சீமை மரம்

1970, 80-களில் கரிசல் சீமையில் குறவன் – குறத்தியாட்டக் கலைஞர் கடற்கரைக்கு நல்ல கிராக்கி. ஊர் ஊருக்கு ‘கடற்கரை கலைக்குழு’ மேலே விழுந்தார்கள்.

கலைக்குழு பிள்ளையார் நத்தம் வந்திருக்கிறது. நிகழ்ச்சியில் ஊர்க்காரப் பெரிசுகளை மரியாதை செய்ய நாலு வார்த்தை சொல்வார் கடற்கரை. இந்த நாலு வார்த்தையை – போகிற ஊருக்கெல்லாம் கொண்டு போய்க்கொண்டிருப்பார். ஆனால் ஊரூருக்கு வேறவேற சொல்வார்.

“முதலாளிமாருக கோபம் நமக்கெதுக்கு? நம்மள அதுக்கா நேந்துவிட்டிருக்கு”:
ஆட்டம் தொடங்கும். “இந்த ஊர்லேருந்து முக்கியமான ரெண்டு பெரிய ஆட்க தேடி வந்திருக்காகளாம்” பிள்ளையார் சுழி போடுவார்.

“ஆட்டதைப் பாக்க வந்திருக்காகன்னு சொல்லு. ஏன் என்ன விசேஷம்?”

“அதாகப்பட்டது, மேலேழு கீழேழு, கடலேழு காடேழு – என்று சொல்லப்பட்ட ஈரேழு லோகத்தில் எங்க போய்த் தேடினாலும் பாக்கமுடியாத ஒரு பூங்காவனம். அல்லிப்பூ, அரளிப்பூ, பிச்சிப்பூ, முல்லைப்பூ,மல்லிப்பூ, கனகாம்பரம், அனிச்சம்பூ, செவ்வந்திப்பூ, தாமரைப்பூ, ரோசாப்பூ – இப்பேர்ப்பட்ட பூங்காவனமுள்ள பிள்ளையார் நத்தத்திலே…”

“நிறுத்து, நிறுத்தடா, அடே, சோதாப் பயலே, இந்த வேலிக் கருவைப் பூவை விட்டுட்டயே?”
- இடைவெட்டுப் போடுகிறார் மிருதங்கம். பக்க வாத்தியம் நல்ல எகடாசி. பாதிக் கதையை அவர் நடத்திப் போவார்.

“யாரப்பா அது? வேலிக்கருவைப் பூவைப் போயி சேக்கச் சொல்றியே?” கோபமாய் கை ஓங்குகிறார் கடற்கரை. “என் வாயில நல்லா வருது”

“மத்தவங்களுக்கெல்லாம் தோல் வாயி, ஒனக்கு ரப்பர் வாயா’ டா?”

ரப்பர் இழுக்க இழுக்க நீளும்.

“ஆமா, இவருக்குப் பலாப்பெட்டி வாயி. சோத்தைக் கண்டாப் போதும். பலாப்பெட்டி மாதிரி வாய் திறக்கும்” இது கடற்கரை.

“அடே, சீமைக்கருவேலம்னு எவ்வளவு லேசா சொல்லிட்டே! சரியான பையன்டா நீ. அது இன்னைக்கு எத்தனை சம்சாரிய ஊரைவிட்டு ஓட்டிக் கிட்டிருக்கு தெரியுமாடா?”

ஓட்டிக்கொண்டிருக்கிறது என்று நடப்பைச் சித்தரிக்கிறார் பக்க வாத்தியம்.

“ஓட்டிக் கிட்டிருக்கா? அம்மணத்தைக் கண்டோம் (நம்ம என்னத்தைக் கண்டோம் என்பதன் மரூஊ). வித்து நல்லா ஊனிருப்பான் போல”.

சீமைத்துரை என்ற பெயர்கொண்ட ஆட்கள் கிராமத்தில் முன்பு உண்டு.இப்போது நவீனநவீனமாய்ப் பெயர் சூட்ட ஆரம்பித்துவிட்டார்கள். சீமையிலிருந்து வந்து இறங்கின துரை என்று பொருள். சீமையிலிருந்து வந்தவன் வெள்ளைக்காரன். மதிப்பாய்த் தெரியட்டுமே என்று அந்தப் பெயர் வைத்திருக்கலாம்.

விறகு அடுப்பிலிருந்து மண்ணெண்ணை அடுப்பு எரிந்தபோது, அதை ’சீமைத் தண்ணி’ என்றார்கள். சீமை என்று சுட்டப்படும் அயல்நாடுகளில் முதலில் அந்த எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

”ஆமா, அவரு சண்டாக்கிருவாரு, பொல்லாத சிமையிலேருந்து குதிச்சவரு” என்று இள்க்கரமாய்ப் பேசுவது, வட்டாரங்களில் சகஜம்.
சீமைக்கருவேலம் தான் வேலிக்கருவை என்று பெயர்கொண்டு விட்டது.


1870-ல், பிரேசிலிலுருந்து வித்து கொண்டுவரப்பட்டது. 1875, 1940, 1978- போன்ற ஆண்டுகளில் ‘வேலிக்கு நல்லது’ என்று இறக்குமதி செய்தார்கள். அது பயிரைக் காக்கும் என்று வேலியாய் இட்டார்கள்.மாறாக பயிர்களின் உயிர்களையே எடுக்கும் உயிர்கொல்லி எனப் பின்னாளில்தான் தெரிந்தது.அதன் பூர்விகம் கண்டடைய முடியாத சிலர் தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, காரிபியன் தீவுகள் என்று பல நோக்கமாய்ச் சொல்கிறார்கள். புளிப்பு, உவர்ப்பு, உரைப்பு என்ற அடிப்படையான சுவைகளுள்ள தக்காளி, புளி, மிளகாய் - இதெல்லாம் சீமையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வித்துக்கள்தாம்: இந்த ‘வந்தேறிகள்’ தமிழர் வாழ்வியலோடு ஒன்றிணைந்து விட்டார்கள். அப்படியும் திரு.வி.க. என்ற தமிழறிஞர், புளி, மிளகாய் போன்றவைகளை புறக்கணிக்குமாறு முழங்கினார். இந்த சக்களத்திகள் உள் நுழைந்து மிளகு, துளசி, புளிச்சக்கீரை போன்ற தமிழர் சுவையின் உன்னதமான இல்லத்தரசிகளை சின்னாபின்னமாக்கி விட்டார்கள் என்பது உண்மை.

‘எட்டுக் குத்துக்கு இளையவனான சீமைக் கருவேலம்’ செடி தலையெடுத்து எல்லாத்தையும் தவிடுபொடியாக்கி விட்டது. விவசாயத்தின் இடுப்பொடித்த “இதைக் கட்டி மேய்க்க முடியாது” என்று சம்சாரிகள் ஊரைக் காலிசெய்து வெளியேறினார்கள். இந்தச் சீமைக் கருவேலத்துக்குத் தான் குறவன் - குறத்தியாட்டக் கலைஞர்கள், ’நல்ல கொடுப்புக் கொடுத்தார்கள்’. காலம் அறிந்து, நிலமை தெரிந்து கொடுத்த கொடுப்பு அது.

பி.எல்.480 என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து கப்பல் கப்பலாய் கோதுமையைக் கொட்டினார்கள். உதவி என்ற பெயரில் ஏமாற்றுக்காரர்களிடமிருந்து வந்தால் அதில் உபத்திரவம் சமமாக இருக்கும்: கோதுமையில் வந்தது ‘பார்த்தீனியம்’ என்ற விஷவித்து. பார்த்தீனியம் படராத புஞ்சை கிடையாது. நஞ்சையும் இல்லை. கொத்தமல்லிச் செடியுடன், கீரைச் செடியுடன், ஒட்டிப் பிறந்த பிறவியாய் ஊட்டாடிக் கொண்டிருக்கும் பார்த்தீனியம்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இறக்குமதியானது இது மட்டுமல்ல: வந்தது ‘ஜிலேபிக் கெண்டை’ என்ற மீன். அமோக விளைச்சல் என்ற பாவலாகக் காட்டி குளத்து நீரிலும், நீர்நிலைகளிலும் மீன் குஞ்சுகளை நீந்தவிட்டது பற்றி பாலிய வயதில் நான் வாசித்திருக்கிறேன். இன்று மண்ணின் மீனினத்தை ஜிலேபிக் கெண்டை காலி செய்திருக்கிறது.

விவசாயிகளை மென்று துப்பும் கருவேலத்துக்கு, பிரிட்டீஷார் ஆட்சியைக் காட்டிலும் காங்கிரஸார் ஆட்சியில் தீவிரமாய் பரப்பு வேலை நடை பெற்றது என்கிறார் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். அவர் கரிசல் சம்சாரியாய் இருந்தவர். ”ஊர் ஊருக்கு, வீட்டு வீட்டுக்குப் போய் விதைகளைக் கொடுத்து, உற்சாகப்படுத்தினார்கள். ஆடு கடிக்காது; மாடு மேயாது, வேலியாகப் போட்டு வளர்த்தால் வேண்டுமட்டும் மகசூல் காணலாம் ” என்றார்கள். பத்தே ஆண்டுகளில் நிலத்தை, நீரை, பயிரை, செடிகொடியைக் காவுகொண்ட ‘விவசாயக் கொலை’ பற்றி பழையவைகளை அசைபோட்டார் கி.ரா.

ஈழத் தமிழனைச் சுற்றி வளைத்து ஆக்கிரமித்துள்ள இலங்கை ராணுவம் போல், இங்குள்ள பச்சைப்பயிர்களை ஆக்கிரமித்தது இந்த தாவர ராணுவம். ஓடை, கிணறு, நீராவி, குளம், பாசனக் கண்மாய், ஆறு - நீர்நிலைகள்: ஒற்றையடிப்பாதை, மாட்டு வண்டிப் பாதை, கப்பிச் சாலை, தார்ச்சாலை - எதுவும் மிஞ்சவில்லை. நட்டு, நீர் வார்த்து பாதுகாக்க வேண்டியதில்லை. தானே விழுந்து தானே ஊன்றிக் கொள்ளும். எல்லாத் தீனியையும் தான் ஒரு ஆளாய்த் தின்று பச்சைப்பசேல் என்று கொளுத்துக் கிடக்கும். ஆகாயமார்க்கத்தில் தென்மாவட்டங்கள் மேல் தாழப் பறந்த வெளிநாட்டுக்காரர்கள் சொன்னார்களாம்.

“ஏ, யப்பா, எம்புட்டு செழிம்பா இருக்கு பூமி.”

செடி உயரத்தைவிட வேர் நாலு மடங்கு கீழே ஓடியிருக்கும். எந்தத் தாவரத்தையும் முளைக்க விடாது; முளைத்ததை வாழ விடாது. பக்கத்திலிருக்கும் பயிர், செடி, கொடி. மரங்கள் எல்லா உணவையும் சப்பி எடுத்துவிடும்; வெட்டவெட்டத் துளிர்க்கும்; விதையின் நாக்குக்கு துளிஈரம் தட்டுப்படும்வரை மண்ணுக்குள் செம்மிச் சாகாமல் கிடக்கும்: தூர் மூட்டோடு வெட்டிக் கூறுபோட்டு, தீயிட்டு சாம்பல் ஆத்தினாலன்றி சாகாது. வாழுதல் மட்டுமே உண்டு இந்த தாவர மார்க்கண்டேயனுக்கு: சாவு இல்லை.

சீரைக்கருவேல மரத்தின் கீழ் உட்கார்ந்து,லேசாய் உடலைக் கிடத்தி, கொஞ்சம் தூங்கிப் பாருங்கள். வற, வற என்று தோல் உணர்ந்துபோவதைக் காண்பீர்கள். நில ஈரப்பதம் மட்டுமல்ல, ஆகாய ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்துவிடும்.

தாவரங்கள் பிராணவாயுவை வெளியிடுகின்றன. வேலிக்கருவை பிராண வாயுவைக் குடித்து, கெட்டவாயுவான கரியமிலவாயுவைத் துப்பும் துருத்திகள். அத்தனை கேடுகளையும் செய்து கொண்டிருக்கிற இந்த ஆள் இன்னும் ரட்டிணக்கால் போட்டு யாருடைய அனுமதியோடு உட்காரந்திருக்கிறான்? விவசாயியைத் தானே சாகடிக்கிறது என்று லேசாய் சொல்லிவிடலாம். வேளாண்மை சாகிற போது சகலமும் இல்லாமல் போகும். ”சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்று ஒருவன் முன்னத்தி ஏர் பிடித்துப் போனானே, மறக்கக் கூடுமா?

வெள்ளாமை பிழைத்தால் பஞ்சம் பிழைக்கப் போவார்கள். பிழைக்கப்போய்விட்டு, “ஒங்க ஊர்ல மழை சக்கைப் போடு போட்டிருக்காம்”னு தாக்கல் கிடைத்ததும் விவசாயம் பார்க்க திரும்பி வருவார்கள். வேலிக்கருவையின் ஆட்சி வந்த பிறகு குடிபெயர்வு மட்டும் உண்டு. திரும்பி வருதல் இல்லை;
“தாயோட பிள்ளை தலைகூடாமச் செய்திட்டானே” என்ற சொலவம், வேலிக்கருவைக்கு பொருத்தமான ஒன்று. தாய்மண்ணிலிருந்து பிரிக்கப்பட்ட பிள்ளைகள், மீண்டும் நிலமாட வருவதில்லை.

மஞ்சள் பட்டுக் குஞ்சம் வைத்துப் பின்னிய சாட்டைகள் அன்றிருந்தன. வில்வண்டி, கூட்டுவண்டி, ரேக்ளா – என்று சொகுசு வண்டிகள் இருந்த காலம். பட்டுக்குஞ்ச சாட்டையை “ஓடைக் கரையில் சிரிக்கும் கருவேலம் பூக்கள் போல், சாட்டையில் சுழலும் குஞ்சங்கள்” என்று சிறுகதையில் எழுதியதுண்டு; மஞ்சள்பூ ஆடும் கருவமரங்களை, தட்டுத் தட்டாய் அடுக்கிய ஒடை மரங்களை சீமைக்கருவேலம் காலி செய்துவிட்டது.

ஆடுகளுக்கு கருவநெற்று, ஒடைநெற்று இவைதாம் தீனி; முறுக்கு சாப்பிடுவது போல சாப்பிடும் ஆடுகள் கூட்டம். கருவமரக் காய்களை, ஒடங்காய்களை கோடையில் உணர்த்தி, மழைக்காலத்துக்கு ‘குதிர்போட்டு’ சேகரித்து வைத்திருப்பார்கள். மழைக் காலத்தில் ஆடு பத்த முடியாமல், கிடை போடத் தோதில்லாமல் ’கட்டுக் கிடையாய்’ அமர்த்தியிருக்கும் ஆடுகளுக்கு பிரியமான தீவனம் அந்தக் காய்கள்.

வீட்டு முற்றத்தில் சீமைக்கருவேலங் காய்கள் பரப்பிவைத்திருப்பது தெரிந்தது. “என்ன, செய்யப் போகிறீர் இதை?” பாட்டையாவிடம் கேட்டேன்.

“ஆட்டுக்குத் தாம்” என்றார் பாட்டையா.

“ஆடு சாப்பிடுமா, இதை?”

“நாற்பதாம் வருசத்து ஆளா இருக்கீரே. ஆடு சாப்பிடும்மாவா? சவ்வுத்தாளு, பசைதடவுன பேப்பர்னு சாப்பிடுதே பசு, இதுவரை பார்த்ததுண்டுமா?”

“பாத்திருக்கேன்”

“இப்ப பாரும்”

ஒற்றை வாக்கியத்தில் தீர்ப்புச் சொன்னார் பாட்டையா.

அவர் கைகாட்டிய இடத்தில் ஆடுகள் வேலிக் கருவேலங் காய்களை கடித்து அதக்கிக் கொண்டிருந்தன. ஜீரணம் ஆகாத விதைகள் ஆட்டுக் கழிசலில் நன்கு புறட்டல் பட்டு நிலத்தில் விழும்: முன்னைக் காலத்தில் பருத்தி விதைப்பதற்கு முதல்நாள் ராப்பொழுதில் சாணிப்பாலில் பருத்திவிதைகளைப் புரட்டி உலற வைத்தார்கள். ’காம்பிப் போகாமல்’ அருமாந்தப் பிள்ளையாய் வளர இந்த சாணிப்பால் உரம்.

ஆட்டுக் கழிசல் புரட்டி வரும் இந்த விதை வீரியம் கொள்ளக் கேட்கவேண்டுமா?

காய்கள் நீர்ச்சத்தைக் குறைக்கும் தன்மையுடையவை (Dehydrajon): சீமைக் கருவேலங்காய்களைத் தின்ற விலங்குகள் உடனே தண்ணீர் குடிக்க வேண்டும். கிருஷ்ணகிரி வனக் கோட்டத்தில் பார்வை போகிற திக்கு எங்கும் குடிக்கத் தண்ணீர் இல்லை. சீமைக் கருவைக் காய்களைச் சாப்பிட்ட யானைகள் சேற்று நீரைக் குடித்து கழிசல் கண்டு செத்துக் கிடந்தன. அரசின் வனச் சரகம், பல கனிமரங்களும் மூலிகைச் செடிகொடிகளும் அடர்ந்து நின்று வெகு காலமாகிவிட்டது. சீமைக் கருவேல மரங்கள் கூத்தடிக்கின்றன.

வியாபாரப் பெருமகன்களுக்கு வேலிக்கருவை ஒரு பணப்பயிர். சீமைக்கருவல் விறகு மூட்டம் பத்து ஏக்கருக்கு ஒரு இடத்தில் போடுகிறார்கள். இருபது கி.மீ தொலைவுப் பயணத்தில் குறைந்தது பத்து இடங்களில் ‘கரிமூட்டம்’ போடுவதைக் காணமுடிந்தது. விவசாயம் செய்ய வக்கற்று குடிபெயர்ந்தோரின் காடுகளை எடுத்து வேலிக்கருவை வெட்டி மூட்டம் போட்டு ‘கரி’ தயார் செய்கிறார்கள். ஆந்திரா போன்ற மாநிலங்களில் ‘கும்முட்டி’ அடுப்புக்கு கரி ஏற்றுமதியாகிறது. ரப்பர் டயரை எரித்துச் சமையல் செய்வதில் என்னகேடு உண்டுமோ அத்தனை கேடும் இந்தக் கரிப்புகையால் உண்டு.

உலக தாவர ஆராய்ச்சியாளர்களாலும், ஐ.நா மன்றத்தாலும் மிக ஆபத்தான நச்சுத்தாவரம் என்று மகுடம் சூட்டப்பட்ட மரக்கூட்டத்தை அழிக்க ”சீமைக்கருவேலம் ஒழிப்பு இயக்கத்தை” இளைஞர்கள் தொடங்கியிருக்கிறார்கள். இதன் ஒருங்கிணைப்பாளர் ஏனாதி.அ.பூங்கதிர்வேல். பாதிக்கப்படவர்கள் இந்தத் தாவர ராஜபக்சேக்களுக்குப் பாடை கட்டுற பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இந்த விஷமரத்தை வேரோடு அழிக்கும் பணிகளில் முனைப்புக் கொண்டு இளையோரை இணைத்துள்ளார் பூங்கதிர்வேல். அழிக்கப்பட்ட நிலங்களில் மாற்று மரங்கள் நடுதல், மண்ணுக்கேற்ற விவசாயத்தை மேற்கொள்ளல் இந்த இளைஞர் இயக்கத்தின் அடுத்த கட்டப்பணிகள்.

இன்னொருவர் ஸ்டீபன் ஆண்ட்ரூஸ்; ‘முகநூல்’ மூலம் ஒன்றிணைந்து தாமிரபரணி ஆற்றைச் சீரமைத்துவரும் நெல்லை இளைஞர். ஆற்றைச் சாகடித்தது யார் என்ற கேள்வியை இவர்கள் எழுப்பினார்கள், நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, கரைகள் அபகரிப்பு, மணல்கொள்ளை, நீர்க் கொள்ளை, கழிவுகள் கலத்தல் என ஆற்றின் உயிரை அகற்றப் பலவழிகள் இருந்தாலும்- வயிற்றில், படுகையில் கொளுத்துக் கிடக்கும் சீமைக்கருவேல மரங்கள் அதன் உயிரை அரித்துத் தின்கின்றன. “இந்த நச்சுமரங்கள் மழைநீரை உறிஞ்சி, ஆற்றின் நிலத்தடிக்கு நீர் செல்வதைத் தடுக்கின்றன. இதன் காய், இலை, விதை, பூ போன்றவை எந்த உயிரினத்துக்கும் பயன்தருவதில்லை. தண்ணீரை உறிஞ்சுவதால் பூமி வெப்பமடைவதோடு, கரியமிலவாயுவை வெளித்தள்ளுவதால் காற்றுமண்டலத்தையும் மாசுபடச் செய்கிறது.” இப்படி முகநூலில் எழுதுகிறார் ஸ்டீபன் ஆண்ட்ரூஸ். தாமிரபரணியைக் காப்போம் என்னும் முழக்கத்துடன், முன்னேறுகிறார்கள் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகநூல் நண்பர்கள். பல ஏக்கர் பரப்பளவிலான சீமைக்கருவேல மரங்களை அகற்றியவர்கள், இன்றும் பணியினைத் தொடருகிறார்கள்.

ஊருக்குள் நுழையும் சாலை, மாட்டுவண்டிப் பாதை, பள்ளிக்கூடம், குளக்கரை, ஓடைக்கால் என ஒரு இடம் விடாமல் நாட்டுமரங்கள் ஆளுயரத்துக்கு ஆடுகின்றனவே, இது எந்த ஊர்? சீமைக் கருவேலம் செழித்திருந்த இடத்தில், நம்மபக்கத்து மரக்கன்றுகளாய்த் தெரிகிறதே, இது என்ன ஆச்சரியம்?

வரிசை வரிசையாய்ப் பெண்கள் குடம்குடமாய் நீரெடுத்து மரம் வளர்க் கிறார்களே , என்ன நடக்கிறது இந்த ஊரில்?

திருச்சி அருகே ஓலையூர்.

அந்த மனிதர்? ஓலையூர் ஊராட்சித் தலைவர் வேலுச்சாமி.

மனிதர்களை விரட்டிய வனமிருந்தது ஊரைச் சுற்றி முன்னர். மனிதர் வாழும், வளர்க்கும் வனம் வந்திருக்கிறது இன்று:
ஊராட்சியைக் கொள்ளையடிக்கிற தலைவர்கள் வாழும் தமிழ்நாட்டில், ஊராட்சிக் காசில் ஒரு செப்புக்காசு எடுக்காமல், ஊரைச் சோலையாக்கிக் காட்டுகிறார் வேலுச்சாமி.

’ஊருக்குள்ளேயும் வெளியேயும், நிலத்திலும் நீரிலும் ஆதாளி போடுகிற சீமைக்கருவேலம் அகற்று: நாட்டு மரங்களை நட்டுவை. ஊராட்சி நிதியிலிருந்து செய்வீர்’ என அரசாங்கம் கட்டளை பிறப்பிக்கட்டும். நூறு நாள் வேலைத்திட்டம் போல் தெண்டத் திட்டமாக இல்லாமல் ஊரைக்கூட்டிச் சாதிப்பார்கள் வேலுச்சாமிகள்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்