தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - வைகோ-வின் அறிவிப்பு

நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சாதிய சக்திகளும், மதவாத சக்திகளும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டன என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துவந்த சூழ்நிலையில், ’தன்னை முன்னிறுத்தி, சாதிய சக்திகள் சாதிக் கலவரத்தைத் தூண்ட சதித் திட்டம்’ தீட்டுவதாக மதிமுக தலைவர் வைகோ கடுமையான குற்றச்சாட்டைக்கூறி, சாதிக் கலவரத்தைத் தடுக்க தான் ‘தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ என்று கடைசி நேரத்தில் அறிவித்ததுதான் இன்றைய ஹாட் டாப்பிக்.

வைகோ-வின் அறிவிப்பு குறித்து சில முக்கிய எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதை அனுமதிப்பது என்பது ஆளும்கட்சி மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஆதரவுடன் நடந்த அத்துமீறல் ஆகும் என்கிறார் மூத்த கரிசல் இலக்கியவாதியும், இடதுசாரி சிந்தனையாளருமான பா.செயப்பிரகாசம்.

“ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் இந்தத் தொகுதியில் எங்கள் சாதி வாக்காளர்கள்தான் அதிகம். அதனால் நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று பேசியுள்ளார். இதை எப்படி காவல்துறையும், தேர்தல் ஆணையமும் அனுமதித்தது? அதற்காக நான் திமுக சதி செய்கிறது என்று வைகோ கூறுவதை ஏற்கமுடியாது. உண்மையில், ஆளும்கட்சியாக இருப்பவர்களுக்கு ஆதரவானவர்கள் என்று அந்த சாதிபற்றிக் கூறப்படுகிறது.

எதுவாக இருந்தாலும் அவர்கள் சாதி ஆணவம் கொண்டுவிட்டார்கள். உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலைக்குப் பலியான சங்கருக்கு ஆதரவாகப் பேசினார். பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து ஆறுதல் கூறினார் என்பதற்காக தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க மறுப்பது ஜனநாயக விரோதம் ஆகும். அவருக்கு எதிராகக் கலகம் செய்பவர்கள் வேன்களில் வந்து, வைகோ வரும்வரை காத்திருந்தனர். அதுவரை காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்திருக்கிறது. இது, பல சந்தேகங்களுக்கு இடமளிப்பதாக உள்ளது” என்று பா.செயப்பிரகாசம் கூறினார்.

மேலும், அதற்காக தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று வைகோ அறிவித்ததை பா.செயப்பிரகாசம் ஏற்கவில்லை. “வைகோ எளிதில் உணர்ச்சிவசப்படுவது அவரது அரசியல் தலைமைப் பண்பையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அவர் என்ன செய்திருக்கவேண்டும் என்றால் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மக்களிடம் அறைகூவல் விட்டிருக்கவேண்டும். சாதி மாச்சரியம் இல்லாமல் வாக்களித்து சாதிய சக்திகளைத் தோற்கடிக்கும்படி மக்களிடம் கேட்டிருக்கவேண்டும். வைகோ கூறிய காரணம் சரியாக இருக்கலாம். ஆனால், எடுத்த முடிவு சரியல்ல. அப்படியே முடிவில் உறுதியாக இருந்தாலும் அந்தத் தொகுதிகளை இடதுசாரிகளுக்கு விட்டுக்கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், வைகோ போட்டியிட விரும்புகிறார் என்பதால்தான் கோவில்பட்டி தொகுதியை இடதுசாரிகள் விட்டுக்கொடுத்துள்ளனர்” என்றார்.

நன்றி: மின்னம்பலம் - 26 ஏப்ரல் 2016

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பா.செயப்பிரகாசம் நூல்கள்