கானல் வரி

எஸ்.ராமகிருஷ்ணன் - விகடன் 24 ஏப்ரல் 2005

ஏப்ரல் மாதத்தின் ஒரு நாள் காலை... நாங்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்து இறங்கியபோது, வெயில் முற்றியிருந்தது.

ஆற்று மணலில் இறங்கி நடந்தபோது, எங்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமே தெரியவில்லை. தொலைவில் பனங்காடைகள் கத்திக்கொண்டு இருந்தன. ஆறு வறண்டு மணலேறிக் கிடந்தது. நானும் என் நண்பர்களும் காதல் திருமணம் ஒன்றை நடத்தி வைப்பதற்காக வந்திருந்தோம்.

திருமணம் செய்துகொள்ளப் போகிறவன் என் கல்லூரி நண்பன். அவனோடு படித்துக்கொண்டு இருந்த ஒரு பெண்ணு டன் இரண்டு வருடங் களாகக் காதல். பெண் வீட்டில் திருமணத்துக்குச் சம்மதிக்கமாட்டார்கள் என்ற நிலையில், எங்காவது கோயிலில் திருமணம் செய்துகொள்வது என்று ஏற்பாடு.

பெண்ணின் வீடு மதுரை என்பதால், அருகில் உள்ள எந்தக் கோயிலாக இருந்தாலும் தேவையற்ற பிரச்னை உருவாகிவிடும் என்று இருக்கன்குடியில் திருமணம் செய்வதாகத் திட்டம்.

இதற்காக ஒரு டாக்ஸியில் நாங்கள் ஏழு பேர் வந்திருந்தோம். அந்த பெண்ணுக்கு அவளின் தோழி ஒருத்தி மட்டுமே உடன் வந்திருந்தாள். ஒரு திருமணத்தை எப்படி நடத்துவது, என்ன செய்வது என்று எங்கள் யாருக்குமே தெரியாது. சினிமாவில் காதலர்கள் ஓடிப் போய்த் திருமணம் செய்துகொள்வது மட்டும்தான் எங்களுக்குப் பரிச்சயமாக இருந்தது. ஆகவே, நண்பனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற உத்வேகம் இருந்ததேயன்றி, நடைமுறை எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை.

கோயிலில் ஒரு சிறுமியை அம்மனை நோக்கிப் படுக்க வைத்து, அவளது நெற்றியில் அரிசி மாவில் அகல் செய்து எண்ணெய் விட்டு விளக்கேற்றி, பக்தி பூர்வமாக நின்றிருந்தது ஒரு குடும்பம். சூழலின் கதியைப் புரிந்துகொள்ளாதவர்களைப் போல நாங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு யாரைக் கேட்பது என்று புரியாமல், கோயிலுக் குள்ளாகவே அலைந்தோம்.

எதிரே இருந்த அலுவலகத்தில் பதிவு செய்து ரசீது வாங்கி வர வேண்டும் என்று சொல்லிப் பூட்டியிருந்த ஒரு கதவைக் காட்டினார் பூசாரி. ‘கதவு பூட்டியிருக்கிறதே?’ என்றதும், ‘பன்னிரண்டு மணிக்கு கிளார்க் வருவார். அதுவரை வெளியே காத் திருங்கள்’ என்று சொன் னார். நாங்கள் டாக்ஸியி லேயே மணமக்களை உடைகளை மாற்றிக் கொள்ளச் செய்துவிட்டுக் கீழே இறங்கி நின்றோம். பதநீர் விற்கும் ஒரு பெண் எங்களையே பார்த்துக் கொண்டு இருந்தாள். புதுப்பெண்ணும் மாப்பிள்ளையுமாக அவர்கள் வெயிலில் நின்றிருந்தார்கள். அந்தப் பெண் மிகவும் பயந்து போயிருந் தாள் என்பது அவளது முகம் வெளிறியிருப்பதில் தெரிந்தது.உதட்டைக் கடித்தபடி என் நண்பனின் கையை இறுக்கமாகப் பிடித்திருந்தாள். பூசாரி எங்களைக் கூப்பிட்டு, எந்த ஊர் என்று விசாரித்தார். நாங்கள் ஊர் பெயர், ஆள் பெயர் எல்லா வற்றையும்மாற்றிச் சொன்னோம்.

கிளார்க் வந்தாலும் கோயிலில் வைத்துத் திருமணம் செய்ய முடியாது... அதற்குக் கிராம முன்சீப்பிடமிருந்து ஒரு அத்தாட்சி வாங்கி வர வேண்டும்... ரேஷன் கார்டு வேண்டும் என்று ஏதோ காரணம் சொன்னார் பூசாரி.

எங்களுக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை. பின் அவராகவே, "நெடுஞ்சாலையில் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. அங்கே போய் தாலி கட்டிக் கொண்டு வந்துவிடுங்கள். பிறகு, இங்கே ஒரு பூஜை வைத்துவிடலாம்" என்றார்.

நாங்கள் வேறு வழியில்லாமல் ஆற்று மணலில் நடந்து நெடுஞ்சாலைக்கு வந்தபோது, அங்கே ஒரு சிறிய பிள்ளையார் கோயில் இருந்தது. அதன் வாசலில் நாலைந்து பேர் உட்கார்ந் திருந்தார்கள். புது மணமக்களைக் கண்டதும், திருமணம் செய்து கொண்டு சிதறு தேங்காய் போடுவதற்காக வந்திருக்கிறார்கள் என்று நினைத்தோ என்னவோ, பூசாரி வரவேற்று, கோயிலில் உட்கார்ந்திருந்தவர்களை எழுந்து போகச் சொன்னார்.

நாங்கள் தயங்கித் தயங்கி திருமணம் செய்துகொள்ளப் போகும் விஷயத்தைச் சொன்னதும், அவர் சற்றே யோசித்தபடி தனக்கு தனியாக இருநூறு ரூபாய் தந்துவிட வேண்டும் என்று சொல்லி, மாலை, தாலி எல்லாம் இருக்கிறதா என்று கேட்டார். நாங்கள் காரில் இருக் கிறது என்று சொன் னோம். அவர், ‘‘ஊருக்குள் ஒரு நாகஸ்வரம் வாசிப்பவர் இருக்கிறார். அவரை அழைத்து வந்துவிட லாம்’’ என்று சொல்லி காரை வரச் சொன்னார். ஒரு நண்பனும் பூசாரியும் காரில் ஊருக்குள் சென்றார்கள்.

திரும்பி வந்தபோது நாகஸ்வரம் வாசிக்கும் வயதான பெரியவர் ஒருவரும், அவரோடு தவில் வாசிக்கும் ஒரு சிறுவனும் வந்திருந்தார்கள். அவர்கள் எங்களைப் பார்த்து நமஸ்காரம் செய்துவிட்டு, கோயிலின் முன்னால் உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கினார்கள். மேளச் சத்தமும் நாகஸ்வரமும் திருமணத்துக்கான துவக்கமாக இருந்தது. பூசாரி இதற்குள் ஒரு தாம்பாளத்தில் மாலைகளையும் தாலியையும் வாங்கி பூஜை வைக்க ஆரம்பித்திருந்தார். நடுக்கமும் பயமுமாக மணமக்கள் இருவரும் சாலையில் நின்றிருந் தார்கள்.

பூசாரி தனது துண்டை விரித்து, அந்தப் பெண்ணை அதில் உட்காரச் சொன்னார். அவள் கிழக்கு பார்த்து அமர்ந்தாள். நண்பனையும் உட்கார வைத்தார். திருப்பூட்டும்போது குலவை போடுவதற்காக பெண்கள் இல்லையே என்று வெள்ளரிக்காய் விற்கும் கிழவிகள் நாலைந்து பேரை அழைத்து வந்திருந்தார்கள். மேளம் முழங்கியது. கிராமப் பெண்கள் குலவையிட்டார்கள். நண்பன் பதற்றம் நிறைந்த மனதோடு தாலி கட்டினான். மாலைகளை மாற்றிக்கொண்டார்கள். நாங்கள் ஒவ்வொருவராக அவர்களுடன் கை குலுக்கினோம். அவனது கை வியர்த்து வழிந்திருந்தது.

வெள்ளரிக்காய் விற்கும் கிழவி ஒருத்தி ஒரு துண்டு மல்லிகைப் பூவை எங்கிருந்தோ வாங்கிவந்து புதுப்பெண்ணின் தாலியில் சுற்றிவிட்டு, கை நிறைய திருநீறு அள்ளி அவளது நெற்றியில் பூசியவளாக, தனது சேலையில்முடிந்து வைத்திருந்த இரண்டு ரூபாய் காசை அவள் கையில் கொடுத்தபோதுதான்புதுப்பெண் முதன்முறையாகக் கதறி அழத் துவங்கினாள். யாராலும் சமாதானம் செய்ய முடியாதபடி அவள் ‘அம்மா, அம்மா...’ என்று சிறுமியைப் போல சத்தமிட்டபடி விசும்பி அழுதாள்.

நண்பன் செய்வதறியாமல் அவள் தோளைப் பிடித்து, ‘அழாதே!’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். பூசாரி, ‘ஒரு சர்பத் வாங்கிக்கொடுங்கள்’ என்று சொன்னார். நண்பன் தன் புது மனைவியை அழைத்துக்கொண்டு போய் ஒரு மரத்தடி நிழலில் உட்கார வைத்து சமாதானப் படுத்தினான். அவள் எல்லா சமாதானங்களையும் தாண்டி, "எங்கம்மா என் கல்யாணத்துக்காக, பத்து வயசிலிருந்து ஆசைஆசையா எல்லாம் வாங்கி வெச்சிருக்காங்க. எங்க வீட்லயே நான்தான் மூத்த பொண்ணு. இப்படி எங்கம்மாகூடப் பார்க்க முடியாம கல்யாணம் பண்ணிக்கிட்டமே" என்று கதறி அழுதாள். அவளது குரலின் துக்கம் எங்கள் யாவரையும் பேச்சற்று நிற்க வைத்தது. பெரும் குற்றம் ஒன்றுக்கு உடன்பட்ட வர்களபோல நாங்கள் வெயிலில் நின்றுகொண்டு இருந்தோம். நண்பன் என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் அவள் கைகளை இறுக்கமாகப் பிடித்தபடி நின்றிருந்தான்.

காதலின் சுவை திரிந்து கசப்பாகப் பீறிடுவது போன்ற நிலை உருவாகி இருந்தது. யாவரும் மாரியம்மன் கோயிலுக்குத் திரும்பிப் போனபோது, அழுது வீங்கிய கண்களுடன் மணப்பெண் கையெடுத்து சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்தாள். பதநீர் விற்பவள் அந்த புதுமணப்பெண்ணை மட்டும் தன் அருகில் அழைத்து, எல்லாமும் அவளுக்குத் தெரியும் என்பதுபோல் சமாதானம் சொன்னாள்.

‘அழாத தாயி! உனக்குக் குடுத்து வெச்சது இவ்வளவு தான்! எல்லாம் இருக்கன்குடி ஆத்தா துணையிருப்பா. கல்யாண நாளும் அதுவுமா அழுதா, மாப்பிள்ளை முகமே சுண்டிப் போயிருச்சு பாரு. நீதானே அவங்களைத் தேத்தி, நல்லபடியா வெச்சிக்கிடணும்! நாம பொம்பளை அழுதுடுறோம். பாரு, மாப்பிள்ளையை! அவுக வாய் விட்டு அழ முடியுமா? ஆனா, அவங்களும் மனசுக்குள்ளே பெத்த தாய்\தகப்பனை நினைச்சு அழுதுகிட்டுத்தான் இருப்பாங்க. தைரியமா இருங்க...எல்லாம் சந்தோசமா நடக்கும்’என்று ஆறுதல் சொன்ன வளாக, ஒரு மட்டையில் பதநீர் விட்டு யாவருக்கும் குடிக்கத் தந்தாள். பதநீருக்குக் காசு வாங்க மறுத்தபடி, ‘பிள்ளை பிறந்தா இங்கே வந்து மொட்டை போடுங்க. இப்ப இந்த அக்காவுக்கு ஒரு ரூபாய்க்கு வெத்தல பாக்கு வாங்கிக் குடுத்துட்டு போங்க. அது போதும்!’ என்றாள்.

நாங்கள் திருமணம் முடிந்து காரில் ஏறியபோது புதுப்பெண்ணின் சுபாவம் மாறியிருந்தது. அவள் முகத்தில் புதுப்பெண்ணுக்கு உரிய வெட்கமும் சிரிப்பும் கூடு கட்டத் துவங்கியது. டிரைவர், காரில் பழைய பாடல்களை பாடவிட்டிருந்தார்.

அவள் வெட்கம் கலந்த குரலில், ‘காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா’ என்ற பாடலை பி.சுசிலா போலவே முணுமுணுத் தாள். காற்றில் அவள் தலைமுடி பறக்கும்போது அதைச் சரிசெய்வதுபோல தனது புதுப்புருசனை உரசிக்கொண்டு வந்தாள். இந்த நாடகத்தைக் கண்டு நாங்கள் ஒருவரையருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம். ஒரு இறகு காற்றில் பறப்பது போல திசை தெரியாமல் ஒரு வாழ்க்கைப் பயணம் துவங்கியிருந்தது!

சேர்ந்து படிப்பது, சேர்ந்து சாப்பிடுவது என்று நண்பர்களாகத் துவங்கிய வாழ்வு... சேர்ந்து உறங்குவது, சேர்ந்து வாழ்வது என்று வாழ்வின் அத்தியாயமாகிவிட்டது. இரண்டு வருடங்களில் அவர்களின் பெற்றோர் சமரசமாகி விட்டார்கள்.

நண்பனுக்கு இப்போது பள்ளியில் படிக்கும் மகள் இருக்கிறாள். எப்போதாவது நண்பனின் மகள், ‘அப்பா உன் கல்யாண போட்டோ எங்கே?’என்று கேட்கும்போதெல்லாம் அவர்கள் இருவரும் ஒரு நிமிஷம் தலை கவிழ்ந்துகொள்கிறார்கள். அன்றிரவு, அவன் எங்களை நினைத்துக் கொண்டவனாக போன் செய்து, திருமண நாளைப் பற்றி பேசுவான். அவனது குரலில் தேற்ற முடியாத துக்கத்தின் வலி இன்னமும் தீராமல்தான் இருக்கிறது.

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது, குகை நாட்களில் துவங்கி இன்று வரை எத்தனையோ ஆயிரம் வருடங்களைக் கடந்துவிட்டபோதிலும் இன்றும் திருமணம் ஒரு பிரச்னை தான்!

காதல் திருமண விஷயத்தில், படித்தவர்கள்கூட குகை மனிதனின் மனநிலையில்தான் இருக்கிறார்கள். எல்லாத் திருமணக் கொண்டாட் டங்களுக்குப் பின்னும் வெளிப்படுத்த முடியாத, கண்ணுக்குத் தெரியாத ரணங்களும் வலிகளும்தான் இருக்கின்றன போலும்!

‘கரிசலின் இருள்கள்’ என்கிற பா.செயப்பிரகாசம் கதையும் திருமணத்தின் வலியைப் பற்றியதுதான். ஆனால், இங்கு திருமணத்தால் பிரச்னை ஏற்படுவதில்லை. மாறாக, கிராமத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மனிதன் ஒருவன் தனது திருமண நாளில் கூட சந்தோஷமாக இருப்பதற்கு உயர்ந்த சாதி மனிதர்களால் அனுமதிக்கப்படுவது இல்லை என்கிற உண்மையைச் சொல்கிறது இக்கதை.

பா. செயப்பிரகாசம் தமிழின் முக்கிய எழுத்தாளர். சமூக அவலங்களுக்கு எதிராக கூர்மையான பார்வைகளை முன் வைப்பவை இவரது கதைகள். கரிசல்காட்டு எழுத்தாளர் களில் ஒருவராக இருந்தபோதும், இவர் கதைகளின் உலகம் அடித்தட்டு மக்களைச் சார்ந்தது. குறிப்பாக சாதியத்தின் கொடுமையால் புறக்கணிக்கப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை முன்வைக்கிறது.

‘கரிசலின் இருள்கள்’ கதை... ஒரு கிராமத்துக்குத் திருமணமாகி புதுப்பெண்ணும் மாப்பிள்ளையும் வருவதில் துவங்குகிறது. கரிசல்காட்டில் அலைஅலையாய் வீசும் வேனலில் அவர்கள் நடந்து வருகிறார்கள்.மணமக்களுக்குத் துணைக்கு வருவதற்குக் கூட ஆள் இல்லை. அதே ஊரில் இன்னொரு பக்கம் பெரிய வீடு எனப்படும் உயர்ந்த சாதி வீட்டுத் திருமணம் ஒன்றும் நடந்து, அந்த மணமக்களுக்கு ஊரே திரண்டு வரவேற்பு கொடுத்துக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.
குங்குமம் கரைந்தோடும் நெற்றியும், எண்ணெய்ப் பசையற்ற தலையுமாக வேர்வை வழிய வரும் மணமக்களை ஊர்க்காரர்கள் மடக்கி, இளவட்ட வெத்திலை வேண்டும் என்று கேட்கிறார்கள். புதிதாகத் திருமணமாகி வருகிறவர்கள் செய்யும் மரியாதை அது. குப்பை வண்டி அடிக்கும் மார்த்தாண்டம் என்ற அந்த புதுமாப்பிள்ளை தன்னிடம் பணமில்லை என்பதால் மறுக்கிறான். அதை நம்ப முடியாமல் மற்றவர்கள் கேலி செய்யவே, வேறு வழியில் லாமல் தன் கையில் இருந்த காசைத் தந்துவிடுகிறான்.

திருமணமாகி வந்த இரவில் ஊர் முதலாளி வீட்டில் நடந்த திருமணத்துக்கு ஒயிலாட்டம் ஆடுவதற்காக அவன் அழைக்கப் படுகிறான். புது மனைவி பேச்சி போகக்கூடாது என்று தடுக்கிறாள். ஆனால், ஊர்க் கட்டுப்பாட்டுக் குப் பயந்து அவன் போய்விடு கிறான். பேச்சி தங்களுக்கும் அன்றுதான் திருமணமாகி முதல் இரவு என்பதை நினைத்துக் கொண்டு, இருளில் வேதனையோடு உட்கார்ந்தபடி இருக் கிறாள்... தொலைவில் ஒயிலாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது என்பதோடு முடிகிறது கதை.

ஒரு பட்டம் எந்தத் திசையில் திரும்பப் போகி றது, எவ்வளவு உயரம் பறக்கப் போகிறது, எப்போது அறுபடப் போகிறது என்று யாருக்குமே தெரியாது. ஆனாலும், பட்டத்தின் கயிறு நம்மிடம்தான் இருக்கிறது. அதை நாம்தான் இயக்குகிறோம்.

ஒரே ஆகாயத்தில்தான் எல்லா பட்டங்களும் பறக்கின்றன. ஆனால், ஒவ்வொரு பட்டமும் ஒரு உயரமும், ஒரு பறத்தலும் கொண்டு இருக்கிறது. இப்படித்தான் இருக்கிறது நம் திருமணக் கனவுகளும்!

கரிசல் கதைகளின் உலகில் தனித்துவம் பெற்றவர் பா.செயப்பிரகாசம். இதுவரை கதை உலகின் காலடி படாத கிராமத்தின் ஒடுக்கப்பட்ட மக்களையும் அவர்களின் வாழ்க்கைப் பாடுகளையும் விவரிக்கக்கூடியது இவரது எழுத்து. முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வரும் தீவிர இலக்கியவாதியான செயப்பிரகாசம் விழிகள், சதங்கை, மனவோசை போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தவர். சமூக விடுதலையை நோக்கியதாக எழுத்து அமைய வேண்டும் என்ற உரத்த சிந்தனை கொண்ட பா.செயப் பிரகாசத்தின் மொத்தச் சிறுகதைகள் ‘பா.செயப்பிரகாசம் கதைகள்’ என்ற தலைப்பில் வெளியாகி உள்ளன. இவரது ‘ஒரு கிராமத்து ராத்திரிகள்’ என்ற தொகுப்பு, தமிழ்ச் சிறுகதையுலகில் குறிப்பிடத்தக்க ஒன்று.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு!

கி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்

கரிசல் வெள்ளாமை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

கற்பக தரு சொக்கப்பனை ஆகிறது!