தலையங்கமும் மனச்சாட்சியும் - காலச்சுவடு கடிதம்

காலச்சுவடின் வாசகன், படைப்பாளன் எனும் வகையில் இருவேறு குரல்களைக் கேட்டுள்ளேன். பன்முகத் தன்மை அது எனக் குறிப்பிடலாம். பன்முகத் தன்மை என்பது கம்மம் பயிரின் ஒற்றைத் தூரிலிலிருந்து வெடிக்கும் பல கருதுகள் போல் மனச்சாட்சி என்னும் வேரிலிருந்து தோன்றும் குரல்களாக வெளிப்பட வேண்டும்; மனச்சாட்சியின் பரிசீலனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

சுயநலன் கருதி ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்திக்கொள்வதுதான் கச்சாப் பொருள். ஈழப் பிரச்சினையை கச்சாப் பொருளாக மாணவ எழுச்சி கையாண்டதாய் எவரும் சொல்ல முடியாது. மாணவ எழுச்சி என சுருக்கி கூட்டுக்குள் அடைக்க முடியாதவாறு அது சமூக எழுச்சியாக திரட்சி கொண்டுள்ளது.

அறம் சார்ந்த இவ்வெழுச்சியால் அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடுவோம் என்ற அச்சம் உந்த காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலகியது; “நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பத்தெட்டும் நமதே என்ற முழக்கத்தை முன்னிறுத்தும் அ.தி.மு.க”, தனித் தமிழீழ பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும், இனப் படுகொலையாளிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டும் போன்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. . .” என இவ்விரு கட்சிகளின் செயல்கள் தான் கச்சாப்பொருள் உத்திகள். வேறு அரசியல் கட்சிகள் மாணவர் போராட்டத்துக்குத் துணை நின்றனரே அன்றி பயன்படுத்த முடியவில்லை. “மாணவர்களின் தூய்மையான தன்னலமற்ற போராட்டத்தை எந்த அமைப்புகளோ,கட்சிகளோ தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினால் அது சாப்பிட்டுவிட்டு தெருவில் வீசும் எச்சிலையை எடுத்து நக்குவதற்குச் சமம்” என விருத்தாசலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் (8 - 4 - 2013) மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். மாணவர்களை நெருங்கி அண்டவே அரசியல் கட்சிகள் பயந்துள்ளன. அணுசக்திக்கு எதிரான கூடங்குள அணு உலை எதிர்ப்புப் போராளிகள் போல மாணவர்களும் அரசியல் கட்சிகளை தொலைவில் நிறுத்தினர் என்பது இன்றுவரையான நடப்பு.

“ஐ.நா.சபை போன்று உலகளாவிய நிறுவனங்களின் அதிகார வரையறை , செயல்முறை பற்றிய விழிப்புணர்வு இன்றி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வேறு உணர்ச்சித் தளத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று சொல்லும் உங்களின் மனக் கட்டமைப்புக்கு எது ஆதாரம்?

ஐ.நா.வின் வரையறை என்ன? வதைபடும் மக்களை மேலும் மேலும் வதைபடச் செய்ய , வலியோருக்குத் துணை நிற்பது அல்லவா? லிபியாவின் கடாபியும் ராஜபக்சே போலவே சொந்த நாட்டு மக்களைக் கொன்று அசைக்க முடியாதவராய் ஆடியபோது, பன்னாட்டு விமானங்கள் லிபியா மீது பறக்கத் தடை விதித்தது ஐ.நா மன்றம். பாஸ்பரஸ் குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும் வீசி பதைக்கப் பதைக்கப் பொது மக்களைக் கொன்ற இலங்கைமீது அப்படியொரு தடையை விதிக்க ஐ.நா.வின் கைகளைக் கட்டிப் போட்டது யார்? சிரியா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அண்மையில் ஐ.நா தீர்மானம் நிறைவேற்றியது. அதே மாதிரியான பன்னாட்டு விசாரணைக்கு இனப் படுகொலையாளர்களை உட்படுத்த ஐ.நா முயலவில்லையே, என்ன பின்னணி? பின்னிருந்து இயக்குபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆடுவதும் செயல்படுவதும் மட்டுமே ஐ.நா.வின் வரையறை மற்றும் செயல்முறைகள் என்பதை “இது சர்வதேச அய்க்கிய நாடுகள் சபையல்ல; சர்வதேச அயோக்கியர்கள் சபை” என்று குறிப்பிட்டார் அறிஞர் பெர்னார்ட்ஷா. 1950களில் பெர்னார்ட்ஷா கூறியதில் இம்மியளவும் மாறுதலில்லை என்பதை மாணவர்கள் அறிந்திருக்கிறார்கள். போராட்டத்தின் ஊடாக மாணவர்கள் உலக அரசியல் பற்றிய ஞானத்தையும் பெற்றிருக்கிறார்கள் என்பதின் குறியீடு ஐ.நா.வையும் எதிர்த்து முழங்க வைக்கிறது. முன்னணியில் நிற்கும் மாணவப் பிரதிநிதிகளிடம் உரையாடிப் பாருங்கள். பெர்னார்ட்ஷா போலவே ஐ.நா.வை புரிந்து வைத்துள்ளதால் அதற்கேற்ப வினையாற்றுகிறார்கள். வெறும் உணர்ச்சித் தளத்தில் எடுக்கப்படும் போராட்டங்களோ, முழக்கங்களோ அல்ல அவை; இவர்கள் பாடப் புத்தகங்களுக்குள் அடங்காத புதிய தலைமுறை. மாற்றுச் சிந்தனைகளில் பரிணாமம் பெறுவது ஒருவேளை சோ போன்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாம்.

இப்படியொரு அறவழிப்பட்ட மாணவர் கிளர்ச்சியை இதன்முன் வேறெங்கும் கண்டிருக்க முடியாது. தமது போராட்டத்தினூடாக மக்களையும் இணைத்து ஆகப் பெரிய சமூக எழுச்சியாக ஆக்கியிருக்கிறார்கள். . . மத்திய அரசின் மனச்சாட்சியையும் அரசியல் கட்சிகளின் சுயநலப் போக்கையும் குத்திக் கிளறித் தட்டிக் கேட்கும் வகையில் அந்தச் சமூக எழுச்சியை வார்க்க செயல் திட்டங்களை மாணவர்கள் தற்போது அறிவித்திருக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றும் பிழை நேரலாம். புத்தப்பிக்கு மீது தாக்குதல், சுற்றுலாப் பயணியர் மீது தாக்கி திருப்பி அனுப்பியது என நடந்த ஒன்றிரண்டு அதுவும் நீங்கள் குறிப்பிடுவதுபோல் இனவாதிகளின் செயல்கள் இப்போது மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது.

மாணவர் போராட்டத்தின் நோக்கங்கள் எனப் பட்டியலிட்டு, இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்களும் சிவில் சமூகமும் போராடவேண்டும் என்கிறீர்கள். அத்தோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். “மாறாக தமிழ் ஈழத்தை உருவாக்கு போன்ற முழக்கங்கள் ஈழ மக்களுக்கு உடனடி நலன்களைத் தரப் போவதில்லை” என்று அழுத்தம் திருத்தமாக பேசுகிறீர்கள்.

உலக மனித உரிமைகள் அமைப்பின் (Amnesty international) முன்னாள் உயர்மட்டக் குழு இயக்குனர், இல்லினாய்ஸ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் பிரான்சிஸ் பாயில்ஸ் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: “வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது இலங்கைத் தமிழர்களைப் போல் இனப் படுகொலைக்கு ஆளான எந்த ஒரு மக்கள் குழுவும், தங்களுக்கென்று சுதந்திரமான ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான், அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது. எனவே இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள, தனிநாடு ஒன்றை உருவாக்கிக்கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்ட திட்டங்களின் படி இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனிநாடு ஒன்றை உருவாக்கிக்கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்.”

இத்தனை கொடூர இழப்புக்குப் பின்னும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு எனும் கற்பனாவாதத்தில் மிதக்கும் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் - பகை மறப்பு, நல்லிணக்கம் கொள்வீராக என உபதேசிக்கும் பின் நவீனத்துவ மார்க்சியக் கோமாளிகள் தாம் ஒற்றை நாட்டு மாயையிலிருந்து விடுபடவில்லை. நீங்களுமா? அவ்வாறு இருந்தால் நீங்கள் சொல்வதுபோல் ஈழப் படுகொலைகளை தமது இனவெறி அரசியலுக்கு கச்சாப்பொருள் ஆக்கும் மரண வியாபாரிகள் இங்கு அல்ல; ஒன்றுபட்ட இலங்கையில் ‘டண்’ கணக்கில் படுகொலைக் கச்சாப் பொருள் கிடைத்துக் கொண்டிருக்க மரண வியாபாரிகளான இராச பக்சேக்கள் பெருகிக் கொண்டே இருப்பார்கள்.

ஈழத் தமிழர்களின் இன்றைய உடனடித் தேவை எவை? உணவு, உடை, உறைவிடம். இவை மூன்றும் மூலாதாரப் பிரச்சினைகள். ஈழத்தமிழருக்கு இவை மூன்றையும் விட முக்கியமானது அரசியல் சுதந்திரம். அது இருந்தால் இந்த மூன்றையும் அடையும் வழிகள் கணக்கில்லாமல் திறந்து கிடக்கின்றன.

இந்த அரசியல் சுதந்திரம் தனி நாடு அல்லாமல் சாத்தியமாகப் போவதில்லை.

‘இலங்கையின் தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்கு சிங்களரில் சிலர் தயாராக இருப்பது போலவும், இத்தகைய இனங்கடந்த ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது சிறிய போக்குகளாகவே இருப்பினும் தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கக் கூடியவை என்றும் ஒரு மாயைப் பேரருவியைக் கொட்டிக் கொழித்துப் போகிறீர்கள். இடதுசாரித் தோழரான சி. விக்கிரமபாகு போன்றோரின் நடவடிக்கைகூட பவுத்த - சிங்களப் பேரினவாதப் பெரும் புனையில் நீந்திக் கரை சேர முடிந்ததில்லை. ஒன்றல்ல இரண்டல்ல, 2250 ஆண்டு காலமாய் கட்டமைக்கப்பட்டு வரும் சிங்களப் பேரின உளவியல் எனும் ஒற்றைப் பெரு மலையை மயிற்பீலிகள் அசைத்ததில்லை. 2250 ஆண்டுகள் முன்பிருந்த “பவுத்த மகாசங்கம்” என்னும் வேரிலிருந்து தொடங்கிய இன வெறுப்பு தொடர்ச்சியாய் போஷிக்கப்பட்டு வந்ததின் பழைய வரலாற்றுக்குப் போங்கள்; இராசபக்சே எனும் பெரு விஷவிருட்சம் உருவான வரலாறு புரியும்.

இந்தியா ஈழத் தமிழருக்காக எதையும் செய்ததில்லை; இலங்கையின் சிங்களருக்காக எல்லாமும் செய்கிறது என்பதின் சூட்சுமம் அனைவரும் அறிவர். ஆனால் இந்தியா ஈழத் தமிழருக்கு ஆதரவாக நிற்பதாய் புனைவாய்க் காரணம் கூறி இலங்கைத் திரைத் துறையை சேர்ந்த கலைஞர்கள் மிகப் பெரிய எதிர்ப்புப் பேரணியை ஒன்று திரண்டு இம்மாதம் 11ஆம் தேதி நடத்தியுள்ளார்கள். மட்டுமல்ல, கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களையும் இணைத்து நடத்திக் காட்டியுள்ளனர்.

ஈழப் பிரச்சினையில் தமிழகம் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்திட புதிய பார்வையும் செயல்முறையும் அவசியம்தான். ஆனால் அது நீங்கள் சொல்கிற பாதையல்ல; அது ஊர் போய்ச் சேர்க்காது. “யதார்த்தமான அணுகுமுறை, ஜனநாயகபூர்வமான செயல்முறை, சகோதரத்துவ உணர்வு, கடந்த காலத் தோல்விகள் பற்றிய சுயவிமர்சனப் பார்வை" - இவையே இன்றையத் தேவை என எவை எவைகளை இலங்கைக் கொடூரர்களுக்கு உணர்த்த வேண்டுமோ, அவைகளையெல்லாம் மாணவர்களுக்குச் சொல்லி மனசாட்சியை நிலைநிறுத்தியுள்ளீர்கள்.

பா.செயப்பிரகாசம், புதுச்சேரி

நன்றி: காலச்சுவடு - மே 2013

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்