கருணா, ராசபக்ஷே, போராடும் தமிழீழ மக்கள் - யாருக்காக பேசுகிறார் அ.மார்க்ஸ்?

பொதுச் சிந்தனை, எதிர்ச் சிந்தனை- என இரு வழித்தடம் உண்டு. மனிதகுல வளர்ச்சிக்காக உருவாகி காலம் காலமாய் சலித்து வடிகட்டி, சமுதாய ஆக்கத்துக்காக தொகுத்துத் தந்திருப்பது பொதுச் சிந்தனை. மனித இன மேம்பாட்டின் பொருட்டு முந்தைய சிந்திப்புகளில் எது தேவையில்லையோ அவைகளை ஒதுக்கி, புதிய தடம் போடுவது எதிர்ச் சிந்தனை. எதிர்ச் சிந்தனை எனில், அதற்கு சித்தர்களைப் போல உடைப்பு மட்டுமே பிரதானம். மாற்றுச் சிந்தனை எனில் உடைப்பின் இடத்தில், காரல் மார்க்ஸ் போல், பெரியார் போல் மாற்றை முன் வைப்பது ஆகும். எதிர்வரும் தலைமுறைகளின் ஆக்கம் பற்றியே சிந்திக்கிறவர்களாய் மேதைகள் இருப்பதால், மாற்றுச் சிந்தனை, மாற்றுச் செயல்பாடு அவர்களின் பிரதான முன்வைப்பாகிறது.


ஒவ்வொரு சிந்திப்பையும் சமுதாய ஆக்கத்துக்குத் தந்தாக வேண்டுமென்று முன் வைப்பது ஒரு வகை. ஆனால் சமுதாயத்தின் கவனக்குவிப்பு,தன்னை நோக்கித் திரும்புதல் வேண்டும் என்பதின் காரணமாக எதிர்ச் சிந்தனை பேசுவது ஒரு வகை. எதிர்ச் சிந்தனையை மாற்றுக்கானதாய் வைக்காமல் எதையும் குளறுபடியாக விதைத்து விடுதல் தன்னைப் பற்றிய கவன ஈர்ப்புக்குப் போதுமானது. இவ்வகைப் பயணத்தை ஒரு விபத்தாக, தற்செயலாக அல்ல, திட்டமிட்டு தெளிவாகச் செய்பவராக சிந்தனைத் தளத்தில் அ.மார்க்ஸ் முதலிடத்தில் நிற்கிறார்.

1

2009 மார்ச் ‘புத்தகம் பேசுது’ இதழில் அ.மார்க்ஸின் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய நேர்காணல் வெளியாகியுள்ளது. பெருவாரியான கேள்விகள் ஈழவிடுதலைப் போரின் எதிர்ப்பை மையப்படுத்தியே - விடுதலைப் புலிகளை மையப்படுத்தி எழுப்பப்பட்டுள்ளன. கேள்வி எழுப்பியவர், இடதுசாரி மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாட்டிலிருந்து நடத்தப்படும் ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனத்திலிருந்து- அக்கருத்துக்களின் அடித்தளத்தில் செயல்படுகிறவராக இருக்கிறார் என்பதினும், அவ்வாறான கேள்விகளை உருவாக்கச் செய்பவராக அ.மார்க்ஸ் இருக்கிறார் என்பது உண்மை. நேர்காணல், வழக்கமாகப் பல்வேறு தளங்களில் வேர் பிரிந்து செல்லும் ஒன்றாக அமையும். இது அவ்வாறு அமையவில்லை. அப்படி அமைந்தாலும், எதற்கும் இந்தா பிடி என்று திருநீறு மந்தரித்துக் கொடுப்பது போல், அ.மார்க்ஸ் தயார். கேள்வியும் நானே, பதிலும் நானே என்று ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு அணைவான கரம் கொடுத்துச் செல்பவராக, விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான பார்வையை வெளிப்படுத்துகிறார். இவ்வித எதிர்நிலைப்பாடுகள் மூலம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது என்ற நோக்கம் நிறைவேற, தானொரு எதிர்ச் சிந்தனையாளன் என்று விளம்பரப்படுத்திக் கொள்ள கண்ணும் கருத்துமாய் அவர் வளர்த்து வந்த பூனைக்குட்டி இப்போது வெளியே வந்துள்ளது.

எதைப் பிரதானமாகக் கொள்ள வேண்டுமோ, அதைக் கவனிக்காமல் விடுவது அ.மார்க்ஸி ன் சிந்திப்பு முறை, இலங்கை சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்படும் 1948 முதலும் அதற்கும் முன்பிருந்தே தொடர்ந்து வரும் இந்தியத் தலையீடு பற்றி அவர் கவனம் கொள்ளவில்லை. தனக்குக் கட்டுப்பட்ட ஒரு நிலப்பரப்பாக இலங்கை வாழ வேண்டும் என்ற இந்திய ஆட்சியாளர்களின் நினைப்பு பற்றி அவர் கருத்துச் செலுத்தவில்லை. தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் காரியங்கள் செய்வதற்கு இந்தியா மூலசக்தியாய் இயங்குகிறது. இந்தியாவே போரை நடத்துகிறது என்பதற்கு சமீபமாகக் கிடைத்த ஆதாரங்கள் உள்ளன. இந்திய அமைதிப் படை என்ற பெயரில் நேரடியாக உள்ளிறங்கியது அன்று. இன்று மறைவாய் இராணுவத்தை உள்ளிறக்கிக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் தன் நாட்டுக்குள் எழுந்துள்ள பயங்கரவாதத்தை அழித்தால் பரவாயில்லை. இன்னொரு நாட்டுக்குள் போய் அந்த சேவையைச் செய்கிறது.

(1. இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள இராஜதந்திரம் 2. தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் - மு.திருநாவுக்கரசு எழுதிய நூல்களை அ.மார்க்ஸ் வாசிக்க வேண்டும்)

பயங்கரவாதிகளையும் விடுதலைப் போராளிகளையும் சமமாகப் பாவித்து ஈழத்து பயங்கரவாதிகளை ஒழிப்பதன் மூலம் இலங்கையைத் தனது கக்கத்துக்குள் இடுக்கி வைத்துக் கொள்ள இந்தியா எத்தனிக்கிறது. அரச பயங்கரவாதத்துக்குப் போதையூட்டும் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற முழக்கம் செப் 11, 2001ல் அமெரிக்கா வைத்த முழக்கம். சர்வதேச சமூகத்துக்கு தவறான வழிகாட்டுதலைக் காட்டிய முழக்கம்.

‘‘அது மேற்கு உலகுக்கு எதிராக தீவிரவாதிகளை ஒன்று சேர வைத்தது. இது தான் அதனுடைய விளைவு. நாங்கள் வரலாற்றுத் தவறுகள் (அமெரிக்கா, பிரிட்டன்) செய்து விட்டோம். எல்லாக் குழுக்களையும் சமமாகப் பாவித்தது வரலாற்றுத் தவறு. தாயக மக்களுக்குப் போராடுகிற விடுதலைப் புலிகளையும் மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான லஸ்கர். இ.தொய்பா அமைப்பையும் வேறபடுத்திப் பார்க்கத் தவறி விட்டோம். விடுதலைப் புலிகளையும் பயங்கரவாதிகளையும் சமமாகக் கருதும் ஒப்புமை வெறுப்பைத் தரக்கூடியது. அனைத்துக் குழுக்களும் ஒரே மாதிரி அணுகப்பட்டது மிகப் பெரிய தவறு. பயங்கரவாதம் ஒரு கொலை தந்திரோபயம் (கூயஉவiஉள) .அது ஒரு நிறுவனமோ தத்துவமோ அல்ல‘‘


இவ்வாறு பேசியவர் மும்பையில் எந்த தாஜ் ஓட்டலில் ‘லஸ்கர். இ. தொய்பா’ பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றதோ, அதே ஓட்டலில் இரண்டு மாதத்தின் பின் நடந்த அரங்கில் பேசிய பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்

சென்னையில் சனவரி 2009-ல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின்போது பிரபாகரன், விடுதலைப் புலிகள் போன்ற புத்தங்கள் விற்கக்கூடாது என போலீஸ் சொன்னபோது அதை ஏற்றுக் கொண்டு ’’இந்திய அரசு, தமிழக அரசு, இந்தியக் கலாச்சாரம், மதக் கலாச்சாரத்துக்கு எதிரான புத்தகங்களை விற்பனைக்கு வைக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறோம். போலீஸ் சொன்னால் அதை எடுத்தாக வேண்டும்’’ என்று பதிப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசனைப் பேச வைத்தது வரை இந்த பயங்கரவாதக் கருத்தாக்கத்தின் தொடர்ச்சி நீண்டிருக்கிறது.

‘1975/1985 கால கட்டத்தின் பின் இன்று உலகில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. விடுதலைப் புலிகள் இவைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை’ என்று விமர்ச்சிக்கிற அ.மார்க்ஸ் மிலிபேண்ட் சொன்ன காலமாற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

‘‘90களுக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள், நெருக்கடிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எல்லா இடதுசாரி இயக்கங்களும் தம் அணுகல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன’’ என்கிறார் அ.மார்க்ஸ். ஆனால் இலங்கை இடதுசாரிகள் குறிப்பாய் ஈழத்தில் செயல்பட்ட இடதுசாரிகள் 1983க்கு பின் ஏற்பட்ட மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்பது போலவே பின் நவீனத்துவாதியான அ.மார்க்ஸும் கணக்கில் கொள்ளவயில்லை

1980களின் பின் ஈழத்தமிழர் பிரதேசத்தில் இடதுசாரி அரசியல் என்ற ஒன்று கிடையாது. இனத்துவ அரசியல்தான் முன்னுக்கு வந்தது. இனத்துவ அரசியலிலிருந்து இன்றுள்ள இனவிடுதலைப் போர் எழுந்து வந்தது.

ஈழத்தமிழர் மத்தியில் முதன் முதலாக ஆயுதப் போராட்ட அரசியல் முறையை உண்டு பண்ணியவர்கள் இந்த இடதுசாரிகள். இவர்கள் சீன சார்பு அரசியல், போராட்டம் பற்றி பேசினர். ஓப்பீட்டளவில் இலங்கை இடதுசாரிகளை விட, முற்போக்காளர்களாகவும், புரட்சிகர உள்ளடக்கப் பண்புகள் கொண்டவர்களாகவும் இருந்த ஈழத்தின் இந்த சீன சார்பு இடதுசாரிகள் ஈழத் தமிழ் மக்கள் மீது, சிங்களப் பேரின ஒடுக்குமுறைகள் திரண்டபோது அதை எதிர்த்து நின்று முறியடிக்கத் திராணியற்றவர்களாக ஆகினர். தமிழர் என்ற அடையாளத்தை ஒடுக்கப்படும் தேசிய இன அடையாளமாக எடுத்துக் கொண்டு, அதன் சார்பில் குரல் எழுப்ப முன் வந்தாரில்லை. சீனச் சார்பு கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் சண்முகதாசன் ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாகவே ஏற்க மறுத்தார். (அ.மார்க்ஸக்கு முன்னரே அவர் பின் நவீனத்துவவாதியாக மாறிவிட்டார் போல)

தேசியத்துடன் இணையாத மார்க்சியத்தால் பயனில்லை. லத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசியல் அனுபவங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு ரெஜிரப்கே இவ்வாறு குறிப்பிடுவார். அதேபோல் சோசலிசக் கூறுகளை, பண்புகளை உள்வாங்கிக் கொள்ளாத தேசியத்தால் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பயனில்லை என்பார் யதீந்திரா என்ற ஈழத்து எழுத்தாளர். மாறாக தேசியத்தை உடைக்காத மார்க்சியத்தால் பயனில்லை என்ற கருத்தை பின் நவீனத்துவவாதிகள் கொண்டிருக்கிறார்கள். தேசியத்தை உடைப்பது, மார்க்சியத்தை உடைப்பது, அல்லது இரண்டையுமே சேர்ந்து உடைப்பது என்ற போக்கில் போகிவறவர்கள் தாம் இப்போதைய பின் நவீனத்துவவாதிகள். தேசியம், தேசம்- என்ற உருவாக்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர், அ.மார்க்ஸ். தேசியம் ஒரு கற்பிதம் என்பார். ஆதிக்க நிலையினர் தேசியத்தை கட்டமைப்பதற்கும், ஒடுக்கப்படும் மக்கள் கட்டமைக்கும் தேசியத்துக்கும் பாரதுhரமான வேறுபாடுகள் உண்டு, இரண்டும் ஒன்றல்ல என அ.மார்க்ஸ் காணவில்லை.

‘‘தேசிய இனம் என்ற பேரடையாளத்தை இறுக்கமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் கட்டமைக்கும்போது வர்க்கம் உள்ளிட்ட பல்வேறு சிறு அடையாளங்கள் அதன் மூலம் ஒடுக்கப்படும்’’ என்று விரிவுரையாற்றுகிறார் பின் நவீனத்துவவாதி அ.மார்க்ஸ்

இன விடுதலைப் போரின் போது வர்க்கம், சாதி, வட்டார அடையாளங்கள் ஒடுக்கப்படுதல் அல்ல, ஒதுங்கிப் போகும். மக்கள் திரளை விடுவிக்கப் பிரதானமான ஒன்றை முன்னெடுக்கையில் மற்றவைகளையும் அதே நேரத்தில் தோளில் துhக்கி வைத்துக்கொண்டால் நனைந்த பொதி சுமக்கிற கதையாகி விடும். . அதே பொழுதில் இவைகளை உள் வாங்கிய எதிர்கொள்ளல் நடைமுறையில் இருக்கும். பிரதான முரண் விலக்கப்படுகிறபோது ,ஒதுங்கியிருந்த அகமுரண்கள் முன்னுக்கு வரும். முதன்மையிடத்துக்கு வந்த அவை முன்னுரிமை அடிப்படையில் ஆய்வுக்குட்படுத்தி தீர்க்கப்படும். இது யூகமோ, அனுமானமோ அல்ல. வரலாற்றில் இதுதான் பிரச்சனைகளைத் தீர்க்கும் முறை. பின் நவீனத்துவம் பிரச்னைகளைத் தீர்க்கும் முறையை அறியாது, புதிது புதிதாகப் பேசுதல், எதையும் கேள்விக்குட்படுத்துதல்,மாற்றை முன்வைக்காது மாறி மாறிக் கேள்விகளைக் குவித்தல்-மட்டுமே பின் நவீனத்துவ வேலை.

‘‘சிங்கள மேலாதிக்கம் தமிழர்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டபோது இவர் முதலாளி,இவர் தொழிலாளி,இவர் தாழ்த்தப்பட்டவர் என்ற வேறுபாடுகள பார்த்து தனது ஒடுக்குமுறையைச் செலுத்தவில்லை. தமிழர் என்ற அடையாளத்தின் மீதே தனது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்தது (சிங்களப் பேரினத்தை அண்டி அடிமைப் பாட்டுப் பாடியவர்கள் வாழ முடிந்தது) , சிங்களப் பேரினம் எந்த அடையாளத்தை அழித்தொழிக்க முற்பட்டதோ, அந்த அடையாளத்தை மையப்படுத்தியே அன்றைய ஈழத்தமிழர் தேசிய அரசியல் தோற்றம் கொண்டது. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையின் விரிவும், அதற்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வுகளை இடதுசாரிகளால் தமது அரசியல் தளத்தில் பிரதிபலிக்க முடியாமல் போனமையும் தான் இடதுசாரி அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்தது” என்று ‘சுட்டும் விழி’ இதழின் (திருகோணமலை) ஆசிரியரும்,எழுத்தாளருமான யதீந்திரா குறிப்பிடுகிறார்.

இனத்துவ ஒடுக்குமுறைக்குள்ளிலிருந்து எழுந்த இனத்துவ அரசியலைக் கண்டு கொள்ளாமல் வர்க்கம்,சாதிய ஒடுக்குமுறைகளை முன்னிறுத்திய வரலாற்றுப் பிழை அந்தக் காலத்தில் நிகழ்ந்தது. எது பிரதான முரண் என்பதைக் காணத் தவறினார்கள்.

ம.க.இ.க வினர் புலிகளைப் பாஸிஸ்டுகள் என்று சொல்கிறார்களாம்;

மகிழ்ச்சிப் பெருக்குடன் எடுத்துப் போட்டுக் கொள்கிறார் அ.மா. புத்தகம் பேசுது இதழினுhடாக அ.மா வைப் பேசச் செய்து இன விடுதலைப் போருக்கு எதிரான நிலை எடுத்துள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை ராணுவமும், புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட வேண்டுமென்கிறது. ‘‘தாக்குபவனையும் தற்காத்துக் கொள்பவனையும் சமமாகப் பார்க்கும் இக்கூற்று சிங்கள இனவெறிக்குத் துணைபோவதாகும்’’ என்று பதில் கொடுத்துள்ளனர் ம.க.இ.க.வினர் .

‘‘கிளிநொச்சி வீழ்ந்தாலென்ன, முல்லைத்தீவு வீழ்ந்தாலென்ன,
வென்றதில்லை இனவெறி ஆதிக்கம்
ஓயப்போவதுமில்லை தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப்போர்.
அப்போருக்கு ஆதரவாக தமிழகமே, விழித்தெழு, போராடு’’

என்று ம.க.இ.க வினர் குரல் எழுப்புகிறார்களே, இதுபற்றி அ.மா என்ன சொல்கிறார்? தனக்குள் வரைந்துள்ள குரூர ஓவியத்தை வெளிக்காட்ட புத்தகம் பேசுது இதழையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் அது போலவே, ம.க.இ.க வின் வழியாகவும் முண்டும் சூட்சுமம் புரிகிறது.

‘‘2001 செப்டம்பர் 11- க்கு பின் மாறியுள்ள உலக நிலையைப் புலிகளும் சரி, புலிகளின் ஆதரவாளர்களும் சரி கண்டு கொள்வதும் இல்லை, புரிந்து கொள்வதும் இல்லை’’ என்று மட்டையடி போடுகிற அ.மார்க்ஸ், செப்டம்பர் 11ல் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பிம்பத்தை உலகப் பேரரசு வாதத்தின் பக்கம் நின்ற மில்லிபாண்ட் போன்றவர்கள் உடைத்து வீசுகிறபோது அதை ஏற்கிறாரா? எதிர்க்கிறாரா? எந்தப்பக்கம் நிற்கிறார்?

‘‘ஈழ விடுதலை, தனி ஈழத்தை அங்கீகரித்தல் என்ற முழக்கங்கள் தமிழ் நாட்டிலிருந்துதான் ஒலிக்கிறதே ஒழிய, ஈழத்தில் இன்று யாரும் இதைச் சொல்வது கிடையாது. விடுதலைப் புலிகள் உட்பட இதுவே இன்றைய நிலை. இந்த ஆண்டு மாவீரர் நாள் உரையின் போதோ, சென்ற ஆண்டிலோ பிரபாகரன் தனி ஈழக் கோரிக்கையை முன் வைக்கவில்லை‘‘ என்று கூறுகிறார் அ.மார்க்ஸ்

இந்த ஆண்டு பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரையிலிருந்து சில வாசகங்கள்.

‘‘இந்த மண் எமக்குச் சொந்தமானது, எமது இனவேர் ஆழ வேரோடியுள்ள இந்த மண்ணிலே நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நிய ஆதிக்கமோ தலையீடோ இன்றி எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.’’

‘‘இந்த மண்ணை ஆக்கிரமித்து அடக்கியாள சிங்களம் திமிர் கொண்டு நிற்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் கலையும், எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும், இது திண்ணம்’’

‘‘தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்’’

தனி ஈழக் கோரிக்கையை பிரபாகரன் முன் வைக்கவில்லை என்று அபத்தமான ஒரு பொய்யை, தன்னறிவின் நம்பகத்தன்மையை மட்டுமே கொண்டு பேசுகிற அ.மா வைத் தவிர வேறு யாராலும் உதிர்க்க முடியாது.

‘‘தனி ஈழம் என்பது மட்டுமல்ல, கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்ற கோரிக்கைக்கு கூட ஒட்டு மொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது’’ என ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்கிறார். ராசபக்ஷேக்களும் கருணாக்களும் கூறுவதையே இவரும் கூறிக்கொண்டிருந்தால் என்ன செய்வது? இன்றைக்கே தமிழ்ப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களிடையே ஐ.நா மூலம் ஒரு வாக்கெடுப்பு தமிழ் மக்களிடையே மட்டுமே நடத்தப்பட வேண்டும் என இயக்கம் எழுந்தால், அவ்வாறே கருத்துக் கணிப்பும் வந்தால் அ.மார்க்ஸ் கண்ட கனவெல்லாம் குப்பைக் கூடைக்குப் போகும்.

சோவியத் யூனியன் வீழ்ச்சி மற்றும் 1990க்கு பிந்திய உலகில் ஏற்பட்ட மாற்றங்களை புலிகள் கணக்கில் கொள்ளவில்லை என்கிறார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகுதான் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைச் சக்திகளாக புலிகள் வீரியமாக அதிவேகம் கொண்டனர். தேசிய இனங்களின் ஒடுக்குமுறையில்தான் சோவியத் யூனியன் துண்டு துண்டாகச் சிதறியது என்ற உண்மை அவர்களுக்குத் துணையாக வந்தது. இவ்வாறு வரலாற்றுப் பேருண்மையை மறைக்கிற ‘நல்ல குணம்’ அ.மார்க்ஸ்க்கு நிறைய உண்டு.

‘‘வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை’’ என்கிற குற்றச்சாட்டை வைக்கிறபோது, அவர்கள் நாடு திரும்பாததற்கு காரணம் யார்? புலிகள் அந்தப் பிழைக்கு வருந்தி திரும்ப அழைத்தபோதும் தங்களின் வாழ்விடங்களுக்கு மீண்டும் செல்ல முடியாதததற்கு வடக்கில் நிலைகொண்டுள்ள ராணுவம்தான் காரணம் என்ற நடைமுறை உண்மையை ராணுவம் அகன்ற பின் முஸ்லீம்கள் தங்களிடத்தில் குடியேற பெருவிருப்போடு இருக்கிறார்கள் என்று அவர்களிடமிருந்து வந்த செய்திகளை ஷோபா சக்தியும், சிராஜுதீனும் அவருக்குத் தர மாட்டார்கள்.

‘கிழக்கில் பள்ளி வாசலில் தொழுது கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். இன்று கிழக்கு மக்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கும் இதுகாறும் புலிகளில் இருந்து எல்லாவித மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக இருந்த கருணா கும்பலின் சந்தர்ப்பவாதம் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது’ என்று புலிகளுக்கு எதிரான முகவராக தன்னைக் வெளிப்படுத்திக் கொள்கிறார். இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் புலிகளின் பக்தர்கள், புலிகளின் முகவர்கள் என்றால் நீங்கள் கருணாவின் முகவரா? இல்லை பிள்ளையானின் முகவரா என்கிற கேள்வி நம் சிந்தனைக் கதவுகளை ஓங்கித் தட்டுவதற்காக வாசலில் காத்து நிற்கிறது.

அக்டோபர் 2008, தீராநதி இதழில் பாரிஸில் வாழும் எழுத்தாளர் ஷோபா சக்தியை அ.மார்க்ஸ் நேர்காணல் செய்திருந்தார். ‘‘இன்றைய தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியான ஷோபா சக்தியின் இக்கருத்துக்களை வெறும் நேர்காணலாகவன்றி உடன்பாடுடன் முன்வைக்கிறேன்‘‘ என்று அதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஈழப் போராட்டத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிராக தனக்குள்ளிருக்கும் கருத்துக்களை மட்டும் முன்வைத்து அதற்கு ஒப்புதலும் பெற இதுபோன்ற நேர்காணல் வசதியாக அமைந்து விடுகிறது.

இந்த நேர்காணலில் ஷோபாசக்தி ‘‘சர்வதேச அழுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகணத்தில் தேர்தல் ஒன்றையும் அரசு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தவிர, மற்றெல்லா பெரிய அரசியல் கட்சிகளும் பங்கு கொண்டன. தேர்தலும் பெரிய அராஜகங்களின்றி நடைபெற்றது . அரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட பிள்ளையான் முதலமைச்சரானார். தொடர்ந்து இன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. முதலில் பல ஆண்டுகளுக்குப் பின் முதன் முதலாக அங்கே போர் ஒழிந்து மக்கள் அமைதியாக உள்ளனர். கொலைகள், ஆட்கடத்தல்கள் எல்லாம் வெகுவாகக் குறைந்துள்ளன. குறிப்பாக ஏராளமான குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு, போர்முனையில் நிறுத்திக் கொல்லப்படும் அவலம் நின்றுவிட்டது‘‘

பிள்ளையான், கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஆவதற்கு முன்னும், ஆன பின்னும் என கிழக்கு மாகாணத்தில் நடப்பவைகளுக்கு மாறான பொய்களை அடுக்கிக் கொண்டு போகிறபோது அவைகளை ஏற்றுக் கொள்கிறார் அ.மார்க்ஸ் (உடன்பாட்டுடன் முன்வைக்கிறேன்)

ஆனால் கொழும்புவிலும், கிழக்கு மாகாணத்திலும் இயல்பாக நடந்து வரும் வெள்ளை வேன் கடத்தல்கள், கொலைகள், வன்முறைகள் ஆகியவற்றை அங்கு சென்று திரும்பிய, போர்ப் பகுதிகளுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட செய்தியாளர் கவிதா அவுட் லுக் இதழில் அம்பலப்படுத்தியிருந்தார். ‘ உங்கள புத்தர் இதையா சென்னார்’ என்ற தலைப்பிட்டு காலச்சுவட்டிலும் (சனவரி, 2009) எழுதியிருந்தார்.

‘‘போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாநிலத்தில் 49,000/- கைம்பெண்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு அளிக்காவிட்டால் அவர்களில் பலர் மனித வெடிகுண்டுகளாக மாறும் சூழ்நிலை ஏற்படலாம்’’

சமீபத்தில ஐ.நா அதிகாரிளின் எச்சரிக்கையை சிங்கள இதழ்களில் வந்த செய்திகள் எடுத்துச் சொல்கின்றன. 49000 – கைம்பெண்களில், 35000 பேர் 30 வயதுக்குக் கீழானவர்கள். இது தவிர போராளிகள் குடும்பத்தைச் சேர்ந்த 8000 பேரும் வேலையில்லாது தவிக்கின்றனர். இந்தக் கைம்பெண்கள், போர்ப்படையில் சேர்ந்து மனித வெடிகுண்டாய் மாறுவதைத் தவிர, வேறு வழியில்லை என்ற உண்மை நிலவரத்துக்கு, இராணுவமும், கருணா, பிள்ளையான் போன்ற துணை ராணுவக் குழுக்களும், டக்ளஸ் தேவானந்தா போன்ற அரசாங்கத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட செல்லப்பிள்ளைகளும் காரணமென்தை எல்லோரும் அறிவர். எல்லோரும் அறிய உலவும் உண்மைகளை உயிரோடு புதைத்து விட்டு, ‘எல்லாம் சுபிட்சமாக நடக்கிறது’ என்று ஷோபா சக்தி சொல்வதற்கு அ.மார்க்ஸ் முழு உடன்பாட்டுடன் ஏற்கிறாராம்.

ஷோபா சக்தியின் வாக்கமூலத்தையும் அ.மார்க்ஸின் ஒப்புதலையும் மறுப்பது போல, அ.மார்க்சே குறிப்பிடுகிறார் ‘‘கிழக்கு மாகாணத்தில் சில மாதங்களுக்கு முன் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 24 கொலைகள் நடந்துள்ளன. நவம்பரில் மட்டும் மட்டக் களப்பு மாவட்டத்தில் 24 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமை அமைப்பு சொல்கிறது.’’ (தீராநதி பிப்ரவரி 2009- பக்.47). ஆனால் ஷோபா சக்தி சொன்ன பொய்யும் அதை அவர் உடன்பாட்டுடன் ஏற்றுக் கொண்டதாக சொல்லுகிற வாக்குமூலமும் இந்த இடத்தில் அவருக்கு மறந்து போய்விட்டது போல.

உண்மையான படைப்பு மனம் கைகூடி வந்திருக்குமானால், மனச்சாட்சி நிமிர்ந்து நின்றிருந்தால் பேரினவாத அரசின் மனித உரிமை மீறல் செயல்பாடுகளை அம்பலப்படுத்துவதை நோக்கி ‘புத்தகம் பேசுது நேர்காணல்’ நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் எந்த நேரத்தில் எந்தச் செயலைச் செய்வது என்ற விவஸ்தை இல்லாமல நேர்காணலை நகர்த்தியிருக்கிறார் அ.மார்க்ஸ்.

2

இன்று வன்னிப் பிரதேசத்தில் இராணுவத் தலைமைக்கும் கட்டுப்படாமல் ஒவ்வொரு சிங்களச் சிப்பாயும் தனதுவிருப்பத்தைத் தானே நிறைவேற்றிக் கொள்ளும் களச் சர்வாதிகாரியாக மாறியிருப்பது போல், தன் தலைமைக்குத் தெரியாமலே தன்னிச்சையான முடிவுகள் எடுத்துச் செயற்படுத்திய கருணா தன்னுடைய செயல்பாடுகளைத் தட்டிக் கேட்ட தலைமையுடன் முரண்படுதலினுடாக ரணில் விக்கிரமிசிங்காவினுடனான நேசத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்.

ராசபக்ஷேயின் கருணையால் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்ட கருணா தனது முதல் உரையில் ‘‘கிழக்கில் முஸ்லீம்களைப் புலிகள் கொன்றார்கள்’’ என்று உரை ஆற்றியபோது ‘‘நீர்தானே கொன்றீர்‘‘ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இ.பி.ஆர்.எல்.எப் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நாடாளுமன்றம் அதிரும்படி கேட்டார். இந்தத் தகவலையெல்லாம் ஷோபா சக்தியும், சிராஜுதீனும் அ.மா.வுக்குத் தரமாட்டார்கள். இது போன்றவர்களைத் தாண்டி இவைகளைத் தேடிப் பெறுகிற எல்லைகளையும் முன் கூட்டிய முடிவுகளால் அவரும் அடைத்து விட்டார்.

வெளிப்படையான நேரடி எதிரியை விட ஒளிந்து நின்று செயல்படும் எதிரி ஆபத்தானவன். ரணில் விக்கிரமிசிங்க அத்தகைய ஒரு எதிரி. இலங்கை அதிபராக இருந்தபோது நார்வேயின் முன் முயற்சியால் அனைத்துலக நாடுகளின் அனுசரனையோடு போர் நிறுத்த ஒப்பந்தம் 2002 சனவரியில் கையெழுத்தானது. குறிப்பிடப்பட்ட எதையும் நிறைவேற்றாமல் எல்லா ஷரத்துக்களையும் இலங்கை மீறியது. முக்கியமானவை மூன்று

  1. இராணுவம் கைப்பற்றி தங்கியுள்ள வீடுகள், பள்ளிகள், மருத்துவ மனைகளைக் காலி செய்ய வேண்டும்.
  2. அகதிகளாக அலையும் ஒரு லட்சத்துக்கு மேலான மக்கள் மீண்டும் தமது வாழ்விடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
  3. பாதுகாப்பு வளையம் என்று பெயரிடப்பட்ட இராணுவ வளையத்தை நீக்க வேண்டும்.
அமைதிப் பேச்சு வார்த்தையின்போது கையெழுத்திட்ட ஒப்பந்த விதிகளில் எதுவொன்றையும் செயல்படுத்தாத ரணில் விக்கிரமசிங்கேயும், அதன் பின் வந்த ராசபக்ஷேயும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தபோது, சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத் தானும் இதனைக் கண்டிக்கவில்லை. அமைதி ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலத்தில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, அமெரிக்கா என்று பலரிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கிக் குவித்துப் படைகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தார் ரணில் விக்கிரமிசிங்கே. கருணாவை வளைத்துப் போட்டார். ‘‘நீங்கள் பெறுகிற வெற்றிகளுக்கெல்லாம் அடித்தளமிட்டவன் நான்’’ என்று வெளிப்படையாக ரணில் உரிமை கொண்டாடுகிறார் என்றால், அவர் அமைதியாய் இருந்து அரங்கேற்றிய இனவெறியன்; ராச பக்ஷே கொக்கரிக்கும் இன வெறியன். தடாலடித் தாண்டவம் நடத்தும் ஜெயலலிதாவை அடையாளம் கண்டு கொள்வதினும் தடவிக்கொடுத்து கழுத்தறுக்கும் கலைஞரை அடையாளம் காணுவதுதானே தமிழகத்துக்கு கடினமாக இருக்கிறது. வஞ்சகனை வீழ்த்துவது முதற்கடமையென முடிவுகொண்டு புலிகள் ரணிலை வீழ்த்தினார்கள். உண்மையின் இந்தப் பக்கத்தை காணாமல் ‘‘ரணில் விக்கிரமிசிங்கேக்கு ஓட்டுப்போடவேண்டாமெனச் சொல்லி ராசபக்ஷே பெற்றி பெற வழிவகுத்தனர் புலிகள்’’ என ஓட்டாண்டித்தனமான வாதத்தை முன்வைக்கிறார் அ.மார்க்ஸ்

‘‘பிற இயக்கங்களை அழித்தது, கருத்துரிமையைப் பறித்தது, கிழக்கு மாகாணத்தவர் எல்லோரையும் அந்நியப்படுத்தியது, ராஜிவ்காந்தி கொலை மூலம் இந்திய அரசை நிரந்தரப் பகையாக்கிக் கொண்டது’’ - புலிகள் மீது அ.மா.பட்டியலிடும் குற்றங்கள் இவை.

இந்தச் சகோதரக் கொலைகள் பற்றி நான் நிறையவே விளக்கியிருக்கிறேன்.

‘‘போராளிக் குழுக்களுக்குள்ளே மோதலையும் சாதலையும் ஏற்படுத்திய இந்தியப் புலனாய்வுத் துறையான ரா (RAW) மாநிலஅரசுகளுக்கும் மத்திய அரசுக்குமிடையில் மோதலை உண்டாக்க முயற்சிகள் செய்கிறது’’ என 1990-ல் சட்டமன்றத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசினார். சட்டமன்றப் பதிவு பொய் பேசாது. அதை ஒருபக்கம் தள்ளிவிட்டு சகோதரக் கொலை என வாயிலும் மாரிலும் அடித்தபடி கலைஞர் புலம்புவதை புரிந்து கொள்ள இயலும். அவர் அரசியல்வாதி. அதே பாணியில் அ.மார்க்ஸ்ம் பேசினால் அவரை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

இந்திய அமைதிப் படையிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிற நிகழ்வு நடந்துகொண்டிருக்கிற போது, இன்னொரு பக்கத்தில் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய இயக்கங்களுக்கு ராணுவம் மூலம் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்வை ‘ரா’ (RAW) நடத்திக் கொண்டிருந்தது. புலிகளின் ஆயுத ஒப்படைப்பு தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டபோது, ‘இ.பி.ஆர்.எல்.எப்’, ‘டெலோ’ போன்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி ரா (RAW) நடத்திய இன்னொரு கூத்து ஒளிபரப்பாகவேயில்லை. சில நாட்கள் கடந்து புலிகளிடமிருந்து பெற்ற ஆயுதங்களையும் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிக் குழுக்களுக்கு ரா வழங்கியது. சுயமான நிலைபாடுடைய புலிகளை அமுக்கி அழித்து விடுவதும், சரணாகதி நிலையுடைய பிற குழுக்களுக்கு ஆதரவு தந்து வளர்த்து விடுவதும் ராவும் இந்திய ராணுவமும் அன்றைக்கு பிரதான பணிகளாக மேற்கொண்டன. இந்திய அமைதிப்படையின் தளபதி கர்னல் உறர்கரசத் சிங் 'இண்டெர்வென்ஷன் இன் சிறிலங்கா' என்ற நூலில் இதை தெளிவுபட எழுதியுள்ளார். இதையெல்லாம் அ.மார்க்ஸ் போன்றவர்கள் படிக்க வேண்டும். இது போன்ற நூல்களை மனச்சாட்சி அறியவே ஒதுக்கி வைத்து விட்டு, மற்றைய செய்திகளையெல்லாம் எடுத்து மடியில் வைத்துக் கொள்கிறார்கள்.

அகமுரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் அனைத்துக் கதவுகளையும் அடைத்தது விடுதலைப் புலிகள் மட்டுமேயல்ல. மற்ற போராளி இயக்கங்களும் தான்.

‘‘போராட்டம் உக்கிரம் அடைந்த ஒருகால கட்டத்திலே, ஒரு பக்கம் போராட்டம் உக்கிரமமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறபோதே இன்னொரு பக்கம் இந்திய அரசுக்கு இந்த இளைஞர்கள் முழுமையாக அடிபணிந்தார்கள். ஒட்டுமொத்த இயக்கங்களின் ஆயுதபலத்தை மட்டுமல்லாமல் அவர்களின் போராட்ட நெறிகளையும் தீர்மானிக்கும் சக்திகளாக ‘ரா’ (RAW) அதிகாரிகளும் இந்திய ராஜதந்திரிகளுமே விளங்கினர். அனைத்துப் பெரிய இயக்கங்களுமே அப்பாவி மக்களைக் கொலைசெய்தனர். எல்லோரும் எல்லோரையும் கொலை செய்தனர். சுகோதர இயக்கங்கள் மீதும் படுகொலை நிகழ்த்தினார்கள்.’’

தீராநதி அக்டோபர் 2008 - ஷோபா சக்தியின் நேர்காணல் ஒப்புதல் வாக்குமூலமே இந்த அகமுரண் கொலைகள் எதனால், யாரால் நிகழ்ந்தன என்பதற்குச் சாட்சி.

எல்லா குழுவும் இந்திய உளவுத்துறையின் கையடக்கமாய் மாறிச் செயல்பட்ட காலத்தில் (1985) விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே இந்திய அதிகாரச் சதிகளுக்கு எதிராக நின்று போராடியது. இன்றைய பொழுதில் விடுதலைப் புலிகள் முன்னணிப் படையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதன் அரசியல் தளத்தினராகவும் ஆகியுள்ளனர்.

ராஜிவ்காந்தி,ஜெயவர்த்தன ஒப்பந்தம் எமது மக்களுக்கு எதிரானது என புலிகள் அதை ஏற்கவில்லை. மற்ற ஆயுதக் குழுக்கள் ஏற்றுக்கொண்டு ராவுடனும் இந்திய ராணுவத்தினுடையவும் கையாட்களாகவும் மாறினார்கள். மற்ற குழுக்களை ஆயுதக் குழுவாக மட்டுமே வைத்திருப்பது இந்திய அரசுக்கு உகந்ததாக இருந்தது.

ராஜிவ் காந்தி கொலை பற்றி அகில இந்திய காங்கிரசார், கலைஞர், சாதாரண மக்கள் போன்றோரின் பொதுப்புத்தியின் தடத்திலேயே அ.மார்க்ஸ்ம் பயணிக்கிறார். நரசிம்மராவைப் பிரதமராக்குவதற்காக அவருடைய நெருங்கிய நண்பரான சந்திராசாமி, விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேறிய ஒரு பிரிவினைரைக் கைவசப்படுத்தி நடத்திய அரசியல்கொலை அது என்பது இப்போது வெளியாகியிருக்கிறது. ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, பின்னர் உச்ச நீதிமன்றம் சென்று விடுதலை பெற்றவர் பெங்களூரு ரங்கநாத். ராஜிவ் கொலையாளிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர். கொலையாளிகள் விடுதலைப் புலிகள் அல்ல,விடுதலைப் புலிகளிடம் பயிற்சி பெற்று பின்னர் பிரிந்தவர்கள் என்பது பற்றி - அவர்கள் சந்திராசாமியிடம் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியது பற்றி - அடைக்கலம் கொடுத்த பெங்களூர் ரங்கநாத் இந்த உண்மைகளைத் சோனியா காந்தியிடம் தெரிவித்தார். சோனியா காந்தி அதை டேப்பில் பதிவு செய்து கொண்டது பற்றி - காங்கிரசின் மூத்த தலைவரே தன் கணவரைக் கொன்றார் என்ற உண்மையை வெளியிட்டால் காங்கிரசுக்குக் கேவலம் என சோனியா அமைதிகாப்பது பற்றி - குமுதம் ரிப்போர்ட்டர் விவரமாக வெளிப்படுத்தியுள்ளது. (குமுதம் ரிப்போர்ட்டர் 25.12.2008)

புலிகளின் எல்லாவிதமான மனித உரிமை மீறல்களையும் வெளிப்படையாகவோ மௌனமாகவோ ஆதரிக்கும் நிலையை புலிகளின் முகவர்கள் மேற்கொண்டனர் என்று பூனைக்குட்டியை எந்தத் தெருவில் எங்கு கொண்டு போய்விட்டாலும், அது சொந்த வீட்டிற்கு வந்து நிற்பது போல் மீண்டும் புலிகள் எதிர்ப்பு என்ற புள்ளியிலேயே வந்து இறங்கி நிற்கிறார் அ.மார்க்ஸ்.

இந்திய விடுதலைப் போராக இருக்கட்டும், ருசியப் புரட்சியாக இருக்கட்டும். எத்தனை குழுக்கள், எத்தனை அணுகுமுறை, எத்தனை உள் அழிப்புகள், ஒழிப்புகள், எதுவுமே வரலாறு தெரியாதவர்கள் போல் வைக்கிற இத்தகைய வாதம் தன்னுடைய ஒரு சார்பு நிலைப்பாட்டை நியாயப்படுத்த இவர்கள் எந்தச் சூழலிலும் எதுக்காகவும் எத்தகைய நிலைக்கும் போவார்கள் என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் கருத்தாக்கங்களை உருவாக்குகிற அறிவு ஜீவிகள் பலரும் ‘சோ’ வின் தரத்தைத் தாண்டியவராக இல்லை என்பதுதான் அறிவுலக அவலம்.

3

1983 கருப்பு ஜுலை என்றழைக்கப்படும் இனப் படுகொலையின்போதும், அதன் பின்னரும், சிந்திய குருதியை நினைவு கூறும் ‘நெடுங்குருதி’ என்னும் நிகழ்வு பாரிஸில் நடந்தது. நெடுங்குருதி நிகழ்வுக்கு முன்னால் அதன் ஏற்பட்டாளரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பெற்றது. இந்த செய்தி கேள்விப்பட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதலளித்திருந்த பலர் அதிலிருந்து விலகிக் கொண்டனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னும் அ.மார்க்ஸ் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். கருத்து முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு துப்பாக்கியும் வன்முறையும் வழியல்ல என்று பேசிவருகிறவர் அ.மார்க்ஸ்

‘‘வன்முறைக்கு எதிராகவும் மனித உரிமைக்காகவும் இந்தியாவில் பேசி வருகிற நீங்கள் எந்தத் தார்மீக அடிப்படையில் நெடுங்குருதி நிகழ்வுக்கு முன்னான ஏற்பாட்டாளரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள்’’ என அ.மார்க்ஸ்க்குத் திறந்த கடிதம் - என்று பாரிஸிலிருந்து அசோக் எழுதிய கடிதத்துக்கு (தீராநதி நவம்பர் 2008) அ.மா. விடமிருந்து இதுவரை பதிலில்லை. பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் என்று தொடர்ந்து எழுதி வருகிறவருக்கு இதற்குப் பதில் பேசும் துணிவு வரவில்லை. ‘‘புலிகளின் எல்லாவித மனித உரிமை மீறல்களையும் வெளிப்படையாகவோ மௌனமாகவோ ஆதரிக்கும் புலிகளின் முகவர்கள்’’ என்று உரத்துப் பேசும் அ. மார்க்ஸ் இந்த துப்பாக்கிச் சூட்டு வன்முறைக்கு பதில் பேசாது தந்திரமாக ஒதுங்கிக் கொள்வது ஏன்? இந்தக் கள்ள மௌனம் எதன் பொருட்டு?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அ. மார்க்ஸ் அளவுக்கு விமரிசித்தவர் எவரும் இல்லை. இன்று ஈழவிடுதலைப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிராய்க் கருத்துத் தெரிவிக்க அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் ஒரு முகவர் தேவையை அ.மார்க்ஸ் பூர்த்தி செய்கிறார். ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிராய் பரப்புரை செய்ய ஒரு ஆள் கிடைத்து விட்டதில் அவர்களுக்கும் பெருமகிழ்ச்சி. முன்னர் ஏன் மார்க்சிஸ்டுகளை விமர்சனம் செய்தார், இப்போது ஏன் மாற்றிக் கொள்கிறார் என்ற கேள்விகளுக்கு இவரிடம் பதில் வராது. ஏனெனில் விவாதங்களை வடிவமைக்கிற அறிவாளிகளுக்கு சுயவிமர்சனம் கைகூடி வருவதில்லை .

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகளும் இந்திய அரசும் பூமிப்பந்தின் எந்த மூலையில் மனித உரிமை மீறல் நிகழ்ந்தாலும் எகிறி, எகிறிக் குரல் கொடுப்பார்கள்; தமக்கருகே ஒரு இனம் கொல்லப்பட்டாலும், தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் செய்கிற பாதகத்தைக் கண்ட பின்னும், முகவாட்டமோ, சிறுமுணகலோ கொள்ளாமல் தம்வழி போவார்கள்.

ஈழத் தமிழிர் கழுவேற்றப்பட்டிருக்கும் வேளையில் அவர்களின் தீராத துயரத்துக்கு தீர்வு காண்பது நம் முதற்பணி. கழுவேற்றும் கரங்களை முறித்து அகற்றுவது அந்தப் பணி. விடுதலைப் போரினை வென்று காட்டுதல் அந்த மக்களுக்கு சுவாசிக்க கொஞ்சம் வெளியைத் தரும் என்ற கடமை செய்ய வேண்டிய நேரத்தில், அக முரண்பாடுகளை அலசி சரி செய்ய முயலுவோம் என வம்படித்துக் கொண்டிருப்பது போகாத ஊருக்கு வழிகாட்டுகிற கதை. ராசபக்ஷேயும், சிங்கள இனவெறியர்களும், கருணா போன்ற கயவாளிகளும் எந்த ஊருக்குப் போகவேண்டுமென்று நினைக்கிறார்களோ, அந்த இடத்துக்கு கைத்துணையாய் அழைத்துப் போக காங்கிரசாரும், இடது கம்யூனிஸ்டுகளும் போதுமே.

பிரான்சில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிவது (டர்பன்) தடை செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சார்கோசி இந்தியா வரும்போது இதுபற்றி அவரிடம் பேசி தடையை நீக்க வேண்டுமென்று சீக்கிய அமைப்புக்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொண்டிருந்தன. சனவரி 25ம் தேதி டெல்லி வந்த சார்கோசியிடம் மன்மோகன் சிங் தலைப்பாகை பிரச்னை குறித்துப் பேசினார். மன்மோகன்சிங் உடல்நிலை குன்றி, மருத்துவ மனையிலிருந்த நேரம் அது. ‘‘சில சூழ்நிலைகள் தவிர (கல்வி நிலையங்கள் போன்றவை) மற்றபடி சீக்கியர்கள் தலைப்பாகை அணியத் தடையில்லை; இருந்தாலும் அதையும் பரிசீலப்பதாக’’ சார்கோசி தெரிவித்தார்.

ஒரு தலைப்பாகைப் பிரச்னை. தலைபோகும் பிரச்னையாக எடுத்துக்கொண்டு, அதுவும் உடல்நலிவுற்ற வேளையிலும் பிரதமர் பேசுகிறார் என்றால் அது தன் இனத்தின் பிரச்னை என்பதாலே பேசினார். ஆனால் ‘கிபீர்’ விமானங்களின் குண்டுமழை வீச்சால் ஆயிரக்கணக்கில் தமிழ்த்தலைகள் ஈழத்தில் சிதறுகிறபோது வாய் திறக்கவேயில்லை. மன்மோகன் என்பவர் இந்தியாவின் அடையாளம். மன்மோகன் சிங்குகள், பிரணாப் முகர்ஜிகள், பிரதமராகவோ அமைச்சர்களாகவோ இருக்கலாம். தமிழர்களுக்காகவா என்ற கேள்வி எழுந்து, தொடர்ந்துகொண்டே செல்கிறது.

தமிழீழ மக்கள் பற்றியோ அவர்கள் விடுதலைபற்றியோ எந்த அக்கறையுமற்று, எந்த நேரத்தில் எந்த விமரிசனத்தை முன்னிறுத்த வேண்டுமென்று காலம் பற்றிய கரிசனையில்லாமல் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிற அ.மார்க்ஸ் என்ற சகல தளச் சிந்தனையாளர் ஒருவரின் வீழ்ச்சியை நாம் சந்திக்க வேண்டிய அவலம் நேர்ந்துள்ளது. 

- பா.செயப்பிரகாசம் (jpirakasam@gmail.com)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி