பேசும் கால்க்காசு கடுதாசி: தி.க.சி.யின் திறனாய்வுகள்

பகிர் / Share:

(காலச்சுவடு வெளியிட மறுத்த கட்டுரை மற்றும் காலச்சுவடு கடிதங்கள், பா.செயப்பிரகாசத்தால் தனி பதிப்பாக ரூ 5.க்கு வெளியிடப்பட்டது) காலச்சுவடுக்கு...

(காலச்சுவடு வெளியிட மறுத்த கட்டுரை மற்றும் காலச்சுவடு கடிதங்கள், பா.செயப்பிரகாசத்தால் தனி பதிப்பாக ரூ 5.க்கு வெளியிடப்பட்டது)

காலச்சுவடுக்கு பா.செயப்பிரகாசம் எழுதிய கடிதம்:

29.05.01

அன்புடையீர், 

வணக்கம்.

"தி.க.சி.யின் திறனாய்வுகள்" என்ற கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.

விண்நாயகனில் ஜெயமோகன் கருத்து, சொல்புதிது - தலையங்கம், காலச்சுவடு எழுப்பிய கேள்விகள் - இவைகளுக்கு பதில் எழுத வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்டதல்ல, இக்கட்டுரை. ஒரு விமர்சகப் படைப்பாளியை முழுமையாகத் தொடுகிறபோது, அதில் மேற்குறித்த கேள்விகளுக்கான பதில் உள்ளடங்கி இருக்கும்.

வெளியிடக் கேட்டுக்கொள்வேன்.

நட்புடன், 

பா.செயப்பிரகாசம்

காலச்சுவடு பா.செயப்பிரகாசம் அவர்களுக்கு எழுதிய பதில் கடிதம்:

11.06.2001

மதிப்பிற்குரிய செயப்பிரகாசம் அவர்களுக்கு, 

வணக்கம்.

உங்கள் கட்டுரை கிடைத்தது. நூலாக வெளிவரவேண்டிய உங்கள் பிரதியை எப்படி ஒரு இதழில் பிரசுரிக்க முடியும்? தி.க.சி விவாதப் பகுதிக்கு ஒன்றிரண்டு பக்க அளவிற்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவைத்தால் பதிவு செய்கிறோம்.

அன்புடன்,

கண்ணன்

பா.செயப்பிரகாசம் அவர்களின் பதில் கடிதம்:

15.06.2001

அன்புடையீர், 

வணக்கம்.

'தி.க.சி.யின் திறனாய்வுகள்’ என்ற எனது கட்டுரை (டம்மி சைஸ் 29 பக்கம்) பற்றிய தங்கள் கடிதம் நேற்றுக் கிடைத்தது. நூலாக வெளிவர வேண்டிய உங்கள் பிரதியை எப்படி ஒரு இதழில் பிரசுரிக்க முடியும் என்று வினா எழுப்பியுள்ளீர்கள்.

ஜூலை-ஆகஸ்ட் 2000- இதழில் நண்பர் ரவிக்குமாரின் பேட்டி 11.5 பக்கங்களும், செப்டம்பர்-அக்டோபர் இதழில் 7 பக்கங்களும் ஆக 18.5 பக்கங்கள் வெளிவந்துள்ளது. இதழியலாளர் ஞாநியின் பேட்டி, மார்ச்-ஏப்ரல் 2001 மற்றும் மே-ஜூன் 2001 இதழ்களில் 17 பக்கங்கள் வெளிவந்துள்ளது. 'டம்மி' வடிவில் அச்சுக்கோர்க்கப்பட்ட எனது 29 பக்கக் கட்டுரையை காலச்சுவடு இதழில் 15 பக்கங்களில் அடக்கிவிட முடியும். இரு இதழ்களில் தொடர்ந்து வெளியிடலாம். எனவே இடப்பற்றாக்குறை என்பது ஒரு பிரச்சினை அல்ல எனக் கருதுகிறேன்.

தி.க.சி விவாதப் பகுதிக்கு ஒன்றிரண்டு பக்க அளவிற்கு கருத்துக்களை அனுப்பி வைத்தால் பதிவு செய்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த அரைகுறை விவாதங்களே ஒரு படைப்பாளியை அசிங்கப்படுத்துவதாக உள்ளது என்பதாலேயே, முழுமையாக ஆய்வு செய்து கட்டுரை அனுப்பியுள்ளேன். தேவைப்படின் அரூப் சிவராம் பற்றிய பகுதி, பாரதிதாசன் பற்றிய பகுதிகளை நீக்கி சுருக்கிக் கொள்ளலாம்.

வெளியிட பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்வேன்.

நட்புடன்,

பா.செயப்பிரகாசம்

பா.செயப்பிரகாசம் அவர்களின் கடிதத்திற்கு காலச்சுவடு எழுதிய மறுப்புக் கடிதம்:

22.06.01

மதிப்பிற்குரிய பா.செயப்பிரகாசம் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் கடிதம் கிடைத்தது.

காலச்சுவடு இருமாத இதழான பிறகு நீண்ட கட்டுரைகளை வெளியிட முடியாத நிலை உள்ளது. விலையைக் குறைத்திருப்பது ஒரு காரணம். பக்கங்களை சிறிது கூட்டினாலும் தபால்தலைச் செலவு பல மடங்காக உயர்ந்து விடுகிறது.

விதிவிலக்காக நீண்ட கட்டுரைகள் அவ்வப்போது காலச்சுவடில் வரலாம். அவ்வாறான முக்கியத்துவம் தி.க.சி.யின் திறனாய்வுத்திறன் பற்றிய எந்தக் கட்டுரைக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்தக் கட்டுரைக்கு நீங்கள் செலுத்தியிருக்கும் உழைப்பிற்கும் ஒழுங்கிற்கும் நிகரான ஒரு கட்டுரையையும் அவருடைய தொகுதிகளில் என்னால் பார்க்க முடியவில்லை. எனவே உங்கள் கட்டுரையைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

அன்புடன்,

கண்ணன்

காலத்தின் சுவடுகளை மறுக்கும் 'காலச்சுவடு'

தி.க.சி பற்றி நான் எழுதிய "பேசும் கால்க்காசு கடுதாசி: தி.க.சியின் திறனாய்வுகள்" - என்ற ஆய்வை வெளியிட காலச்சுவடு மறுத்துள்ளது. இது எதிர்பார்த்ததுதான்.

கடந்த இதழ்களில் தி.க.சி என்ற விமர்சகப் படைப்பாளியை காலச்சுவடு கிண்டல் செய்து, நக்கலடித்து ‘பங்கரை' செய்தது. காலச்சுவடு கேலி பண்ணியதுபோல் (2001 மே, ஜூன் இதழ் - பக்.58) தி.க.சி சிறந்த மனிதாபிமானி. சிறந்த இதழாசிரியர். தோட்டக்காரர். இளைஞர்களை ஊக்குவிப்பவர். இலக்கியக் களப் பணியாளர். இவை அத்தனையையும் தாண்டி அவர் சாகித்ய அகாதமிப் பரிசுக்குத் தகுதியானவர் என்பதை விளக்கப்படுத்தி, அவர் திறனாய்வுகளை முழுமையாக ஆய்வுசெய்து, கட்டுரை அனுப்பியிருந்தேன். நிராகரிப்பு, இவர்கள் ஒரு சார்பானவர்கள் என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

கலை, இலக்கியத்துறையில், காலச்சுவடு கைக்கொள்வதும், கைவசப்படுத்தியிருப்பதும் ஒரு வகைப் போக்கு. ஆனால் தர மதிப்பீடு என்ற பெயரில், பிற வகைப்பாடுகளை, போக்குகளை இவர்கள் மறுக்கிறார்கள். ஏனெனில் காலச்சுவடுக்குத் தெரிந்தது ஒரு வகை தான். இவர்கள் வகையே வெற்றி பெற வேண்டும் இவர்களுக்கு!

காலச்சுவடு, தனது இரண்டாவது கடிதத்தில் (22.06.01) "இருமாத இதழான பிறகு நீண்ட கட்டுரைகளை வெளியிட முடியாத நிலை உள்ளது" என்று குறிப்பிட்டிருப்பது உண்மையல்ல. இருமாத இதழான பிறகே, ரவிக்குமாரின் பேட்டி பதினெட்டரை பக்கங்களும், பத்திரிகையாளர் ஞானியின் பேட்டி 17 பக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த நீண்ட கட்டுரைகள் வரலாம். ஆனால் தி.க.சி.யின் திறனாய்வுத்திறன் பற்றிய எந்தக் கட்டுரைக்கும் அந்தத் தகுதி இல்லை என்பதுதான் 'காலச்சுவடி'ன் மணியோசை.

படைப்பாளிகள், வாசகர்கள் பார்வைக்காக, எதிர்வினைக்காக, தி.க.சி பற்றிய ஆய்வுக்கட்டுரையும், எனக்கும் - காலச்சுவடுக்கும் இடையேயான கடிதப் பரிமாறலும் முன்வைக்கப்படுகிறது.

அன்புடன்

பா. செயப்பிரகாசம்



பேசும் கால்க்காசு கடுதாசி: தி.க.சி.யின் திறனாய்வுகள்

வாசகன், படைப்பாளி, விமர்சகன் என்ற மூன்று நிலைகளில் ஒரு கலைஞன் இயங்குகிறான்.

எந்த ஒரு கலைஞனும் வாசகனாகத் தொடங்குகிறான். தரமான வாசகன் நீண்ட நாளைக்கு வாசக நிலையிலேயே நீடிக்க முடியாது. வாசிப்பு அளவில் நிகழ்த்தும் மாறுதல்கள் அவனை ஒரு படைப்பாளியாக மேல்நிலை கொள்ளச் செய்கிறது. வாசக நிலையிலேயே தொடர்ந்து நீடித்தல், வாசிப்பே ஒரு சுகமாகி சிந்தனைத் தூக்கத்தில் கொண்டு போய் நிறுத்தும். விசும்பிலிருந்து விழுகிற மழை, மண்ணுக்குள் நீரூற்றுக்களாய் சேகரித்து வைக்கப்படுகிறது. வாசிப்பு ஊற்றில் சேகரித்து வைத்தது பீறிட்டு வழங்கும் தூண்டுதலாக படைப்பு நிலை செயல்படுகிறது.

தன் படிப்பை ஏதாவது ஒரு வகையில் அவன் மறு ஆக்கம் செய்தாக வேண்டும் - பேச்சாளனாக, ஆசிரியனாக, கருத்துப் பரப்பியாக, படைப்பாளியாக. அவனுக்குள் உள் இறங்கிய நெருப்பு, மறுபடி படைப்பு என்ற மறு ஆக்க ஒளியாக வெளியே இறங்கியாக வேண்டும். அப்போது முழுமையாக ஒரு சமூகக் கருத்துத் தொடர்பாளனாக சமூகச் செயல்பட்டாளனாக ஆகிறான்.

படைப்பாளி வெளிப்பட வெளிப்பட, சமூகம், வாழ்வு பற்றிய அறிதல்கள் ஆழப்படுகின்றன. அகலப்படுகின்றன. இத்தேடல்களில் விமர்சகன் ஒரு படைப்பாளிக்குள்ளே அமர்ந்திருக்கிறான். படைப்பாளி விமர்சகனாக மாறுவதும் நிகழ்கிறது.

தி.க.சி கவிதை, கதை, நாடகம் என ஒரு படைப்பாளியாகத் தொடங்குகிறார். அதற்கு முன் அவருள் அமர்ந்திருந்த வாசிப்பாளன் வக்கணையாய்ப் படைப்பாளிக்கு வேண்டிய சகல சுவைகளையும் ஆக்கி வைத்திருந்தான்.

"சிந்து பூந்துறை அண்ணாச்சி சண்முகம் பிள்ளை ஏராளமான புத்தகங்களையும், பத்திரிகைகளையும் படிக்கக் கொடுப்பார். 1948-ல் ஆங்கிலத்தில் கார்க்கியின் தாய் படித்தேன். என்னை மிகவும் பரவசப்படுத்திய நாவல் இது. புதுமைப்பித்தன் போன்ற மணிக்கொடி எழுத்தாளர் நூல்களை, தன் போன்ற மணிக்கொடி எழுத்தாளர் நூல்களை வல்லிக்கண்ணன் படிக்கக் கொடுத்தார்."
(விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் - பக்.314)

1941 -க்குப் பிறகு பிரசண்ட விகடன், இளந்தமிழன், கிராம ஊழியன், கலா மோகினி, ஹனுமான், இந்துஸ்தான் போன்ற இதழ்களில் நூறுக்கும் அதிகமாய் கவிதைகள், கட்டுரைகள் வெளிவர மூலமாய் இருந்தவன் இந்த வாசகன். 1953-ல் தொ.மு.சி. ரகுநாதன் நடத்திய 'சாந்தி' இதழில் ஓரங்க நாடகம் வெளியாகவும், சொல்லி வைத்த மாதிரி செயல்பட்டவன் அவருக்குள்ளிருந்த இந்த வாசகன்.

நூல்கள் என்ற வாசிப்புக் குவிப்புக்கு முன்பே வாழ்க்கை அவருக்கு நிறையக் கற்றுக்கொடுத்தது. 1944-ல் தாம்கோஸ் வங்கியில் நெல்லையில் காசாளர் வேலையில் சேர்ந்தார்; சேர்ந்தது முதல் வங்கிப் பணியாளர் சங்கம் கட்டுவதில் தீவிரமாக தன்னை முனைப்புடன் இயக்கினார். அதனால் 1948-ல் சென்னைக்கும், 1960-61ல் பரமக்குடிக்கும், பிறகு சேலம் மாவட்டம் எடப்பாடி; கேரளத்திலுள்ள கொச்சி; கொச்சியில் அவரும் ஊரில் மனைவியும் இருக்கிறபோது, மனைவிக்கு கால் ஓடிந்து படுத்த படுக்கை; பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி சிக்கல்மேல் சிக்கல்; எங்கெங்கு மாற்றினும், எதன் காரணமாய் மாற்றினார்களோ, அதன் காரணமாய் தொழிற்சங்கம் கட்டுதலை அங்கெல்லாம் தொடர்ந்தார்.

நூல்களின் வாசகனை விட வாழ்க்கை அனுபவ வாசகன் அவருக்கு நிறையவே எடுத்து வழங்கினான்.

தனிமனிதன், குடும்பம், சமூகம் இவைகளுக்கிடையேயான உறவுகளைப் பார்ப்பதில் சமூக விமர்சனம் தொடங்கியது. சிலர் சமூக சிந்தனை, சமூக விமர்சன அறிதல் இலக்கிய வாசிப்புக்குத் தேவையில்லையெனக் கருதுகின்றனர். தனக்குள் தொடங்கி, தனக்குள்ளேயே பூரணத்துவம்பெறுவது இலக்கியம் எனக் கருதுகிறார்கள். சமூகச் செயல்பாடுகள், சமூக செருக்கடி, புறவியல் நிகழ்வுகள், குடும்பத்திற்கும் சமூகத்திற்குமான உறவுநிலை, இவை உருவாக்கும் உளவியல் நிலை, மன ஓட்டம் இவைகளை வாசிப்பதும் உட்கொள்வதும் இலக்கியத் தொடர்பற்றது என்பது ஒருசிலர் கருத்து.

இதன் காரணமாக இலக்கியத்திற்குள்ளிருந்து இலக்கியத்தைப் பார்ப்பது என்ற உள்வட்டப் படிக்கட்டுகள் வழியே கண்ணாடிக் கோபுரத்தை வந்தடைகிறார்கள். முந்தைய கால இலக்கிய ரசனை இதைத்தான் செய்தது. அவர்கள் வாழ்வின் மீதான அக்கறை கொண்டதைவிட, சமூக அக்கறை கொண்டதைவிட, எல்லாவற்றிலுமிருந்து ஒதுங்கிக்கொள்கிற ரசனையாகச் சுருக்கிக் கொண்டார்கள். சுற்றிலும் எழுந்து வீசுகிற காற்றுக்கு, இலக்கிய அசைவுகள் எப்படி நேர்கின்றன என்று காணாமல் நேர்த்தி, நயங்களை மட்டுமே பார்க்கிறவர்களாக ஆனார்கள்.

தி.க.சி.யின் வாசிப்பு இவ்வகை ஒருதரப்பு வாசிப்பாக இருந்ததற்கான சான்றுகள் இல்லை. இருந்திருந்தால் அவர் புதுமைப்பித்தன், கு.ப.ரா, வ.ராமசாமி, ந.சிதம்பர சுப்பிரமணியன், ஆர்.ஷண்முக சுந்தரம், பி.எஸ்.ராமையா, ஆதவன் என்று அவருக்கு

இஷ்டமான இவர்களை மட்டுமே வாசித்திருப்பார். மாறாக க.நா.சு, மௌனி, ந.பிச்சமூர்த்தி, லா.ச.ரா என்று இவர்கள் போன்றோரையும் அவர் வாசித்தார்; விமர்சித்தார்.

மணிக்கொடி கால எழுத்தாளர்களில் முக்கால் வாசிப்பேர் இவருடைய விமர்சனப் பார்வைக்குள் வந்திருக்கிறார்கள். பின்னாளில் அவருடைய தொடர்பு, பரிச்சயம் ஒரு வட்டத்திற்குள் அமைந்தபோதும் எல்லோரையும் வாசிப்பவராகவே தொடர்ந்திருக்கிறார்.

வாசிப்பு என்று வருகையில் ஒரு வாசகன் எதிர்மறையாகவும் கற்றுக்கொள்கிறான். நேர்நிலையாகவும் பெறுகிறான். எனவே வாசிப்பில் தேர்வு என்பது தான் சார்ந்த துறை சம்பந்தப்பட்டதேயன்றி, தன் விருப்பஞ் சார்ந்தது அல்ல. விருப்பஞ் சார்ந்து கற்கிறவன், தனக்கான ஒரு கதவை மட்டுமே திறந்து வைத்து சிந்தனைக்கான மற்றெல்லாக் கதவுகளையும் அடைத்து நிற்கிறான்.

கவிதைத் தளம் இருக்கிறது. இதுபோல் இலக்கியத் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. கவிதைத் துறைப் பயிற்சியாளர்கள் சிலர் கவிதை தவிர, பிற இலக்கிய வடிவங்களைக் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை. ஒரு பக்கச் சாய்வு வந்து விடுகிறது. சமூகத்தில் இயங்கும் பிற துறைகள் பற்றிய அறிதல் துளியும் இல்லாமல் ஒதுங்குகின்றனர். உண்மையில் பிற துறை அறிவும், பிற வடிவங்களின் வாசிப்பும், கவிதைத் துறைக்கு கொடையளிக்க முடியும். எனவே ஏதாவது ஒன்றின் ஆழம், எல்லாத் துறை பற்றிய அறிவின் விரிவிலிருந்து சாதிக்கப்படுகிறது.

தி.க.சி சமூகம், இலக்கியத்தின் பல துறைகள் பற்றியும் விமர்சகனாக, புறவய நிகழ்வுகளிலிருந்து அகவயத் தன்மைகளை கண்டடைபவராக தன் வாசிப்பைத் தொடங்குகிறார். படைப்பாளியாக வளர்கிறார். விமர்சகனாய் நிலை நிறுத்திக் கொள்கிறார்.

தி.க.சி கவிஞராக, சிறுகதைக் கலைஞராக இருந்த காலத்தின் சான்றுகள் நமக்குக் கிடைக்கவில்லை. மு. பரமசிவம் எழுதிய "தி.க.சி என்னும் திறனாய்வுத் தென்றல்" நூலில் ஒரு சில கவிதைகள் காணக் கிடைக்கின்றன.

கவிதைகள், கதைகள் என்ற அவருடைய மொத்தப் படைப்புக்கள் இன்னும் நம் கைக்குக் கிட்டவில்லை. அவருடைய கைக்குக் கிட்டியிருக்குமா என்றும் தெரியவில்லை.

"விமர்சனத் தமிழ்” என்ற நூல் 1993-ல் அன்னம் பதிப்பாக வருகிறது. அங்கங்கே சிதறிக்கிடந்த கட்டுரைகளைச் சேகரித்து தந்ததற்காக நூலில் பல பேருக்கு தி.க.சி நன்றி சொல்கிறார். அவர்களில் ஒருவர் வாய்மொழி இலக்கியங்களின் சேகரிப்பாளரும், சமூக விமர்சகருமான எஸ்.எஸ்.போத்தையா. பல்வேறு காலகட்டங்களில் பற்பல இதழ்களில் வெளிவந்த தி.க.சி.யின் கட்டுரைகளைத் தேடிப்பிடித்து அனுப்பிய சுகானுபவத்தை எஸ்.எஸ்.போத்தையா ஒரு கடிதத்தில் தெரிவிக்கிறார்.

விமர்சகன் என்ற தற்கால தளத்திலேயே தான் எழுதியவைகளைத் தேட வேண்டிய நிலையிலுள்ள தி.க.சி.க்கு படைப்பாளியாகத் தொடக்க நிலையில் படைத்தவைகளை வேட்டையாடித்தான் பிடிக்க வேண்டியிருக்கும்.

அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகள், கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியீடாக 'தி.க.சி.யின் திறனாய்வுகள்' 1993 பிப்ரவரியில் வெளியாகிறது. மணிக்கொடி கால எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், மௌனி, ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, ந.சிதம்பர சுப்பிரமணியன், ஆர்.சண்முக சுந்தரம், கி.ராமச்சந்திரன் என்ற கி.ரா.பி, எஸ்.ராமையா, வ.ரா.சிட்டி (பெ.கோ.சுந்தர்ராஜன்),  சிவபாத சுந்தரம், வல்லிக்கண்ணன், பின்னர் உருவாகி வந்த ஆதவன் என சிறுகதை, புதினம், விமர்சனத்துறையின் முக்கியப் படைப்பாளர்கள் இந்நூலில் விமர்சனப்படுத்தப்படுகிறார்கள். இவர்களின் ஒரு சிறுகதைத் தொகுதி அல்லது நாவல் என ஆய்வு செய்யப்பட்டு, இவர்களின் பங்களிப்பு முன்வைக்கப்படுகிறது. ஒரு நூல் பற்றிய முழுமை என்பது, அந்தப் படைப்பாளி பற்றிய முழுமையான விமர்சனமாக உருவாக்கம் பெறுகிறது.

பிற்கு 1993 ஏப்ரலில் அன்னம் வெளியீடாக விமர்சனத் தமிழ்; கோவை விஜயா பதிப்பக வெளியீடாக 1994, டிசம்பரில் விமர்சனங்கள் - மதிப்புரைகள் பேட்டிகள்; கடைசியாக 1999 மார்ச்சில் பூங்கொடி பதிப்பகத்தாரின் 'மனக்குகை ஓவியங்கள்'.

இந்த நான்கும் விமர்சனப் படைப்புக்கள்.


2

நகரம் உலகத்தின் கண்களாகவும் காதுகளாகவும் இருந்து பல்வேறு விசயங்களைத் திறந்து வைக்கிறது. உள்வாங்கச் செய்கிறது. அதே பொழுதில் பல்வேறு பாதகங்களின் சதுப்பு நிலமாகவும் இருக்கிறது. படைப்பாளியை, கலைஞனை கொஞ்சம் கொஞ்சமாக கூர்மழுங்கச் செய்து, மொன்னைத்தனமாக, தன் சத்து இழந்தவனாக உணக்குகிறது.

"சென்னை நகரில் கவிதை எழுதுவது என்பது நடக்காத காரியம். வேண்டுமானால் செய்யுள் எழுதலாம். இதை ஒரு போர்டில் எழுதி எழும்பூர் ரயில் நிலையத்திலும், சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் தொங்க விட்டால் இங்கே குடியேறுவதற்காக வரும் உண்மைக் கவிஞர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்."
கு.அழகிரிசாமி சொல்வார்.

கலைஞர்கள் பல்வேறு வகைகளில் தொலைந்து போவதற்கான வாய்ப்பு நகரத்தில் ஆவியாக உலவுகிறது. படைப்பு மனோநிலையை தனக்குள் ஒரு ஆக்கிரமிப்பாகவே நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒரு கலைஞன், எந்த இடத்தில், எந்த வாழ்வில், எந்த நெருக்குதலில் இருந்தாலும் தன்னைத் தொலைத்துக்கொள்ள மாட்டான். எந்தச் சூழலிலும் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுவான். நிஜமான கலைஞன் தன்னை, சூழல் ஆளவிடாமல் சூழலை ஆள்கிறவனாக இயங்கிக்கொண்டிருப்பான். மனைவி காலொடிந்து படுக்கையில் கிடந்தபோதும், பிரச்சினைகள் பெரிதாகி, பெரிதாகித் தாக்கியபோதும், மனசு விடாத செயல்பாட்டுத் திறனைக் கூடுதல்படுத்திய தி.க.சி.யை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


3

மணிக்கொடி கால (1934-38) எழுத்தாளர்கள் எல்லாரையும் திறனாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார். இந்த விமர்சனங்கள், ஐம்பதுகளில், அறுபதுகளில் உருவானவை. அவர்களின் படைப்புத் தொகுப்புகளை முன்வைத்து விமர்சனம் வெளிப்பட்டுள்ளன.

இதில் புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, ஆர்.ஷண்முக சுந்தரம், எம்.வி.வெங்கட்ராம் என ஒரு சிலரே மத்திய தர வர்க்கம் சார்ந்தவர்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் 19-இன் இறுதிகளிலும் உலக அரங்கிற்கு புதிதாக வந்த மத்திய தர வர்க்கம், தமிழ்ச் சமூகத்தில் உருட்டித் திரட்டிய ஒரு குணாம்சமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. ருசிய சமுதாயத்தில் மத்திய தர வர்க்கத்தின் குணாம்சங்களை துல்லியமாக வெளிப்படுத்தியவர் ஆண்டன் செகாவ். உள்ளீடற்ற தக்கைக்குணம், உறுதிப்பாடில்லாத அசைவு, பச்சோந்தித்தனம், வறட்டுக் கௌரவம் போன்ற அதன் குணங்களுக்கு அளவெடுத்துத் தைத்த சட்டைகளாய் அவர் கலைப்படைப்புகள் திகழ்ந்தன.

புதுமைப்பித்தனின் பெரும்பாலான கதைகள் மத்திய தர வர்க்கத்தின் வலியை, ரணத்தை, மூலக்கடுப்புநோய் வந்ததுபோல் துடிக்கும் துடிப்பைச் சுற்றிசுற்றி வரையப்பட்டவை. இதே பாதையில் மற்ற சிலரும் தந்தனர்.

இந்தக் கால கட்டத்திலும், இதற்குப் பிந்தைய நாட்களிலும் இலக்கியத்தில் மேன் மக்கள் போக்கு ஒன்று நிலவியது. இவர்கள் சமஸ்கிருதப் புலமை மிக்கவர்கள். ஆங்கிலப் புலமை பெற்றவர்கள். கருத்துலக ஆதிக்கத்தை பாரம்பரியமாக கையில் வைத்திருந்தவர்கள். இவர்களுக்கு இயல்பாக குடும்ப பாரம்பரியம் காரணமாக கிடைக்கப்பெற்ற சமஸ்கிருதப்புலமை, ஆங்கில அறிவு காரணமாய் பழைய வேதாந்தக் கருத்துக்களுக்குள் புகுதல், உலக இலக்கியங்களை அறிமுகப் படுத்துதல், முதலாளித்துவ நாடுகளின் விமர்சனப் போக்குகளை முன் வைத்தல், உலகத் தரத்தை தமிழுக்கு கொண்டு வருதல் என்று மேல் நிலையாக்கம் நோக்கி நகர்தல் நிகழ்ந்தது.

மணிக்கொடி கால எழுத்தாளர்களை தனது விமர்சன மையமாக எடுத்துக்கொண்டதன் மூலம் தி.க.சி இருவகைப் போக்குகள் நிலவியதை எடுத்துக்காட்டினார். யதார்த்தவாதம், விமரிசன யதார்த்தவாதம் என்ற போக்குகளைச் சுட்டிக்காட்டிய அதே வேளையில் 'மேல் நிலையாக்கம்' பற்றிய விமர்சனத்தையும் தொடுத்தார்.

"இவர்கள் மேற்கு நாடுகளின், குறிப்பாக முதலாளிய நாடுகளின் சமூகச் சூழலை, நெருக்கடிகளை இங்கு தாம் அனுபவிப்பதாக உணர்ந்தனர். இதன் விளைவாய் பல்வேறு இசங்கள் தமிழ்ச்சூழலுக்கு இறக்குமதியாகின. "சங்க கால மனிதனுக்கு தான் வாழ்ந்த உலகம் இன்று போல் சிக்கலானதாக, குழம்பியதாக, மனப்போர்க்களமாக இருந்ததில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டில், அதுவும் இரண்டாவது மகாயுத்த விளைவுகளால் அஸ்திவாரம் கலகலத்த ஒரு கட்டடத்தில் வாழும் நிலை குலைந்த வாழ்க்கையாளனுக்கு தான் வாழும் உலகம் சிக்கலும், மோதலும் நிறைந்ததாகப்படுகிறது.
- இது சி.சு. செல்லப்பாவின் பார்வை"
(நவீனத்துவமும் திறனாய்வுகளும் - முனைவர் ந. முத்துமோகன் கட்டுரை)

தான் அறியாத பக்கங்களின் புதிர்களைப் பற்றி தன்னால் அறியப்படாத எல்லைகளிலிருந்து வந்து சேரும் நெருக்கடிகளைப் பற்றி இந்தப் பார்வையையே க.நா.சு, மௌனி, லா.ச.ராமாமிர்தம், வெங்கட் சாமிநாதன் போன்றவர்கள் முன் வைத்தனர். சமஸ்கிருத கலாச்சாரம், ஆங்கிலப்புலமை என்ற மேல்நிலையாக்கத்தின் வெளிப்பாடுகளாக இப்போக்கு வெளிவந்தது.

உண்மையில் இப்பிரச்சினை வேறொரு பார்வையில் நோக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

சமகால சமூகத்தில் எழுத்தாளன் எதிர்கொள்கிற பிரச்சினையைப் போலவே சங்ககாலத்தில் எதிர்கொண்டவன் கவிஞன். அன்றைக்கிருந்தவன் கவிஞன். அதுபோல் அன்றைக்கிருந்தது கவிதை மொழி.

இன்றைக்கிருப்பவன் எழுத்தாளன். இன்றைக்கு உலவுவது நாவல், சிறுகதை, கட்டுரை, உருவகம், நாடகம் என்று நானாவித அகலிப்பும் கொண்ட நவீன மொழி. சமூக அரங்கிற்கு, வாழ்க்கைத் தளத்திற்கு வந்த புதிய விசயங்கள் காரணமாக வெளிப்பட்ட புதிய மொழி.

அன்றைய கருத்துப் பரப்பாளனான கவிஞனின் உலகம் சுருங்கிய வட்டம்; “யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடினாலும் அவனறிந்த சிறிய சமுதாயத்தை குறுகிய எல்லைகளை உலகம் என்றான்.


இன்றைக்கிருப்பவன் எழுத்தாளன். எல்லைகளற்ற விரிந்த நிலப்பரப்பும், மக்களும் அவனுக்கு முன்னால் நிற்பதுபோலவே, எல்லைகளற்றுச் சுருங்கிய உலகமாகவும் அவன்முன் நிற்கிறது. அவன் கைக்குள் சுருண்ட இந்த உலகத்திலிருந்து அவன் கைவசப்படுத்த முடியாத எண்ணற்ற புதிய விசயங்கள் வந்து சேருகின்றன. அவைகளைத் தீண்டி, ஆய்வுக்குட்படுத்தி, புதுமையாக்கத்துக்கு கிரகிப்புச் செய்பவனாக இன்றைய எழுத்தாளனின் செயல்படல் தேவையாகிறது. எனவே நவீன எழுத்தாளன் ஒரு சமூக விஞ்ஞானியாகவும் இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறான்.

இவ்வகையில் அனுகப்பட்டிருந்தால், நவீனத்துவ விமர்சகர்களிடம் இந்த தத்துவ விசார உடைவு நேர்ந்திருக்காது. இந்த உடைவே தமிழ்ச் சூழலில் தனித்த போக்காக நிகழ்ந்திருக்காது. இதை சரியாகக் கண்டுகொண்ட தி.க.சி, க.நா.சு, மௌனி போன்றோரை நிர்த்தாட்சண்யமற்று விமர்சிக்கிறார்.

இன்னொரு பக்கம், மணிக்கொடி 'எழுத்து' முறையிலிருந்து கல்கி எழுத்துமுறைக்கு மாறிய வணிகப் போக்கையும் விமர்சனத்துக்கு உட்படுத்தினார்.

ஒரு படைப்பு, கலைஞனுக்குள்ளிலிருந்து சமூகத்திற்கு வந்தடைந்தவுடன் சமூகத்திற்குரியதாக மாறிவிடுகிறது. சமூகத்திற்கு வந்தடைந்த கலைப்பொருளை அதன் சாதக, பாதகங்களை கருணை என்ற கட்டுக்குள் வைத்துக் காணுதல் சரியல்ல. தி.க.சி கருணையுள்ள மனிதர். ஆனால் இலக்கிய போக்குகள் பற்றிய விமர்சனத்தில் கருணையற்றவர்.


4

கதைத்துறை என்ற கட்டுரை 1962-ல் எழுதப்பட்டது. (விமரிசனத் தமிழ் ப.26-39) தமிழில் சிறுகதை பிறப்பெடுத்த காலம் முதல் சமகாலம் வரை, பத்துப் பத்து ஆண்டுகளாக, தேசத்தின் சமூக நிலைமைகளை ஆய்வு செய்து கொண்டே கதைத்துறை வளர்ச்சியை ஒப்பீடு செய்கிறார் தி.க.சி. 1900-1910 வரை; 1920-1930 - இப்படி முதல் இரண்டு கால கட்டங்களில் தமிழ்ச் சிறுகதையை வளர்த்தவர்களில் மூன்று பேரை பாரதி, வ.வே.சு.ஐயர், மாதவையா ஆகியோரை முக்கியமானவர்களாக குறிப்பிடுகிறார்.

1900-1920 வரையிலான கால கட்டம்-அடிமை இந்தியா எரிமலையாகித் தீக்குழம்பைக் கொட்டிய காலம். "பாரதியாரின் நூல்களைப் படித்துப் பாருங்கள். அந்தக் காலச் சரித்திரச் சூழலைப் புரிந்துக் கொள்வீர்கள்" என்கிறார்.

"1920-1940 தமிழ்ச் சிறுதையின் செழிப்பான அறுவடைக்காலம். இந்தக் காலம் வளமான அறுவடையின் விளைநிலமாக இருந்தது. 1934-இல் தோன்றிச் சுமார் 4 ஆண்டுகளே உயிர் வாழ்ந்த மணிக்கொடி என்னும் சிறு பத்திரிகை" என்று காணுகிறார். (பக்.29)

"தமிழ்ச் சிறுகதையின் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் பலவிதமான சோதனைகள் நிகழ்ந்தன. யதார்த்த வாதமும், அதீத கற்பனாவாதமும், கவித்துவமும், கற்பனை அழகும், உணர்ச்சிச் செறிவும், சிந்தனை மிடுக்கும், சுயாநுபூதியும், தனித்த முத்திரையும் காணப்படுகின்றன." (மேற்படி-பக்.31)

ஒவ்வொருவரும் அவரவருடைய படைப்பு ஆளுமையை எவ்வளவு ஆழம் பதிய முடியுமா அவ்வளவு ஆழத்திற்கு, எவ்வளவு உயரம் பறக்க முடியுமோ அவ்வளவு உயரத்திற்கும் எடுத்துச் சென்றார்கள். "மணிக்கொடி என்னும் பூங்காவில் பலவித வர்ணமும் மணமும் நிறைந்த மலர்களை மலரச் செய்தனர். (பக்.30)"

வகை வகையாகப் பூத்த மலர்களை, படைப்பாக்கங்களை அங்கீகரிக்கிறபோதே க.நா.சு, மௌனி, லா.சா.ரா போன்றவர்களை உள்ளடக்கித்திலும் அதன் காரணமாக உருவத்திலும் பிறந்த கோளாறுகளை விமர்சிக்கிறார்.

மணிக்கொடி காலப் படைப்புக்கள் எல்லாமே குறிப்பாக கதைகள் அனைத்துமே நாடு அன்றிருந்த நிலையை நோக்கிப் பயணப்பட்டவை அல்ல. ஓரிருவர் தவிர படைப்பாளிகளும் அவ்வழியினர் அல்ல. ஆனால் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அரசியல் கொந்தளிப்பும் போராட்டமும் உச்சத்தில் போய்க் கொண்டிருந்தபோது, ஏகாதிபத்தியத் தன்மை கொண்ட முதலாளியம் ஏற்படுத்திய வாழ்வின் அதிர்வுகளை பல் துறைகளிலும் பல கிளைகளிலும் கேள்விக்குட்படுத்தியவர்கள். அரசியல் யதார்த்த நிலைகளைக் கணக்கில் கொண்டு, சமூக நிலைமைகளை விமர்சனப் பூர்வமாக இலக்கியத்தில் கையெடுத்தவர்கள். “இவர்களில் பெரும்பாலோர் தேசியவாதிகள். பழமையின் எதிரிகள். வாழ்க்கையை, உண்மையை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்த்து சர்வதேச இலக்கியத்தின் தரத்துக்கு கலை அழகுடன் கதை எழுத வேண்டும் என்ற ஆசை மிக்கவர்கள்" என்கிறார்.

தேசம் பழமையை மாற்றுவதற்கான போராட்டத்தில் இயங்கியபோது, அதன் வீச்சில் சமூகப் பழமையை, இலக்கியப் பழமையை கேள்விக்குள்ளாக்கி, புதுமையைப் படைக்கும் ஆவேசம் இணையாக நிகழ்ந்தது.


5

ஒரு கனமான படைப்பு தன் சொந்த விதிகளால், அதாவது கலையின் விதிகளால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பார்கள்.

"கலையை கலை அல்லாதவற்றில் இருந்து பிரிப்பது கலைகளின் உள்ளார்ந்த விதிகளாகும். உள்ளார்ந்த கலை விதிகளுள் பிரதானமானது - அது ஒரு வெறும் கருத்து வெளிப்பாடாக அன்றி ஒரு உணர்வு வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதாகும்" இவ்வாறு விளக்கப்படுத்துகிறார் எம்.ஏ.நுஃமான் (மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் பக் -35)

"நிச்சயமாக உள்ளடக்கத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பேன். உள்ளடக்கம் சரியாகச் சொல்லப்பட்டிருக்கா ... பரி பக்குவமாக சொல்லப்பட்டிருக்கா, அனுபவமாக மாற்றப்பட்டிருக்கா, கருத்துக்கள் வெறும் கருத்துக்களாக இல்லாமல் கலையாக மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கா என்று பார்ப்பேன்."
என்று சுந்தர ராமசாமி சொல்வது உள்ளடக்க, உருவ இணைவைப்பற்றிய விசயமாகும். (சுபமங்களா பேட்டி - சுந்தரராமசாமி)

கலையம்சம், கலைத்துவம் என்ற சொல்லாடல்கள் எல்லாம் படைப்பின் நோக்கம். படைப்பின் உருவம் இரண்டின் பூரணமான இணைப்பைக் குறிக்கிற ஒன்றே. படைப்பு வெளிப்படுகிறபோதே இந்த இரண்டையும் பூரணமாக நிறைவு செய்து உருவாகியிருக்கிறதா என்பதே கலைவிதி.

க.நா.சுப்பிரமணியத்தின் 'மணிக்கூண்டு' கதையை விமர்சிக்கிறபோது தி.க.சி. இவ்வாறு சொல்கிறார். "இலக்கிய எழிலுடன் சிறந்த சிறுகதையாக மணிக்கூண்டு படைக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. குரலை உயர்த்தாமல் சற்றே ஒதுங்கி தமது தத்துவங்களை அடக்கமாக ஆசிரியர் சொல்லியிருக்க வேண்டும்" தி.க.சி.யின் திறனாய்வுகள் பக். (62) "அப்படியானால் இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றிருக்கும்; மாறாக 42 பக்கங்களில் அநேகமாகப் பக்கத்துக்குப் பக்கம், ஆசிரியர் தத்துவ விசாரம் செய்ததால் இந்தக்கதை ஒரு தத்துவத் தொண, தொணப்பு என்றே வரையறுக்கத் தோன்றுகிறது. அளவுக்கு மீறிய தத்துவ அரட்டைக் கச்சேரியினால் கதையின் ஜீவனைச் சித்திரவதை செய்கிறார் க.நா.சு" (பக்.63)

ஆங்கிலப்புலமையும், சமஸ்கிருதப் பழமையில் ஊறியமையும் க.நா.சு.வை விட்டு வெளியேறிவிடவில்லை. பழைய வேதாந்தக் கருத்துக்களை மீட்டுருவாக்கம் செய்கிறதாக, புதிய விசயங்களையும் அவ்வகையில் இடையீடு செய்வதாக வெளிப்படுகிறது.

"காலத்தைக் கடந்துவிடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தப்ப முடியாது. அட்சகர்களும் தேவர்களும் இந்த சாதாரணத்தை (சாதாரண வாழ்வை) தப்ப முயன்றார்கள். மனிதன் தப்ப முயலுவதே இல்லை. எருமை மாடு சாணியையும் போட்டு அதன் மேலேயே படுத்துவிடுகிற மாதிரி, மனிதன் காலத்தையும், காலத்தின் ஓட்டத்தையும், கடிகாரத்தையும், காலண்டரையும் சிருஷ்டித்துவிட்டு தப்ப முடியாது என்று அதற்குள் வளைய வருகிறான்."

இக்கருத்து ஒரு பாத்திரத்தின் கூற்றாக வெளிப்படவில்லை. இக்கருத்தை விளக்குவதாகவே மொத்தக் கதையும் அமைந்திருக்கிறது. க.நா.சு.வே இந்த தத்துவப் பின்புலத்தில் நின்று பேசுவதாக அமைந்திருக்கிறது. "இவற்றை எழுதும்போது வாசகனுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்ற கவலையை விட என்னிடம் சொல்ல விஷயம் இருக்கிறதா இல்லையா, வேகம் இருக்கிறதா என்கிற கவலைதான் எனக்கு அதிகமாக இருக்கிறது" என்று க.நா.சு குறிப்பிடுகிறார்.

சமூக நெருக்கடிகளின் காரணமாக நவீனத்துவ படைப்பாளிகள், விமர்சகர்கள், இத்தகைய தனிமனித அனுபவ வாதத்துக்குள் தள்ளப்படுகின்றனர். சமூக நிகழ்வுகளின் விளைவாகத்தான் தாங்கள் இத்தகைய நிராதரவான நிலைக்கு தள்ளப்பட்டோம் என்ற புரிதலின்றி தத்துவ வேதாந்த மரபுகளில் இவர்கள் நுழைந்தார்கள். எனவே உள்வட்டம், வெளிவட்டம், ஆழ்மனம் என்ற வேதாந்த
ரீதியான விளக்கங்கள் தர முயன்றனர். இது போலவே புதிய நவீனத்துவ நெருக்கடிகள் சமூகத்தில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளாதவராக மௌனி நிலமானியக் கருத்துப் பிடிப்புகளுக்குள் இருந்து கையைக் காலை உதைக்கிறார்.

அதிர்வுக்குள்ளாகி வரும் நிலமானிய மதிப்பீடுகள், புனைவுகள் மூலம் மௌனியின் மாய எதார்த்தம் கட்டமைக்கப்படுகிறது. (இதே உடைவுகள், அதிர்வுகளையே நடுத்தர வர்க்க சமூகத்திலும் கண்ட புதுமைப்பித்தன் அது மனித குண ஆளுமைகளின் மையத்தை நொறுக்கியதை அப்படியே சிந்தாமல், சிதறாமல் அள்ளி வைத்தார்) அதற்கான ஒரு மொழியை, எடுத்துரைப்பு முறையை மௌனி எடுத்துக் கொள்கிறார்.

"இத்தகைய வேடிக்கை மனிதரின் மனப்பிராந்திக்கும், புலம்பலுக்கும், தத்துவ விசாரங்களுக்கும் ஏற்ற வண்ணம் தனது வசன நடையை புதிய முறையில் அமைத்திருக்கிறார் மௌனி. பித்தர்களின் மன ஓட்டங்களுக்குப் பொருந்திய வகையில் புதிரான; சுழிப்பான பித்து நடையை ஏன், எதற்காக என்று வினவும் ஒற்றைப் பத நடையை அடிக்கடி கையாளுகிறார். "அவருக்கான எடுத்துரைப்பு பாணி எவ்வாறு உருவானது என அவருடைய தத்துவப் பார்வைக்கும் எடுத்துரைப்பு முறைக்கும் உள்ள இணைவை தி.க.சி வெளிப்படுத்துகிறார்.

ஒரு படைப்பாளியின் வாழ்காலம், சமூக வரலாற்றின் நிகழ்காலமாக இருக்கிறது. தெளிவாகச் சொன்னால் அவன் சமூக வரலாற்றுக்குள் இயங்குகிறான். சமகாலச் சாரம் அவனுள் இறங்குகிறது. சாரத்தின் ஈரத்தை உள்வாங்கி வெளியில் கதிர் அலைகளாகக் கொட்டுகிறான். ஆனால் வரலாற்று நெருக்கடி, சமுதாயத் தாக்கம் எதையும் தனக்குள் இறங்க அனுமதிக்காத மூடுண்ட மனம் மௌனிக்கு: இந்த தடைச் சுவர்களைத் தாண்டி உள் இறங்கினாலும் பூர்வீக எண்ணங்களுக்குள் பூட்டி வைக்கிறார். இங்கே தத்துவ விசாரம், ஆன்ம விசாரணை என்று பல விசிறிகள் காற்று வீசுகின்றன.

தேசம் விடுதலை நெருப்புக்குள் எரிகிறது. சர்வதேச நிலை புரட்சியும் போராட்டமுமாய் கொந்தளிக்கின்றன. ருசிய விடுதலை, பல நாடுகளுக்கும் புதிய பல்லவி எடுத்துத் தருகிறது. தமிழகத்தில் பகுத்தறிவுப் பிரக்ஞை விழித்து பெரியாராக உருக்கொள்கிறது. சாதியப்படி நிலைகள் வெயில்கால மெழுகுப் பாறைகள் போல் தகர்ந்து கொண்டிருந்தன. திட்டமிட்டபடி ஒரு முனையில் சாதி அடுக்கு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. பெண்ணின் விழிப்பு பீறிட்டுக்கொண்டிருந்தது.

இந்தப் புதிய முளைகள் எதுவும் மௌனி என்ற படைப்பாளியிடம் கவனிப்புப் பெறவில்லை. இவைகளின் காற்று எதுவும் தன் மீது படிய விடாமலே ஒரு முனிவர் தனக்குள்ளேயே தான் எழுதிக் கொண்டிருந்தார்.

"மௌனியின் தத்துவம் என்பது வாழ்க்கை மறுப்புத் தத்துவம். எவற்றின் நிழல்கள் நாம் என்ற மாயா வாதம்தான் மௌனி கோட்பாட்டின் அடிப்படை. ஆனால் பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன் போன்றவர்கள் பாரதியின் மனித நேயத் தத்துவத்தை கற்றவர்கள். ஆனால் மௌனியோ டி.எஸ்.எலியட்டின் தரிசு நிலத் தத்துவத்தை ஓர் எதிர்மறையான வாழ்க்கைத் தத்துவத்தை விரும்பியவர்."
(தி.க.சி.யின் திறனாய்வுகள் - பக்.199-200)

அவருடைய உள் மன வடிவங்கள் படைப்புக்களில் பாத்திரங்களாக வெளிப்பட்டன. அவருடைய வாழ்வுக் கொள்கைகள், சமூக உறவுகளை எப்படி வடிவமைத்திருந்தாரோ, அதனுடைய அச்சுக்களாகவே கதைகள் உருவெடுத்தன. அவர் தன் பார்வையிலிருந்து அல்லது தன் நிலையிலிருந்து மாறுபட்ட பாத்திரங்களை உலவ விட்டதில்லை. உரையாட அனுமதித்ததில்லை. சோதனைக்காகவேனும் முரண்பட்ட பாத்திரங்களைப் பேச விட்டதில்லை. சமூக அக்கறையுடன் எழுதுகிறவர்களின் படைப்புக்களை ஒற்றைத்தன்மை கொண்டதாக தட்டையானவையாக காணுகிற இலக்கிய விமர்சகர்கள்,

மௌனியின் ஒற்றைத்தன வார்ப்புகளை விமர்சிக்க முன்வந்தார்களில்லை. மாறாக மௌனி பற்றிய பிம்பங்களைக் கட்டியமைப்பதில் போட்டி நடந்தது.

தமிழ்ச் சமூகம் பிம்பங்களை கட்டமைத்துக் கொள்வதில் இயங்குகிறது. தொலைக்காட்சி, பத்திரிகை, மேடை போன்ற ஊடகங்கள் வழியாக மட்டுமல்ல. இலக்கியங்கள் வழியாகவும் பிம்பம் உருவாக்கப்படுகிறது. இதன் மூலமாகவும் இதன் அடிப்படையிலும் இலக்கியப் புனிதம் கட்டமைக்கப்படுகிறது.

இவரைத் தாண்டி அவர், அவரைத் தாண்டி இவர், பிறகு மூன்றாமவர், நாலாமவர் என்று இந்த வரிசையில் போக வேண்டும் என்ற மரபை வாசிப்பதில் ஏற்படுத்தி விடுகிறார்கள். சுய வாசிப்பை, தன் வாசிப்பிலிருந்து உருவாகிப் பெருக்கெடுக்கும் சுய சிந்தனையை பிம்பங்கள் தடுத்து விடுகின்றன. முன்னுரைகள், அணிந்துரை, மதிப்புரை என்று பல உரைகள் நூலுக்குள் அணிவகுப்பது தடுத்தும் நிறுத்தும் சுவர்களாக நிற்கின்றன.

பிம்பங்கள் உருவாக்குகிற வேலை வேண்டாம் என்று கருதியபோது "வீரவணக்கம் வேண்டாம்" என்று எழுதினார் தி.க.சி. அதற்கான காரணங்களையும் முன் வைத்தார். இவ்வாறு "வீர வணக்கம்" செய்கிற பழைய நிலமானியப் போக்கு நவீனத்துவத்திலும் செயல்படுவதைக் கண்டித்தார்.

"தனக்கென்று ஒரு தனி மொழியை சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறார். சிறு கதை உலகில் மௌனியை மிஞ்சியவர் வேறு யாரும் இல்லை"
-க.நா.சு

"தமிழின் திருமூலர்"
-புதுமைப்பித்தன்

"ஒவ்வொரு தடவையும் பேனாவைத் தூக்கு முன் மௌனியின் மாறுதல் கதையைப் படித்துவிட்டுத் தான் பேனா பிடிப்பேன்" 
-ஜெயகாந்தன்

"மொழியின் சுருதியைத் தளமாகக்கொண்டிருக்கும் மௌனி, அர்த்தங்களிலிருந்து முற்றாக நகர்ந்து உணர்வுகளின் உலகத்திற்குப் போய்விடுகிறார். காதல், நிராசை என்ற இரண்டு நிரந்தர உணர்வுகளை மாறி மாறிப் பிசைந்து மொழி நுட்பத்தையும், அழகுணர்ச்சியையும் பயன்படுத்தி மனச் சுருதிகளை எழுப்பி இசை மூட்டங்களை உருவாக்குகிறார்."
- சுந்தரராமசாமி

சிறுகதைகளின் மூலவர் என்று சொல்வது, அவரைத் தாண்டி எவரும் போகவில்லை, இவருக்கு அப்பால் எதுவும் இல்லை போலிருக்கிறது என்று வாசகனைப் பேதலிக்க வைப்பது - மௌனி பற்றிய இந்த பிம்பங்களை முதன் முதல் உடைத்துச் சரிக்கிற வேலையை தொடங்குகிறார் தி.க.சி.

மௌனியின் நடை புதிராகவும், மர்மமாகவும், எளிதில் புரியாததாகவும் இருக்கிறது. எனில் "மௌனியின் கதாபாத்திரங்களும், அவர்களது சிந்தனைகளும், செயல்களும் அப்படித்தானே இருக்கின்றன. அசாதாரணப் பிறவிகளுக்கேற்ற அசாதாரண நடை" என்று பிம்பத்தை சரிக்கிறார் தி.க.சி. (தி.க.சி.யின் திறனாய்வுகள் - பக். 24-34)


6

"கலை இலக்கியம் என்பதெல்லாம் ஒரு குறுகிய வட்டத்திற்குள், ஒரு வகையில் மேன் மக்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களிடை யேதான் பயிலப்படுகிற மாதிரித் தோன்றுகிறது" என்று க.நா.சு சொல்கிறார்.

கலை இலக்கியமெல்லாம் மேன் மக்கள் விவகாரமாக, மேன் மக்களால் பயிலப்படுவதாக இருத்தல் என்ற பார்வையின் உற்பத்தி ஸ்தானம் எது?

கலை, இலக்கிய ஆற்றல் காலந்தோறும் கல்வியோடு சம்பந்தப்பட்டிருந்தது. வர்க்க சமுதாயத் தோற்றம் தொட்டு சமகாலம் வரை, கல்வி மேன்மக்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. உயர்குடிப்பிறப்பு, மேல்நிலை வாழ்க்கை, உயர் பதவிகள் என்பன போன்றவை படிப்பறிவு பெற அடிப்படையாயிருந்தது. எல்லா நலன்களும் இந்த மேன் மக்கள் தொடும் தூரத்தில் இருந்தது போலவே கல்வியும் கைவளைவுக்குள் கிடந்தது. இன்னும் சொன்னால் கல்வி, வரலாறு தோறும் ஆதிக்க உரையாடலின் ஊடமாக விளங்கியது.

படிப்பறிவில் வெளிச்சம் யாருக்குப் பெற முடியுமோ, அவர்கள் கலை, இலக்கிய வித்தகம் அடைந்தார்கள். படைப்பாற்றல் ஞானமும் திறனும் பயிலப்பட்டது.

மற்றவர்களுக்கு கல்வி கற்கும் சனநாயகம் ஆழப்புதைக்கப்பட்டது.

படிப்பறிவு பெற்றவர்கள் எழுத்து மொழி இலக்கியங்களுடன் வாழ்ந்தார்கள். வாய்ப்பில்லாத பட்டறிவு பெற்ற பாமரர் வாய்மொழி இலக்கியங்களுடன் வாழ்ந்தனர். படிப்பறிவு பெற்றவர் பேரிலக்கிய உரையாடலை நிகழ்த்திக்கொள்ள முடிந்தபோது சாத்தியமில்லாத மக்கள் கூட்டம், கலை நேர்த்தியை, ஆற்றலை தமக்குள் பரிமாறிக்கொள்ளும் சிறு சிறு வட்டமாக அமைத்துக் கொண்டது. அதனாலேயே தம்மையும் தமது வட்டம் தாண்டிய பெரிய பிரபுக்களையும், அரசு நடைமுறைகளையும் விமர்சிக்கும் சுதந்திரம்
அவர்களுக்குள் நிலவியது.

கலை இலக்கியம் மேன்மக்களால் பயிலப்பட்டது மாதிரி தோன்றுவது அல்ல. பயிலப்பட்டது என்பதே சமுதாய வரலாற்று உண்மை. ஆனால் க.நா.சு.க்குத் தரிசனப்படுவது இந்த பார்வையிலல்ல; கலை, இலக்கியம், அறிவு என்பதெல்லாம் உன்னதமான மூளைகளில் பிறப்பெடுத்து ஓடுவது என்ற தரிசனமாகும்.

இந்த மேன்மக்கள் கோட்பாடு, உன்னத மூளைக்கோட்பாடுதான் இவர்கள் மேல்நிலையாக்கத்திற்கு நகர்வதற்கான தூண்டுதலாகவும் ஆகிறது.

"நவீனத்துவ எழுத்துலகில் உலகத்தரத்தை எட்டுதல் என்பது ஒரு முதன்மையான இலக்காக முன் வைக்கப்பட்டு வந்துள்ளது. க.நா.சு தரம் பற்றி, குறிப்பாக உலகத்தரம் பற்றி அதிகம் அக்கறை கொண்ட விமர்சகராக சித்தரிக்கப்படுகிறார். மேற்கு நாடுகளின் இலக்கியப் போக்குகள் பற்றி குறிப்பாக நவீனத்துவ எழுத்தாளர்கள் பற்றி சி.சு.செல்லப்பா, வெங்கட்சாமிநாதன் ஆகியோர் நீண்ட கட்டுரைகள் எழுதியுள்ளனர். பயன்பாட்டு வாதம் (PRAGMATISM) இருத்தலியம், பிராய்டிசம், சர்ரியலிசம் போன்ற தத்துவப் போக்குகளையும் இவர்கள் தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளனர். உலகத்தரம் கொண்டதாக இலக்கியம் இருக்க வேண்டும் என்பதை மட்டுமின்றி, உலகத்துவம், அண்டத்துவம், அகிலத்துவம் (UNIVERSITY) என்ற ஒரு பண்பைக் கொண்டதாக எழுத்து இருக்கவேண்டும் என்பதையும் நவீனத்துவ விமர்சனம் வலியுறுத்தி வந்திருக்கிறது. தமிழில் யதார்த்தவாதம், இயற்பியல் நெறி ஆகியவை முன்னிறுத்திய பிரத்தியட்ச சித்தரிப்பு என்ற முறைமையை மறுக்கவும் நவீனத்துவ விமர்சகர்கள் மேல் குறித்த அகிலத்துவக் கொள்கையைப் பயன்படுத்தி வந்துள்ளனர்."
(நவீனத்துவமும், தமிழ்த் திறனாய்வுகளும் - முனைவர் ந.முத்துமோகன் கட்டுரை)

மேலை இலக்கியங்கள், படைப்புமுறை, விமர்சன முறைகளைத் தேடும் பயணத்தில் இவர்கள் இருக்கையில், மிகச் சிலர் மக்களின் வாய்மொழி இலக்கியங்களைப் படைக்கும் முயற்சியில், மக்களின் இலக்கியங்களைத் தேடிய பயணத்தில் கீழ்நோக்கி இறங்கினர். மண்ணுக்குள் கிடந்த மக்களின் பாரம்பரியச் சொத்தாக மக்களின் யதார்த்தவாதப் பண்புள்ள நாட்டார் பாடல்கள், கிராமியக் கதைகள், விடுகதைகள், நெடுங்கதைப் பாடல்கள், சொலவடைகள், நம்பிக்கைகள், வாழ்வுச் சடங்குகள் என நாட்டார் வழக்காற்றியல் ஆய்வினை நா.வானமாமலை போன்றோர் அடையாளம் காட்டி முன்னெடுத்தனர்.

ஒரு படைப்பாளியாக இயங்கிய தான், விமர்சனத்துறையில் காலடி எடுத்து வைத்ததற்கு நா.வானமாமலைதான் காரணம் என தி.க.சி குறிப்பிடுவார். கலை, இலக்கியம், தத்துவம், புண்பாடு, வரலாறு, மானுடவியல், நாட்டுப் பாடல் முதலிய பல துறைகளில் உழைத்தவர் நா.வானமாமலை. விஞ்ஞானப்பூர்வ இயக்கவியல் வாதத்தைக் கொண்டு இத்துறைகள் பற்றி ஆய்வு செய்த முறையியல் பலரை ஈர்த்தது. நா. வானமாமலை சிந்தனைப்பள்ளி (SCHOOL OF THOUGHT) என்ற புதிய போக்கு விளைந்தது. ஆராய்ச்சி என்ற நா.வானமாமலை நடத்திய காலாண்டிதழ் பல்வேறு துறை அறிஞர்களின் அங்கீகாரத்தைப் பெற்றது.

நாட்டார் வழக்காற்றியல் பண்புகளிலிருந்து, திருச்சிற்றம்பலக் கவிராயர் என அறியப்பட்ட தொ.மு.சி.ரகுநாதனும், புதுமைப்பித்தனும் கவிதைகள் படைத்தனர். செப்பனிடப்பட்ட செவ்வியல் மொழி நவீனத்துவவாதிகள் கையில் பொதுமொழியாக, படைப்பு மொழியாக வெளிப்பட்டபோது, நாட்டார் வாய்மொழி இலக்கிய மரபுகளில் எழுத வட்டார எழுத்தாளர்கள் சகல தோரணைகளோடும் முன்னுக்கு வந்தனர். மேல்நிலை யாக்கத்திற்கு எதிரான அடிநிலையாக்கப் படைப்புக்கள் மக்கள் யதார்த்தம் என்பதிலிருந்து உருவாகின. இத்தகைய மக்கட் பண்புகளுள்ள வட்டாரஞ் சார்ந்த எழுத்துக்களை, வட்டார எழுத்தாளர்களை தி.க.சி ஊக்குவித்து மேன்மைப்படுத்தினார். வேரிலிருந்து புறப்படுதல் என்ற சத்துள்ள வருகையை வரவேற்றார்.

"வட்டார வழக்குகளைப் பத்திரிகைகள் மட்டுமின்றி பல்கலைக்கழகங்களும் ஏற்கும் நிலை உருவாகி வருகிறது. மொழி வளர்ச்சிக்குக் குந்தகமின்றி, எந்தெந்த வகையில் தமது படைப்புக்களில் வழக்குச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆற்றலும் அனுபவமும் மிக்க ஒரு கலைஞன் அறிவான்."
(தி.க.சி.யின் திறனாய்வுகள் - பக். 326)

இன்று தமிழில் உலா வரும் இரண்டு தலைமுறைப் படைப்பாளிகளில் பெரும்பாலோர் இந்தப் புதிய போக்கில் வட்டார வழக்குகளை, வட்டார மக்கள் மன இயல்புகளை, வாழ்வியலை படைப்பாக்கத்தில் கொண்டு செலுத்த வேண்டும் என்பதை அறிந்து உழைத்தவர்கள்.


7

மணிக்கொடியின் விமர்சன யதார்த்தவாதப் போக்குக்கு எதிரான - காரிய சாத்தியம் அற்ற அதீதக் கற்பனா வாதம் நாற்பதில் மேலோங்குகிறது. நாட்டு விடுதலையில் கல்கி, பி.ஸ்ரீ போன்றவர்கள் காந்தி - ராஜாஜியின் கொள்கைகளில் ஊன்றி நின்றாலும், இலக்கியத்தில் பொழுது போக்கு என்ற கொள்கையை, மணிக்கொடிக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டு செலுத்துகிறார்கள். ஆனந்த விகடனில் இருந்தபோதும், வெளியேறி கல்கியைத் துவங்கியபோதும் கல்கி இந்தப் பங்களிப்பைச் செய்கிறார்.

"கலை என்பது மக்களின் பொழுது போக்குக்காகவே என்னும் அன்றைய விகடன், கல்கி முழக்கங்களுக்கும், கலை என்பது யதார்த்த வாழ்வை ஓவியம் தீட்டவே என்னும் மணிக்கொடி முழக்கத்திற்கும் 1934-35-இல் தொடங்கிய தத்துவப் போராட்டம் இன்றளவும் பல்வேறு ரூபங்களில் நீடித்து வருகிறது" என்கிறார் தி.க.சி.
(விமர்சனத் தமிழ் பக்.32)

1940 காலகட்டத்தில் கல்கியின் இந்தத் தத்துவமே வென்றது. கல்கி, துமிலன், நாடோடி, எஸ்.வி.வி, தேவன், ராஜாஜி, டி.கே.சி, சோமு, பி.ஸ்ரீ - என்று இந்தப் போக்கின் வரிசையில் அணிவகுத்தவர்களின் பட்டியலைத் தருகிறார். "இந்த ஜனரஞ்சக எழுத்துக்களின் முன்பு, மணிக்கொடி எழுத்தாளர்களின் கலைப்படைப்புகள் நிற்க முடியவில்லை" என்று காட்டுகிறார். சிறுகதை, புதினம் பற்றி அவர் எழுதிய பெரும்பாலான கட்டுரைகளில் இதைக் குறிப்பிட அவர் தயங்கியதில்லை.

கல்கி நூற்றாண்டு விழா வருகிறது. கல்கியை இதற்கு முன் விமர்சனப் படுத்திய செம்மலர், கல்கி சிறப்பு மலர் வெளியிடுகிறது. சிறப்பு மலரில் தி.க.சி.யின் பின் வருகிற வாசகம் கவனிப்புப் பெறுகிறது:

"நமது காலகட்டத்திற்குக் கல்கியும் தேவை. புதுமைப்பித்தனும் தேவை என்கிற கொள்கை வரவேற்கத்தக்கது."
(தி.க.சி. பேட்டி, மனக்குகை ஓவியங்கள் பக். 73)

"பொதுவான அம்சம் என்னவெனில், புதுமைப்பித்தனும், கல்கியும் பாரதியின் வழித்தோன்றல்களே; ஆகவே புதுமைப்பித்தன், கல்கி இருவருக்கும் செம்மலர் சிறப்பு மலர் வெளியிடுவது மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது" என்று பரிந்துரைக்கிறார்.

1930-களில் பாரதியை மொட்டையாக தேசிய கவி என்று மட்டுமே ஒப்புக்கொள்கிறார் கல்கி. மணிக்கொடிக்காரர்களும் மக்களும் புரட்சிக் கவி, மகாகவி என்று சொன்னபோதும் கல்கி அதை ஏற்கவில்லை. அன்றைய பத்திரிக்கை உலகின் தீவிரவாதிகளான வ.ரா, டி.எஸ்.சொக்கலிங்கம் குழுவினருக்கும், மிதவாதிகளான கல்கி குழுவினருக்கும் நடந்த கருத்துப் போராட்டத்தில், போனால் போகிற தென்று மகாகவி என ஏற்றுக்கொண்டு எட்டயபுரம் பாரதி மணி மண்டப விழாவுக்கு ராஜாஜியுடன் வந்த கல்கி இப்போது பாரதியின் வழித்தோன்றலாகிவிடுகிறார்.
(விமர்சனத்தமிழ் - பக். 15)

பொழுதுபோக்கு இலக்கிய சித்தாந்தத்தின் முன் ஈடு கொடுக்க முடியாமல், வை. கோவிந்தனின் சக்தி, சக்திதாசனின் நவசக்தி; புதுமை, இலக்கியம், மாதமணி, நீதி, மனோரஞ்சிதம், விந்தனின் மனிதன், தொ.மு.சி.ரகுநாதனின் சாந்தி, விடிவெள்ளி, விஜயபாஸ்கரனின் சரஸ்வதி ஆகிய புதுமை இலக்கிய நாடலும், முற்போக்கும் கொண்ட இலக்கிய ஏடுகள் தொடர்ந்து
வீழ்ச்சியடைந்தன" என்கிறார்.

பொழுதுபோக்கு, வணிகத்தனம் கொண்ட போக்கு வெற்றி பெறுவதும், காத்திரமான இலக்கியம் என்ற இன்னொரு போக்கு விழுந்து விழுந்து எழுந்திருப்பதையும் கண்டு பொறாது வெதும்புகிறார்.

ஆர்.சண்முகசுந்தரத்தின் மனமயக்கம் என்ற சிறுகதைத் தொகுதியை விமர்சிக்கிற போது கூட இந்தத் தீவிரம் உறைந்துபோய்விடவில்லை.

"மணிக்கொடி எழுத்து முறையிலிருந்து கல்கி எழுத்து முறைக்கு ஆசிரியர் மாறிவிட்டாரோ என்று ஐயுறத் தோன்றுகிறது. மணிக்கொடி பத்திரிகையின் வீழ்ச்சி, இவ் ஆசிரியரை கல்கியின் ஜனரஞ்சகக் கதை எழுதும் முறைக்குத் துரத்தியதுபோலும்."
(தி.க.சி.யின் திறனாய்வுகள் - பக். 103)

1956-க்கும் 1998-க்கும் இடையேயான இந்த மாறுபாட்டை சுதாரிப்பான வாசகன் கண்டுபிடித்துவிடுவான் என்பதில் துளியும் ஐயமில்லை.

"எந்தத் திறனாய்வாளனும் தனது கருத்தை மறுபரிசீலனை செய்யலாம். முந்தைய முடிவை மாற்றிக் கொள்ளலாம்."
(தி.க.சி.யின் திறனாய்வுகள் - பக். 324)

இந்த வகையில் கருத்துக்கள், கணிப்பீடு பற்றிய மாற்றத்திற்கு தி.க.சி வந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஆனால் ஒரு போக்கை அல்லது ஒருவரைப் பற்றிய மதிப்பீடு மாற்றம் அதற்குரிய சரியான காரணங்களோடு விளக்கப்படவேண்டும். மாற்றம் படைப்பவரிடத்தும் வரலாம்; விமர்சிப்பவரிடத்தும் வரலாம். காலத்திற்குள்ளும், காலம் இரு பேருக்குள்ளும் நிகழ்த்துகிற காரண, காரியத்திற்குள் மாற்றம் இருக்கிறது. தி.க.சி தொடர்ந்து மேலே சொல்வதுபோல் “ஆனால் தமது கருத்து மாற்றத்திற்குரிய காரணங்களை நேர்மையுடன் கூறிவிட வேண்டும்” (- பக். 324)

படைப்புக்களின் வெளிப்பாட்டில் கல்கி, தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டதில்லை. பொழுதுபோக்கம் கற்பனை ரசனையும் கொண்ட ஒரே மாதிரியான படைப்புக்களைத் தந்துள்ளார். தொடக்க காலம் முதல் கடைசி வரை தனது இலக்கிய நிலைப்பாட்டில் கல்கி தெளிவுடன் செயல்பட்டிருக்கிறார்.

கல்கியின் விடுதலைப் போராட்ட பங்களிப்பு, தினமணி நிர்வாகத்துக்கு எதிராக டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோர் வெளியேறி போராட்டக் கொடி உயர்த்திய போது, கல்கி திடமாக போராடுவோர் பக்கம் நின்றது போன்ற சமூகச் செயல்பாடுகளில் கல்கியின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இங்கே விமர்சனம் அவரது சமூகப்பணிகளில் ஒன்றான படைப்புச்செயல்பாடுகள் பற்றியது. எந்த ஒரு கலைஞனுடைய இலக்கியக் காரியங்களும் அவனது சமூகச் செயல்பாடுகளில் ஒன்றாகவே கொள்ளலாம். அவருடைய படைப்புச் செயல்பாடுகளை ஒதுக்கிய க.நா.சு போன்றோர் அவரது பிற பங்களிப்புகளைக் கண்டுகொள்ள மறுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்கியின் பன்முகத்தளங்களைப் பார்க்கிறவேளையில், இலக்கியம் என்ற அறிவுத்தள காரியத்தில் அவர் என்ன பங்களிப்பு செய்தார் என தனியாகவே விமர்சனப்படுத்த வேண்டியுள்ளது.

அதுபோலவே புதுமைப்பித்தன் பற்றியும், (மனக்குகை ஓவியங்கள் பக்.74, 77) "அவரிடம் பாசிச எதிர்ப்பு இருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு இருந்தது. இவற்றின் சாராம்சங்களை கூறுகளை அவரது அனைத்துக் கதைகளிலும் பார்க்கலாம்" என்கிறார்.
(மனக்குகை ஓவியங்கள் - பக். 77)

"புதுமைப்பித்தன் ஒரு சமூக விஞ்ஞானியாக இருந்தார். வாழ்க்கையின் அடித்தட்டு மக்களைப் பார்த்து உருகியிருக்கிறார். உலகின் பொருளாதார நெருக்கடி முன்னுக்கு வந்த காலத்தில்தான் அவர் பத்திரிகைத் துறையில் அடியெடுத்து வைத்தார்."
(மனக்குகை ஓவியங்கள் - பக். 77)

சர்வதேசக் கண்ணோட்டமும், சமூக விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று மாறானவை அல்ல. இணைகோட்டில் செல்பவை. ஒன்றை அடிப்படையாகக்கொண்டு மற்றது வளர்த்தெடுக்கப்பட வேண்டியது.

ஏற்கனவே புதுமைப்பித்தன் பற்றி தொடர்ச்சியாக வைத்து வரும் விமர்சனத்துக்கு, இது முரணாய் நிற்பதுபோல் தெரிகிறது. "சுத்தசுயம் பிரகாச இலக்கியவாதி என்று சொல்லிக்கொண்டு பு.பி மக்களை விட்டு விலகியிருந்தார். மக்களைப் பற்றி மக்கள் பிரச்சினைகள் பற்றி சிந்திக்காமல் தன்னைச் சுற்றிலும் நல்வாழ்வுக்காக இடைவிடாது போராடுவது கண்டு புதிய ஒளி பெறாமல் தன்னைப் பற்றியே கலைப்பட்டுக்கொண்டிருந்தார். இன்று வேலையுண்டு, வீடுண்டு என்னும் போலிக் கௌரவத்துடன், போலி நிம்மதியுடன் வாழ்ந்து வரும்பெரும்பாலான மத்திய தர வர்க்கம் போலவே வாழ்க்கை நடத்தினார்." (தி.க.சி.யின் திறனாய்வுகள் - பக். 16, அக்டோபர் 1956)

ஆயினும் அவரை வாழ்க்கை சும்மா விட்டுவிடவில்லை. என்கிறார். ஆக வாழ்க்கையின் அடிகளே புதுமைப்பித்தனின் ஆவேசப் படைப்பு ஆக்கத்திற்கு காரணமாயின.

"வறுமையும் பற்றாக்குறையும், பசியும் பட்டினியும் அவரை உலுக்கி எழுப்பின. அப்போதைக்கப்போது அவரது அகக் கண்களைத் திறந்தன. அவரது மனசாட்சி அவ்வேளைகளில் குமுறி எழுந்தது. அதன் விளைவாக பக்த குசேலா, நாசகாரக்கும்பல், துன்பக் கேணி, மனித இயந்திரம், பொன்னகரம், கவந்தனும் காமனும், நிசமும் நினைப்பும் முதலிய கதைகளை எழுதினார்" (தி.க.சி.யின் திறனாய்வுகள் பக். 16)

படைப்பாளி மட்டுமல்ல, சமூகத்தில் இயங்குகிற எவருமே நிரந்தரமான கொள்கை உடையவர்அல்ல. கொள்கை மாற்றங்களுக்கு சமூகத்தின் பல்வேறு காரணிகளின் அழுத்தம் செயல்படுகிறது. ஆனால் நிலைபாடு மாற்றம், வளர்ச்சி நிலையை நோக்கியதாக இருத்தல் வேண்டும்.

அவருடைய வளர்ச்சிப்போக்கில் சிதைவு ஏற்படுகிறது என்று காணுகிறார் தி.க.சி. எனவே "முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நிலையை விட்டுப் பின்வாங்கி, பிற்போக்குச் சக்திகளோடும், கொள்கைகளோடும் சமரசம் செய்து கொண்டார் புதுமைப்பித்தன். சமரசம் செய்து கொண்டார் என்பதை விட சரணாகதி அடைந்தார் என்றே சொல்ல வேண்டும்." - இவ்வாறு சொல்லிவிட்டு,

"புதுமைப்பித்தனுக்கு மார்க்சியக் கண்ணோட்டம் இல்லை. ஆனால் மனிதாபிமானம் இருந்தது. ஏழை எளியவர்களின் துன்ப துயரங்களையும் இந்த யுகத்தின் போலிப் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் அம்பலப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் துணிச்சலும் இருந்தன. இத்தனைக்கும் மேலாக அற்புதமான கலைத்திறமை இருந்தது" என்கிறார் (பக்.20)

புதுமைப்பித்தன் பற்றிய பார்வையில் 1956க்கும் 1998க்கும் இடையில் தி.க.சி.யிடம் ஏற்பட்ட மாறுதல் விமரிசன வளர்ச்சி நிலையாகிறது.

புதுமைப்பித்தனிடம் பாசிச எதிர்ப்பும், ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நிலவியதாக தி.க.சி. 1998-ல் கண்டடைகிறார். இதற்கான சாராம்சங்கள், கூறுகளை அவரது அனைத்துக் கதைகளிலும் காணலாம் என்கிறார்.

"திருநெல்வேலிப் பிள்ளைமார்களின் “பழமைச் சிந்தனைகளை புதுமைப்பித்தன் அளவுக்குக் கிண்டல் செய்தவர் யாருமில்லை. பாரதியைப் போல சுயவாத விமர்சனம் செய்தவர்" என்று பு.பி.யின் பழமைச் சமூக எதிர்ப்பை தி.க.சி உறுதி செய்கிறார்.

புதுமைப்பித்தனுடைய படைப்புகள் அப்படியேதான் இருக்கின்றன. காலப்போக்கில் புதுமைப்பித்தன் பற்றிய மதிப்பீட்டில் தி.க.சி.யிடம் மாற்றம் வந்திருக்கிறது.

தமது கருத்து மாற்றத்திற்கான காரணங்களை நேர்மையுடன் கூறிவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்துவது போலவே, மேற்காட்டிய பகுதிகளில் தெளிவுபடுத்துகிறார்.

தி.க.சி.யின் விமர்சனங்களை 1960-க்கு முந்தியவை: 1960 முதல் 1975 வரை, அதற்குப் பிந்தியவை என மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம். அவரது வளர்ச்சிப் போக்கில் எழுத்துலக சக்திகளைப் பற்றிய முந்தைய மதிப்பீடு, இக்காலக்கட்டங்களில் மாறியே வந்திருக்கிறது. எடுத்துக்காட்டு புதுமைப்பித்தன், பாவேந்தர் பற்றிய விமர்சனங்கள்.


8

மணிக்கொடி கால எழுத்தாளர்கள், சரஸ்வதி இதழ் இலக்கியவாதிகளில் பெரும்பாலோனார் தி.க.சி.யின் விமர்சனத்திற்குள் வருகிறார்கள். வராதவர்கள் இல்லை எனலாம். முன்னர் குறிப்பிட்டதுபோல், வ.ரா, ந.பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமையா, ந.சிதம்பர சுப்பிரமணியன், ஆர்.சண்முக சுந்தரம், ஆதவன் போன்றோரது எழுத்துக்களை உயர்வாகக் கருதுகிறார்.

"கலை வெளிப்பாட்டை அதிசயிக்கிற அதேபொழுதில், அவர்களின் தத்துவ விசாரத்தை விமர்சிக்கத் தயங்குவதில்லை.

ந.பிச்சமூர்த்தி கலைஞனை சமூக மனிதனாகப் பார்க்கிறார். சமூகத்திற்குள் பிறப்பெடுத்து, சமூகத்தினால் வளர்க்கப்படுகிறான் கலைஞன் எனக் காணுகிறார்.

"கலைஞன் என்றொரு தனி சிருஷ்டி இல்லை. அவனும் ஒரு மனிதன். மனிதன் தான் இந்தவித சிருஷ்டிகளைச் செய்கிறான். வேறெந்தப் பிராணியும் செய்வதில்லை. மனிதனுக்காகத் தான் சிருஷ்டி செய்கிறான். ஏனென்றால் வேறெந்தப் பிராணிக்கும் இவற்றை அனுபவிக்கத் தெரியாது. மனிதனுக்குள்ளே கலைஞன் இருக்கிறான். கலைஞனுக்குள்ளே மனிதன் இருக்கிறான்.”

கலைஞனுக்குள்ளே மனிதனை, மனிதனுக்குள்ளே கலைஞனைக் கணிக்கிற ந.பிச்சமூர்த்தியை, “இவ்வளவு அகலமாக, ஆழமாக, முப்பரிமாணத்தில் வாழ்வை கலை அழகுடன், உயிர்த்துடிப்புடன் சொல்லில் செதுக்கிய சிற்பி யாரும் இல்லை" என்று தி.க.சி வியக்கிறார்.

ஆர்.சண்முக சுந்தரத்தின் நாகம்மாள் நாவல் பற்றி அவரது பார்வை வித்தியாசமானது. "இதுதேச பக்தியைத் தட்டி எழுப்பும் கதையல்ல. தேசத்தின் புரையோடிப்போன புண்ணை சன சமூகத்துக் காட்டும் ஜன்னல்" - இப்படி அறிமுகப்படுத்தி, "இது நமது கிராம மக்களின் பலவீனங்களை மறைக்கவில்லை. யதார்த்த நிலையை கீறிப்பிளந்து காட்டுகிறது" என்று முன் வைக்கிறார். வட்டார வாசத்தை வாழ்க்கைச் சித்தரிப்பாக மட்டுமல்ல, மொழிச் சித்தரிப்பாகவும் தந்தவர் சண்முகசுந்தரம். "அது நமக்கு ஓர் இன்ப அனுபமாகவே இருக்கிறது" என்கிறார் தி.க.சி.

வ.ரா, கு.ப.ரா, நா.சிதம்பரசுப்பிரமணியன், எம்.வி.வெங்கட்ராம், பி.எஸ்.ராமையா, ஆதவன் போன்ற படைப்பாளிகளுக்கு அவர்களுக்குத் தரப்பட வேண்டிய இலக்கிய மதிப்புக்களாக அவரது விமரிசனங்கள் விரிகின்றன.


9

தனது இலக்கியக் கொள்கையோடு படைப்புக்களோடு, முரண்படுகிற எவரொருவரையும் அரூப் சிவராம் கடுமையாகச் சாடுவார். பிற்காலங்களில் விமர்சனம் என்ற பெயரில் தனி நபர் சாடலில் தரம் தாழ்ந்துபோனார் எனப் பலர் மதிப்பிட்டுள்ளனர்.

ஈழத்துத் திருகோணமலையில் த.சிவராமலிங்கம் என்ற பெயரில் அறியப்பட்டவர். பிரமிள், பிரமிள் பானு சந்திரன், சிவராம், அரூப் சிவராம், தர்மூ ஔரூப்சிவராம் என்று தமிழகத்திற்கு பெயர்ந்த பிறகு, பல பெயர்களில் தரிசனமானார். அவருக்குள் இருக்கும் புதிர்போடும் மனிதனை இந்தப் பல பெயர்கள் காட்டுகின்றன. (அவருடைய பல கவிதைகள் கண்டறியாத முடியாத புதிர் போடுகிற தன்மையில் வெளிப்பட்டன.)

மார்க்சியத்திற்கு எதிர்ப்பு, வெகு மக்கள் மறுப்பு - அரூப் சிவராம் என்ற சமூக மனிதனின் தளம் இது. இதுவே அவரது இலக்கியக் கொள்கைகளாகவும் ஆழப்பதிந்து வெளிப்பட்டன.

செய்திகள் பரிமாறிக்கொள்வது, கருத்துப் பரப்பு செய்தவற்கான முதல் வடிவம். ஒருவரிடம் கருத்தை கொடுப்பதற்கும், அவரிடமிருந்து கருத்தை எடுப்பதற்குமான (அறிந்து கொள்வதற்கும்) வாகனமாக இருக்கிறது. செய்திகள், விசயங்களைத் தருகிற போது இயல்பாக. பரிமாறிக் கொள்வதற்காக தருவது ஒருவகை. தருகிறபோதே புகார் கூறுகிற பாங்கில் தருவது சிலரின் குணாம்சமாக இருக்கிறது.

அரரூப் சிவராமின் செய்தி தரும் முறை, எடுத்துத் தரும் முறை பிற்காலத்தில் இத்தகையதாக மாறிவிட்டிருந்தது.

'கசடதபற' 1972 ஆகஸ்டு இதழில் அரூப் சிவராம் எழுதினார்.
"கசடதபற-வை கலகக்காரர் பத்திரிக்கை என்று வர்ணிக்கும் தி.க.சி பயங்கரக் கலகம் ஒன்றின் கருவை தனது குருட்டுத்தனத்தில் ஏற்றுக்கொண்டிருக்கிறார். புனித ஜெனே என்ற கட்டுரையை நன்றாக இருக்கிறது என்றுசொல்லிவிட்டார். அக்கட்டுரையின் விஷயாம்சத்தை சிறிதளவேனும் உணர்ந்திருந்தால், கம்யூனிசத்துக்காக தனது உடல், பொருள், ஆவி முழுவதையும் அர்ப்பணித்திருக்கும் தி.க.சி தலைமயிரைப் பிய்த்துக்கொண்டு கசடதபற ஒழிக என்று அலறி இருக்க வேண்டும்....

....கூட்டத்துக்கு சிம்ம சொப்பனம் என்று அறியப்பட்டஇவர் கம்யூனிச கூடாரத்துக்குள் நன்கு பழகி, சாதுவாகி விட்ட ஒரு சர்க்கஸ் சிங்கம் போலும்."

இம்மாதிரிச் சாடலுக்கு தி.க.சி எதிர்வினையாற்றுகிறார்.
"....இலங்கைத் தமிழரான இவருக்கு சென்னை புகலிடமாய் விளங்குகிறது. ஈழத்து எழுத்துலகில் புறக்கணிக்கப்பட்ட இவர், சென்னையில் தனது சித்து வேலைகளைக் காட்ட முனைந்துள்ளார்"
(தாமரை செப்டம்பர் 1972 - விமரிசனத் தமிழ் பக் - 126)

ஈழத்து எழுத்துலகம் புறக்கணித்ததா? அங்கு எழுத்துலகில் எழுந்த உள் முரண்கள் என்ன, பிரச்சனைகள் என்ன என்பதற்கான சான்றுகள் எதுவும் தரப்படவில்லை "இவரது சிந்தனை வக்கரித்ததாகவும், தடம் புரண்டதாகவும் இருக்கிறது. அது மட்டுமல்ல, இவர் ஒரு மட்டரகமான புளுகராகவும், அற்ப புத்திபடைத்த அவதூறுக்காரராகவும், ஆணவக்காரராகவும் இருக்கிறார்" (கட்டுரை - பக். 126)

அரூபின் இலக்கியக் கொள்கை, படைப்புச் செயல்பாடுகள் என்பது ஒரு பகுதி. அதனை ஆதாரபூர்வமாக நூல்களிலிருந்து விமர்சனப்படுத்த முடியும். அவருடைய வெளித்தொடர்புகள் என்பது இன்னொரு பகுதி. நிச்சயமாக ஆதாரங்களோடு, முன் சாய்வு அற்று ஆழமாகவைக்கப்பட வேண்டியவை. அதற்கான பின்புலச்சான்றுகள் மற்றும் விளக்கங்கள் எதுவுமற்று வெறும் குறிப்பாக, போகிற போக்கில் வருகிற ஒரு அறிவிப்பாக (Comment) ஆத்திரமூட்டலில் -விளைந்த எதிர் ஆத்திரமாக அமைந்துள்ளது.


10

பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, தமிழினப் பற்று, மொழிப்பற்று போன்ற கொள்கைகளில் நின்று மேலெழுந்தன திராவிட இயக்கங்கள். திராவிட இயக்கங்களின் வளர்ச்சியும், சிதைவும் வரலாற்று ரீதியாக விளக்கப்பட வேண்டியது. இதைப் பலரும் இன்று செய்து வருகின்றனர்.

படைப்பிலக்கியங்களில், திராவிட இயக்க எழுத்தாளர்களது பங்களிப்பு ஒரு சிலரைத் தவிர படைப்பு விதிகளை நிறைவு செய்ததாக இல்லை. பெரும்பாலோருடயவை கருத்து விளக்கப் படைப்புக்களாக வெளிவந்தன. தமிழில் சிறுதை வரலாறும் வளர்ச்சியும் என்று சிறந்த ஆய்வு ஆக்கத்தைத் தமிழுக்குத் தந்தனர் சிட்டியும், சிவபாதசுந்தரமும். திராவிட இயக்க எழுத்தாளர்களின் பங்களிப்பு பற்றி அவர்கள் புதிய தடங்கள் என்ற பகுதியில் சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் கதைகள் பற்றி பாராட்டிப் பேசியுள்ளனர். இது இந்நூலாசிரியர்களின் வரலாற்று நேர்மையைக் காட்டுகிறது என்கிறார் தி.க.சி.

"ஆனால் இந்தக் கால கட்டத்தில் வெளியான திராவிட இயக்க இலக்கியப் பத்திரிகையான பொன்னி, முத்தாரம் முதலியவை பற்றியும் அவற்றில் தரமான சிறுகதைகளை எழுதிய டி.கே.சீனிவாசன் முதலியோர் பற்றியும் இந்நூலில் ஒன்றும் சொல்லப்படவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதிவரும் ஆ.மாதவன் என்னும் தமிழ் எழுத்தாளர் பற்றியும் ஒரு வரி கூட இல்லாதது வியப்பே."
சுட்டிக்காட்டி, பங்களிப்புச் செய்கிறார். (தி.க.சி.யின் திறனாய்வுகள் - பக். 203-21.1.90)

அதே நேரத்தில் இதழியல் துறையில், கருத்துப் பரப்புத் துறையில் அவர்களின் எழுச்சி ஒப்பீட்டளவில் வலிமை கொண்டது. சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளில் உறுதிப்பாடு கொண்டு எழுத்து, பேச்சு, நாடகம், வில்லுப்பாட்டு, திரைப்படம் எனப் பல வழியாகவும் எடுத்துச் சென்றனர். பல திசைகளில் பல தரப்புகளில் குறிப்பான விளைவுகளை ஏற்படுத்தின இதழியல் பணிகள்.

திராவிட இயக்கங்கள் தோன்றிய காலம் முதல், 1967 வரை ஏறக்குறைய 240 இதழ்கள் கருத்துப்பரப்பைச் செய்திருக்கின்றன. இதழ்களில் வெளியான இலக்கிய வடிவங்களில் யதார்த்தத்தை வெளிப்படுத்தவேண்டி, அதீத புனைவியல், மிகை யதார்த்தத்தைக் கைகொண்டனர்.

இந்தப் பின்னணியில் பாரதிதாசன் வருகை நிகழ்கிறது. அவர் பாரதியை ஏற்றுக்கொண்டார். பாரதியின் எல்லா வழிகளையும் ஏற்கவில்லை. பாரதி, இந்திய விடுதலைப் போராட்டத்தோடு உருவான இந்திய தேசியத்தை முன் வைத்தார். (ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்தியா ஒரு நாடு, இந்திய தேசியம் என கட்டமைக்கப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும்) பாரதிதாசன், தமிழினம், தமிழ்மொழி, தமிழ்தேசியம் பற்றிப் பாடிய தமிழினக் கவியாக வெளிப்பட்டார்.

இந்திய தத்துவஞானம் (இந்து சமயத்துவ ஞானம்) வேதாந்தப் பற்று, சக்திவழிபாடு, அரவிந்தர் நட்பு, காந்தி பீடம், மறைஞானப் போக்கு என ஈடுபாடு கொண்டவர் பாரதி; பாரதியின் இந்த வழிகளையெல்லாம் சல்லடை போட்டு சலித்து பகுத்தறிவுக் கவியாக, தமிழினக் கவியாக உருவானவர் பாரதிதாசன்.

பாரதி போலவே, பாரதிதாசன் ஒரு வரலாற்றுத் தேவையாக இருந்தார். இந்திய வரலாற்றில் விடுதலை இயக்கங்கள் தோன்றியது போலவே தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் தோற்றம் வரலாற்றுத் தேவையாக இருந்தது.

"பாரதிதாசன் இன்று பாரதியாரின் இலட்சிய நெறிப்படி பாரதிதாசனாக இல்லை. கனகசுப்பு ரத்தினமாக தாழ்ந்துவிட்டார்"
(விமர்சனத் தமிழ் - பக். 53: செப்டம்பர் 1962)

பாரதிதாசனைப் பற்றிய முழு ஆய்வின் முடிவில் இவ்வாறு சொல்லப்பட்டிருப்பின் அப்போது காரணகாரியங்களுடன் நிறுவப்பட்டிருக்கும். ஆனால் வ.ரா.வைப் பற்றிய கட்டுரையில் ஒரு அறிக்கை ஆக தி.க.சி தெளித்துச் செல்கிறார்.

"ஆனால் வ.ரா தமது அந்திம காலம் வரை கீர்த்திமிக்க பாரதியின் தாசனாகவே, பாரதிதாசனாகவே நிலைகுலையாது நிமிர்ந்து வாழ்ந்தார்" என்கிறார் (- பக். 53)

எனது மொழி தமிழ், இனத்தால் தமிழன், மனிதனால் சர்வதேசியவாதி என்று இன்று தி.க.சி பேசுகிறார் என்பது கவனிக்கப்பட வேண்டும். பாரதி வழி, பாரதிதாசன் வழியே நம்வழி என உரை நிகழ்த்துகிறார்.

"பாரதியும், பாரதிதாசனும், மார்க்சிம் கார்க்கியும், பாப்லோ நெருடாவும் எனது இலக்கிய ஆசான்கள். இவர்களின் இலக்கியக் கொள்கையே இன்றளவும் எனது இலக்கியக் கொள்கை" என்கிறார் (சாகித்திய அகாதமி விருது ஏற்புரை - 19.3.2001)

இன்னும் தெளிவுபட அவர் கூறிச்செல்கிறார்.

"அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு முதலிய நூல்கள் அவரது படைப்பாற்றலின் சிறப்புக்குச் சான்றாகும்."

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

என்னும் பாரதிதாசன் வரிகள், தமிழ் நெஞ்சம் படைத்த ஒவ்வொரு தமிழனின் இதய ஒலியாகும்.... பாரதிதாசனின் ஆளுமை பன்முகம் கொண்டது...... பாரதிதாசன் ஆளுமை பற்றி இன்னும் ஆழமான, விரிவான வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அமைந்த ஆய்வுகள் தேவை. தமிழ் தேசியத்தின் தலை சிறந்த புரட்சிக்கவி என்று அவரை வருணித்தால் அதில் தவறில்லை (தமிழரசு இலக்கிய மலர் 2001- பக். 77-79)

தமிழ் தேசியம் சர்வதேசியக் கொள்கைக்கு எதிரானது அல்ல. தன்னைத் தமிழ்தேசிய இனத்தவனாக உணருவதற்கான கூறுகள்

தமிழனுடைய வாழ்வியக்கத்தில் உள்ளன. தமிழ் தேசியவாதியாக உணருகிறவனே சர்வதேசியவாதியாகவும் தன்னைக் காண முடியும். தமிழ் மொழி, பண்பாடு, இனம், தமிழ்த் தேசியம் குறித்து திராவிட இயக்க காலந்தொட்டு இருந்த முனைப்புகள், சமீப கால முன்னெடுப்புகள் தி.க.சி.யை இந்த மாற்றத்துக்குள் கொண்டு செலுத்தியுள்ளது. பாவேந்தர் பற்றிய அவரது கணிப்பில் ஏற்பட்ட வளர்ச்சி இந்த மாற்ற அழுத்தத்தில் உருவானது.


11

இலக்கியத்தில் நவீனத்துவம் வட்டாரம் சார்ந்த வருகையாக நா.வானமாமலையின் பங்களிப்பால் அடித்தளமிடப்பட்டது. நாட்டார் வாய்மொழி இலக்கியம், வழக்காற்றியல் என்ற புதிய பக்கம் திறந்து பல அதிசயங்களைப் படைப்பாளிகள், வாசகர்களிடம் உண்டாக்கியது.

"நா.வானமாமலையும், அவரது ஆராய்ச்சிப் பத்திரிகையும் நாட்டார் பண்பாட்டியலில் காட்டிய ஆர்வம் குறிப்பிடத்தக்கது. நவீனத்துவ உள்வட்ட அறிவு ஜீவுத்தனத்திற்கு மாற்றான அடித்தள மக்கள் பண்பாட்டைச் சென்றடையும் நோக்கத்தை இது கொண்டிருந்தது."
(ந.முத்துமோகன் - நவீனத்துவமும் தமிழ்த் திறனாய்வுகளும்)

1940-களில் ஆர்.சண்முகசுந்தரம், அறுபதுகளில் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், கிருஷ்ணன் நம்பி போன்றோர் வட்டார வாழ்க்கையைப் படைப்புக்கள் வழியாக விவரிக்கத் தொடங்கினர்.

நா.வானமாமலையின் சிந்தனைப்பள்ளி நாட்டார் வழக்காற்றியலில் வெகு பாதிப்பை உண்டாக்கியது. அந்த வழிகாட்டுதலில். அவருடனான கூட்டு விவாதங்களில் தி.க.சி தன்னை இணைத்துக்கொண்டு தாமரை இதழில் வட்டார இலக்கியக் காற்று வருவதற்கான எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்து நின்றார். 1965 முதல் அவர் தாமரை இதழ்ப் பொறுப்பாசிரியராக இருந்து வெளிவந்த நூறு இதழ்கள் வட்டார ஈரம் படிந்த பக்கங்களாய்க் காணப்பட்டன.

பொன்னீலன், பூமணி, வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், வீர.வேலுச்சாமி (நிறங்கள் தொகுப்பு) கந்தர்வன், ச.தமிழ்ச்செல்வன், சி.ஆர்.ரவீந்திரன், இரா.கதைப்பித்தன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுசாமி, பிரபஞ்சன்.

"அறுபதுகளில் முளைவிட்டு, இரு தலைமுறைகளாய் இன்றும் நிற்கும் இவர்கள் 'தாமரை'யில் விளைந்தனர்."

இந்தப் படைப்பாளிகள் கிராம வாழ்வில் பயிரானவர்கள், வாழ்கிறவர்கள், கிராம மண்ணின் மைந்தர்கள். வாழ்தல் பொருட்டு நகரங்களுக்கு நகர்ந்த போதிலும், வேறு வேறு வித்தியாசமான அலுவல்களில் பொருத்திக்கொண்டபோதும் இதயங்களை கிராமிய வாழ்க்கையிலிருந்தே இன்னும் எடுத்துக் கொள்கிறவர்கள்.

மட்டுமல்ல, கவிஞர்கள் சிற்பி, புவியரசு, இன்குலாப், நா.காமராசன், கை.திருநாவுக்கரசு, தமிழ்நாடன், அஃபரந்தாமன், பாலா, ஆய்வாளர்கள் மே.து.ராசுகுமார் - இப்படிப் பலரும் தாமரையில் எழுதினார்கள். தாமரை இவர்களை வளர்த்ததும், இவர்களால் தாமரை வளர்ந்ததும் ஒரே நிகழ்வுகள்.

வியட்நாம் போராட்டச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், கரிசல் சிறப்பிதழ், மொழி பெயர்ப்புச் சிறப்பிதழ் என பலப்பல சிறப்பிதழ்கள் வெளி வந்தன.

நவீனத்துவம் சார்ந்து எழுதத் தொடங்கிய படைப்பாளிகள், விமர்சகர்கள், கவிஞர்கள் சிலர் அய்ம்பதுகளிலேயே மேலை மயமாக்கல் பாதைக்குள் பயணமாயினர். புதுக்கவிதை வெளிப்பாடுகள் கூட இவ்வகை இறக்குமதியாகின. ஆனால் இன்னொரு பகுதியினர் மக்களின் வாய்மொழி இலக்கியங்கள், பண்பாடு, மரபுகள் என செழிப்பான கூறுகளைத் தேடி கீழ்நோக்கிய தேடலே, மேல் நோக்கிய இலக்கிய உயரத்தைத் தொடல் என அறிந்தனர். தேசம் கிராமப்புறங்களில் வாழ்கிறது என்பது மட்டுமல்ல. கலையும் சொல்லழகும் அங்கே வாழ்கிறது என்று இவர்கள் வெளிக்கொண்டு வந்தார்கள்.

ஆனால் அவர் உற்சாகப்படுத்தி நுங்கும் நுரையுமாக புதுவெள்ளப் பெருக்காய் எழுபதுகளில் ஓடிவந்த இளைய எழுத்தாளர் பட்டாளத்தை அவர் விமர்சனப் பேனா தொடவில்லை. இவர்களில் எவரும் அவரால் விமர்சனப்படுத்தப்படவில்லை. (பூமணியின் பிறகு நாவல் மட்டும் விமர்சனப்படுத்தப்படுகிறது)

அறுபதுகளில் விமர்சனப் பணியாக நிறைகிறது. எழுபதுகளில் அவர் தாமரை இதழின் பொறுப்பாசிரியரானபோதும், அதற்குப் பின்னரும், இளைய தலைமுறை படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் களப்பணியாக மாறிவிடுகிறது.

இப்போது அவர் இலக்கியக் களப்பணியாளர்; கால்க்காசு கடுதாசி பேசுகிறது.

தி.க.சி என்ற முழுவாழ்வின் அர்த்தங்களில் விமர்சகர் மட்டுமே நாட்டுக்கு, நமக்குத் தெரியும்.

தி.க.சி ஒரு விமர்சகர், தி.க.சி ஒரு படைப்பாசிரியர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், தொடக்க காலத்தில் தொழிற்சங்கவாதி, உலக நடப்புகளை ஊன்றிக் கவனித்து வருகிற ...

சமூக உறுப்பினர், இளைய பேனாக்காரர்களுக்கு வழிகாட்டி, புதியவரை, புதியன தருபவரை உற்சாகப்படுத்தும் சீரிய ஒருங்கிணைப்பாளர்.

தி.க.சி.யை மதிப்பிடுகிறவர்கள் அல்லது தூற்றுபவர்கள் எந்தத் தி.க.சி.யை மதிப்பிடுகிறார்கள்? எந்தத் தி.க.சி.யைத் தூற்றுகிறார்கள்? எந்த முகத்தை முன்வைத்து மதிப்பிடுதல் அல்லது சாடுதல் நடக்கிறது?

"ஏதாவது ஒரு முகத்தைப் பார்க்கிறபோது அந்த முகத்தை மறந்து மற்ற முகங்களைப் பார்க்கிறார்கள். ஒன்றைத் தொடுகிறபோது, மற்றொன்றும் ஒட்டிக்கொண்டு தொடராக வருகிறது. தன்னைறியாமலே இதனைச் செய்கிறார்கள். விமர்சகர் தி.க.சி.யைப் பற்றிக் கூற வருகிறபோது, பத்திரிகையாளராகப் பார்க்கிறார்கள். பத்திரிகையாளர் தி.க.சி.யைப் பற்றி எழுதும்போது விமர்சகர் தி.க.சி.யை மதிப்பிடுகிறார்கள். அன்றாட நிகழ்வுகளை ஊன்றிக் கவனித்துவரும் சமூக உறுப்பினர் தி.க.சி.யை விமர்சிக்கையில் வேறு தி.க.சி.யை விமர்சிக்கிறார்கள். குறிப்பாக நமக்கு, நாட்டுக்கு விமர்சகராகத் தெரியும் தி.க.சி.க்கு பன்முகங்களும் உண்டு என்று காண மறுக்கிறார்கள். மறந்துவிடுகிறார்கள்."
(முனைவர் மே.து. ராசுகுமார் - ஆய்வாளர்).

ஒரு நூலுக்கு விருது பெறுவது, ஒட்டுமொத்த இலக்கியப் பணிக்கான அடையாளம். இதற்கு முன் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்கள் பலர், எந்த நூலுக்குப் பெற்றார்கள் என்று கணிக்கையில் அவர்கள் விருதுக்குரிய தகுதி இழந்துவிடுவார்கள். நூல் அல்ல, ஒருவர் ஆற்றிய இலக்கியப் பணிதான் சாட்சியம்.

பலவகை இலக்கிய முயற்சிகளுக்கு, பண்பாட்டு வெளிப்பாடுகளுக்கு, கலைப்பணிகளுக்கு, நகரும் பனிப்பாறையாக இல்லாமல், அஞ்சலட்டைகள், தாங்கும் உறுதிமிக்க பாறைகளாயின. பத்திரிகையாளர் தி.க.சி அஞ்சல் அட்டைகளில் கவனம் பதித்தார். பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வாளர்களை அஞ்சலட்டைகள் கண்டெடுத்து ஊக்கப்படுத்தின. இன்றைக்கு நிற்கிற இரண்டு தலைமுறை எழுத்தாளர்கள் பலர் அஞ்சலட்டைகளால் உலக்குக்கு கொண்டு வரப்பட்டவர்கள்.

மிக அருந்தலாய்க் காணக்கிடக்கும் ஒரு மனிதர், முழுமையாக இலக்கிய வாழ்வு வாழ்ந்ததைக் கால்க்காசு கடுதாசி சொல்லியபடி நிற்கும்.

- பா.செயப்பிரகாசம், 15 ஜூன் 2001

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content