சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்


“ஆதலினால் காதல் செய்வீா் உலகத்தீரே” என்றான் பாரதி. சொன்னவன் மஹாகவியா, மக்கள் கவிஞனா - யாராகவும் இருக்கட்டும், அவனையும் தீர்த்துக் கட்டுவோமென கையில் வீச்சரிவாள்களுடன், கத்தி கப்படாக்களுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள் சாதி விசுவாசிகள். காதலால்  தனிமனிதனுக்கு - கூட்டுச் சமூதாயத்துக்கு கிட்டும் பலாபலன்களைக் வரிசையிட்டிருப்பான் கவிதையில் பாரதி. காதலினால் மனத்தில் உறுதி உண்டாகும் என்பது  கவிஞன் வார்த்தைகளுக்குள் இறங்கிக் கிடக்கிறது. காதலினால் துளி உறுதியும் உண்டாக   இடம்  தரக்கூடாது என்று கங்கணம் கட்டி, காதலுக்குப் பாடைகட்டிக் கொல்லும் வழி போகின்றனர் ஊரினிலே காதலென்றால் உறுமும் ஒருகூட்டம்.

பூ மலர்ந்தால் பிஞ்சு கட்டும்: பிஞ்சு கட்டினால் காய் வரும்: காய் பழுத்தால் கனியாகும். காதல் பூ மலர்ந்து கனியாகிறபோது விதைகள் உண்டாகின்றன. விதைகள் குடும்ப விருட்சமாய் விரிகின்றன. இந்தப் பெருமரத்தின் நிழல் சகல தடைகளையும் உடைத் தெறிந்து வரும் மாண்பாளா் அனைவரையும் அனைத்துக் கொள்ளும்; காதல் செய்வதால் உண்டாகும் இந்த ஆரோக்கியமான பெருமரச் சமுதாயத்தின் நிழலில் தாமும் உரம்பெற்றுப் புதியன படைக்கப் புறப்படுவார்கள்.

பூ இருந்தால் தானே பெருமரம் உருவாகும், பெருமரம் இருந்தால்தானே உறுதிபெறுவார்கள். பூவிலேயே உதிர்த்து விடுதல் நல்லது. பூ உதிர்க்கச் செய்யும் தொடக்கப் புள்ளியில் குறி வைக்கின்றன, உயிர் உலுக்கிச்  சரிக்கின்றன சாதி ஆணவக் கொலைகள்.

கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே தோன்றியவன் தமிழன் - சரிதான்; யாதும் ஊரே, யாவரும் கேளிர் - தமிழன் மந்திரம் ; சாதி இரண்டோழிய வேறில்லை என்றவள் தமிழச்சி - எல்லாம் சரி! படோடோபமாய் மேடையில் எதை எதை  உதிர்க்கிறோமோ, அந்தப் பலூன்களை உடைத்து “இங்கே ஒரே ஒரு தமிழன் மட்டுமே உண்டு. சாதித் தமிழன்” என்று   சாதியின் பெயரில் ஆணவக் கொலை  செய்கிறவனை எதில் சோ்ப்பீா்கள்?

தருமபுரி இளவரசன், ஓம்லூர் கோகுல்ராஜ், உடுமலைப் பேட்டை சங்கர் என்று கடந்த இரண்டாண்டுகளில் தமிழ்நாட்டில் 42 ஆணவக் கொலைகள்; உத்தரப் பிரதேசம், பீகாருக்கு அடுத்த நிலையில் தமிழகத்தில்தான் அதிகக் கொலைகள். தேசியக் குற்ற ஆவணப் பதிவகம் தந்த விவரப் பட்டியல் அடிப்படையில், உச்சநீதிமன்றம் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்த கவுரவக் கொலைகள் பற்றி அறிக்கை கேட்டது. தமிழ்நாடு தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் அறிக்கை அளித்தன. “தமிழ்நாட்டில் கவுரவக் கொலைகளே நடக்கவில்லை; பின்னர் எப்படி அறிக்கை தருவது?” என்று சட்டமன்றத்திலேயே முழுப்பூசணிக்காய் முழுங்கினார் அ.தி. மு.க அவைமுன்னவர், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

பட்டப்பகல் வெள்ளை வெயிலின் கீழே - மக்கள் நடமாட்டமுள்ள பேருந்து நிலையத்தின் எதிரில் - ஐவர் கும்பலால் சங்கா் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞா் கொலை செய்யப்படுகிறார். அவர் ஒரு தலித்; கவுசல்யா இந்து உயா் சாதிப் பெண். இருவரும் பொள்ளாச்சி பொறியியல் கல்லூரியில் கற்கையில் ஒருவர் மீது ஒருவர் விருப்பம் கொள்கிறார்கள். காதல் என்பது மனித மனத்தில் பிறக்கும் ஒரு இயல்பூக்க உணா்வு. பெண்ணும் ஆணும் மனித உயிரி; சாதி, மதம், மொழி, இனம் என்று பாராமல், வயது வந்ததும் அந்த உயிரிக்குள் இயல்பூக்க உணா்வு எழுகிறது. எழாமல் கருகவைக்க வேண்டும்; காதல் செய்வதும் திருமணம் செய்வதும் சொந்த சாதி தாண்டி, வேறு சாதிக்குள் நடந்ததால் இருவரையும் கொலை செய்வோமென பின் தொடர்கிறார்கள். ஏற்கனவே கவுசல்யாவின் பெற்றோரும் உறவினர்களும் சங்கரின் வீட்டுக்கே வந்து மூன்றுமுறை கொலைமிரட்டல் விட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஆண்டு தவறாமல் 900 கொலைகள் நடக்கின்றன. இதில் 65 விழுக்காடு சாதி ஆணவக் கொலைகள். எவிடென்ஸ் கதிரின் கூற்றுப்படி, இதில் 95 சதவீதம் பேர் பெண்களாக இருக்கிறார்கள். ஐந்து சதவீதத்தினர் தலித் இளைஞர்களாக இருக்கிறார்கள். தலித்துகளை ஒடுக்குவது மட்டுமல்ல, பெண்ணை அச்சுறுத்தி அடக்கி வைக்கும் அபாய மணியை சாதி அமைப்பினர் ஒலித்துக் காட்டுகிறார்கள்.

தெற்குச் சீமையில் குறிப்பிட்ட வட்டாரத்தில் ராணிமங்கம்மா காலத்துச் சாலை ஒன்றிருந்தது; அந்த மனிதாய அரசி நட்டுவைத்த புளியமரங்கள் அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் வரை வரிசையாக நின்றன; மரங்கள் காய்த்து, கனிந்து, புளி கொடுத்து ஓய்ந்து விட்டாலும், சாலை நிழல் தந்துகொண்டிருந்தன; ஒரு இரவில் எவரும் அறியாமல் மரத்தின் அடிகிளறி அமிலத்தை ஊற்றினார்கள் பாதகர்கள். பட்டுப்போன மரங்கள் மறுமாதம் ஏலத்துக்கு வந்தன.

சாதி வெறி உள்ளில் கொதிக்க, காதல் வேரில் அமிலம் ஊற்றி பட்டுப்போகச் செய்ய முயலுவார்கள். காதலைத் துண்டிக்கும் முயற்சி தோற்றுப் போய்விடும் வேளையில், உயிரோடு கருக்குவார்கள். தன்னை விட்டுப் பெண் மீறிப் போய்விடக்கூடாது என்கிற ஆணாதிக்கத்தின் மொழி இது. சாதிச் சங்கத்தை நடத்துகிறவா்களெல்லாம் யார்? ஆண்கள் தாம்.

“புறச் சமூகத்திலிருந்து வரும் ஆதிக்கம், தனக்குள்ளேயிருக்கும் ஆதிக்கம், தன்னில் நிலவும் அறியாமை – ஆகிய மூன்று மலைகளை ஒரு ஆண் முதுகில் சுமக்கிறான்; ஒரு பெண் நான்காவதாய் ஒரு மலையைச் சுமக்கிறாள். அது ஆண் ஆதிக்கம்” என்கிற ஒரு வாசகம் உண்டு.

மார்ச் 8 மகளிர் நாள். கொண்டாட்டங்களால் சடங்கு செவ்வனே நிறைவேறிற்று; தலைவிகள் தமக்குத் தாமே மருடம் சூட்டிக் கொள்ளல், புகழ் மாலைகள் என முந்தைய ஆண்டுகளினும் கூடுதலாய் விழா இரைச்சல் அமோகமாய் விளைந்தது. அதுபாட்டுக்கு அது நடக்கட்டும்; இதுபாட்டுக்கு இது நடக்கும் என்று மார்ச் 13-ஆம் நாள் உடுமலைப் பேட்டை பேருந்து நிலையத்தில் “கொலையாளா்கள்” வெறிகொண்டு ஆடினார்கள். தலித் இளைஞன் சங்கர் இறந்து போக, வெட்டுப்பட்ட உயா்சாதி இந்துப் பெண் கவுசல்யா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

தம் சாதிப் பெண்டிர் கலாசாலைகளுக்குப் போவதினால் அல்லவா காதல் விருப்பம் கொள்கிறார்கள். பணியிடங்கள், அலுவலகம் என்னும் உலகத் தொடா்புகளால் தானே இந்த விருப்பம் உருவாகிறது. கல்வியும் கூடாது, வேலைக்கும் வெளிப்படக் கூடாது என்று “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதா்கள்” உருவாகியிருக்கிறார்கள். கலப்பு மணம் கூடவே கூடாது என்று எண்ணுகிற சிந்திப்பு சாதிய அமைப்புக்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டுக்குள்ளும், ஒவ்வொரு ஆணுக்குள்ளும் வாழுகிறது என்பதை உடுமலைப்பேட்டை கொலையில் சரணடைந்துள்ள பெண்ணின் தந்தை காட்டியிருக்கிறார்.

அச்சம் தவிர் - பாரதி மனித குலத்துக்கு வழங்கிய ஆத்திசூடி;

“அச்சம் கொள்” - குறிப்பாய் தம்மகளிர் கூட்டத்துக்கு, தலித்குலத்துக்கு சாதி அமைப்புகள் தரும் புதிய “ஆத்திசூடி”.

”காதல் கொள் - சொந்த சாதிக்குள்;
கட்டுப்படு - உன்சாதிக்கு;
காதல், கலப்புமணம் என்ற கற்பனைகளுக்குள் நீந்தாதே.
அழிக்கப்படுவாய்”
- என்று கொலை மூலம், கவுசல்யாவை மட்டுமல்ல, சொந்த சாதிப் பெண்கள் அனவரையும் அச்சுறுத்தி வைக்கிறார்கள். கொல்லப்படுவது சொந்த ரத்தமாக இருந்தாலும் கவலையில்லை.

சாதிஆணவக் கொலைகள் வேறுஎந்த சாதியினரையும் நோக்கி நடத்தப் படுவதில்லை; தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கி மட்டுமே நடத்தப்படுவது ஏன்?

இருக்கிற நிலைமைகளை அனுமதிக்க மறுப்பவர்கள் கீழே. நிலைமைகளைத் துளியும் மாற்ற விரும்பாதவர்கள் மேலே. நேற்றிருந்த ஹரிஜனங்கள், தாழ்த்தப்பட்ட அட்டவணை சாதியினர் இன்றில்லை; இவர்கள் இப்போது தலித்துகள்: தாழ்த்தப்பட்டோராய் இருந்து தலித்துகளாய் எழுச்சி பெற்றிருக்கும் இந்த உயரம், ஆதிக்க மனம் கொண்ட சாதியினரைத்  தூங்கவிடாமல் செய்கிறது. சாதியம் கடந்த மனித உறவு வேண்டாம்; சாதிய உறவு மட்டுமே வேண்டுமென எண்ணுகிற இவர்கள் முதலில் கைவைப்பது தம்மினப் பெண்டிரைத்தான். உரிமையற்ற பிராணிகளாக பெண்களை வைத்திருப்பது என்பது பா.ம.க.வின் ராமதாஸ் தொடங்கிவைத்தது.உடுமலைப்பேடையில் நடத்திய சாதி ஆணவகொலை பற்றிக் கருத்துக் கேட்டபோது, செய்தியாளர்களை ஒருபார்வை பார்த்துவிட்டு எழுந்துபோன ராமதாஸின் முகத்தையும், மருமகனைக் கொன்றுவிட்டு, மகளைக் கொல்லும் கொலை முயற்சியில்   கைதாகி காவலிலிருக்கும் தந்தை சின்னசாமியின் முகதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.கொலைசெய்த எந்தச் சலனமும் தென்படாத அந்த முகம் - “ எனக்கு சாமியை விட சாதி தான் பெரிசு” என்று சொல்லும் அந்த முகம் - இந்த முகங்களின் கூட்டம் தான் சாதி அரசியல் கட்சிகள். ஒவ்வொரு சாதி அமைப்பும் இதில் உச்சத்திற்குப் போயுள்ளன. இந்தச் சேதியின் சாரத்தை மண்டலம் மண்டலமாய்ப் பிரித்து தத்தம் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் மற்ற சாதித் தலைமைகளுக்கும் கடத்துகிறார்கள்.

சாதி ஆணவக் கொலைகளுக்காய் நீளும் கரங்கள்தாம் - கூட்டணி அமைக்கும் கரங்களாகவும் நீளுகின்றன என்ற உண்மையை மறைக்க வேண்டியதில்லை. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய பிரதான கட்சிகள் ஆணவக்கொலைகளின் ஆதார சக்திகளான சாதிக்கட்சிகளை, குஞ்சுகளை தமது செட்டைகளுக்குள் அரவணைக்கும் தாய்க்கோழிகள் போல் அடக்ககிக் காக்க முயல்கின்றன. சங்கரின், கவுசல்யாவின் பச்சை ரத்தம் உடுமைலைபேட்டை நகர வீதியில் காயாமலிருக்கிறபோதே, கொங்கு வேளாளர் கட்சித் தலைவன் தனியரசோடு அ.தி.மு.க கூட்டணி ஒப்பந்தம் போடுகிறது. மற்றொரு சாதிக்கட்சியான ’பார்வர்டு பிளாக்குடன்’ கூட்டு வைக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற முத்திரையுடன், வன்னியர் சங்கத்தின் பிரிவான வேல்முருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தலித்துகளுக்கு எதிரான வன்மத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்ட பா.ம.க.வின் கூட்டுக்காக பா.ஜ.க காத்திருக்கிறது.

தி.மு.க. சாதி ஆணவக் கொலையை இன்னும் தொண்டையை விரித்துக் கண்டிக்கவில்லை. 1967-ல் ஆட்சிபீடமேறியதும், ஏற்கனவே கைவசம் வைத்திருந்த ”பெரியார் பாதை” என்பதை தி.மு.க நிரந்தரமாக மூடிவிட்டது. தேர்தல் என வந்தால் அப்போது தி.மு.க.வின் சாதி முகம் அப்பட்டமாகக் கழன்று தொங்குகிறது. தாழ்த்தபட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறையாக இந்தப் படுகொலையை அவர்கள் காணவில்லை; ”தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம், ஒழுங்கு எவ்வளவு மோசமாகிவிட்டது என்பதின் உச்சகட்ட கொடூரம்தான் உடுமலை சம்பவம்” என்று சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் காணுகிறார் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் (16-03-2016). ”அனைத்து தரப்பு மக்களிடமும் நல்லிணக்கம் நிலவ தி.மு.க பாடுபடுகிறது” என சாதிவெறிக் கொலையாளர்களையும், பலியாகும் தாழ்த்தப் பட்ட இனத்து மக்களையும் சமமாகப் பார்க்கும் பார்வையின் உள்ளார்த்தம் புரிகிகிறது. "இன்னும் தயக்கம் ஏன்? எமது பக்கம் வாருங்கள்” என்று சாதிக் கட்சிகளுக்கு விடுக்கும் அழைப்புத்தான் இது.

சாதி ஒழிப்பு இல்லாமல் சாதிய விடுதலை சாத்தியமில்லை. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற இழிவு இல்லாமல் செய்கிறபோது, சாதிப்பிரிவுகள் தன்னாலே தூர்ந்து போகும். கடைசிக்கும் கடைசியாய், கீழினுக்கும் கீழாய் இருக்கும் தாழ்த்தபட்டவன் இல்லாமல் ஆகிறபோது, மேலிருக்கும் அடையாளங்களும் அற்றுப்போகும். ஆனால் சாதி வேற்றுமை பாராட்டக்கூடாது என்று உபதேசிக்கும் கட்சித்தலைமைகளும் சாதியை ஒழிப்போம் என்று பேசுவதில்லை; தேர்தல் வெற்றி சாதிக்கட்சிகளின், குழுக்களின் வாக்கு வங்கியில் தங்கியுள்ளது என்பது காரணம். “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்” என்று கண்ணன் உபதேசம் செய்த கீதையை எவராவது தூக்கி எறியத் தயாரா?

நிரந்தரமான தீர்வு என்பது இறுதிஎல்லை; சாதி ஆணவக் கொலைகளைத் தடை செய்யச் சட்டம் இயற்றவேண்டும் என்று அதை நோக்கிய முயற்சிகளை மேற்கொள்ளும் வேளையில் - தற்காலிகத் தீர்வாக சட்டமன்றத் தேர்தல் முன்வந்து நிற்கிறது. சமூக ஆர்வலர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் மக்களுடன் கூட்டமைத்து, சாதிய அடையாளம் தாங்கிய அரசியல்கட்சிகளை நிராகரிப்பதும் ஒரு தீர்வு.

(13-03-2016- ல் உடுமலைப்பேட்டையில் தலித் பொறியியல் பட்டதாரியைப் படுகொலை செய்த பாதகச்செயல் தொடர்பில், சமீபமாய் அதிகரித்துவரும் “சாதி ஆணவக் கொலைகள்” குறித்து உயிர் எழுத்து - ஏப்ரல்  2016 இதழில் வெளிவந்தது.)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்