வதங்கிய வாழ்வு நிலையும் அதனடியாய்ப் பிறந்த நேர்மையும் என்னை மார்க்சியத்திடம் சேர்த்திருந்தன. எந்தக் காரணிகள் பள்ளி, கல்லூரிக் காலத்தில் திராவிட இயக்கங்களிடம் கொண்டு சேர்த்தனவோ, அதே காரணிகளே திராவிட இயக்கங்கள் தாண்டி மார்க்சியத்திடம் வரவும் காரணமாயின.
யதார்த்தத்திலிருந்து சித்தாந்தத்திற்குச் சென்றவன். படிப்பாளி வட்டத்தைப்போல் தத்துவார்த்தமாகக் கற்று அறிவு விவாதம் நடத்திப் பிறகு அதற்குள் போனவனல்ல.
எந்த ஒரு தத்துவத்தின் தோற்றுவாயும், அதன் சமுதாய வரலாற்றுச் சூழலில் உள்ளது. தத்துவம், அது உதிக்கக் காரணமான சமுதாயச் சார்புடையது. தோன்றிய காலகட்ட சமுதாயத்தின் கட்டமைப்பினின்றும் பிரித்துப் பார்க்க முடியாதது. அந்தந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை அணுகுமுறை, உலகப்பார்வை தத்துவத்தை நிர்ணயிக்கிற பின்னணியாக உள்ளது.
தத்துவங்கள் தோற்பதில்லை; நடைமுறைகள்தான் தோற்கின்றன என்றொரு கூற்றுண்டு. பல தத்துவங்கள் தெளிவான புரிதலோடு இணைவான நடைமுறைகளுக்கு எடுத்துச் செல்கிறபோதும் தோல்வியடைகின்றன. காரணம், அந்த தத்துவத்திற்குரிய குறிப்பிட்ட சமுதாய வரலாற்றுக் கட்டம் முடிவடைந்துவிட்டது. இங்கு வரலாற்றுக் காலத்தின் முடிவு, அதன் மரணமாக ஆகிவிடுகிறது.
தத்துவங்கள், காலம் சார்ந்தவை. சமுதாயம் சார்ந்தவை. வர்க்க நலன் சார்ந்தவை. சில, மதம் சார்ந்தவை. எனவே, அந்த காலமும் சமுதாயமும் வர்க்கமும் இல்லாமல் போகிறபோது அந்தத் தத்துவமும் அழிகிறது. ஒரு தத்துவம் நடைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறபோது, வெற்றிபெற வரலாற்றுச் சூழல் இருத்தல் வேண்டும்.
மார்க்சியத்திற்கான வரலாற்றுச் சூழல், இன்னும் முற்றுப் பெறவில்லை. வரலாற்றுக் காலம், தேவை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
மற்றைய தத்துவங்கள் போல், மார்க்சியம் சமுதாயத்தை நம்பிக்கை, ஐதீகம், அனுமானத்தின் பேரில் விளக்கியதல்ல. விஞ்ஞான நோக்கிலான விளக்கமாகும். மார்க்சியம் என்பது சமுதாய நடைமுறை விஞ்ஞானம். அது செயல்பாட்டுத் தத்துவம்.
பூமிக்கு அடியில் மூச்சு விட்டு, மண்ணை மேலும் கீழும் புரட்டி மேலே தானிய முத்துக்களை விளைச்சலாக்குகிற மண்புழுபோல, உயிர்ப்புடன் இயங்குகிறது. புதிது, புதிதாய், உயிரோட்டமாய் அறிவுத்துறை விஞ்ஞானமாய் தன்னையும் சமுதாயத்தையும் உயிர்ப்பிக்கிறது.
மார்க்சியத்திற்குச் சொல்வது, மார்க்சிய இலக்கியத்திற்கும், மார்க்சிய அழகியலுக்கும் பொருந்தும். அது கரடு தட்டிப் போய் நின்று விடுவதில்லை. நின்றவர்கள் தாம் கரடு தட்டிப் போனவர்கள்.
இலக்கியமும் மார்க்சியமும்
'மார்க்சிய அழகியல் என்பது வளர்ந்து வரும் ஒரு அறிவுத் துறையாகும். எனவே அதன் வளர்ச்சி எந்த ஒரு நிலையிலும் முற்றுப் பெற்ற முழுமையை அடைந்துவிட்டதாகக் கருதமுடியாது' ('மார்க்சிய இலக்கியக் கொள்கை' - பக். 2)
இலக்கியம் என்பது ஒரு ஆத்மார்த்தமான நிகழ்வு. இந்த ஆத்மார்த்த நிகழ்வுக்கும் பொருளாதார, சமுதாய நிகழ்வுக்கும் இடையேயான உறவு பற்றி மார்க்சியத்திற்குத் தெளிவான பார்வைகள் உண்டு. இந்த ஆத்மார்த்த அல்லது உணர்வுரீதியான நிகழ்வை மிக எளிமையான யந்திரகதியான சூத்திரமாகப் பார்க்கவில்லை. இலக்கியத்தை, அரசியல் பொருளாதாரத்தின் நேரடிப் பிரதிபலிப்பாக ஒருபோதும் மார்க்ஸோ, ஏங்கல்ஸோ கருதினார்களில்லை. அந்தக் கால கட்டப் பொருளாதார யதார்த்தங்களோடு நேரடித் தொடர்பாக அவர்கள் பார்க்கவில்லை.
"கலை, உன்னத நிலை அடைந்திருக்கும் சில காலகட்டங்களில், அவற்றிற்கும் அக்கால சமுதாய வளர்ச்சிக்கோ பொருளாதார அடித்தளத்திற்கோ இடையே நேரடியான தொடர்பில்லை" என்பார் மார்க்ஸ்.
கலை இலக்கியம் சமுதாய பொருளாதார நிலைகளின் நேர்வினை அல்ல. ஆனால், கலை இலக்கியம் எதிர்வினை ஆற்றுதல் இல்லாமல் இல்லை. உய்த்துணர்கிற ஒன்றாக, துய்ப்பதற்குரிய ஒன்றாக மட்டுமல்ல. வாசிப்பு மனங்களில் அதனடியாகப் பிறக்கிற சிந்தனைகள், உணர்தல்களால் அது ஒரு மௌனப் புரட்சியை உண்டாக்குகிறது. வெறும் ரசனை என்பதை மீறி, அப்போது மனித மனங்களைத் தன்பால் ஈர்க்கிற பௌதீக சக்தியாக மாறுகிறது.
கலை, இலக்கியம் மூலம் மனிதன் தன்னை மறுபடைப்புச் செய்து கொள்கிறான். தன் அனுபவத்தை, சூழலை, தனக்கும் சமுதாயத்திற்குமான உறவுகளை வெளிப்படுத்துவதில் மனித குலம் தன் பிம்பத்தைப் பார்த்துக் கொள்கிறது. தன்னை, தான் சார்ந்த ஒவ்வொன்றையும் வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்லும் ஓர்மையைப் பெறுகிறது.
'ஒவ்வொரு கலைப் படைப்பும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் உடனடி நடைமுறை நலன்களை நாட வேண்டும் என்று மார்க்சியம் கோரவில்லை. கலைகளை அனுபவிக்கும் திறனே ஒரு கலைஞனின் படைப்பாற்றலுக்கு அடையாளமாகும். மனிதப் பண்பூட்டும் முக்கிய அம்சமாகிய இத்தகைய படைப்பாற்றலை வளர்த்தலிலும் வளப்படுத்துதலிலும்தான் கலையின் நீதி அடங்கியுள்ளது.' (மார்க்சிய இலக்கியக் கொள்கை, பக்.12)
வர்க்க அம்சம், கலை, இலக்கியம்
அதனால் கலை, இலக்கியத்தில் வர்க்க அம்சம் இல்லாமல் போகவில்லை. வர்க்க அம்சம் என்பது மனிதப் பண்புகளைச் செழுமைப்படுத்தும் ஒன்றாக மார்க்சியத்தில் உணரப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கந்தர்வனின் ஒரு கவிதை. ஆத்மார்த்த உசுப்புதலைச் செய்கிற ஒரு கவிதை. கொஞ்சம் வேகமாகவே, மனசாட்சியின் முதுகில் ரெண்டு தட்டுத்தட்டிச் சொரணையை எழுப்புகிற வரிகள்:
நான் நல்லாய்த்தான் இருக்கிறேன்
அன்புள்ள ஐயாவுக்கு
ஆறுமாசத்தில் நான்
டேபிள் கிளீனிங்கில்
நன்றாகத் ‘தேறிவிட்டேன்
வாழைமட்டைக்குப் பதிலாய்
முதலாளி எனக்குக் கலர்கலராய்
ஸ்பாஞ்ச் கொடுத்திருக்கிறார்.
நீ போடும் கார்டை முதலாளி
மூணுநாள் கழித்துத்தான் தருகிறார்
காகிதம் வந்து கல்லாவுக்குள் கிடப்பது
முதலாளி மூஞ்சி பார்த்துத் தெரிகிறதெனக்கு
நீ அடுத்த மாசம் முதலாளியிடம்
சம்பளம் வாங்க வரும் போது
என் கையைப் பிடித்துத் தெருவில்
ரெண்டடியாவது நடக்க வேண்டும்.
இந்த டவுனில் என் வயசுப் பயல்கள்
டை கட்டி யூனிபார்ம் போட்டு
புத்தகப்பை சுமந்து
அவனவன் அப்பா கை பிடித்து
அழகழகாய் நடக்கிறார்கள்
நானூறு ஐநூறு பேர்
நாள்தோறும் வந்தாலும்
ஒரு ஆளோடும்
வாய் திறந்து பேச எனக்கு
வாய்ப்பில்லை ஐயா
ஆளாளுக்கு என்னைத்
திட்டும் போது
நம் ஆத்தாளைச் சேர்த்து
ரெண்டு, மூணு கெட்ட வார்த்தை சொல்கிறார்கள்
ராத்திரியில் பெரிய பயல்கள்
என்னைத் தூங்க விடாமல்
தொந்தரவு செய்கிறார்கள்
மற்றபடி நான்
நல்லாய்த்தானிருக்கிறேன்
ஆத்தா என்னை நினைத்து
அழ வேண்டாமென்று சொல்
நானும் அழுவதை நிறுத்தி
மாசம் ஒன்னாகிறது.
இயல்பான பேச்சு மொழியில், பூச்சும் புனைவும் இல்லாமல் நடந்து போகிறது கவிதை. அதற்கு அடியில் தேங்கியிருக்கும் உண்மைகளே அழகியலாகி உயரத்தைக் கூட்டி விடுகின்றன. ஒரு கலைப்படைப்புக்கு அழகியலை உருவாக்குகிற அம்சங்கள் இப்படிப் பல உண்டு.
'இலக்கியத்திலே வர்க்க அம்சம் நிச்சயம் உண்டு. ஆனால் இவ்வர்க்க அளவுகோல் கலை நயத்தோடு படைப்பாற்றலின் தன்மைக்கேற்பப் பயன்படுத்தப் பட வேண்டுமேயொழிய மொண்ணையாக அல்ல. ஆம். கலை கலையாகவும் இலக்கியம் இலக்கியமாகவும் அதாவது மனித முயற்சியின் ஒரு சுட்டிப்பானத் துறையாக அணுகப்பட வேண்டும்.' (டிராட்ஸ்கி)
ஒவ்வொரு படைப்பு வெளியீட்டிலும் புறவயமான சமூக யதார்த்தம் முழுவதுமாக அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட வேண்டும் என்பது அல்ல. கலைஞன், சமூக மனிதன் என்ற அடிப்படையில் ஏதோ ஒரு வகையில் அவன் படைப்பில் இந்த அம்சம் இயல்பாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். ஒரு கலைஞனின் படைப்பில் மாறிவரும் யதார்த்தத்தின், சுற்றிலும் இயங்கும் சமுதாயத்தின் வெளிக்கோடுகளைப் பற்றிய பிரக்ஞை காணக்கிடைக்கும். ஏதேனும் ஒரு அம்சத்தில் கூட அது வெளிப்படும். (எ.கா. பூமணி - கதை 'தகனம்', தினமணி ஆண்டு மலரில் வந்தது.)
சாதி அபிமானம் சாதாரண மக்களை இழுத்துப் போட்டுச் சுருட்டி வதைக்கிறது; சாதி அபிமானம்கொண்டு ஈடுபடுகின்ற பாத்திரங்களைக் கொஞ்சம்கூட சலனப்படுத்தவில்லை. அசைக்கவில்லை. சாதி வெறியில் 'கிண்'ணென்று அசையாமல் நிற்கிறார்கள். ஆனால், வாசிக்கிற மக்களை சலனப்படுத்துகிறது. வாசகனின் மனதுக்குள் அந்தக் கதை அவனை விடுவதாயில்லை.
சார்பு இலக்கியங்கள்
நேரடியாக வர்க்க நலன் பேசுகிற படைப்புக்களும் இருக்கின்றன. டிராட்ஸ்கி குறிப்பிடுவது போல மொண்ணையாக அல்ல. அது படைப்பாக அதற்குரிய அழகியல் குணங்களோடு வெளிப்பட்டிருக்கிறபோது மட்டுமே இவை சார்பு இலக்கியமாகின்றன. உழைக்கும் மக்கள், தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோர், முன்னணியினராகிய புரட்சியாளர்கள் என இவர்கள் பற்றி நேரடியாகப் பேசுகின்ற இலக்கியம் மட்டுமல்ல, உடைமை வர்க்கத் தத்துவங்கள் சார்ந்து வெளிப்படுகிறவையும் சார்பு இலக்கியம்தான். உடைமை வர்க்கத்தவர் ஆகட்டும், சாதாரண மக்களாகட்டும் எம்மக்களாயினும் உடைமை வர்க்கக் கருத்து நிலை சார்ந்து எழும்புகிறவை சார்பு இலக்கியங்கள்தான். வர்க்கச் சார்பு புலப்படாமல் ஒளிந்துகொண்டிருக்கிறதோ அல்லது துருத்திக்கொண்டிருக்கிறதோ எத்தகையதாயினும் அவை சார்பு இலக்கியங்கள்தான். கலைப்படைப்பின் எல்லா அம்சங்களும் வெளிப்பட்டிருந்தாலும் அத்தனை அம்சங்களும் சார்பை நோக்கிச் செலுத்துகிற காரியமாகக் கருதப்படும்.
இதை நடைமுறை உதாரணம் வழியாக விளக்கலாம். சமகால அரசியல் தலைவர்கள் ஊழலை ஒரு ஒழுக்கமாக - அரசியல் விதியாக ஆக்கிவிட்டவர்கள். இவர்களோடு ஒப்பிடுகையில் கடந்த கால அரசியலாளர் சிலரைச் சுட்டிக்காட்டி அவர் நாணயமானவர், நேர்மையானவர், ஊழலின் பெருவெளியில் உலவாத பெருந்தகை என்று போற்றிப் பாராட்டுதல் ஒரு பழக்கமாகிவிட்டது. இங்கே அவர் நல்லவர், நேர்மையாளர், நயவஞ்சகமற்ற மனிதர் என்பதல்ல முக்கியம். அவர் எந்தத் தத்துவம் சார்ந்து, எந்த வர்க்கம் சார்ந்து, எந்த மக்கள் பகுதி சார்ந்து இயங்கினார், அரசியல் வாழ்வை நடத்தினார் என்பதுதான் முக்கியம். உடைமை வர்க்கத் தத்துவம் சார்ந்தா? அல்லது மக்கள் நலத் தத்துவம் சார்ந்தா? அவருடைய நேர்மை, நாணயம், பிறன்மனை விழையாமை, சொத்து சேர்க்காமை நல்ல பண்புகளே. இந்த அருங்குணங்களெல்லாம் உடைமை வர்க்கத் தத்துவத்திற்க்காக வீணாயின; உடைமைக் கூட்டத்தின் பல்லும் சக்கரமுமாகிப் போயின என்பதுதான் பொருள்.
வர்க்கரீதியான, அரசியல்ரீதியான, தத்துவரீதியான இலக்கியங்கள் சார்பு இலக்கியங்கள் ஆகும். பாட்டாளி வர்க்கச் சார்பு இலக்கியங்களின் வெளிப்பாட்டுத் தன்மையை ஏங்கெல்ஸ் தெளிவாகவே சுட்டிக் காட்டுகிறார்.
'நம்மைப் பொறுத்தமட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கியம் இதுதான். எழுத்தாளன் படைக்கிற சூழ்நிலைகளிலிருந்தும் நிகழ்வுகளில் இருந்தும் தானாகவே அவனது குறிக்கோள் வெளிப்பட வேண்டும். மாறாக வெளிப்படையாக அத்தகைய குறிக்கோளைச் சுட்டிக் காட்டக் கூடாது. எழுத்தாளன் விவரிக்கக்கூடிய சமுதாயப் போராட்டங்களின் எதிர்கால வரலாற்று முடிவுகளை அவன் அப்படியே ஒரு தாம்பாளத்தில் வைத்து வாசகனிடம் நீட்டக் கூடாது.'
நிகழ்வுகளில் இருந்தும் சூழலிலிருந்தும் நடத்திச் செல்லப்பட்ட சிறந்த நாவல்கள் என இவற்றைக் குறிப்பிடலாம்.
- தொ.மு.சி.ரகுநாதனின் 'பஞ்சும் பசியும்'
- கையூர் விவசாயிகள் போராட்டம் பற்றி, கன்னடத்தில் எழுதித் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நிரஞ்சனாவின் 'நினைவுகள் அழிவதில்லை'.
இவைகளோடு சேர்க்கப்பட வேண்டியவை இந்திய விடுதலைப் போராட்டத்தைக் களமாக்கிச் செய்யப்பட்ட சரத் சந்திரர் படைப்பு 'பாரதி'. கென்ய எழுத்தாளர் கூகி எழுதி அண்மையில் தமிழில் வந்துள்ள 'சிலுவையில் தொங்கும் சாத்தான்'.
யதார்த்தம், தொழில் நேர்த்தி
'நினைவுகள் அழிவதில்லை' நாவலில் நிரஞ்சனா வெளிப்படுத்துகிறார்:
'கையூர் கிராமத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நான் போராட்டத்தின் மிக நெருங்கிய பார்வையாளர்களில் ஒருவனாக இருந்தேன். அந்த நெருக்கத்தினுடையவும் சுவாசத்தினுடையவும் பலனே இந்த நூல். அப்படியானால் இது யதார்த்த சம்பவத்தின் பிரதிபலிப்பு மட்டும்தானா? இல்லை. இது படப்பிடிப்பு அல்ல. உண்மையான நிகழ்ச்சிகள் இந்த நாவலின் அடிப்படையாக இருந்தபோதும் அதன் மீது கலாபூர்வமாக கட்டியெழுப்பப்பட்ட மாளிகை.'
யதார்த்தமான போராட்ட வாழ்விலிருந்து எழுதப்பட்ட நாவல் என்றாலும் கலாபூர்வமாகப் பின்னப்பட்டிருக்கிறது; நாவலின் இயல்பான நிகழ்வுகள் சூழ்நிலைகள் மூலம் அமைக்கப்பட்டவை. படைப்பாளியே குறிப்பிடுவதுபோல அவர் தனது மனசாட்சிக்குப் பொறுப்புள்ளவராக நடந்து கொண்டிருக்கிறார். அவருடைய மனசாட்சி - சமூகத்திற்குப் பொறுப்புள்ள, தன்னை முன்னிலைப்படுத்தாத பெருவாரி மக்களின் உணர்வுகளை முன்னிறுத்துகிற ஓட்டைத் தத்துவம் சாராத மனசாட்சி.
சார்பு இலக்கியங்களைத் தருகையில் ஒரு படைப்பாளி நிறைய உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. எந்த அரசியல் கொள்கை சார்ந்தும் வெளிப்படையாகப் பேசாத உத்தி. தன்னுடைய பிரச்சாரம் எவ்வளவு கவனமாக மறைக்கப்பட்டுள்ளது என்ற உத்தி.
தானொரு அரசியல் இயக்கம் சார்ந்தவனாக வெளியுலகில் அறியப்பட்டிருக்கலாம். கலைஞன் என்ற பொறுப்பில், கலைப்படைப்பில் வெளிப்படையாக அறிவிக்காத தந்திரம். எனக்கு எல்லாமும் தெரியும், ஆனால் எதுவும் தெரியாது என்று வாசக நேர்வுக்குத் தள்ளிவிடுகிற தந்திரம்.
உடைமை வர்க்க ஆட்டமும் பாட்டமும் நிலையானது என்று மக்கள் மட்டுமல்ல, படிப்பறிவுள்ள அறிவாளிகள் மத்தியிலேயே கவிந்துள்ள மாயைகளைப் பாறைகளைத் தகர்ப்பதுபோல் வேட்டு வைத்துவிட்டு நகர்கிற தந்திரம்.
இந்த சூட்சுமம், படைப்பை நடத்திச் செல்லும் சூழல்கள், நிகழ்வுகளில் இருந்து உருவாகி வருவதாகக் காட்டுவதில் அடங்கியுள்ளது. திணிக்கப்பட்டதாகத் தெரியக் கூடாது என்பதுதான் சூட்சுமம்.
வர்க்க அரசியலின் நேரடிப் பிரதிபலிப்பாக இலக்கியம் உண்டுதான். அதனை வெளிப்படுத்துகிற சாத்தியப்பாட்டில் மண்ணுக்கடியில் போகிற வேர்களின் பாத்திரம் போன்றது - இலக்கியவாதி, கலைஞன் பாத்திரம். நிலத்தின் சாரம், விதையின் சாரம், நீரின் சாரம் எனத் தன்மயமாக்கி பூமிக்கு மேலே செடியாக அனுப்புகிற பாத்திரம் அவனுடையது.
படைப்பாளியின் கருத்துக்கள் எவ்வளவு கவனமாக மறைக்கப்பட்டுள்ளதோ அவ்வளவுக்கே அது ஓர் கலைப்படைப்பிற்குச் சிறப்பாகும்.
எங்கெல்ஸ் சொல்வது:
'தத்துவ அம்சங்கள் படைப்போடு பிரிக்க இயலாதவாறு இணைந்திராவிட்டால் அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு இலக்கியத்தில் சார்புத் தன்மை என்பது இறுதியில் ஓர் அழகியல் பிரச்சனையாகிவிடுகிறது. அறிவுபூர்வமான தனது நிலைகளும் தத்துவப் பார்வைகளும் படைத்துக் காட்டும் சூழல்கள் மற்றும் நிகழ்வுகளிலிருந்து இயற்கையாகவும் தவிர்க்க இயலாதவாறும் தானாகவே வெளிவரும் வகையில் சமுதாய உண்மைகளின் அடிப்படை அம்சங்களைப் படம்பிடித்துக் காட்டக்கூடிய எழுத்தாளனின் தொழில் திறமையையே அது முக்கியமாகப் பொறுத்திருக்கிறது.' (மார்க்சிய இலக்கியக் கொள்கை, பக். 22)
"மார்க்சிய முதல்வர்கள் வரையறுத்துக் கூறிய பிரதிபலிப்புக் கொள்கையை மனம்போன போக்கில் மறுதலித்தலும் மாறாட்டம் செய்வதும் விபரீதமான முடிவுகளுக்கு விமர்சகனை இட்டுச் சென்றுவிடும்" என்ற கைலாசபதியின் கூற்று இங்கு கவனம் கொள்ளத்தக்கது. (கைலாசபதி முன்னுரை - இயக்கமும் இலக்கியப் போக்குகளும், பக். 11)
நேரடியாக இலக்கியம், அரசியல், சமூகப் பொருளாதார கட்டுமானத்தைப் பிரதிபலிப்பதில்லை. சமூக, பொருளாதார கட்டுமானத்தினால் பிறப்பெடுத்த வாழ்நிலையையும் சிந்தனைகளையும், உறவுகளையும் பிரதிபலிப்பதாக உள்ளது.
படைப்பு என்று வந்துவிட்டால், படைப்பாற்றலின் அம்சங்கள் ஆணையில் வைக்கப்பட வேண்டும். எத்துறை சம்பந்தப்பட்டதாயினும், அத்துறையின் இயங்குதல் போக்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துறையின் விதிசுள், நியதிகள், உள்வாங்கிக் கொள்ளப்பட வேண்டும். அவ்விதிகளினூடாக அத்துறை விதிகள் பழமையானதாக, செல்லரித்ததாக, நேரெதிரானதாக இருந்தால் விதிகளை மாற்றியமைக்கக் கோருகிறது மார்க்சியம்.
"எழுத்தாளன் எண்ணுவது அல்ல; (அவனது சித்தாந்தம் அல்ல) அவனது படைப்பே முக்கியத்துவம் வாய்ந்தது" - லெனின்.
இலக்கிய அழகியல், கலை அழகியல் என்று தனியாக இருப்பவை இதற்கு முன்னிருந்த சமுதாயங்களின் இலக்கியவாதிகளால் படைத்து உருவாக்கப்பட்டன. அவர்களின் கலை வெளிப்பாடுகள் மூலமாக உருவானவை. அந்த அழகியலை இன்றைய சமகால, எதிர்கால இலக்கியக் கண்ணாடி வழியாகப் பார்த்துச் சீரமைக்கிற, செழுமைப்படுத்துகிற ஒன்று மார்க்சிய அழகியல். இவ்வாறு அலசி நுணுக்கமாய் ஆராய்ந்து நடைமுறைக்கு எடுத்துச் செல்கிறபோது, முன்னவர் குறிப்பிட்டதுபோல மார்க்சிய அழகியல் ஒரு அறிவுத் துறையாக ஆகிறது.
மார்க்சியம், மக்கள் கோட்பாடாக இருந்தாலும், யதார்த்தத்தோடு பொருத்தி உரசிப் பார்க்கப்பட வேண்டியது. அது தோன்றிய காலத்தில் பாய்ச்சிய வெளிச்சத்திலும் கூடுதலாக எல்லா வளர்நிலைகள் போலவே மார்க்சிய அழகியலும் புதிய பரிமாணத்தில் வளர்நிலையடைந்துள்ளது.
மார்க்சிய சித்தாந்தம் ஒரு சமூகக் கோட்பாடு என்ற வகையில் தனக்கு முன் நிலவிய உடைமை வர்க்க (பூர்ஷ்வா வர்க்க) கோட்பாடுகளிலிருந்து தன்னை முற்றாகத் துண்டித்துக் கொண்டதில்லை. பூர்ஷ்வா கோட்பாடுகளின் விஞ்ஞானக் கூறுகளை (ஹெகலின் இயக்கவியல் கருத்து, ரிகார்டோவின் மதிப்புக் கோட்பாடு, முதலியவற்றை) வளர்த்தெடுத்துப் புரட்சிகரமாக மாற்றியமைத்ததுதான் மார்க்சியம். தனது அரசியல், சமூக, பொருளியல் கோட்பாடுகளை வரையறுக்கையில் தனக்கு முன்னிருந்த உடைமை வர்க்கச் சிந்தனையினின்றும் பண்பாட்டிலிருந்தும் நிலைமைகளிலிருந்தும் தான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் புதியன படைத்தனர். தமக்கு முன்னிருந்த எந்தச் சிந்தனையையும் தத்துவத்தையும் நிராகரிக்கவில்லை. அவைகளின் விஞ்ஞானக் கூறுகளை உள்வாங்கி வெளிப்படுத்தினார்கள்.
மார்க்சிய இலக்கியத்திற்கும் இதே வாய்க்கால்தான். தனக்கு முன்பிருந்த உடைமைச் சமுதாயத்தின் அறிவுச் சேமிப்புக்களை, பண்பாட்டுத் தொகுப்பை, இலக்கியச் செல்வங்களை அது நிராகரிக்கவில்லை. பூர்ஷ்வா சித்தாந்தத்திலிருந்து மார்க்சியம் துண்டித்துக் கொள்ளவில்லை. பூர்ஷ்வா வர்க்கம் கட்டி எழுப்பிய தத்துவம், அறிவு வளர்ச்சி அடிப்படையில்தான் மார்க்சியம் சாத்தியமாகியது. அதுபோலவே இதற்கு முன்பிருந்த சமுதாயங்களின் வேர்கள் சேமித்து வைத்த இலக்கியச் செல்வங்களிலிருந்தே புதிய இலக்கியமும் தன்னைத் திரட்டிக் கொள்கிறது. மார்க்சிய இலக்கியம் தனக்கு முன்பிருந்த அறிவுச்சேமிப்பு, இலக்கியச் செல்வம் எதையும் நிராகரிக்கச் சொல்லவில்லை. சிலர் வரையறுத்தது போல் இதுகாறும் மனித குலம் சேகரித்த அறிவுச் சேமிப்பையெல்லாம் புறங்கண்டும் முளைக்கவில்லை. முன்னர் நிகழ்ந்த இலக்கியச் செல்வங்களிலிருந்தெல்லாம் விஞ்ஞான விமர்சனக் கூறுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அதுவே பண்டைய அறிவு சார்ந்த இலக்கியப் படைப்பில் காணப்படும் மனிதநேயம், குறிக்கோள் ஆகியவற்றை மேலும் வளப்படுத்தித் தொடர்ச்சியாக வளர்ப்பதாகும்.
சூழலின் தரிசனமாய் ஒவ்வொரு இலக்கியமும் விமர்சிக்கப்படுகிறபோது அந்த இலக்கியத்தின் வரலாற்றுப் பிறப்பு, காலச்சூழல், சமுதாய நிலைமைகளும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்பது மார்க்சிய இலக்கியத்திற்கு உடன்பாடானது.
ஒரு படைப்பு உற்பத்தியாகும் காலச் சூழல் மிக முக்கியமானது. சூழலைக் கற்பிதம் செய்யமுடியாது. நிலைமைகளைத் திரைபோட்டு மறைத்து வேறொன்றைப் புதிதாக இறக்குமதி செய்யமுடியாது. கற்பிதமும் கற்பனையும்கூட யதார்த்தத்திலிருந்தே பிறக்க முடியும். சிறப்பான உதாரணம், நாட்டுப்புறக் கதைகள், மந்திர தந்திரக் கதைகள். இங்கு எடுத்துக்காட்டாகக் கரிசல் கதைகளின் தொகுப்பிலுள்ள அ.முத்தானந்தத்தின் 'மாடுகள்’ கதை. முந்திய தலைமுறைபோல், வா மகனே என்று சொன்னால் வயிற்றிலிருப்பதையும் வாந்தி எடுத்துக் கொடுக்கும் வெள்ளையான, வாஞ்சையான தலைமுறை இல்லை இன்றைய தலைமுறை. தகப்பன் பார்த்து வளர்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டுப்போன கன்றுகளை, கழுத்தில் நுகத்தடி பூட்டுகிற பருவம் வருகிறபோது மோப்பம் பிடித்த மகன்கள் பத்திக்கொண்டு போக வந்துவிடுகிறார்கள். பிரியத்திற்குப் பிரியமாய் வளர்த்த மாடுகளைப் பிரிய இரண்டு பெட்டைப் பிள்ளைகளுக்கும் முடியவில்லை. மனது ஆத்தமாட்டாமல் கண்ணீர் சொரிகிறார்கள்.
இங்கு மனுச குணங்கள் நாறிப்போன சூழல் சித்திரிக்கப்படுகிறது. அதேபொழுதில் மனித மேன்மைகளைக் காட்டுகிற சூழலும் மேன்மைகளின் தொண்டைக்குழி அடைபட்டு, விக்கித்துப் போய் நிற்கிற சூழலும் யதார்த்தத்திலிருந்து எழுகிறது.
சூழல்தான் உண்மை. சூழலைப் பற்றிப் படைப்பாளி என்ன வகையாகப் புரிந்து கொண்டிருக்கின்றானோ அது அவன்ளவில் உண்மை. சூழலை, நிலைமைகளைப் புரிந்து தன்மீது வினையாற்றுகிறவர்களாக எல்லாக் காலத்து இலக்கியவாதிகளும் இருந்திருக்கிறார்கள். இருந்திருக்கிறார்களா என விஞ்ஞான விமர்சனக் கூறுகளை வைத்து ஆய்கிறது மார்க்சியம்.
நிலைமைகள் அவ்வக் காலத்துக்கு ஏற்ப இலக்கியங்களைக் கோருகின்றன. இப்போது கருதிப் பார்க்கிறபோது, மக்கள் பகுதிக்கேற்பவும் இலக்கியங்கள் கோரப்படுகின்றன. முன்னர் பேரரசர்கள், பேரரசிகள், உன்னதமான தலைவர்கள், கதை மாந்தர்களாகப் படைக்கப்பட்டனர். இன்றைய இலக்கியம், சாதாரண மனிதனுக்கும் அந்தச் சிம்மாசனத்தைக் கேட்கிறது.
அதுபோல் காலங்களைக் கைப்பிடிக்காத - காலங்கள் தாண்டிய இலக்கியமும் கிடையாது. எது காலங்களைச் சரியாகக் கைப்பிடித்ததோ அது காலம் தாண்டியும் நிற்கிறது.
'படைப்பின் பரிமாணத்தில் மாறும் அம்சங்களும் மாறா அம்சங்களும் சமூக வளர்ச்சி நிலைக்கேற்ப வளர்ச்சியடைகின்றன. இது காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் மாறுபடும். படைப்பில் மாறுகிற அம்சம் அதன் உள்ளடக்கம் என்றால் மாறாத அம்சம் அதன் மொழிக்கட்டுமான வடிவம்.' (உதய சங்கர், மார்க்சிய இலக்கியக் கொள்கை, பக். 29)
எல்லாக் காலத்திற்கும் சமச்சீரான இலக்கியம், ஒரே மாதிரியான படைப்புச் செயல்பாடு என்பது இருக்க முடியாது. ஈழத்தின் இன்றைய இலக்கிய வெளிப்பாடு, மற்ற மொழிகளின் இலக்கியப் பருவ நிலைக்கு அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஈழத்தில் வாழ்வுக்கும் உயிரிழப்பிற்கும் பிரசவ அறைக்கும் கல்லறைக்கும் வித்தியாசம் உணரப்படாத போர்நிலை. அங்கத்திய கவிதைகள் மட்டுமல்ல, எல்லாப் படைப்பு வகைகளுமே அங்ஙனமேதான் போரின் பாத்திரத்தையே ஆற்றுகின்றன.
ஹோசிமின் ஒரு கம்யூனிஸ்ட் போராளி. அவர் கவிதை யாத்த தருணம் என்பது மக்களை மட்டுமல்ல அறிவுலகவாதிகளையும் போராளிகளாக எழும்படி அழைத்த தருணம்.
ஒரு கவிஞனின் பணி
கவிதை வடிப்பது மட்டுமா?
ஆயுதந் தாங்கிப்
போராடவும் வேண்டும்.
போர்க்களத்தில், நாப்பாம் குண்டு வீச்சுக்கு நடுவே, அறிவுலகவாதி, இலக்கியவாதி, கலைஞன் என்ற வேறுபாடு இல்லை. வயல்வெளிகளில் முதுகுக்குப் பின் ஏணைகளில் துப்பாக்கியைச் சுமந்தபடி நாற்று நடும் வியத்நாமியப் பெண்களைப் போலவே, கையில் துப்பாக்கியை ஏந்தியபடி உலவ அவன் கடமைப்பட்டிருக்கிறான். அவனுடைய படைப்பு மனோநிலைக்கு ஊடாக அதை அவனுடைய நாடும் மக்களும் கட்டளையிடுகின்றனர். மக்களின் உணர்ச்சிகளை, மனநிலைகளை மதிப்பது என்பதிலிருந்து இந்த அழைப்பு உதிக்கிறது. தொழிற்படுகிறது.
அன்றைக்குப் போர்க்களத்தில் தீர்மானிக்கப்படுவதுதான் கவிதை. போர்க்களத்தில்தான் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது. வாழ்வைத் தாண்டிய கவிதைகள் இல்லை. அந்த நேரத்தில் கலை இலக்கியங்கள் கூட சத்தமாக இருக்கும் அல்லது செயல்படாமல் மங்கிப்போயிருக்கும்.
புரட்சிக்குப் பிந்திய சூழலில் வியட்நாமில் அப்படியொரு அழைப்பு விடப்பட்டிருக்குமாயின், அது அரசியல் அதிகாரத்தின் வரம்புக்கு உட்பட்ட செயலாகக் கருதப்பட்டிருக்கும்.
உண்மையான இலக்கியம் அரசியல் ரீதியாக ஆணையிடப்பட முடியாத ஒன்று. அரசியல் நிறுவனம் மட்டுமல்ல, வேறு எந்த நிறுவன ரீதியாகவும் வழி நடத்தப்பட முடியாத ஒன்று. படைப்பு என்பது மனோநிலை. மனோ நிலையை உற்பத்தியாக்கவோ, பிரவகிப்பு செய்யவோ, உருவாக்கவோ கட்டளையிட முடியாது. அதற்குத் தூண்டாத் துணையாக, கிரியா ஊக்கியாக இருக்கலாம். எந்த நிறுவனத்தின் பணியும் அரசியல் நிறுவனம் உட்பட, ஆலோசனை வழங்கித் தூண்டல் செய்யலாமே தவிர நிர்ப்பந்தம் செய்வதல்ல.
இலக்கியம் ஒரு கலை. சித்தாந்தம் அல்ல.
இன்னொன்று, பிரச்சாரப் பயன்பாட்டு நோக்கிற்கு ஊடகங்களின் வாகும் தன்மையும் சம்பந்தப்பட்டதாக உள்ளது. கையாளும் கலை ஊடகத்தின் குணவாகைப் பொறுத்தது. பிரச்சார, பயன்பாட்டு நோக்கிற்குப் பாட்டு, இசை, கூத்து, நாடகம் போன்ற நிகழ்த்துக் கலைகள் நெருக்கம் கொண்டவை. அரசியல் நிறுவனமாக இருந்தாலும் வேறு எந்த நிறுவனமாக இருந்தாலும் விளக்கச் செயல்பாட்டுக்கு நிகழ்த்துக் கலைகளே பயன்படுகின்றன. மக்களிடையே பரப்புவதில் இவை தடங்கலற்ற தன்மையோடு வெளிப்படுகின்றன. ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகள், இரண்டாவது நிலையில் பயன்படுகின்றன. இலக்கியம் ஒரு வாசிப்புக் கலை; பிரச்சாரப் பயன்பாட்டு நோக்கிற்கு, வளர்ச்சிப் பணிக்கு ஏதுவாக அமைவதில்லை.
இலக்கியத்தின் ரத்த நாளங்கள்
இலக்கியத்திற்கென அதற்கென உள்ளார்ந்த விதிகள் உள்ளன. முதலாவது உள்ளடக்கத்திற்கும் உருவத்திற்குமான முழு நிறைவான இணைப்பு. உள்ளடக்கம் பிரசவத்தில் முதலில் வெளித்தெரிகிற தலைபோல வெளித் தோன்றுகிறது. பிறகு உருவம் என்ற முழு உடலும் வருகிறது. முதலில் எந்த விசயத்தை, பொருளை, கருவை, சொல்லப் போகிறோம் என்று தீர்மானிக்காமல் வடிவத்தை யோசித்து அதற்குப் பொருந்துகிற அல்லது பொருந்தாத ஒரு உள்ளடக்கத்தைத் திணிப்பது படைப்பு மனத்திற்கு எதிரானது. அதனுடைய இயல்புத்தன்மைக்கு ஒவ்வாமை கொண்டது.
படைப்பு மனம் திட்டவட்டமான ஒரு வடிவத்தை அதன் போக்கிலேயே வடித்துக் கொள்ளும். உள்ளடக்கத்திற்கும் உருவத்திற்கும் முழு நிறைவான இணைப்பு என்ற முக்கிய விதியை முழுமை செய்யும் நிறைய துணை அம்சங்கள் இருக்கின்றன. இந்தத் துணை அம்சங்கள் ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வொரு வகையானவை.
"ஓர் இலக்கியப் படைப்பு வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்தே அதன் உருவம் முழு நிறைவு பெற்றதாய் இருக்க முடியும்". (ரெஜி சிறிவர்த்தனா, மார்க்சியமும் இலக்கியமும், பக் 77.)
உள்ளடக்கத்திலேயே கோட்டைவிட்ட எந்தப் படைப்பும் தன்னைச் சுற்றி உருவச் செழிப்பான கோட்டையைக் கட்டியிருந்தாலும் உள்ளீடற்ற தக்கையாகி வாசிப்பைத் தடுக்கும்.
தேர்ந்த, வல்லமை வாய்ந்த படைப்பு மனத்திற்கு உள்ளடக்கமும் உருவமும் ஒரே நேரத்திலேயே, ஒரே போக்கிலேயே உருவாகிப் பொருந்துகின்றது.
"கருவுறு ஆக்க நிலையில் உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் இடையே தொடர்ச்சியான பின்னிப்பிணைந்த செயற்பாடு நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது." (அதே நூல் பக். 79)
படைப்பு மனத்திற்கு மட்டுமல்ல வாசக மனத்திற்கும் இந்தத் தொழிற்பாடே நிரூபணமாகிறது. வாசகன் படைப்பை உள்வாங்கிக் கொள்கிற காரியத்திலேயேகூட ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் வெளியாகியிருக்கும் உள்ளடக்கத்தை, அவற்றிற்கிடையேயான வேறுபாடு காணாமல் உள்வாங்கிக் கொள்கிறான்.
நேற்றைய கவிஞனல்ல இன்றைய எழுத்தாளன்
ஒரு எழுத்தாளனின் படைப்பு முளை தனக்குள்ளிருந்தே முளைவிடுவதுபோலத் தோன்றலாம். உண்மையில் அது சமூகத்திற்குள்ளிருந்து முளைவிடுகிறது. தான், தான் சார்ந்த குடும்பம், உறவு, நட்பு, மனிதர்கள் பற்றிய சிந்திப்புக்குள்ளிருந்துதான் அவன் தொடங்குகிறான். அந்தப் பொழுதிலேயே அவனுக்கும் சமூகத்துக்குமான பிணைப்பு தொடங்கிவிடுகிறது. எனவே, ஒரு இலக்கியவாதி தான் சார்ந்த சமூகம் பற்றிய தெளிவுள்ளவனாக இருப்பது முன் நிபந்தனையாகி விடுகிறது. சமூக மனிதன் என்ற அடையாளம் அவனுக்குள்ளே இயல்பான ஒன்றாக எழுத்து என்ற ஊடகத்தைக் கையாளத் தொடங்குகிற போதே தோலுக்கு உள்ளே ஓடுகிற ரத்த நாளங்களைப்போல் தன்னியல்பாகிவிடுகிறது.
எனவே, ஒரு எழுத்தாளன் தன்னைப் பற்றி எழுதுகிறான். ஆனால் பிறருக்காக எழுதுகிறான்.
கதை சொல்லுதல் என்பது நேரடியாக இன்னொரு மனிதனிடம் பேசுகிற முறைதான். தொடர்பு கொள்கிற முறைதான். கதை என்பது வினைச்சொல். கதைத்தல் அல்லது பேசுதல். இன்றைய சமூகத்தில் அல்லது அதற்கும் முந்திய சமூகத்தில் உற்பத்தி, உழைப்பு, வாழ்வு தொடர்புடைய செய்திகளைப் பரிமாறிக் கொள்ளுதல் கதைத்தலின் சமூகத் தேவையாக இருந்தது.
ஒருவன் தன்னுடைய எண்ணங்களைக் கதைக்க முடியும். எண்ணங்கள் எதனாலெல்லாம் பிறப்பெடுக்கிறதோ, அவைகளைப் பற்றியெல்லாம் கதைக்கலாம். அவ்வாறு கதைக்கிற போது, தன்னுடைய அனுபவங்களைச் சொல்வது, வளமாய்ச் சொல்வது, ஈர்ப்பாய்ச் சொல்வது என்று தனக்குள்ளே இருப்பதெல்லாம் சேர்ந்து வரும்.
தனிக் கதைப்பாகவும் இருந்தது; குழுக்களுக்குள்ளேயான கூட்டுக் கதைப்பாகவும் இருந்திருக்கிறது. குழுவுக்குள்ளிருந்து வெளியே கதை போகிறபோது அதனுடைய எல்லைப் பரப்புத்தான் எழுத்து வடிவமாக மாறுகிறது. பேச்சு முறையில் கதை என்பது ஒரு குழுவுக்குள்தான் முடியும். ஆனால் எழுத்து வடிவத்தில் தன் குழு தாண்டி, எல்லை தாண்டி, காலந் தாண்டிப் போகமுடிகிறது.
குழு தாண்டி, எல்லை தாண்டிப் போவது என்பதிலிருந்தே - எழுத்து வடிவத்தில் பதிவு செய்கிற போதே - சமூகத்தில் பரஸ்பர உறவு, உற்பத்தி, அதற்கான தகவல் பரிமாற்றம், பழக்க வழக்கம், உற்பத்தியில் பல்வேறு துறை சார்ந்த வேலைப் பிரிவினைகள் என மொழியும் மனிதனோடேயே வளர்ச்சி அடைகிறது.
எனவே, எழுத்தில் பதிவு செய்தல் என்பது உற்பத்தியோடு சேர்ந்துதான் வரலாற்றில் காண முடியும். உற்பத்திக் கருவிகள் எந்த அளவிற்கு வளர்ச்சியடைகிறதோ அதே அளவுக்குத்தான் பதிவு செய்கிற கருவிகளும் வளர்ந்து வந்திருக்கின்றன. எண்ணங்கள், இலக்கியமாகப் பதிவு செய்யப்படுவது என்பதெல்லாம் உற்பத்தியின் வளர்ச்சியோடு சேர்ந்த விசயம்தான். உற்பத்தி வளரவளர இலக்கியம், தத்துவம், அரசியல் எனப் பலதுறைச் செய்திகளும் வளரும். செய்திகள் வளரவளரக் கருத்துக்கள் வளரும். கருத்துக்கள் வளர வளரக் கதைப்பதற்கான தேவையும் வளரும். கருத்துச் சொல்வது என்பதை இலக்கியவாதியோ, அரசியல்வாதியோ தத்துவவாதியோ தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். கருத்துக்கள் சரியா? தவறா?யார் சொல்வது சரி? எந்த வழி சரி என்பதைத்தான் மனித இனம் தொடர்ச்சியாகக் கதைத்துக் கொண்டிருக்கிறது. எது சரி, எது தவறு என்று கதைப்பதுதான் தொடர்ச்சியான அறிவு விவாதம்.
எனவே தன்னைச் சுற்றி விரிவடைந்திருக்கிற உற்பத்தி, சமூக உறவு பற்றித் தெளிந்த விஞ்ஞான நோக்கு இன்றைய இலக்கியத் தலைமுறைக்கு நிர்பந்தமாய் இருக்கிறது.
பண்டைய தமிழகத்தில் வாழ்ந்தவன் கவிஞன். இன்றைக்கு அவன் எழுத்தாளன். கவிஞனுடைய முந்தைய காலச் சமுதாயம் சுருங்கிய எல்லையுடையது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடினாலும் அது சின்ன வட்டம்தான். நில எல்லை, வாழ்வுறவு எல்லை, தொடர்பு எல்லை மிகச் சுருங்கியது.
இன்றைய எழுத்தாளனுக்கோ விரிந்த, எல்லைகளற்ற எண்ணற்ற கருத்துக்களின் பேருலகம் எதிரில் கிடைக்கிறது.
இன்றைய சமுதாயம் பற்றிய அறிதலும், அறிவு வளர்ச்சி விதிகளுமேகூட வேறுபாடானவையாய் இருக்கின்றன. இன்றைய "கவிஞன் தெளிந்த விரிந்த அறிஞனாக, முழு கலாச்சார அரசியல், சமூக அறிவு கொண்டு முக்காலமும் உணர்ந்த ஒரு தீர்க்கதரிசியாக இருந்து, சொற்களின் வாக்கியக் கூட்டமைப்பின் சாத்தியக் கூறுகளை நுண்ணறிந்து கவிதையாக்க வேண்டியவனாகிறான்" (எஸ். ஆல்பர்ட், எழுபதுகளின் கவிதை, பக். 4)
ஆகவே, இன்றைய இலக்கியவாதி சமூக விஞ்ஞானியாக இருக்கவும் கடமைப்பட்டிருக்கிறான். தான் நடமாடும் இலக்கியத் துறையில் எவ்வளவு பெரிய வல்லாளனாக இருந்தாலும் அந்த வல்லபம் சமூக ஞானம் சார்ந்து இருக்க வேண்டும். இல்லையென்றால், சூரிய கிரகணத்தை விஞ்ஞானபூர்வமாக, விஞ்ஞானக் கருவிகளுடன் ஆராய்ந்து, வெற்றிகரமாக முடித்தமைக்காக இனிப்பு வழங்கப்பட்டபோது குளித்து, பூஜை முடித்துவிட்டு எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்ன, இந்திய விஞ்ஞானியின் கதையாகிவிடும்.
ஒரு விஞ்ஞானி, ஒரு மருத்துவர், ஒரு பொறியியலாளர் அவர் சார்ந்த துறையில் விஞ்ஞான ரீதியாகச் செயல்படுகிறார். அதே ஆய்வு நெறியை வாழ்வியலிலும் சமூகவியலிலும் பாய்ச்சுவதில்லை. இங்கேதான் மூட நம்பிக்கைகளில் வாழ்கிற இந்திய மனம் வெளிப்படுகிறது. சமூக நடவடிக்கை, சமூக விசயங்கள் என்று வருகிறபோது, இந்திய மனம், இந்தியச் சிந்தனை, இந்தியப் பாரம்பரியம் என மாறிவிடுகிறது. விஞ்ஞானி என்ற மேம்பட்ட நிலை இற்றுப் போய் இந்திய மனிதன் என்ற சாதாரண நிலைக்கு உடனே வந்துவிடுகிறான்.
"புறவய நிகழ்வுகளால் மனவெழுச்சி கொள்கிற கலைஞன் தன் அனுபவ உலகை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகவே வெளியிடுகிறான். இதில் வெளியீட்டு நேர்மையும் உண்மையும்தான் கலையின் அஸ்திவாரங்கள்" (உதயசங்கர் - மார்க்சிய இலக்கியக் கொள்கை, பக் . 37)
உண்மையைக் கண்டடைதலும் வெளியீட்டு நேர்மையும் முதலில் ஒரு கலைஞனுக்குப் படைப்பாக்கத்திற்கான கருவைத் தேர்வு செய்வதில் தொடங்குகிறது.
கலைஞன், சமூக விஞ்ஞானியாகத் திகழ்வதை இக்காலகட்டம் அவசியமாகக் கோருவது போலவே வாசகனையும் அவ்வாறு சகலதுறைத் தெளிவோடும் செயல்பட மார்க்சியம் கோருகிறது. ஏனெனில் கலைஞன் முதலில் சமூக மனிதனாக இருக்கிறான். அதுபோலவே படிப்பாளியாகவும் இருக்கிறான்.
'படைப்புப் பொருள் என்கிற ரீதியில் வடிவப் பொலிவும் உயிர்த்துடிப்பும் கொண்டு பரிணாம வளர்ச்சி நிலை எய்த முடிகிறது. எனவே பொருளின் இயக்கம் போலவே படைப்பின் இயக்கமும் அது படைக்கப்பட்டதும் தொடங்கிவிடுகிறது. படைப்பின் இயக்கம் கலைஞனிடத்தில் தொடங்கி, படிப்பாளியிடத்தில் முழுமை பெறுகிறது. உயிர்த்துடிப்போடு செயலற்றுக்கிடக்க, படிப்பாளி அதனை மறுபடைப்புச் செய்வதன் மூலம் இயங்குகிறது.' (உதயசங்கர் - மா.இ. கொள்கை)
பல இடங்களில், பல நேரங்களில் கவிஞனை விடக் கூடுதலாக சமூக விஞ்ஞான நோக்கிலும் கலை அனுபவப் பாங்கிலும் வாசகன் இயங்க நிர்பந்திக்கப்படுகிறான். வாசகன் என்ற தன்னளவில் மட்டுமல்ல, கலைஞனைத் தெளிவுபடுத்தி மேல் நடத்திச் செல்லவும் இது அவசியமாகிறது. இங்கே வாசகன் அல்லது படிப்பாளி கூடுதல் கடமையை ஏற்கிறான்.
மார்க்சியம், இலக்கியத்தில் செயல்படுகிற போது, அரசியலை, கட்சியை ஆணையில் வைத்து அல்ல; இலக்கியப் படைப்பாற்றலின் நியதிகளை ஆணையில் வைக்கிறது. எதனையும், எல்லாவற்றையும் விஞ்ஞானப்பூர்வமாக அணுகுவது மார்க்சியம். அதாவது மனித முயற்சியின் அகலிப்பாக மேலூறிப் பொங்கும் ஊற்றாக அது அணுகப்பட வேண்டும்.
அரசியலும் கலையும் குணாம்சங்களில் வேறுபட்ட வெவ்வேறு துறைகள். ஒன்றுக்கொன்று பக்கமும், பரிமாற்றமும் உண்டே தவிர ஒன்றின் விதிகளைக்கொண்டு போய் மற்றொன்றின் மீது கொளுவிட முடியாது. அல்லது இதன் நியதிகளை அதன் மீது பொருத்த முடியாது.
சோவியத் இலக்கியவாதி ரோட்ஸ்கி கூறுவது கவனம் கொள்ளப்பட வேண்டும். "அரசியலும் கலையும் தன்மையில் வேறுபட்ட மனித நடைமுறைகள். அவற்றிற்கு தத்தமக்கே உரித்தான நியதிகளும் அமைப்புக்களும் உண்டு."
மார்க்சியம் என்றாலே அது அரசியல் நடை முறை என்ற அர்த்தம் உட்கொள்ளப்பட்டிருப்பதுதான் அபத்தமாகும். அது ஒரு அரசியல் நடவடிக்கை மட்டுமல்ல. மனித நடைமுறைகள் உள்தாங்கிய ஒரு சொல்லாகும். சமூக இயக்கம், அதற்குள் இயங்குகிற மனித இயக்கம், பல்வேறு நடைமுறைகள் பற்றிய விஞ்ஞானப் போக்குடன் கூடியதொரு சொல்லாடல் அது ... மார்க்சியம் ஒரு வர்க்கப் போராட்டத் தத்துவம் என்கிறார்கள். ஆம், அதுவும்தான். ஆனால் மனிதன் யார் என்ற ஆய்விலிருந்துதான் தொடங்கினார் மார்க்ஸ். மனிதன், சமூக உறவுகளின் சாரம் என்று கண்டடைந்தார்.
சமூக சாரம்
மார்க்சியத்தை மனித உறவுகளின் சாரம் என்று கொள்ளாமல், அரசியல் நடவடிக்கை என்று எல்லைகளை வெட்டிக் குறுக்கி அதற்கும் இலக்கியத்திற்கும் நேரடி ரத்த பந்தம் என்ற தொடர்பில் இலக்கியம் பற்றிய காரசாரமான உரையாடல்கள் ருசியப் புரட்சிக்கால கட்டத்திலேயே நிகழ்ந்திருக்கின்றன. இதில் கார்க்கி, மாயகோவ்ஸ்கி, பிளக்கனோவ், லூனா சார்ஸ்கி, வொரன்ஸ்கி, புகாரின், பொக்டனேவ், ரோட்ஸ்கி எனப் பலரும் இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் சமுதாய மாறுதலுக்கும் உள்ள தொடர்புகளைப் பல்வேறு முனைகளாய்க் கருத்துக்கள் வைத்துள்ளனர். சோசலிச வரலாற்றை வடிவமைப்பதற்கு முன்கையெடுத்த சோவியத் நாட்டின் இலக்கிய வரலாற்றில் இவை நிகழ்ந்துள்ளன.
மார்க்சியம் என்ற ஆய்வு நோக்கை எல்லாத் துறைகளிலும் எல்லா விசயங்களிலும் சப்பழிந்துவிடச் செய்த பணி - விஞ்ஞானமாகப் புரிந்து கொள்ளாத வறட்டு மார்க்சியர்களுக்கு உரியது. நிறுவன மார்க்சியர்களுக்கு உரியது.
மார்க்சியம் போலவே அதிலிருந்து முளைத்த மார்க்சிய இலக்கியமும் விரிந்தது. பரந்தது. இறுக்கமாய் மாரில் கைகளைக் கட்டிக் கொண்டு அது ஒருபோதும் எதையும் எல்லாவற்றையும் மறுத்ததில்லை. மறுப்பைக் கூட - விஞ்ஞான விமர்சனக் கூறுகளுடன் எதிர்வருகிற எல்லாவற்றையும் - நெஞ்சு குளிர வரவேற்கச் சொல்கிறது.
மார்க்சியம் விமர்சனத் தத்துவம் மட்டுமே. அது படைப்புத் தத்துவமாய் ஒருக்காலும் இருந்ததில்லை என்கிறார்கள் சிலர். ஒன்றின் விமர்சனம் என்பதே புதிதாய் ஆக்கம் செய்வதற்கானதுதான். புதியன படைக்கப்படுவதற்கான கருத்தலம் இல்லாத அடிவயிறு என மார்க்சியம் பற்றிச் சிலர் சொல்கிற கூற்று அவர்கள் ஆதங்கத்தின் மறுபக்கமே.
ஒன்றைப் பற்றிய விமர்சனமே, ஆக்கத்திற்கான விமர்சனம்தான். விமர்சனம்தான் ஆக்கம் செய்கிறது. எந்தக் கருத்துவகை சார்ந்து இலக்கியவாதி இயங்குகிறான் என்று சொல்வதும் கருத்துவகையில் எது சரி, எது தவறு என்று சொல்வதும் அவன் தனது கருத்துக்களைச் சரிப்படுத்தி செழுமை செய்து கொண்டு வளர்வதற்கும் அதனடிப்படையில் கலைப் படைப்பைச் செம்மையாக உருவாக்கவும் பயன்படுகிற ஒன்றுதான்.
ப.ஜீவானந்தம், தொ.மு.சி.ரகுநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, எஸ். ராமகிருஷ்ணன், நா.வானமாமலை, தி.க.சி, கே. முத்தையா, த.ச.இராசாமணி, கனகசபாபதி, எஸ்.தோதாத்ரி, ஆ.சிவசுப்பிரமணியன், எஸ்.வி.ஆர், கோ.கேசவன், அ.மார்க்ஸ் ஆகியோர் மார்க்சிய அடிப்படையிலான சமூகவியல் விமர்சன முறையைத் தமிழ்ச் சூழலில் ஒழுங்குபடுத்தித் தந்தனர். ஞானி, நுஃமான், க.பஞ்சாங்கம், ராஜ்கௌதமன் என இவர்களும் சமூகவியலின் பல்வேறு கிளைகளையும் விரித்துப் பரப்பி வருகின்றனர்.
இலக்கியத்தை விளங்கிக் கொள்வதில் இலக்கிய உத்தி, உருவம், படிமம் என்று இலக்கியத்திற்குள்ளேயே வலம் வருவதைக் காட்டிலும் ஏனைய அறிவுத்துறைகளான நாட்டுப் புறவியல், சமூகவியல், அரசியல், பொருளாதாரம், உளவியல் போன்றவை இன்றியமையாதவையாகப் பொதுவுடைமைச் சிந்தனையாளரால் எடுத்துக் கூறப்பட்டது. இவ்விதப் பிறதுறை அறிவுத்தேவை இலக்கிய விமர்சனத்துக்கும் ஏற்பட்டது முக்கிய வளர்ச்சியாகக் கொள்ள வேண்டும் என்று கூறுவது கவனம் கொள்ளத்தக்கது (ராஜ்கௌதமன், 'எழுபதுகளில் தமிழ் விமர்சனம்')
காலமும் சமுதாயமும் வளர்ச்சி நிலையில் இருக்கின்றன. அவ்வக்காலச் சமுதாயத்தின்கருப்பைக்குள் முண்டுகிற வளர்ச்சியின் அசைவுகளை, தெளிவாக உணருகிற இலக்கியவாதி, அதன் வெளிப்பாட்டு மொழியையும் கைக்கொள்கிறான். மாறிக்கொண்டே வரும் மக்களின் வாழ்க்கையில் அவர்களின் வெளிப்பாட்டு மொழியும் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. பல்வேறு வாழ்நிலைகளில் மாறுதலுக்குள்ளாகிற மக்கள், அதற்குரிய மொழியுடனேயே உலாவுகிறார்கள். எனவே, மக்களின் மொழியை யார் உள்வாங்கி அதை மேலும் செழுமைப்படுத்திப் புதிய வடிவில் வெளியிடுகிறார்களோ அவர்கள் மேலும் புதிய அர்த்தங்களுடனான புதிய மொழியை உலவ விடுகிறார்கள்.
காலந்தாண்டிய கவிகள்
எந்த இலக்கியக்காரன் காலத்தையும் மொழியையும் சரியாகக் கைப்பிடிக்கிறானோ அவன் காலந்தாண்டியவனாக நிற்கிறான். கடந்தகால மொழி உள்கிரகிக்கப்பட்டு நிகழ்கால மொழி கைக்கொள்ளப்பட்டு எதிர்காலத்தினூடாகப் பிரவேசித்த தமிழ்க் கவிஞர்கள் இந்த நூற்றாண்டில் பாரதியும் பாரதிதாசனும்.
பாரதியையும் தாசனையும் நிகழ்காலம் ஈர்த்துப் பிடித்துத் தாக்கியது. அந்தக் கால எழுச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் முகமாகத்தான் இருவரும் புறப்பட்டனர். நிகழ்கால இயக்கங்கள் அவர்களுடைய உயரத்தைப் பெரிதும் உயர்த்தின. அவர்களும் நிகழ்காலத்தின் மீது எதிர்வினையாற்றியபடி உயர்ந்தார்கள்.
பாரதி, பாரதிதாசன் வந்தடைந்த புதிய உள்ளடக்கத்தைப் புதிய உருவத்தை வைதீக இலக்கியவாதிகள் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கீகரிக்கவில்லை என்பதை இருபதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி நிகழ்வுகள் சொல்லுகின்றன. ஆனால் கவிதை, இலக்கியம் பற்றிய புதிய பார்வைகளைச் சமுதாய நோக்கில் உள்வாங்கிக்கொண்ட மார்க்சியர்கள் இதனை வரவேற்றனர். பாரதியின் கொடியை மேலெடுத்துச் சென்றனர். இப்பணியில் ஜீவாவின் பங்கு, தொ.மு.சியின் பங்கு, இராமகிருஷ்ணனின் பங்கு மிக முக்கியமானது.
பாரதியை விட பாரதிதாசனை ஒரு கை கட்டையாகவே வைத்ததுகூட அல்ல, அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகமே காணாமல் அடிப்பதில் கவனஞ் செலுத்தியது, பிற்காலத்தில் தாமதமாக பாரதியை அங்கீகரித்த ஒரு கூட்டம். அவர்கள் அரசியலிலும் இருந்தார்கள். இலக்கியத்திலும் இருந்தார்கள். பாரதிதாசனை மறைப்பதற்கு, பாரதியை அங்கீகரிப்பதும் அவர்களுக்கு ஒரு தேவையாக இருந்தது. ஆனால், வடிவ வெளிப்பாட்டுப் பாங்குகளில் தாசன் தன்னிகரற்ற கம்பீரங்களை உண்டாக்கினார்.
தமிழ் இனம், நிலம், பண்பாடு, பிரச்சினைகள் தனியானவை. இந்த வித்தியாசந்தான் வாழ்வின் அர்த்தம். இந்த வித்தியாசங்களை வழித்துத் துடைத்தெறிந்துவிட்டு எல்லாவற்றையும் ஒரே மாதிரிப் பொட்டல் பிரதேசமாக மாற்றுகிற பேராபத்து உலகமயமாக்கல் மூலமாகப் பரவிவருகிறது. தமிழன், தமிழ் இன அடையாளம், பிரச்சினைகள் இவைகளைத் தொட்டு மக்களின் உள் நுழைந்து எழுதப்பட்ட பாவேந்தரின் படைப்புக்கள் குறுகிய தேசியவாதமாகப் பார்க்கப்பட்டது. மொழி உணர்வு, இன உணர்வு, மக்கள் சமூகத்தின் மீது பற்று என்பது மார்க்சியத்திற்கு விரோதமானதாக எப்போது என்றைக்கு அர்த்தப்படுத்தப்பட்டது? தேசிய இன உரிமை, தேசிய இன விடுதலை, தேசங்களின் விடுதலை என்பது மார்க்சியத்திற்கும் லெனினியத்திற்கும் என்றைக்கும் விரோதமானதல்ல.
'பாரதிக்குச் சமமாக, சில சமயங்களில் பாரதியையும் விஞ்சி தமிழ்க் கவிதையுலகில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பாரதிதாசன். அதற்கு பாரதிக்குக் கிடைக்காத சமூக வரலாற்றுப் பின்னணியும் இயக்கப் பின்னணியும் கிடைக்கப் பெற்றதால் அவருடைய கவிதையின் தாக்கமும் பரப்பும் விரிந்தும் ஆழமாகவும் இருந்தது.'
'அவருடைய தாக்கம் 'பாரதிதாசன் பரம்பரை' என்று ஒரு கவிஞர் குழாமே உருவாக வழி வகுத்தது ... அவருடைய படைப்புக்கள் தன் அரசியல், பொருளாதார, மொழி, பண்பாட்டு உரிமைகளை - அடையாளங்களை இழந்து கிடந்த ஒரு இனம், தன்னுடைய அடையாளங்களைத் தேடி நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியின் போராட்டத்தின் குரலாக வெளிப்பட்டது. காலனி ஆதிக்கத்தால் ஏற்பட்ட உடைவு முதலாளிய உற்பத்திமுறையின் தோற்றம், அதற்கேற்ற கல்வி முறை, சனநாயக சிந்தனைகளின் பரவல் ஆகியவற்றின் விளைவால் விழிப்புற்ற தமிழ் தேசிய இனத்தின் குரலாக அமைந்தது. அவை சில நேரங்களில் வரலாறு பற்றிய விமர்சனப் பார்வையின்றிப் பழம் பெருமை பேசுவதாகவும் மீட்புவாதக் குரலாகவும் அமைந்தது.' (வசந்தகுமார் - நிழல்வண்ணன், பாரதிதாசன் ஒரு வரலாற்றுத் தேவை, பக். 17, 39)
பாரதி போலவே பாரதிதாசனும் ஒரு வரலாற்றுத் தேவையாக இருந்தார். ஆனால் பாரதிக்கு வழங்கப்பட்ட உயரம், தாசனுக்குத் தரப்படவில்லை. அவ்வாறு பாரதிக்குத் தருவதிலும் தாசனுக்குத் தரப்படாமல் போவதிலும் திட்டமிட்ட ஒரு விருப்பம் தொடர்ந்து பணியாற்றியுள்ளது. தேசிய இன எழுச்சியின் ஒருமுனைக் குரலாக வெளிப்பட்டவை அவர் கவிதைகள். தமிழ்த் தேசிய விடுதலைக்குத் தடையாக நிற்கும் மூட நம்பிக்கை, மதச் சார்பு, பெண் அடிமை, மொழி ஆதிக்கம் எனப் பல பக்கங்களையும் சாடினார். ஆனால் பாரதியின் இந்திய தத்துவ ஞானம், வேதாந்தப் பற்று, சக்தி வழிபாடு, காந்திபீடம், அரவிந்தர் நட்பு, மறைஞானப் போக்கு என்ற பன்முகப்பட்ட தன்மைகள் எல்லாம் கவிதையானது போல் தாசனுக்கு அந்தத் தேவையிருக்கவில்லை. இவைகளையெல்லாம் பாரதியின் போக்குகளில் இருந்து சலித்து எடுத்து, பிறகே தாசன் தனது காலத்தின் முனைப்பை முன்னெடுத்தார்.
"மிகச் சிறந்த புனைவியல் கவிஞரான அவர், தாம் வாழ்ந்தகாலத் தமிழகப் போக்குகளோடு தன்னையும் இணைத்துக் கொண்டார்." (வீ. அரசு, வானம்பாடிகள், பக் - II). அவர் வாழ்ந்த காலத்தின் தமிழகப் போக்குகள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. எனவே தனது சம காலத்தைச் சரியாகக் கைக்கொண்ட கவிஞன், எதிர்காலத்திலும் மேல்நிலை நின்று அர்த்தம் பெறுகிறான். பாரதிதாசன் மரபில் ஐம்பது, அறுபதுகளில் உணர்ச்சி வகைக் கவிதைகள் மேல்நிலை பெற்றன. இக்கவிதைகள் நேரடியாக மக்களிடம் பேசின. கவிஞன் சொல்ல நினைத்ததை சொல்ல முடியாது போ என்று மறைக்கிற ஒரு மொழி இக்கவிதைகளுக்கு இல்லை. கவிஞன் சொல்ல வந்ததை விட்டுவிட்டு வேறு ஏதோ ஒன்றைச் சுட்டுகிற குணம் இக் கவிதைகளுக்கு இல்லை. சொல்ல நினைத்ததற்குமேல் அதிகமாகச் சொல்வதே இந்த உணர்ச்சிக் கவிதைகளின் இயல்பு.
முழுவதும் படிமமாக அமைந்த பாவேந்தரின் 'சுதந்திரம்’ கவிதை சரியான எடுத்துக்காட்டு. இதுவும் உணர்ச்சி வகைக் கவிதைதான். முற்றிலும் படிமமாக அமைந்துவிட்ட உணர்ச்சிக் கவிதை அது.
பாரதியின் மரபிலிருந்து உணர்ச்சிக் கவிதைகளை வரித்துக் கொண்டபோது, இதே காலகட்டத்தில் பாரதியின் வசன கவிதைகளிலிருந்து புதுக்கவிதைகளை வரித்துக் கொண்டனர் ஒரு சாரார். இவர்கள் புதுக்கவிதைக்காரர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
'புதுக்கவிதை முயற்சிக்கு யாப்பு மரபே கண்டிராத வகையில் வால்ட் விட்மன் எழுதிய 'புல்லின் இதழ்கள்' என்ற கவிதைத் தொகுப்புதான் வித்திட்டது. இதைப் படித்தபோது கவிதையின் ஊற்றுக்கண் எனக்குத் தெரிந்தது. பின்னர் பாரதியின் வசன கவிதையைப் படித்தபோது என் கருத்து வலுவடைந்தது. இதன் விளைவாக என் உணர்ச்சிப் போக்கில் கவிதைகளை எழுதி அவ்வப்போது பத்திரிகைகளில் (மணிக்கொடி, கலா மோகினி, கிராம ஊழியன்) வெளியிட்டேன்.' (ந. பிச்சமூர்த்தி முன்னுரை, காட்டு வாத்து)
இவ்வகைத் தொடக்க காலக் கவிஞர்கள், ஆங்கிலம் படித்த, மேல் தட்டு, நடுத்தட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
படித்த நடுத்தர, மேல் வர்க்கப் பகுதியினருக்கே உரிய, "நம்பிக்கையின்மை, நம்பிக்கை வறட்சி, தெளிவின்மை, அந்நியப்படல், போலித் தன்மை, தமிழ் மரபு அறியாமை, பொறுப்புணர்ச்சியின்மை, சமுதாய விரோதம், மட்டுமீறிய தனி மனிதவாதம் முதலியன புதுக்கவிதைக்காரர்களின் சிறப்பியல்புகளாக இருந்தன". (க. கைலாசபதி, தமிழன்பனின்தோணி வருகிறது, முன்னுரை)
உணர்ச்சிவகைக் கவிதைகள் படைத்த புனைவியல் கவிஞர்களும் நடுத்தரவர்க்கப்பகுதி சார்ந்தவர்களே. ஆனால், திட்டவட்டமான சமுதாயப் பார்வை, தெளிவான தொலைநோக்கு இவர்களுக்கு இருந்தன. சமுதாயத்தை, மக்கள் திரளைத் தூக்கி முன்னெடுத்துப் போகும் இலட்சியங்கள் இருந்தன. அதனால் நடுத்தர வர்க்க உணர்வுகள், சிந்தனைப் போக்குகளைத் தாண்டிப் படைக்கவும் நிற்கவும் ஆயினர்.
பாரதிதாசன் மரபு
சுரதா, தமிழ் ஒளி, கம்பதாசன், முடியரசன், கண்ணதாசன் (குறிப்பிட்ட காலம் வரை), கே.சி.எஸ்.அருணாசலம், வெ.நா.திருமூர்த்தி, மீரா, சிற்பி பாலசுப்பிரமணியன், தமிழன்பன், பொன்னி வளவன், முருகு சுந்தரம், இன்குலாப், கை.திருநாவுக்கரசு, அறிவுமதி எனப் பாவேந்தர் மரபு தொடர்ந்தது.
ஆனால், தொடக்க காலப் புதுக்கவிதைக்காரர்கள், "வசன கவிதை எனும் வடிவத்திலேயே நெஞ்சைப் பறிகொடுத்து நின்றனரேயன்றிப் புதிய பொருளிலோ, அன்றித் திட்ட வட்டமான இலக்கியக் கொள்கையிலோ ஈடுபாடு கொண்டிருந்தனர் அல்லர்" (க. கைலாசபதி - முன்னுரை, தோணி வருகிறது)
ஆனால், இதே புதுக்கவிதை வடிவத்தை ஏந்திய வானம்பாடிகள் தமக்கு முந்திய கால கட்ட மரபுக் கவிஞர்களிடமிருந்தும் புதுக்கவிதைக்காரர்களிடமிருந்தும் வேறுபட்டுப் பிறந்து வந்தார்கள். அவர்களது கவிதையின் உள்ளடக்கம், பழைய சமூகத்தின் தலையைப் பூமிக்கடியில் அழுத்தித் தலையெடுக்கவிடாமல் செய்வதாக, புதிய சமுதாயத்திற்கான வரவேற்பாக இருந்தது. வானம்பாடி இயக்கம் என்பது ஒரு குறியீடே. அந்தப் போக்கில் அதற்கு முன்னும் பின்னும் இயங்கிய கவிஞர் கூட்டத்திற்கான சொல் அது.
'ஆழமான உள்ளடக்கச் சிறப்புடன் கவிதை எழுதிய இக்கவிஞர்களை வானம்பாடி இயக்கம் என்பதோடு இணைத்துக் கூறுவதைக் காணமுடிகிறது ... தீவிரமான கவிதை ஆர்வம், இயக்கங்களோடு நெருக்கமான தொடர்பற்ற இடதுசாரிக் கண்ணோட்டம் ஆகியவற்றுடன் இக்கவிஞர்கள் இயங்கினர்.' (வீ. அரசு. வானம்பாடிகள், பக். 15)
பாரதிதாசன் மரபில், தமிழ்த் தேசிய உணர்ச்சி, மொழி ஆதிக்க எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்புக் குரல், சாதி, வர்ணாசிரம, மூட நம்பிக்கைகளை எதிர்த்த கலகப்பாட்டு என லட்சியங்களை முன்வைத்துக் கவிதைகள் படைத்தனர்.
சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும்
சங்கீதப்பறவை நாம்; பெருமை வற்றிப்
போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும்
பொதியம் நாம்; இமயம் நாம்; காலத்தீயில்
வேகாத, பொசுங்காத தத்துவம் நாம்;
வெங்கதிர் நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும்
ஆகாத பழமையினை அகற்றிப் பாயும்
அழியாத காவிரி நாம்; அருவியும் நாம்.
புனைவியல் கவிதையாக வெளிப்பட்ட போதும், கவிஞர் மீராவைப் போன்றே அந்தத் தலைமுறைக் கவிஞர்களின் படைப்புக்கள் எழுச்சியூட்டின.
இத்தகைய அலைவீச்சு தவிர்க்க முடியாதது. ஒருபோதில் கேரளத்தில் பொதுவுடைமை இயக்கச் சித்தாந்தம் அணுக்கதிர்கள் வீசி உச்சத்தில் இருந்தபோது, அந்த இயக்கத்தைத் தொட்டும், தொடாமல் வெளியினின்றும் யதார்த்தவாத, இலட்சியவாத இலக்கியம் பெருக்கெடுத்தது. உள்ளேயோ, வெளியேயோ அந்தக் காலகட்டத்தில் மலையாளப் படைப்பாளிகள் பெரும்பாலானோர் மக்கள் விடுதலையை வேண்டி உருவானார்கள். இயக்கமும் இலக்கியப் போக்குகளும் இணைந்தே சென்றுள்ளன. எழுத்தாளன், சமூக மனிதன் என்ற அடிப்படையில் மாறுகிற சமுதாயத்தைக் காண விரும்புகிறான்.
எழுபதுகளில் வசந்தத்தின் இடிமுழக்கம் என்று அழைக்கப்பட்ட, நக்சல்பாரி எழுச்சி இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியதுபோல இலக்கியத்திலும் புதிய பொறி எழும்பியது. பொதுவுடைமை இயக்கங்களிலும் அப்போது திராவிட இயக்கங்களிலும் பதிந்திருந்த காலடிகள் புது ஆற்றுப் பெருக்கில், காலடி மண் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையக் கழன்றன. அவ்வாறு புதிய தடம்பதித்த படைப்பாளிகள் இன்குலாப், கோ.கேசவன், சூரியதீபன், அ.மார்க்ஸ், ரவிக்குமார் எனப் பலர். பொருளாதார, சமூக இயக்கங்களுக்கும் தேசிய இயக்கங்களுக்கும் இலக்கிய ஆக்கத்திற்குமுள்ள நுண்ணிய உறவு இதன் வழி புலனாகிறது.
சமூகப் பிரச்சினை, அந்தப் பிரச்சினைகளினூடே இயங்கும் மனிதர்கள், மனித உறவுகள், அவலப்பாடுகள், களிப்புக் காட்சிகள் என சமூக வாழ்வுப் பிரச்சினையில் மையம் கொண்ட படைப்புக்கள் ஒருவகை.
வாழ்வுப் பிரச்சினைகளில் ஊடாட்டம் கொள்ளாத மன ஓட்டம், மன அவஸ்தைகள், தனிமனிதச் சிந்தனை என மனவியல் சித்திரங்களாய்க் காட்டுபவை மற்றொரு வகை. (எ.கா. மௌனி, நகுலன் ஆகியோரின் படைப்புக்கள்)
இப்படி இரண்டு தனித்தனித் தடுப்புச் சுவர்களாகத் தமிழ் இலக்கியச் சூழல் பெரும்பான்மையும் இருக்கின்றது. பாகம் பிரிப்பு, தனித்தனிச் சமையல் என்பதுபோல் படைப்பிலக்கியம் பங்காளி மனப்பான்மையாகப் பின்பற்றப்படுகிறது.
சமூகப் பிரச்சினை, வாழ்வுப் பிரச்சினை இவைகளின் மீது உருவாகும் மன ஓட்டம், மன அவலத்தை முழுநிறைவான இணைப்பாக உருவாக்கிய சரத்சந்திரர் கதைகள்போல் தமிழில் அதிகமாகப் பிறப்பெடுக்கவில்லை. அவருடைய பாத்திரங்கள் வாழ்வு நெருக்கடியால் அல்லோகல்லோலப்பட்டவர்கள். 'சீரழிவாய் இருக்கே வாழ்க்கை' என்று துடிப்பவர்கள், உறவுப் பிரச்சினையால் எழும் மன ஓட்டங்கள், மன அவஸ்தைகள் என்று சிந்தனைகளில் தொடர்ந்து வாழ்பவர்கள்.
இவ்வாறு தமிழில் படைக்கப்பட்டவையாக தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள், மரப்பசு, அசோகமித்திரனின் தண்ணீர், பூமணியின் பிறகு, பெருமாள்முருகனின் ஏறுவெயில் ஆகியவைகளைக் கொள்ளலாம். “உலகை உய்விக்கும் நோக்கமோ கலையை எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது" என்று சொல்வார் புதுமைப்பித்தன். இன்னும் சற்று எகத்தாளமாக, “என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் செய்து உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்கு சௌகரியம் பண்ணி வைக்கும் இன்சூரன்ஸ் ஏற்பாடும் அல்ல" என்று பேசுவார். அவர் அப்படிப் பேசியபோதும் அவருடைய கதைகள் அப்படியல்ல. எதுக்கும் பிடிகொடுக்காமல் ஈரெட்டாய்ப் பேசுவது, விட்டெறிந்து பேசுவது அந்தக் கலைஞனின் இயல்பு. இதில் காலந்தோறும் மாறும் கலைஞனின் மனநிலையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
'மனிதர்களின் அசலான வாழ்க்கையைக் கண்டு, அதில் காணப்படும் பொதுத் தன்மையைக் கண்டு, அவர்களின் பேச்சு, நடையுடை, பாவனை, சம்பிரதாயம் என்று இழையாட புதுமைப்பித்தன் எழுதினார். கலைஞன் என்ற முறையில் மொத்தமாக மக்களின் குரலாகவே எதிரொலித்தார். அதில் அவர் காலத்தில் அவரே முதலிடம் வகித்தார்'
என்று சா. கந்தசாமி சொல்வது சரியான மதிப்பீடே (எழுபதுகளில் கலை இலக்கியம் பக். 25)
சுந்தர ராமசாமியின் அக்கரைச் சீமையில், பிரசாதம், வாழ்வும் வசந்தமும் கதைத் தொகுப்புகள், ஒரு புளியமரத்தின் கதை என இவையெல்லாம் தமிழ் இலக்கியச் சாதனைகளின் வரிசையில் நிற்கும்.
ஜெயகாந்தன் ஏற்கனவே நிலவிய மதிப்பீடுகளுக்கு எதிர்ப்புக் குரலாக இருந்தார். அவருக்குக் கிடைத்த மார்க்சிய இயக்கப் பரிச்சயமும் வாழ்வு யதார்த்தமும் இந்தக் குரலை ஒலிக்கச் செய்தன. அவருடைய குரல் எப்போது மெல்ல மெல்ல ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த குரல்களோடு இணைய ஆரம்பித்ததோ அப்போதிருந்து அவருடைய படைப்புக்கள் சாம்பிப் போக ஆரம்பித்தன. அவரைப் பார்வை மாற்றி, பாதை மாற்றி நீர்த்துப் போகச் செய்ததே ஆனந்தவிகடன் போன்ற பெரிய நிறுவனங்கள் தான்.
ஒரு படைப்பாளி மார்க்சியரா அல்லவா என்பதல்ல பிரச்சினை. படைப்பாளிகள் எல்லாம் மார்க்சியம் கற்றறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்றைக்கு உலவுகிற பல படைப்பாளிகள் அத்த கையவர்களும் அல்லர். ஆனால் இன்றைய உலகத்தின் அணுக்கதிர் வீச்சு அவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் அதிர்வை உண்டாக்குகிறது. மார்க்சிய அலை வெளிப்பரப்பு முழுவதையும் தாக்கியபோது அவர்களையறியாமலேயே சுய பிரக்ஞையையும் தாண்டி அவர்களுக்குள் கசிந்திருக்கிறது. இந்த சுய கசிவுகள் படைப்புக்களாக வெளிப்படுகிற போது, முற்போக்கான திசையில் வெளிப்படுகின்றன.
ஒரு படைப்பாளி ஒட்டுமொத்தமாக யதார்த்தத்தை வெளிச்சப்படுத்தாவிட்டாலும் அவருடைய ஒரு படைப்பு, ஏதோ ஒரு கீற்று அவ்வாறு வெளிப்பட்டிருக்கிற தருணம் உண்டு. அவர்கள் அந்தவொரு பொருளைச் சரியாகக் கைப்பிடித்துத் தூக்கி நிறுத்திய தருணம் அது. கழுத்தில் வெண்கல மணிகட்டி காட்டில் மேயும் மாடு எந்த இடத்தில் அலைகிறதென்று மணிச்சத்தம் காட்டிவிடுவதுபோல், ஏதாவது ஒரு படைப்பில் ஏதோ ஒரு வடிவில் அந்த அசைவுச் சத்தம் கேட்கும். அது பிரபஞ்சனின் 'பலி’ கதையாக இருக்கலாம். கந்தர்வனின் 'மங்கலநாதர்' கதையாக இருக்கலாம். வீர. வேலுச்சாமியின் ‘ஒரு பைலின் முடிவு' ஆக இருக்கலாம். சோ.தர்மனின் 'நசுக்கம்' ஆக இருக்கலாம். மேலாண்மை பொன்னுச்சாமியின் 'அரும்பு' ஆக இருக்கலாம். பூமணியின் 'பிறகு'ம் பிறகுக்கு முன்னும் பின்னுமாக இருக்கலாம்.
அம்பையின் 'சமையலறையின் மூலை'யாக இருக்கலாம். மாலனின் ‘23 வயது இளைஞ'ராக அல்லது 'ஆயுதம் செய்வோ' மாக இருக்கலாம். ஜெயந்தனின் 'தீண்டாமை'யாக இருக்கலாம். தர்மனின் 'சோகவன' மாக இருக்கலாம்.
புதுமைப்பித்தனின் 'வழி' கதையின் விதவை அலமு, கொத்துச்சாவியில் இருந்த முள்வாங்கி முனை மார்பில் நுழைய, "ரத்தம் வருகிறதேடி." என்று கதறுகிறார் தகப்பனார். "இதை பிரமனின் முகத்தில் பூசிடுங்கோ" என்று தலை சரிகிறாள்.
கு.அழகிரிசாமியின் பூசாரி மனைவி உடுத்தச் சேலையில்லாமல் அம்மன் சேலையைத் துணிந்து எடுத்துக் கட்டிக் கொள்கிறாள்.
எதிர்வீட்டு விபச்சாரியின் (இன்றைக்கு பாலியல் தொழிலாளர்) பூ வாடவில்லையே என வருத்தப்படுகிறாள் வாடிக்கையைப் பிடித்துவிட்ட இன்னொரு விபச்சாரியான ஜெயகாந்தனின் பாத்திரம். குற்றச்சாட்டு நகலை வாங்கிக் கொண்டபின், கோர்ட் என்பது, சிறுகச் சிறுகலான சித்திரவதைகள், ரத்தம் தெரியாத வெட்டுக்காயங்கள், ஆற்றுப்படுத்த முடியாத மனவலி என்று தெரிய வந்த சு.சமுத்திரத்தின் 'இருசப்பன்.'
பால் கொடுத்துக்கொண்டிருக்கும் ஆத்தாளை வெறித்துப் பார்த்த கணக்குப்பிள்ளையை, 'ச்சீ, மானங்கெட்ட பயலே' எனக் கறுவுகிற தமிழ்ச் செல்வனின் 'சுப்புத்தாய்.'
எட்டாம் வகுப்புவரை படித்த கிளாஸ் பஸ்ட் சீதை, தீப்பெட்டி ஆபீஸுக்குப் போய் கம்பெனி முதலாளி அவளைக் கபளீகரம் செய்ய நினைக்கிறதை மீறி மனதுக்குப் பிடித்தவனோடு ஓடிவிடுகிற தனுஷ்கோடி ராமசாமியின் 'சீதை.'
அண்ணன் தம்பி இருவரும் முறையே பாட்டியையும் அம்மாவையும் பாகவஸ்தீ (பாகப்பிரிவினை) செய்து கொள்கிறார்கள். பாட்டி சீக்கிரம் இறந்துவிடுகிறாள். அம்மாவை வைத்து நான் மட்டும் எப்படி கஞ்சி ஊத்துவது என்று பஞ்சாயத்துக்குப் போகிறான் கி.ரா.வின் 'உண்மை’ கதையில் தம்பியாகப்பட்டவன்.
மனிதநேயம் நுணுக்கமான சல்லி வேர்கள் கொண்டது. ஒரு சமுதாயத்தின் பழைய மதிப்பீடுகளிலிருந்து அளவிடப்படுகிற மனிதநேயம் வளர்ச்சிப் போக்கிலிருக்கும் சமுதாயத்துக்கு ஒத்துவராது. மக்கள் தொகுதியின் ஒரு குழுவுக்குப் பொருந்தும் மனிதநேயம் இன்னொரு குழுவுக்குப் பொருந்தாது. ஆளும்வர்க்கத்திற்கான மனிதநேயம் என்பது வேறு; பெரும்பான்மை மக்களுக்கான மனிதநேயம் வேறு. அர்த்தத்தால், தன்மையால், நலன்களால் அவை வேறுபடுகின்றன. (எ.கா.) சிங்களப் பேரினம், பேரினவாத ஆட்சி, பேரினவாத பௌத்தம் ஆகியவற்றுக்கு எது மனிதநேயமோ எது நீதியாக இருக்கிறதோ எது அறநெறியாக உயர்த்திப் பிடிக்கப்படுகிறதோ அவையெல்லாம் ஒடுக்கப்பட்ட, போரிடுகிற தமிழினத்துக்கு அறம் அல்லாதவை, மனிதம் அல்லாதவை.
அறம், நீதி, மனிதநேயம் என்பவை குறிப்பான, நிலவுகிற புறநிலைகள் சார்ந்தவை. எல்லாமே மனிதனை மையமாகக் கொண்டவை என்றாலும் எந்த மனிதனை, எந்த இனக் குழு மனிதனை, எந்த வர்க்க மனிதனை என்ற பேதங்களுடன் இணைந்துள்ளது.
எனவே, புரட்சிகர மனிதநேயம் என்ற சொல் இங்கு அர்த்தம் உள்ளது. மனிதநேயம் என்பது எவருடைய இழுப்புக்கும் கைவளைவில் ஒடுங்குகிற, காலடிக்குட்பட்டுவிட்ட சொல். குறிப்பிட்ட சூழலில் ஒரு சொல், ஆளும் வர்க்கத்தால் ஆளும் வர்க்கத்துக்காக ஆளும் வர்க்கமே பயன்படுத்துகிறபோது அர்த்தம் நைந்து போகுமென்றால் பதிலியாகப் புதிய சொல்லாக்கத்திற்குப் போவது தப்பில்லை.
மக்கள் தொகுதியில் பல்வேறு வர்க்கப் பிரிவுகள் உள்ளன. உழைக்கும் மக்கள் அனைவரும் ஒரே சீரான உழைப்புத் தரமும், வாழ்க்கை நிலையும் உடையவர் அல்லர். உழைப்பு வகை சார்ந்து இயங்கும் மக்கட் பிரிவுகளில் கைத்தறி நெசவாளர் வாழ்க்கையை நிதர்சனமாகக் கண்டறிந்து, நிதர்சனமாக எழுதப்பட்ட படைப்பு தொ.மு.சி.ரகுநாதனின் 'பஞ்சும் பசியும்'. ஜவுளித் தொழில் என்று சொல்லப்பட்ட பஞ்சாலைகளின் பெருவீத உற்பத்தியால் அல்லோலகல்லோலப்பட்ட கைத்தறி நெசவாளர்களின் அல்லல்களை, போராட்ட கதியைப் பேசும் கெதியான நாவல் இது.
தலித் மக்களின் சமூக அவலத்தை அலசி விடுதலையை முன்வைக்கிறது டி. செல்வராஜின் 'மலரும் சருகும்'. தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளின் நிலையை நிதர்சனப்படுத்துகிறது 'தேநீர்' நாவல்.
நேரடியாக விவசாயக் கூலிகளின் அடிமை நிலையையும் போராட்டங்களையும் சித்திரிப்பது கு.சின்னப்பபாரதியின் 'தாகம்'. தஞ்சை விவசாயக் கூலிகளை ஆளுக்கு அரைப்படி உயர்த்திக் கொடுக்க வேண்டுமென்று கேட்ட கூலிகளை மலப்புழுக்களைவிட கேவலமாகக் கருதி தலித் மக்கள் 48 பேரைக் குடிசைகளோடு கொளுத்திப் பொசுக்கிய வெண்மணி வர்க்கப் போராட்டமாக வெளிப்படுத்தியது சோலை சுந்தரபெருமாளின் 'செந்நெல்'.
நால்வர்ணாசிரமக் கோட்பாட்டில் பிராமணனின் காலடியில் பிறந்த சூத்திரர்கள், அந்த சூத்திரர்களாலும் காலடிக்கும் காலடியாய் கீழே நசுக்கப்பட்ட தலித்துக்களைப் பற்றியது கே.டானியலின் 'பஞ்சமர்' நாவல். டேனியலின் எல்லாப் படைப்புக்களும் சாதிப் படிநிலையில், வர்க்கப் படிநிலையில் கீழே மிதிக்கப்பட்ட பஞ்சமர் பற்றியவை.
மக்கள் என்று நாம் கருதுவது சமுதாயத்தின் கீழ்நிலையில் உள்ளவர்களே. ஊருக்கு ஒன்றிரண்டு பேராய்க் காணப்பட்ட நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள் அல்ல. முதலாளியப் பொருள் உற்பத்திப் பெருக்கத்தால் ஊருக்கு ஒன்றிரண்டு எண்ணிக்கையில் வளமான உச்சிக்கு உயர்ந்து கணிசமாகப் பெருகிய வசதி படைத்தவர்கள் அல்லர். இவர்களது உயர்வால் எங்கெங்கு காணினும் பஞ்சைகளாய், கதியற்ற வர்களாய்ப் பெருக்கெடுத்து நிற்கிறது மக்கள் பகுதி. விவசாயிகள் எழுச்சியை மையமாக்கிய 'மண்ணும் மக்களும்' மத்தியதர வர்க்கத்தினரின் வளர்ச்சியையும் வாழ்வையும் யதார்த்தமாகக் காட்டிய 'தரையும் தாரகையும்' துப்புரவுத் தொழிலாளிகளின் வாழ்க்கையைச் சொல்லும் 'போர்க்கோலம்' என்று எழுதிய செ.கணேசலிங்கனின் எழுத்துமுனை ஒருபோதும் சமரசம் கொண்டதில்லை.
உப்பளத் தொழிலாளிகளின் சவர் அடித்துப் போன வாழ்க்கையைப் பேசுகிறது ஸ்ரீதர கணேசனின் 'உப்பு' நாவல்.
சிங்களப் பேரினம், பேரின அரசு, பேரினப் பௌத்தம், தமிழர்கள்மேல் துள்ளத் துடிக்கப் பாய்ச்சுகிற அடக்குமுறைகளை அதிகம் பேசிய செ.யோகநாதனின் படைப்புக்கள், சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், கி.பி.அரவிந்தன் கவிதைகள்.
புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வை அவ்வவ்வாறே பதிவு செய்கிற 'பனையும் பனியும்' தொகுப்பு இவையெல்லாம் மார்க்சிய நோக்கில் பேசப்பட வேண்டியவை.
தலித் மக்களின் வாழ்வைக் கலையம்சத்தோடு பதிவு செய்கின்ற சிவகாமியின் 'பழையன கழிதலும்', கதைசொல்லியாய்க் கதை சொல்லும் பாமாவின் 'கருக்கு'.
சமூக அக்கறையைப் பதிவு செய்கிற புதிய தலைமுறையாய் அபிமானி, களந்தை பீர்முகமது, கண்மணி குணசேகரன், விழி.பா.இதயவேந்தன், காமுத்துரை, ப.ஜீவகாருண்யன்.
இவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான எழுத்துருவைப் பதிப்பவர்கள் அல்லர். இவர்கள் எப்படியோ அப்படியே எழுத்துக்களும் வகைவகையானவை. ஒவ்வொருவருக்கும் ஒரு களம். ஒரு தொழில் நுணுக்கமுறை. எல்லாவற்றுக்கும் ஊடுபாவாய் ஓடுவது சமூகச் சிக்கல்களை அலசும் போக்கு.
கரிசல் காட்டு மக்களின் கூலி உயர்வுப் போராட்டத்தை, வாழ்வை, வட்டார மொழியில் பேசிய பொன்னீலனின் 'கரிசல்'. அது போலவே அவருடைய உன்னதமான படைப்புக்களாய் கருதப்படுகின்ற 'கொள்ளைக்காரர்கள்'.
வட்டார வாழ்வு என்று வருகையில் இனம் காட்டிய ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்புக்கள், கு.அழகிரிசாமியின் கதைகள், ஒரு இனம் அல்லது சமுதாயத்தின் வாழ்க்கையைப் பேசுகிற தோப்பில் முஹம்மது மீரானின் படைப்புக்கள், பட்டு நெசவுக்காரர்கள் என்றழைக்கப்படும் சௌராஷ்டிரா இனத்தின் தொழிலையும் வாழ்வையும் எடுத்துப் பேசுகிற எம். வெங்கட்ராமின் 'வேள்வித் தீ', தங்கர் பச்சானின் 'ஒன்பது ரூபாய் நோட்டு', வட்டார மக்களைச் சித்திரிக்கிற நாஞ்சில் நாடன், நீல பத்மனாபன், 'புத்தம் வீடு' தந்த ஹெப்சிபா ஜேசுதாசன் - இவர்கள் பழைய மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர். கேள்வி எழுப்புகையில் தீர்மானமான, திட்டவட்டமான புதிய மதிப்பீடுகளை முன் வைக்க வேண்டுமென்பதில்லை. படைப்புக்குள் அவ்வாறு வைக்கவும் முடியாது. ஆனால், பழையவைகளை உடைத்துத் துண்டு துண்டாக்கிச் சிதறடிக்கிற கோபம், புதியவை உருவாக்கப்பட வேண்டும் என்று கோடிட்டுக் காட்டும்.
மனித உறவுகளில் அற்புதங்களை மட்டுமே சித்திரிக்கிற வண்ணதாசன், சமூக அநீதிகளைப் பாத்திரங்களின் உள்ளியல்பாகக் கோடு சுட்டிக்காட்டி எழுதிய ஜெயந்தன் - சமூகக் கோபம் குறைந்து தர்க்கம் அதிகமான அவரது கதைகள் பிற்காலத்தியவை - தனக்கென ஒரு அலசல் பார்வையுடன் அதே நேரத்தில் முதலாளித்துவ உறவுகளின் விஷக்கடியை முறிக்கிற மருந்தைக் கொண்டு சென்று கொண்டேயிருப்பவர். எந்த ஒரு கதையிலும் உரையாடலிலும் இந்த முறிவு மருந்தை அவர் கை நழுவவிட்டதாக இல்லை. கந்தர்வன் - எண்ணிச் சுட்ட பணியாரம் போல எண்ணி எண்ணிச் செய்பவர். அமர்ந்த நடை, அதிகமாக உரத்த உச்சரிப்பு இல்லாது துடுப்பு போடும் லாவகம். படகு தானாக நீரைக் கிழித்து, நீந்திக்கொண்டு போவதுபோல் போகிறது. அப்படியான தன் போக்கான நடை பல நேரங்களில் செல்லம் கொண்டு சிணுங்கும்.
சில குறிப்பிட்ட கதைகள் யதார்த்தம் என்ற லேபிளில் பொய் யதார்த்தமாக வெளிப்படுவதுண்டு. நிதர்சனம் என்று சொல்லிக் கொண்டு சரியான கண்ணியைப் பிடிக்க முடியாமல் இந்த எழுத்தாளர்கள் தவற விடுகிறார்கள். கலை அக்கறைக் குறைவு காரணமாகத் தங்கள் கோட்பாடுகளுக்கு ஏற்ப அதை வெளிப்படுத்தும் விதமாகக் கற்பனையான நிகழ்வுகளை, கற்பனை மனிதர்களை, கற்பனை உலகத்தைப் படைத்துவிடுவதுண்டு. இது பெரும்பாலான எதிர் மார்க்சியர்களிடம் ஏளனச் சிரிப்பை உருவாக்கிவிடுவதுண்டு. எந்த ஒரு தத்துவப் போக்கிலும் எந்த ஒரு இயக்கத்திலும் முழுமை பெறாத சிலர் உண்டுதானே.
சமுதாயம் வளரவளரக் கருத்துக்களும் கருத்து வகைகளும் வளர்கின்றன பெருகுகின்றன. அவைகளில் சில ஒன்றாகத் திரட்டிக் குவித்து இஸம்களாக அறிமுகமாகின்றன. கருத்துக்களை அடையாளம் காணுவதில் இன்றைய காலகட்டத்தில் சிரமம் இருக்கிறது. கருத்து வகைகள் பலவாக வளருகிறபோது படைப்பாளி எந்தக் கருத்து வகை சார்ந்து நிற்பது என்ற தேடல்தான் முக்கியம்.
- பா.செயப்பிரகாசம், தமிழ் இனி 2000



கருத்துகள் / Comments