சனநாயகத்தின் சவப்பெட்டி

பிரமாண்டங்கள் எப்போதும் வாழ்வுரிமை, சனநாயகக் கொலைகளிலிருந்து உருவாகின்றன. நர்மதா அணை, யூனியன் கார்பைடு, மத்திய மாநிலங்களின் கனிம வள வேட்டை, அணுமின் நிலையங்கள் அனைத்தும் சனநாயகத்தின் குரல்வளையில் முதலில் கை வைத்தன பின்னர் ஊழலுக்கு நீரூற்றி வளர்த்தன.

நர்மதா அணைத்திட்டத்தால் இதுவரை பழங்குடி இன, மலைவாழ் மக்கள் இலட்சத்துக்கு மேற்பட்டோர் குடிபெயர்க்கப் பட்டிருக் கிறார்கள். வெளியேற்றப்பட்ட மலைவாழ் பழங்குடியினர் சொந்த பூமியில் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். நாடிழந்த ஈழத் தமிழரின் புலம்பெயர் துயரத்துக்குச் சமதையானது இக்குடி பெயர்ந் தோரின் துயரம். குடிபெயர்வு எனச் சொல்வதினும் விரட்டியடித்தல் எனச் சொல்லலாம்.

யூனியன் கார்பைடு விபத்தினால் பல்லாயிரத்துக்கும் மேலான உயிர்பறிப்புக்குப் பின்னும், மீதியிருக்கும் மக்கள் எந்த ஒளியும் காண முடியாமல் வேதனைக் குகைக்குள் நடந்து கொண்டிருக்கிறார்கள். சாவோலம் போபால் பூமியின் மேல் கவிந்து கொண்டிருந்த தினத்தில் தான், அப்போது மத்தியப் பிரதேச மாநில முதல்வராக இருந்த அர்ஜுன் சிங் (காங்கிரஸ்) மத்தியில் பிரதமர் ராஜீவ் காந்தி இணைந்து கொலைகார ஆண்டர்சனை தனி விமானத்தில் பாதுகாப்பாய் ஏற்றி, அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்தியாவின் மத்திய மாநிலங்களில் உள்நாட்டு,வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கனிம வள வேட்டைகள் திறந்து விடப்பட்டன, வனத்தின் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். இதை வளர்ச்சிப் பணிகள் என்றார்கள். “வளர்ச்சிப் பணிகள் காரணமாக மத்திய இந்தியாவில் 2 கோடி மலைவாழ், பழங்குடியின மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக் கான நிவாரணமும் மாற்று உதவிகளும் வழங்கப்படவில்லை.கடந்த 50 ஆண்டுகளாக அவர்கள் ஏமாற்றப்பட்டனர். பழங்குடி யினருக்கும் அரசுக்குமிடையில் அவநம்பிக்கை உருவாக வனத்துறை முக்கிய காரணமாக இருந்தது” (தினமணி: 20-1-2012)

சொல்வது நீங்களல்ல, நானுமல்ல. சொல்பவர் ஆறு மாதங்கள் முன்வரை மத்திய வனத்துறை சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இருந்தவர். வனத் துறை அமைச்சராக இருந்த வேளையில், துறையைச் சீர்திருத்தி, மக்களை அவர்களின் வாழ் விடங்களிலிருந்து வெளி யேற்றக்கூடாது என அவர் கட்டுப்படுத்திட வில்லை. கட்டுப்படுத்தும் அதிகாரம் இருந்தது. அம்பானி, மிட்டல், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு விளக்குப் பிடித்து வரவேற்பு கொடுத்தது இன்றைய நடுவண் ஊரக மேம் பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

சேது - சமுத்திரப் பிரமாண்டம், கடல் போக்குவரத்தை எளிதாக்கும் என்று சேது சமுத்திரத்திட்டத்துக்கு ரூ. 2500 கோடியை நடுவணரசு செலவிட்டது. இத்திட்டத்தால் கடல்வளமும் மீன்வளமும் அழிவுபட, கடலோர மக்களின் வாழ்வுபாதிக்கப்படும் என்ற மீனவ மக்களின் குரல் எடுபடவில்லை. ராமர் பாலம் குறுக்கிடுவதாக இந்துத்வ பா.ஜ.க. பிரச்சனை பண்ண நடுவணரசு திட்டத்தைக் கைவிட்டது. ரூ.2500 கோடி,கடலில் கரைக்கப் பட்டது.


கூடங்குளம் அணுஉலை, மற்றுமொரு பிரம்மாண்டம். இதுவரையிலான அணுமின் நிலையங்களில் எல்லாம் ஒரு உலை, இரண்டு உலைகள் மட்டுமே! கூடங்குளத்தில் எட்டு உலை,பத்து உலை நிறுவ இருக்கிறார்களாம். மத்திய மாநிலங்களில் விரட்டப்பட்ட மக்கள், சொந்த நாட்டில் அகதிகளாகவாவது அலைய முடிகிறது. கூடங்குளம் அணு மின் நிலையம் அப்படியல்ல.ஒரு விபத்து நடந்தால் 30 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் வாழும் 12 லட்சம் மக்கள் கருகிப்போவார்கள்.

பிரம்மாண்டங்கள் உருவாக்கப்படும் முன்னர்,அல்லது உருவாக்கப்படுவதினூடாக ஊழலுக்கு தெளிவான வாய்க்கால்கள் வெட்டப் படுகின்றன. பங்கு (கமிஷன்)பேசி முடிந்த பின்பே, ஒவ்வொரு திட்டமும் கையயழுத்தாகிறது.

‘உலகளாவிய வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த ஒரு நாடும் ஏகாதிபத்தியமே’ என்பார்கள் அரசியல் ஆய்வறிஞர்கள். ருசியாவின் சோசலிச முக மூடிச் சாயம் கரைந்து போய், நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. என்ன இழவோ, இன்னும் அதை சோலிச பூமி என்று நம்பு கிறார்கள் நமது இந்தியப் பொதுவுடமைக் கட்சியினர். கூடங்குள அணுஉலை உடன் பாட்டை ஐயத்துடன் பார்க்கக் கூடாது என்று ருசிய ஆதரவு மனநோயிலிருந்து மீள முடியாமல் நிற்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜிரீயா உள்நாட்டுப் போரினால் சிதைக்கப்பட்டது. இன்னும் சிதைவுகளிலிருந்து மீளவில்லை. இன்று உள்நாட்டுப் போரை விட, ஊழல் அந்நாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என நைஜிரிய எழுத்தாளர் பென் ஒக்ரி குறிப்பிட் டுள்ளார்.

“உள்நாட்டுச் சண்டை நடைபெற்றபோது பிறக்காதவர்களால் அப்போது நடைபெற்ற கொடுமைகளை உணர முடியாது. ஆனால் மீண்டும் அது போன்றதொரு சூழலில் சிக்கிக் கொள்வோம் என்று நான் நினைக்கவில்லை.உள் நாட்டுப் போரைவிட ஊழலையே பெரிய அச்சுறுத்த லாகக் கருதுகிறேன். அது நாட்டின் உட்கட்டமைப்பை விழுங்கிவிடுகிறது. நாட்டின் மனச் சாட்சியையும் ஒற்றுமையையும் சிதைக்கிறது.”
(20-1-2012, ஜெய்ப்பூர் இலக்கிய நிகழ்வில் உரை)

இந்திய-ருசிய ஒப்பந்தத்தில் இந்த ஊழலுக்கு விதை நட்டவர்கள், வேறு வழியற்று அணு உலைக்கு ஆதரவுக் குரல் எழுப்பு கிறார்கள். ஊழல்-இன்று திட்டமிட்ட ஒரு நிகழ்வாக ஒரு போக்காக ஆகியுள்ளது. அந்த முகமில்லாமல், எந்தக் காரியத்துக்கும் முகம் கொடுக்க மாட்டார்கள் இந்தியர்கள் என்ற தன்னிச்சையானவினைப்பாடாக மாறிவிட்டது, அதிகாரத்துடன் இணைந்த செயலாகவே வெளிப்படுகிறது. சர்வ அதிகாரமும் கொண்டவர்கள், அச்செயலுக்கான அங்கீகரிக் கப்பட்ட அவையினராக மாறியுள்ளார்கள். சர்வாதிகாரத்துடன் இணைந்த ஊழல் ஆட்சி டுனிசியா தொடங்கி, எகிப்து, சிரியா, லிபியா என மக்கள் எழுச்சிகளால் வீழ்த்தப்பட்டன. ஊழலை வீழ்த்தக் குரல் கொடுப்பதில் தீவிரச் செயல் பாடுள்ளவர்களாய் தம்மை முன்னிறுத்தும் பொதுவுடமைக் கட்சிகள், ருசிய - இந்திய உடன்படிக்கையில் ஊழல் நடைபெற் றிருக்கும் என நம்பவும் தயாராக இல்லை.

அணுமின் நிலையத்துக்கு ஆதரவு தருகிற சிலர் 14 ஆயிரம் கோடி செலவழித்தாகி விட்டது. எதிர்ப்பவர்கள் தேசத் துரோகம் செய்பவர்கள் என்பதாக பேசுகிறார்கள். 20.1.2012 அன்று தொலைக்காட்சிகளில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா என்பவர் சொன்னதாக ஒரு செய்தி ஒளிபரப்பாயிற்று. “கூடங்குள அணுமின் திட்டத்தை எதிர்ப்போர் தேசத் துரோகிகள் சுப.உதயகுமார் போன்றோரை தேசத் துரோக சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.”

ஏற்கனவே உதயகுமார் போன்ற போராட்டக்காரர்கள் மேல், தேசத் துரோக வழக்கு போன்ற 85 வழக்குகள் போடப் பட்டுள்ளன. தேசப்பற்று, தேசத் துரோக வரையறுப்புகளுக்கு இன்றைய கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு அளவுகோல்.

இவர்கள் 14 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுவிட்டது பற்றியே நினைக் கிறார்கள். 14 ஆயிரம் கோடி செலவில் கொலை செய்யப்பட்ட சனநாயகம் பற்றிக் கவலைப் படவில்லை.இத்திட்டம் தொடங்கப்படுவதற்கு முன் சுற்றுவட்டார மக்களின் கருத்தறியப் படவில்லை. எந்தப் பிரம்மாண்டமும் மக்களின் இசைவின்றி மேலிருப்பவர்களால் அறிவிக்கப் படுகிறது. அந்த வட்டார வாழ் வழக்கு மக்களின் விருப்பமின்றி, அவர்களின் சொந்த மண்ணில் ஒரு திட்டம் திணிக்கப்பட்டது. அதன் சுமையை உயிர்வதையாலும் உடல் வதையாலும் சுமக்கப் போகிறவர்கள் அவர்கள் தாம்.

அணுமின் உற்பத்தியும்,அணு ஆயுதங்கள் உற்பத்தியும் வேறு வேறல்ல. இன்னும் தெளிவுபடப் பேசினால், இரண்டாவதின் நிறைவேற்றமே, முதலாவதற்கான அவசியமாக ஆகிறது. அணுமின் உற்பத்தியும் அணு ஆயுத உற்பத்தியும் விபரீதமான விளையாட்டுக்கள்.

“அணு யுத்தம் என்பது ஒரு விபரீதமான விளையாட்டு. விளையாடாதிருப்பது தான் வெற்றி பெற ஒரே வழி. அது போல் விபரீதமான ஆபத்தான அணுமின் நிலைய விபத்துக் களிலிருந்து மனித குலத்தைக் காக்க அவற்றை நிறுவாமலிருப்பது தான் ஒரே வழி” என்கிறார் க.திருநாவுக்கரசு.

கூடங்குளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையக் கூடங்கள் பார்வைக்கு அழகானவை. பெரிய பெரிய விதானங் களுடனான அந்தக் கூடங்களின் மீது பொறிக்கப்பட வேண்டிய வாசகம் “சனநாயகம் கொலை செய்யப்பட்ட இடம்.”


நன்றி: கீற்று - மார்ச் 2012, கருக்கல் - மார்ச் 2012

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி