கி.ரா கரிசல் எழுத்துக்களுக்கு முன்னோடியா?


‘கி. ராஜாநாராயணன்’ கரிசல் எழுத்துகளுக்கு முன்னோடி என்கிறார்கள் பலர். அது முழு உண்மையல்ல. நடப்புத் தமிழுக்கு முன்னத்தி ஏர் பிடித்தவர். நடப்புத் தமிழுக்கு வட்டார வழக்கிலிருந்து வாய்மொழியிலிருந்து எவ்வளவு எடுக்க வேண்டுமென்னும் அளவு அவர் கண்டடைந்தது. இலக்கணம் செய்யப்படாத பேச்சு மொழியை, இலக்கணக் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஏட்டுமொழி அதிகாரம் செய்தல் கூடாது என்பது அவர் கண்டடைந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமாயின் இதுவரை பாராமுகம் கொண்டிருந்த கலை இலக்கியவாதிகளுக்கு அவர் புதிய கதவை திறந்து “உங்கள் செல்வம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. வாருங்களய்யா வாருங்கள் வண்டிக் கட்டிக் கொண்டு எடுத்துப் போங்கள்” என நம் வாழ்விலும், வாசிப்பிலும் சந்தித்திராத மனிதர்களையெல்லாம் காணத் தந்தார்.

பார்வைக்கு வந்திரா பழகுமுறை, பண்பாட்டு அசைவு, சிந்தனை முறை என்னும் பல புதிய கதவுகளைத் திறந்து காட்டினார். “இங்கே நானும் எம் மக்களும் செத்து சுண்ணாம்பாய்ப் போய்க் கொண்டிருக்கிறோம்” என்று மக்களின் மொழியிலே சொல்லி வைத்தார். அதன் பொருட்டாக தனித்தமிழ்ப் பற்றாளர்கள் இட்ட சாபத்தையும் தனியொரு வில்லாளியாய் எதிர் கொண்டார்.  வாட்டாரம் என்பது மொழி பேசும் பிரதேசத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல. அது வாழ்வியலை தன்னகத்துக் கொண்ட பகுதி. வாழ்வியலை எழுதிக் காட்டுவது இலக்கியமென்றால் குறிப்பிட்ட வட்டார மக்களின் வாழ்வினை நிணத்தோடும் ஊனோடும் உயிரோடும் வெளிக்கொணர்தல் நிமித்தம் அது உண்மையிலும் உண்மை கொண்ட படைப்பாகிறது. கரடுமுரடான கல், தண்ணீரில் அலை கோதிக்கோதி உருண்டு உருண்டு வழவழப்பு கொண்டு கூழாங்கல் ஆவது போல், படிப்பறியா சனத்தின் நாவில் புரண்டு புரண்டு வார்த்தைகள் நயம் கொண்டுவிடுகின்றன. இந்த மக்களின் வாய்மொழியிலிருந்து எடுத்து, ஏட்டு மொழிக்கு வார்க்க வேண்டும். இதை கி.ரா செய்தார். அவரது சொல்லாடல்களும் அதன் வெளிப்படு அர்த்தங்களும் அளவிட முடியாதது.

கி.ரா.வின் படைப்புலகம் வெடித்துக் கிடக்கும் ஒரு பருத்திக்காடு. நிரைபிடித்துப் பகுதி பகுதியாய் மேற்சென்றால் பருத்திக் காட்டை முழுமையாய்த் தரிசிக்க முடியும்.  எழுத்து என்பது ஒரு சுருக்கு முடிச்சு. அதிலும் பல வகை உண்டு. எந்தெந்த விசயத்துக்கு எந்தெந்த வகை முடிச்சு போட வேண்டும் என்பது ஒரு உள்கலை. கைவந்த கலையாக அதை மாற்றிக் கொள்கிற கமுக்கம் திறன் உள்ளோர் வெற்றிப் பெறுகிறார்கள். எழுத்தென்னும் சுருக்கு முடிச்சை ரொம்ப லாவகமாக லகுவாகப் போடத் தெரிந்த ஒருவரெனில் அவர் கி.ரா. எல்லாவற்றையும் தன் கையில் இறுக்கி வைத்துக் கொள்வது அரசு. மக்கள் சக்தி பெருக்கெடுக்கும் வகையில் வாய்க்கால்கள் பிரிக்காமல், தன் அதிகாரத்தால் அனைத்தையும் கவ்விக் கொண்டிருக்கிற ராட்சத நண்டு அது. இந்த ராட்சத தனத்தினால் விளைந்த வினைகள்தாம் பாவப்பட்ட விவசாயிகளின் வாதனைகளான கதவு, கரண்ட், மாயமான், கதைகளாக வந்தன. எடுத்த எடுப்பில் ஒரு பார்வைக்கு சபிக்கப்பட்ட விவசாயிகள் அவலங்களின் போல் கதைகள் தென்படலாம். அடியோட்டமாக அதிகார அரசியலின் எதிர்ப்புக்குரல் அதற்குள் ஓடுகிறது. அன்றையக் கதைகள் முதல், தமிழ் இந்துவில் வெளிவரும் “பெண்ணெனும் பெருங்கதை” வரை தனிமனிதன், குடும்பம், அரசு ஈறாக எந்த ரூபத்தில் வந்தாலும் வெனைகாரப் பயலான, அதிகாரத்தை எதிர்த்த எழுத்தாகவே வருகிறது. அவரின் எழுத்து முன்னோக்கி ஓடும் நதி.

பூமியை வளப்படுத்தியபடி கைவீசி நடக்கிறது நதி. மனிதமனத்தை புல், செடி, கொடி, தாவரம் பெருமரமாய் வளப்படுத்தியவாறு ஓடுகிறது அவரின் எழுத்து. அதுதான் மனுசம். வாழ்க்கை லவிப்பு இல்லாத ஆத்மாக்களில் ஒருத்தியான கோமதி என்ற திருநங்கை. இதுவரை பூச்சூடி அறியா ஏழைப் பெண் பேரக்காள் திருமணத்தின்போது, பூச்சூடி வாடை தாங்காமல் மயக்கமடைந்த ‘பூவை’, பண்ணை வீட்டு வாலிபத்தால் சீரழிவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட நங்கை ‘சிவனி’ என புறக்கணிக்கப்பட்ட ஆத்மாக்களை பற்றி இந்த மனுசம் எழுதியது நிறைய. நான் ஒரு கலைஞனாக வாழவிரும்புகிறேன் – கலைகளில் எத்தனையோ ஆயிரம் வகை. நான் ஒரு எழுதுகோல்காரனாக இயங்க விரும்புகிறேன். எழுத்தில் எத்தனையோ வகை. நான் ஒரு சொற்பொழிவாளனாக பிரகாசிக்க விழைகிறேன். சொற்பெருக்காற்றுவதில் எத்தனையோ வகை.

நான் அரசியலில் வல்லமையாளனாக ஆசைப்படுகிறேன். அரசியலில் எத்தனையோ தினுசு. நானொரு ஞானியாக வாழ விரும்புகிறேன் ஞானத்தில் எத்தனையோ பிரிவு. நான் யாராகவும் இருக்கலாம்.எல்லாமும் மனுசம் நோக்கியதாகத் திரண்டு நடக்க வேண்டும். எதுவாக, யாராக இருப்பினும் மனிதராக நடக்கிறோமோ என்பது முக்கியமானது. மனுசம் இல்லாத வினையாற்றல்கள் திறன் கொண்ட தீப்பந்தங்கள்தாம்.  சாதி மதம் இனம் இன்னபிற செக்குலக்கைகள் கொண்டு மனுசம் இடித்துத் தள்ளப்படுவது. கி.ரா என்ற மனிதருக்கு உவப்பானதுமல்ல உடன்பாடானதுமல்ல. தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால் இமை திறவாமல் இருந்த நிலையில் தமிழகம் தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும் தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான். பாரதி பற்றிப் பாவேந்தர் உரைத்ததுபோல் வாய்மொழியாய் வந்த வழக்காறுகள் மண்ணின் கலைகள் இமைதிறவாமல் கிடந்த நிலையில் அவைகளுக்கு விழிதந்தார்.

கவிதைக்குப் பாரதி, உரை நடைக்கு கி.ரா

(எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர் நூலிலிருந்து)

நன்றி: தீக்கதிர் - 11 மார்ச் 2018

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்