குமிழி - நிர்க்கதியாக்கப் பட்ட நூற்றாண்டுக் கனவு

”படிப்பு, குடும்பச்சுமை என காய்ந்து போன வரப்பில் சிறு ஓடையாக ஓடிக்கொண்டிருந்த என் பாலிய கால வாழ்வை மடைமாற்றி புதிய பாதையில் திறந்து விட்டேன். துணிச்சலா, அப்பாவித்தனமா, விடுதலை வேட்கையா எதுவோ தெரியாது. புலனாகாத அந்தப் பாதையில் முழு நம்பிக்கையுடன் பரவினேன் என்பது மட்டும் உண்மை. உண்மையிலும் உண்மை.

”இந்த நம்பிக்கைகளை எல்லாம் பின் தளம் (தமிழகத்தில் பயிற்சிக் களம்) கிழிசல் ஆக்கியது. உயிர் தப்பி ஊர்வந்து சேர்தலே வாழ்வின் மிகப்பெரும் பாக்கியம் ஆகிப்போனது. இலட்சியமாகவும் தேய்ந்திருக்கலாம்; எப்படியோ ஊர் திரும்பும் சந்தர்ப்பம் கிடைத்தது. பின்னர் எனது நாட்டை விட்டும் வெளியேறினேன். அகதியாய் இங்குவந்து சேர்ந்தேன்”

மொத்த நாவலின் பொருளடக்கம் இது. ஒவ்வொரு எழுத்தாய், ஒவ்வொரு வார்த்தையாய், ஒவ்வொரு சொல்லாடலாய் 223 பக்கங்களில் விரிகிறது.

”என் குழந்தை அவன்” என வீட்டுக்கு முன் நட்டுவைத்த வேம்பு கதை சொல்லத் தொடங்குகிறது. கதையை நினைவுகூர்ந்து ஞாபக அடுக்குகளில் இருந்து உருவிஉருவி, தலைகீழாய் மூழ்கி முத்தெடுக்கும் சாகசம் போல வெளியில் கொண்டுவந்து ‘குழந்தை ரகுவின்’ வாழ்வைப் பேசுகிறது.

ரகு ஒரு போராளி. போராளியின் கைவசம் நிறைய ஆவணங்கள் இருந்தன. ”நான் நாட்டைவிட்டு விலகியபோது எழுதிவைத்திருந்த விசயங்களை, அனுபவங்களை நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். அவர் அதைப் புதைத்து பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்திய ராணுவம் ஈழத்தின் மீது ஆக்கிரமிப்புச் செய்த போது அவர் பதுகாப்புக் கருதி அவறை வெளியே எடுத்து எரிக்க நேரிட்டது.

”35 ஆண்டுகளின் பின் அந்த ஆவணங்கள் என் மூளைக்குள் இல்லை, இருக்கும் ஞாபகங்களை கைக்கொண்டு நாவல் வடிவில் எழுத தீர்மானித்தேன்”

கதை சொல்லல் என்பது சுயானுபவத்தின் விரிவு. ஆவணம் என்பது வரலாறு. வரலாறு ஒருபோதும் நாவலாகாது. மணல் என்ற எனது நாவலின் சொந்த அனுபவத்தில் இதை விளக்க முடியும். நான் சேகரித்து வைத்த ஆவணங்கள் மடி நிறைந்து கொட்டியது. கதை சொல்வதினூடு அங்கங்கு ஆவணங்களை இணைத்து இருந்தேன்”. ஆவணப் படுத்தி, தொகுத்து, வாசிக்க அளிப்பது எனில் அது வரலாறு; ஆனால் கதை சொல்லலில் உங்கள் வாசகன் நெட்டோட்டமாய் தொயந்து ஓடி வரவேண்டும், மட்டுமல்ல, நீங்கள் போகாத திசைக்கெல்லாம் அவன் பயணிப்பான் – நீங்கள் கதை சொல்லுங்கள்” என்று பதிப்பாளர் உணர்த்தினார்.

ஒருவேளை அந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தால், இன்று ’பிளோட்’ எனப்பட்ட தமிழீழ விடுதலைக் கழகத்தினதும், பிற ஆயுதக் குழுக்களினதும் தெளிவான சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கும். போராளி இயக்கம் என்ற பெயரில் உலாவந்த ’பிளோட்’ ஆயுதக் குழுவின் அராஜகம் மட்டுமல்ல, பிற ஆயுதக் குழுக்களின் ரூபங்களும் அம்பலமாகியிருக்கும்.

சிறு பிராயம் முதலே ரகுவை உருவாக்கிய அப்பா, ஒரு இலகுவான கற்பித்தல் ஆசிரியர் (ப-22). தமிழ் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர் எளிதான புரிதலுக்கு உரித்தான வழிமுறைகளை கண்டிருந்தார். எழுத்து கற்பிக்கும் முறையில் புதிய உத்திகளைக் கையாண்டார். பிள்ளைகள் முதலில் எழுதப் பழகுகிற எழுத்து ‘ட’ வாக இருக்கும். பின்னர் ’ப‘ என அது இலகுத் தன்மையிலிருந்து பயணிக்கத் தொடங்கும். வகுப்பறையின் எல்லைகளை அவர் குறுகலாக உணர்ந்தார்.

தந்தை குடும்பத்துக்கு வெளியில் இயங்குவதில் தான் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் - பின்னர் இந்தக் குழந்தை ஆயுதக் களத்தில் நின்றதற்கான மூல சூத்திரம் இது.

”மண்ணுக்காய் மரித்தவர்களின் சாம்பலிலிருந்து தமிழ் அன்னை என்ற அடையாளத்துடன், தமிழன் என்ற அடையாளத்துடன் நான் எழுந்தது பொய்யில்லை; எல்லாப் பொய்களையும் நம்பியதும் கூடப் பொய்யில்லை” (பக்கம் 26)

பின் தளமான தமிழகம் நோக்கி தாவிப் பாய்கிறது நடுக்கடல் கள்ளத்தோணி. ’வானத்திலிருந்து தொங்கவிடப்பட்ட நீர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்குக்கும் ஆபத்தான விளையாட்டு’ என விவரிக்கையில், வரலாற்று ஆசிரியனினும் கூடுதலாக ஒரு கலைஞன் மேல்கை எடுக்கிறான். ”தீப்பந்துகள் இப்போ எமது தோணிக்கு சற்றுத் தொலைவில் விழுந்தன. பிறகு தூரத்தில் விழுந்தன. நாங்க நடுக்கடல் இப்போ தாண்டி விட்டிருந்ததை யூகிக்க முடிந்தது. சிறைப்பட்டிருந்த மூச்சுக் காற்று எட்டிப் பார்த்தது. (பக் -33)

போர்க்கள நாயகர்களை அல்லது ஆயுதமேந்திய யுத்தப் பிரபுக்களை பெயர் சொல்லி விமர்சித்து எழுதுகிற ஈழ எழுத்துக்கள் இப்போது நிறைய வரத் தொடங்கிவிட்டன. பேரழிவுக்குப் பின்னரான நிலையை - அதற்கெல்லாம் மூல காரணமான நடைமுறையை பேசாமல் இருக்க இயலாது. ”அவ்வாறு பேசாமல் வாழ்ந்தால் அது மக்களுக்கு செய்யும் துரோகம்” இந்தப் புதினம் போகிறபோக்கில் அல்லாது, செவிளில் அறைகிற மாதிரி நிறுத்தி கேள்விகள் எழுப்பி விமர்சனங்களை கொக்கியிட்டு நடக்கிறது. சுயாதீனமான எழுத்தின் கம்பீரம் இது.

தற்போது ஆயுத இயக்கங்கள் களத்தில் இல்லை, தலைமைகள் உயிரோடுமில்லை, எது வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்று ஒரு தர்க்கம் முன் வருகிறது. இத்தர்க்கத்தினூடு சனநாயக இயங்குதல் மறுக்கப்பட்ட உண்மையும் பூனைக்குட்டி போல் வெளிப்படுகிறது. தன்னை, தம்மை மறு விமர்சனத்துக்கு உட்படுத்தும் ஒரு சுய ஆய்வு நாவல் இந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகவே கைப்பற்றிப் பேசுகிறது. இப்போது விட்டால் வேறு எப்போது சுய விமர்சனத்துக்கு ஆட்படுவது?

“விடுதலை அரசியலைப் புரிந்துகொள்ளாமல், ஒரு போராளியாக ஆவதிலுள்ள போதாமையின் சாட்சியாக அவர்களிருந்தார்கள்” (பக்-193).

உணர்ந்ததை, பட்டதை ஜோன் மூலமாக வெளிக் கொட்டுகிறார் படைப்பாளி. இந்தப் போதாமையின் தொகுப்பு பூதாகரமான இயக்கங்களாகி வெறுமையில் முடிந்தன. தனியொரு ஜோன் உதிர்க்கிற மனச்சாட்சியின் வாசகம் அல்ல; இந்த நாவல் போதாமைகளின் கூட்டுக்குரல்களது சாட்சியம்.

“ஆரம்பத்தில் காட்டுக்குள் ஒரு சிறிய குழுவாக இருந்தபோது நடத்தத் தொடங்கிய துரோகிகள் அழிப்பில் இருந்து தொடங்கி இயக்கங்களின் உட்கொலை ஊடாகப் பயணித்து, வைத்தியசாலைகளில் வைத்துப் படுகொலை செய்வதிலும், எண்பதுகளின் நடுப்பகுதியில் கூட்டாக சக இயக்கத் தோழர்களை சுட்டுத்தள்ளி உயிரோடு டயர் போட்டு எரித்ததிலும், பள்ளிவாசலுக்குள் தொழுகையில் இருந்தவர்களைப் படுகொலை செய்ததிலும், அனுராதபுரத்தில் சிங்களப் பொதுமக்களை கூட்டாக சுட்டுத்தள்ளியதிலும், கந்தன் கருணைப் படுகொலையிலும், சுழிபுரத்தில் ஆறு இளைஞர்களைக் கொன்று புதைத்ததிலும், இயக்க உட்படுகொலையிலும், சமூக விரோதி அழிப்பிலும் எனத் தொடர்ந்த இயக்கங்களின் வரலாறு பூராவும் இந்த காட்டுமிராண்டித்தனம் தன்னை பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது” (பக்கம் 194)

இதனோடு தனது மூளையின் கக்கத்தில் இடுக்கிக் கொண்டிருந்த ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறார். ”எங்கடை சனம் விடுதலை அடைவதற்கு தகுதியில்லாத சனம். நாங்கள் உள்ளுக்கை காட்டுமிராண்டித் தனத்தோடுதான் இருந்திருக்கிறோம் எண்டு தெரியுது. விடுதலைக்கெண்டு வெளிப்பட்டு, உள்ளுக்குள் இருந்தவன், பக்கத்தில் நின்றவன், எதிர்த்து நின்றவன் எல்லோரையும் போட்டுத் தள்ளுகிற கூட்டம். இந்த கேட்டுக்கு எங்களுக்கு விடுதலை கேக்குது”

இது ஆயுத அரசியல்; தேர்தல் அரசியலிலும் இதுபோலவொரு விரக்தியின் குரல் எழும்புவதுண்டு. படிப்பறிவில்லாத கூட்டம்; வாக்கு என்றால் என்ன, வாக்களிப்பின் முதன்மை நோக்கம் யாது எனப் பகுத்தறியும் அரசியல் தெளிவில்லாச் சனம். இந்த சனம் கெட்ட கேட்டுக்கு வாக்குச்சீட்டு வேணுமா என்னும் சாதாரண மக்கள்மீதான பாய்ச்சல், இதிலும் கேட்கிறது.

இவை யாவும் மக்களின் பிழையல்ல. ஆயுதக் குழுக்களின் சண்டித்தனத்தால் விளைந்தவை. ஒரு இனத்தின் விடுதலைப் போர் ஒரு சோப்புக் குமிழி போல் ஆயுதங்களால் உடைக்கப்பட்ட போது பாதிக்கப்பட்டோர், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது போனோர் அவர்கள்தாம்.

மனிதன் இயந்திரத்தை இயக்க ஆரம்பித்ததும், இயந்திரமாக மாறிவிடுகிறான். இயந்திரம் வேகம் அவனது வேகமாகிறது. அவனால் மட்டுப்படுத்த முடிவதில்லை.அதுபோலவே ஆயுதம் ஏந்தியவன் ஆயுதமாக ஆகிவிடுகிறான்.

”துப்பாக்கி ஒரு மரண வாயிலாகவும் அதேநேரம் மரண வாயில் காவலாளியாகவும் மாறி மாறித் தெரிந்தது” (பக்கம் 200). தெளிவாக ஜோன் வரையறுக்கிறான்.

பக்கம் 200 முதல் 223 ஈறான படைப்பின் பிற்பகுதி, ஒரு துப்பறியும் நாவல் போல் விறுவிறுப்பாய் ஓடுகிறது.பின் தளத்திலிருந்து தளத்துக்கு வந்த பின்னும் தொடருகிற தேடுதல் வேட்டை, தலைமறைவு, வெளிநாட்டுக்குத் தப்பியோடல், கொலை, காணாமல் ஆக்குதல் என அத்தனையும் துப்பாக்கியால் இயக்கப்படும் காட்சிகள் தாம்.

அரசுக்கு எதிரான அதிகாரம் துப்பாக்கியிலிருந்து பிறப்பதாக ஒவ்வொரு இயக்கமும் கூறிக்கொண்டு திரிந்தனர். மாறாக அது மக்களுக்கு எதிரான நகர்வாகவே அமைந்தது. சிங்கள ராணுவம் நிகழ்த்தும் அட்டகாசங்களை பேசுவதற்குப் பதிலாக, அதை ஈடு செய் கடமை போல பயிற்சி முகாமினை ராணுவ ஒழுங்குகளின் குவிப்பாக ஆக்கியிருந்தனர்.

தோழமை மனோபாவத்துக்கும் இராணுவ மனோபாவத்துக்குமான பாரதூரமான வேறுபாடு அடிக்கோடு போட்டுக் காட்டப்படுகிறது. தோழமை மிதித்துச் சிதைக்கப்பட்டு, எவரைப் பார்த்தாலும் உள் எதிரியாக கருதி ’தீர்த்துவிடும்’ மனோபாவம் கொடிகட்டிப் பறக்கிறது.

“அடிப்படையில் நாம் ஒரு முதலாளித்துவ இராணுவக் கட்டமைப்புடன் இயங்குகிறோம். போராளிகள் பிரக்ஞை பூர்வமாக இயங்க பயிற்றுவிக்கப் படாதவரை, அரசுக்கெதிரான அதிகாரமென்பதை விடவும் மக்களுக்கெதிரான அதிகாரம் எமது துப்பாக்கியிலிருந்து பிறக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மக்கள் சார்ந்த பிரக்ஞை என்பது போராளி எனப்பெயர் பெற்றுவிடுவதால் வருவதில்லை.”

அறிவார்ந்து, மக்கள் சார்ந்து, உணர்வு பூர்வமாக, காஸ்ரோ போல சுய சிந்தனையைக் கோதிவிட்டுக் கொள்கின்றோரும், அதில் தம்மைக் கொளுவிக் கொள்வோருமுள்ளனர். வெளிப்படையாக சிந்திப்பைப் பறிமாறிக் கொள்ள முடியா நிலை இயக்கத்தினுள்ளில், முகாம் தோழர்கள் எல்லோரும் மோட்டார் சைக்கிளை நன்கு செலுத்தக் கற்றுக் கொண்டிருந்தனர். எப்போதும் பெண் தோழர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது, அல்லது அவர்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்தனர். முகாம் பொறுப்பாளர் ’பதி‘ அல்லது பெண் தோழர்கள் உட்பட எவருமே இதுகுறித்துக் கதைக்கவில்லை. சிந்திக்கவில்லை என்றும் சொல்லலாம். சோசலிச தமிழீழத்துக்கான போராளியம் இப்படியாய் வளர்ந்தது என ரகு கசந்து போகிறான்.

ஆயுதங்கள் பற்றியும் அதை கழட்டிப் பூட்டுவது பற்றியுமான வகுப்புகளை எடுத்துக்கொண்டிருந்த தேவன் ஒரு கட்டத்தில் ’எஸ்.எல்.ஆர். துப்பாக்கியை கையில் வைத்திருந்து அதை கட்டுவதற்கு எத்தனித்தபோது கொஞ்சம் வில்லங்கமாக இருந்தது. அதன்படியே சீமந்து (சிமெண்ட்) தரையில் மெல்ல செல்லமாகக் குத்தினான். ”ஆயுதத்தை பெண்களைக் கையாள்வது போல பக்குவமாக கையாள வேண்டும்” என்று அவன் சொல்லியபோது, அதிலிருந்து பொறி கிளம்பியது. “அதென்ன பெண்களைக் கையாளுவது?” என்று கேட்டான் யோகன். தேவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. ” பெண்கள் என்ன, ஆண்களால் கையாளப்பட வேண்டியவர்களா? அவர்களையும் ஆயுதத்தையும் ஒப்பிடுகிறீர்கள், அவர்களென்ன பண்டமா?” என்று கேட்டான் ஜோன்.” பெண் விடுதலை பற்றி கதைக்கிறம், சோசலிசம் பற்றி, சமத்துவம் பற்றிக் கதைக்கிறம். நாம் இப்படி ஒப்பிடலாமா?” எனக் கேட்டான் எர்னஸ்ரோ. ”பிழைதான்” என மன்னிப்பு கேட்டுவிட்டு வகுப்பைத் தொடர்ந்தான் தேவன்.

தமிழகப் பின் தளப் ’பிம்ப உருவாக்கம்’ தாயகத்தின் தளம் வரை தொடர்ந்தது. அலை அலையாய் பரிணமித்தது. பிளாட்டில் ”பெருசு”: புலிகள் இயக்கத்தில்’ ’அண்ணை’: இன்னொரு இயக்கத்தில் தலைவர்.

”ஆயுதம் தாங்கிய குழு தானே நாம். முந்திக் கொள்பவர் தான் பிழைக்கலாம் என்ற ஒரு உள்விதி இதற்குள் இயங்குகிறது. அரசியல் மனோபாவத்தில் தோழமை என்று நாம் வரையறுக்கையில், அது சக மனிதர்களின் அன்னியோன்னியத்தைக் கோருது; சக மனிதர்களில் தன்னைக் காணக் கோருது. ராணுவ மனோபாவத்தில் தற்காப்பு என்ற வேட்கை, அது சக மனிதரை சந்தேகிக்கிறது ; அவங்களை தன் எதிரியாய்க் காணக் கோருது“

யோகன் அந்த நடைமுறை உண்டுபண்ணும் மனோபாவத்தைச் சுட்டிக் காட்டுகிறான்.

“தீப்பொறி இதழ்” தளத்தில் இருந்து வெளியானபோது பின் தளமான தமிழகத்துள்ளும் எங்களை வந்து சேர்ந்தது. மனஓசை, கேடயம், புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் – போன்ற இதழ்களுக்கும் வழங்கப்பட்டது பின் தளத்தில் ’பிளோட்’ போன்ற இயக்கங்களில் மீச்சமிருப்போர் கலைச்சல் மாடுகளாய் வெளிநாடுகள் நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர்.

ஒரு இரங்கற்பா போல் வருகின்றன அந்தத் துயர வரிகள்.

”அண்ணாந்து பார்த்த நிலை போய் கவிஞர்கள் கற்பனையில் கவியெறியும் முகில் திரளுக்கு மேலாக மும்பையிலிருந்து விமானத்தில் பறந்து கொண்டிருந்தோம். புகைப்பாலை வனத்தில் குன்றுகளாய்த் திரட்சியுற்றிருந்தன இளம் சாம்பல் நிற முகில் கூட்டங்கள்! அவைகளின் பின்னாலும் தேடிப் பார்க்கிறேன். ஏந்திய கனவுகளைக் காணவில்லை; மாலியையும் (பிரியத்துக்குரியவள்) காணவில்லை.”

ரகு, ஜோன், யோகன், அன்பு, காஸ்ரோ,ஏர்னெஸ்ரோ போன்ற அர்ப்பணிப்பாளர் பலரும் செய்த பிழை என்ன? ஆயுதக் குழுக்களை போராளிக் குழுக்கள் என நம்பியது! ஒரு இன விடுதலைப் போரை எப்படி நடத்தவேண்டுமென்ற ’உணத்தி’ இல்லாமல் நடத்தியதால், இந்நூற்றாண்டின் விடுதலைக் கனவு நிர்க்கதியாகி, உடைத்து சில்லுசில்லாய் வீசப்பட்டுப் போனது. லட்சக்கணக்கில் உயிர்கள் இழப்பு. பல பத்தாயிர எண்ணிக்கையில் போராளிகள் இழப்பு. இறுதியில் ஈழம் இழப்பு.

ஒரு கையறு நிலைப் பாடலைப் பாடும் ரவியின் எழுத்தில் ஒரு நாதம் உண்டு. அது வெங்கல உலோகத்தில் எழும் நாதம். அந்த இசை அதிர்வு அதிர்வுகளாய் நடந்து போகும். அதனால்தான் கோவிலில் வெங்கல மணியைக் கடினார்கள். நகர்மய மாக்கலில், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மாசு கெட்டிக்காத லகுவான காற்று அன்றிருந்தது. காற்று வெங்கல இசையை தொலைதூரம் எடுத்துச் சென்றது.

ரவியின் இந்த நாவல் வெளிவராது போயிருந்தால், வெங்கல ஒலியின் இசையை இழந்து போயிருப்போம். இந்த எழுத்து கிடைக்காமல் இருந்திருக்குமாயின், ஈழ விடுதலையின் முக்கியமான வரலாற்று மாணவர் கிடைக்காமல் போயிருப்பார்; எழுத்தில் கலைவண்ணம் தெளித்த தேர்ந்ததொரு கலைஞன் மேல்வாராது போயிருப்பார்.

குமிழி – நாவல்
படைப்பாளி: ரவி - 2020
கதைக்களம்: ஈழம், தமிழகம்
காலம்: 1984-1985
விடியல் பதிப்பகம், கோவை
விலை ரூ.180/=

- சூரியதீபன்

- காக்கை சிறகினிலே - அக்டோபர் 2020

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி