வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்

பகிர் / Share:

(இந்தியா பெரிய தேசம். பல அரசுகள். நிறையக் கலாசாரங்கள் இந்த உப கண்டத்தில். சில கலாசாரங்கள் விரும்பத்தக்கன, வேறு சில வெறுக்கத்தக்கன. காளை விள...
(இந்தியா பெரிய தேசம். பல அரசுகள். நிறையக் கலாசாரங்கள் இந்த உப கண்டத்தில். சில கலாசாரங்கள் விரும்பத்தக்கன, வேறு சில வெறுக்கத்தக்கன. காளை விளையாட்டைத் தமிழ் நாட்டில் தடுத்த நீதிமன்றம், ஏன் இங்கு சாதி வெறி விளையாட்டுகளைத் தடுக்கவில்லை? ஜல்லிக்கட்டு விவகாரம் இளம் சந்ததியைக் கொதிக்கச் செய்து மெரீனாவுக்கும் அழைத்துள்ளது. இந்த விவகாரம் இப்போது தீர்வைத் தேடி. தமிழின் சிறப்பான எழுத்தாளரும், இந்தி மொழித் திணிப்பினது எதிர்ப்பின் தலமைப் போராளியாகவுமிருந்த பா.செயப்பிரகாசம் இந்த விவகாரம் மீது “காக்கைச் சிறகினிலே" எனும் காத்திரமான இதழில் மாசி மாதம் எழுதிய கட்டுரை நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.)


போராட்டம் ’ஜல்லிக்கட்டில்‘ தொடங்கியது. மாடுபிடி விளையாட்டில் தொடங்கினாலும், அது வாடிவாசலிலிருந்து வெளியேறி ‘நெட்டோட்டமாய்’ ஓடிக்கொண்டிருக்கிறது. வாடிவாசல் திடலுக்குள் அதன் எல்லைகள் இல்லை: பண்பாட்டு மீட்பு, பன்னாட்டு நிறுவன எதிர்ப்பு, வாழ்வியல் மீட்பு போன்ற பல பரிமாணங்களுடையதாய் போராட்ட எல்லைகள் விரிவுபட்டுள்ளன. இன்றைய அரசியல் தலைமைகள் இதுகாறும் வரை மக்கள் மீதும் இளையோர் மீதும் குவித்த தமிழ்ச் சமுதாயத்தின் முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் போராட்ட நிகழ்வுகளுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. கர்நாடகத்தின் காவிரி நதிநீர் மறுப்பு, மாற்றி மாற்றி ஆட்சிக்கு வந்த மத்திய அரசுகளின் தமிழக உரிமைகளை மதிக்காத இறுமாப்பு, பாலாற்றை மறித்து வட மாவட்டங்களை வறட்சி நிலமாக ஆக்கும் ஆந்திரம் , முல்லைப்பெரியாறில் மீண்டும் ஒரு அணைகட்டும் கேரளத்தின் தாக்குதல் - தமிழக விவசாயிகளை மரணக்குழியில் தள்ளிய துன்பியல் – போன்ற வேதனை நீக்கப் போராட்டத்தினூடாக, இன்னொரு வித்தியாசமான வாசகப் பதாகை பளிச்சிடுகிறது ”எங்களுக்கு பீட்டாவும் வேண்டாம்; பீட்ஸாவும் வேண்டாம்”. இது நமக்கான பண்பாட்டை – உணவு முதல் உச்சந்தலை மூளையில் உதிக்கும் சிந்தனைவரை அடகுவைக்கபட்டுள்ளதை மீட்கும் போராட்ட வாசகம்.

ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை, இலங்கைக்கு உடந்தையாய் இணைப்பயணம் போன இந்தியக் குரூரம் - இவையத்தனையையும் உள்ளடக்கியதாக இளைஞர்கள் ஒரு போராட்டத்தை 2013-ல் நடத்தினார்கள். லயோலாக் கல்லூரி மாணவர்கள் சாகும்வரை பட்டினிப் போராட்டம் தொடங்கி ஆரம்பித்தார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் இன்னொரு நாட்டின் பிரச்சனையைக் கையிலெடுத்திருக்கிறார்களே சரியா என்ற கேள்வி எழுந்த போது, இனப் படுகொலை இன்னொரு நாட்டின் பிரைச்சினை அல்ல: எம்மினத்தின் பிரச்சினை எனத் தீர்க்கமான பதிலைத் தந்தார்கள். இன்று களம் மாறியுள்ளது. இது சென்னை லயோலவில் பிறந்து தமிழகம் முழுமைக்கும் பயணித்திடவில்லை; அலங்காநல்லூரில் பிறந்து தமிழகம் முழுமையும் ஒரு ஊர், வட்டாரம், நகரம் பாக்கி வைக்காமல் பரவியுள்ளது.

ஜல்லிக்கட்டு என்ற பாரம்பரிய ஏறுதழுவுதல் விளையாட்டுக்குத் தடைவிதிப்பதன் மூலம் தமிழர் கலாச்சாரத்தை அழிப்பதற்கான முயற்சிகள் நடைபெறத்தொடங்கியுள்ளன. தமிழ்ப் பாரம்பரியம் என்னும் அவ்விடத்தில் இந்தியக் கலாச்சாரத்தையும் உலகக் கலச்சாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளிறங்கச் செய்தல் என்ற உண்மையை வெட்டவெளியில் அவிழ்த்துவிட்டுள்ளார்கள் இளைஞர்கள்.

இது 1965 மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத் தொடர்ச்சி: ஒட்டு மொத்த இந்தியாவை உலுக்கிய 1965 இன்று 50 ஆண்டைக் கடந்து முன்னிற்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகள் அதிர்ச்சியுடன் தமிழ்நாட்டை ஏறிட்டுப் பார்க்க வைத்த ஆண்டு 1965. அதே வியப்புடன் ”என்ன நடக்கிறது இங்கே” என தமிழகத்தின் மேல் இந்தியாவின் பிற பகுதிகள் - இளையோர் போர்க்குணம் பற்றி அதிசயிக்க வைத்த ஆண்டு 2017. முன்னர் மொழி வழி தேசியத்துக்கான போராட்டம் ஒன்று உள்ளது என்பதை வடமாநிலங்களுக்கு உணர்த்திய 1965 போல், பண்பாட்டு அடிப்படையிலான தேசிய இன எழுச்சிப் போராட்டமும் ஒன்றுள்ளது என்பதை வடமாநிலங்களின் இந்தியாவுக்கு உணர்த்தியுள்ளது.

1965 காலத்தில் வரலாறு எங்களை இயக்கியது. போராட்டத் தொடர்ச்சியில் நாங்கள் வரலாற்றை இயக்குபவர்களாக ஆகியிருந்தோம். அன்று நாங்கள் 25 வயதில் நின்றோம்; 50 ஆண்டுகளின் பின் 75-ல் நிற்கிறோம். இப்போது நடை பெறுகிற இளையோர் எழுச்சியில் பங்கேற்கும் வேகமிருந்தும் முதுமை இயலாது ஆக்குகிற வேளையில் - தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள் போராட்டதின் மையத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. 1965-ல் தை, மாசி, என்ற இளவேனில் மாதங்கள் இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் கரைந்து போயின. இருமாதங்கள் மாணவர்கள் கல்வி வளாகங்களுக்கு வெளியே நின்றார்கள். இந்தியெதிர்ப்பு தன்னெழுச்சியாக நடந்ததுபோல் தெரிந்தாலும் அதற்குள் திட்டமிடல் இருந்தது. எனது சக மாணவர்களான மதுரைத் தியாகராசர் கல்லூரி நா.காமராசன், கா.காளிமுத்து, இந்தி ஆட்சி மொழி என அறிவிக்கும் அரசியல் சட்டப்பிரிவு நகலைக் கொழுத்தினார்கள். போராட்டம் தமிழகத்தை உலுக்கும் வகையில் பரவ வேண்டும் என இச்செயல் திட்டமிடப்பட்டது. அவர்களது கைதுக்குப் பின் உடனிருந்த நாங்கள் மதுரையின் நான்கு மாசி வீதிகளிலும் பேரணியாகச் சென்று திலகர் திடலை அடைந்து கூட்டம் நடத்த முடிவெடுத்திருந்தோம். வடக்கு மாசி வீதியில் மாணவர் பேரணி சென்றவேளை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ்காரர்கள் மாணவர்களைத் தாக்கினர். அச்செய்தி தமிழமெங்கும் பரவி சென்னைத் திருவல்லிக்கேணியிலிருந்த வெங்கடேஸ்வரா விடுதி மாணவர்கள் மீது தடியடி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு, மாணவர் ராசேந்திரன் பலி என அடுத்தடுத்துத் தொடர்ந்தன.

சில காலங்களில் சில பிரச்சனைகள் தன்னெழுச்சியாக மேலெழும். இங்கு தான் வரலாறு நம்மை இயக்குகிறது. அதனை ஆய்வு பூர்வமாக உணர்ந்து முன்னெடுக்கும் செயல்பாட்டுக் கூர்மையினைப் பெற்றுவிட்டால், அந்தப் புள்ளியில் நாம் வரலாற்றை இயக்குபவர்களாகி விடுகிறோம்.சமுதாயப் புரட்சியோ, அல்லது ஒரு எழுச்சியோ நாள் குறித்து, நேரம் குறித்து உருவாவதில்லை. தானாய் உண்டாகும் அவ்வெழுச்சியை வழி நடத்தத் தலைமையும், இயக்க அமைப்பும் முக்கியமானது. 1965 போராட்டத் தன்னெழுச்சியினூடாக தலைமையும் மாணவர் அமைப்பும் உருக்கொண்டன. 1965 சனவரி 25-ல் இந்தியை எதிர்த்து மாணவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பேரணி செல்லவேண்டுமென மாணவர் தலைமை வழிகாட்டியது. அதன்படி கருப்புப் பட்டை அணிந்து தமிழகமெங்கும் பேரணி, வகுப்புப் புறக்கணிப்பு, அஞ்சலக மறியல், ரயில் மறியல் எனக் கட்டங் கட்டமாகத் திட்டமிட்டு மாணவத் தலைமை அறிவிக்க, தமிழகத்தின் மாணவர்கள் செயல் வடிவாக்கினார்கள்.

கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கியமான விசயம் - பொழுதுபோக்குக் கலாச்சாரத்திற்கும் போக்கிரித் தனத்திற்கும் ஆளாகாமல் தன் பிள்ளை நேர்மை கொண்ட நெஞ்சினனாய் நீதிக்குப் போராடுகிறான் என்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளின் வசமாகி விடுகிறார்கள். 1965-லிலும், 2014-லிலும் நடந்த மாணவர் போராட்டம், உண்ணாநோன்பு ஆகிய நிகழ்வுகளில் பெற்றோர் ஆங்காங்கு தம் பிள்ளைகளுக்கு ஆதரவாய் இரவும் பகலும் களத்தில் நின்றார்கள்; இச்சம்பவம் இதுவரை மாணவர் போராட்டம் கண்டிராத வரலாறு. இப்படியான வரலாற்றை மக்கள் - மாணவர் - இளையோர் இணைந்த போராட்டத்தை ஜல்லிகட்டில் தொடங்கிய சமகாலப் போராட்டம் சாட்சியமாக்கியுள்ளது. துபாய், குவைத், பிரான்ஸ், பிரிட்டன், கனடா, செர்மனி என எங்கெங்கு தமிழர்கள் உண்டுமோ, அந்நாடுகளிலெல்லாம் ஆதரவுக் குரல்கள் எழுந்தன. ஈழவிடுதலைப் போராட்டத்துக்குப் பின் உலகத்தமிழினத்தின் கரங்களை ஒன்றிணைத்த மற்றொரு அடுத்த முக்கிய நிகழ்வு இது.

இன்றைய இளையோரிடம் எது இல்லை என உளைச்சல் கொண்டிருந்தோமோ, அந்தப் போர்க்குணம் கைகூடி வந்திருக்கிறது.உலகமயமாக்கல், இந்திய மயமாக்கல்,இரண்டுக்கும் கைகோர்க்கும் உள்ளூர் அரசியல்கட்சிகள் இவையெல்லாமும் இளையோர் ஒவ்வொருவருக்குள்ளும் எதிர்ப்புணர்வைத் தூண்டியிருந்தன. பிரச்சினைகளின் புகைமூட்டத்தில் வெந்து மக்கள் அவிந்து போய்க்கொண்டிருக்கிற வேளையில், அதில் குளிர்காய்வதையே சாதனையாய் ஆக்கிக் கொண்ட அரசியல் கட்சிகள், அரசியல் தலைமைகள் மீது கடுமையான ஆங்கரிப்பை வெளிப்படுத்தி, புகைமூட்டத்தை விலக்கி உண்மையை மேலெடுத்து வந்து மக்களை மீட்கும் முன்னணி ஊழியத்தில் இளையோர்கள் இறங்கினர்கள்.

அவர்கள் யதார்த்த நிலையிலிருந்து உண்மையைத் தரிசனப் படுத்தினார்கள்.ஜல்லிக்கட்டைத் தடைசெய்தலை ஏறுதழுவுதல் என்ற தமிழினத்தின் தொன்மைக் கலாச்சாரம் சிதைக்கப் படுவதாக மட்டுமே நோக்கவில்லை;நாட்டுமாடுகள் அழிப்பின் மூலம் பாரம்பரிய உழவுமுறையை, பயிரிடுதலை அழிப்பது,டிராக்டர் போன்ற நவீன இயந்திரங்களின் அபரிதமான படையெடுப்பு,ஜெர்ஜி மாடுகளின் உள்ளிறக்கம் - என்றிவ்வாறு நீளும் ஏகாதிபத்தியக் கண்ணியைப் பிடிக்கிறார்கள்.நம் விவசாயிகளிடம் அபூர்வமாகவே நாட்டுமாடுகள் தென்படுகின்றன. மாட்டுப் பண்ணை, பால் பண்ணை, தனியொரு மாடு வைத்துப் பால்கறந்து விற்கும் விவசாயியிடமும் ஜெர்ஸி மாடுகள்! இறக்குமதிசெய்யப்பட்ட நவீன மாடுகளுக்கு நவீன மாட்டுத்தீவனம், அபரிதமான பால் உற்பத்திக்கு ஊசிமருந்துகள், இதனால் ஆதாயம் பெறும் முதலாளிய நிறுவனங்கள்: ஜெர்ஸி பசுக்கள் அலைந்துதிரிய ஆஸ்திரேலியா போல் புல்வெளிகள், காடுகள், மேய்ச்சல் நிலங்கள் இங்கு இல்லை. அதுஅது அந்தந்தப் பிரதேசத்துக்கு உரிய பிராணி என்ற உணத்தி இல்லாமல் இறக்குமதி செய்தார்கள்; அலைந்து திரியாமல் கட்டுக்கிடையாய் கிடக்கும் பசுக்களிலிருந்து - மாத்திரை, மருந்து, நவீன தீவனம் கொடுத்து கறக்கப்படும் பால் நீரழிவு நோயைத் தாராளமாய்ப் பகிர்ந்தளிக்கிறது. ஜெர்ஸி மாடுகள் என என ஒத்தையாய்ப் பார்க்காது, பாரம்பரிய வேளாண்மை அழிப்பு, மேலைநாட்டு வேளாண்மையைப் படையெடுப்பு (பசுமைப் புரட்சி), மண்ணின் வேளாண்விதை முறையிலிருந்து அகற்றிடும் மரபணுவிதை, சுற்றுச் சூழல் கேடு என பறிக்கப்பட்ட வாழ்வியலை மீட்டெடுக்கும் ரூபமாக எழுந்தார்கள். அதுதான் மதுரை மாணவி கைகளில் தூக்கிப் பிடித்த பதாகை ”பீட்டாவே, எங்கள் வாழ்வைத் தீர்மானிப்பதற்கு நீ யார்?”

இந்தப் போராட்ட அணிவகுப்பில் துளியும் சாதி தலைகாட்டவில்லை. சாதியற்றவர்களாகத் தான் இணைந்துள்ளனர். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கம் வாழுகிறது என்பது மார்க்சீயம். தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் ஒரு சாதி உயிர்த்துக் கொண்டிருக்கிறது என்பது இன்றைய நிசர்சனம். ஆனால் ஜல்லிக்கட்டில் தலித்துகளின் பங்கேற்பு தவிர்க்க இயலாதது என்பதை நடைமுறை உணர்த்திற்று.

கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொன்று - இளவயதுக் குடத்துக்குள் கொதிநிலையிலிருந்த அனைத்துப் பிரச்சினைகளும் இன்று குடத்தின் ’வாவாய்’ தாண்டிப் பொங்கி வந்துள்ளன.இவ்வளவு காலம் எங்களுக்குள் அடக்கிவைத்திருந்ததே பெரிய காரியம் என்பதுபோல் இளையோர் வெளிப்பட்டுள்ளார்கள். இதை ஒரு தன்னெழுச்சிப் போராட்டமாக, கரைத்துவிட முயற்சிகள் நடைபெறுகின்றன. அவ்வாறு கரைந்து போய்விடவேண்டுமென்பது சிலரது ஆசை. அதை அற்ப ஆசையாக ஆக்கிவிடக்கூடிய திட்டமிட்ட போராட்டக் குணம் காட்சியாகியது. தமிழக அமைச்சர்கள் இருவர் மாணவர், இளையோர்களைச் சந்தித்து “உங்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்: உங்கள் உணர்வுகளைத் தெரிவித்து நடுவணரசுடன் நாங்களும் போராடுவோம்” என்று உறுதியளித்தபோது ”அமைச்சர்களின் வாய்மொழி உறுதி எங்களுக்குப் போதாது. சட்டமன்றத்தைக் கூட்டி அவசரச் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவோம் என எழுத்துப்பூர்வமாக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்” என உறுதியாய் நின்றார்கள்.” நாங்கள் தீர்மானிப்பதல்ல: ஐம்பதாயிரம் பேர் அங்கே இருக்கிறார்கள்” என்று மெரீனா கடற்கரையை கைகாட்டினார்கள். முதலமைச்சர் ஓ.பி.எஸ் கடற்கரைக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்திருக்க வேண்டும். மாணவர், இளையோரிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதி என்றால் அதுதான் பொருள். ஏன் மக்களை நேருக்குநேர் சந்திக்கப் பயப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

நல்லவேளை, 1965-ன் மாணவர்களாகிய எங்களைப்போல் இந்த இளைய தலைமுறை ஏமாறவில்லை. ”இந்தி எதிர்ப்பு எங்களின் கையில் பத்திரமாக இருக்கிறது. போராட்டத்தை கைவிட்டு கலாசாலைகளுக்குத் திரும்புங்கள்” என்று அன்றைய தி.மு.க தலைமை சொன்னதை நம்பி, போராட்டத்தைக் கைவிட்டதால், தமிழகத்துள் இந்தி ஆதிக்கம் எவ்வளவு பத்திரமாக நுழைந்து கொண்டிருக்கிறது என்பதின் சாட்சியாக நாங்கள் ஆகிவிட்டோம்.

1965-ன் எங்களைப் போல் ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரிப்பவர்களாக மாறாமல், இன்றைய இளையோர் தங்களை, தங்கள் போராட்டத்தைத் தற்காத்துக் கொண்டுள்ளார்கள். அரசியல் கட்சிகள் எவரும் தங்கள் போராட்ட வலையத்துக்குள் கால்வைக்கக் கூடாது எனத் தடுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் சில இடங்களில் போராட்ட களத்துக்குச் சென்றவேளையில் திருப்பியனுப்பப் பட்டனர்.ஜல்லிக்கட்டுமல்ல, தமிழகத்தை உயிர்வாதனை செய்யும் எத்தனையோ பிரச்சினைகளின் தாய்ச் சுவரும் ஒட்டுச் சுவரும் இதுபோன்ற அரசியல்கட்சிகள்தாம் என்கிற அறிதல் இளையோரிடம் பதிந்துள்ளது. மக்கள், மாணவர், இளையோர் இணைந்த எழுச்சி மட்டுப்படாது மேலெறுகிறபோது, அது சமுதாயப் புரட்சியாக உருவெடுத்து விடாமல் தண்ணீர் தெளித்து விடுகிற - நடுச்செங்கல் உருவுகிறவர்களாக அரசியல் கட்சிகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டதால், கட்சிகளைப் புறந்தள்ளினார்கள்.

ஒரு தொலைக்காட்சி கடற்கரைச் சாலையில் நடத்திய ’சிறப்பு நேர்படப் பேசு’ நிகழ்வில் கலந்து கொண்ட தி.மு.க, அ.தி,மு.க, பா.ஜ.க அரசியல் கட்சியினர் அவரவர் கட்சி சார்பாகவே உரத்துப் பேசினார்கள். மாணவ, இளையோர்கள் இவர்கள் அனைவரிடமிருந்தும் வேறுபட்டு, மாற்று அரசியலை முன்வைத்துப் பேசினார்கள்.

அந்த நேர்படப் பேசுவில் ”ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடை போட்டது மத்திய அரசல்ல; உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டாமா” என்ற கேள்வி எழுந்தது: ”காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் தான் தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசு அதைக் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டுவிட்டது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடவேண்டும் என இதே உச்சநீதிமன்றம்தான் தீர்ப்புச் சொல்லியது. கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மத்திய அரசும் கர்நாடக அரசும் கட்டுப்படாத போது, தமிழர்கள் மட்டுமே இளச்சவாயர்களா?” என்று நுணுக்கமான தர்க்க அம்சத்தை உச்சநீதிமன்றத்துக்கு உருட்டிவிட்டார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு தீர்வு வரலாம்; கிடைக்காமல் போகலாம். ஆனால் எங்கு, எதனால் தமிழன் பாதிக்கப்பட்டாலும் இணைவோம் என்ற உற்சாகம் கொப்பளித்து எழுந்தது. ”ஜல்லிகட்டுக்கான இளைஞர்களின் புரட்சி” என ஊடகங்கள் சித்தரித்தன. உலகமே பாராட்டும் அறவழிப்போராட்டம் கடைசிநாளில் பிழையாக முடிந்ததாய் இந்த ஊடகங்கள் பின்னர் புலம்பின.

சனவரி 26 இந்தியக் குடியரசு நாள். வழக்கமாய் 20 தேதியிலிருந்து அதற்கான ஒத்திகை மெரினா கடற்கரைச் சாலையில் ஒவ்வொருநாளும் நடக்கும். அந்தப் பொழுதில் வாகனப் போக்குவரத்து வேறுவழிகளில் திருப்பிவிடப்படும். இந்த ஆண்டு குடியரசு நாள் விழா நடைபெறும் முன் இளைஞர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து கடற்கரைச் சாலை மீட்கப்படவேண்டுமென ஆட்சியும் அதிகாரவர்க்கமும் பரபரத்தன. தடியும் தாக்குதலும் கண்ணீர்ப்புகை வீச்சும் ஆரம்பமாகின. திருவல்லிகேணி, ஐஸ் கவுஸ் பகுதி பொதுமக்கள் மீதான கொடூரத் தாக்குதலாக முடிந்தது.

போராட்டம் என்பது ஒரு நெடிய பயணம். அதைக் கொண்டு செலுத்த அர்ப்பணிப்பும் ஆற்றலும் இணைந்து வரவேண்டும். இதுவே தலைமைப் பண்பின் தொடக்கம். இப்பண்புள்ள இளையோர் அனைவரும் போராட்டத்தை முன்னடத்தத் தகுதியானவர்களே.

இந்த இளையோர்கள் நிகழ்கால அரசியலை, அரசியல் தலைமைகளை நிரகரிக்கிறார்கள். தம் கண்முன்பாக பணாக்காரராகாத எந்த அரசியல் வாதியையும் அவர்களால் காண இயலவில்லை. முதலாளிகளாகவும், அடாவடிஆட்களாயும், பன்னாட்டுக் கொள்ளைக்கூட்டத்தின் அங்கமாகவும் மாறிய அவலக் காட்சி ஒருகணம் இளைஞர்களை மூச்சு நின்று போகச் செய்தது. எதிர்காலத்தைக் கட்டியமைக்கும் பொறுப்பை, வரும் தலைமுறையினருக்கான வாழ்வியலை அமைத்துத் தரும் காரியத்தை இன்றைய அரசியல் தலைமைகளிடம் கையளிக்கத் தயாரில்லை. எனவே அதிருப்தியை வெளியிட ஒரு தருணம் வந்தது - அதுதான் ஜல்லிக்கட்டு.

அடுத்த கட்டத்துக்குப் போராட்டத்தை முன்னகர்த்தும் திறனற்றவர்களாக, அதிருப்தியை மட்டும் வெளிப்படுத்திய கோபக்காரர்களாக நின்று போனார்கள். அவர்களுக்கு சமூக இயக்கம் பற்றிய ஞானம், சமூக விஞ்ஞானம் பற்றிய அறிதல் போதுமானதாய் இல்லை. அதேநேரத்தில் இத்தகைய சமூக விஞ்ஞானம் பற்றிய தெளிதல் கொண்டிருந்த போராளி இளையோர்கள் உள்ளே நுழைந்து விடாமல் செய்வதில் ஹிப் ஹாப் தமிழன் ஆதி, நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் முனைப்பாக இருந்தனர். ராகவா லாரன்ஸ் ”இங்கு வேறு சில அமைப்பினர் உள்ளே இருப்பது தெரியவந்தது. அவர்களே சிக்கலுக்கு காரணம். அவர்கள் மாணவர்கள் அல்ல” என்று செய்தியாளர்களுக்குச் சொல்கிறார். அவ்வாறாயின் இவரும் ஹிப் ஹாப் தமிழன் ஆதியும் மாணவர்களா என்ற கேள்வி நியாயபூர்வமானது. அவர்களுடைய தடையையும் மீறிப் பணியாற்றியோரை தேச விரோத சக்திகள், மதவாத சக்திகள் என்று எளிதான, கொச்சை முத்திரையிட அவர்களால் முடிந்தது. அதையே ஊடகங்களும் பிடித்துக் கொண்டன.

ஆனால் துயரக் கேடான சம்பவம் “தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றி விட்டதால் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கிவிட்டது. மாணவர், இளைஞர் போராட்டத்தை அவசரச் சட்டம் நிறைவேற்றி வெற்றியடையச் செய்த முதல்வர் பன்னீர்ச் செல்வத்தையும் தமிழக அரசினையும் பாராட்டுகிறோம்” என்று பாராட்டுத் தெரிவிக்க முந்திய இவர்கள், மாணவர்களும் இளைஞர்களும் மக்களும் காவல்துறையால் கண்மூடித் தனமாக அடித்து நொறுக்கப்பட்டதைக் கண்டிக்க வாய் திறக்கவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதி கண்டிக்கிறார் ”சுய கட்டுப்பாட்டுடன் போராடியவர்கள் மீது தடியடி ஏன்? சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம்: ஆனால் போராடியவர்கள் சட்டத்தை மீறியதாக இல்லை” என்று நீதிபதி கேட்கிற போது, இந்தப் ”போராட்ட புண்ணியவாளர்கள்” கண்டனம் தெரிவிக்கும் திராணியற்ற, அரசின் ஆதரவாளர்களாக மட்டுமே நிற்கிற அவலமே மிஞ்சிற்று.

மீண்டும் தொடக்கப் புள்ளிக்குப் போய் முடிக்கிறேன்: வஞ்சிக்கப் பட்ட தமிழனின் உணர்வுகள் வாடிவாசல் வழி வெளிப்பட்டிருக்கின்றன.

நன்றி: காக்கைச் சிறகினிலே, தாயகம்

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content