நூற்றாண்டை நோக்கி - கி.ரா.வுடன் சில பக்கங்கள் - நூல் மதிப்புரை

பக்.208; ரூ.160; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1, 0422 - 2382614

கரிசல் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளரான கி.ராஜநாராயணனின் தனித்தன்மைகளை எடுத்துக்காட்டும் நூல்.

பள்ளி படிப்பையே முடித்திராத கி.ரா, புதுவைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்திருக்கிறார். அதற்காக அவருடைய வேரடி மண்ணான இடைசெவல் கிராமத்தை விட்டு புதுவைக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். அவரின் பழகும் இயல்பின் காரணமாக வந்த இடத்திலும் நண்பர்கள் சூழ வாழ்ந்து வருகிறார். நூற்றாண்டு பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிற அவரின் வாழ்க்கையை, அவரின் ரசனைகளை, உணர்வுகளை, கருத்துகளை மிகச் சுவையாக இந்நூல் பதிவு செய்திருக்கிறது.

கரிசல் மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் பா.செயப்பிரகாசமும், கி.ரா.வைப் போலவே புதுவைக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வருவதால், கி.ரா.வுடன் நெருக்கமாகப் பழக முடிந்திருக்கிறது. அந்த அனுபவங்களை கரிசல் மண் மணம் கமழும் எழுத்து நடையில் மிக அற்புதமாக இந்நூலில் சொல்லியிருக்கிறார்.

கி.ரா.வைச் சந்திக்க அவருடைய இடைசெவல் கிராமத்துக்கு நூலாசிரியர் இளம் வயதில் சென்றதில் இருந்து, சமகாலம் வரை கி.ரா பற்றிய நூலாசிரியரின் நினைவுகள், சமகாலச் சம்பவங்கள் பகிரப்பட்டிருக்கின்றன.

கரிசல் இலக்கியத்தில் தனி இடம் பெற்றிருக்கும் கி.ரா.வின் குறிப்பிடத்தக்க படைப்புகளான "கோபல்ல கிராமம்", "கதவு" ஆகியவை தமிழின் குறிப்பிடத்தக்க பெரிய இதழ்களில் பிரசுரமாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது வியப்பளிக்கிறது.

கி.ரா.வைப் பற்றிய நூலாயினும், கி.ரா.வுடன் நீண்ட காலமாகப் பழகிக் கொண்டிருப்பவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கிராமத்தை விட்டுப் பிரிந்தாலும் அதை இன்னும் மறக்காமல், கிராம வாழ்வின் எல்லா அம்சங்களையும் மிக நுணுக்கமாகப் பார்த்து, பசுமையாகச் சித்திரிக்கும் நூலாசிரியர், நம்மை கி.ரா.வின் அருகில் மட்டுமல்ல, அவர் வாழ்ந்த கரிசல் மண்ணுக்கே அழைத்துச் செல்கிறார்.

தினமணி - 17 மே 2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்