கி.ரா.வின் கன்னிமை
முழங்கால் புழுதி பறக்கிற சின்னத் தெருக்களின் முற்றத்தில் பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு கதைகள் கேட்டதுண்டு. மென்மையாக வாழைத் தண்டைத் தடவி விட்டது போல் தெக்குப் பக்கத்துக்கே உரிய காற்று விசாரித்துப் போவதுண்டு. எங்களுக்குக் கதைகள் சொன்ன பாட்டி, பாட்டன்மார்கள் காணாமல் போய்விட்டார்கள். எங்களுடைய வாழ்க்கை முறை வேறாகிக் போய்விட்டதனாலே, பழைய காட்சிகளும், அனுபவங்களும் கை நழுவிப் போய்விட்டன.
வாழ்க்கைப் பிரவேசத்தில் நிற்கிற மணத் தம்பதியர், பல்லக்கில் ஏறி அந்தச் சின்ன ஊரில் மூன்று நாள் பட்டணப் பிரவேசம் வருவதை - ஊராங்கி வருவதை நாங்கள் இழந்து விட்டோம். பருத்தி எடுப்புக் காலத்தில், கூலிப் பருத்தி எடுத்துச் சீனிக் கிழங்கும், பயறும் வாங்கி மூணு நேரமும் வயிறு நிறைத்ததை இழந்து விட்டோம். இழந்ததை எடுத்துக் கொடுக்கிற இடத்தில் ராஜநாராயணன் நிற்கிறார்.
காணுகிற காட்சிகளுக்கும், அனுபவிக்கிற நிகழ்ச்சிகளுக்கும் அதன் இள நிறத்திலேயே வடிவம் தந்து விடுவதென்பது இயற் பண்பியல். அதனைச் சீரணித்துத் தன்மயமாக்கி அதற்கப்பால் எடுத்துச் செல்வதென்பது யதார்த்தவாதம். அப்படியல்லாமல், முன்னோடும் நோக்குடன், அதற்கான சமூகப் புறநிலைக் காரணங்களுடன் கண்டுணர்ந்து எடுத்துச் சொல்வது முற்போக்கு.
இவை அவரவர்களின் சமூகம் பற்றிய பார்வை. வாழ்கை வரையறைகள் இவைகளைப் பொறுத்து அமைகின்றன. எல்லாவற்றிற்கும் மேலே சமூகத்தைப் பற்றிய எவ்விதச் சீரிய நோக்கு இருந்தாலும், ஒருவனின் வாழ்நிலை என்பது அவனைக் குறிப்பிட்ட இட த்தில் நிறுத்தி வைத்து விடுகிறது. அந்த எல்லைக் கோடுகளுக்கு அப்பால் அவன் போவதாக இருந்தால், அவன் விரிவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
முதற் கட்டத்தில் இருக்கிற, தெக்குத்திக்குக்காரரான கி.ராஜநாராயணன் இந்தத் தலைமுறை எழுத்தாளர் பலரை மூன்றாவது கட்டத்திற்கு எடுத்திச் சென்றவர். அவருடைய கதையில் காணப்படுவதெல்லாம் இயற்பண்பு வாதமே. ஆனால் இதிலிருந்து முற்போக்குக்கு போவது சமூகப் பார்வையுள்ள இளைஞர்களுக்கு எளிதாகி விடுகிறது. மக்கள் கலைஞன் கார்க்கிக்குக் "கண் தெரியாத இசைக் கலைஞன்" நாவலை படைத்த வாலங்கிரோவ் கிடைத்தது போல் ஒருமையில் எழுதினாலும் வானவில்லின் எல்லா வண்ணங்களையும் படைத்துக் காட்டுகிற கி.ராஜநாராயணன் கிடைத்திருக்கிறார். பூமணி சொன்னது போல், எங்களுக்கெல்லாம் முன்னத்தி ஏர் பிடித்துக் கொடுத்தவர் அவர்.
நாச்சியாரம்மா மனுவஷியாகிக் கன்னி காத்த நாட்கள் அந்தக் குடும்பத்துக்கே பொன் நாட்கள்; வேலைக்காரர்களுக்குக் கூட, நிறைய மோர் விட்டுக் கம்மஞ்சோற்றைப் பிசைந்து கரைத்து மோர் மிளகாய் வத்தலைப் பக்குவமாக எண்ணெயில் வறுத்து அவள் கையால் கஞ்சி ஊற்றினால்தான் திருப்தி; பிச்சைக்காரர்களுக்குக் குல தெய்வம்; அவள் 'கன்னிமை' வெறும் பருவத்தால் வந்ததல்ல. உதாரண குணங்களால் வந்தது.
அவளுக்கு உழைப்பு ஒன்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. வேறு எந்தப் பலன்களும் சொல்லப்படவில்லை. சேவகம் ஒன்றே அவள் வாழ்வின் ஜீவரசமாக மாறிவிடுகிறபோது, அவள் குணங்களுக்கெல்லாம் தங்க முலாம் பூசப்பட்டு ஒளிர்கிறது.
அவள் தன் உழைப்புக்குப் பயனை எதிர்பார்க்கிற ஒருநாள் வருகிறது. வேலைக்கார்களுக்கு வெதுவெதுப்பான குதிரை வாலிச் சோறும், பருப்புக் கறியும் கொடுக்கிற கன்னிமை, “அம்மா பெத்தாயில்லோ'' என்று வருகிற பிச்சைக்காரர்களுக்குப் படைத்துப் படைத்துப் பார்த்த கன்னிமை, வீட்டுக்காரப் பிள்ளைகளுக்கு ரஸம் சாதத்துக்கு முட்டை அவித்துக் காரமிட்டும், அம்மாவுக்குத் தெரியாமல் கட்டி வெண்ணெய் எடுத்தும் கொடுக்கிற கன்னிமை, ஒரு நாள் அவளிடமிருந்து கழன்று விழுந்து விடுகிறது.
"மாயம்மா லக்ஷ்மியம்மா போயிராவே''
(எங்கள் தாயே, லக்ஷ்மியே போய் வா) என்று என்றைக்கு அவளை மணப் பெண்ணாக்கி, வழியனுப்பி வைக்கிறார்களோ, அன்றைக்கே அவளுடைய குணங்களுக்கும் வழியனுப்பி வைத்தாகிவிடுகிறது.
கோவில்பட்டிக்குச் சாமான்கள் வாங்கப் போய்ப் பணப் பையையும், கச்சாத்தையும் நாச்சியாரிடம் கொடுத்துவிட்டுக் கட்டிலில் விழும் கணவன், "உடம்பெல்லாம் அடித்துப் போட்டது மாதிரி வலி. கண்கள் ஜிவ்வென்று உஷ்ணத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறது. மண்டைத் தோடுகளில் ஆக்ரா இறங்கியது போல் நெறி. கண்களைத் திறக்க முடியவிலலை. அவனுடைய நெற்றி ஒரு இதமான விரல்களின் ஓத்தடத்துக்கு ஏங்குகின்றது". ஆனால் அவனுடைய நாச்சியார் ரூபாய், அணா, பைசாவில் மூழ்கியிருந்தாள். கச்சாத்துக்களிலிருந்த தொகைகளைக் கூட்டிக் கொண்டும், மீதிப் பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்துக்கொண்டுமிருந்தாள். இதுதான இன்றைய நாச்சியார்.
இது எதனால் வந்தது? எல்லோருக்கும் பிரியம் வதையாயிருக்கிற நாச்சியார், ஒரு நாள் எல்லோருடைய பார்வையிவிருந்தும் கழன்று விழுந்து விடுகிறாளே அது எப்படி வந்தது? மூக்கு மயிர் கருகும்படி உஷ்ணக் காற்றை வெளியிட்டுக் காய்ச்சலில் கணவன் உளத்துகிறபோதும், ரூபாய், அணா, பைசாவில் மூழ்கிக் கொண்டிருக்கிற நாச்சியார் எப்படிப் பிறப்பெடுத்தாள்?
சொத்துடைமை, தலைமுறைச் சுகங்கள் இவைகளைப் பற்றிய ஞானம் வந்துவிடுகிறது. உழைப்பின் பயனை எதிர்பார்க்கிற சுயநினைவு வந்துவிடுகிறது. ஆனால் இந்தச் சமூகத்தின் பொருளாதாரத்தில் உழைப்பும் பயனும் அந்நியப்பட்டே நிற்கின்றன. உழைப்பின் பயன் அவர்களுக்கு உரியதாக இல்லாதபோது குணங்கள் வீழ்கின்றன. உழைப்பின் பயனை உதிராமற் சேர்க்க நினைக்கிறபோதும், குணங்கள் வீழ்ந்து போகின்றன. இதுதான் 'பிரிய நாச்சியாரின்' வீழ்ச்சி.
அடுத்து 'ஒரு காதல் கதை' எல்லாக் காதல் கதைகளைப் போலவே, ஒன்றும் சொல்லாமல் போகிறது.
நாற்காலிக் கதையில் நல்ல நகைச்சுவையும், தெக்குத்திக் காட்டின் கஞ்சாம்பொட்டித்தனம் பற்றிய விவரணையும் நீரோட்டமாக வருகிறது. கண்ணாடியில் தண்ணீரை உற்றிவிட்டாற்போல், தங்குதடையில்லாமல் ஓடிவருகிறது.
தாய் மாமனார் பட்டக சாலையின் ஒரு ஓரத்திலுள்ள சுவரை ஒட்டியுள்ள ஒரு தூணில் சாய்ந்துதான் உட்காருவார். உட்கார்ந்ததும், முதல் காரியமாகத் தன் குடுமியை அவிழ்த்து ஒரு தரம் தட்டித் தலையைச் சொரிந்து கொடுத்துத் திரும்பவும் குடுமியினை இறுக்கிக் கட்டிக் கொண்டு விடுவார். இது தவறாமல் செய்கிற காரியம். இப்படிச் செய்துவிட்டு, அவர் தன்னையொட்டியுள்ள தரையைச் சுற்றிலும் பார்ப்பார். "தலையிலிருந்து துட்டு ஒன்னும் விழுந்ததாகத் தெரியலை” என்று சிறுசுகள் அவரைப் பார்த்து எகண்டமாகச் சொல்லிச் சிரிப்பார்கள்.
அந்த நகைச்சுவையினுடேயும் ஒரு சோகம் வருகிறது. "நாற்காலி செய்வதில் நடைமுறைக் கஷ்டம் என்னவென்றால் முதலில் பார்வைக்கு எங்கள் ஊரில் ஒரு நாற்காலி கூடக் கிடையாது. அதோடு நாற்காலி செய்யத் தெரிந்த தச்சனும் கிடையாது”.
இது கரிசல் காட்டுக் கிராமம்.
இன்னொரு ஏழ்மையும் வருகிறது. மேகாட்டிலிருந்து பருத்தி வெடிக்கும் காலத்தில் மட்டும் வந்து, பருத்தி எடுக்கும் வலசைக்காரர்கள். அவர்களில் சிலர் சம்சாரிகளின் தொழுக்களில் தங்கிக் காய்ச்சிக் குடிப்பார்கள். இடம் கிடைக்காதவர்கள் பொது இடங்களில் வசிப்பார்கள். பகிர்ந்து கொண்டு வருகிற பருத்தியில் ஒரு பகுதியை சம்சாரிகளின் வீடுகளிலேயே ஒரு சாக்கில் போட்டுக் கட்டி வைத்து விட்டு மீதி பருத்திக்குக் கடைகளில் சீனிக்கிழங்கும், மொச்சைப் பயறும், கருப்பட்டியும் வாங்கித் தின்பார்கள். முக்கியமான உணவு அவர்களுக்கு மூன்று வேளையும் சீனிக்கிழங்குதான்.
இந்த வலசைக்காரர்களில் ஒருத்தியான பேச்சியைப் பற்றிய இந்தக் கதை, அதன் அம்சங்களாலேயே அது 'தலைப்பைப்' பெற்று விடுகிறது.
யாரும் தன்னுடைய படைப்புக்களிடமிருந்து வேறுபட்டு விட முடியாது. அவனுடைய படைப்புக்கள் என்பவை அவன் வாழ்நிலையிலிருந்து வேறுபட்டவையல்ல.
ஒரு நடுத்தர விவசாயி, அவனுடைய உற்பத்திச் சாதனங்களாலே, உடமையாளனுக்குரிய குணங்களோடு இருக்கிறான். நேரடியாக உழைப்பின் மூலம் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதால் உழைக்கும் மக்களைச் சேர்ந்தவனாகவும் இருக்கிறான். இரண்டு வேறுபட்ட வர்க்கத்தின் குணாம்சங்களும் நிலவுகிற கலவையே அவன்.
அதனால்தான் பருத்தி எடுக்க வருகிற வலசைக்காரர்களைப் பற்றிச் சொல்ல முடிகிறபோது, பருத்தி கொடுக்கிற பணக்காரச் சம்சாரிகளைப் பற்றியும் சொல்ல முடிகிறது. எதிலும் பட்டுக் கொள்ளாமல் விலகிக் கொள்கிற இடைநிலையிலே இருப்பவர்களுக்கான குணமும் வருகிறது.
அதே நேரத்தில் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டிருப்பதால், நிலமற்ற கூலி விவசாயிகளான பப்புத் தாத்தா தம்பதியினரைப் பற்றிச் சொல்ல முடிகிறது. உழைப்பை மட்டுமே செய்து, பயன் பற்றி கவலைப்படாததனால், மூளை வளர்ச்சியில்லாமல் போகிற பாவய்யாக்களைப் பற்றிச் சொல்ல முடிகிறது. இதுதான் கரிசல் மண்ணின் ராஜநாராயணன்.
விகாரமான உருவமும், வயிற்றுப்பாட்டைத் தேடுகிற ஏழ்மையும் இருப்பதாலே, வாழ்க்கையின் எல்லாப் பலன்களிலிருந்தும் ஒதுக்கப்பட்டுவிட்ட பேச்சியின் கதை, மிக உருக்கமாக, விஷயங்களின் சீர் வரிசையோடு நிற்கிறது. பேச்சி ஒரு சுகமான கனவு கண்டாள் என்று கதை ஆரம்பமாகிறது, ஒரு ஏழைக் குழந்தை - தனக்கு முன்னால் ஒரு பட்சணக் கடை கனவு கண்டது என்பது போல் இருக்கிறது. விகாரமான உருவத்தின் நளினமான ஆசைகள் எப்படி வீழ்கின்றன என்பதில் முடிகிறது.
புறப்பாடு சிறுகதை - தமிழுக்குப் புதிய செய்தி. புதிய பாணி. அந்தப் பழக்க வழக்கங்கள் எவ்வளவு அருமையாகச் சொல்லப்படுகின்றன, நகைச்சுவை பீறிட்டு வர.
"அண்ணாரப்பக் கவுண்டர் ஒரு வருஷமாக இந்தா, அந்தா என்று வரகந்தட்டு விளையாட்டில் மறுக்குகிற மாதிரிக் காலை மறுக்கிக் கொண்டு பிடிபடாமல் இருந்து கொண்டிருக்கிறார். கவுண்டரின் கணக்கைச் சித்திரபுத்திரன் தொலைத்து விட்டான்" என்கிறார்கள் ஊர்வாசிகள்.
சாகாமலே, கிளியந்தட்டு விளையாடுகிற கவுண்டருக்குப் புஞ்சை மண்ணைக் கரைத்துப் புகட்டியதும் இறந்து போகிறார். அப்போது, கூட்டத்திலிருந்து விவசாயி ஒருவர் கிண்டல் செய்கிறார். "பரமபதத்திலிருந்து தேர் ஒன்று வந்தது. ஒருத்தரை இந்த உடம்போடு கூட்டி போக வந்திருந்த தேவதூதர்களிடம் ஒருவர் கேட்டாராம். இந்த உடம்போடு நான் அங்கே வர ஆட்சேபணை இல்லை. ஆனால் எனக்கு அங்கே கரிசல் நிலம் எத்தனை ஏக்கர் கிடைக்கும்” என்று.
பிரத்யேகமான பாத்திரங்களையே எடுத்துக் கொள்வது ராஜநாராயணனின் வழமை முறை. ஜீவன் கதையில் வரும் அங்குப்பிள்ளை, இது மாதிரியான ஒரு பிள்ளைதான். அங்கஹீனர்களுக்கெல்லாம் வாழ்க்கை சரியாகச் சொல்லப்படாதபோது, ஒரு ஊமையின் வாழ்க்கைப் பிரவேசம் எப்படி இருக்கிறது என்பதை பரிவு லயத்துடன் சொல்கிற கதை. லவலேசமும் வாழ்வின் ஒரு ஓரத்தில் கூட உட்கார அனுமதிக்கப்படாத அங்குப்பிள்ளை, ஒரு ஊமையின் ஆசைகளோடு விவரிக்கப்படுகிறான். ஊமையின் பாஷை எவ்வளவு ரம்மியமாகச் சொல்லப்படுகிறது. சத்தமில்லாத அந்தப் பாஷைக்குத் கூடச் சந்த நயத்தை உண்டாக்கி விடுகிறார் ராஜநாராயணன். “பெண் என்று சொல்ல வேண்டுமானால், மஞ்சள் பூசுகிறதைப் போல் கன்னத்தில் தேய்த்துக் காண்பிக்க வேண்டும். அல்லது விரலால் மூக்கின் மேல் தொட்டுக் காண்பித்து மூக்குத்தியைத் தெரியப்படுத்த வேண்டும். பருவப் பெண்ணைக் குறிப்பிட வேண்டுமென்றால், விரல்களைக் குவித்து மாரில் வைக்க வேண்டும்.”
அங்குப்பிள்ளைக்குத் தன் ஜாதி உசத்தி என்ற நினைப்பு. அதோடு அவர்கள் சைவம். "இன்னைக்கு எங்க வீட்லே (பறவை தரையில் கொத்துவது போலச் சைகை காட்டி) கோழிக் கறி சாப்பிடுறியா?” என்று என் தம்பி கேட்பான். உடனே அவங்குப்பிள்ளைக்குச் சிரிப்புக் கலந்த பொய்க் கோபம் வந்து, அவனை அடிக்கப் போவது போல் பாவனை செய்வான். அப்புறம் எங்களை பார்த்து, இவன் சுத்த மோசம், சுத்த மோசம் என்று முகத்தை வெறுப்பாக வைத்துக் கொண்டு விரல்களைத் தண்ணீரில் நனைத்து உதறுவது போல உதறி உதறிக் காட்டுவான்".
'விளைவு' கதையும் இதுதான். பணக்கார விவசாயி மகளான 'சுப்பாலுவின்' ஏழைக் குறும்பு, பாவய்யாவின் கோவணத் துணியைக் கழற்றிவிட்டு ஓடச் செய்கிறது. எத்னையோ பேர் வந்து சொல்கிறபோதும் பாவய்யா கோவணத் துணியை எடுத்துக் கட்டாமல் சொல்கிறார்: "கோமணட்டை எடுட்டு நா வச்சிக்கிட மாட்டேன். அவதானே அவுட்டா, அவதான் வண்டு வச்சிவிடணும்.
பாவய்யாவுக்கு ஆதரவாகவே ஊர்க் கருத்து நிற்கிறது. அதிகாரத்தை எதிர்த்துத் திரள்கிற மனப்பான்மை இங்கு சொல்லப்படுகிறது. சுப்பாலுவின் சித்தப்பா கோபாவேசமாக வந்து பாவய்யாவை, "ஒன்னை இப்போ செருப்பைக் களத்தி அடிக்கேன். தூண்டி விட்ட ஊர்ப் பய புள்ளகள்ளே, எவன் வந்து இப்போ ஒனக்கு உதவுதான்னு பாப்போம்" என்கிறார்.
இது அதிகாரத்தின் ஆரம்பம்.
ஓங்கிய கையை ஒரு கை வந்து பிடித்துக் கொண்டது. அப்படிப் பிடித்துக் தொண்ட கைக்கு உடையவர் கேட்டார்: "நீரு செய்யிறது ஒமக்கே நல்லாயிருக்கா? நீரு பெரிய பணக்காரருனனா அது ஓம்மோட இருக்கட்டும். அதை விட்டுவிட்டு ஊர்க்காரன்தான் இதுக்குக் காரணம்னு சொன்னா, அதை உம்மாலே 'புரு' பண்ண முடியுமா? முந்தி இப்படித்தான் பாவம் அனந்தப்ப நாயக்கரைக் கோழி பிடிக்கான்னு சொல்லி அநியாயமா ஊரை விட்டுத் தூத்திட்டீஹெ. இப்போ என்னடான்னா ஊர்க்காரங்கதான் இப்படித் தூண்டி விட்டாங்கன்னு சொல்றீரு. சும்மா இப்படி வாய் புளித்ததோ, மாங்காய் புளிச்சதோன்னு பேசாதீரும். இப்போ உம்ம மகள் செய்த ஏழைக் குறும்பு மட்டும் ஞாயமோ?"
நில உடைமை அதிகாரத்தை எதிர்த்து ஊர்க் கருத்துத் திரள்கிறது. இளவட்டங்கள் பாவய்யா நிலையைப் பலமாக ஆதரித்துப் பேசி ஒரு மின்னல் வேகப் பிரச்சாரத்தையே முடுக்கி விடுகிறார்கள். "தப்பிதம் பூராவும் சுப்பாலுவின் பேரில்தான் இருக்கிறதென்றும், அவள் ஒரு ஆணை தண்ணீர்த் துறையில் பல பேருக்கு முன்னால் பகிரங்கமாக வைத்து இப்படிப் பெரும் அவமானப்படுத்திய தப்பிதத்துக்காக, அவளேதான் அவனுக்குக் கோவணம் வைத்துவிட வேண்டுமென்றும்” மணியம் நாய்க்கர் உட்படப் பெரியவர்கள் தீர்ப்புச் சொல்கிறார்கள்.
ஒரு பாவய்யா கோவணம் இழந்து நிற்பதல்ல கதை. அதற்குப் பின்னால் இருக்கிற அதிகாரக் குறும்பை எதிர்த்த ஊர்க் கொதிப்பு தான் கதை.
இதில் மிக உச்ச நிலையில் நிற்கிற கதை - பப்புத் தாத்தா தம்பதிகள் சரித்திரம் தான். 'கறிவேப்பிலைகள்' என்ற தலைப்பே அதற்கொரு தனி ஆவர்த்தனமாய் ஒலிக்கிறது. ஒன்பது வயதில் மாடு மேய்க்க ஆரம்பித்துப் பதினாறு வயசில் மேழி பிடிக்க ஆரம்பித்த அந்தக் கை, அறுபத்து ஓராவது் வயசிலும் மேழியை இடறவிடாமல் அழுத்திப் பிடித்துப் போதிய போஷாக்கு இல்லாததாலும், அரைப் பட்டினியாலும், தரத்துக்கு மிஞ்சிய வேலையாலும் தவங்கி, "அந்த கல் மண்டபத்தைத் தவிர வீடுகள் யாவற்றிலும் தீபம் பொருத்தியாகிவிட்டது. அங்கிருந்து ஒரு உருவம் குனிந்து ஒரு கையால் கம்பை ஊன்றித் தலை கிடுகிடுவென்று நடுங்கத் தட்டுண்டு தடுமாறி ஊருக்குள் நுழைகிறதே, அது யார் தெரிகிறதா? அதுதான் பப்புத் தாத்தா. அவர் கையில் இருப்பது என்ன என்று தெரிகிறதா? அது ஒரு மண் சட்டி" என்று போகிறதே இதுதான் பப்புத் தம்பதியர் கதை.
ஐப்பசி மாத அடைமழையில் உழைக்கிறவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். ஈரத் துணியை வயிற்றில் மடித்துப் போட்டுக் கொண்டால் பசி தெரிவதில்லை. பசியினால் ஏற்படுகிற வயிற்று வலியும் குறையும். இந்த நல்ல முறையை விவசாயக் கூலிகள் அனைவருமே அறிவார்கள். பப்புத் தாத்தா சொல்கிறார், "சன்னகுட்டி (தன்னுடைய மனைவியை அவர் பிரியமாகக் கூப்பிடும்போது இப்படிப் பெயர் சூட்டித்தான் அழைப்பார்). இந்த ஈரத்துணிதான் வயத்துக்கு எம்புட்டு இதமா இருக்கு. இதைக் கண்டுபுடிச்ச அந்தப் புண்ணியவான் நல்லா இருக்கணும்".
கிடை அதன் விவரிப்புக்களுக்காகத் தனி இடம் பெற்றாலும், கறிவேப்பிலைகள் நிலமற்ற விவசாயக் கூலியின் வேதனையில் முங்கி, அவன் உழைப்புச் சுரண்டலில் ஆத்திரப்பட்டுப் படிக்கிறவனின் நெஞ்சடைத்து விடச் செய்கிற உன்னதமான முடிவைப் பெறுகிறது. சமூகத்தின் ஒரு கூறாய் ஆசிரியர் ஒன்றிவிட்ட நேரம்தான், கறிவேப்பிலைகள் என்ற தலைப்பைத் தந்திருக்கிறது
கிடை இன்னொரு உன்னதமான படையல். இருக்கிற வீட்டுப் பிள்ளையான எல்லப்பனுக்கும், பள்ளக்குடியைச் சேர்ந்த செவனிக்கும் இடையில் சின்ன விளையாட்டு நடந்து விடுகிறது. நில உடைமை அதிகாரம், எவ்வளவு லாவகமாக, அசிங்கமாக அதை அடக்கி விடுகிறது என்பதுதான் கதையின் முத்தாய்ப்பு.
மொத்தமாக இவர் காட்ட வருகிற சமூகம் யாருடையது? இப்படி வெட்டொன்று துண்டொன்றாகச் சொல்லிவிடமுடியாது, வித்தியாசமான பாத்திரங்கள்; வித்தியாசமான பாத்திரங்களை எடுத்துக் கொள்வதன் மூலம், யதார்த்தங்களைச் சொல்வது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அவைகளின் பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள், உறவுகள் இவைகளை ஆழமாகப் பார்க்கிறார். அவை இந்த சமூகத்தோடு சம்பந்தப்பட்டவை. அதனாலேயே இந்தச் சமூகம் பற்றியும் சொல்ல வேண்டி வந்துவிடுகிறது.
வித்தியாசமான பாத்திரங்களை எடுத்துக் கொள்வது என்பது ஒரு சார்பான மக்களையெல்லாம் அதன் மூலம் வெளிப்படுத்துவதாக (represent) இருக்க வேண்டும். ஆனால் இவருடைய கதைகளில் பல பாத்திரங்கள் தங்களுடைய தனித்துவத்தோடு தனியாகவே நிற்கின்றன.
அவருடைய உறவுகள் எல்லாம். நடுத்தர விவசாயிகளுடனும், உழைக்கும் மக்களுடனும் தான். உழைக்கும் ரங்கையாவின் அழுக்குத் துண்டுகளும், நடுத்தர விவசாயின் உழைப்பு வேட்டியும் அவர் மீது பட்டிருக்கின்றன. அதனால் தான் அவர்களின் குணங்களை இழை பிரித்துப் பார்க்கிற கைலாகு வந்திருக்கிறது, அதனால் தான் குணச்சித்திரங்கள் கொத்துக் கொத்தாக அழகாக கடந்து செல்கின்றன.
நாற்காலியில் வருகிற நடுத்தரக் குடும்பமும், தாய் மாமனாரும் அவருடையதுதான், கன்னிமை நாச்சியாரும், அவள் கன்னி காத்த நாட்களும் இங்கேதான், கிடையில் வருகிற நுன்ன கொண்ட ஸ்ரீவேங்கட ராமானுஜ நாய்க்கர் என்கிற ரெட்டைக் கதவு நாயக்கரும், அவர் திருமாளிகையும் அவருக்குப் பரிச்சயமானது தான்.
கரிசல் மண் பிறக்கிறபோதே, அதன் தலையில் ஞாந ஸ்நானம் செய்து வைத்த தரித்திரம் வருகிறது. கரிசல் மண்ணில் புத்திரர்கள் பிறக்கிறபோதே அவர்களுக்குச் சேனைப் பாலுடன் சேர்த்துத் தந்த ஏழ்மை வருகிறது.
மாறாக அவர்களுக்கான எல்லா அழுகுரலையும் இதில் கேட்க முடியும், அவர்களுக்கான எல்லா ஆவேசத்தையும் காண முடியும். அவரிடம் தாளில் பேனா எழுதுகிற சத்தம் கூட வராது. அவர்களின் அறியாமையே, துயர - துன்பங்களே தன் போக்கில் சொல்லப்பட்டிருக்கும். யாரையும் நினைத்து எழுதப்பட்டவை அல்ல. ஆனால் வேறு யாருக்கும் பூஜை செய்வதற்காகவும் எழுதப்பட்வையும் அல்ல அவை.
அவருடைய நகைச்சுவைகள் எல்லாம் விவசாயிகளைச் சுற்றியைவயே, அவர்களின் கஞ்சாம்பத்தித்தனத்தையும், பழக்கவழக்கங்களையும் பற்றியவை.
"தாய் மாமனார் களிப்பாக்கை எடுத்து முதலில் முகந்து பார்ப்பார். அப்படி முகந்து பார்த்து விட்டால் சொக்கு ஏற்படாதாம். அடுத்து அந்தப் பாக்கை ஊதுவார். அதிலுள்ள கண்னுக்குத் தெரியாத பாக்குப் புழுக்கள் போக வேண்டாமா? அதற்காக, ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் இந்த முகர்ந்து பார்த்தலும் ஊதலும் வர வர வேகமாகி, ஓரு நாலைந்து தடவை மூக்குக்கும் வாய்க்குமாகக் கை மேலும் கீழும் உம் உஷ், உம் உஷ் என்ற சத்தத்துடன் சத்தமாகி டபக்கென்று போய் விடும்”.
நாமக்கோனார் முதல் முதலாக ரயிலேறித் திருச்செந்தூர் போகிறார். திருச்செந்தூரில் முதல் முதலாகக் கடலைப் பார்த்தபோது ஒரே ஆனந்தக் குரலில் “யோவ் கோவால் நாயக்கரே பார்த்தீரா? மழை இங்கே சக்கைப் போடு போட்டிருக்கே. தண்ணீரைப்பாரும். எப்படி கெத்துக் கெத்தண்ணு கெட்டிக் கிடக்கு“, என்று சொல்கிறார்.
ஒரு பேனா லாவண்யமுள்ள கலைஞன், அதே நேரத்தில் எதைப் பற்றியும் திடமான முடிவுக்கு வாராத ஒரு மனிதர் - இது அவருடைய ஓவியம்.
தெக்குத்திக் காட்டின் ரசனையுள்ள பழக்க வழக்கங்கள், விசித்திரமான பாத்திரங்கள். தன் போக்கான நடை, சொக்கவைக்கும் காட்சி விவரணைகள், ஆனால் தனக்கென்று தனி அபிப்ராயம் கொண்ட ஒருவர் - இதுதான் கி.ரா.
- பா.செயப்பிரகாசம்
கருத்துகள்
கருத்துரையிடுக