பா.செயப்பிரகாசம் (எ) சூரியதீபன்
புனை பெயர்: சூரிய தீபன்

தமிழ்ச் சிறுகதைகளின் நெடும்பயண வரலாற்றில் கரிசல் பூமியின் பங்கு மகத்தானது. தமிழுக்குப் புது வடிவம் தந்த மகாகவி பாரதியின் ஜீவன் கலந்து கிடக்கும் பூமி அது.

“காய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.”

இது தன்னுரை அல்ல; அவர் பற்றிய பிறரின் அளவீடு.

கல்வித் தகுதி: முதுகலை (தமிழ்), மதுரைத் தியாகராசர் கல்லூரி.

மாணவப் பருவத்தில் 1965 -ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர். அதனால் இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (DEFENSE OF INDIA RULES) கைதாகி பாளையங்கோட்டைச் சிறையில் மூன்று மாதங்கள் சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர்.

பணி அனுபவம்: 1968 முதல் 1971 வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளர். 1971-ம் ஆண்டு முதல்- 1999 வரை, தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடர்புத் துறைப் பணி. இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு.

தாமரை, கணையாழி, தினமணி, புதிய பார்வை, தீராநதி, கதைசொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மனஓசை போன்ற இதழ்களில் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன. கவிதை, கதை, கட்டுரை, உருவகக் கதைகள் எனப் பல அடங்கும்.

கீற்று, பொங்கு தமிழ் போன்ற இணைய இதழ்களில் படைப்புக்கள் தொடர்ந்து வெளிப்படுகின்றன.

’மனஓசை’ என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். 1981 முதல் 1991 வரை வெளியான  மனஓசை இதழ் பத்து ஆண்டுகள் தமிழிலக்கிய உலகில் முன் மாதிரிப் பதிவுகளை உருவாக்கியது. ஏற்கனவே இயங்குகிற சமூக நீரோட்டத்துடன் செல்லாமல் எதிர்க் கருத்தியலை வைத்து நடை போட்ட இதழ்.

இதுவரை வெளிவந்த சிறுகதைத் தொகுதிகள், கட்டுரைத் தொகுப்புகள் & கவிதைகள் பட்டியல் காண இங்கே செல்லவும்.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி - என்னும் அமைப்பின் செயலாளராக இருந்தார். 2008-ல் ஈழத்தின் மீதான யுத்தம் உச்சத்திலிருந்த வேளையில் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு (ஈழம்) எழுதி வெளிவந்த “இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் இலங்கையின் இராசதந்திரம்” என்னும் சிறு வெளியீடு பத்தாயிரம் படிகள், தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் இவரது முயற்சியில் மறுபதிப்பு செய்து, இலவசமாக தமிழக முழுவதும் விநியோகம் செய்யப் பட்டது.

மு. திருநாவுக்கரசு எழுதி 1985-ல் வெளியான “தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும்” என்னும் நூலும் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் மறுபதிப்புச் செய்து, அனவருக்கும் சென்று சேரும் நோக்கில் ரூ.10/= என குறைவு விலையில் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. இந்நூலின் மறுபதிப்பில் உள்ள முன்னுரை இவர் எழுதியது.

தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் 2007-ல் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதற்கு கண்டணம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற பேரணியயில் கலந்து கொண்டதால் கைதாகி, பழ.நெடுமாறன், வை.கோ, பெ.மணியரசன், தியாகு ஆகியோருடன் சென்னை ’புழல்’ சிறையிலிருந்தவர்.

2002 ஈழத்தில் ’அமைதி ஒப்பந்த காலம்’. 2002 அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் விடுதலைப் புலிகளின் முன்னெடுப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ”மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டில்” பங்கேற்றார். கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, திரை இயக்குநர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் - என ’சரிவிகித உணவுக் கலவை போல்’ ஐவர் பங்கேற்ற அந்நிகழ்வில் ஒவ்வொருநாள் நிறைவிலும் ஒருவர் உரையாற்றினர். மூன்றாம் நாள் நிகழ்வில் இவருடைய உரை நிகழ்ந்தது. ’மானுடத்தின் தமிழ்க்கூடல்‘ மாநாட்டின் தொடர்ச்சியாய் ஈழத்தில் பத்து நாட்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களின் தொகுப்பாக ”ஈழக் கதவுகள்” என்னும் நூல் வெளியானது.

இவரது மகன் சிறுக்கதை 12-ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் பக்கம் 197 (2017 பதிப்பு) / 225 (2005 பதிப்பு) இடம் பெற்றுள்ளது. சில பல்கலைக் கழகங்களில் இவரது தொகுதி பாடமாக வைக்கப் பெற்றது. சில மாணவர்கள் இவரது படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் (Phd) பெற்றுள்ளனர். அதில் ஒன்று 'பா.ஜெயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்' என்ற ஆய்வு (மனோமணியம் சுந்தரனார் பல்கலைகழகம் - மார்ச் 2007 ). மற்றொரு ஆய்வு "பா.செயப்பிரகாசம் கதைகளில் மண்ணும் மக்களும்" (2004)

“An Anthology of Tamil Stories - Modern Tamil Stories - A Writer’s Workshop - Orion Bird Book” என்ற நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்ட தொகுப்பில் இவரது கதைகள் மொழியாக்கம் செய்யப் பெற்று இடம் பெற்றுள்ளன.

கல்லூரி நாட்களிலிருந்து  சிறந்த பேச்சாளர். பல இலக்கிய மேடைகளிலும், கருத்தரங்குகளிலும், அரசியல் அரங்குகளிலும் இவரது சொற்பொழிவுகள் நிகழ்ந்துள்ளன.

பா.செயப்பிரகாசம்,
தொலைபேசி: +91 - 9444 090 186
மின்னஞ்சல்: jpirakasam@gmail.com

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

வாசிப்பு வாசல்

Mother languages that reflect India’s soul

குறவன், குறத்தி ஆட்டம் - ஒரு புதிய பார்வை

பொன்னீலன் ‘கரிசல்’ - நாவல்: நில வரைவியலும் நினைவுகளும்