பா.செயப்பிரகாசம்: நிபந்தனையில்லாத அபூர்வ மனிதர் - பாவண்ணன்


1982இல் என்னுடைய முதல் சிறுகதை தீபம் இதழில் வெளியானது. சிறுகதையே என் வெளிப்பாட்டுக்கான வடிவம் என்பதைக் கண்டுணர்ந்த பிறகு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதினேன். ஒருபோதும் பிரசுர சாத்தியத்தைப்பற்றிய யோசனையே எனக்குள் எழுந்ததில்லை.  அப்போதெல்லாம் கதையின் முதல் வடிவத்தை வேகமாக ஒரு நோட்டில் எழுதிவிடுவேன். தொடங்கிய வேகத்தில் சீராக எழுதிச்சென்று ஒரே அமர்வில் முடிப்பதுதான் என் பழக்கம். அடுத்தடுத்து வரும் நாட்களில் அந்தப் பிரதியை மீண்டும் மீண்டும் படித்து தேவையான திருத்தங்களைச் செய்வேன். அதற்குப் பிறகே அந்தச் சிறுகதையை வெள்ளைத்தாட்களில் திருத்தமான கையெழுத்தில் படியெடுப்பேன்.

ஒவ்வொரு முறையும் கார்பன் தாட்களைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் கூடுதல் பிரதிகள் கிடைக்கும்படி செய்துகொள்வேன். ஒவ்வொரு பிரதியையும் ஒரு கோப்புக்குள் சேமித்து வைப்பேன். ஏழெட்டு சிறுகதைகள் எழுதிமுடிக்கும் வரைக்கும் காத்திருப்பேன். பிறகு அந்தப் பிரதிகளை வரிசையாக அடுக்கி நானே ஒரு பெரிய நோட்டு போல தைத்து, அத்தொகுதிகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வேன்.

அந்தக் காலத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் விடுப்பில் ஊருக்குச் சென்று திரும்புவது வழக்கம். அப்போது இருப்பிலிருக்கும் கையெழுத்துப்பிரதித் தொகுதிகளை எடுத்துச் சென்று ஊரில் வசிக்கும் என் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு வருவேன். ஒரு பிரதியை என் இளம்பருவத்துத்தோழனான பழனியிடம் கொடுப்பேன். மற்ற பிரதிகளை என் நட்புவட்டத்தில் இருந்த மதியழகன், மகேந்திரன், ஞானப்பிரகாசம், பஞ்சாங்கம் ஆகியோரில் யாரேனும் ஒருவரிடம் கொடுத்துவிடுவேன். இந்த நால்வரில் மதியழகனும் மகேந்திரனும் என்னோடு புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொடக்க காலத்தில் பணிபுரிந்த தோழர்கள். ஞானப்பிரகாசம் எல்.ஐ.சி.யின் பணிபுரிந்த தொழிற்சங்கத்தோழர். பஞ்சாங்கம் கல்லூரியில் எனக்கு ஆசிரியராக இருந்தவர். என் எழுத்து முயற்சிகளுக்கு ஆதரவானவர். கையெழுத்துப்பிரதி அவர்களிடையில் தானாகவே ஒரு சுற்று சுற்றி வந்துவிடும். அடுத்த பயணத்தின்போது ஒவ்வொருவரும்  அக்கதைகளைப்பற்றித் தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

ஒருமுறை பழைய கையெழுத்துப்பிரதித் தொகுதியைப் பெற்றுக்கொண்டு, புதிய தொகுதியைக் கொடுத்துவிட்டு வருவதற்காக பஞ்சாங்கம் அவர்களுடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது  கூடத்தில் அவரும் இன்னொருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு நடுவில் மேசையின் மீது என்னுடைய தொகுதி இருந்தது. புதிய முகம் என்பதால் நான் உள்ளே செல்ல சற்றே தயங்கினேன். அதற்குள் பஞ்சாங்கம் என்னைப் பார்த்துவிட்டார். நான் வணக்கம் சொல்லும்போதே “வாங்க வாங்க. உங்களுக்கு நூறு வயசு. இப்பதான் உங்கள பத்தி பேசிகிட்டிருந்தோம்” என்று புன்னகைத்தவாறே வரவேற்றார். சற்றே தயக்கத்துடன் நான் உள்ளே சென்றேன். பஞ்சாங்கம் என் தோளைத் தொட்டு அருகில் இழுத்து பக்கத்தில் இருந்தவரிடம் “யார் இந்தப் பாவண்ணன்னு கேட்டீங்களே, இவருதான் அந்தப் பாவண்ணன்” என்று சொன்னபடி என்னை அறிமுகப்படுத்தினார். யாரிடம் என்னை அறிமுகப்படுத்துகிறார் என்பது தெரியாமல் நான் உள்ளூரத் தடுமாறிக்கொண்டிருந்தேன்.

அதை உணர்ந்ததுபோல பஞ்சாங்கம்  “இவர் என்னுடைய நண்பர். பெரிய எழுத்தாளர்.  பா.செயப்பிரகாசம்னு பேரு. நாங்க சுருக்கமா அவரை ஜேப்பினு  கூப்பிடுவோம். நிறைய சிறுகதைத்தொகுதிகள் வந்திருக்குது. ஒரு ஜெருசலேம், காடு எல்லாம் ரொம்ப முக்கியமான தொகுதிகள். நீங்க அவசியம் படிக்கணும்” என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்.

உடனே நான் அவருக்கு வணக்கம் சொன்னேன். அவரும் வணக்கம் சொன்னவாறே என் கைகளை வாங்கி தன் கைகளுக்கு நடுவில் வைத்து அழுத்தியபடி புன்னகைத்தார்.

“மனஓசைன்னு ஒரு பத்திரிகைக்கும் ஆசிரியரா இருக்கார். ஆனா அவருடைய பேரு அதுல இருக்காது” என்று கூடுதலாக ஒரு தகவலைச்ச் சொன்னார் பஞ்சாங்கம். தொடர்ந்து  ”நீங்க அந்த பத்திரிகையை பார்த்திருக்கீங்களா?” என்று கேட்டார். நான் இல்லை என்பதற்கு அடையாளமாக தலையை அசைத்தேன். அவர் உடனே சுவர் அலமாரியில் இருந்த புத்தக அடுக்கின் பக்கமாக நடந்து சென்று ஒரு வரிசையிலிருந்து நாலைந்து மன ஓசை இதழ்களை எடுத்துவந்து என்னிடம் கொடுத்தார்.

ஒரு பத்திரிகையின் ஆசிரியருக்கு அருகில் நிற்கிறோம் என்னும் எண்ணமே எனக்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. புன்னகையுடன் அவரை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தேன். சிரித்த முகம். நன்றாக அழுத்தமாக படிய வாரப்பட்ட தலைமுடி. மென்மையான குரல். அறிமுகமான கணத்திலிருந்தே மிக இயல்பாக உரையாடத் தொடங்கிவிட்டார் செயப்பிரகாசம்.

“காலையிலிருந்து உங்க கையெழுத்துப் பிரதியைத்தான் படிச்சிட்டிருந்தேன். எல்லாக் கதைகளும் நல்லா வந்திருக்குது. அடித்தட்டு மக்களுடைய வாழ்க்கையை அப்படியே நேரடியா படம் புடிச்சி காட்டறாப்புல இருக்குது”

அருகிலிருந்த கையெழுத்துப்பிரதியைத் திறந்து ஒவ்வொரு கதையைப்பற்றியும் தம் எண்ணங்களைச் சொன்னார் செயப்பிரகாசம். கதைகளில் அவருக்குப் பிடித்த தனித்தன்மைகளைப்பற்றி விரிவாகவே பகிர்ந்துகொண்டார். “சிறுகதை வடிவம் உங்களுக்கு நல்லா கைவந்திருக்குது. தொடர்ந்து எழுதுங்க பாவண்ணன்” என்றார். தொடர்ந்து ”சீக்கிரமா ஒரு தொகுப்பு கொண்டு வாங்க” என்றார்.

அதைக் கேட்டதும் ஒரே சமயத்தில் எனக்கு பதற்றமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. திணறியபடி “நான் இன்னும் அந்த அளவுக்கெல்லாம் எழுதலை சார். தீபம், கணையாழின்னு இப்பதான் அஞ்சாறு கதைகள்தான் வந்திருக்குது” என்றேன்.

”என்ன சொல்றீங்க? இந்தத் தொகுதியிலயே பத்து கதைகள் இருக்கும்போல இருக்குதே” என்று ஆச்சரியமாகக் கேட்டார் செயப்பிரகாசம்.

“உண்மைதான் சார். ஆனா இது எல்லாமே சும்மா பயிற்சிக்காக எழுதிப் பார்த்த கதைகள். எந்த பத்திரிகைக்கும் இன்னும் அனுப்பலை. நண்பர்கள் படிக்கிறதுக்காக இப்படி புத்தகமா தச்சி பைண்டிங் செஞ்சி வச்சிருக்கேன்” என்றேன்.

அவர் கண்கள் ஆச்சரியத்தில் மேலும் விரிந்தன. “என்ன, பயிற்சிக்கதைகளா? எல்லாமே வெளிவராத கதைகளா?” என்று மலைப்புடன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார் செயப்பிரகாசம். சில கணங்களுக்குப் பிறகு “நீங்க ஊருக்கு போனதும் ஒன்னு ரெண்டு கதைகளை படியெடுத்து மன ஓசை அட்ரஸ்க்கு அனுப்பிவைங்க. நாங்க வெளியிடறோம்” என்றார். சரி என்பதுபோல நான் தலையசைத்தேன்.

எங்கள் உரையாடல் தொடர்ந்தது. நான் படிக்கத் தொடங்கிய விதம், படித்த புத்தகங்கள், பிடித்த எழுத்தாளர்கள் ஆகியவற்றை முன்வைத்து செயப்பிரகாசம் சில கேள்விகளைக் கேட்டார். நான் அவற்றுக்கான பதில்களைச் சொன்னேன். பிறகு என் வேலை சார்ந்து சில கேள்விகளைக் கேட்டார். நான் கர்நாடகத்தில் வேலை செய்வதாகச் சொன்ன பதிலைக் கேட்டு அவர் புருவத்தை உயர்த்தினார். பிறகு தன்னைப்பற்றியும் பணிபுரியும் துறையைப்பற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

அவர் சொல்லும் வரைக்கும் காத்திருந்த பஞ்சாங்கம் “ஜேப்பி ரொம்ப குறைவா தன்னைப்பற்றி சொல்லிக்கறார் பாவண்ணன். தமிழ்நாட்டுல நடந்த இந்தி எதிர்ப்புப்போராட்டத்துல முக்கியமான பங்கு வகித்தவர் இவர் அந்த காலத்துல பெரிய மாணவர் தலைவர். போராட்டத்துல கலந்துகிட்டதால சிறைக்கு போனவர். இப்ப எம்.எல்.ஆதரவு மனநிலையில இருக்கறார்” என்று கூடுதலாக சில தகவல்களைச் சொன்னார். நான் கண் விரிய ஆச்சரியத்துடன் அவர் முகத்தை மறுபடியும் பார்த்தேன். அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை என்னும் எண்ணம் தோன்றும் வகையில் அமைதியான புன்னகையுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். சற்றே மலைப்புடன் இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டேன் நான்.

பா.செயப்பிரகாசத்துடனான முதல் சந்திப்பு இப்படித்தான் நிகழ்ந்தது. கதைகளின் பிரசுரத்துக்காக அவர் கொடுத்த உறுதிமொழி எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சியை வழங்கியது. அந்த இனிமையில் திளைத்தபடி ஊருக்குத் திரும்பினேன். திரும்பும் வழியிலேயே கொண்டு வந்திருந்த மன ஓசை இதழ்களைப் படித்துமுடித்தேன். மார்க்சிய லெனினிய இயக்கம் ஒன்றின் கலை இலக்கிய இதழாக அது அமைந்திருந்தது. வெளிப்படையாகவே தன் அரசியல் சார்பை அறிவித்திருந்தது.  செயப்பிரகாசத்தின் பெயர் இதழில் அறிவிக்கப்பட்டிருந்த ஆசிரியர் குழுவின் பெயர்ப்பட்டியலில் இல்லை. ஒருவேளை அவர் அரசு ஊழியராக இருந்த காரணத்தால், அவர் பெயர் முன்வைக்கப்படவில்லை போலும் என்று நினைத்துக்கொண்டேன். எதிர்காலத்தில் மன ஓசை படைப்பாளிகளின் படைப்புகளுக்கு நடுவில் என் சிறுகதைகளும் இடம்பெறப்போகிறது என்கிற கற்பனை மட்டற்ற உற்சாகத்தைக் கொடுத்தது.

ஒரு வார இடைவெளியிலேயே இரு சிறுகதைகளை பிரதியெடுத்து மன ஓசை முகவரிக்கு அஞ்சலில் விடுத்துவைத்தேன். பத்து நாட்கள் இடைவெளியில் எனக்கு ஓர் அஞ்சலட்டை வந்தது. செயப்பிரகாசம் எழுதியிருந்தார். இடதுபுறத்தில் சற்றே சாய்வான எழுத்தமைப்பில் நாலைந்து வரிகளில் கதைகளையொட்டிய சுருக்கமான கருத்தை எழுதியிருந்தார். அடுத்தடுத்த மாதங்களில் சிறுகதைகள் இடம்பெறும் என்றும் தெரிவித்திருந்தார். அந்தச் சிறிய கடிதத்தை என்னை அறியாமலேயே அன்று முழுதும் நான் மீண்டும் மீண்டும் படித்தபடியே இருந்தேன்.

மனஓசையில் செயப்பிரகாசம் ஒரு தொடக்க எழுத்தாளனாக எனக்கு வழங்கிய வாய்ப்பு   மிகவும் முக்கியமானது. பல சிற்றிதழ்கள் முன்னூறு ஐந்நூறு வாசகர்களைச் சென்றடைவதே ஒரு பெரிய சவாலாக இருந்த அன்றைய சூழலில் மன ஓசை இதழுக்கு ஆயிரக்கணக்கில் வாசகர்கள் இருந்தார்கள். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் மன ஓசையை வாங்கிப் படிக்கும் வாசகர்கள் இருந்தனர். மீண்டும் மீண்டும் வாசகர்கள் பார்வையில் என் படைப்புகளை முன்வைத்ததன் வழியாக, என் பெயரை அவர்களுடைய நெஞ்சில் ஆழமாகப் பதியவைத்தார் செயப்பிரகாசம்.

1987இல் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதி ’வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ வெளியானது. நான் அவருக்கு ஒரு பிரதியை அனுப்பிவைத்திருந்தேன். ஒரு மாத இடைவெளியில் அவர் அத்தொகுதியைப்பற்றி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் வெளிப்படையான அரசியல்சார்பு நிலைபாடு கொண்டவர். ஆயினும் கதைகளை மதிப்பிடுவதில் அந்த நிலைபாட்டின் கண்களைக் கொண்டு பார்க்கவில்லை. கதைகளின் களம், கண்ணுக்குத் தெரியாத வாழ்க்கையின் முடிச்சுகளை முன்வைக்கும் விதம், காட்சிகளின் நம்பகத்தன்மை, உரையாடல்களின் கச்சிதம், சித்தரிக்கப்பட்ட தருணத்தை ஊடுருவிச் செல்வதன் வழியாக காணத்தக்க இன்னொரு உலகம் போன்றவற்றை தன் வாசிப்பு அனுபவம் சார்ந்து சுருக்கமாக எழுதியிருந்தார். ஏற்கனவே மூன்று நான்கு கதைத்தொகுதிகளை வெளியிட்ட மூத்த படைப்பாளி அவர். பெரிய செயற்பாட்டாளர். ஓய்வில்லாமல் உழைப்பவர். திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக ஓய்வின்றி உழைப்பவர். அப்படிப்பட்ட ஓர் ஆளுமை என் முதல் தொகுதியைப்பற்றி எழுதிய கடிதம் எனக்குள் மிகுந்த உத்வேகத்தைக் கொடுத்தது. கிட்டத்தட்ட என்னுடைய முதல் சிறுகதை முதல் என்னை வாசித்து வந்தவர் அவர். என் முதல் தொகுதியைப்பற்றிய அவருடைய கடிதம் எனக்குக் கிடைத்த ஒரு நற்சான்றிதழாகவே நான் கருதினேன். கெடுவாய்ப்பாக, என்னால் அக்கடிதத்தைப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. அடிக்கடி நிகழ்ந்த இடமாற்றங்களால் இழந்த பல புதையல்களில் அத்தகைய பல கடிதங்கள் அடங்கிய கோப்பும் ஒன்று.   

ஒருமுறை சென்னை புத்தகக்கண்காட்சிக்குச் சென்றிருந்த போது செயப்பிரகாசத்தின் ஒரு ஜெருசலேம், காடு, கிராமத்து ராத்திரிகள் ஆகிய தொகுதிகளை வாங்கிவந்தேன். ஒரு வார இடைவெளியில் அத்தொகுதிகளை அடுத்தடுத்து படித்துமுடித்தேன். ஒரு ஜெருசலேம் மனத்தை உலுக்கிய சிறுகதை. அம்பலக்காரர் வீடு, ஆறு நரகங்கள், சரஸ்வதி மரணம், காடு, தாலியில் பூச்சூடியவர்கள் ஆகியவை அவருடைய முக்கியமான சிறுகதைகள். என்னுடைய வாசிப்பனுபவத்தை முன்வைத்து அவருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். இரண்டு வார இடைவெளியில் அவரிடமிருந்து எனக்கு ஓர் அஞ்சலட்டை வந்தது. என் கடிதத்துக்கு நன்றி தெரிவித்திருந்தார். அவருடைய அரசியல் செயல்பாடுகளும் அலுவலகச்சுமைகளும் இணைந்து அவருக்குள் வாழ்ந்த எழுத்தாளனை எழுந்திருக்கவிடாமல் நசுக்கிக்கொண்டே இருக்கின்றன என்றும் பத்து ஆண்டுகளாக தான் நினைத்தது எதையும் எழுத இயலாமல் போய்விட்டது என்றும் வருத்தமுடன் எழுதியிருந்தார். கடிதத்தை முடிக்கும் முன்பாக ஒரு பெரிய கதைவரிசையே தன் நெஞ்சில் இருப்பதாகவும் எதிர்காலத்தில் எப்படியாவது அவற்றையெல்லாம் எழுதிவிடுவேன் என்னும் நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். எக்காரணத்தை முன்னிட்டும் எழுதுவதை நிறுத்திவிட வேண்டாம் என்று ஆலோசனை வழங்கியிருந்தார்.

ஒரு கட்டத்தில் மன ஓசையின் வடிவம் மாறியது. சிறிய வடிவமைப்பிலிருந்து பெரிய வடிவமைப்புக்கு மாறியது. புதிய வடிவத்தில் வெளிவந்த இதழில் கதைகளின் எண்ணிக்கையும் கட்டுரைகளின் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்தது. ’வாழ்விலிருந்து இலக்கியம்’ என்னும் ஒரு பகுதியை அவர் தொடங்க விழைந்தார். அதையொட்டி ஒரு கட்டுரையை விரைந்து எழுதி அனுப்புமாறு ஒருமுறை கடிதம் எழுதினார். ஒரு வார இடைவெளியிலேயே நான் அக்கட்டுரையை எழுதி அனுப்பிவைத்தேன். அடுத்த இதழிலேயே அக்கட்டுரை மன ஓசையில் வெளிவந்தது. பல எழுத்தாளர்கள் அந்தப் பொதுத்தலைப்பில் கட்டுரைகளை எழுதினர். என்னுடைய எண்ணற்ற தொடக்ககாலச் சிறுகதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இடமளித்ததில் மன ஓசை இதழுக்கு முக்கியமான பங்குண்டு. அதற்கு முழுமுதற்காரணமாக இருந்தவர் பா.செயப்பிரகாசம்.

1991இல் மனஓசை இதழ் நின்றது. அதற்கிடையில் நானும் ஏதேதோ ஊர்களுக்கெல்லாம் மாற்றப்பட்டு, ஒருவழியாக பெங்களூரை அடைந்திருந்தேன். இதழ் நின்ற பிறகு எப்படியோ எங்களிடையே இருந்த கடிதத்தொடர்பும் நின்றுவிட்டது. அதற்குப் பிறகு ஐந்தாறு ஆண்டுகள் கழித்து ஜூனியர் விகடன் இதழில் ’தெக்கத்தி ஆத்மாக்கள்’ என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைத்தொடரை விரும்பிப் படித்தேன். கதைகளாக எழுத அவர் மனம் சுமந்த கருக்களாக அவை இருக்கக்கூடும் என்று தோன்றியது. கதைகளாக வடிக்கமுடியாத அவற்றை  நடைச்சித்திரம்போல சின்னச்சின்ன கட்டுரைகளாக எழுதியிருந்தார். ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடிக்கும் தருணத்தில் அவருக்கு கடிதம் எழுதவேண்டும் என்றொரு எண்ணம் எழும். பிறகு எப்படியோ வேலைகளின் அழுத்தத்தில் மறைந்துபோகும். இப்படியே ஏழெட்டு வாரங்கள் நகர்ந்துவிட்டன. அப்படியே ஒத்திப் போட்டபடி இருப்பது ஒருவித குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிட, அன்று இரவே அவருக்கு அக்கட்டுரைத்தொடரைப்பற்றி ஒரு கடிதம் எழுதினேன். இரு வாரங்களுக்குப் பிறகு வழக்கம்போல அவரிடமிருந்து அஞ்சலட்டை வந்தது.

அதைத்தொடர்ந்து மீண்டுமொரு இடைவெளி. சில ஆண்டுகளுக்குப் பிறகு பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார், தூத்துக்குடிக்குச் சென்றுவிட்டார்,  கி.ரா.வைச் சந்திக்க புதுவைக்கு வந்திருக்கிறார்,  இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடியதற்காக, நாகப்பட்டினத்துக்கு அருகில் கைது செய்யப்பட்டார், திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் என்றெல்லாம் நண்பர்கள் வழியாக தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆயினும் அவருக்கு உடனடியாக எதையும் எழுதத் தோன்றவில்லை. என்னுடைய வேலை நெருக்கடிகளும் அழுத்தமும்  என்னைப் பந்தாடிக்கொண்டிருந்தன.

பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் புதுச்சேரிக்குச் சென்றிருந்தபோது, என் ஆசிரியர் தங்கப்பாவைப் பார்க்கச் சென்றிருந்தேன். அன்று தற்செயலாக தங்கப்பாவோடு வீட்டுக்கூடத்தில் செயப்பிரகாசம் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாங்கள் அன்று சந்தித்தோம். அவர் என் தோற்றத்தை நம்பமுடியாமல் என்னையே பார்த்தபடி இருந்தார். என் தலைமுடி உதிர்ந்து நரைபடியத் தொடங்கியிருந்தது. அவரோ முழுக்கமுழுக்க நரைத்த தலையுடன் இருந்தார். சில கணங்களுக்குப் பிறகு புன்னகைத்தபடி என் கைகளை வாங்கி தன் கைகளுக்குள் வைத்து அழுத்தியபடி “ரொம்ப மாறிட்டீங்களே, பார்த்து முப்பது வருஷமிருக்கும், இல்லையா?” என்றார். தொடர்ந்து “உங்க கதைகளை தொடர்ந்து படிச்சிட்டுதான் இருக்கேன். சமீபத்துல கி.ரா கதைப்புத்தகம் வாங்க அன்னம் கடைக்கு போயிருந்தேன். அங்க உங்களுடைய வெளியேற்றப்பட்ட குதிரைன்னு ஒரு தொகுதியைப் பார்த்தேன். அன்னைக்கே எல்லா கதைகளையும் படிச்சிட்டேன். எல்லாமே சிறப்பான கதைகள். நாளுக்கு நாள் உங்க மொழி ரொம்ப கூர்மையாகிட்டே இருக்குது” என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

நான் பேச்சின் திசையைத் திருபும் விதமாக ‘நீங்க என்ன சார் இப்ப எழுதறீங்க? தெக்கத்தி ஆத்மாக்களுக்குப் பிறகு நான் உங்க படைப்பை பார்க்கலை” என்றேன். “கதை எழுதலை பாவண்ணன். ஆனா நிறைய கட்டுரைகள் எழுதிட்டேதான் இருக்கேன். பள்ளிக்கூடம்னு இப்ப ஒரு நாவல ரெண்டு வருஷமா எழுதிட்டிருக்கேன். சீக்கிரமா முடிச்சிடுவேன்” என்றார். நாவலைப்பற்றிய உரையாடல் தொடங்கியதும் அந்தக் களம் சார்ந்து ஏராளமான தகவல்களைச் சொல்லத் தொடங்கினார். இனிய உரையாடல் நினைவுகளோடு அன்று வீட்டுக்குத் திரும்பினேன்.

அந்தச் சந்திப்பு நிகழ்ந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. அவரை முதன்முதலாக பஞ்சாங்கம் வீட்டில் சந்தித்து நாற்பதாண்டுகள் கடந்துவிட்டன. அத்தருணத்திலேயே அவர் தமிழ்ச்சிறுகதை உலகத்தில் தன்னை ஓர் ஆளுமையாக நிறுவிக்கொண்டவர். கதைகளை வடிவமைப்பதில் அவருக்கென ஒரு தனிவழி இருந்தது. ஓர் அரசியல் கோட்பாட்டை தன் வாழ்வியல் நோக்கமாக நம்பி ஏற்றுக்கொண்டவர் அதன் அடையாளமாக செயற்பாட்டாளராக இருந்தவர். ஒரு தொடக்கநிலை எழுத்தாளனாக நான் அரும்பிவரும் கட்டத்தில் அவர் தன் சொற்களால் என்னை எளிதில் தன்னை நோக்கி ஈர்த்திருக்க முடியும். ஆனால் செயப்பிரகாசத்திடம் அந்த எண்ணம் துளியும் வெளிப்பட்டதில்லை. சாதாரணமாக நட்புகொள்ளும் இருவர் கூட ஒருவர் மீது மற்றொருவர் தன் கருத்துகளின் சுமையை இறக்கிவைக்க முயற்சி செய்கிற இந்த உலகத்தில், இயக்கச்சார்புள்ளவராகவும் கோட்பாட்டு நம்பிக்கையாளராகவும் இருந்தபோதும் கூட, எவ்விதமான நிபந்தனையும் இல்லாமல் திறந்த மனத்துடன் எழுதுங்கள், எழுதுங்கள் என ஊக்கப்படுத்திய அபூர்வ மனிதர் அவர். இன்று அவர் மண்ணுலகத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார் என்னும் செய்தி ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது. செயப்பிரகாசத்துக்கு ஆழ்ந்த அஞ்சலி.

- நன்றி  எழுத்தாளர் பாவண்ணன்

(டிசம்பர் மாத தீராநதி இதழில் வெளிவந்தது)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை