நா.காமராசன் ஓய்ந்த நதியலை

1962 - 63ல், மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் இளங்கலை முதலாமாண்டு. கவிஞர் நா.காமராசன், இளங்கலை இரண்டாமாண்டு. கவிஞர் அபி, இளங்கலை மூன்றாமாண்டு. கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், முதுகலைத் தமிழ் இறுதியாண்டு. கவிஞர் இன்குலாப், எனக்குப் பின்னால் அடுத்த ஆண்டு இளங்கலைத் தமிழில் சேர்கிறார். அவருடைய வகுப்புத் தோழர் – பின்னாளில் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், சட்டமன்றப் பேரவைத் தலைவராக இருந்து மறைந்த கா.காளிமுத்து.

மதுரை தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25-ம் நாள், இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் முன் ஆலோசிப்பு நடந்தது. நண்பர்கள் காமராசன், காளிமுத்து ஆகியோர், ‘இந்தியே ஆட்சி மொழி’ என்று அறிவிக்கும் சட்டப் பிரிவு பிரதியை எரிப்பதென முடிவு செய்தனர். ‘சட்டத்தை’ எரிக்கும் நண்பர்களை அக்காரியம் நிறைவேற்றும் முன் கைது செய்யாமலிருக்க, ஒரு தலைமறைவு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தினோம். எங்களில் சிலரைத் தவிர அந்த இடம் வேறு யாருக்கும் தெரியாது. சனவரி 25-ம் நாள் அன்று மாணவர்கள் சுற்றிலும் பாதுகாப்பாக வர, காமராசனும் காளிமுத்துவும் திடல் மேடையில் ஏறி, சட்டப் பிரிவுப் பிரதிக்குத் தீயிட்டார்கள். அதன்பின் தங்களின் எதிர்காலம் இருண்டு போகும்; கல்வியைத் தொடர இயலாது என்பதை இருவரும் அறிவார்கள். தமிழக மாணவச் சமுதாயத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என்ற அர்ப்பணிப்பு உணர்வு அவர்தம் வாழ்வைப் பலியிடுதலை மூலப்பொருளாக்கிற்று.

படிப்புக் காலத்தில் நா.காமராசன், கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். ஆலைத் தொழிலாளியான என் சிற்றப்பா வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு வெளியில் தனி அறை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். படிக்கிற நாள்களிலும், முதுகலை முடித்த பின் அரசியல் கூட்டங்களுக்குச் சொற்பொழிவுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிற காலத்திலும் நா.கா என்னுடைய அறையில் அவ்வப்போது வாசம் செய்தார். நா.கா பத்து வயதிலிருந்து ஆஸ்த்மா சீக்காளி. தனது சட்டையை நீக்கி ‘கூட்டு நெஞ்சை’க் காட்டுவார். அவர் என்னுடன் தங்கிய இரவுகளில் தூங்கியதை நான் கண்டதில்லை. ‘களக், களக்’ என்று இரவு முழுதும் இருமிக்கொண்டிருப்பார். சளியைக் கையில் எடுத்து அறைச் சுவர்களில் இழுகி வைத்ததால், கொத்து வைத்த அம்மிக் கல் போல் காய்ந்த சளிக்கற்றைகள் ஒட்டிக்கிடந்தன. இருமி இருமிக் களைப்பாகி எத்தனை மணிக்குத் தூக்கம் அவர் கண்களைத் தழுவும் எனச் சொல்ல இயலாது.


‘நான் மரணத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன்’ என்ற பாடலில் ஆஸ்த்மா தொல்லையில் அவதிப்பட்ட அவர்,
இந்த மண்ணில் இனி நான் நேசிப்பதற்கு
‘ஆஸ்த்மா’ மாத்திரையைத் தவிர
வேறு என்ன இருக்கிறது
என எழுதினார். இந்தக் கவிதை முதுமையின் விளிம்பில் மரணம் வாசற்படியில் காத்திருக்கும் நாளில் எழுதப்பட்டதில்லை. இளமையின் வாசலில் இருந்து எழுதியது, நம்ப முடியாததுதான்.

படிக்கிற காலத்தில் நா.கா தென்காற்றுப் போல, தீக்கொழுந்துப் போல இருவகையாகவும் பேசத் தெரிந்த பேச்சாளர். அவருடைய சொற்பொழிவு, கவிதை நடைச் சொற்பொழிவு. நகைச்சுவை வழியப் பேசுவார். கல்லூரிகளுக்கு இடையேயான பேச்சுப் போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் எனக் காமராசன் - காளிமுத்து என்ற இணை, செல்லும் இடமெல்லாம் பேச்சில் வென்று, மாநில அளவில் விருதுகள் பெற்று வந்ததால், எல்லாத் தமிழும் இணையும் முனையமாக தியாகராசர் கல்லூரிப் பேரெடுத்து நின்றது.

சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கிய வெளிப்பாடுகள் வரை, இலக்கியம் தவிர வேறெதுவும் பேச அறியாப் பிள்ளைகளாக இருந்தோம். காமராசன், காளிமுத்து, இன்குலாப், நான் என நால்வரும் அமர்ந்து உரையாடிய கல்லூரிப் புல்வெளிகள் கவிதைகளால் நனைந்திருக்கின்றன. கல்லூரி நூலகத்துக்கு முன்னிருந்தது புல்வெளி; நூலகம் மூடிய பின் நூலகத்தின் புத்தக அடுக்குகள் உள்ளிருந்து வெளியேறும் அறிவின் தீராவாசம் எங்களுடன் வந்து அமர்ந்துகொண்டது. மாலைப் பொழுதுகளும், நிலா இரவுகளும் கவித்துவப் பரிமாறலால், இன்னும் ஈரப்பதமாகின.

நா.கா-வின் ‘நீங்கள் என்னை சோசலிஸ்ட் ஆக்கினீர்கள்’ என்றொரு கவிதை உண்டு. மலையாளத்தில் தோப்பில் பாசி எழுதிய ‘நீங்கள் என்னை கம்யூனிஸ்ட்டாக ஆக்கினீர்கள்’ என்ற நாடகத் தலைப்பைத் தான் முதலில் இந்தக் கவிதைக்கு இட்டிருந்தார். அந்தத் தலைப்பில் தான் சில ஆண்டுகளாய் வெளியேயும் வாசிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் என்பதை விட ‘சோசலிஸ்ட்’ என்ற சொல் பொதுவானதாய் இருக்கும் எனக் கருதினார் போல, கவிதைத் தலைப்பைப் பின் மாற்றினார். அவருக்குப் பெயர் பெற்றுத் தந்த ‘கறுப்பு மலர்கள்’ தொகுப்பில் அந்தக் கவிதையில் சில வரிகள்:
ஓ எந்தன் அடிநாளின் நண்பர்களே!
 நீங்களெல்லாம் திசைமாறிச் சென்றாலும்
 நீங்களென்னை சோசலிஸ்ட்  ஆக்கினீர்கள்...
உங்களது வாய்ப்பந்தல் பூஜைகளின்
உறவுகளுக்கு அப்பால் நான் உலவுகிறேன்
என உரத்துப் பேசியவர், பிந்தைய ஆண்டுகளில் திசை மாறிச் சென்றதால், அவருக்கே உரியவையாக அந்த வரிகள் திரும்பியிருந்தன. நா.கா-வை நூற்றுக்கு நூறு ஒரு கவிஞராக முன்னிறுத்திக் காண்பது பொருத்தமானதல்ல; நா.கா அரசியல்வாதியாகவும் இருந்தார். 1950, 60–களின் இளைய தலைமுறை என்னவாக இருந்ததோ, அதேபோல தி.மு.க பின்பற்றாளராக வளர்ந்தார்: 1967-ல் அதிகாரத்துக்கு வந்த தி.மு.க-வில் அவருடைய எதிர்பார்ப்பு கானல் நீராகியது. பிம்பங்களால் இயக்கப்பட்ட அ.தி.மு.க-விலோ, முன்பைவிட கூடுதலாய் ஏமாற்றம் சுமந்தார்.

சந்தக் கவிதைகள், செல்லக் குழந்தை போல் அவர் கைச்சொடுக்கில் தொத்திக்கொண்டு வந்தது. அவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘சூரியகாந்தி’ மரபில் அமைந்த சந்தப் பாடல்களின் தொகுப்பு. சந்தச் சொல்லடுக்கு மிக எளிதாக அவரைத் திரைப்பாடல்களில் சிம்மாசனமிட்டு அமர வைத்தது.
சிட்டுக்கு, செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
 ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை; அன்னையும் இல்லை,
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா சிறுகதையா
ஒரு திரைப்பாடல் இத்தனை சேதிகளைச் சொல்ல முடியும்; இத்தனை உணர்வுகளைக் கோத்துவைக்கச் சாத்தியப்படும் சாதனம் என்பது இவரால் நிரூபணமானது. திரைத்துறையில் அவரது நுழைவு பற்றி அவருக்குச் சில மனக்கிலேசங்களிருந்தன.

“பூவெடுத்து மாலை கட்டிக்கொண்டிருந்தேன். இடையில் புல்லறுக்கப் போய்விட்டேன். பூபாள ராகம் புயலோடு போனது போல், ஆகாய கங்கை பாதாளப் படுகுழியில் விழுந்தது போல், என் சுயத்தைத் தொலைத்துவிட்டேன்” என்று மனம் வெம்பியிருக்கிறார். சுயத்தைத் தொலைத்தது இதனால் மட்டும் தானா என்ற கேள்வி, அவரை அறிந்த நம் மனதின் இடுக்கிலிருந்து நாக்கு நீட்டி இளிப்பதை ஒதுக்கிவிட இயலாது.

‘பொன்கனா’, ‘ரோஜாத் தோட்டம்’, ‘பொன்வசந்தம்’, ‘சிவப்பு வசந்தம்’, ‘நான்’, ‘எனது’ – போன்ற வார்த்தைகளை எடுத்துவிட்டால் அல்லது எவராவது வாங்கி வைத்துக்கொண்டால், இவரது கவிதைகள் சோபிக்காது என்ற ஒரு விமர்சனமும் உண்டு.


“எழுத்துச் சுமைக்காரர் எங்க ஊரு தபால்காரர்
எழுத்து மங்கும் சாயங்காலம் எமனோடு போனதென்ன?”
ஒரு சேரிக் கிராமத்தின் தபால்காரரின் மரணத்தைப் பற்றிப் பேசுகிற கவிதை வரிகள் இதயக்குலையை அறுத்து எறிகின்றன. பொதுக் கவிதா நோக்கிலிருந்து விடுபட்டுப் போகும் பல விஷயங்களில் இது போன்றது ஒன்று. வேறு எவரும் திரும்பிப் பார்க்காத ஒரு கரு மட்டுமல்ல, நாட்டுப்புற மெட்டில் எழுதிப் பார்த்த புதுமையையும் இதில் கைக்கொண்டார். ‘பளியர்’ இனப் பழங்குடி மக்கள், ‘அலிகள்’ (திருநங்கையர்), ‘லம்பாடிகள்’, ‘கிறுக்கச்சியின் விறகுகள்’ என இன்று விளிம்புநிலை மாந்தர்களாய்  அடையாளப்படுத்தப் படுபவர்களைப் பதிவுசெய்துள்ளார்.

புகழ்மாலை சூட்டல் அல்லது இகழ்ந்துரைத்தல் என்ற எதிரெதிர் முரண்களில் நிலைகொண்ட இயக்கக் கலாசாரம் அவரின் எழுத்துகளிலும் காணப்படுகிறது. “புதுமை இலக்கியப் போக்குகளை நிர்மாணித்த பேனா மன்னர்களாகச் சிலரை என் மனம் கௌரவப்படுத்துகிறது. ஓடையிலே நீந்தும்போது செத்துப்போன கலீல் ஜிப்ரானின் ‘மராத்தா, எனது மானசீகத்தில் தாகங்களுற்ற சௌந்தர்ய தேவதையாய் பவனி வருகிறாள்’ என லெபனான் தேசத்துக் கவியான ஜிப்ரானைக் கொண்டாடினார் கவிஞர். ஆனால், பிந்தைய காலத்தில் தாகூரும், கலீல் ஜிப்ரானும் வெறும் கனவுப் பறவைகளாகத் தெரிந்தார்கள் அவருக்கு. ‘வேலைக்காரிகூட தங்கத் துடைப்பத்தால் வீடு கூட்ட வேண்டும் என்று பாடுவார்கள்’ என இளப்பமாகப் பேசினார்.

மராட்டிய எழுத்தாளர் காண்டேகரின் தாக்கம், அவருடைய படைப்புகளின் உருவகங்கள், லட்சிய வேகம் போன்றவை கல்லூரிக் காலத்திலேயே நா.கா-வின் சிந்திப்பு, கவித்துவ இடங்களைக் கைப்பற்றிக்கொண்டன. லா.ச.ரா-வின் தெறிப்பான வாசகங்களும் அது போல் எழுதிப்பார்க்கும் ஆசையைத் தூண்டின.

திரைத்துறையில் வயலார் ரவிவர்மா இவருக்குப் பிரியமானவர். ‘‘நானும் ஒரு ரவி வர்மா” என்று ஓரிடத்தில் அவரைப்பற்றி விரிவாகப் பதிவுசெய்துள்ளார். அப்போது ரவிவர்மா நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக ஆக்கப்பட்டிருந்தார். கலைஞர்கள், மேதைகள், எழுத்துலக ஜாம்பவான்கள். வல்லுநர்கள் போன்றோரை, ‘தொல்லை தராமல் சமர்த்தாய் இருந்தால் சரி’ என்று இந்தப் பின்வாசல் வழியாக அனுப்பிவிடுவார்கள். நாடாளுமன்ற மேலவை, சட்டமன்ற மேலவைகளை ‘ஒதுக்குப்புறம்’ என நாங்கள் பகடி செய்து பேசியதுண்டு.

1967–ல் அண்ணா ஆட்சி அமைந்திட்ட சில மாதங்கள்: “நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக ஆசை. மாணவர்கள் எல்லோரும் இணைந்துபோய்க் கேட்டுப் பார்ப்போமா?” என்றார் நா.கா.

“எதற்கு என்று அண்ணா கேட்பாரே?” என்று நான் சொன்னேன்.

“உலகெலாம் நம் தமிழைக் கொண்டு செல்ல என்று சொல்வோம்” என்றார் நா.கா.

பேச்சுவாக்கில் ஒருநாள் தனது கனவைப் பகிர்ந்துகொண்ட நா.காமராசன் இன்றில்லை; அவரது கனவும் இன்றில்லை. நாடாளுமன்ற உறுப்பினராவதன் வழி உலகமெலாம் தமிழைப் பரப்பி தமிழ்க் கவிதைக்கு ஒரு மரியாதை சேர்க்கும் மாபெரும் காரியம் நடைபெற்றிருந்திருக்க வேண்டும்!

திராவிட இயக்கச் சிந்தனைகளிலிருந்து அவர் முளைவிட்டார்; பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, மூடப்பழக்கவழக்க எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு போன்ற கொள்கைகள் அவர் எழுத்தினுள் அழுத்தமாக அதிகமாகப் பதிவாகியுள்ளன.
ஒருமுறைகூட என் தமிழ்மழை நீரில்
உன்னை நனைத்திலன் தந்தையே
இருவிழி சிந்திய கவிமழை போதுமா
இன்னும் எழுதவோ தந்தையே
ஆயிரம் காலங்கள் மாறி வந்தாலும்
உன் அடிச்சுவடு ஒழியாது தந்தையே
என்று பெரியாருக்குப் பாமாலை சூட்டுகிற நா.கா அதற்கு எதிர்த் திசையில் நடந்த வரலாறும் உண்டு. இடைப்பட்ட காலத்தில் ‘இந்து முன்னணி’ என்கிற மதவாத அமைப்பில் இணைந்தார். ‘இந்து முன்னணி’ மேடையில் பக்த சிரோன்மணியாகக் காட்சி தந்த கவிஞர், “இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். அப்போது மட்டுமே நமது உரிமைகளைப் பெற முடியும்” என்று முழங்கினார். இந்து முன்னணி மேடையைப் பகிர்ந்துவிட்டு, இன்னொரு கையால் தமிழக அரசின் ‘பாரதிதாசன் விருதை’ப் பெற்றுக் கொண்டது நகைப்புக்குரிய முரண். இவ்வாறான செயல்களுக்குப் பரிகாரமாகத்தான் ‘பெரியார் காவியம்’ வடித்திருக்கக்கூடும்.

அவர் நடத்திய சிற்றிதழின் பெயர் ‘சோதனை’. தமிழ்க் கவிதையுலகிற்கான அனைத்துச் சாதனைகளையும், தான் செய்து முடித்துவிட்டதாக அவரைப் பேசச் செய்தது - அவர் செய்து பார்த்த கவிதைத் துறைச் சோதனைகளே! இல்லையாயின் அவரைப்போல், “நான் மரணத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன்” என்ற கவிதையை இளமையிலேயே எழுத யாரால் இயலும்?

அவரின் போராளி முகம், கவி முகம் இரண்டும் ஓர் இருண்ட காலத்தின் கருந்திட்டுக்குள் இருந்து தலைகாட்ட முயன்றன. இயக்கங்கள் நம்பிக்கை முனைகளாக இல்லை; அரசியல் லட்சிய வேகம் கொண்ட ஓர் இளைஞனாக தன் காலத்தின் நீர்த்துப்போன இயக்கங்களின் அரசியல், கலாசாரப் போக்குகளால் வெம்பினார். ஆனால், தான் கால் பதித்து, தடம் பதித்த இலக்கியத் தளத்திலிருந்து அவர் விலகிப்போக எது காரணம்?

ஒரு படைப்பாளன், மக்களுடனான தொடர்புகளிலிருந்து விலக்கம் கொள்கிறபோது, அவன் கைகளில் ஏந்திய அனுபவங்களின் அமுதசுரபி வற்றிப் போகிறது. அவனுக்கான விஷயதான ஊற்று அவர்கள் தாம். உறவினர், நண்பர், தொழில்வட்டம், அரசியல், சமூக, கலாசார வட்டம் எனத் தொட்டுத் தொட்டு மக்கள்திரள் நீண்டு செல்கிறது. பழகும், உறவாடும், பேசும், வாழும் வட்டம் தானே விஷயதானத்தின் ஊற்று?

அவர் எழுந்த வேகம், பாய்ச்சல் – ஒரு காலகட்டத்தின் மொழியாய், வெளிப்பாட்டு வடிவமாய்க் கொட்டிய கவிதைகளை, ஒவ்வொரு கட்டமாய் நகர்த்தி மேலே மேலே சென்று கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர் சாதனைகளைச் செய்துவிட்டதாகக் களைப்புடன் மகிழ்ந்துகொண்டிருந்தார். அவ்வாறு ஆற்றா வினையால், ஒரு காலத்துக்குரிய கவியாகத் தன்னை நிறுத்திக்கொண்டார். தன்னில் உள்சுரப்பு தீர்ந்துபோன கட்டம் அவருக்கும் வந்து சேர்ந்தது!

“நான் மரணத்தைப் பற்றிச் சிந்திக்கிறேன்” எனும் கவிதை, அவரின் அரசியல், இலக்கிய வினையாற்றல்களில் அடைந்த வெதும்பலின் ஒரு சுயசரிதையின் மீள்கூறலாக, மீள் வாசிப்புக்குரியதாகவே இன்றும் இருக்கிறது.
இந்தப் படகுத் துறைக்கு
நான் துடுப்புக்களோடுதான் வந்தேன்
ஆனால்
எனக்குக் காகித ஓடங்களே கிடைத்தன
இந்த இசை மண்டபத்திற்கு -
நான் பாடல்களோடுதான் வந்தேன்
ஆனால்
இங்கே செவிடர்கள் மட்டுமே இருந்தார்கள்
இந்தப் பாதைக்கு நான்
ஒரு நல்ல வழிப்போக்கனாகவே வந்தேன்
ஆனால்
இது ஒற்றையடிப் பாதை.
எல்லாம் முடிந்துவிட்டது
இந்த மண்ணில்
இனி நான் நேசிப்பதற்கு
‘ஆஸ்த்மா’ மாத்திரையைத் தவிர
வேறு என்ன இருக்கிறது.
மிகச் சின்ன வயசிலேயே
ஒரு ஞானியைப் போல எழுதியவன்
மிகச் சின்ன வயதிலேயே
ஒரு கிழவனைப் போல மரணமாகிவிட்டான்
ஏழைகளின் கவியை
அவர்களுடைய சுடுகாட்டினிடமே
பத்திரமாக ஒப்படைத்துவிடுங்கள்

நன்றி: விகடன் தடம் - 01 Jul, 2017
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்