பா.செயப்பிரகாசம் பற்றி களந்தை பீர் முகம்மது

எங்களின் முன்னெத்தி ஏர்களில் ஒன்று தோழர் பா.செயப்பிரகாசம் அவர்கள். கரிசல் மண்ணின் வாசனையை எழுத்துக்குக் கொண்டுவந்த முன்னோடிகளில் அவரும் கி.ரா.வுக்கு நெருக்கமாக வருகிறார். அவர் தமிழக அரசுத் துறையின் மிக உயரிய பொறுப்பில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருப்பவர். ஆனாலும் எந்த இடத்திலும் எவரும் பா.செ. அவர்களை அரசு அதிகாரியாகக் குறிப்பிடுவதில்லை. அவருக்கான இடமும் செயலும் இலக்கியவுலகம் சார்ந்து மட்டுமே இருந்துவருகின்றன. அந்தப் பெருமையையே அவரும் விரும்புவார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய ஏடாக வந்த ‘தாமரை’ இதழிலிருந்துதான் தமிழ் இலக்கிய உலகத்துக்குள் நான் பிரவேசம் புரிந்தேன். 1970ஆம் ஆண்டில் திருச்செந்தூரில் தோழர்களாயிருந்து இன்று அமரர்களாகிவிட்ட சுடலை, தேவதாஸ் ஆகியோர் அந்த வாய்ப்பைத் தந்தார்கள். அப்போதே எங்கள் மனத்துக்குள் விழுதாக இறங்கிவிட்ட ஆளுமை பா. செயப்பிரகாசம்.

தாமரையில் அவர் கதைகளை வாசிக்கும்போது புதிய தமிழையும் வர்ணனைகளையும் புதிய பாத்திரங்களையும் அறிந்தோம். அப்போதெல்லாம் எந்த எழுத்தாளரையும் பார்த்தது கிடையாது. அந்நிலையில் செயப்பிரகாசம் கதைகளை வாசிக்கும்போது தனிப் பரவசம் உண்டாகும். இன்றைக்குப் பிரபலமாக இருக்கின்ற பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடன் எனக்கும் செயப்பிரகாசம் மீது தனித்த மரியாதையும் அன்பும் உண்டு. நாங்கள் மூவரும் அவ்வழியிலேயே “காலச்சுவடு” வரை வந்துமிருக்கிறோம். எங்களின் இலக்கியவுலக விரிவுக்கு பா. செயப்பிரகாசம் தொடரும் காரணமாக இருப்பவர்.

இப்படியெல்லாம் இருந்தாலும் பா. செயப்பிரகாசம் படைப்புலகம் பற்றி ஆய்வுரீதியாக முன்னுரை எழுதும் நல்வாய்ப்பு எனக்கும் ஒருகாலத்தில் வந்து சேரும் என்று நான் நினைத்திருக்கவில்லை. கலைஞன் பதிப்பகம் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புலகம் குறித்துத் தொடர் வரிசையை வெளியிட்டது. சுந்தர ராமசாமியின் படைப்புலகம் குறித்து ராஜமார்த்தாண்டன் எழுதியிருந்தார். அசோகமித்திரன் படைப்புலகம் பற்றி ஞாநி எழுதிட, அவ்வகையில் பா.செயப்பிரகாசம் படைப்புலகம் குறித்து நான் எழுதினேன்.

ஆனால் அப்போதும் நான் விமர்சன ரீதியாக எதையும் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தேனா என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் வந்த வாய்ப்பைப் பொருந்திக்கொண்டேன். அந்த முன்னுரையை வாசித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் மிகவும் பாராட்டிப் பேசியதாக செயப்பிரகாசம் எனக்குத் தகவல் தந்தார்கள்.

இப்போது தோழர் செ. சண்முக சுந்தரம் தொகுத்து வம்சி பதிப்பகம் வெளியிட்ட ’இலக்கியத்தின் தீராச் சொற்கள்’ என்ற நூலை பா.செயப்பிரகாசம் எனக்கு அன்பளிப்பாக அனுப்பித் தந்துள்ளார்கள். அதில் “என் படைப்புக்கள் பற்றி ஆய்வு தந்த முதல் பேனாவுக்கு,” என்றே குறிப்பிட்டுள்ளார்கள். நான்தான் முதல் ஆய்வு செய்தேனா? பல கல்லூரி மாணவர்கள் தம் ஆய்வுக்காக அவரின் படைப்புகளை ஆய்வுகள் செய்திருக்கக் கூடும். ஆனால் அவற்றை ஆய்வின் வரிசையில் வைக்காமல் என்னுடைய ஆய்வையே முதன்மையாகக் கருதி நூலை அன்பளிப்பாக அனுப்பிவைத்திருக்கும் “தோழர்” பா.செயப்பிரகாசம் அவர்களுக்கு மிக்க அன்பும் நன்றியும்.


- களந்தை பீர் முகம்மது முகநூல் பக்கம் (23 மார்ச் 2018)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்