காமன்வெல்த் மாநாடு - கொலைக்களக் கும்மி

தமிழீழ விடுதலைப் போரில் இலட்சியம், வீரம், தியாகம் எனும் சூலாயுதம் போராளிகள் ஏந்தினார்கள். இராசதந்திரம் என்னும் சூத்திர ஆயுதம் ஏந்திட எண்ணிடவில்லை. போராளிகள் கைநழுவ விட்ட இராசதந்திர ஆயுதத்தை, எதிரி கைவசம் பண்ணி-ஏலாது என்று நினைத்திருந்த திசையெங்கும் எடுத்து வீசினான். ஐ.நா. பணியாளர்களை தடைச்சுவர்களாகக் கருதி, அவர்களை கிளிநொச்சியிலிருந்து தேதி அறிவித்து 2008-ல் வெளியேற்றினான். இவ்வாறான திசையில் அவன் பயணிப்பான் என எவருமே எதிர்பார்க்கவில்லை.

அதில் ஒன்று-சர்வ உலகத்துக்குத் தெரிந்திருந்தும், மிக நுட்பமும் முக்கியத்துவம் கொண்டதுமான ‘சாட்சியங்களற்ற போரை’ நடத்தியது. இனக் கொலைகளின் காடாக வன்னிப் பெருநிலத்தை ஆக்கிய 2009, மே-17வரை இராசதந்திரம் கைகொடுத்தது; வெற்றியும் பெற்றது.

அதன் பின்னான நான்காண்டுகளில் இராசபக்ஷேயின் இராசதந்திரம் இரண்டு சறுக்கல்களைச் சந்தித்தது.

2011-ல் முதன்முதலாய் பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், உரையாற்ற நாள் குறித்து, லண்டனிலும் போய் இறங்கி, ஆனால் பல்கலைக்கழகத்தில் காலடிவைக்க முடியாமல் தமிழின எதிர்ப்பால் விரட்டியடிக்கப்பட்டார்.

இராசபக்ஷேயின் இராசதந்திரம் இரண்டாம் முறை தோல்வியுற்ற இடம்-காமன் வெல்த் மாநாடு. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், 2011-ல் காமன் வெல்த் மாநாடு நிறைவுற்ற போது, அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா முன்மொழிந்தது. கொழும்பில் நடத்துவதன் மூலம் இலங்கைக்கு ஏற்பட்ட இனக்கொலையாளி என்ற அவப்பெயரை நீக்கிவிடலாம் என இந்தியா நினைத்து, இன்று ஆப்பசைத்த குரங்காக, இலங்கை மாட்டிக் கொள்ள அது காரணமாகிவிட்டது. ராசபக்ஷேக்கள் மமதை கொண்டு நடத்திய சாட்சியற்ற போரிலிருந்து. நான்காண்டுகளில் உயிர்பெற்ற சாட்சியங்கள் உருவாகியுள்ளன. கூட்டுக் கொலையாளியான இந்தியா திணறிக் கொண்டிருக்கவும் அதுவே மூலமாகியுள்ளது;

இந்தியப் பிரதமர் மன்மோகன் விசித்திரப் போ்வழி. தனிப்பட்ட காரணங்களால் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொளள் முடியாமல் போனது என்று கடிதம் எழுதினார். நூறு கோடி மக்களின் பிரதமரான இவருக்கு ஒன்றரைக் கோடி மக்களின் அதிபருக்கு கடிதம் எழுதவும் கூடத் தெரியவில்லை போல.
  1. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. ஆகவே 2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன் வெல்த் மாநாட்டுக்கு தான் செல்லாதது போல், பல்லாயிரக்கணக்கில் தமிழ்மக்கள் கொல்லப்படக் காரணமாக இலங்கையையும் புறக்கணிக்கிறேன் என்று எழுதியிருக்க வேண்டும்.
  2. 1971-ம் ஆண்டு காமன் வெல்த் மாநாட்டில் சிறப்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. “அமைப்பில் உள்ள நாடுகள் எல்லாம் மனித உரிமைகள் காப்பதில் உறுதியாக நிற்கக் கடமைப்பட்டுள்ளார்கள்” மேலான இம் முடிவுக்கு இசையவே நான் கலந்து கொள்ளவில்லை என எடுத்துரைத்திருக்க வேண்டும்.
  3. பதினாறு அம்சங்களுடைய காமன்வெல்த் “கொள்கைப் பட்டயம்” 2012 அக்டோபரில் இறுதி செய்யப்பட்டது. தேர்தல் வழிப்பட்ட சனநாயகம், மனித உரிமைப் பாதுகாப்பு, கருத்துரிமை, முரண்பட்ட சமூகங்களிடையே சகிப்புத் தன்மை, அதிகாரப்பரவல், சட்ட்தின் ஆட்சி நிலவ உறுப்பு நாடுகள் கட்டாயம் பாடுபடவேண்டும்” என்று 16 அம்சங்கள் வலியுறுத்தின. இலங்கையைப் பொறுத்தளவில் மேற்கண்ட எதுவுமே செயலில் இல்லை என எடுத்துக்காட்டி புறக்கணித்திருக்க வேண்டும்.
  4. வியட்னாமை அமெரிக்கா ஆக்கிரமித்து நாப்பாம் குண்டுகள் வீசியபோது ‘வியட்னாம் ரத்தம் எங்கள் ரத்தம். அம்மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம்’ என அறிவித்து மக்கள் பக்கம் நின்றோம். பாலஸ்தீனிய விடுதலைப் போராட்டத்துக்கு அந்த மக்களின் விடுதலையுணர்வை வரவேற்று, அவர்கள் பக்கம் நின்றோம். ஏன், கியூபா விடுதலைப் போராட்டத்தின் போதும், அவர் தம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல் நின்றவர்கள் நாங்கள். இன்று இனச் சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ள இலங்கை தமிழ்மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாநாடடில் பங்கேற்க மனமில்லை-என்றாவது சொல்லியிருப்பார் என எதிர்பார்த்தோம். குறுந்தாடி பிரதமர் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க வரஇயலாது போனது என்கிறார். அவருடைய இல்லத்தில், குடும்பத்தில், உறவில்-சிறுநாய்க்குட்டி கூட இறந்ததாக இதுவரை செய்தியில்லை. 
இங்குள்ள தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரதமர் செல்லவில்லை என்பது ஆட்சிக் கட்சியான காங்கிரஸ்காரர்களின் சால்ஜாப்பு. அடுத்து ஆறுமாதங்களில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் ஏற்றி, ஓட்டு மந்தையென தமிழா்களை கருத்தில் கொண்டு வருகிறது இந்த மணிவாசகம். “மக்களவைத் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில் காமன்வெல்த் மாநாட்டு எதிர்புக்களால் காங்கிரஸீக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது” என்று டெல்லியில் கூடிய காங்கிரஸ் உயர்நிலைக்குழு முடிவு எடுத்தது.

“நடந்த கசப்பான சம்பவங்களை மறந்துவிட்டு புதிதாக ஆரம்பிப்பதே இப்போதைய செயல்பாடாக இருக்க வேண்டும்”

தமிழ்நாட்டு மக்களின் கொந்தளிப்பைக் கண்டு கொள்ளாது, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இலங்கையில் காலவைத்த வெளியுறவுத் துறை அமைச்சா் சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இரண்டு லட்சம் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டது சல்மான் குர்ஷித்துக்கு மறந்துவிட வேண்டிய கசப்பான சம்பவம்! அந்தக் கொலைகளுக்குப் பின்னால் இரண்டு லட்சம் குடும்பங்கள் இன்னும் மூச்சுவிட முடியாமல் தத்தளித்து, தவிதாயப்பட்டுக் கொண்டு இருக்கின்றன; பலவகையிலும் சிங்கள ஆதிக்கம் மூச்சுப்பறிய விடாமல் அழித்துக் கொண்டிருக்கிறது என்பதும் சாதாரணமாய் மறந்துவிட வேண்டிய கசப்பான சம்பவம்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிந்துவிட்டது; உயிரோடு இருப்பவர்களுடனான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது (Structural Genocide). இதுவும் மறந்துவிட வேண்டிய கசப்புத்தான்.

“இலங்கை வாழ் தமிழர்களுக்காக இந்தியா பெருமளவில் முதலீடு செய்துள்ளது” இதுவும் பெருமான் வெளியுறவுத் துறை அமைச்சர் பேசியதுதான்; உண்மை அதுதான். காமன்வெல்த் மாநாடு தொடங்கும் முன்னதாக நவம்பர் 12 முதல் 14-வரை தொழிலதிபர்கள் மாநாடு; இந்தியப் பன்னாட்டு முதலாளிகள் கொழும்பில் போய்க் குவிந்துள்ளார்கள். இந்தியா உட்பட, அனைத்து வல்லரசு நாடுகளுக்கும் இலங்கை தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இந்த நாடுகள் ஒன்றே ஒன்றை மட்டும் உறுதி செய்ய கோரப்படுகிறார்கள். அது இன அழிப்பு; மிஞ்சியிருக்கிற தமிழர்களையும் அழித்து, சிங்கள நாடாக ஆக்க நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்பது ஒன்று மட்டுமே இலங்கையின் மன்றாட்டு.

2011-சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதும், “இனக்கொலை மீதான பன்னாட்டு விசாரணை: ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையைக் காத்துக் கொள்ள பொது வாக்கெடுப்பு” என்ற சிறப்பான தீர்மானங்களை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி நடுவணரசுக்கு அனுப்பிவைத்தார் முதல்வர் ஜெயலலிதா

“ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது” என்று தமிழகச் சட்டமன்றத்தின் அவசரக்கூட்டத்தை 12.11.2013-ல் கூட்டி மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினார். இரண்டுக்கும் சல்மான் குர்ஷித் தந்த பதில்; “தமிழக அரசின் தீர்மானம் எவ்வகையிலும் மத்திய அரசைக் கட்டுப்படுத்தாது” என்பது மட்டுமே.

தீர்மானம், கடிதம் என்பன போன்றவைகளுக்கு மதிப்பு அவ்வளவே. பதிலாக, நிறைவேற்றிய தீர்மானத்தை எடுத்துக் கொண்டு, அனைத்துக் கட்சியினரையும் இணைத்துக் கொண்டு ஜெயலலிதா டெல்லியை முற்றுகையிட்டிருக்க வேண்டும். பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் போன்றோரைச் சந்தித்து நேருக்கு நேர் வாதாடியிருக்க வேண்டும். தான் மட்டுமே தமிழ்ச் சமூகத்தின் மொத்தப் பிரதிநிதி என்று கருதுவதால், மீண்டுமொரு அவசரத் தீர்மானத்தை நிறைவேற்றி அமர்ந்துவிட்டார். தமிழகத்துடனான ஒவ்வொரு பிரச்சனையிலும் குறிப்பாக நதிநீா்ப் பிரச்சனையில் கர்நாடகம், கேரளா போன்ற அண்டை மாநில அரசுகள் அனைத்துக் கட்சியினரையும் இணைத்துக் கொண்டு டெல்லிக்குப் போய் அழுத்தம் கொடுப்பதை ஜெயலலிதா காணாமல் இல்லை. மாநில நலன்கள் என்று எழும்புகையில் இங்கெல்லாம் இடதுசாரிகளின் மார்க்சியமும் சர்வதேசியமும் காணாமல் போய்விடுகிறது.

இப்போதும் இலங்கையின் இரு நிகழ்வுகள் சாட்சியங்களை உலகத்தின் பார்வைக்குத் தந்துள்ளன.
  1. இலங்கையின் மனித உரிமைகள் பற்றியும், இராணுவத்தின் படுகொலைகள் பற்றியும் வீடியோ படம் ஒளிபரப்பிய சேனல்-4 குழுவினரும், செய்தியாளர் கெலம் மக்கரேயும் வடக்கு மாகாணம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் பயணித்த ரயிலை அனுராதபுரத்தில் வழிமறித்து, தாக்கி அவர்களை கிளிநொச்சி செல்லவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். சேனல்-4 குழுவினர் நாட்டை விட்டே வெளியேற வேண்டுமென சிங்கள தேசியவாதக் குழுக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
  2. மாநாட்டை ரணில்விக்கரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்துள்ளது. புறக்கணிப்பின் வெளிப்பாடாக இனக்கொலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது. ஏற்பாடாகியிருந்த அரங்கைத் தாக்கி, புகைப்படங்களைக் கிழித்து, கண்காட்சியை நடத்த விடாமல் செய்துள்ளனர். இரு நிகழ்வுகளையும் இனவெறி புத்தபிக்குகள் முன்னின்று நடத்தியுள்ளனர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பது அல்ல தமிழ்மக்களின் கோரிக்கை. மாநாடு இலங்கையில் நடைபெறக்கூடாது என்பது உலக முழுமையும் வாழ்கிற தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், போர் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை. கொலைக்களத்தில் கும்மியடிப்பு கூடாது என்று தான் முன்வைக்கிறார்கள்.

மயானத்தில் கொள்ளிவாய்ப் பிசாசுகள்; அவை இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டம். 2011-ஆஸ்திரேலிய ஆட்டத்துக்குப் பின் கடந்த இரண்டாண்டுகளில் இந்த கொள்ளிவாய்ப் பிசாசுகளின் சாதனை என்று கணக்குப் பார்த்தால் ஒன்றுமே இல்லை – ஒரு கொலையாளியை சிம்மாசனத்தில் உட்கார வைத்ததைத் தவிர எதுவும் இல்லை.

(நன்றி: தீராநதி டிசம்பர் 2013)

- பா.செயப்பிரகாசம் (jpirakasam@gmail.com)

நன்றி: கீற்று 05 டிசம்பர் 2013

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி