நாட்டுடைமை ஆவாரா பெரியார்?


1948-இல் பாரதி பாடல்கள் நாட்டுடைமையாயின. குஜராத் சேட் ஒருவர் தனிப்பட்ட சொத்தாக வைத்திருந்த அதை, திரைப்பட அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வாங்கி உரிமை பெற்றிருந்தார். தனியருவரின் சொத்தாக அந்த இலக்கியச் செல்வம் பாதுகாக்கப்படக் கூடாது என எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், நாரண துரைக்கண்ணன், கவிஞர் திருலோக சீதாராம், ஜீவா போன்றோரைக் கொண்ட 'பாரதி விடுதலைக் கழகம்' நாட்டுடைமையாக்க வேண்டுமென்ற கருத்தை மக்களிடம் உருவாக்கியது. அதில் தோழர் ஜீவாவின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடெங்கணும் சென்று பரப்புரை செய்து அப்போது தமிழக முதல்வராயிருந்த ஓமந்தூர் ராமசாமியைச் சந்தித்து நாட்டுடைமையாக்கிடும் வேண்டுகோளை முன்வைத்த பாரதி விடுதலைக் கழகம் போல் "பெரியார் விடுதலைக் கழகம்" உருவாகும் காலம் வந்துவிட்டதா? பெரியார் திடலிலிருந்து பெரியாரை விடுதலை செய்யும் காலம், உண்மையில் உருவாகிவிட்டது என்றே தோன்றுகிறது.

அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், வழிகாட்டிகள் அனைவரும் தனது, தமது என்று சுருக்கிக்கொள்ளாது, மானுட விடுதலை நோக்கி வாழ்வதினால், அவர்களுடைய கருத்துகளும் சமூகத்தின் பொதுச் சொத்தாக மாறி, சமுதாயத்தின் அறிவுச் சேகரிப்பாகிறது.

இதுவரை நம்முடன் இருக்கும் இலக்கியங்கள், நீதி நெறி நூல்கள், கோட்பாடுகள், கொள்கை வெளிப்பாடுகள் அனைத்தும் மானுட குலத்தின் அறிவுச் சேமிப்பு. மார்க்ஸ், எங்கெல்ஸ், பெரியார், அம்பேத்கார் போன்றோரது கருத்து முன்வைப்புகளை, அதற்கு முன்பிருந்த சிந்தனைகளோடு சமப்படுத்திப் பார்க்கக் கூடாது. "நிலவும் சமுதாய அமைப்பைப் பற்றிய விளக்கங்களோடு தத்துவவாதிகள் நின்றுபோன சூழலில், இருக்கிற அமைப்பை எப்படி மாற்றி அமைப்பது" என்ற விஞ்ஞானப் பார்வையில் சாதி, மத நம்பிக்கையின் பெயரால், பிரிவுபட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்யும் கடமையைப் பெரியார் செய்தார்.

பெரியாரின் சிந்தனைகள், கொள்கைகள், மக்களுக்குச் சென்றடைந்து அவர்கள் விழிப்புணர்வு பெற்றுவிடக் கூடாது என்பதில் பழமைவாதிகள் குறியாய் இருக்கிறார்கள். மக்கள் சிந்திக்கக் கூடாது, சிந்திக்க அனுமதித்துவிடக் கூடாது என்பதில் இராம.கோபாலன் போன்றவர்கள் தீவிரமாய் இயங்குகிறபோது, "தந்தை பெரியார் அவர்கள் ஏடுகளில் எழுதிய எழுத்துக்கள், பேச்சுகள், பேட்டிகள், வெளியீடுகள் அத்தனையும் அவரால் 1935-இல் உருவாக்கப்பட்டு, 1952-இல் பதிவு செய்யப்பட்ட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமான அறிவுசார் உடமைகளாகும்" எனப் பெரியார் திடலிலிருந்தே அறிக்கை வருவதும் இது போன்ற காரியத்தின் குரூர வடிவமே.

வேதங்களை சூத்திரர் படிக்கக் கூடாது; கேட்கக் கூடாது, கேட்டவர் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள் என்றுரைத்த மனு தர்மக்கட்டளை போல் பெரியார் எழுத்துக்களைப் பிறர் பதிப்பிக்கக் கூடாது என்பதன் மறு அர்த்தம் பெரியாரை மற்றவர்கள் படிக்கக் கூடாது, பின்பற்றுதல் கூடாது என்று வரவில்லையா?

சைவ, சமய நூல்கள் சிலவற்றை, தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் மடம் போன்றவை உரிமை கொண்டாடி வேறு எவரும் வெளியிடத் தடை செய்துவந்தன. அது பற்றிக் குறிப்பிடுகையில் "அந்நூல்களை வெளியிடும் உரிமையைத் தம் கைவசம் கொண்டிருந்த வேளையில் சமணர்களைக் கழுவிலேற்றிக் கொண்டாடியதை விட அதிகமான குதூகலத்தைச் சைவ மடங்கள், ஆதீனங்கள் கொண்டிருந்தன." என வேதனைப்படுகிறார் ஒரு தமிழ்ப் புலவர்.

பெரியாரின் உண்மையான தளபதிகளான பெரியார் திராவிடர் கழகத்தினர், ஒரு அரும்பணியை மேற்கொள்கையில், அதை முடக்கும் எத்தனிப்புகளைக் கொண்ட சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஆதீனங்கள், மடங்களைப் போன்ற ஒரு நிறுவனமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

பெரியார் திராவிடர் கழகத்தினர், முன் வெளியீட்டுத் திட்ட அடிப்படையில் சிறுகச் சிறுகத் திரட்டி வெளியிட முன்வந்துள்ளார்கள் என்கிறபோது எழுநூற்றைம்பது பக்கங்கள் வீதம் நூறு தொகுதிகளில் முழுத்தொகுப்பையும் கொண்டுவருவதென 1976இல் அறிவித்த சுயமரியாதை இயக்கப் பொன்விழா அறிவிப்பு, அறிவிப்பாகவே உள்ளது.

"நூலாகவோ, ஒளி நாடா குறுந்தகடுகளாகவோ வெளிவந்தால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவிப்பவர்கள், பெரியாருடைய வழியில் நடவாத, அவருக்கு முற்றிலும் எதிரான ஜெயலலிதா, பெரியாருடைய படத்துடன் சுவரொட்டி வெளியிடுகிறபோது எங்கே போனார்கள். அறிவுச் சேகரிப்பினை கொள்கைப் பரப்பலைச் சட்டத்துக்குள் அடக்க வேண்டாம். ஒரு நூல் உங்களால் ஐயாயிரம் படிகள் வெளியிடப்படுகிறபோது, அதையே இன்னொருவர் ஐயாயிரம் படிகள் போடுகிறபோது, பத்தாயிரம் பேருக்குக் கருத்துக்கள் போய்ச் சேருகின்றன என்று கணக்குப் போடுவது தான் சரியாக அமையும்.

பெரியாருடைய எழுத்துக்கள் அசையாச் சொத்துகள் போன்றவையல்ல. அவை அசையும் சொத்துகள், அசைவு கொள்கிறபோது மட்டுமே கருத்தும் சிந்தனையும் மக்களிடம் போய்ச் சேர்ந்து எதிர்கால முன்னேற்றத்துக்கு வழிகிடைக்கும்.

பெரியாரை ஒரு மூலதனப் பொருளாக ஏற்கெனவே தி.க, தி.மு.க, அ.தி.மு.க, எனப் பலரும் ஆக்கியுள்ளார்கள். இவர்கள் பகுத்தறிவு வழியிலான வாழ்வைத் தமது குடும்பக் கலாச்சாரமாக ஆக்கவில்லை. பொது சனத்தை நோக்கிப் பிரச்சாரம் செய்யும் போதனா முறையாகவே தொடர்ந்தனர். பின் உச்சரிப்பு மந்திரமாக அது சுருங்கியது. அதிகாரத்துக்கு வந்ததும் காலப்போக்கில் தேவையற்றது என்று உச்சரிப்பதையும் கைவிட்டனர்.

பகுத்தறிவுப் பார்வையை அறவே துடைத்து, மானுடப் பண்பை உருவியெடுத்து, குப்பைக் கூளங்களும் கல், இரும்பு போன்ற திடப்பொருள்களும் நிரப்பிய குழியாக மனிதனை ஆக்கியதில் நவீனக் கல்விக்கு முக்கியப் பங்குண்டு. எனவே, முன் எப்போதையும் விட இந்தச் சூழலில்தான் பெரியார் அதிகம் தேவைப்படுகிறார்.

நன்றி: காலச்சுவடு, செப்டம்பர் 2008

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்