கரிசக் காட்டுப் பூ... பா.செயப்பிரகாசம்

ரூபாய் 300-க்காக ஆலையில் வேலை செய்யும் ஒரு பெண் கருத்தரிக்கிறாள்... கருத்தரித்தால் பிரசவ காலத்தில் ரூபாய் 300 கிடைக்கும் என்ற திட்டம், அவளின் பிரசவ காலத்தின் போது அந்தச் சலுகை அரசால் நீக்கப் படுகிறது. ஏற்கனவே குழந்தைகளோடு இருக்கும் தம்பதி அப்போது என்ன வகையான மனநிலை கொண்ட வாழ்வியல் சூழலுக்கு தள்ளப் பட்டிருப்பார்கள்....! இப்படி விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய ’திடுக்’ கென்று நாம் கதையிலும் காண முடியாத வாழ்க்கை குறிப்புகளை மொத்தமாக போட்டு வெடிக்கச் செய்த கரிசல்காட்டு கதைவேந்தன் பா.செயப்பிரகாசம்... எழுத்துலகில் யாரும் தவிர்க்கவே முடியாத கதவு...எல்லாக் கதவுகளும் திறக்கபட வேண்டுமா என்ன.. என்ற யோசனையோடு திறக்கும் போதும் சரி, தட்டுகிற போதும் சரி, கூடவே ஜன்னல்களும் திறந்து கொள்வது தான் சரித்திர விசித்திரம்... விசித்திர சரித்திரம்....


ஜெருசலேம் என்ற கதையில் வெறும் எலும்பும் தோலுமாக இருக்கும் ஒரு சிறுவன், அவனை விட பலசாலியான ஒருவனை சுடுகாட்டில் போட்டுப் புரட்டி எடுக்கும் காட்சியில் புரட்சியின் வித்தை நாம் நேரில் காண முடியும்...மரித்துப் போன தாயின் எலும்புகளிலும் சாம்பலிலும் அந்தச் சிறுவன் படுத்து உருளும் காட்சியில் கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்கும் நிஜங்களின் கூடு, அர்த்தம் தேடும் இந்த வாழ்க்கை வெளியை மெல்ல மெல்லப் பிரித்துப் போட்டு விடும்...

தொழிலாளி, முதலாளி, முதலாளித்துவம், மனித உறவுகளின் சிதைவு, வறுமை, வறட்சி, பணப் புழக்கம், தலைமுறை மாற்றம், அடக்குமுறை, மாணவக் கட்சிகள், ஆழ்மன உணர்வுகள் என்று நீண்டு சுருங்கி, வளைந்து, தனது எல்லா விதமான விஸ்தாரங்களையும் கிளை பரப்பிக் கொண்டே செல்லும் ஆளுமை பா.செயபிரகாசத்தின் எழுத்துக்கள். அவைகள் இடது சாரிச் சிந்தனைகளை உள்ளடக்கிய பொக்கிசங்கள்..... இவரின் பக்கங்களில், விதைப்பவர்கள், அறுக்கறுக்க முளைத்துக் கொண்டே இருக்கும் பயிர்களின் மணிகள்...... விதைப்பதற்கும் அறுப்பதற்கும் இடையே ஒரு வாழ்வியல் உண்டு.. அது மழை கொண்ட, வெயில் கொண்ட, பனி கொண்ட எல்லா வகையான காலமும் கொண்ட ஒரு வித யாத்திரை.. அது சொர்க்க நரக சன்னலைக் கண்டும் காணாமலும் இருக்கும் மேல் வீட்டு வானம் போல... தலைக்கு மேல ஒரு சட்டிச் சோறு தேடும் உன்மத்தம்...

90க்கு பின் பிறந்தவர்களின் கையில்தான் இன்றைய உலகமயமாக்கல் இருக்கிறது... அவர்களின் வல்லாண்மைக்கு வெகு தூரத்தில் 70களில், 80களில் தான் இவர் இருந்து கொண்டிருக்கிறார்.... இவரை அவர்களுக்கும் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது... ஒரு வரி கருத்து, இருவரிப் பதில், என்று முகநூலில் வேறு ஒரு உலகம் படைத்துக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு இவரை அறிமுகப் படுத்தியே தீர வேண்டும்.... பீட்சாவும் பர்கரும் மட்டுமே வயிறை நிறைக்கும் என்பதாக ஒரு கணக்கு, தானே முடிச்சை போட்டுக் கொண்டு அமர்ந்து விடக் கூடாதல்லவா...? பழைய சோறும் வயிறை நிரப்பியது, ஆங்காங்கே நிரப்பிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவூட்டவாவது இவரைக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு அதிகமாகிறது...

சிதைவுகளைப் பற்றிய படைப்புகளே நிறைய தென்படுகிறது இவரிடம்... அது காலத்தால் மறந்து விடக் கூடாத வரலாறுகள் என்பதை திரும்ப திரும்ப அவற்றை, மனித உறவுகள் மூலம் விதைத்துக் கொண்டே வருகிறார்....... என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று எப்போதும் எல்லாக் காலகட்டங்களிலும் நாம் கூறி விட முடியாது... ஒரு பக்கம் அதீத வறட்சி, ஒரு பக்கம் அதீத தண்ணீர் என்று ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் பஞ்சம் பட்டினி, வறட்சி, வாழ்வின் போக்கில் திசை மாற்றம், குடும்ப சிக்கல் என்று வழி மாறி பயணித்துக் கொண்டே இருந்த வாழ்வியலை அவர் வாழ்ந்த காலத்தோடு முன்னெடுப்பாக பதிவு செய்கிறார்...மனித உறவுச் சிக்கலை எழுத்தில் வடிக்கிறார்... மனதின் தேடலின் மகத்துவக் குறியீட்டை, ஒரு சொல்லொணாத் துயரத்தோடு யாவரும் கடக்கிறார்கள் என்று போகிற போக்கில் அள்ளி வீசிக் கொண்டே செல்கிறார், கதைகளின் மேட்டாங்காட்டில், புழுதிக் காட்டில், சுடுகாட்டில், வீட்டு முற்றத்தில்... ஒரு அணையா விளக்கின் ஜோதியை எரியும் வயிறோடு நின்று கவனித்தலில் தலை விரித்தாடும் எண்ணப் பேயின் தாலாட்டை வழி நெடுக கண்டுணர முடியும் இவரின் பயணத்தில்...

ஒரு அரசு அதிகாரியாக அதிகாரமிக்க இடத்தில் இருந்துமே அவர் தன்னை ஒரு படைப்பாளியாகவே பாதுகாத்தார் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.. அதிகாரம், யாரையும் தின்று விடும் வல்லமை கொண்டது,.. அதிகாரத்துக்கு முதலில் அடிபணிவது அதிகாரம் செய்யும் ஆள்தான்.. அந்த வகையில் பா.செயப்பிரகாசம்... தன் எழுத்துக்களைப் போலவே தனக்கும் உண்மையாகவே இருந்தார் என்பதே உண்மை.... உண்மைகள் தூய்மையானவை... அது தெளிந்த நீரின் தூவானக் காட்சிகளைக் கொண்டது... நீந்தும் விழிகளில் மீன்களைக் காணும் மெய்ப் பொருளின் நீட்சி......

இரவுகள் உடையும், மூன்றாவது முகம், இரவு மழை, புயலுள்ள நதி, காடு, கள்ளலழர், ஒரு ஜெருசலேம், பூத உலா, என்று நீள்கிறது இவரது படைப்புகள்.. பெரும்பாலும் இவரின் சிறுகதைகள் சற்று நீளமானவை... ஆம்.... சிறுகதைக்குள் கூட ஒரு ஒரு பெருங்கதையை அவர் சமைத்துக் கொண்டே இருந்தார்...... மறு பிறப்பாக கதை முடியும் இடத்திலிருந்து, அது தன்னை மீண்டும் நீட்டித்துக் கொள்கிறது... அவரின் படைப்புகளில் தொடக்கமும் முடிவும் வாழ்வியல் என்பதை வேறு கோணத்தில் நமக்குள் விரியச் செய்கிறது..... அது விரிந்து கொண்டே செல்லும் முடிவற்ற புள்ளிக்குள் வட்டமடிக்கும் வாழ்வின் சூழ்ச்சியைக் கூறுகிறது....அது நிஜம் கூட... எந்த வாழ்வுக்கு தொடக்கமும் முடிவும் இருக்கிறது..? யோசித்துப் பாருங்கள் .. தோழர்களே.. நாம் எங்கிருந்து வந்தோம்.. எங்கு செல்கிறோம்... எதுவும் தெரிவதில்லை.... தெரியாத வரியாகத்தான், தெரிதலின் போக்கு நம்மின் கட்டுபாட்டில், என்பதாக அவரைப் படிக்க படிக்க நமக்குள் ஒரு புத்தாக்கம் விரிவதை நாம் ஒதுங்கி நின்று கவனிக்கத்தான் வேண்டியிருக்கிறது....

தனது முதல் கதை "குற்றம்" 1971ல் "தாமரையில்" மூலம்.. எழுத்துலகத்துக்குள் நுழைந்தார்...... கிரா, பூமணி, அழ.கிருஷ்ணமூர்த்தி, தா.பீ.செல்லம், ச.தமிழ்ச்செல்வன், கோ.ச.பலராமன், வீர,வேலுசாமி, பொன்னீலன் இவர்களைத் தொடர்ந்து அல்லது இவர்களோடு... கரிசல் மண்ணில் இருந்து வெடித்து கிளம்பிய பா.செயப்பிரகாசம், படைப்பாளியின் மனம் தனித்துவம் நிறைந்தது, காப்பது கடினம், கதை சொல்லல்தான் எல்லாமே... வாழ்வைப் பேசுதல் தான் இங்கு தேவை என்றார்........ அவரின் எண்ணமும் எழுத்தும் நம்மை ஒரு சாதாரண புள்ளியில் இருந்தே எட்டிப் பார்க்க வைக்கிறது... தூரங்கள் சொல்லாத வாழ்வுதனை பக்கமாக நின்று சொன்ன வகையில் வாழ்வின் நேர்காணல் தத்துவமாகத்தான் படுகிறது...

பசி போக்காத தத்துவங்களின் உடன்பாட்டை சிதற வைக்கும் சிவப்பு சிந்தனையின் சீரிய எழுத்தில் தன்னை கரைத்தார்...... உலகத்தை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயமானதொரு நிலையில் இருக்கிறது பாட்டாளி வர்க்கம்.. என்கிறார்... உழைப்பின் மிச்சம்தான் இங்கு எல்லாமே என்பதை நன்கு புரிந்த மனநிலையில்தான் அவரின் கோபங்கள் கூட வறட்சியின் மதிய வெயிலில் நின்று ஊமைக் கண்ணீர் சிந்துவதாகப் படுகிறது....... மண்ணின் மனிதர்கள் பற்றியே பற்று கொண்டுள்ள எழுத்துக்களில் நிஜமான புன்னைகையும் கண்ணீரும் மாறி மாறி வழிகின்றது... பாசத்தின் வரைவுகளின் துளிகளில், உண்மைகளை உள்ளூரக் கொள்ளும் எவ்வித ஒப்பனையும் இன்றி முகம் காட்டுகிறது.... கற்பனா உலகத்தில் பறக்கும் எதுவும் எந்தவொரு சிறகும் இன்றி வெடித்த அபத்தங்களின் வரப்பு மேட்டில் நின்று பசுமை வேண்டுகிறது இவரின் எழுத்துக்கள்............ இல்லாமையை நிறைய சாடும் வரிகளில் வறட்சியின் வேர்குருக்களை தெளித்துக் கொண்டே செல்கிறார்.. கொப்புளங்கள் சூடு ஆறும் முன் உடைந்த வலியை உணர முடிகிறது....... கிடைக்கும் பக்கங்களில் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் தீரா வாய்மையை பதிந்து கொண்டே வருகிறார்...அதிகார வர்க்கத்தின் தீவிரத் தன்மையை வன்மையாக கண்டிக்கும் பாத்திரங்கள் நிறைய நிரப்புகிறார்.. மை என்னும் குருதி வெள்ளம் நிறம் மாற்றுகிறது பாத்திரங்களை...

"நிலவின் சடலம்" என்ற ஒரு கதையில் ஒரு கதாபாத்திரம் பேசுகிறது... "ஒன்னும் நினைக்காமப் படு.. தன்னால தூக்கம் வரும்..."- நான் திகைத்து நின்ற இடம் இது.. அது எப்படி ஒன்னும் நினைக்காமல் படுப்பது....? அது தானே ஜென் நிலை.. புத்த நிலை... நிலை அறிந்து கொள்வதல்லவோ நிலையின் வேர்.. அது வேறு தானே...! ஒன்னும் நினைக்காமல் படுத்துப் பார்த்த என்னால் தூங்க முடிந்த தருணத்திற்கு முன்னால் பா.செயப்பிரகாசத்தின் வாழ்வியல் சார்புநிலையின் வண்ணங்கள் ஒரு கருப்பு வெளிக்குள் ஊருவச் செய்கிறது.......

பா.செயப்பிரகாசம் ஜனரஞ்சகத்துக்கு அப்பாற்பட்டவர்... எதிர்பாராமல் ஏற்படும் சூழ்நிலைகள், நிகழ்வுகள் போல ஒரு மையத்திலிருந்து துவக்கம் கொள்கின்றன... என்பதாக அவற்றின் வரிகள் விரியத் துவங்குகையில் நாம் பெரும் துளியிலிருந்து பின்னோக்கி சிறு துளியாகி இல்லாமலே போகும் தருணத்தில் நிஜத்தை குடம் குடமாக உடைத்துப் போடுகிறார்....

எத்தனை இசங்கள் இருந்தாலும் என் வாழ்வு தானே என் முதல் இசம்.. அதை இந்த எழுத்து உலகுக்கு நான் விட்டு சென்றே ஆக வேண்டும் என்பதாக அவரின் படைப்புகள்... பக்கத்துக்கு வீட்டு ஜன்னல் தட்டுகிறது.. எதிர் வீட்டு சமையலில் கலந்திருக்கிறது.... தூரத்து உறவுப் பெண்ணின் காதலில் கவிழ்ந்திருகிறது... நெடுநாளைய பகையாளியின் மனதுக்குள் ஒரு கத்தியைப் போல ஒளிந்திருக்கிறது.. நண்பனின் மீசைக்குள் இருக்கும் வெள்ளி முடியென ஒரு தீரா பாசம் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கின்றது....

பொருள் சார்ந்த விஷயத்தை பேசும் பா.செ புரட்சி மூளை கொண்டவர், விமர்சன விரல் கொண்டார்... தீச்சுடர் முகம் கொண்டவர்... நீண்ட கதைகளையே கொண்ட அவரின் சாட்டை வரிகளாக எனக்கு பட்டது, "பிரம்மனின் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டவை அல்ல அவர்களின் வாழ்வு, பீடங்களின் சவுக்குகளால் எழுதப் பட்டவை...." - என்பதும்.... அவரின் வரிகளின் மூலமாக ... சுளீர் என ஒரு தியானத்துக்குள் கடித்த ஒரு புது எறும்பின் சாகசங்களைப் பார்ப்பது போலதான் நான் காது ஆட்டிக் கொண்டே இருக்கும் அதிகார வர்க்கத்தைக் காண்கிறேன்... கடைசி மனிதனின் வாழ்வு சிறக்காத போது எதில் பறந்தாலும் அங்கு மானுடம் தழைப்பது இல்லை என்பதாக என் யோசனை நீண்டு கொண்டே இருக்கிறது... இன்றைய தலைமுறைக்கு இவரை அறிமுகப் படுத்துவதிலும், போன தலைமுறைக்கு இவரை ஞாபகப் படுத்துவதிலும், என்னை நானே புதுப்பித்துக் கொண்ட மணித்துளிகளை வியப்போடுதான் கடக்க வேண்டி இருக்கிறது.... கடந்து தானே போக வேண்டும்... போதி மரங்களைக் கூட.....

- கவிஜி

நன்றி: கீற்று 26 ஜூன் 2016

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்