இலங்கை இனப்படுகொலையை இந்தியத் தலைமை ஆதரிக்கிறது

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி செயலாளர் செயப்பிரகாசம் தினக்குரலுக்குப் பேட்டி

* ராஜிவ்-ஜெயவர்தன உடன்படிக்கையை ரத்துச் செய்ய முடியுமென்றால் கச்சதீவு உடன்படிக்கையை ஏன் ரத்துச் செய்ய முடியாது?

"ஈழத்தமிழின அழிவுக்கு எதிராக, இந்தியத் தலைநகர் நோக்கிய பிரமாண்ட பேரணிகள், உண்ணாவிரதங்கள், கண்டனக் கூட்டங்கள் மற்றும் கதவடைப்புகள், மறியல்கள் என்று பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி ஒட்டுமொத்த தமிழக மக்கள் குரல் எழுப்பிவருவதுடன் உலகின் எட்டுக்கோடி தமிழர்களும் பொங்கி எழுந்து ஆங்காங்கே எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த இன எழுச்சி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், உலகமயமாதல் கொள்கைக்கு உண்மையான விசுவாசியாக இருக்கிற ஒருவருக்கு அந்தப் பாதையிலேயே இந்தியாவையும் நகர்த்திவிட வேண்டும் என்று உறுதி எடுத்திருப்பவருக்கு இனப்போராட்டம் எதுவும் தெரியாது. இனப்படுகொலையை இவர்கள் ஆதரிக்கவே செய்வார்கள்!" என்று தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி செயலாளர் பா.செயப்பிரகாசம் தினக்குரலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கண்டித்துள்ளார். 

தமிழ் மண்ணையும் தமிழையும் உயிர் மூச்சாகக் கொண்டு எழுத்திலும் பேச்சிலும் வீராவேசமாக செயல்பட்டுவரும் பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்), இலக்கிய கர்த்தாக்களில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். கதை, கவிதை, கட்டுரை என்று சமூகநீதி வெளிப்படும் இவரது பல படைப்புகள் தமிழ்நாட்டின் ஏராளமான சஞ்சிகைகள், தினசரிகள், இணைய இதழ்களில் வெளிவந்தன - வருகின்றன.

சில பல்கலைக்கழகங்களில் இவரது தொகுதி பாடமாக உள்ளது. இவரது படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களும் உண்டு. தமிழீழப் பயணம் பற்றிய இவரது ?ஈழக் கதவுகள்? நூல், அந்த மண்ணின் காயத்தையும் கண்ணீரையும் வெளிக்கொணரும் அனுபவ இலக்கியமாகத் திகழ்கிறது.

மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொண்டு கைதாகி பல நாட்கள் சிறைவாசம் அனுபவித்த இவர் இன்று; ஈழத் தமிழின படுகொலையைக் கண்டித்து போராட்டங்கள் தமிழகத்தில் எங்கு நடந்தாலும் ஆர்வத்தோடு பங்கேற்று உண்மைகளை வெளிப்படுத்தி ஈழத்தமிழரின் உரிமைக்காக தோள்கொடுத்து வாதாடி வருகிறார்.

தனது தமிழீழ பயணத்தின்போது மாவீரர்கள் துயிலுமிடங்களில் கால் பதித்ததை உணர்வு பூர்வமாகக் கூறி பெருமைப்படுகிறார்.

இவருடன் ஒரு நேர்காணல்.

கேள்வி :- "தமிழகத்திலுள்ள கட்சிகள் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் மத்திய அரசைக் குறைகூறி வருகின்றன. இவர்களால் எதுவுமே செய்ய முடியாது" என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ?தேசிய முரசு? எனும் காங்கிரஸ் மாதமிருமுறை இதழை கடந்தவாரம் வெளியிட்டுவைத்து கூறியிருக்கிறாரே?
பதில் :- ஈழத் தமிழர்கள் மீது மிகப்பெரிய இனப்படுகொலை நடந்து வருகிறது.

இதற்கு இந்தியா ஆயுத உதவி, இராணுவப் பயிற்சி, நிதி உதவி அளித்துவருகிறது. இன்னும் இதை தெளிவாகச் சொன்னால் இலங்கை அரசைவிட இந்தியாதான் இந்த யுத்தத்தை முன்நின்று நடத்துகிறது என்று கூறலாம். ஆயுதங்கள் கொடுக்காதே, போரை நிறுத்து என்று தமிழகத்திலுள்ள கட்சிகள் கண்டித்தால் அது குறுகிய அரசியல் நோக்கமா? போரில், தானும் ஒரு கூட்டாளியாக இருப்பதால், போரை நிறுத்து என்று சொல்ல முடியவில்லை. ராஜபக்ஷ, மன்மோகன்சிங்கை சந்தித்தபோதே போரை நிறுத்த உறுதியாகத் தெரிவித்து தமிழர்கள் படுகொலையைத் தடுத்திருக்க வேண்டும்.

ஓர் இன அழிப்பு பற்றிய சிந்தனையே இல்லாமல் காங்கிரஸ்காரர்கள் பேசுகின்றார்கள். அதனால்தான் தமிழகத்தில் காங்கிரஸார் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., என்று யாராவது ஒருவர் தோள்மீது தொத்திக்கொண்டுதான் தமிழகத்தில் இவர்கள் அரசியலில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி :- "ஈழத் தமிழர் பிரச்சினையை குறிப்பாக போர் நிறுத்தத்தை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்புக் குழு கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தமிழக முதல்வர் இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்" என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை பற்றி...?
பதில் :- டாக்டர் ராமதாஸ் இக்கோரிக்கையை விடுத்தபோது, முதல்வர் கோயம்புத்தூரில் தி.மு.க.மாநாட்டில் இருந்தார். இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, சென்னை திரும்பியதும் இது பற்றி பரிசீலிக்கலாம் என்றும் மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கலாம் என்ற பாவனையில் முதல்வர் பதிலளித்திருந்தார்.

இவ்விடயத்தில் கடந்த கால சம்பவங்களை நினைவுபடுத்த வேண்டும். இலங்கை ஒரு நாடு. அந்த நாட்டின் பூர்வீக இனம் தமிழினம். தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் செய்வதற்கான போரை பௌத்த - சிங்கள அரசு செய்து கொண்டிருக்கிறது. போரின் உச்சக் கட்டமாக மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் இருக்க இடமின்றி, உணவின்றி,மருத்துவ வசதிகளின்றி காடுகளில் காலத்தை ஓட்டுகின்றார்கள். இந்தக் கொடூரமான நிகழ்வை ஐ.நா. பாதுகாப்புக் குழுவுக்கு கொண்டுபோவது வரவேற்கத்தக்கது. அதற்காக மத்திய அரசின் தயவை நாடவேண்டிய அவசியமே இல்லை! 1983இல் கறுப்பு ஜூலை என்று சொல்லப்படுகின்ற காலத்தில் மோசமான சம்பவங்கள் இலங்கையில் நடந்தபோது அந்த அத்துமீறல்களைக் கண்டித்து தமிழகத்தில் ஒரு கோடி கையெழுத்துக்களைச் சேகரித்து 7-8-1983இல் ஐ.நா.செயலாளருக்கு நேரடியாக அனுப்பியவர் கருணாநிதி. அன்று அவர் எதிர்க்கட்சித் தலைவர். இலங்கை சுதந்திரம் பெற்ற 1948இலிருந்து தமிழர் உரிமைகள் பறிப்பு, தமிழர் மீதான இனவெறித் தாக்குதல்கள், படுகொலைகள் என்பவற்றை எல்லாம் தொகுத்து பட்டியலிட்டு அனுப்பியிருந்தார். அந்த நேரம், இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் கருணாநிதி இருந்தார். இப்போதும் காலதாமதமின்றி ஐ.நா.வுக்கு அதன் கவனத்துக்கு அவர் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம். இன்று கலைஞர் முதல்வராக இருக்கின்றார். முறையான வழியாகத்தான் (மத்திய அரசு மூலமாக) இதனைச் செய்ய வேண்டும் என்று அவர் கூறலாம். மத்திய அரசுக்கு மகஜர் அனுப்பி, ஐ.நா. மன்றத்தில் எழுப்ப வேண்டும். அதுதான் முறை என்று கூட விளக்கம் சொல்லலாம். தமிழக முதல்வர் என்ற முறையில் அவர் இந்தப் பிரச்சினையைப் பார்க்கிறாரா? அல்லது ஒரு தமிழன் என்ற வகையில் அணுகுகின்றாரா? தமிழன் என்ற அடிப்படையில் எந்த மத்திய அரசையும் அவர் கேட்கவேண்டியதில்லை! அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்து செயல்பட்ட கலைஞர், இன்று பன்மடங்கு வேகத்தில் உடனடியாக களத்தில் இறங்கலாம்.

கேள்வி :- திருமதி இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து இந்திய பாராளுமன்றத்தில் பேசுகையில் (1983), "இலங்கையில் நடப்பது உள்நாட்டுச் சண்டை அல்ல. இனப்போராட்டம்" என்று உண்மை கூறினார். அவர் வழிவந்த காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங், சாதாரணமாக போரை நிறுத்து என்று கூட கூறாததன் காரணம் என்ன?
பதில் :- அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்திக்கு வல்லரசுக் கனவு இல்லை. அவருடைய தந்தை நேரு பிரதமராக இருந்தபோது கூட, இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் என்ற கொள்கை இல்லை. இந்தியா ஒரு நடுநிலைமை நாடு என்ற கம்பீரத்தை நிலை நிறுத்துவதிலேயே நேரு குறியாக இருந்தார்.

நடுநிலையாக நின்று பார்ப்பவர்களுக்கு மட்டும்தான், அது ஒரு இனப்போராட்டம் - அந்த இனத்தின் விடுதலைப் போராட்டமாகத் தெரியும்! (16 ஆம் பக்கம் பார்க்க)

கேள்வி :- இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் எங்கும் தீவிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒதுங்கி இருப்பது போல் தெரிகிறதே?
பதில் :- தமிழக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, அகில இந்திய தலைமையும் இந்த நோக்கில்தான் செயல்படுகிறது. "மக்கள் என்பது தேசிய இனமே" என்கிறது மார்க்ஸிஸம். அந்த வழியில் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, தேசியஇன விடுதலை என்று லெனின் வகுத்த கோட்பாட்டை நடைமுறையில் இவர்கள் நிராகரிக்கிறார்கள்.

இன்னொரு பார்வையில், இந்த நிராகரிப்பு ஏகாதிபத்தியத்தின் கொள்கையாகவும் இருக்கிறது. ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்காக தேசிய இனங்களின் வளங்களைச் சுரண்டுவது, சுரண்டல் நிமித்தமாக அந்த மக்களின் மொழி, பண்பாடு அடையாளங்களை அழிப்பது, முடிந்தால் அந்த தேசிய இனத்தையே முற்றாக துடைத்தெறிவது என்பதுவே ஏகாதிபத்தியங்களின் கொள்கை. தனக்கு சாதகமாக அமையுமென்றால், கொஸோவோ போன்ற நாடுகளின் விடுதலையை ஆதரிப்பது தனக்கு எதிர்ப்பு வருமென்றால் அந்த விடுதலையையே எதிர்ப்பது என்பதையே ஏகாதிபத்தியங்கள் நடைமுறைப்படுத்துகின்றன. இலங்கைப் பேரினவாத அரசுக்கு அமெரிக்கா நேரடியாகவே பாதுகாப்பு அளிக்கிறது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் செயல்களும் இவ்வகையில் ஏகாதிபத்திய சார்பாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

கேள்வி :- வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து தமிழ் மாநிலமாக அறிவிக்க வேண்டும். இலங்கை கூட்டாட்சி அமைப்பில் அது ஒரு தனி ஆட்சியாக இயங்கவேண்டும் என்று ஜெயவர்த்தனா - ராஜீவ் காந்தி ஒப்பந்தம் கைச்சாத்தானது. கிழக்கு மாகாணத்தைப் பிரித்து ஒரு முதலமைச்சரின் கீழ் நிர்வாகத்தை கொண்டு வந்திருப்பது அந்த ஒப்பந்தத்தையே மீறுவதாக இல்லையா?
பதில் :- இரு நாடுகளால் கைச்சாத்திடுவது சர்வதேச ஒப்பந்தமாகும். சிறிமாவோ -இந்திராகாந்தி காலத்தில், கச்சதீவு ஒப்பந்தம் கையெழுத்தானது. கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று தமிழகம் குரல் எழுப்பும்போது, "அது சர்வதேச ஒப்பந்தம். அதனை தனியாக ஒரு நாடு முறிக்க முடியாது" என்று இலங்கை அமைச்சர்கள் போர்க்குரல் தொடுக்கிறார்கள். ஜெயவர்த்தனா-ராஜீவ்காந்தி ஒப்பந்தமும் சர்வதேச ஒப்பந்தம்தான்.

அதில் கையெழுத்திட்ட இன்னுமொரு நாட்டைப்பற்றி கவலை கொள்ளாமல் தன்னிச்சசையாக கிழக்கு மாகாணத்தை மட்டும் தனிமைப்படுத்தி ஆட்சி நிறுவியது தர்மமா? இவர்கள் மனித உரிமைகளை மட்டுமல்ல, சர்வதேச விதிமுறைகளையும் மீறியிருக்கிறார்கள். இந்த அத்துமீறல் பற்றி இந்தியாவும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயகப் பாரம்பரியத்துக்கே பெரிய இழுக்கு!

கேள்வி :- ஈழப்பிரச்சினையில் தமிழக இலக்கியவாதிகளின் எதிர்வினை எப்படி இருக்கிறது?
பதில்:-இப்பிரச்சினையில் தற்போது தமிழக மக்களிடம் மனிதநேய அலை எழுந்துவருகிறது. மக்களின் பொங்கும் உணர்வுகள் ஒரு முட்டுச் சந்தில் போய் நின்று விடாமல் அந்த உணர்வுகளை மேலெடுத்துச் செல்லும் வகையில் தமிழகப் படைப்பாளிகளின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றது.

தமிழகம் தழுவிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், திரைப்படத்துறையினர் பலரும் பங்கேற்ற ஒருநாள் தொடர் முழக்கப் போராட்டத்தை தமிழ்ப்படைப்பாளிகள் முன்னணி சார்பில் நடத்தினோம். ஓவியர் புகழேந்தி, கவிஞர்கள் அப்துல் ரகுமான்,இன்குலாய், மு.மேத்தா, பொன். செல்வகணபதி, தமிழச்சி, எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், இராசேந்திரசோழன், மே.து.இராசுகுமார், பூங்காற்று தனசேகர், நடிகர் சத்தியராஜ், இயக்குநர் சீமான், எழுத்தாளரும் நாடகாசிரியருமான ந.முத்துசாமி எனப்பெருந்திரளானவர்கள் பங்குபற்றினர்.

தமிழ் மக்களுடைய பணத்தில் மினு மினுப்பும், பளபளப்பும், வருவாயும் பெற்று செழித்திருக்கிற தமிழ்த் திரையுலகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இக்கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிப்பதுபோல் இராமேஸ்வரத்தில் கலைத்துறையினர் ஆவேசப் போராட்டம் நடத்தி உணர்வுகளைக் கொட்டினர். இதனைத் தொடர்ந்து தமிழ்த் திரை உலகின் பல்வேறு துறையினரும் தங்களது உள்ளுணர்வுகளை வெளிக்காட்டும் வகையில் போராட்டங்களை நடத்தினர் - நடத்திவருகின்றனர். ஈழத் தமிழ் மக்களுக்காக தமிழகத்திலுள்ள 221 ஓவியர்கள், கடந்த பதினான்காம் திகதி முதல் ஒரு வாரம் வரை ஓவியப் படையல் செய்கின்றனர்.

ஓவியங்களை விற்பனை செய்தவகையில் கிடைக்கப்பெறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பணத்தை ஈழமக்களுக்கு அனுப்பவுள்ளனர். ஓர் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்குத் துணையாக தமிழகப் படைப்பாளிகள் தமது பணியை - பங்களிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். தமிழகத்தின் முன்னணி சஞ்சிகைகளில் இந்த மாற்றத்தை இன்று தாராளமாககக் காணக்கூடியதாக இருக்கிறது.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி