இனிய தமிழ் மொழிக்குள் ஏன் இந்த ஆங்கில ஆதிக்கம்?

தமிழ் இலக்கிய உலகுக்கு நன்கு பரிச்சயமானவர்தான் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம். மகாகவி பாரதியாரின் எட்டயபுரத்துக்கு அயலிலுள்ள ஒரு கிராமமே செயப்பிரகாசத்தின் ஊர். பாவேந்தர் பாரதிதாசனின் ஊரும் எழுத்தாளர் செயப்பிரகாசத்தின் கிராமத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது.


தமிழுலகின் புரட்சிகர சிந்தனைக் கவிஞர்களில் இருவரான பாரதியார் மற்றும் பாரதிதாசனின் கிராமங்களுக்கு அருகில் உள்ள ஊரில் பிறந்ததனாலோ என்னவோ, எழுத்தாளர் செயப்பிரகாசத்தின் சிந்தனைகளிலும் செயல்களிலும் புரட்சியும் முற்போக்கும் கூடவே கலந்திருக்கின்றன.

உலகெங்கும் வாழும் தமிழ் இலக்கிய அன்பர்களுக்கு நன்கு அறியப்பட்ட செயப்பிரகாசம் தமிழகத்திலுள்ள முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர்.

இடதுசாரி சித்தாந்தங்களை அவரது படைப்பிலக்கியங்களில் மாத்திரமன்றி, பேச்சுகளிலும் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது. சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரை நூல்கள், ஆய்வுப் படைப்புகள் என்றெல்லாம் ஏராளமான நூல்களை எழுதிக் குவித்துள்ள செயப்பிரகாசம், கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்த சமயம் தினகரன் பத்திரிகையின் ஆசிரியபீடத்துக்கு வருகை தந்திருந்தார்.

அவர் சிறந்ததொரு இலக்கியப் பேச்சாளர். தினகரன் ஆசிரிய பீடத்தினருடன் ஒருமணிநேர சந்திப்பில் பங்கேற்றார். அக் கருத்தாடலின் போது இலக்கியம், ஊடகத்துறை சார்ந்த விடயங்களே கூடுதலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

அன்றைய கருத்தாடலின் போது, எழுத்தாளர் செயப்பிரகாசம் பிரதானமாக குறிப்பிட்டுக் கூறிய விடயம் இன்றைய தமிழ் மொழிப் பிரயோகத்தில் தாராளமாக இடம்பெறுகின்ற ஆங்கிலமொழி ஆதிக்கமும் தமிழ்க் கொலைகளும்!


இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் மாத்திரமன்றி பாடநூல்கள், இலக்கியப் படைப்புகள் போன்ற பல்வேறு துறைகளிலும் வெறுமனே எழுத்துப் பிழைகள் மாத்திரம் தென்படவில்லை... இலக்கண வரம்புகளையெல்லாம் மீறி வார்த்தை அமைப்புகளே தலைகீழாகிப் போய்க் கொண்டிருப்பதை கவலையுடன் வெளிப்படுத்தினார் செயப்பிரகாசம்.

தமிழ் உரைநடையிலும் பேச்சிலும் ஆங்கிலச் சொற்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதென்பது மற்றைய கவலை. இலங்கையைப் பார்க்கிலும் ஆங்கில மொழியின் ஆதிக்கம் தமிழ்நாட்டிலேயே அதிகம்.

சினிமா, சின்னத்திரை, பத்திரிகை, தொலைக்காட்சி என்றெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை ஆங்கில ஆதிக்கம் பெருகிக்கொண்டு வருகின்றமை தமிழ்மொழி இன்று எதிர்நோக்குகின்ற பெரும் ஆபத்தாக உள்ளது.

தமிழில் பொருத்தமான சொற்பதங்கள் தாராளமாகவே இருந்த போதிலும், ஆங்கிலப் பதங்களைக் கலந்து பேசுவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இது நாகரிகம் கருதியதா? இல்லையேல் தமிழ்மொழியில் போதிய தேர்ச்சியின்மையா? அல்லது ஆங்கில மொழியைக் கலந்து எழுதுவதும் உரையாடுவதும் சௌகரியமாக இருக்கின்றதா?

இவையெல்லாம் விடை தெரியாத வினாக்களாகும். ஆனாலும் வேற்றுமொழியின் ஆதிக்கமானது, எமது தாய்மொழியை எத்தனை தூரம் சீரழித்திருக்கின்றது என்பதுதான் இங்கு கவலைக்குரிய விடயம்!

உலகில் வேறெந்த மொழியையும் வேற்றுமொழியொன்று இவ்வாறு துவம்சம் செய்ததில்லை. எழுத்தாளர் செயப்பிரகாசம் கூறிய கருத்துகள் தமிழ்நாட்டுக்கு மாத்திரமே பொருத்தமானவையென்று அர்த்தமல்ல...

இலங்கையின் தமிழ்மொழிப் பிரயோகத்திலும் ஆங்கிலம் கூடுதலான அளவு ஆதிக்கம் செலுத்தி வருகின்றதென்பதை இவ்விடத்தில் கூறாமலிருக்க முடியாது.

தமிழ்மொழியின் தூய்மை பாழாகிவிடக் கூடாதென்பதில் இன்று வரை அவதானத்தைப் பேணி வருவதாக இலங்கையின் தேசியப் பத்திரிகைகளை மாத்திரமே பாராட்ட முடியும். ஆங்கிலச் சொற்பதங்கள் தமிழ்மொழியினுள் கலந்து விடாமல் பார்த்துக்கொள்வதில் எமது தேசியப் பத்திரிகைகள் இன்றுவரை கவனத்தைப் பேணுகின்றது.

இவ்வாறான மொழித் தூய்மை பத்திரிகைப் பாரம்பரியத்தின் ஊடாக தொன்றுதொட்டு வந்ததென்றே கூற வேண்டியுள்ளது.

இலத்திரனியல் ஊடகங்களைப் பொறுத்தவரை இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவைகளே மொழித்தூய்மையைப் பேணுவனவாக உள்ளன.

இலங்கையின் தொலைக்காட்சி அலைவரிசைகளையும், வானொலி சேவைகளையும் அவதானிக்கின்றபோது, தமிழ்மொழிக்கு நேர்ந்துள்ள அவலம் நன்றாகவே புரிகின்றது.

ல,ள,ழ போன்றவற்றுக்கான வேறுபாடுகளோ, ன.ண பேதங்களோ, ர,ற வேறுபாடுகளோ அங்கெல்லாம் ஒரு பொருட்டாகவே கொள்ளப்படுவதில்லை. ஆங்கிலச் சொற்களை அதிகபட்சம் பயன்படுத்தி தமிழ்மொழியைப் பேசுவதே நாகரிகமென்று அறிவிப்பாளர்களில் அநேகம் பேர் கருதுவதுதான் இங்குள்ள பெரும் அபத்தம்!

இலங்கையின் கல்விமுறைமையும் இவ்வாறுதான் தறிகெட்டு எங்கோ நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. ஆங்கிலமொழி மூலக் கல்வியும் இதற்கொரு காரணம் எனலாம். பிரதான நகரங்கள் எங்கும் முளைத்திருக்கின்ற சர்வதேச பாடசாலைகளினால் விளைந்த வினையே இது.

சர்வதேச பாடசாலைகள் தாய்மொழிக் கல்வியைப் புறந்தள்ளி விட்டன என்பதே உண்மை. தாய்மொழியில் உரையாடுவதை கௌரவக் குறைவாகக் கருதுகின்ற மாணவர்களும் பெற்றோரும் இருக்கையில் தமிழ்மொழியின் தேய்மானம் குறித்து கவலைப்படுவதால் ஆகப் போவது எதுவுமில்லை.

தனது பிள்ளைகளுக்கு தமிழே புரிவதில்லை என்று பெருமையுடன் கூறிக் கொள்கின்ற தமிழ்ப் பெற்றோரை காணும்போது வேதனைப்படுவதைத் தவிர வேறெதுவும் தோன்றுவதில்லை.

வட இந்தியாவின் கிரந்த எழுத்துகளையும், திசைச் சொற்களையும், பிறமொழிச் சொற்களையும், சமூகக் கிளைமொழிகளையும் வட்டார வழக்குகளையும் திருந்திய வடிவமாக்கி தனக்கு அணி சேர்த்துக் கொண்டுள்ள செம்மொழியாம் தமிழ்மொழிக்கு நேர்ந்துள்ள அவலம் தமிழ்மொழிப்பற்றாளர்களுக்கு வேதனை தராமல் விடப் போவதில்லை. இவ்விடத்தில் ‘மெல்லத்தமிழினி...’ என்ற வார்த்தைதான் நினைவுக்கு வருகின்றது.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (இலங்கை) - 4 மார்ச் 2018

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்