இவரை பற்றி இவர்கள்


கி.ராஜநாராயணன்
வானம் பார்த்த பூமியான இந்தக் கரிசல் மன்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்களுக்குத் தாங்க முடியாத துக்கம் செஞ்சை அடைக்கும். இந்த மக்களைப் பற்றி இதுவரை நாங்கள் சொல்லியதெல்லாம் விட இன்னும் சொல்லாததே அதிகம் இருக்கிறது. பா.செயப்பிரகாசத்தின் எழுத்தில் என்னை ரெம்பவும் கவர்ந்தது, அவருடைய கவித்துவ நடை அதைப் பல இடங்களில் படிக்கும் போது ஐயோ நமக்கு இப்படி எழுத வரமாட்டேங்குதே என்று நினைப்பேன்.


இன்குலாப்
சூரியதீபன் வெறும் பார்வையாளனாக நிற்காமல், தோற்றத்துக்குப் பின்னுள்ள சூத்திரக் கயிறுகளைப் பிடித்து இழுத்துப் பார்க்கும் ஒரு சமூக விஞ்ஞானியாகவும் நிற்கிறார்.


பேராசிரியர் க.பஞ்சாங்கம்
அன்று தொடங்கி இன்று வரை மொழி, தேசியம், வர்க்கம், சாதி, பாலியல் என்று எதுவானாலும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே சார்ந்து போதல் என்ற உண்மைக் கலைஞனுக்கே உரிதான உளவியலைச் சிந்திச் சிதறவிடாமல் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் ஒரு பத்திரிகையை (மனஓசை) நடத்துவதற்காக தனது படைப்பாக்க மன நிலையையே தாரை வார்த்திருக்கிறார்.


வல்லிக்கண்ணன் ('தமிழில் சிறு பத்திரிகைகள்' புத்தகத்தில்)
சிகரம் இதழில் சூரியதீபன் எழுதிய 'நடுத்தர வர்க்கப் பேனா' கட்டுரை முக்கியமானது.

சூரியதீபன் தற்கால உண்மைகளைச் சூடாகவும் அழுத்தமாகவும் குறிப்பிட்டிருக்கிறார், 'நடுத்தர வர்க்கப் பேனா' என்ற கட்டுரையில்.

'மக்களிடமிருந்து மக்களுக்குக் கொடுப்பது என்பது அரசியலுக்கு மட்டுமல்லாமல், கலை இலக்கியத்திற்கும் பொருந்துகிற ஒன்று. மக்களிடமிருந்து விஷயரசம் எடுத்து இலக்கியத்தில் பூசுகிறபோதுதான், அது காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பது சரியாகிறது.

'புதுக் கவிதை எழுதுவதே ஒரு பெரிய சமூக நிகழ்வு ஆகிவிடாது. புதுக் கவிதை எழுத பேனா தொட்டுவிட்டதாலேயே சமூக முன்னோட்டத்திற்கான பணியைச் செய்து விட்டதாக ஒரு பெருமை இன்றைய மத்திய வர்க்க எழுத்தாளர்களிடையே காணப்படுகிறது. வாழ்க்கை நிலைகளில் மாற்றம் கொள்ளாமல் எழுதுவது மட்டுமே தீர்வு கண்டுவிடும் என்று எண்ணினால், அது நடுத்தர வர்க்கக் கனாக்களே.’

எழுதுகிறவர்களைச் சிந்திக்கும்படி தூண்டுகிற இந்தவிதமான எண்ணங்கள் இக்கட்டுரையில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன.


பாரதிபாலன்
மக்கள் மொழியில் எழுதுவது என்பதைவிட மக்களின் வாழ்வை மொழியாக்கு என்பதுதான் பா. செயப்பிரகாசத்தின் கலை வேலைப்பாடு. அவரைக் கரிசல் படைப்பாளி என்று தனித்து வகைப்படுத்தினாலும், பேசும் மொழியும் அது வெளிப்படும் தொனியும் வாழ்ந்த வாழ்வையும் சூழலையும் எல்லோருக்குமான மொழியாக்கிவிடுகிறது! இதெல்லாம் பா.செயப்பிரகாசம் போன்ற கலைப் படைப்பாளிகளுக்குத்தான் சாத்தியம்.

அறியாத வாழ்வை ஆவணங்களில் ஆராய்ந்து ஆயிரம் பக்கங்களில் படைப்பாக்குவது வேறு, அறிந்த வாழ்வை, அனுபவத்தின் வழியாக ஆராய்ந்தறிந்து உணர்த்துவது என்பது வேறு, ‘காற்சதங்கையுடன் ஆடும் சாமியாடியின் கழுத்தில் தொங்கும் சாட்டைபோல் அந்தச் சிறுநகரின் கழுத்துக்கு மேலாக ஆறு ஓடியது. இப்படியான ஒருபார்வை வாழ்வையும், வாழும் சூழலையும் இணைத்து அதனை அர்த்தப்படுத்திவிடுகிறது.

ஒரு நூற்றாண்டின் மனிதர்களும், அவர்களின் வாழ்வும் நிலப்பரப்பும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. அதுவும் பா.செயப்பிரகாசம் அவர்களின் மொழியின் வழியாக தெக்கத்தி ஆத்மாக்களின் உயிர் மொழியை உணரமுடிகிறது.


விழி.பா.இதயவேந்தன் ('நந்தனார் தெரு' புத்தகத்தில்)
எண்பத்தொன்றின் ஆரம்பத்திலிருந்து 'மனஓசை' பத்திரிகையோடு தொடர்பு. தோழர் சூரியதீபனின் எழுத்து வெகுவாய் கவர்ந்தது. ஆசிரியர் பொறுப்பிலிருந்து “மாணவர் சிறப்பிதழ்” என்று ஒரு மனஓசையைக் கொண்டு வந்தேன். அந்தக் கட்டத்தில் தான் வாசகனாய் இருந்த எனக்கு தைரியமாய் பேனாப் பிடிக்க முடிந்தது.

கணேசலிங்கனின் "செவ்வானம்" புத்தகத்தை முதன் முதலில் சூரியதீபன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்தில் கொழுந்து விட்டெறியும் என் நெஞ்சிற்கு முன், என் சனங்களின் கதை என்னில் நிழலாடியது. "சாது மிரண்டால் காடுகொள்ளாது” என்பார்கள். சூரியதீபனின் 'காடு' படித்த பிறகு எனக்கு இன்னும் வேகம் அதிகமானது. கதையைப் படித்து கலங்கியிருக்கிறேன். ஒரு சமயம் வாய்விட்டே அழுதிருக்கிறேன்.


இந்திரா சௌந்தராஜன் (முறிந்த அம்புகள் & இந்திரா சௌந்தர்ராஜன் சிறுகதைகள் புத்தகத்தில் & மதுரை புத்தகத் திருவிழா - 2023 உரை)
நான்‌ எழுத்தாளன்‌ ஆனதே ஒரு சிறுகதையால்‌ தான்‌. 1977 சிகரம் சிற்றிதழில்‌ “இருளுக்கு இழுப்பவர்கள்‌.' - என்று ஒரு சிறுகதை. பா. ஜெயப்பிரகாசம்‌ என்பவர்‌ எழுதியது. விளையாட்டாக அதை படித்தேன். என்‌ அரை டிராயர்‌ பருவத்தில்‌ நான்‌ (1977-78) உணர்ந்து வாசித்த முதல்‌ கதை அது.

முதல்‌ வாசிப்பிலேயே என்னுள்‌ அது மூட்டிய ஆவேசம்‌ சொல்ல முடியாத ஒன்று. வரிக்குவரி வார்த்தைக்கு வார்த்தை அது என்னை உசுப்பிவிட்டது.

அடேயப்பா எழுத்துக்கு இத்தனை சக்தியா? கவர்ச்சியா? என்று கேள்வி கேட்கவிட்டது. நானும்‌ பேனா பிடிக்க ஆரம்பித்தேன்‌.

இந்த நிமிஷம்‌ வரை அந்த ஜெயப்பிரகாசம்‌ தான்‌ என்‌ எழுத்துலக குரு.

அவரை நான்‌ பார்த்ததுகூட இல்லை, ஆனாலும்‌ அந்த துரோணருக்கு இந்த ஏகலைவன்‌ இந்த நூல்‌ மூலம்‌ என்‌ நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்‌.

எழுத்தால்‌ எல்லாம்‌ ஒன்றும்‌ சாதிக்க முடியாது என்று கூறுபவர்களுக்கு ஒரு வார்த்தை. ஒரு சிறு கதையால்‌ ஒரு எழுத்தாளன்‌ உருவாகியிருக்கிறேன்‌ என்பதே! அது சாதித்த விவரங்களை பட்டியலிட முடியாது. அது சூரிய ஒளி. குறிப்பிட்ட இடத்தில்‌ இந்த பிரபஞ்சத்தில்‌ அது சுடர்விடுவதாகவும்‌ கூற முடியாது. மற்ற முயற்சிகளின்‌ சாதனைகள்‌ வேண்டுமானால்‌ இருளில்‌ ஏற்றிய தீபங்களாய்‌ இனம்‌ கண்டுகொள்ளக்‌ கூடியதாக இருக்கலாம்‌.


எஸ்.ராமகிருஷ்ணன் ('கதாவிலாசம்' புத்தகத்தில்)
கரிசல்‌ கதைகளின்‌ உலகில்‌ தனித்துவம்‌ பெற்றவர்‌ பா.செயப்பிரகாசம்‌. இதுவரை கதை உலகின்‌ காலடி படாத கிராமத்தின்‌ ஒடுக்கப்பட்ட மக்களையும்‌ அவர்களின்‌ வாழ்க்கைப்‌ பாடுகளையும்‌ விவரிக்கக்கூடியது இவரது எழுத்து. முப்பத்தைந்து வருடங்‌களுக்கும்‌ மேலாக சிறுகதைகள்‌, கட்டுரைகள்‌ எழுதிவரும்‌ தீவிர இலக்கியவாதியான செயப்பிரகாசம்‌ “விழிகள்‌”, “சதங்கை”, “மனஓசை" போன்ற இதழ்களில்‌ தொடர்ந்து எழுதி வந்தவர்‌. சமூக விடுதலையை நோக்கியதாக எழுத்து அமைய வேண்டும்‌ என்ற உரத்த சிந்தனை கொண்ட பா.செயப்பிரகாசத்தின்‌ மொத்தச்‌ சிறுகதைகள்‌ 'பா.செயப்பிரகாசம்‌ கதைகள்‌' என்ற தலைப்பில்‌ வெளியாகி உள்ளன. இவரது 'ஒரு கிராமத்து ராத்திரிகள்‌' என்ற தொகுப்பு, தமிழ்ச்‌ சிறுகதையுலகில்‌ குறிப்பிடத்தக்க ஒன்று.

பா.செயப்பிரகாசம்‌ தமிழின்‌ முக்கிய எழுத்தாளர்‌. சமூக அவலங்களுக்கு எதிராக கூர்மையான பார்வைகளை முன்‌ வைப்பவை இவரது கதைகள்‌. கரிசல்காட்டு எழுத்தாளர்களில்‌ ஒருவராக இருந்தபோதும்‌, இவர்‌ கதைகளின்‌ உலகம்‌ அடித்தட்டு மக்களைச்‌ சார்ந்தது. குறிப்பாக சாதியத்தின்‌ கொடுமையால்‌ புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின்‌ வாழ்வை முன்வைக்கிறது.


மாலன்‌
இந்தியாவில்‌ படித்த, நகர்ப்புற, மத்தியதர வர்க்கத்தில்‌ பிறந்த இளைஞர்கள்‌ ஒவ்‌வொருவர்‌ மனதிலும்‌, அமெரிக்காவின்‌ இதழ்கள்‌, புத்தகங்கள்‌, திரைப்படங்கள்‌, இணைய பக்கங்கள்‌, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‌, அரசியல்‌ விவாதங்கள்‌, மேற்படிப்பிற்கும்‌, வேலைகளுக்குமான வாய்ப்புகள்‌ எனப்‌ பல வாய்க்கால்கள்‌ மூலம்‌ அமெரிக்காவைப்‌ பற்றிய வெவ்வேறு விதமான சித்திரங்கள்‌ எழுப்பப்பட்டிருக்கின்றன. அவை எவ்வளவு தூரம்‌ மிகைப்படுத்தப்பட்டவை, ஒரு சார்பானவை என்பதை அங்கு ஒரு நடைபோய்‌ வந்தால்‌ உணர்ந்து கொள்ள முடியும்‌.

ஆனால்‌ ஒரு எழுத்தாளராக, சமூக ஜீவியாக, ஆதீக்க மனோபாவங்களுக்கு எதிராகப்‌ போராடுவதைத்‌ தன்‌ கடமையாகக்‌ கருதும்‌ பா.செயப்பிரகாசம்‌ போன்றவர்கள்‌ அங்கு சென்று, சில மாதங்கள்‌ தங்கித்‌ திரும்பும்‌ போது கொண்டு வருகிற சித்திரங்கள்‌ பிக்சர்‌ போஸ்ட்கார்டுகளாக இருப்பதில்லை. அவை அந்தச்‌ சமூகத்தை, அந்த தேசத்தின்‌ ஆளுகையை (Governance) ஊடுருவிப்‌ பார்க்கிற எக்ஸ்ரே படங்களாக, வருடி உணர்ந்த அறிக்கைகளாக (Scan report) நமக்குக்‌ கிடைக்கின்றன.


எஸ் வி வேணுகோபாலன்
மறைந்த எழுத்தாளர், கள செயல்பாட்டாளர் தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களை நினைக்கையில் கவிஞர் நா.முத்துக்குமார் மறைந்த மறுநாள் தீக்கதிர் ஏட்டில் வந்திருந்த அஞ்சலி கட்டுரையை வாசித்துவிட்டு அவர் அழைத்து நெருக்கமாகப் பேசியது தான் உடனே நினைவுக்கு வந்தது. இசையின் பால், இசைப் பாடல்களின் பால் அவருக்கு இருந்த ஈடுபாடு என்னைக் கூடுதலாக ஈர்த்தது. தமிழின் முன்னோடி சிறுகதை ஆசிரியர்கள் பலருக்கும் இசையோடான இயைபு இருந்திருக்கிறது.ஜெயந்தன்‌ (எண்ணம்‌ புத்தகத்தில்)
தனது மண்ணையும்‌ மக்களையும்‌ நேசித்தபடி அவர்களில்‌ பாவப்பட்ட ஜீவன்களுக்காக மனம்‌ கசிந்தபடி அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிரான தார்மீகக்‌ கோபத்தோடு நதிக்கரை முதல்‌ மயானம்‌ வரை ஒவ்‌வொரு நுண்ணிய செயலையும்‌ சொல்லையும்‌ கூட கவனத்தில்‌ ஏந்தி அவைகளை வடிக்க பேனா ஏந்தும்‌ தமிழ்க்‌ கவிஞர்கள்‌
வேறு யாராவது இருக்கிறார்களா?


பேராசிரியர் க.பஞ்சாங்கம்
முதலும் முடிவுமாக ஓர் இலக்கியப் படைப்பு என்பது எதைத் தனக்கான ஆதார சக்தியாகக் கொண்டு நிலை நிற்கிறது என்று பார்த்தால், அது தனக்கேயான ஒரு தனித்த மொழியைக் கண்டடைந்து கொள்வதில்தான் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம்.
சமூகப் போராளி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் (1941-2022) தனது இலக்கியப் படைப்பிற்கான இந்தத் தனித்த மொழி எனும் மூலப்பொருளைத் தனது மண் சார்ந்த வட்டாரத்து மக்களின் வாய்மொழியில் இருந்தும் உடல் அசைப்புக்களில் இருந்தும் பண்பாட்டு வழக்காறுகளிலிருந்தும் மண் தரும் விளைச்சல்களில் இருந்தும் அழுகை, சிரிப்பு, கோபம் முதலிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் இருந்தும் தோண்டி வடிவமைத்துள்ளார்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்