அவர் மான்களோடு ஓடினார்


(அவர்கள் இருவர்; 20-நூற்றாண்டில் தமிழகத்தில் பிறந்து பெரிதினும் பெரிதாய் சமுதாயத்துக்கு ஊழியம் செய்தவர்கள். ஒருவர் அண்ணா. அவரை முதலில் வாசித்தேன்; பிறகு அவரைக் கேட்டேன். அவரைக் கண்டேன். அவரை உணர்ந்தபடி சொல்வது வரலாற்றுக் கட்டளை)   

1956 என நினைவு: மாவட்டத்தின் வடகிழக்கு மூலையில் எங்கள் ஊரில் எல்லை முடிவு. எல்லை பள்ளியிலிருந்து 500 மீ தொலைவு. இடைநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்  காலத்தில், மேலத் தெரு சீத்தாராமன் அண்ணன். அவர் வீட்டுத்  திண்ணை ஒரு படிப்பகம்; கலைமன்றம், பொன்னி, திராவிட நாடு, முரசொலி இதழ்கள் வாசிக்க வந்து சென்றவர்களில் அவன் எட்டாம் வகுப்பு மாணவன்: திராவிட நாடா, விடுதலையா, முரசொலி மலரா என முட்டி முட்டிப் தேடினாலும் ஞாபகம் பிழைக்கிறது: தெய்வங்களின் திருவிளையாடல்களை – குறிப்பாகப் பாலியல் உறவாட்டங்களை ஒரு மலரில் அம்பலப்படுத்தி கோட்டோவியங்களாய்ச் சித்தரித்திருந்தனர். இப்படிக் கொச்சைப் படுத்தலாமா, மற்றவர்கள் போல நான் அசூசையாக உணர்ந்தான்.

பிள்ளையார் கோயில் மடத்தில் ‘விசிப் பலகை’ மேல் புத்தகம் விரித்து புராணவாசிப்பு. கையில் அரிக்கேன் விளக்கு  தூக்கிக்கொண்டு ’கதை  கேட்கப்’  போவார்கள். அண்ணாமலைத் தாத்தா வாசிப்பார். கதைக்குத் தக்கன நாட்களெடுக்கும்: அது அருணாச்சல புராணம். சிவனும் பார்வதியும் உல்லாசமாய் மலைகளுக்கிடையில் உலா வந்து கொண்டிருக்கையில் ஒரு களிறும் (ஆண் யானை), மத்தகமும் (பெண் யானை) சல்லாபித்துக் கொண்டிருப்பது காணுகிறார்கள். கண்டதும் இவர்களுக்கும் அதுபோல் சல்லாபிக்க வேண்டுமென்று விருப்பமாகி,  “யானைபோல் உருவெடுத்துப் புணர்ந்தார்கள்” என்று வரும்: அதைப் படித்துவிட்டு, கண்ணாடி வழியாகக் கூட்டத்தை ஏறிட்டுப் பார்த்தார் அண்ணாமலைத் தாத்தா. வாசிப்பைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்த சங்கம்மா ஒரு கைம்பெண்: ஒத்தைப்பாரி: கொஞ்ச வயசுக்காரியான சங்கம்மா சொல்வாள் “கடைசியில கடவுளும் இந்த வேலைதான் பாத்திருக்காக. அண்ணாமலையாரும் உண்ணாமுலையாரும் ஒருத்தரை ஒருத்தர் தொடுத்துக் கிட்டாங்களாக்கும்”.

இந்த விசயத்தைத் தானே, சீத்தாராம் அண்ணன் வீட்டில் வாசித்த மலரில் சித்திரமாகப் போட்டிருந்தர்கள். அன்று வாசித்தவேளையில்  அசூயையாய்த் தென்பட்டது. யோசிக்கையில் எந்தத் தப்பிதமும் இல்லையெனப்பட்டது. மனிதன் கற்பித்த கடவுளுக்கு மனிதன் தன்னுடைய குணங்களை கூடுவிட்டுக் கூடு பாயவைத்து தன்னைக் காணுகிறான் எனப்பட்டது. கோயில் மடத்துக்கு புராணவாசிப்புக்கு பாட்டியுடன்  போவது அன்றோடு அத்துப்போனது.

களத்துமேட்டில் சீத்தாராமண்ணனும், சீனிவாசகனும் பேசிக்கொண்டிருந்தவேளை - பாட்டியும் பெரியம்மாவும் சாயந்தரம் காட்டுவேலை முடிந்து திரும்புகையில் கண்டார்கள். பார்த்ததும் தங்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டதை, பாட்டியைப் பின் தொடர்ந்த நான் கேட்க நேர்ந்தது:

“இவனுக தான் சாமி இல்லேன்னு பேசுற பயலுக?”

“ஆமா… ஆமா… எங் காதுக்கும் எட்டுச்சி”

“கூழுப்பானைத் தாத்தாகூட வாக்குவாதமாகி, எடுவட்ட பயக முறுக்கிக்கிட்டு அடிக்கப் போயிருக்காக”

“நல்லாத்தான திரிஞ்சாங்க; இப்ப என்ன?”

“வௌங்குமா, அதான் மழையே காணலே”

இப்படிதான் சாமி இல்லை எனப் பேசிடும் இளந்தாரிகள் ரெண்டு பேரும் எனக்கு அறிமுகமானார்கள்: அவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்த  நிழல் பாட்டி பெறத்தாலயே போனது.

பாட்டியின் நிழலாகத் தொடர்ந்தாலும், கருத்தின் நிழல் அந்த இரு  இளந்தாரிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தது. சாமியில்லை என்று சொன்ன ‘கறுப்புச் சட்டைக்காரர்களான’ பெரியாரும் அண்ணாவும் எனக்குள் எதிர்மறை வழியாக இறங்கினார்கள். ஆமாம். பசுமரத்தாணிதான். அப்போது பால்யகால பசிய மரமாக இருந்தேன். எதிர்க்காற்றாய் எனக்குள் நுழைந்தவர்கள், இயல்பான தன் காற்றாய் ஆகிப் போயினர்.

பிறகு சீத்தாராம் அண்ணனின் வீட்டுத் திண்ணை என்னைத்  தன்னிடத்துச் சேர்த்துக்கொண்டது: வாசிப்புப்பழக்கம் முதன்முதலாகத் தொட்டதும் தீவிரம் கொண்டதும்  அப்போது நடந்தன.

அந்த ஆண்டில் பள்ளி நூலகம் புதிதாய் ஏற்படுத்தியிருந்தனர்: புதிய நூலகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து, உலக அறிவுச் சேகரிப்புகளை மொத்தமாய்க் தரிசிக்க வைத்தார்கள்: கொழுத்த மீன் ஒன்று என் அறிவு வயிற்றுக்குள் அசைந்தது போல் உயிர்ப்புடன் நூலகம்: முதலில் சீத்தாராமன் வீட்டுத்திண்ணை; இரண்டாவது பள்ளி நூலகம். இந்த மேய்ச்சல் மாடு இரண்டு ’கம்பங் காட்டையும்’ காலி செய்துவிட்டிருந்தது.

பள்ளி நூலகத்தில் தமிழறிஞர்கள் இருந்தார்கள்: எட்டயபுரத்துக் குயிலும், புதுவைப் புயலும் வாழ்ந்தார்கள்: திரு.வி.க இருந்தார். மு.வ வந்தார். இந்தக் கூட்டத்தில் அண்ணாவைக் கண்டேன். ரோமாபுரி ராணிகள், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்; தில்லை வில்லாளன், டி.கே.சீனிவாசன், புலவர் குழந்தை, அப்பாத்துரையார், சேக்ஷ்பியர் வரை அனைவரும் நூலகம் வழி பேசினார்கள்.

சினிமாப் பாட்டுப்புத்தகங்கள் விற்பனையும் வாசிப்பும்  மனப்பாடமும் 50, 60 ஆண்டுகள் முன் பெரிய மோஸ்தராக இருந்தது: 10 அல்லது 20 பக்கங்களில், காலணா, அரையணாவில் (அக்கால நாணயம்) ஒவ்வொரு பெட்டிக்கடையிலும்  விற்பனையாகின. மனோகரா, பராசக்தி, சொர்க்கவாசல் என்று சினிமா வசனப் புத்தகங்கள் கொடுக்குப் பிடித்தன; சிறு, குறு நகரங்கள், மாநகரங்கள் ஒவ்வொரு சந்தியிலும், தெருக்களிலும் மன்றம், படிப்பகம், வாசக சாலை உண்டாகி வாசிப்பு, விவாதம், அலசல் அடுத்த கட்டத்துக்கு நகருகிறது. தேநீரகங்கள், தையற்கடைகள், முடி திருத்தகம், சைக்கிள் கடைகளில் பத்திரிகை வாசிப்புக்குத் தீனி போட்டார்கள். பெரியாரின் திராவிடர் கழகம், அண்ணா, அவரது தம்பிகளின் திராவிடமுன்னேற்றக் கழகம் ஆகியவை இந்த புதிய வாசிப்புக்கும் சிந்திப்புக்கும் மூல காரணமாயிருந்தன.

எங்கள் ஊர்ச் சாலையில் பேருந்து நிறுத்துமிடத்தில் கொடிமர மேடை: முன்பக்கம் இடது, வலது, பின் பக்கங்களில் மழை பெய்த ஈரமமாய் புளியந்தோப்பு நிழல். கொஞ்சம் தள்ளி தையலகம், கிளப் கடை. சினிமா வசனப் புத்தகங்களோடு, நம் நாடு, முரசொலி, மன்றம் – போன்ற இதழ்கள் வட்டமான கொடிமர மேடையில் கிடந்தன; உபயம் – தையல்கார முத்து. அதைப் பற்றி காங்கிரஸ் கட்சிக்காரர்களிடம் புகைச்சல் கிளம்பியபோது, முத்து “அது சரி!” என்று கேள்வி எழுப்ப, “என்ன சரி?” என்று ‘கொடுங் கொடுன்னு’ பார்த்தார்கள் காங்கிரஸ்காரர்கள்.

“சனங்க படிக்கனுமா, இல்லையா. எனக்கு ஏன்டதைச் செய்றன்.” என்றார் முத்து.

ஒங்களுக்கும் பெலம் உண்டும்னா போட்டுக்கோங்க என்பது  சொல்லாமல் விடப்பட்ட மிச்சம். புதிதாகப் பெருகிய பள்ளிகளில் ஓரளவு படித்து  வந்த தலைமுறைக்கு வாசிப்பு, விதவா மணம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, சீர்திருத்தக் கருத்துகள் வீச்சு வசீகரம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

50-களின் இறுதியில் மதுரையில் உயர் நிலைப்பள்ளிப் படிப்பு.  மதுரையில் சித்தப்பா மீனாட்சி பஞ்சாலையில் தொழிலாளி. அவர் வீட்டில் தங்கி அவர் உதவியுடன் கல்லூரி வரை படிப்பு முடிப்பு.

மதுரை தொடர்வண்டி நிலையம் வலது புறம் ஒட்டி இருந்த பிராமணப்பள்ளி; அது மதுரைக் கல்லூரி போல் முழுக்க பிராமண பிராமண நிர்வாகத்தில் நடத்தப்பட்டது. அத்தனை பேரும் பிராமண ஆசிரியர்கள்; ஆசிரியர் கூட்டத்தில் ஒரு வேத்து உசுரைக் காண முடியவில்லை.

கிராம இடைநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முடியுந்தட்டியும்    ’கெட்டிக்கார’ முதல் மாணவனாய் பிரகாசித்தவன் மதுரைப் பிராமணர் பள்ளியில், வகுப்பில் இருக்கிற இடம் தெரியாமல் ஆகிப்போனான்.

“பாத்துகிட்டு வான்னா, கொத்தீட்டு வந்துவிடுகிற” பிராமண அறிவுக்குஞ்சுகளுக்கு நடுவில், “பூணாம் பூணான்னு” இருக்கிறவன் தெரியாமல்  போனான். விசாரிச்சா படிக்கலே, படிக்கலேன்னு குறப்பாசாங்கு  பண்ணுவாங்க: ஆனால் முதல் மாணவனிலிருந்து 50 எண்ணம் வரையிலும் அவர்கள் தான்.

அப்போது, எஸ்.எஸ்.எல்.சி எனச் சொல்லப்படும் பெரிய பத்தாம் வகுப்பு இருந்தது. பெரிய பத்துத் தேர்ச்சியாகும் வரை பல்லைக்கடி, நெல்லைக்கடின்னு பொறு, பொறுன்னு இருந்தேன். மீனாட்சி ஆலைக்கு மிகப் பக்கமாகவே இருக்கிறது “மதுரைக் கல்லூரி”. பெரிய பத்துத் தேர்ச்சி பெற்றதும் அக்கிரகாரக் கல்லூரியில் சேராமல், ஏழு கி.மீ தொலைவிலிருந்த தியாகராசர் கல்லூரியில்  சேர்ந்தததுக்கு ஒத்தக் காரணம் தமிழுக்கு பேர்பெற்ற கல்லூரி.
எனது நெஞ்சுக்கூட்டுக்குள் தகதகக்கும் இரு நாகரத்தினக் கற்களை எப்போதும் காத்து வருகிறேன். கூம்பி விரியும் தாமரை மொட்டுப்போல், நாகம் எனக்குள்ளிருந்து மேலெழுந்து, இரு ரத்தினக் கற்களைக் கையளித்துவிட்டு, சுருண்டுகொள்ளும். ஒளிமிளிரும் கற்கள் அவை!

பெரிய பத்துப் படிக்கையில், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அண்ணா சொற்பொழிவு: எங்கள் பகுதியிலிருந்து அமெரிக்கன் கல்லூரி ஆறேழு கி.மீ. தொலைவு. லட்சுமிபுரம் தென்மேற்கு மூலையென்றால், அமெரிக்கன் கல்லூரி வடகிழக்கு மூலை. மாரி என்ற அன்புச்செல்வன், மகாலிங்கம், நடராசன், நான் என நால்வர் அணி அமெரிக்கன் கல்லூரி நோக்கி நடந்தது. முழுக்கால் சட்டை, வேட்டி அணிந்த மாணவர் திரளில், நான்கு அரைக்கால் டவுசர்கள்.’பேஷ் பேஷ்’ என சில முகங்கள் ஆச்சரியமாய்ப் பார்த்தன.

தலைமையேற்றிருந்தவர் மாணவர் இந்திரஜித்து. ஆரியப் பண்பாட்டுக்கு எதிராய் பீறிட்டு அடித்த தமிழ்ப் பெயர்க் கலாச்சாரத்தின் வெளிப்பாடு அது:  தலைமையுரையில் சொன்னார், “மாணவர் மன்றத்தலைவர் பொறுப்புக்குப்  போட்டியிட்ட வேளையில், மாணவர்கள் ஒன்றே ஒன்று என்னிடம் கேட்டார்கள்: நாங்கள் உனக்கு வாக்களித்து வெற்றிபெற்றால், அண்ணாவை அழைத்து வருவாயா? என்று கேட்டார்கள். இப்போது அழைத்து வந்திருக்கிறேன்.”

அண்ணாவின் உரை அன்று அற்புதமாக அமைந்தது: எங்களுக்குத் தான் முதன்முதலாய்க் கேட்டதினால் அப்படி உணர்ந்தோமா, தெரியவில்லை. அதெல்லாம் அவருக்கு இயல்பு.
“தாமஸ் ஆல்வா எடிசன் சிறுவனாயிருந்தபோது இரவில் படித்துக் கொண்டிருந்தார். எதிரில் மண்ணெண்ணை சிம்னி விளக்கு. முட்டை போல் மேலெழுந்த தீபச் சுடரையே நோக்கிக்  கொண்டிருந்தார். எண்ணெய் இருக்கிறது. திரி இருக்கிறது: விளக்கு எரிகிறது. எண்ணெய்யில்லாமல், திரியில்லாமல், விளக்கு எரியமுடியுமா?
சின்னக் குழந்தைகளின் உற்ற துணை தாய்: அம்மாவிடம் போய், சின்னப்பையன் எடிசன் கேட்டார், “எண்ணெய்யில்லாமல், திரியில்லாமல் விளக்கு எரிய முடியுமா?”
அம்மா திடுக்கிட்டுப் பார்த்தார்: “என் செல்லமே, நேரமாகிவிட்டது, போய்த் தூங்கு”
எடிசன் அமைதியடையவில்லை: தந்தையிடம் போய் நின்றார்.
“எண்ணை இருக்கிறது. திரி இருக்கிறது; விளக்கு எரிகிறது. எண்ணெயில்லாமல், திரியில்லாமல் விளக்கு எரிய முடியுமா?”
படிப்பாளியான அப்பா கேட்டார், “நேற்றுவரை நீ நன்றாகத்தானே இருந்தாய். இன்று உனக்கு என்ன வந்தது?”
எடிசன் மறுநாள் பள்ளிக்குப் போனபோது, ஆசிரியிரிடம் இதே கேள்வியை உருட்டினார், “ஐயா, எண்ணெய் இல்லாமல், திரியில்லாமல் விளக்கு எரிய முடியாதா?”
ஆசிரியர் தன்னியல்பாய்ச் சொன்னார்: “தம்பி, வெயிலில் அலைஞ்சிட்டு வந்திருக்கே. கொஞ்சம் இளைப்பாறிக்கோ, சரியாப் போகும்”.
இவனுக்குப் பித்து சிரசுக்கு ஏறிவிட்டது என்பது அவர் கருத்து.
எண்ணெய் இருக்கிறது: திரி இருக்கிறது: விளக்கு எரிகிறது. எண்ணெய்யில்லாமல், திரியில்லாமல் விளக்கு எரியமுடியுமா?
இந்தக் கேள்விகளை எழுப்பிய தாமஸ் ஆல்வா எடிசன்தான் பின்னாளில் எண்ணெய்யில்லாமல், திரியில்லாமல் எரிகிற இந்த விளக்குகளைக் கண்டுபிடித்தார்” 
முன்னால் எரியும் மின் விளக்குகளைக் காட்டி அண்ணா நிறுத்தினார். பிரமாண்ட அரங்கில் கையொலி சத்தம் தொடர் பட்டாசு வெடியாய் நிறைந்தது. ஒவ்வொன்றாய் விவரித்து, அடுக்கி அடுக்கி, ஒரு சம்பவத்தை சிந்திப்புக்கானதாய் நெய்திருந்தார் . பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

ஒரு மணிநேரத்துக்குக் கூட இருக்கும்.

அது அபூர்வமான மொழி: அலங்கார மொழி அல்ல: அடுக்கு மொழி அல்ல. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இசை போல் வருமே  அது போல, ஒரு இசைக் கோர்வை.

1962 இந்திய-சீன யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த காலம்: திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டிருந்தது.

நாட்டுப்பற்று உணர்ச்சிகரமான முழக்கம்: ‘சூரியன் அஸ்தமித்தமிக்காத சாம்ராஜ்யத்தை’ கைவசப்படுத்தியிருந்த பிரிட்டன், பிற நாடுகளைத் தன் குடியேற்ற நாடுகளாக நீட்டிக்க, ‘தேசம் காப்போம்’ என்பதைத் தாரக மந்திரமாக்கிற்று. ஆக்கிரமிப்பாளர் யார் எனக் கேள்வி எழுப்பினால், தேசப்பற்று போச்சு. ‘சட்’டென்று ‘தேசத்துரோகப்’ பட்டம் வந்துவிடும்.

மதுரைத் தியாகராசர் கல்லூரியில் நான் இளங்கலை வகுப்பு. யுத்தம் பற்றி பேச வந்த அண்ணா “தேசப்பாதுகாப்புக்கு, தேச வளர்ச்சிக்கு சுய திட்டமிடலை நாம் உருவாக்க செய்ய வேண்டும்; சுயமாய் ஆயுதங்கள் உற்பத்தி செய்ய வேண்டும்; அது முன்னேற்றம். பிற நாடுகளிடம் கையேந்தினால் முன்னேற்றம் போலத்தான் தெரியும். ஆனால் முன்னேற்றமாகாது. ’குடை ராட்டிணத்தில் சுற்றிக்கொண்டிருப்பவன் தனக்கு முன்னாலே இருப்பவனைப் பிடிப்பதுபோல் தான் தோன்றும்; ஆனால் பிடிக்க முடியாது.”

’சர்’ரெனப் பாய்ந்து வந்தது உவமை.

கருத்தும் உவமையும் ஒன்றோடொன்று கிளிகளாய்த் தொத்திக் கொண்டுவர, இதனால் அது நிகழ்கிறதா, அதனால் இது வருகிறதா என அறியத் திராணியற்று கிறங்கிப் போய்க் கிடந்தோம்.

இரண்டு இரத்தினக் கற்களும் என் இதயத்துள் இப்போதும் காக்கப்படுகின்றன.

3

1967 - தனக்கு நிகரில்லை என ஆட்சிக் கட்டில் ஏறியிருந்த காங்கிரஸை – தமிழ் நாட்டில் அகற்றிய தேர்தல். தேர்தல் நாடகத்தில் காங்கிரஸ் கட்டிய ‘ராஜபார்ட்’ வேடம் கலைந்தது. முன்னரே, கேரளாவில், மேற்கு வங்கத்தில் பொதுவுடமைக் கட்சிகள் அசைக்க முடியாத தோரணையில் அமர்ந்திருந்தன.

அன்று மதுரை திலகர் திடலில் அண்ணாவின் பொதுக் கூட்டம். மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சீட்டுக் கச்சேரி. ஓய்வெடுக்கும் அவ்வேளையில் அவரை மாணவர்கள் சந்திக்க வருகிறோம் என்று தகவல் போயிருந்தது.

அண்ணா பொதுக்கூட்டத்துக்கு வருகிறார்: இன்னார் வீட்டில் தங்குகிறார் என்று எங்களுக்குச் சேதி சொன்னது பெ.சீனிவாசன். விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ்தலைவர் காமராசரைத் தோற்கடித்த மாணவர் தலைவர் பெ.சீனிவாசன். விருதுநகரில் காமராசருக்கு எதிராய்ப் போட்டியிட அவருக்கு வாய்ப்புத் தர வேண்டி, மதுரை மாணவர்கள்  அண்ணாவிடம் கேட்பதற்காக சென்றோம்.

எங்களைப் பார்த்ததும் அண்ணா எலுமிச்சம் சாறு கொடுக்கச் சொன்னார். அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நாங்கள் ஏழு பேர். விருதுநகர்த் தொகுதியை மாணவர் தலைவர் பெ.சீனிவாசனுக்கு அளிக்கவேண்டுமெனக் கேட்டோம். “அதான் ஏழு பேரா வந்திருக்கீங்களா?” அண்ணா குறுஞ்சிரிப்புடன் கேட்டார். பொதுவாய் நல்ல காரியத்துக்குப் போகிறபோது, ஒத்தைப்படையாய்ப் போவது வழக்கம்.

பெ.சீனிவாசனுக்கு உண்டான தகுதிகளைப் பட்டியலிட்டோம்: எல்லாவற்றுக்கும் மேலே “அவர் ரொம்ப நல்லவர்” என்றோம்; அண்ணா மலர்ந்த முகத்துடன் சொன்னார், “நல்லவராய் இருப்பது வேறு: தேர்தலில் வெற்றி பெறுவது வேறு.”

அது எத்தனை அர்த்தச் செறிவான வாசகம் என்று இத்தனை தேர்தலின் பின் அனுபவப் பூர்வமாகத் தெரிந்துகொள்ள இயலுகிறது.

அந்த நேரத்தில் வரக்கூடாத ஒரு ஆள் அங்கு வந்தார். நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத அவர் பெ.சீனிவாசன். அண்ணா புரிந்து கொண்டார் போல. “நீதான் இவங்கள அனுப்பி வச்சதா” என்று கேட்கவில்லை. அண்ணாவின் இதழ்க் கோடியில் வழிந்த புன்னகை அந்தப் பொருளில் இருந்தது.

பேச ஏதுமில்லா வாயில்லாப் பூச்சிகளாய் அமர்ந்திருந்தோம்.

“பார்ப்போம்” என்றார் அண்ணா. அரை மனதுடன் சொன்னது போலிருந்தாலும், போட்டியிட வாய்ப்பளித்தார். காமரசரை வீழ்த்தி வெற்றி பெற்றார் பெ.சீனிவாசன். அவர் தொகுதியில் ‘டேரா’அடித்து, ஒரு நிறைமாதம் வேலை செய்த நாங்கள் வெற்றியைக் குதூகலமாய்க் கொண்டாடினோம்: அண்ணா கொஞ்சமும் குதூகலம் கொள்ளவில்லை. மொத்தத் தமிழகத்தின் வெற்றியைக் கொண்டாடினாரேயன்றி, தனியொரு தோல்வியில் களி கொள்ளவில்லை.

4

அண்ணா ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களில் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் மாநகரப் பேருந்து தொழிலாளிகளுக்குமிடையில் பெருத்த மோதல். என்னுடைய நண்பர் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருந்தார்.

தகராறு தொடக்கப் புள்ளி எதுவெனத் தெரியாது: மருத்துவக் கல்லூரிக்கும் மாணவர் விடுதிக்கும் எதிரிலிலுள்ள அகலச் சாலையில் இறங்கியிருந்தனர் மாணவர்கள். பேருந்துகளைத் தாக்கினர். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு, கையில் கம்பிகள் (Rods) தடிகளுடன் மாணவர்கள் மேல் எதிர்த்தாக்குதல்; நகர் முழுக்க பேருந்துகள் நிறுத்தம். இருபக்கமும் கல்லெறிதல். மாணவர்கள் விடுதிக்குள் முடக்கப்பட்டனர்.

கோட்டையிலிருந்து அண்ணா நேராக மாணவர் விடுதிக்கு வந்தார்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிய பதட்டம் அண்ணாவிடம்: அது இன்னும் மோசமடைந்துவிடுமோ? போராடும் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாய், பிற கல்லூரி மாணவர்களும் மறுநாள் இறங்குவதாக இருந்தனர்.

பேச்சுவார்த்தை நடத்த விடுதிக்குள் சென்றார் அண்ணா. எதிரில் நீதி கேட்கும் முகங்களில் கோபத்தின் கங்குகள். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளை அண்ணா தண்ணீர் கேட்டார். மாணவர்கள் தரவில்லை. தாகத்திற்குத் தண்ணீர் தராத அந்த மாணவர்கள்தாம், முதல்வராக ஆகியிருந்த அண்ணாவுக்கு சில மாதம் முன்பு வரவேற்பளித்து மகிழ்ந்தவர்கள்.

“நான் எப்போதெல்லாம் இங்கே வருகிறேனோ, அப்போதெல்லாம் நீங்கள் ‘ரோஸ் நீர்’ (ரோஸமில்க்) கொடுத்து வரவேற்றீர்கள்; இப்போது தாகத்துக்கு தண்ணீர் இல்லை என்கிறீர்கள்”.

நயம், நளினம், இதமான சூடு. நேரம், இடம், திசை அறிந்து கிளம்பும் அறிவுக் கூர்மை, மெல்லிய நகைச்சுவை – யாவுமாய்த் திகழ்ந்தார் அண்ணா. நமக்குள்ளிருந்தது சின்ன இதயம் தான். சின்ன இதயம், நெடிதுயர்ந்த இமயத்தைத் தாங்கிக் கொள்ளும் விசாலம் கொண்டிருக்குமா?

வேறொரு ஐயம் மாணவர்களிடம் தோன்றியிருந்தது. போக்குவரத்துத் தொழிலாளிகளிடமும் அண்ணா பேசியிருப்பார்: யாருக்குத் தெரியும் என்ற புரளி. பாவனை மனிதர்கள் பற்றி ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு:

“அவர்கள் மான்களோடு சேர்ந்தும் ஓடுகிறார்கள்; புலிகளோடு சேர்ந்தும் வேட்டையாடுகிறார்கள்”.

அண்ணா மான்களோடு சேர்ந்து வாழ்பவராக இருந்தார். புலிகளுடன் சேர்ந்தவராக ஒருநாளும் இல்லை. மாணவர்களுக்குச் சந்தேகம் உதித்திருக்க வேண்டாம். ஆட்சியேற்ற முதலாண்டிலேயே சிம்சன் தொழிலாளர் போராட்டம், அம்பத்தூர் வட்டாரத் தொழிற்சாலைகளில் பதட்டநிலை: மேயர் கிருஷ்ணமூர்த்தி, குசேலர் போன்ற தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பல இரவுகள் தூங்கவில்லை. அவருள்ளிருந்த மென்மையான இதயம், கண்ணிமைகளைச் சேர்க்கவிடாமல் செய்தது. மாணவர், தொழிலாளர், பொதுமக்கள் எல்லோரும் இதயத்துக்குள்ளிருந்தனர்.

5

1967- ல் முதுகலை (தமிழ்) முடிவு முடித்தேன்; தொல்லையான பயணத்திலிருந்து விடுபட்டேன் என்று சொல்லமுடியும். ஒரு நாள் ஒரு பொழுதா? இரண்டு பெரிய ஆண்டுகள். இலக்கியம், அரசியல், மொழி, படைப்பாக்கம் – என்னும் பல வயல்களில் நடுகை போட்டு, எங்கெங்கோ சிதறியிருந்த கவனங்களை தேர்வில் ஒருமுகப்படுத்த இயலவில்லை.

அந்தக் காலத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் கற்க வரும் மாணவர்கள் ஒரு வகுப்பில் அதிகமிருந்தால் ஐந்துபேர். ஒழுங்காக வகுப்புக்குள் இருப்பதில்லை.அப்படியே காணப்பட்டாலும், ஆயிரங்கால் மண்டபத்தால் ஈர்க்கப்படும் மனசு போல், ஆசிரிய உரைகளில் ஒருமைப்படுவதில்லை. கல்லூரிக்குள் முறையாய் இல்லாமல், படிக்காமல், செய்யாமல் அலைபவர்களுக்கென்று  ‘தர்ம பாஸ்’ போடுகிற முறையிருந்தது  அக்காலத்தில்.

தேர்ச்சி பெற்ற பின், வழக்கம்போல் வேலை தேடல்: “உங்களுக்கு இல்லாத வேலையா?” என எனக்கு இருந்த அரசியல் பின்புலம், செல்வாக்கினைக் கண்டு, பூதாகரமாகப் புனைவுகள் கொண்டிருந்தனர் பலர்:

முரசொலி இரவில் அச்சிட்டு, பகலில்தான் சென்னை நகருக்குள் விநியோகம் செய்யப்பட்டது. நவீன அச்சாக்கம் அப்போது இல்லை. முரசொலியில் துணை ஆசிரியராக 1967- ல் சேர்ந்தேன். கண்டுகொள்ளுங்கள் – அந்தக் கால இதழியல் உலகில் அவர் என்ன கல்வித் தகுதியுடையவராயினும் பிழைத்திருத்துபவர் கூட துணை ஆசிரியரே. பிழைத்திருத்தும் பணி மாத்திரமே தருவார்கள். கலைஞர் கருணாநிதி அப்போது அமைச்சராகியிருந்ததால், அவருடைய மருமகன் செல்வம் நிர்வாகப் பொறுப்பிலிருந்தார். அடியார் என்பவர் முரசொலியின் ஆசிரியராய்  இருந்தார்; ஆறு மாதத்தில் முரசொலியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். மீண்டும் மதுரை வாசம்.

அப்போது நாவலர் நெடுஞ்செழியன் கல்வி அமைச்சர். இந்தி எதிர்ப்பு மாணவப் போராளியாய் இருந்து, பின்னர் சட்டமன்ற உறுப்பினராகிவிட்ட எல்.கணேசன், முதலமைச்சர் அண்ணாவிடம் என்னை அழைத்துப்போனார்; அப்போது கல்வி அமைச்சர் நாவலர் அங்கிருந்தார். அண்ணா கல்வி அமைச்சரிடம், “நம்ம தம்பி எம்.ஏ தமிழ் படித்திருக்கிறார்” என்றதும் “அரசுக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வரும். அப்போது விண்ணப்பிக்கலாம்” என்றார். நாவலராகப் பேசவில்லை,  கல்வி அமைச்சராகப் பேசினார்.

உலகத் தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு, வேலைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. “உலகத் தமிழ் மாநாட்டு நிர்வாகப் பணிக்குத் தம்பியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார் அண்ணா.

“ஏற்கெனவே ஒருத்தரைப் போட்டாச்சே”

“அவர் யார்?”

“பெருமாள் முதலியார்”

எனக்குத் தெரியாதே என்பது போல், அண்ணா கல்வி அமைச்சரைப் பார்த்தார். பிறகு எல்.கணேசனைப் பார்த்து “நீ அப்பப்ப எனக்கு ஞாபகப்படுத்து” என்றார். வெளியில் வந்த எல்.கணேசன் முகம், தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தது. எல்.ஜி சொன்னார்: “இந்நேரம் நாவலர் இடத்தில் கலைஞர் இருந்திருந்தால், மறுபேச்சு இருந்திருக்காது: வேலை போட்டு, ஆணையை உங்களிடம் அளித்துவிட்டு, அண்ணாவிடம் போய் நீங்கள் சொன்ன அந்தத் தம்பிக்கு வேலை போட்டுக் கொடுத்திட்டேன் அண்ணா என்றிருப்பார் ”.

"’தம்பீ வா, தலைமையேற்க வா’  - மாநில மாநாட்டில் அண்ணா முன்மொழிந்த நாவலர், இப்போது கல்வி அமைச்சராக மாறியிருக்கிறார். முதலமைச்சரான பிறகும் அண்ணா, அண்ணாவாகத்தான் இருக்கிறார்” என்றேன் எல்.கணேசனிடம்.
ஒரு வருடம் வேலையின்றிக் கிடந்தது ஓராயிரமாண்டுகள் போல் கனத்திருந்தது. 1968-இல் தொடங்கப் பெற்ற மதுரை ’வக்பு வாரியக் கல்லூரியில்’ பயிற்றுநராகப் பணி ஏற்றேன்.

6

கறுப்பும் சாம்பலும் கலந்த அந்தி இறங்கிக் கொண்டிருந்தது: சூரியன் எழுவதும், தலைமேல் நடந்து மேற்கில் சாய்வதும் அன்றாடம் நடந்துகொண்டிருக்கிறது. “களவாளி, எங்க போய் ஒளிஞ்சிக் கீறப் பாக்குற” என்று விரட்டிக் கொண்டோடத் தோன்றும்; உதயமும் மறைவும் பார்க்கப் பார்க்க அலுப்புத் தட்டுவதில்லை. பசிய ஒளி வீசும் இலையும் காம்பும், தண்டுமான கற்பூரவள்ளி போல், நெஞ்சத்துக்குள் கெத்தளிப்புப் போட்டது குதூகலிப்பு. மொட்டைமாடியில் நின்று லயித்தவனை, வளைத்துப் பந்தல் போட்டு நின்றது சாயந்தரம்.

“அண்ணா மறைந்து விட்டார்!”

லாரிக்குள் சரக்குகளுக்குப் பதில் மனிதர்கள் நிறைந்திருந்தனர். அன்றிரவு லாரி பிடித்து காலையில் போய் சென்னை அடைந்தேன். திருவல்லிக்கேணி மாணவர் விடுதியில் நண்பர்கள் அறையில் தங்கி, நண்பர்களுடன் சேர்ந்து நடந்தோம். ‘மவுண்ட் ரோடு’ அண்ணா சாலையாக பெயர் மாற்றம் கொள்ள அவர் மரணத்துக்குக் காத்திருந்தது போல. இப்போதுள்ள பொது நூலகக் கட்டிடம் எதிரில் ஒரு விளக்குக் கம்ப காங்கிரீட் அடித்தூரில் ஏறி, எல்லாத் தலைகளுக்கும் மேலாய் அண்ணாவைக் கண்டேன்.

அந்த மரணம் நிகழ்ந்திருக்கக்கூடாது. மொழி, இனம், ஏழைகள் என்று அவர் எண்ணம்  உழன்று கிடந்தது. வெறுப்பின் வெக்கை கிஞ்சித்தும் தென்படவில்லை.

சரித்திரத்தின் மீதியை எழுதவேண்டிய எழுதுகோல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மறைவுச் சேதி கிடைத்தபோது, முன்னிரவு ஏழு மணி. அறையிலிருந்து வெளியேறி ஆசிரியராக இருந்த தங்கை வீட்டுக்குச் சென்றேன். சென்னை செல்லத் தங்கையிடம்  பணம் வாங்க வேண்டிய சூழல்.

“அண்ணா இறந்திட்டாராம்”

திடுக்கிட்டுப் பார்த்தாள் “எந்த அண்ணா?”

எங்களுக்கு மேலே உடன்பிறந்த அண்ணன் இருந்தார்.

“முதலமைச்சர் அண்ணா”

நன்றி: கதைசொல்லி 33 - காலாண்டிதழ் (ஏப்பிரல், மே, ஜூன் 2019)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்