சூரியதீபனின் 'நதியோடு பேசுவேன்' - ஜெயந்தன்‌


சூரியதீபன்‌ உரக்கவே சிந்திக்கிறார்‌. அதைச் சரியாகவே வெளிப்பாடு செய்கிறார்‌.

இதற்கு அவரது இரண்டாவது கவிதைத்‌ தொகுதியான “நதியோடு பேசுவேன்‌” நூலும்‌ சாட்சியும்‌ சொல்கிறது.

தான்‌ படித்த பச்சையப்பன்‌ கல்லூரிக்கே மீண்டுமொரு நாள்‌ சிறப்புரையாற்ற வந்த அண்ணா பேசிய தலைப்பு “ஆற்றங்கரை நாகரிகம்‌”. மனித நாகரிகத்தின்‌ தொட்டில்கள்‌ ஆடியதெல்லாம்‌ அற்றங்கரை ஓரங்களில்தான்‌ என்பது சரித்திரம்‌ சொல்லும்‌ சேதிதான்‌. அனால்‌ அவரது சீடர்களே போலீஸை மண்வெட்டியாக கொண்டு அந்த நாகரிகத்தை அந்த நதியிலேயே, நதியோடு
நதியாகப்‌ புதைப்பார்கள்‌ என்று யாராவது எதிர்பார்த்திருக்க முடியுமா? புதைத்தார்கள்‌. இருபத்தியோரு குண்டுகள்‌ முழங்க எக்காளம்‌ ஊதி கனத்த பூட்ஸ்‌ கால்களை தரையில்‌ உதைத்து சல்யூட்‌ அடித்து மெல்ல மெல்ல சவப்பெட்டியை தண்ணீரில்‌ இறக்காத குறையாக.

1999 ஜுலை 28 மாஞ்சோலைத்‌ தோட்டத்‌ தொழிலாளர்களுக்காக நீதி கேட்டு பேரணியாகச்‌ சென்ற தலித்துகளை தாமிரபரணி நதியொன்றே தப்பும்‌ மார்க்கமாக இருந்த குறுகிய இடத்தில்‌ தடிகளால்‌ அடித்து நதிகளில்‌ தள்ளினார்கள்‌. தத்தளித்து கரையேற முயன்றவர்களை நீண்ட கழிகளால்‌ மீண்டும்‌ உள்ளே தள்ளினார்கள்‌. இறந்து போனவர்கள்‌ 17 பேர்‌.
"மூச்சு தத்தளிக்கும்‌ குழந்தையை
மார்பில் அணைத்தபடி
மல்லாந்து தானொரு படகாய்மிதந்த
அந்தத்‌ தாய்‌ உட்பட”
சூரியதீபன்‌ இந்த இரண்டு சம்பவங்களையும்‌ இணைக்கும்‌ போதுதான்‌ பிரச்சனையின்‌ வீச்சு கதிர்‌ வீச்சாய்‌ நம்மைத் தாக்குகிறது. தொகுப்பின்‌ இந்த முதல்‌ கவிதையில்‌ அவர்‌ கொலையுண்டவர்களின்‌ வாக்குமூலங்களை நேரடியாகக்‌ கேட்கிறார்‌. அனால்‌ அவர்‌ மறைமுகமாகக்‌ கேட்கும்‌ வாக்குமூலம்‌ ஒன்றிருக்கிறது. அது “அண்ணாவின்‌ தம்பிகளே நீங்கள்‌ இப்போது என்ன ஆனீர்கள்‌?” என்பது. சூரியதீபன்‌ இந்தக்‌ கவிதையை இப்படி முடிக்கிறார்‌.
தான்‌ பயின்ற கலாசாலையில்‌
அன்றொரு நாள்
அண்ணா ஆற்றிய
ஆற்றங்கரை நாகரிகமும்‌
ஆற்றில்‌ புதைந்து மரணம்‌.
இந்தத்‌ தொகுப்பில்‌ “வாக்குமூலம்‌” என்றே ஒரு கவிதை. மாணவர்களின்‌ “பேருந்து நாள்‌” பேரணி கண்டு மனம்‌ பொங்கி எழுதிய கவிதை. ஒரு மாணவியின்‌ வாக்குமூலமாக வடித்திருக்கிறார்‌. இயல்பாக மாணவர்கள்‌, இளைஞர்கள்‌ மேல்‌ நமக்குள்ள அக்கரை அனுதாபம்‌ நேயம்‌ எல்லாவற்றையும்‌ தாண்டி இவர்கள்‌ நம்மாட்கள்‌ ஆயிற்றே என்ற “சமாதானம்‌” போன்றவற்றையெல்லாம்‌ கடந்து சீறியிருக்கிறார்‌.
மதுவின்‌ நுரை
ஆட்டம்‌ தப்பாட்டம்‌
காட்டுத்கத்தல்‌ கானாப்பாட்டு

பேருத்தை அலங்கரித்து
மனித குணத்தை
அனாதரவாய் விட்டதைச்‌
சொல்லக்‌ கேட்டுப்‌ பயந்தேன்‌
நெஞ்சக்‌ப் பட்டரைக்குள்‌
நீந்தும்‌ இதயம்‌ சுழன்றது.

ஓரக்‌ கடைகளில்‌
ஓங்கியது ஓரு கை
வாங்கியது இடது கை
ஊரான்‌ வீட்டு நெய்யை
உறிஞ்சி உறிஞ்சி குடித்தீர்களாம்‌.

பேருந்து நிறுத்தத்தில்‌
காத்து நிற்கும்‌ பெண்கள்‌ மேல்‌
கண்ணடிப்பு கையசைப்பு.

காதலனேயானாலும்‌
கண்டுணர்ந்தேன்‌ நியொரு ஆண்‌ என

இருட்டில்‌ முளைத்து
இளைத்து வெளுத்து
ஈரிலை விட்டு இருகை கூப்பிய
முளைபாரிப்‌ பயிரல்ல நான்‌
சாமிக்குப்‌ படைக்க.
அழகின்‌ சிரிப்பு என்றொரு கவிதை. மனம்‌ தான்‌ பெருசு. மனம் தான்‌ எல்லாம்‌. அதைப்பற்றி எழுதுவது தான்‌ கவிதை என்று காட்சியாடுபவர்கள்‌ மேலுள்ள எரிச்சல்‌ காரணமாக ஓரளவு மனத்தின்‌ மேலேயே வெறுப்பு கொண்டுள்ள சூரியதீபன்‌ இந்தக்‌ கவிதையில்‌ மனம்‌ பற்றிய ஓர்‌ அழகான விஷயத்தை முன்‌ வைக்கிறார்‌. மனத்திற்கு என்னென்ன பிடிக்கும்‌ தெரியுமா? வீதிகள்‌ நூல்‌
பிடித்தது போல்‌ நிரை நிரையாய்‌ நேர்‌ நேராய்‌ இருக்க வேண்டும்‌. கடற்கரை சாலை கூட இயற்கையாய்‌ அமைந்த மாதிரி நேராய்‌ செதுக்கியிருக்க வேண்டும்‌. குற்றால அருவி கூட நேர்கோட்டில்‌ விழ வேண்டும்‌. துப்பட்டா கூட வெண் துப்பட்டாவாக கண்ணைப்‌ பறிக்க வேண்டும்‌. குடிசைகளும்‌ அளவெடுத்த மாதிரி அமைய வேண்டும்‌. ஆனால்‌ அந்த மனதுக்கு தான்‌ மட்டும்‌ ஒழுங்காக இருக்கப்‌ பிடிக்காது. என்ன முரண்பாடு
கண்ணில்‌ பதிந்து
கள்வெறியில்‌ துள்ள
ஒழுங்காக வேண்டும்‌ எல்லாம்‌
ஒழுங்கற்ற மனதுக்கு.
“முதல்‌ மொழி” என்ற கவிதையில்‌ தர்மபுரியில்‌ படுகொலை செய்யப்பட்டு அரசு பயங்கரவாதத்திற்கு மற்றொரு களச்சாவாய்‌ ஆன புரட்சியாளர்‌ ரவீந்திரன்‌ நினைவாக எழுதுகிறார்‌.
உதயம்‌ போல்‌ தெரிந்தவனை
அஸ்தமனத்திற்குள்‌
சொருகினார்கள்‌
தங்கள்‌ கட்டளைக்கு
எதிரானவர்களுக்கெல்லாம்
ஒரு கட்டளையிட்டார்கள்‌
அண்டவனே வந்தாலும்‌
உங்களைத்‌ திருத்த முடியாது

எமன்‌ வந்தால்தான்‌ முடியும்‌
என்றார்கள்‌.
வந்தார்கள்‌.
நீங்கள்‌ சமத்துவபுரம்‌ என்று பெயர்‌ வைத்து விட்டால்‌ நாங்கள்‌ சமத்துவம்‌ கொடுத்து விடுவோமா என்று கேட்கிறது இன்னமும்‌ உயர்‌ ஜாதி ஆணவம்‌. இதற்கு ஆவண பூர்வமான சாட்சியாக பல கிராமங்கள்‌ இருக்கின்றன. அங்கே ஒரு தலித்‌ பெண்ணின்‌ பெரிய கனவாக என்ன இருக்கிறது?
சமத்துவபுரத் தைலி
பொத்தி பொத்தி நடப்பாள்
பொதுக்குழயில்‌ நீர் பிடிக்க
அவளொரு கனாக் கண்டாள்
வெளிச்சம்‌ விளையாடும்‌ பகல்‌
சாதி சங்கிலியறுத்த
சமத்துவப்புரத்து பொதுக்குழாயில்‌
தான்‌
தைரியமாகத்‌ தண்ணீர்‌ பிடிப்பதாய்‌
என்ன கனவு! எப்படிப்பட்ட கனவு! இந்த நாட்டில்‌ சிலர்‌ கோடியிலும்‌ சுகபோகங்களிலும்‌ அதிகார போதையிலும்‌ மிதந்து கொண்டிருக்க, சிலர்‌ தங்களுக்கும்‌ அது வேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருக்க, இந்தத்‌ தைலிக்கு தண்ணீர்‌ குழாயில்‌ தைரியமாக கை வைக்க வேண்டுமென்ற கனவு!

நான்‌ சுமார்‌ 25 ஆண்டுகளுக்கு முன்‌ குன்னத்தூர்‌ என்ற கிராமத்‌தில்‌ பணியும்‌ குடியுமாக இருந்தேன்‌. ஓர்‌ ஆண்டு பருவமழை பொய்த்த ஆண்டு. மாலையானதும்‌ கிராம மக்கள்‌ மேற்கே வானத்தை அடிக்கடி அண்ணாந்து பார்த்தபடி இருப்பார்கள்‌. சில நாட்களில்‌ அங்கே கொஞ்சம்‌ மேகங்கள்‌ திரளும்‌. கொஞ்சம்‌ நம்பிக்கை துளிர்க்கும்‌. ஆனா இருட்டுவதற்குள்‌ திரண்ட மேகங்கள்‌ கரைந்து காணாமல்‌ போய்விடும்‌. அப்போது அவர்கள்‌ செல்வார்கள்‌. “குடுக்காத இடையன்‌ சென ஆட்டக்‌ காட்டுன மாதிரி காட்டிட்டுப்‌ போயிருச்சு” அதையே சூரியதீபனும்‌ ஒரு கவிதையில்‌ சொல்கிறார்‌.
ஓன்றும்‌ தராமலே கடந்தன
கார்கால மேகங்கள்‌.
இன்னொரு இடத்தில்‌ மேடைப் பேச்சாளன்‌ மொழி பற்றிச் சொல்கிறார்‌.
நாக்கில்‌
சுடலை வாசம்‌!
அவரது சொல்லாட்‌சியில்‌ இன்னொரு தெறிப்பு.
சாவழுக நேரமில்லை
அடக்கம்‌ செய்ய எவருமில்லை
விழுந்த இடம்‌ நடுகல்‌
ஈழப்‌ போராளிகளுக்கு
இந்தத்‌ தொகுப்பின்‌ முத்தாய்ப்பான கவிதைகளில்‌ ஒன்று சுதந்திரம்‌.

ரொம்பப்‌ புத்திசாலியான மேட்டுக்குடி ஒருவன்‌ சேரிவாசியிடம்‌ சொல்கிறான்‌, சேரி ஊரை விட்டுத்‌ தள்ளியிருந்தாலென்ன, எவ்வளவு சுத்தமான காற்று வருகிறது உங்களுக்கு என்று. அதற்கு சேரிவாசி சொல்கிறான்‌.
நல்லது
சுதந்திரக்‌ காற்று உங்களுக்கு
சுத்தக் காற்று எங்களுக்கு
சேரிப்‌ பெண்களுக்கு தலையில்‌ பூச்சுட அதிகாரம்‌ இல்லை. தாலியில்‌ சூடிக்கொள்ளத்தான்‌ சுதந்திரம்‌. அது பற்றி கவிதை சொல்கிறது.
நல்லது 
சுதந்திரம்‌ உங்களுக்கு
தாலிப்‌ பூ எங்களுக்கு
சுதந்திரம்‌ என்ற சொல்லுக்கு சுடுகாட்டில்‌ நிற்கும்‌ அர்த்தம்‌ என்னவென்று மொழி வல்லுனர்கள்‌, சமூக சரித்திர ஆய்வாளர்கள்‌, ஏன்‌ மாநுட இயல்‌ அறிஞர்களே கூட பதில்‌ சொன்னால்‌ நன்றாக இருக்கும்‌. அவ்வளவு அந்தரத்தில்‌ நிற்கிறது அது.

நம்முடைய நேரடிப்‌ பார்வையில்‌ அது இப்படியாகத்தான்‌ இருக்கிறது. அதாவது தலித்துகள்‌ சவ அடக்கத்திற்கான காரியங்கள்‌ அனைத்தையும்‌ செய்துவிட்டு கூலியை பிச்சை கேட்பது போல கூனிக்குறுகி நின்று கேட்டுப்‌ பெறுவதுதான்‌ சுதந்திரம்‌ என்றாக இருக்கிறது.

இந்தக்‌ காட்சியை சற்று விரிவாகவே சொல்லிச்‌ செல்கிறார்‌ சூரியதீபன்‌.
சுடுகாட்டுக்‌ கொட்டகையில்‌
வேட்டி வீசி விரித்தான்‌ ஏகாலி
நாற்புறமும்‌ பெரிய மனிதர்‌ அமர
நடுவில்‌ வேட்டி விரிப்பில
நாணயம்‌ நோட்டு, தாள்
"சுதந்திரம்‌ வாங்குறவங்க எல்லாம்‌
வாங்கப்பா” என்றொரு அறிவிப்பு.

கொட்டுகாரன்‌ யாரடா
உன்‌ சுதந்திரம்‌ வாங்கிக்கோ

குழிவெட்டிக்‌ கோலன்‌ வாடா
போதும்‌ வச்சுக்கோ
பிணம்‌ எரிக்கும்‌ சங்கிலி
பேச்சுக்கால்‌ மீறாதே பிடி

குலவைக்காக எங்கே சாமி?
நனைந்த பனைக்‌ கெணக்காய்‌ மூலையில்‌
அணைந்த பெண்டிரின்‌ குரல்‌

அப்பன்மார் கால்களிடை
ஆத்தாமார்‌ கவுட்டுக்கு ஊடே
“எங்களுக்கும்‌ சுதந்திரம்‌ சாமி”
பிஞ்சுக்‌ கரங்கள்‌ நீளும்‌.

சுதந்திரம்‌ என்றால்‌ என்ன?
கேட்டேன்‌ நான்‌
சுதந்திரம்‌ என்றால்‌ கட்டு,
ஊர்க்கட்டு என்று
பொருள்‌ சொன்னான்‌ பொய்லான்‌.
சூரியதீபனுக்கு முன்பொரு நாள்‌ பாட்டி சொன்ன சொலகம்‌ ஞாபகம்‌ வருகிறது.
மானம்‌ கெட்டவன்‌
ஊருக்குப்‌ பெரியவன்‌
இப்போது இவர்‌ அதை மேலும்‌ விரிக்கிறார்‌.
மானம்‌ கெட்ட சொல்‌
நாட்டுக்குப்‌ பெரிய சொல்‌
இப்போது இப்படிச்‌ சொல்லத்‌ தோன்றுகிறது. சூரியதீபன்‌ உரக்க சிந்திப்பது மட்டுமல்ல. அதைச்‌ சரியாக வெளிப்பாடு செய்வது மட்டுமல்ல, அதற்கு மேலேயும்‌ எங்கோ உயரத்தில்‌ சென்று நிற்கிறார்‌.

அதோடு பொதுவாக இன்னொரு கேள்வியும்‌ கூடக்‌ கேட்கத்‌ தோன்றுகிறது. இந்த விதமாக தனது மண்ணையும்‌ மக்களையும்‌ நேசித்தபடி அவர்களில்‌ பாவப்பட்ட ஜீவன்களுக்காக மனம்‌ கசிந்தபடி அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிரான தார்மீகக்‌ கோபத்தோடு நதிக்கரை முதல்‌ மயானம்‌ வரை ஒவ்‌வொரு நுண்ணிய செயலையும்‌ சொல்லையும்‌ கூட கவனத்தில்‌ ஏந்தி அவைகளை வடிக்க பேனா ஏந்தும்‌ தமிழ்க்‌ கவிஞர்கள்‌
வேறு யாராவது இருக்கிறார்களா?

- எண்ணம்‌, ஜெயந்தன்‌ கட்டுரைகள்‌

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை