையில் களைக்குச்சியுடன் அரைப்படி கம்மம் புல்லுக்காய் அவன் களையெடுத்திருக்கிறான். பார்க்கும் தொலைவெல்லாம் விரிந்து கிடந்த கரிசல் பாலையில் ‘பஞ்சுப்புல்’ அறுத்து, பெருங்கட்டாய் இன்னொருத்தன் துணையுடன் தலையில் தூக்கி வைத்து, எதிர் காற்றில் சண்டையிட்டு மூச்சுப் பறியாமல் சுமந்திருக்கிறான்.

பின்னாளில்-

“கல்லைத்தான், மண்ணைத்தான் காய்ச்சித்தான், குடிக்கத்தான் கற்பித்தானா?” என்று உருண்டு வந்த வரிகளைப் படித்தபோதும், மேடை வசீகரிப்புக்காக அந்த வார்த்தைகளை அவன் உருட்டிய போதும் அவனுக்கு எந்தவித பாதிப்பும் நேரவில்லை. அவனுடைய வாழ்க்கை அதைவிட அதிகமாகக் கற்றுக் கொடுத்திருந்தது.

கரிசல் கிராமத்தின் மேல், காற்றுப்போல் நிறைந்திருந்தது வறுமை.எல்லாத் திசைகளிலும் பஞ்சம், விழுதுகள் ஊன்றி கால்களைப் பரப்பியிருந்தது. அந்தக் கொடிய அக்னிக் காலத்தில், “என்றோ ஒருநாள் வானம் மூக்குடைத்துச் சிந்திய உச்சி மழைக்கு முளைத்து, மனிதச் சாம்பலில் உணவு எடுத்து, சுடுகாட்டில் உரம் கொண்டு ஆடின கோரைப் புற்கள்; நுனிகருகிய பூவுடன் குஷ்டம் பளபளக்கும் விரல்களுடைய நாட்டியக்காரி போல் மேல் நீட்டி ஆடின. இதழ் கருகி உயிரைக் காப்பதற்காகத் தலைகீழாகத் தவம் செய்வது போல் தோன்றின”.

கோரைப்புற்களின் வேர்களில் சின்னச் சின்ன பாசிமணிபோல், கிழங்குகள் (வேர் முண்டுகள்). கால் பொசுக்கலையும் சட்டை செய்யாமல், கோரைப்புல்லைப் பறித்து அதன் அடியில் குன்றிமணி அளவே உள்ள கிழங்கை உரித்துச் சின்னப் பிள்ளைகள் தின்றார்கள். பசி.

அவனுடைய அம்மாவை எரித்த இடத்தில் வளர்த்திருந்த புல்லை, ‘மந்தி’ ராமசாமி பிடுங்கப்போனபோது, அந்தச் சிறுவன் தடுத்தான்.தன் மனதில் எப்போதும் அம்மா எரிந்த இடம் ஆலயமாக உட்கார்ந்திருக்கிறது.தடுத்தும் கேட்காமல் அந்த இடத்தில் புல்லைப் பிடுங்க முயன்ற, தன்னை விடப் பெரியவனான, ‘மந்தி’ ராமசாமியை அவன் அந்த இடத்திலேயே மல்லுக்கட்டி, அடித்து விழத் தட்டினான்.

“ஒரு செருசலேம்” என்று கதைக்குப்பெயர் இதனால்தான் வந்தது.

2

அவனுடைய எல்லாக் கதைகளிலும் ஒரு பாட்டி வந்தாள். சுடுகாட்டில் சிதை எரிந்த இடத்திலிருந்து அழைத்து வந்த அம்மாவைப் பெற்ற தாய், “உங்களை அகலம் கொறைஞ்சாலும், உயரம் கொறையாம பாத்துக்கிடுவேன் மக்களே” என்று சொன்ன, அந்தத் தாய் ‘கை விரல் நகம் தேயும் வரை, கால் வெள்ளெலும்பு தெரியும் வரை’ அவள் எங்களுக்காக உழைத்தாள்.

உழைத்து ஈர்க்குச்சி ஆகிவிட்ட பாட்டியிடம் சிடுசிடுப்பு, எரிச்சல் மிஞ்சியது. சுண்டினால் கோபம் விளைகிற ஒரு வாத்தியக் கருவியாகப் பொல பொலவென வசவுகளை உதிர்த்தாள். வஞ்சிக்கப்பட்ட மக்கள் சிந்தும் வசவுகளை, சொலவடைகளை, கதைகளை, கலைகளைக் கற்றுத்தந்த ஆசான் அவள்.

பள்ளிக்கூடத்திலேயே கெட்டிக்காரப் பையனாக அவன் இருந்தான். எல்லாப் பாடங்களிலும் முதல் பரிசுகள் கிடைத்தன.

காமராசரின் மதிய உணவுத் திட்டம் அறிமுகமாகிய காலம்.‘கல்விக் கண் கொடுத்த காமராசர்’ பள்ளியில் மதிய உணவு திட்டத்தைத் தொடங்கி வைக்க 1957-ல் ,அந்த ஊருக்கு முதன்முதலாக வந்தார்.“நாளைக்கு முதல் மந்திரிகிட்டே முதல் சோத்துப் பொட்டலம் நீதான் வாங்கணும்” பள்ளியில் முதல் மாணவனான அவன் வாங்குவதாக இருந்தது. அந்தச் செய்தி வீட்டுக்கு வந்தபோது,

தாயம்மா சட்டென்று திரும்பினாள்-

“ஒம் வாயில கஞ்சியைக் கரைச்சி ஊத்த”

நெரு நெருவென்று கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

“என்னம்மா வருது தெரியுமா? நாளைக்கு நடக்கணும்; சங்கதி தெரியும்.கொத்திப் போடுவேன் கொத்தி.”

மதியச்சோறு என்ற பெயரில் போடப்படுவதைத் தன் பிள்ளைகள் பிச்சை எடுக்கும் கேவலமாய் அவள் கருதினாள். அவள் சொன்னாள், “நா இன்னொருத்தன் கிட்டப் போய் கை ஏந்த விடுவேனா? மக்களே, ஒன்னோ, அரையோ, அகலம் குறைஞ்சாலும், ஒங்களை உயரம் குறையாம வளத்திட்டேன். இனிமேப்பட்டா அநாதியா விடப்போறேன். ஒருத்தன் கிட்ட பிச்சை எடுக்கிறதைப் பாத்து இந்த உசிர் தரிக்காதுப்பா.”

வறுமை அவளுக்கொரு வைராக்கியத்தைக் கொடுத்திருந்தது. யாரிடத்தும் கை ஏந்தாத சுயமரியாதையை அவளுக்கு அளித்திருந்தது. இலவசத்தை அன்றே கேவலமாகக் கருதியவள் என் தாயாம்மா!

“கோபுரங்கள்” கதையிலே வரும் தாயம்மாப் பாட்டி அவள்தான்; அம்மாவாய், சின்னம்மாவாய், பெரியம்மாவாய் அவனுடைய கதைகளில் பாசத்துடன் வருகிறவர்களெல்லாம் அவள்தான்.

அதே நேரத்தில் தரித்திரத்தால் கடைகெட்டுப் போன நபர்களும் அவனுக்குப் பக்கத்தில், அவன் வழியிலேயே இருந்தார்கள்.

சொந்த ஊரில் கோழி கூவ புறப்பட்டால் சாயந்தரம் ஏர்மாடு திரும்புகிற நேரத்துக்குப் பாட்டியின் ஊரைச் சென்றடைவான். பஸ்வழி போனால் ஒரு ரூபாய்க் காசு.குறுக்கு வழியில் 16 மைல் நடந்து பாட்டி ஊருக்குப் போவான்.
மதியம் புதூர் வந்தடைந்ததும் இளைப்பாறல், ஐஸ் பேக்டரி திண்ணையில் விற்கும் மொச்சைக் கொட்டை பயறு மதியச் சாப்பாடு. ‘ஜில்’ என்ற 2 பைசா சோடா வயிற்றின் இடைவெளியை நிரப்பியபின் பழையபடி நடை.

பாட்டி ஊர்க்காரனின் ஒரு வண்டி, புதூரில் சரக்கு இறக்கிவிட்டு ஊருக்குப் போய்க் கொண்டிருந்தது. ஏறிக்கொள்ள அனுமதித்தான்; யாருடைய பேரன், சொந்தம், எங்கிருந்து எங்கே போகிறாய் என்று தெரிந்துகொள்வது அவசியம்தான்.

நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி, “உங்கிட்டே இருக்கிற காசையெல்லாம் எடுடா” என்றான். தன்னிடம் காசு இல்லை என்றபோது, “காசு இல்லாமலாடா இவ்வளவு தூரம் வரமுடியும்?” என்று கத்தினான். ஒரு நாலணா மட்டும் கால்சட்டைப் பையில் செருகியிருந்தது. “காசு கொடுக்கலைன்னா, கொன்னு போடுவேன்” என்று சாட்டைக் கம்பை வீசியபடி அடிக்க வந்தான். அழுது கதறும் அந்தச் சிறுபயலை இறக்கிவிட்டு “சும்மா ஏத்திக்கிட்டுப் போக ஒங்க அப்பன் வீட்டு வண்டியா?” என்று ஓட்டிக்கொண்டு போனான்.


கரிசல் பாலையில் செங்கொழுந்து விட்டுச் சுற்றிலும் எரிகிற வாழ்க்கைத் தீயில் அந்த ஒன்றரைக் கண் மனிதனின், ஓரனோர் சம்சாரியின் இதயம் கருகிப் போயிருந்ததை, இப்போதும் இரக்கத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். மனித இதயங்களைக் கருக்கும் நெருப்பு எங்கிருந்து உருவாகி வருகிறதோ, அந்த இடத்தை தேடி அடைத்துவிடத் தோணுகிறது. அந்தத் தீயின் கடைசல் கோல் எங்கிருந்த போதும் பிடுங்கி எறிந்துவிட ஆங்காரம் எழுகிறது.
அதே நேரத்தில் ஏதோ ஒரு நாய்க்குட்டி மீது வண்டியை ஏற்றிவிட்டான் என்பதற்காகத் தன் உடன்பிறந்த தம்பியை, ஊணுகம்பைப் பிடுங்கிக்கொண்டு விரட்டி அடித்த சம்சாரியும் அவனுக்குப் பக்கத்திலேயே இருந்தார்.

பிஞ்சிலிருந்து, வயது முற்றிய இந்தக் காலம் வரை இதயம் எரிந்து போனவர்கள், இதயத்தைக் கருகவிடாமல் காப்பாற்றி வருபவர்கள் என இருவகையையும் அவன் கண்டிருக்கிறான்.

3

ஒரு சமூக மனிதனுக்கு கிடைக்கும் அனுபவங்கள் இருவகை; நேரடி அனுபவங்கள் (Direct experience), மறைமுக அனுபவங்கள் (Indirect experience).

நூல்களில் இருப்பவை, செவியில் வந்து சேர்பவை, பிறர் சொல்பவை என்று பிறரது அனுபவங்களாய்க் கிடைப்பவைதான் அதிகம்.

அனுபவங்கள் என்பது வாழ்க்கையாயிருக்கிறது என்றால், பிறரது வாழ்க்கை மூலம் கிடைப்பவைதான் மிகுதியாயிருக்கின்றன. சமுதாய மனிதர்கள் நம்மிலும் மிகுதி. இந்த அனுபவங்கள் பொதுமைப்படுத்தப்பட்டு, சமுதாய நெறிமுறைகள் ஆகின்றன.

பாலவயதினில் தானடைந்த அனுபவங்களைக் கார்க்கி “யான்பெற்ற பயிற்சிகளில்” எழுதினான். சமூகத்தின் சாதாரண தட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் கார்க்கியின் வாழ்க்கை இருக்கிறது. அவர்கள் கார்க்கியாக இருக்கிறார்களா என்பது வேறு விசயம்.

பாட்டியின் ஊரில் பள்ளிக்கூடத்தில் அவன் ஐந்தாம் வகுப்புப் படிக்கையில் ஒரு இழவுக்கு வந்து திரும்பும் சித்தப்பா, சித்தியுடன் ஊருக்குப் போகையில் வழியில் கரிசல் குளத்தில் பஸ்ஸில் இறங்கி 6 மைல் நடப்பதற்கு முன் கிடைக்கும் ஒரு சேவுப் பொட்டலத்தை மனதில் எண்ணி, படிப்பைத் துறந்து போன கதை, ‘சரஸ்வதி மரணம்’.

ஊர்க்கம்மாய்க் கரையில் ‘செதுக்கு முத்து’ விளையாடிக் கொண்டிருந்தபோது, புதிதாய்க் கல்யாணமாகி, மேலே ஒரு சட்டைகூட இல்லாமல், இடுப்பில் ஒரு புதுப்பாயுடன் கானல் அலையில் அலைவது போல் வெயிலில் நடந்து வந்த புதுப்பொண்ணு மாப்பிள்ளைகள் பற்றியது ‘கரிசலின் இருள்கள்’.

பம்பாயில் டெய்லர் கடையில் காஜா எடுக்கிற பேரன் அனுப்பிய 5 ரூபாயை ‘எம் பொன்னுராசு அனுப்பி இருக்கான்மா’ என்று மகிழ்ந்து மகிழ்ந்து தெருவில் உருகிய அடுத்த வீட்டுப்பாட்டி – அந்தப் பொன்னுராசுகள் பட்டணத்தில் என்ன பாடுபடுகிறார்கள் என்பதை அவனை ஓட்டல் தொழிலாளியாய் மாற்றி உருவான “தூரத்துப் பாலைவனங்கள்”.

பொய்மலரும், நிஜமான பாடல்கள் போன்றன அவன் வாழ்க்கைக்குள்ளும், பக்கத்திலும், தூரத்திலும் கிடந்தன.
அவனுடைய நகரம் ஒரு ரயில் வண்டியாய் அறிமுகமாகி, அதிசயிக்க வைத்தது.

வங்காள நாவலாசிரியர், தாராசங்கர் பானார்ஜிதான் முதலில் ரயில் தண்டவாளங்களில் கவிதை படைத்துக் காட்டியவர். ‘கவி’ நாவலில் தயிர்க்கூடை சுமந்து தண்டவாளங்களில் நடந்து, நகரத்துக்கு வந்து போகிற ‘டாகுர்ஜி’ என்ற அந்தக் கறுப்புப் பெண்ணைப் பார்த்திருக்கிறீர்களா?

“டாகுர்ஜி வெள்ளைச் சேலை அணிந்திருந்தாள். வயல்வரப்பில் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை படர்ந்துள்ள அரசாணி பூக்கள் காற்றில் அசைவதுபோல் நடந்து போய்க்கொண்டிருந்தாள், வளைந்து வளைந்து செல்லும் ரயில்பாதை அவளை மறைத்துக் கொண்டது.”

அந்த டாகுர்ஜி இன்னும் மனதில் நடந்து கொண்டிருக்கிறாள்.

மதுரையிலிருந்து தெற்கு நோக்கிப் போகும் இருப்புப்பாதை, ஒரு நெடுஞ்சாலையைச் சந்திக்கிற இடத்தில் ஒரு ரயில்வே கேட்டும் மீனாட்சி மில்லும் இருந்தது. மதுரைக்கு வந்த அன்று மில்லில் ஈவினிங் ஷிப்டுக்கு இரவு 7 மணிக்குச் சித்தப்பாவுக்குச் சாப்பாடு கொண்டு போனபோது, எதிரே பெரிய ‘லைட்’ எரிய வந்த ரயில்.

அவன் அப்போதுதான் ரயிலை முதன்முதலில் பார்க்கிறான். அப்படிப் பார்ப்பதாகவும் சொல்லிக்கொள்ளக்கூடாது. அதிசயத்தையும் மறைக்க முடியாது. அவன் சித்தப்பாவிடம் சொன்னான் “லைட் எவ்வளவு பெரிசாயிருக்கு”.
தண்டவாளங்களில் நடந்து பள்ளிக்கூடம் போகிறபோது சந்திக்கும் ‘ரயில்வே கேட் கீப்பர்’ ராமசாமியின் மகள் ‘குற்றம்’ கதையின் நாயகி. இது ‘தாமரை’ இதழில் முகம் காட்டிய எனது முதல் கதை.

குற்றம், விடிகிற நேரங்கள், மூன்றாவது முகம், வளரும் நிறங்கள் இவையெல்லாம் மதுரை மீனாட்சி மில்லும், ரயில்வே தண்டவாளங்களும், மில் ரோட்டுக் கடைகளுமாய் இவைகளைச் சுற்றி முளைத்த கதைப் பயிர்கள்.


பொசுக்கிற அந்த தண்டவாளங்களில் கூட்டாளிகளுடன் கை கோர்த்துக்கொண்டே சேர்ந்து ஓடினான். சனிக்கிழமை அரைநாள் பள்ளிக்கூடம். பத்தாவது படிக்கிற வரை காலில் செருப்பில்லாமல் மதியம் பள்ளி முடிந்ததும் தண்டவாளங்களில் ஒரு ஒன்றரை மைல் ஓடி வீடு வந்து சேர்வான்.

ஆனால் தண்டவாளத்தில் பொசுக்கிய வறுமையின் சூடு, கல்லூரி மாணவனாய், அவன் காலூன்றியபோதும் விடாமல் விரட்டியது.

நில உடைமை உறவுகளில் வாழ முடியாமல் வெளியேற்றப்படுகிறவர்கள் நகரங்களுக்கு வருகிறபோது முதலாளித்துவம், உழைப்பாளிகளாக மட்டும் அவர்களை அழைப்பதில்லை. அவர்களிடமிருக்கும் நல்ல குணங்களையெல்லாம் தட்டி உதிர்க்கிறது. உழைப்புக்கேற்ற பயன் கிடைக்காதபோது, உழைக்கவும் தயாராக இல்லாமல், உழைப்புக்கேற்ற பயனைப் பெற போராடவும் தயாராக இல்லாத உதிரிகள் உருவாகிறார்கள்.

இராமநாதபுரம் பகுதியிலிருந்து அவர்கள் வந்தார்கள். இவர்களுக்கு மொத்தமாக இன்னொரு பெயர் கீகாட்டான், கிழக்கத்தியான். மதுரைக் ‘கொட்டகையிலிருப்பவர்கள்’ இவர்களை இப்படி அழைத்தார்கள். வீரபரம்பரையைச் சேர்ந்த கீகாட்டுக்காரர்களிடம் எள் போட்டாலும் சொல் போட்டாலும் அவர்கள் நிலத்தில் மறுவிளைவு சண்டையாகவே இருக்கும். இத்தகையவர்களுக்கு, வேலையும் கொடுக்கப்பட்டு இவர்களில் சிலபேர் தொழிலாளர்களை மடக்குவதற்காகச் சில சலுகைகளும் அளிக்கப்பட்டது. இவர்கள் பாதிநாள் மில்லுக்கு வெளியே இருந்தார்கள். மாதம் முழுதும் சம்பளம் கொடுக்கப்பட்டது. பாட்டாளிகளாக ஒரு ரூபம். பாட்டாளிகளல்லாதவர்களாக உண்மையாக அவர்கள் மேல் ஒட்டியிருந்த இன்னொரு ரூபம்.

நாட்டுப் பக்கத்திலிருந்து வந்த புதுப்பெண் போல, பயமிரட்சியும் இயங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை மிரட்ட இவர்கள் கையாளானார்கள்.

“கொண்டக் கரிச்சான்” இருந்தான். “நண்டுக்கோமாளி” இருந்தான். “பம்பையத்தேவன்” இருந்தான்.

இந்த உதிரிகளில் பம்பயத்தேவனைப் பற்றியதுதான் ‘வளரும் நிறங்கள்’ கதை.

இரவு நடுச்சாமம் வரை தெருவிளக்கில் படிக்கிற பையன்கள். போதையில் தள்ளாடியபடி வருகிற பம்பையத்தேவன். ஒரு மிச்சர் பொட்டலத்தைக் கொடுத்து, “தம்பி, நல்லாப் படி, சாகிறது சாகப்போறோம். எதையாவது செய்திட்டுச் சாகணும்” என்று சொல்கிற பம்பயைத்தேவனை இதே வார்த்தைகளினால், பின்னாளில் அவன் புரட்சிகரமாய் மாறியிருந்ததை அடையாளம் காட்டினேன்.

ஜி.நாகராஜன் கதைகளில் வருகிற ‘சின்னக்கடை’ வீதியைச் சார்ந்த உதிரிகளும், ‘வளரும் நிறங்களில்’ வருகிற உதிரிகளும் நடமாடிய இடம் அந்தத் தண்டவாளமும், அதை ஒட்டியிருந்த தோப்பும் - நான் நடமாடியவை.

உதிரிகளைப் பற்றி மாத்திரம் ஜி.நாகராசன் எழுதினார் (அவர்தான் ‘சரஸ்வதி’ இதழை முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது). உதிரிகளைப் பற்றிய அனுபவங்களை வடிக்க அவர்களுடனேயே வாழ்ந்தார். அவர்களைப் போலவே அவரும் ஆகிப்போனார். ஆனால், சரியான சமுதாய இயக்கங்கள் வளருகிறபோது, அந்தச் சிறகுகளின் கீழ் அவர்களில் சிலரும் வருவார்கள் என்பதற்கே ‘வளரும் நிறங்கள்’ நான் எழுதியது.

4

என்னுடைய கதைகளில் கவித்துவம் அதிகமாயிருப்பதாய் விமர்சனம் இருக்கிறது. “கழுத்தில் அணிய வேண்டியதைக் காதில் அணிந்து கொண்டதுபோல் துருத்திக்கொண்டிருக்கும் அலங்காரமாய் அமைந்துள்ளது. கற்பனைகளில் உட்கார வைக்கவேண்டியதை, கதைகளில் உட்கார வைக்கிறீர்கள்” என்ற ஒரு கருத்து வருகிறது.

தேவையா, இல்லையா என்பதனைவிட, கவித்துவ பாணி எப்படி என்னிடம் மேலூன்றியது என்பதை விளக்குவது பொருத்தமாயிருக்கும்.

எனது கல்லூரிக் காலம் தமிழ்நாட்டில் தி.மு.க காலமாக இருந்தது. 50களில் இருந்து 70 வரை ஒரு தலைமுறை இளைஞர்களை, மாணவர்களை அவர்கள் கைப்பற்றியிருந்தார்கள். சொல்கிற விசயங்களில் அல்லாமல் எப்படிச் சொல்கிறார்கள் என்பது இந்தத் திராவிட இயக்கத்திலிருந்து அதன் பிடிக்குள் ஆட்பட்டிருந்த நாளில் கற்றேன்.

கல்லூரியின் பின்படிக்கட்டுகளைத் தொட்டபடி வைகைநதி. கல்லூரியின் முன்வாசலைத் தொட்டுப்பார்க்க உருளுகிற தெப்பக்குளத்தின் சிற்றலைகள்.இரண்டின் இடையில் தியாகராசர் கல்லூரி ஒரு கவிதை. கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், அபி, நா.காமராசன், இன்குலாப், மு.மேத்தா முதலியோர் சமகாலத்தில் முன்னும் பின்னும் அந்தக் கல்லூரியில்! கவிதைகளை ரசிக்கும் சிறந்த வாசகர் எண்ணிக்கை தொடர்ச்சியாய்!

எனவே கூடிக்கூடி, கவித்துவம் எங்கே அதிகமாக இருக்கிறதோ அங்கே எடுத்தோம், பேசினோம், சிலாகித்தோம்.இருபுறமும் நாணல் அசைய வைகை ஆற்றின் நடுமணல் வெளியில் கவிதைக்காக அமர்ந்து, கவிதைக்காகப் பேசி, கவிதைக்காக ஐந்து மைல்கள் நடந்து வீடு திரும்பிய காலங்கள்.மேய்ச்சலில் இருந்து வயிறு நிறையத் திரும்பும் மாடுகள் போல்; பிறகு மீண்டும் அறையில் அசை போட்டபடி.

மலையாளம், பாரசீகம், உருதுமொழி பெயர்ப்புக் கவிதைகள்; கலீல் கிப்ரான், காண்டேகர் படைப்புகள் - இவைகளே எங்கள் உணவுகளாக இருந்தன.

பல கவிதைகளை மொழியாக்கம் செய்தேன்; கலைநயத்துக்காக மட்டுமே.

புகுமுக வகுப்பில், தோல்வியடைந்து வீட்டிலிருந்தபோது, நூலகமே கதியானது.அந்த ஓராண்டுக்காலத்தில் உலக இலக்கியங்கள் அறிமுகமாகின. எந்தக் கண்ணோட்டமும் இல்லை. ஆனால் அப்போது மனதில் நிலைகொள்ள ஆரம்பித்த கதை என்ற வடிவம், கல்லூரி விட்டு வெளியேறிய பின் செயல்பட வைத்தது.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் படிப்பகங்களுக்குப் பல மைல் தூரம் நடந்துபோய் படிப்பவனாக - நகரில் எந்த மூலையிலும் நடக்கிற அதன் கூட்டங்களை நடந்துபோய்க் கேட்கும் தொண்டனாக - மாணவப்பருவத்தில் அதன் மாணவர் தலைவர்களில் ஒருவனாக - பிறகு தி.மு.க பேச்சாளனாக இப்படியிருந்தாலும் அந்த இயக்கத்தின் காலாச்சாரம் அப்போதிருந்தே அருவறுப்பை ஊட்டியது. அதற்குள் கரைந்துவிடாமல், கரையிலேயே நிற்கும் மனிதனாக இருந்தேன். குறிப்பாக பெண்கள் பற்றிய அவர்கள் பார்வை, பழக்கவழக்கங்கள், 1967-இல் ஆட்சிக்கு வந்த பின் லஞ்சம், ஊழலை ஒரு அரசியல் கலாச்சாரமாக, வாழ்வின் பாணியாக ஆக்கியது, லட்சியங்களிலிருந்து விலகியது - இவை அவர்களை என்னிடமிருந்து வெகுதூரம் விரட்டியிருந்தன. மாணவனாயிருந்தபோது எதிர்த்ததற்காக, தலைவர்களை விமர்சனப்படுத்தியதற்காக, கடுமையான எரிச்சலைடைந்தவர்கள், கிண்டலும் கேலிகளும் என்னை நோக்கிப் பாய்ந்தன.

இந்த திராவிடக் கட்சியின் முன்னணி அங்கமாக இருந்து பணியாற்றியதால் பெற்ற அனுபவங்கள்- அறிந்து கொண்ட அரசியல் கலாச்சாரம், அரசு என்ற ராட்சச எந்திரத்தின் லட்சத்துப் பதினாயிரம் பற்களில் ஒரு பல்லாக, அரசு அலுவலராக இருந்து அறிந்த அதன் குணங்கள் - இவைகளை அம்பலப்படுத்துவது எதிர்காலப் படைப்புகளில் முக்கியப் பகுதியாய் ஆகின.

வாழ்வு நிகழ்ச்சிகள் நடக்கிறபோதே, அனுபவமாகப் பதிவதில்லை. இரவு மழைபோல், நம் உணர்தல் இல்லாமலே நடந்து முடிகின்றன. பின்னொரு காலையில் எழுந்து பார்க்கையில் குளிர்ந்த நிலமும் குளித்த செடிகளுமாய் அனுபவங்கள் செழுமைகொண்டு வெளிப்படும்.

மலையாள நாவலாசிரியர் சுரேந்திரன் கூறுவதுபோல், “குழந்தையின் பிறப்புற்குப் பின், சிறிது நேரம் சென்ற பின்பே அதனை ஓர் அனுபவமாகக் காணமுடியும். அதுவரை அது ஓர் வேதனையாக மட்டும்தான் இருக்கும்.”

அனுபவமாக மாற்றி எடுக்கப்படாமல், நம்முள்ளே நடக்கிற நிகழ்ச்சிகளை உடனே படைப்புப் பிரசவமாக்க முயல்கிறபோது, அரைவேக்காடாய் ஆகிற அபாயம் நிற்கிறது.

வாழ்வு நிகழ்ச்சிகள், அனுபவம் ஆகப் பொருள் மாற்றம் கொள்ளும் வரை காத்திருப்பது; அல்லது பயிற்சியால் அனுபவமாக மாற்றியமைப்பது, அதற்கு எவ்வளவு காலம் வேண்டுமோ, அவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். படைப்புப் பிரச்சனைகளில், இது ஒரு கவனிக்கப்படவேண்டிய அம்சம்.

எனது வாழ்வைப் போலவே, படைப்புகளும் மூன்று காலத்தின் பிரதிபலிப்புகளாக ஒளியடித்தன. விசயத்தை வெளிப்படுத்தும் பார்வையும் மூன்று காலங்களாகப் பிரிந்து நிற்கின்றன.

வறுமை, சோகம், அனாதரவான நிலை ஆகியவை கொண்ட பாலிய காலம் அழுகையாய்க் கொட்டிய முதல் வகைப் படைப்புகள் – ஒரு செருசலேம் தொகுதி.

வறுமை, சோகம், பொருளாதாரம் வறுத்த இளமைப் பருவ வாழ்க்கையை, சோகத்தை அடக்கி வாசித்து, கொஞ்சம் மனிதநேயம் மேலோங்க வார்த்த இரண்டாவது வகைப்படைப்புக்கள் – காடு, ஒரு கிராமத்து ராத்திரிகள் தொகுதிகள்.

மார்க்சீயப் புரிதல் உட்புக, சமுதாயப் பார்வை தொட, வெளிப்பட்ட மூன்றாவது கால கட்டப் படைப்புகள் – இரவுகள் உடையும், மூன்றாவது முகம் தொகுதிகள்.

மதிய உணவு என்ற பெயரில் ‘கல்விக் கண் கொடுத்த’ காமராசர், கொடுத்ததைத் தமிழகத்தின் ஒரு பட்டிக்காட்டுப் பாட்டி “பிச்சை” என்று கேவலமாய் அருவருத்து வீசியெறிந்தார் என்பதைக் “கோபுரங்கள்” கதையில் காட்டினேன். அதையே இப்போது படைக்க ஆரம்பித்தால், ‘மதியப் பிச்சை’ போடும் நிகழ்ச்சி கோலாகோலமாய் முடிந்த பின், ஊரிலேயே பெருத்த வட்டிக்காரனும், கொள்ளையடிப்பவனுமான பணக்காரன் வீட்டில் கோழிக்கறியும், வறுவலும், மீன் பொறியலுமான மதியச் சாப்பாட்டிற்குப் பின்னான இளந்தூக்கத்திற்கு மின் வசதியும் மின் விசிறியும் இல்லாததால் “காற்று வரலை” என்று பிரயாணத்திட்டத்தை உடனே மாற்றிக்கொண்டு, விருதுநகருக்குப் புறப்பட்டுப்போன காமராசரையும் சேர்த்து அம்பலப்படுத்தியிருப்பேன்.

5

புரட்சிகர அரசியலை, அதற்கான சரியான அமைப்பை நான் தேர்வு செய்தேன். புரட்சிகர அமைப்புத் தொடர்பு ஏற்பட்டபின், படைப்புக்கள் புதிய திசையில் ஆக்கம் பெற்றது.

அமைப்பு சார்ந்து நிற்பதால், கலைஞனின் சுதந்திரம் பறி போய்விடுகிறது; கலை நளினம் மங்கிப்போகிறது; இவை அரசியல் அமைப்பும் சார்ந்து இயங்குவதால் தொற்றும் நோய்கள் என்றும், இந்த நோய்கள் என்னையும் தாக்கியிருப்பதாகவும் விமர்சனங்கள் வருகின்றன.

கலைஞன் சுதந்திரம் எது?

கலை நளினம் எதனால் கெட்டது? செயல்பாடு குறைந்தது யாரால்? அமைப்பு, கலை நளினத்துக்கு எதிராக இருக்கிறதென்றால், இதற்கான பதில்களைத் தனியாக ஒரு கட்டுரையில் பின்னால் தரலாம். ஆனால் எந்த அமைப்பு அது? எல்லா அமைப்புக்களையும் ஒருசேர வைத்து, பொதுமைப்படுத்திவிடுவது (Generalize) எதற்காக?

ஒரு காலத்தில் பேனாவைப் பிரகாசமாக ஏந்தி எழுத்துலகில் லாவகமாய் சிலம்பு வீசியவர்கள், இந்நாளில் இல்லாமல் போயிருக்கிறார்கள்; அவர்களது இளமைக்காலம், காதலின் கூக்குரலுக்கு அடுத்தபடியாக எழுத்தின் கூக்குரலாக இருந்தது. அல்லது அதற்கு முதலாகவும் இருந்தது. அவர்களெல்லம் (என்னுடைய சமகாலத்தவர்கள்) இன்று ஒடுங்கிப் போய்விட்டார்கள்; என்ன காரணம்?

அதற்கான முழுக்காரணங்களும் என்னிடம் கைவசம் இருக்கின்றன.

இடையில் குறுக்குவெட்டுத் தோற்றமாய் ஒரு கேள்வி; பெரும்பாலான கலை, இலைக்கியவாதிகள் ‘பூர்ஷ்வா’ நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டுதான் அதற்கிணைந்த ஒரு வாழ்க்கை முறையையும் வைத்துக்கொண்டுதான் கலைப்படைப்புக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னை இல்லாமல் செய்வதற்கான முழுச் சூழ்ச்சிகளையும் வாழ்க்கை செய்து கொண்டிருக்கிறது. நிலவுகிற சமுதாயம், சமுதாயத்தைக் கட்டிக்காப்பதற்கான நிறுவனம், நிறுவனத்தைச் சார்ந்து தீர்மானிக்கப்படும் வாழ்க்கை, வாழ்க்கையை வரிந்துகட்டிக் காக்கும் குடும்பமுறை - இப்படி மற்றவர்களை இல்லாமல் செய்தது எதுவோ, அது என்னையும் இல்லாமல் செய்வதற்கான சூழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறது. அதனோடு எப்போதும் ‘மல்லுக்கட்டு’ (சண்டை) தான். முறுக்கிகிட்டு, அதை அடிக்கப்போவதுதான். வாழ்க்கையை ஜெயித்து, அதன்மீது நின்று, கொடியை உயர்த்திப் பறக்கவிட, பாலங்களாய் இருப்பவை புரட்சிகர அரசியலும், அமைப்பும்தான். அது எதுவாக இருப்பினும்.

ஒவ்வொரு அறிவுஜீவியையும், ஒவ்வொரு கலைஞனையும் ஏதோ ஒரு கட்டத்தில் விழத்தாட்டிய புதை சேற்றை ஒரே தாவாய்த் தாவி, மனித சமுதாயத்தின் இலட்சியமேட்டை அடைய எனக்குப் பயிற்சி தருபவை கலைத்தாகமும் புரட்சிகர அரசியலுமே!

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பா.செயப்பிரகாசம் நூல்கள்