இடியொன்று விழுந்தது... கவிஞர் கே.ஜீவபாரதி
புதுவையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனைச் சந்தித்தபோது இடமிருந்து: ஆ.தமிழ் மணி, நான், தோழர் பா.செயப்பிரகாசம். |
'சூரியதீபன்' என்ற புனைபெயரிலும் பா.செயப்பிரகாசம் என்ற இயற்பெயரிலும் எழுதிக் குவித்தவர் எங்கள் கரிசல் மண்ணில், அதுவும் நான் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஊரில் பிறந்தவர்.
1966 காலகட்டத்தில் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் காளிமுத்து, நா.காமராசன், வைகோ ஆகியோருடன் இணைந்து மதுரையில் களமாடிய தோழர் பா.செயப்பிரகாசம், அதன்பொருட்டுச் சில காலம் சிறை வாழ்ந்தவர்.
என்னுடைய எழுத்தைத் தோழர் பா.செயப்பிரகாசமும்; அவருடைய எழுத்தை நானும் வாசித்திருக்கிறோம்; ஆனால் சந்தித்ததில்லை.
'ஜனசக்தி' நாளிதழில் நான் கட்டுரைப் பகுதி ஆசிரியராகப் பணியாற்றிய போது தோழர் பா.செயப்பிரகாசம் 'ஜனசக்தி'க்கு அனுப்பிய சில கட்டுரைகளை 'ஜனசக்தி'யில் நான் வெளியிட்டேன்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாவை அச்சகத்தின் மாடிக்கு 'ஜனசக்தி' அலுவலகம் மாற்றப்பட்டபோது, தோழர் பா.செயப்பிரகாசம் அங்கு வந்து என்னைச் சந்தித்தார். இதுதான் எங்கள் முதல் சந்திப்பு.
அப்போது என்னிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த தோழர் பா.செயப்பிரகாசம் இறுதியாக, "தோழர்! உங்கள் பெரியப்பா தியாகி பூதலப்புரம் ஆர்.வேலுச்சாமித் தேவர் நம் தேசத்திற்கு மட்டுமல்ல; நம் பகுதிக்கும் மிகப் பெரிய சேவைகளைச் செய்தவர்; அவரைப் பற்றி நீங்கள் ஒரு நூல் எழுதுங்கள்" என்றார்.
இதன்பின் இதே காலகட்டத்தில் தோழர் பா.செயப்பிரகாசம் கைபேசி வழியாக என்னைத் தொடர்பு கொண்டு "விளாத்திகுளம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மார்க்கண்டேயன் என் மாணவர்; அவர் உங்களோடு பேச விரும்புகிறார். அதனால் உங்கள் கைபேசி எண்ணை அவருக்குக் கொடுத்திருக்கிறேன்; அவர் உங்களைத் தொடர்பு கொள்வார்" என்றார். இதுபற்றி சில தினங்களுக்கு முன் முகநூலில் நான் பதிவு செய்திருக்கிறேன்.
நண்பர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பராமரிப்பில் விளாத்திகுளத்தில் இருந்த தோழர் பா.செயப்பிரகாசம் இன்று (23.10.2022) மறைந்து விட்டார் என்ற செய்தியை முகநூலில் கண்டு கலங்கிவிட்டேன்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுவை மருத்துவமனையில் இருந்த எழுத்தாளர் பிரபஞ்சனைச் சந்திக்க வேண்டும் என்று வழக்குரைஞரும் எழுத்தாளருமான மணப்பாறை ஆ.தமிழ்மணியிடம் தெரிவித்தேன். உடனே அதற்கான ஏற்பாடுகளைத் தோழர் பா.செயப்பிரகாசம் வழியாக ஏற்பாடு செய்தார் ஆ.தமிழ்மணி.
22.08.2018 |
மருத்துவமனையில் எழுத்தாளர் பிரபஞ்சனைத் தோழர் பா.செயப்பிரகாசம், ஆ.தமிழ்மணி, நான் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
சந்தித்துவிட்டு வெளிவந்தபோது தோழர் பா.செயப்பிரகாசம், "சில தினங்களுக்கு முன் இங்கு வந்து பிரபஞ்சனைச் சந்தித்தேன்; அப்போது அவர் பேசவே இல்லை; இன்று ஜீவபாரதியைக் கண்டதும் பிரபஞ்சன் உற்சாகத்தோடு பேசியது எனக்கு வியப்பாக இருக்கிறது" என்று சொல்லியது இன்றும் என் காதில் ஒலிக்கிறது.
அடுத்து கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ராஜநாராயணனைச் சந்திக்கச் சென்றோம். அவரிடம் தோழர் பா.செயப்பிரகாசம் என்னை, "தியாகி பூதலப்புரம் ஆர்.வேலுச்சாமித் தேவர் தம்பி மகன்" என்று அறிமுகம் செய்ததும், எங்கள் கிராமத்தைப் பற்றியும், எங்கள் பெரியப்பாவைப் பற்றியும் தோழர் பா.செயப்பிரகாசம் சொல்லிய செய்திகளை நினைக்கும்போது என் கண்களில் கண்ணீர் அருவி.
இந்தப் பயணத்தின் போது தோழர் பா.செயப்பிரகாசம் எங்களுக்குத் தோழமையோடு செய்த உதவிகள் என் வாழ்நாள் முழுவதும் என்னுள் வாழும்.
சில மாதங்களுக்கு முன் கைபேசி வழியாக என்னைத் தொடர்பு கொண்ட ஆ.தமிழ்மணி, "ஐயா! உங்கள் நண்பர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பராமரிப்பில் தான் விளாத்திகுளத்தில் ஐயா செயப்பிரகாசம் இருக்கிறாராம். அவரைச் சந்தித்து விட்டு நீங்கள் பிறந்த பூதலப்புரத்திற்கும் சென்று வரலாம்" என்றார். நான், "சில பணிகளை முடித்துவிட்டுச் செல்லலாம்" என்றேன்.
சில தினங்களுக்கு முன் யூடியூப்பில் தம்பி நாகம்பட்டி கி.உக்கிரபாண்டியின் பேட்டியைப் பார்த்துவிட்டு அவரைக் கைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். (இவர்தான் விளாத்திகுளத்தில் வாழ்ந்துகொண்டிருந்த தோழர் பா.செயப்பிரகாசத்தை இறுதியாகச் சந்தித்த எழுத்தாளர்).
எழுத்தாளர் தம்பி நாகம்பட்டி கி.உக்கிரபாண்டி விளாத்திகுளத்தில் தோழர் பா.செயப்பிரகாசத்தைச் சந்தித்தபோது, அவருடைய 'மணல்' நாவலை வழங்கி தம்பி உக்கிரபாண்டியை தோழர் பா.செயப்பிரகாசம் வாழ்த்திய போது |
அப்போது தம்பி கி.உக்கிரபாண்டியிடம், "தம்பி! விரைவில் தோழர் பா.செயப்பிரகாசத்தைச் சந்திக்க வருவேன்; அப்போது உன்னைச் சந்திக்கிறேன்" என்றேன்.
நேற்று (22.10.2022) கைபேசி வழியாக ஆ.தமிழ்மணியைத் தொடர்பு கொண்டு, "நான் எழுதிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாற்று நூல் பணி நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்ததும் நாம் விளாத்திகுளம் சென்று தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களைச் சந்தித்துவிட்டு வருவோம்" என்றேன்.
அதற்கு ஆ.தமிழ்மணி, "ஐயா! நீங்கள் சொல்லுங்கள்; அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விடுகிறேன்" என்றார்.
இதோ! எங்களைச் சந்திக்காமலேயே இன்று (23.10.2022) தோழர் பா.செயப்பிரகாசம் கண்ணை மூடிவிட்டார்.
அற்புதத் தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களுக்கு என் வீர வணக்கத்தையும்; அவரை இறுதிக் காலத்தில் பாதுகாத்த என் அருமை நண்பர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ அவர்களுக்கு என் நன்றியையும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு செலுத்துகிறேன்.
- கவிஞர் கே.ஜீவபாரதி
கருத்துகள்
கருத்துரையிடுக