இப்படிக்கு பா.செயப்பிரகாசம்

தமிழனை தேடிப் பிடித்துக் கொலை செய்த ஒரு நாடு, இப்போது தமிழை வளர்க்க மாநாடு கூட்டப்போகிறதாம்!

2011 ஜனவரியில் கொழும்பில் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடக்கப்போகிறது. 'சர்வதேச ரீதியாகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றிணைத்துக் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் முயற்சி!' என்கிறது இந்த மாநாடு குறித்து ஏற்பாட்டாளர்களின் அறிக்கை. ஈழத் தமிழராயினும், புலம் பெயர்ந்த தமிழராயினும், தமக்கென ஒரு தாயகம் கண்டு, சுயநிர்ணய உரிமையைக் கொண்டாடுதல்தான் அவர்களின் விருப்பு. அதைத் தடுத்து, தமிழின அடையாளமே இல்லாமல் செய்கிற சிங்களப் பேரினவாதத்தின் மீதானது அவர்களது அளவு கடந்த வெறுப்பு.


இந்த இரு எல்லைகள் மட்டுமே தமிழினத்தின் விருப்பாகவும் வெறுப்பாகவும் இருக்க முடியும். இந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து, புலம்பெயர் தமிழ்  எழுத்தாளர்கள் ஒன்றிணைதல் என்பது, புலம்பெயர்ந்த தமிழர்களில் தமிழீழ விடுதலைக்கு எதிராகவும், குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் நிற்கும் சிலரை ஒன்று கூட்டும் காரியமாகவே காண முடியும். மாநாட்டில் இலங்கை அரசினையோ ராஜ பக்ஷேக்களையோ விமர்சித்துப் பேச இயலுமா? அவ்வாறு தமிழினத்தை அழித்தவனை விமர் சிக்காமல், தமிழை செழுமைப்படுத்த என்ன திட்டம் வைத்துவிட முடியும்?

உலக அளவில் பரந்து வாழுவதால், வாழுகிற நாடுகளில் உரிமைக்குரல் எழுப்புவதும், ஒன்றிணைப்பதும் இன்று சாத்தியமாகி உள்ளது. லண்டனில் ஓரிரு மாதங்கள் முன்னர் உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநாட்டில் வெளி விவகாரத் துறை அமைச்சர் மிலி பாண்ட், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழின உரிமை மீட்டெடுக்கப்படவேண்டுமெனப் பேசினார்கள். உடனே, இலங்கை பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக, ''வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கிளைகளை வலுப்படுத்த சில வல்லரசுகள் முயற்சிகளை மேற்கொள்ளுகின்றன. இலங்கை, ஆசிய நாடுகளில் வலுவான நாடாக வளருவது சில சக்திகளுக்குப் பிடிக்கவில்லை!'' என சீற்றத்தைக் கொட்டினார்.

ஈழத் தமிழர் பிரச்னையைக் கையாண்டதில் உலக நாடுகளுக்கு அவரவர் நலனே முதன்மையாக வந்தது. அதைக் கையாண்டது குறித்து அவர்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் கிடையாது. ஓர் இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதில், அவை பெரும் பங்கு வகித்ததை ஓரங்கட்டிவிட முடியாது. அந்த நாடுகளின் காதுகளில் மறுபடி நுழைக்கவும், அழுத்தம் தரவுமான கடமையினைப் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் செய்து வருகிறார்கள். அவர்களைக் குறிவைத்து சலனப்படுத்தும் காரியத்தை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் செய்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

இன்றைய தகிக்கும் நிலையில், தமிழர் கோருவது தமிழை வளர்ப்பது அல்ல; தமிழை வளர்ப்பதற்கான அரசியல் அதிகாரத்தையே. சிங்களத்துக்கு சமமாகத் தமிழ் என்று நிறுவுவதற்கான அரசியல் அதிகாரத்தைக் கேட்பதே முதன்மைப் பணியே தவிர, உலகத்துக்கும் மேலாகத் தமிழைக் கொண்டுசெல்லும் பணி அல்ல. அதைச் செய்வதாகக் கூறித்தான் 350 கோடி செலவில் கோவையில் செம்மொழி மாநாடு எல்லா ஒப்பாரிகளையும் பாடி முடித்துவிட்டதே! மொழி வளர்ச்சிக்கு அரசியல் உரிமையே முதல் தேவையாகும் என்பதை எவரும் உணர்வர். ஆட்சியில், நிர்வாகத்தில், கல்வியில், வேலை வாய்ப்பில் எல்லா இனங்களின் வாழ்வையும் நிர்ணயிப்பதில் சிங்களம் எதனால் சாத்தியமானது? அரசியல் மேலாண்மையில்தான். சிங்களத்துக்கு சமமாக தமிழ் மொழியை வளர்ச்சி செய்ய வெண்டுமெனில், மொழி வளர்ச்சிக்கு முன் நிபந்தனையாக ஈழத்து மண்ணில் அரசியல் அதிகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அரசியல்பற்றி எண்ணிப் பார்க்காமல் மொழி வளர்ச்சிக்கு தலைகொடுக்கப் போகும் வித்தையை எவ்வாறு செய்யப் போகிறார்கள்?

தமிழர் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் என்ற போர்வையில் ராஜபக்ஷேக்கள் வேறு ஒரு காரியத்துக்கு வழிவகை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அடிமை சமூகமாக ஆக்கப்பட்ட தமிழினத்தை - சிங்கள இனக் கலப்பில் செலுத்துவதுதான் அது. தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது அதிகாரம் அல்ல; அபிவிருத்திதான் என்று மொழி வளர்ச்சிக்கு வழி அமைப்பதுபோல் காட்டுவதும் ஓர் உத்தியாகும்.

''வளர்ச்சியை விரும்புகிற ஒரு தேசிய இனம், முதலில் தனது சுதந்திரத்தைப் பெற  வேண்டும். அவர்களுடைய தேசிய சுதந்திரம் இரண்டாம்பட்சம் என மற்றவர்கள் அவர்களுக்குக் கூறுவது தேவையற்ற வேலை!'' என்று ஒரு சமயத்தில் போலந்து பற்றி மார்க்ஸும் ஏங்கல்ஸும் காவுட்ஸ்கிக்கு எழுதினார்கள்.

இவ்வாறான சிந்தனைகளால் வார்க்கப்பட்டு, வழி நடக்கும் ஈழத் தமிழர்களை தடம் மாறச் செய்ய, மொழி வளர்ச்சி, கலை, இலக்கிய வளர்ச்சி என்ற பெயரில் கொழும்புத் தமிழர்கள் முயலுகிறார்கள். இதனை ராஜபக்ஷேயிஸத்தின் இன்னொரு பக்கம் என்கிறோம். தடம் மாறுதல் ஆபத்தானது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்களை, மொழி வளர்ச்சி, கலை, இலக்கிய மேம்பாடு என்று தடம் மாற்றி ஓடவைக்கும் பொறுப்பு கொழும்புத் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழர் கோருவது மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி அல்ல என்பதை, ஈழத்து அரசியல் ஆய்வாளர் தனபாலா முன்வைக்கிறார்.

''தமிழர் கோருவது அபிவிருத்தி செய்வதற்கான அரசியல் அதிகாரத்தைத்தான். அதைத்தான் நாம் தீர்வு என்கிறோம். அதாவது நாம் அபிவிருத்தியை நிராகரிக்கவில்லை. எமது வாழ்நிலை, பழக்க வழக்கம், பண்பாடு என்பவற்றுக்கு இசைவான அபிவிருத்தியை நாம் செய்வதற்கு எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று கோருகிறோமே தவிர, தமிழினத்தை சிங்கள இனமாகக் கரைப்பதற்கு ஏதுவான பண்பாட்டுக் கொலையைச் செய்யவல்ல சிங்கள மேலாதிக்க அரசியல் ஆதிக்கத்தை அல்ல; இங்கே இலங்கை அரசு ஒடுக்குமுறையை இன்னொரு தளத்துக்கு அபிவிருத்தி என்ற அழகான வார்த்தைப் பிரயோகம் மூலம் ராஜதந்திர ரீதியாக நகர்த்தியுள்ளது. எனவே, அரசியலைப் பற்றிக் கதைக்க மாட்டோம்; அபிவிருத்தி பற்றிக் கதைப்போம் என்பது ஒடுக்குமுறைக்கான இன்னொரு பெயராகும்!'' என்கிறார்.

இந்திய அரசும் இலங்கை அரசும் கை கோத்து நடத்திய திரைப்பட விழாவைத் தோல்வி காணச் செய்த தமிழர் ஒற்றுமை நமக்கு ஒரு முன்மாதிரியாகும். இந்த ஒற்றுமை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்கவும் அவசியப்படும் தருணம் இது. குறிப்பாக, தமிழக எழுத்தாளர்களை, புலம்பெயர் எழுத்தாளர்களை அழைக்கிறோம். 'நடைபெறப் போகும் கொழும்பு மாநாட்டில் நிச்சயமாக நாங்கள் இல்லை' என்போம்!

நன்றி: ஜூனியர் விகடன் - 15 செப்டம்பர் 2010

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்