இடதுசாரி எழுத்தாளர்களில் சோசலிச எதார்த்தவாதத்தைக் கைக்கொண்டு எழுதிய பிரச்சார எழுத்தாளர்களாக அக்காலத்தில் பலரைச் சொல்வர். கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ், பொன்னீலன் ஆகியோர் சட்டென்று நினைவுக்கு வருபவர்கள். இடதுசாரிப் பார்வை கொண்டிருப்பினும் கலைத்தன்மை குறையாமல் எழுதுவோர் என்றொரு பட்டியலும் உண்டு. இராசேந்திரசோழன், கந்தர்வன், ச.தமிழ்ச்செல்வன் ஆகியோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பா.செயப்பிரகாசத்தின் எழுத்துக்களை ஒருபகுதி வாழ்வனுபவம் சார்ந்தது என்றும் இன்னொரு பகுதி சோசலிச எதார்த்தவாதம் சார்ந்தது என்றும் பிரிப்பதுண்டு. இப்பிரிப்பில் பூமணியை எதில் அடக்குவது என்று பலருக்கும் குழப்பம்.
1960களின் இறுதியில் இந்தியா முழுவதும் கால்கொண்ட மார்க்சிய லெனினிய இயக்கத்தின் தாக்கம் பெற்றவர் அவர். அவ்வமைப்பு உருவாகிப் பின்னர் பல சிறுசிறு குழுக்களாகச் சிதறுண்டது. பூமணி எந்தக் குழுவிலும் இயங்கியவர் அல்ல. எதன் ஆதரவாளராகவும் இருந்தவர் அல்ல. எனினும் அக்குழுக்களில் செயல்பட்ட பலரோடு நட்பு இருந்திருக்கிறது. பா.செயப்பிரகாசம் போன்று அக்குழுக்களில் இணைந்து செயல்பாட்டாளராக மாறிய எழுத்தாளர்களோடும் தொடர்பு கொண்டிருந்தார். எப்படியோ அவ்வரசியல் நிலைப்பாடுகளில் அவருக்கு ஈடுபாடு இருந்ததையே சிறுகதைகளின் உரிப்பொருளும் முடிவுகளும் காட்டுகின்றன. 1980களில் அவ்வமைப்புகளின் செயல்பாட்டில் அவருக்கு விமர்சனமும் விலகலும் நேர்ந்துவிட்டன. அதையும் அவர் சிறுகதைகள் காட்டுகின்றன.
பா.செயப்பிரகாசத்தின் பொறுப்பில் வெளிவந்த ’மனஓசை’ இதழுக்குப் பூமணி ஒருசிறுகதை கொடுத்தார். அது 1989 அல்லது 1990ஆக இருக்கலாம். கதையை எழுதி முடித்த பிறகு பா.செயப்பிரகாசத்திற்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து ’மனஓசைக்குக் கொடுக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். மனஓசைக்குக் கதை கொடுத்த போது அதன் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். அவர் பணியாற்றிக் கொண்டிருந்த கூட்டுறவுத் துறை அலுவலகத்திற்குச் சென்று (அப்போது எழும்பூர் பகுதியில் அது இருந்தது) நான்தான் கதையை வாங்கி வந்தேன். வழக்கமான அரசு அலுவலக மேஜையில் சில கோப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க உட்கார்ந்திருந்தார். அவரை நேரில் பார்த்ததில்லை. அப்போது நூல்களின் அட்டைகளில் புகைப்படம் வெளியாவதை எழுத்தாளர்கள் விரும்பியதில்லை. ஆகவே அவர் படம் எதையும் நான் பார்த்ததில்லை. மாணிக்கவாசகம் என்னும் அவர் இயற்பெயரைச் சொல்லி விசாரித்துத்தான் அம்மேஜையை அடைந்தேன்.
பா.செ அனுப்பிய தோழர் என்றதும் அலுவலகக் கட்டிடத்தில் இயங்கிய தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்றார். என்னைப் பற்றிய விவரங்களை விசாரித்தார். கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவரை நேரில் சந்தித்துப் பேசும் பரவசத்தில் இருந்த என்னை அமைதிப்படுத்தி என் வாசிப்பையும் எழுத்தையும் பற்றிக் கேட்டார். சந்தா செலுத்தாமலே தொடர்ந்து சிலருக்கு அனுப்பும் பட்டியலில் பூமணியின் பெயரும் இருந்தது. அதனால் இதழை அவர் வாசித்துக் கொண்டிருந்தார். என் கதைகள் அப்போது மனஓசையில் தொடர்ந்து வெளியாயின. அவர் படித்திருக்கவில்லை. ’பெயரைப் பார்த்திருக்கிறேன்’ என்றார். பிறகு மீண்டும் அவர் மேஜைக்கு அழைத்துச் சென்று அலுவலக உறைக்குள் போட்டு வைத்திருந்த சிறுகதைப் படியை எடுத்துக் கொடுத்தார். ’மனஓசைக்குக் கொடுக்கறேன். வெளியிடுவீங்களான்னு தெரீல. வெளியிடலீன்னா ஒன்னும் பிரச்சின இல்ல. ஜே.பி.கிட்டச் (செயப்பிரகாசம்) சொல்லியிருக்கறன்’ என்று சிரித்தார். ’பாதை’ என்னும் தலைப்பிலான பீக்கதை அது. கிராமத்துச் சிறுவர்கள் சிலர் மலம் கழிக்க மந்தைக்குச் செல்லும் சிறுபயணம் பற்றியது. அதன் உரையாடல்களைக் கட்டுடைத்துப் பார்த்தால் மார்க்சிய இயக்கங்களின் மீதான கடும் விமர்சனம் என்பது தெரியும்....
...’மனஓசை’ தீவிர இடதுசாரிப் பத்திரிகை. அதன் பொறுப்பாளர்களுக்கு இக்கதை பேசும் விஷயம் புரியாதா என்ன? ஆசிரியர் குழுவில் காரசாரமான விவாதம் நடந்தது. பூமணி ’புதுப்பாதை’ ஒன்றைப் பற்றிச் சொல்கிறார். எதைப் புதுப்பாதை என்கிறார்? அது எப்படி இருக்கும்? எல்லாப் பாதைகளும் ஓடைக்குத்தான் செல்கின்றன என்றால் எல்லோரும் புரட்சியை நோக்கித்தான் போகிறார்கள் என்று அர்த்தம் வருகிறது. எப்படி எல்லாப் பாதைகளும் புரட்சியை நோக்கிச் செல்லும்? அப்படியானால் இத்தனை கருத்து வேறுபாடுகள் ஏன்? இப்படியெல்லாம் விவாதம் நடைபெற்றது. புரட்சியை, புரட்சிகர இயக்கங்களை விமர்சித்திருப்பது ஒரு பிரச்சினை என்றால் அதற்காகப் பீக்காடு நோக்கிச் செல்லும் பாதைகளை உருவகித்திருப்பது யாருக்கும் உவப்பாக இல்லை. பூமணி எதிர்பார்த்ததைப் போலவே கதையை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம். அத்தகவலைப் பா.செயப்பிரகாசமே பூமணியிடம் சொல்லிவிடுவது என்று தீர்மானித்தோம். அவர் எப்படிச் சொன்னாரோ தெரியவில்லை. பின்னர் அக்கதை அப்போது வந்து கொண்டிருந்த ’பாலம்’ இதழில் வெளியானதாக நினைவு.
திருவனந்த புரம் தமிழ்ச்சங்க மலரில் வந்த `பெட்டை’ கதைதான் நான் படித்த பூமணியின் முதல் கதை. தாமரையின் பொற்காலம் அது.தமிழ் நவீன இலக்கியத்தின் புதுக்காலமும் அது. தி.க.சி பூமணி, பா.செயப்பிரகாசம், வண்ணநிலவன் என்று தேர்ந்து தேர்ந்து கதைகளை வாங்கி தாமரை இதழில் போட்டுக் கொண்டிருந்தார். சிறுகதைகளில் கொடி நாட்டிய பிறகு வந்தது `பிறகு’ நாவல். அற்புதமான நாவல் கரிசல் காட்டின் அசலான மனிதர்களை அசலான மொழியில் சொன்ன நாவல். அதன் முதல் பதிப்பின் அட்டைப் படத்தை வண்ணதாசன் வரைந்திருப்பார். அதற்காகவே அவருக்கு ஒரு பிரதி அனுப்பினதாக ஞாபகம். அதைத்தான் நாங்களெல்லாம் படித்தோம். வண்ணதாசன் வண்ணநிலவனுடன் இடை செவலுக்கு கி.ரா.வைப் பார்க்கப் போகிற போதெல்லாம் கோவில்பட்டிக்குப் போய் பூமணியைப் பார்த்து விடுவோம். அவரது தொண்டை கட்டின மாதிரியான குரலில் வாங்க என்று அன்புடன் பேசிக் கொண்டிருப்பார். அப்புறம் அவர் சென்னைக்குப் போய் விட்டார். அங்கு தீவிரமான மார்க்சீய ஈடுபாட்டுடன் பணி புரிந்துகொண்டிருந்தார். செயப்பிரகாசத்துடன் இணைந்து ம.க.இ.க வில் தீவிரமாக இருந்த நினைவு. அப்போதுதான் வெக்கை நாவல் எழுதினார். என்னைப் பொறுத்து அது அவரது தீவிர மார்க்சிய ஈடுபாட்டைச் சொல்கிற குறியீட்டு நாவல் என்பேன்....

கருத்துகள் / Comments