திசையறிந்த தென்மோடிக் கூத்து

ஈழத்தின் தொன்மையான நிகழ்த்து கலைகளில் சுடர்மிகு இரு விழிகளாகத் திகழ்பவை - தென்மோடிக் கூத்து: பிறிதொன்று வடமோடிக் கூத்து. தென் பாங்கு, வட பாங்கு என்று அடையாளப்படுத்தப் படும் வகைமை அல்லது பாணி, தென் மோடி, வடமோடி என பேச்சு வழக்கில் குறிக்கப்படுவதாக ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் கிராமியக்கலைகள் பயிற்றுவிப்போரை ’வாத்தியார்’ என அழைப்பதுபோல், ஈழத்தில் ‘அண்ணாவியர்’ என கூப்பிடும் சொல்வழக்கு உள்ளது.

பிப்ரவரி 2015-ல் அண்ணாவியர் ச.மிக்கேல்தாஸ், அவரது இளவல் ச.ஜெயராஜா ஆகிய கூத்துக் கலைஞர்கள் கனடாவிலிருந்து தமிழகம் வந்திருந்தார்கள்.

அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ், அண்ணாவியார் ச.ஜெயராஜா போன்றோர் புலம் பெயர் தேசத்தில் ஏன் இந்தக் கூத்துக் கலையை நிகழ்த்துகிறார்கள்? இதை தம் உடல் மொழியில் தமிழ் நாட்டில் ஏன் வந்து நிகழ்த்தினார்கள்?

இசை, நாட்டியம், கூத்து, பாட்டு, நாடகம் என நிகழ்த்து கலை வித்தகர்கள், எழுத்து, கவிதை, இலக்கியம், இதழியல், காட்சியியல், சொற்பொழிவு என அறிவுப்புல விற்பன்னர்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு சென்று தம் திறனை வெளிப்படுத்தி நாடு திரும்புதல் இயல்பு. பறவைகள் கூடடைதல் போல், விலங்கினம் சொந்த வனமடைதல் போல், தத்தம் பூமி திரும்புதல் இயல்பான நடைமுறை. இது உயிரிகளின் தன்னியல்பு. இவ்வாறான உயிரினங்களின் கூடடைதல் பிற நாடுகளில் நிகழ்த்தி விட்டுத் தம் சொந்த நாட்டுக்குத் திரும்பும் முடியும் திரும்பும் ஈழத் தமிழருக்கு இல்லை.

இந்த வழக்கமான நடைமுறையில் ஈழத் தமிழருக்கு இடி விழுந்தது. “இடி விழுந்தான் கூத்தை இருந்து இருந்து பாரு” என்பது தமிழ்ச் சொலவம்.

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து போன எந்த மனிதரும் சொந்த நாடு திரும்பல் எளிதன்று; சுடுகாடு சென்றடைதல் எனப் பொருள். இறந்து போனவரை - சுடுகாடு சென்றுவிட்டவரை தமிழகத்தின் தென்வட்டாரத்தில் ”சொந்த ஊர் போய்ச் சேர்ந்தாச்சு” என்பார்கள். இந்தச் சொந்த ஊர் போய்ச் சேர விரும்பினால், ஈழத் தமிழர் தம் சொந்த நாட்டில் மீண்டும் காலடி வைக்கலாம்.

சின்னஞ்சிறு பிரதேசத்திலிருந்து உலக நாடுகளெங்கம் ஓடிஓடிப் பரிதவித்து எந்த பூமி ஏற்குமோ, எந்த நாடு மறுக்குமோ என தவிதாயப் பட்டு ஒரு இனம் அலைந்தது. ஈழத் தமிழ்மகன் அவன் அடைக்கலம் வேண்டாத நாடு இல்லை.

சிறுபான்மையினத்துக்கு எதிராக எதைச் செய்தாலும் செல்லுபடியாகும்; உலகநாடுகளில் முக்கால்வாசி தனக்குத் தூண்களாய் நிற்கும் என்று கருதும் சிங்கள இனவெறி அரசு, சிங்கள இனத்தின் இணைவுக்குள் ஊடுருவிப் போய் உறவுகளுடனான கலந்தாடல் எதையும் நிகழ்த்திட தமிழனுக்கு இடமில்லை. தமது என சொல்லப்படும் கலை, சடங்கு, திருமணம் எதையும் சொந்தமண்னில் நிகழ்த்திட இயலாது. தன் அன்னையின் கல்லறைக்கு - அதுவும் வெகுகாலம் கழித்துச் சென்ற புலம்பெயர் கவிஞர் வ.ஐ.ஜெயபாலன், சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த சான்று. அவர் ஊர் அறிந்த கவிஞராக இருந்ததால் ஊடகக் குரல்களால் மீட்கப்பட்டார். இன்னொரு நாட்டின் குடிமகன் உரிமையும் அவரிடம் இருந்தது. அதனாலும் அவர் உயிரோடு தப்பித்தார்.

ஈழப்பிரதேசத்தின் வாழ்வியல் நிகழ்வுகள் உறைந்து சாம்பிப் போயின: கோவில், தெய்வங்களை மையமாகக் கொண்டு பண்பாட்டு அசைவு நிகழ்கிறது. புகழ்ந்து பாடுதல், போற்றித் துதித்தல் என்ற புள்ளி கூத்துக் கலையின் வளர்ச்சிப் புள்ளியாக இருந்திருக்கிறது. அவ்வகையில் தம் விருப்புக்குரிய தெய்வங்களைப் போற்றலுக்கு கலை துணையாயிருக்கிறது.

கண்ணகி வழிபாடு தமிழ்நாட்டில் இல்லை; தமிழ் நாட்டில் வழிபாடில்லாத கண்ணகி, ஈழத்தில் அநேக ஊர்களில் தெய்வமாய் நிற்கிறாள். ஈழத்தில் அவள் கண்ணகி அம்மன் இல்லை. கர்ணகி அம்மன். நீதி கேட்டு மதுரை எரித்த கர்ணகி கோபாவேசம் கொண்டவளாய் ஈழதேசம் சென்றடைகிறாள். சினம் ஆற்றி கர்ணகி அருள வேண்டும் என மக்கள் பணிந்து வேண்டி, தமக்குப் பிரியமுள்ளனவெல்லாம் கொண்டு வந்து படைத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் கர்ணகி சினம் ஆற்றிக் குளிர்ந்ததைக் கொண்டாடினார்கள். அதுதான் ”குளுத்தி”. 1980-களின் தொடக்கம்வரை, தமிழர்பிரதேசம் 'குளுத்தி' நிகழ்வை நடத்தி, கர்ணகி அம்மனைக் கொண்டாடியது.

என்ன நடந்தது?

1983-ன் இனப் படுகொலை எல்லாவற்றையும் ’கந்தர்கூளமாக்கியது’.

புங்ககுடு தீவில் ஒன்பதாம் வட்டாரத்திலிருந்த கர்ணகி கோயில் குருக்களின் மனைவி கமலாம்பாள், சிங்கள இராணுவத்தினால் கோயிலில் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கோயிலிலேயே கொல்லப்பட்டார். புங்குடு தீவில் கமலாம்பாள்: மட்டக்கிளப்பில் கோணேஸ்வரி. கோணேஸ்வரி குடும்பப் பெண் தேடுதல் வேட்டை என்னும் பெயரில் வீட்டினுள் நுழைந்த இராணுவக் காடையர் அவரை காட்டுக்குள் இழுத்துச் சென்று, பாலியல் வன்முறையில் சிதைத்து பின்னர் பிறப்புறுப்பில் குண்டு வைத்து வெடித்துத் தீர்த்தனர்.

கோயில் திருவிழாக்கள் நின்றன 'குளுத்தி' நின்றது. நிகழ்த்து கலைகளெதுவும் நிகழ்த்தப்படாமலே போயின.

உள்நாட்டில் குடிபெயர்தலில் ஒரு பழக்கம் உண்டு. உயிரினுக்குச் சமமாய்ப் பாவிக்கும் கடவுளரையும், அவர்களுக்கான கொண்டாட்டங்களையும் குடிபெயர்தலுடன் எடுத்துச் செல்வார்கள். தென் மாவட்டங்களிலிருந்து பிழைப்புத் தேடி சென்னை போன்ற பெரு நகரங்ளுக்குக் குடி பெயர்ந்தவர்கள், குல தெய்வக் கோயிலிலிருந்து கைப்பிடி மண்ணெடுத்து வருவார்கள். குடியேறிய பகுதியில் தெரு முனை, வீதிச் சந்தி, ஒரு மரத்தடி என மண்புதைத்த இடம் கோயிலாகிறது. அவரவர் வாழ்வாதாரம் வருமானத்துக்கு ஏற்ப தெய்வ இருப்பிடம் உருவாக்குகிறார்கள். தம் வட்டாரக் கலைஞர்களை அழைத்து வந்து, குல தெய்வத்தை வணங்கிப் பாட்டும், இசையும், கூத்தும் நிகழ்த்திக் கொள்கிறார்கள்.
நாட்டுக்குள் எனில் குடிபெயர்தல்: நாடு தாண்டினால் புலம் பெயர்தல்.

புலம் பெயர் மக்கள் தங்களுடனான கலைஆக்கத்தை, கலைப் பிரதிகளை, அவற்றை நிகழ்த்தும் விற்பன்னத்தையும் தம்முடன் கொண்டு செல்கிறார்கள். புலம் பெயர் பூமியில் பதியமிட்டுப் புதுப்பித்துக் கொள்கிறார்கள். எங்கெங்கு இன உறவு உள்ளதோ, அவர்களுடனான தொடர்பாடலை இந்தக் கலை சாத்தியப்படுத்துகிறது.

எந்த நாட்டை தங்களுக்கு உரித்தானது என்று கருதியிருந்தனரோ, அந்த நாட்டின் விரட்டியடிப்பு, புலம் பெயர் இளையோரிடம், குறிப்பாகக் கலை இளையோரிடம் ஆழ்மனக் காயமாய் வாழுகிறது. பூர்வீகத்தின் தொடரும் வெக்கையை ஓவியம், எழுத்து, இசை, கூத்து, நாடகம் எனப் பலவகை வெளிப்பாட்டிலும் கொட்டுகிறார்கள். வெக்கையை காத்து வளர்க்கிறார்கள். என்றாவது ஒரு நாள் சொந்த பூமி என்ற தகுதியை அடையும் நாளில், தம் மண்ணில் அவர்கள் காலடி எடுத்து வைக்கிறபோது இந்த வெம்மை மட்டுப்படும்.

குளிர்காலத்தில் கரையான் புற்றெடுக்கும்: புற்று என்ற கட்டுமானத்துக்கு ஈரப்பதம் மூலப்பொருள். குளிர் காலத்தில் புற்றெடுத்த கரையான்கள் கோடையில் புற்று சூடாகையில் நிலத்தடி நீரோட்டம் வரைபோய் உறிஞ்சி நீரை மேலெடுத்து வந்து உமிழ்ந்து புற்றைக் குளுமையாக்கிக் கொள்கின்றன. தாயகத்தின் தகிக்கும் வெக்கையிலிருந்து மீள, தாம் சேகரித்துக் குவித்து வைத்த கலை அனுபவங்களில் வேர்கொண்டு உறிஞ்சி படைப்புக்களாய் உமிழ்ந்து குளிர்மையை மீட்டெடுத்துக் கொள்கிறார்கள் இக்கலைஞர்கள். தம் வலியை, தம் மக்களின் வலியைப் பேசுகிற கலையை மண்ணின் அடையாளத்தோடு புலம் பெயர் பூமியில் கட்டமைத்துக் கொள்ளல் - நெஞ்சார்ந்த நிறைவை அவர்களுக்கு அருள்கிறது.

தென்மோடிக் கூத்தில் வல்லமை பெற்றவர்களாக உருப்பெற்ற ச.மிக்கேல்தாஸ் கனடா என்ற புலத்தில் நுழைந்தாலும், ச.ஜெயராஜா நார்வேக்குப் பெயர்ந்தாலும், தம்முடன் காவிச் சென்ற கலையால் உயிர்ப்புடன் நகர்ந்து கொள்ளக் கற்றார்கள்.

1980-களில், 1990-களில் புலத்தில் அடைக்கலமான முதல் தலைமுறை தமது பாரம்பரிய அடையாளத்தைக் கண்டுகொண்டதில் மகிழ்வு கொண்டது போலவே, அதற்குப் பின்னான இளைய தலைமுறையும் அதிலிருந்து புத்துணர்ச்சி கொள்கிறது. அவரவர் வசிக்கும் நாட்டினது மொழி பேசினாலும், பண்பாட்டில் வெகு தொலைவு நடந்த பின்னாலும் இளைய தலைமுறை மீள்வருகை கொண்டு தனது பாரம்பரியக் கலையை, அதனை அறிமுகப்படுத்தியவர்களை அரவணைக்கிறது.

பூர்விகக் கூத்துக்களின் புலம்பெயர் அரங்காற்றுகை பல சிறப்புக்களை தனக்குள் கொண்டுள்ளது. இதில் அரங்காற்றுகிற அத்தனை கலைஞர்களும் மேலைத் தேயங்களில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறையினராகும். பூர்வீகத்தில் எனில், அல்லது தமிழ்நாட்டிலெனில், இதில் பங்கேற்கும் கலைஞர்களை ஓரிடத்தில், ஒரு வட்டாரத்தில் கண்டடைய இயலும். வேறு வேறு நாடுகளில் வாழ்கிற புதிய இளங்கலைஞர்களை நார்வேயில் ஒன்றிணைக்கிறார் அண்ணாவியார் ச.ஜெயராஜா. நார்வேயில் வாழுகிற ஜெயராஜா அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸின் இளவல். நல்லதோர் நடிகர்: கூத்தின் தகைமை அறிந்தவர், பயிற்சியாளர், நெறியாளர் எனப் பன்முக ஆற்றல் கைக்கொண்டவர். இளங்கலைஞர்களை இயக்கி, வசக்கி வழிப்படுத்துகிறார்.

“மேலைத்தேயங்களில் பிறந்து வளர்ந்த இளந்தலைமுறையினர் தமிழில் பேசுவதென்பது ஆச்சரியம். அதிலும் பாடுவது - அதைவிட ஆச்சரியம். இத்தனை தடைகளும் தாண்டி, தமிழரின் தொன்மைக் கலையான கூத்துக்கலையை சுருதி சுத்தமாகவும், அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்புடனும் இவர்கள் அரங்காடுதல் வியத்தகு சிறப்பு.”

தமிழரின் ஆதி இசைக் கருவியான 'தப்பு' இசைக் கருவியை வாத்தியங்களில் ஒன்றாக இணைத்தது வரலாற்றுப் பெருமை. இந்த வாசகத்தினுள் பொதிந்த அர்த்தத்தை மெய்மைப்படுத்தும் வகையில் 21.02.2015 அன்று சென்னையில், ச.மிக்கேல்தாஸ் எழுத்து ஆக்கம் செய்த “மாவீரன் பண்டார வன்னியன் கண்ணகி” - தென் மோடிக்கூத்து நூல் வெளியீடு பறை இசையுடன் தொடங்கிற்று. திருப்பத்தூர் ’மாற்று நாடக இயக்கத்தின்’ மாணவர்கள் அரைமணிக்கும் மேலாய் வெளுத்து வாங்கி அரங்கை 'கிண்'ணென்று நிறுத்தினார்கள்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை தென்மோடிக் கூத்துக்களே அதிகமாகவும் பிரதானமாயும் திகழ்ந்தன. தென்மோடிக் கூத்தின் பீஷ்மராக - தனித்துவம் மிக்க கம்பீரக் கலைஞராக - உச்சநிலைக் குரல்வளம் கொண்ட பாடகராக - கவியாற்றல் செறிந்த அண்ணாவியாராகத் திகழ்ந்தவர் அமரர் அண்ணாவி, கலைக்குரிசில் நீ.வ.அந்தோனி அவர்கள். அவர் 1928-களில் யாழ் தீவகத்தில் உதிரிகளாகச் சிதறியிருந்த கலைஞர்களை ஒருங்கிணைத்து தென்மோடிக் கூத்துக்களை அரங்காற்றி வந்தார். பல புதிய பிரதிகளின் ஏடுகளை உருவாக்கியது மட்டுமல்லாது, புராண இதிகாசக் கதைகளிலிருந்தும், கத்தோலிக்கக் கதைகளிலிருந்தும் கூத்துப் பிரதிகளை, சமூகக் கதைக் கருக்களைப் பாடுபொருளாக பரிணாமப்படுத்தினார்.
அண்ணாவி கலைக்குரிசில் நீ.வ.அந்தோணி அவர்களது அரங்காற்றுகைகளின் பின்னர் அவரது மகன் அண்ணாவி சவரிமுத்து. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்நாட்டுக் கூத்தினுக்கு செழுமைசேர்த்து வாழுகிறார். வியத்தகு தோண்டாற்றிவரும் சவரிமுத்து நார்வே சென்றிருந்த வேளை 07-01-2006-ல் ”நார்வே ஈழத்தமிழர் சங்கம்” ‘கலைவருணன்’ என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.

தந்தைக்கு நார்வே வழங்கிய விருது போலவே, அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ் அவர்களது தமிழ் மரபுக் கூத்துக்கலையின் நாற்றங்கால்களை உருவாக்கி வளர்க்கும் கலைச்சேவையைப் பாராட்டிக் ”கூத்துக்கலைச்செம்மல் விருது” புதுவைப் பல்கலைக்கழக நாடகப்பள்ளி (school of performing arts) வழங்கியது. வாழும்காலத்திலேயே கலைஞர்கள் கனம் பண்ணுதலுக்கும் கௌரவித்தலுக்கும் உரியவர்கள் என்பதை உணர்ந்து விருது வழங்லை நிகழ்த்திய புதுச்சேரி பல்கலைக் கழக நிகழ்த்துகலைத் துறைத் தலைவர், பேரா.முனைவர் கே.ஏ.குணசேகரன் நம் நெஞ்சார்ந்த நன்றிக்குரியவர்.


”மாவீரன் பண்டார வன்னியன் - கண்ணகி“ நாட்டுக் கூத்து நூல் வெளியீடு, ஆயுட் கால ஊழியமாக கூத்துப் பணியை ஏற்று, தம்மை கலைப் பணியில் அர்ப்பணித்துள்ள அண்ணாவியார்களை தமிழ்ப் பாரம்பரியக் கலைகள் உலகம் நினைவு கூறுகிற விதமாக சென்னையில் அமைந்தது. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமையில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூல் வெளியீடு செய்ய, கவிஞர் இன்குலாப், 37 ஆண்டுகளாக நிஜநாடக இயக்கத்தை நடாத்தி வரும் பேரா.மு.ராமசாமி, நாடகச் செயற்பாட்டாளர் பேரா.அ.மங்கை, திரைக் கலைஞர் இயக்குநர் ரோகிணி, மாற்று நாடக இயக்கத்தின் பேரா.கி.பார்த்திபராசா ஆகிய நாடக ஆளுமைகள் பங்கேற்பு – என இவர்களது மேடைப் பிரசன்னமே இந்தக் கூத்துக் கலைஞர்களுக்கான அங்கீகாரமாய் அமைந்தது.பிழைக்கச் சென்ற இடத்திலும் தனது பூர்வீகக் கிராமமான மெலிஞ்சிமுனைக் கிராமத்தின் புலம் பெயர் கூத்துக் கலைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் இயங்கு சக்தியாக பரிணமிக்கும் வகையில் செயற்படும் “மெலிஞ்சிமுனைக் கலைக்குரிசில் கலாமன்றம் சர்வதேசக் கிளை”யின் தலைவராக கனடா வாழ் ச.மிக்கேல்தாஸ் பணியாற்றி வருகின்றார்.

ஈழத்தில் வாழ்ந்துவரும் சவரிமுத்து தனது 91 வயதில் நிற்கிறபோதும், அந்தக் கலைப்பணி தள்ளாட்டம் கொள்ளாது நான்காம் தலைமுறையினால் உயிர்ப்புடன் முன்னெடுக்கப் படுகிறது. இந்த நான்காம் தலைமுறை தற்போது ஈழதேசத்தில் இல்லை. கனடா, பிரான்ஸ், நார்வே எனப் புலம்பெயர்ந்து வாழ்கிற இந்த நான்காம் தலைமுறை இக்கலைப் பணியைத் தன் தோள்மேல் போட்டுக் கொண்டு பாரம்பரியத்தின் வேருக்கு நீர்வார்த்து வருகிறது.

2

முற்றிலும் அறிவியல் யுகத்தில் நீராடிக் கரையேறியிருக்கும் இக்கலைஞர்கள் சமகாலத்துக்கு தேவையற்ற குப்பைகளை ஒதுக்கி - சமகால மானுடகுலத்தின் புதிய நியதிகளை பதிவு செய்ய எண்ணினார்கள். கலைகளின் ஊழியம் அது. புத்தம் ஒளியைக் காவ நினைக்கிறான் ஈழத்தமிழன் என்பதை ச.மிக்கேல்தாஸின் பனுவல் ஆக்கத் தலைப்புகள் காட்டுகின்றன. வரலாற்றுக் காவியங்களிலிருந்து சமகாலத்துக்குப் பொருந்தும் கூறுகளை எடுத்து முன்னகர்த்தி பனுவல் உருவாக்கம் செய்யப்பட்ட கண்ணகி, மாவீரன் பண்டார வன்னியன், எதிரேறு எல்லாளன் என்னும் தலைப்புக்கள் சாட்சியாய் நிற்கின்றன.

அதி நவீன கலை வடிவங்ககள் மேலோங்கி வெள்ளமென வருகிற இவ் வேளையிலும் தமிழினத்தின் மிக உன்னதமான ஆதிக்கூத்துக்கலை இன்னும் வேர் பிடித்து நிற்கக் காரணம், சமகால மானுடம் வேண்டுகிற புத்தொளிக் கருத்தைக் கொள் முதலாக்கியிருப்பது தான். நிகழ்கால தமிழ்ச் சமுதாயத்தினது எண்ண அலைவினை, பண்பாட்டுப் போக்கினை ’சிறுமை’, ”வீர சுதந்திரம்“, ”சுதந்திரமும் முரண்பாடுகளும்” - என்னும் புத்தாக்கங்கள் பதிவு செய்துள்ளன. அண்ணாவி ச.மிக்கேல்தாஸ் அவர்களிடமிருந்து சமூகமாற்றத்திற்குப் பயனுள்ள இன்னும் பல கூத்துப் பிரதிகளை எதிர்பார்க்க இயலும். எதிர்பார்ப்பினை ஈடு செய்யும் வகையில் அவரால் பல பிரதிகளைக் கையளிக்க முடியும்.

'எட்டுக் குத்து இளையவளான' வீதி நாடகம் போல் மரபுக் கூத்து நிகழ முடிவதில்லை. பழங்கால அரசியை அல்லது மனிதனை வீதிநாடகம் ஒரு குறியீட்டால் காட்சிப்படுத்திவிடும். மரபுக் கூத்து அவ்வாறு இல்லாமல் உடை, அணி, ஒப்பனை, மொழி என அத்தனையும் கொண்டு ஆக்கப்படுகிறது. மதுரை நகர் நடுவாக எழும்பியிருக்கும் மீனாட்சி கோயில் ஒரு குறிப்பிட்ட கால பாண்டிய மன்னனால் எழுப்பட்டதல்ல. பாண்டியப் பேரரசர்கள் முதல் மன்னர் திருமலை வரை காலகாலங்களினூடாக நிர்மாணத்துக்குக் கையளித்தார்கள். மரபுக் கூத்து மதுரை மீனாட்சி கோயில் போல; கால காலத்துக்குமாய் அதன் வடிவம், உடை, ஒப்பனை ஒவ்வொன்றாய் அடுக்கப்பட்டு இன்றைய கூத்து எழும்பி நிற்கிறது. ஆனால் “வீர சுதந்திரம்” போன்ற தென் மோடிக் கூத்துக்களில் மரபான உடை, ஆடை, அணிகலன் நீக்கப்பட்டு போராளி உடுப்புகளில் நிகழ்த்தப்பட முடியும் என்பதனைக் கைக்கொண்டார்கள். படைப்புக் கலைஞனாய் மிக்கேல்தாஸூம், நெறியாளுகைக் கலைஞரான ஜெயராஜாவும் வேறுவேறு நாடுகளில் வசித்தாலும் தமக்குள் ஒரு இணைப்பை உருவாக்கிக் கொண்டு செலுத்த முடிவது அசாத்தியமான செயல்பாடு.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்