கைவிட முடியாக் கவிதைகள்

இலக்குமி குமாரன் ஞானதிரவியத்தின் ஒரு கவிதையை வாசிக்க நேர்ந்தது. நேர்ந்தது என்பதில் தப்பார்த்தம் இல்லை; வாசிப்பு தற்செயலாகவும் நிகழும், விருப்பின் பேரிலும் அமையும். தற்செயலாக வாசிப்புக்கு ஆளாகும் ஒன்று அதிர்வுகளுக்கு இட்டுப்போய் சொக்குப்பொடி போட்டு தன் வசப்படுத்தி வைத்துக்கொள்ளுதல் உண்டு.

கவிதையின் தலைப்பு ”ஒரு நடுகல்”.

உள்ளடக்கத்தின் குறியீடாய், ஒட்டுமொத்தப் பொருளின் உருவகமாய், அல்லது சில பொழுதுகளில் ஒரு கவிதையின் ஓர் வரி - அதன் ஏதோ ஒரு முனையில் உட்கார்ந்திருக்கும் ஒரு சிறு சொல் தலைப்பாக அமைந்து விடுவது நடக்கும். தலைப்புக்கு தனி இலக்கணம் இல்லை. ஓரொரு படைப்பும் தனக்கென தனித்துவமிக்க தலைப்புப் பெற்றதும் அதுவே இலக்கணமாகிக் கொள்ளும். தனக்கென ஒன்றைச் சூடிக்கொண்ட பின் அடடே, இதுக்கு வேற பேர் வைத்திருக்கலாமோ, வைத்திருந்தால் இக்கிளி இன்னும் தொலைவு பறந்திருக்குமொ என எண்ணச் செய்வதுமுண்டு.

‘ஒரு நடுகல்’ தனக்குரிய தலைப்பைத் தடுமாற்றம் எதுவுமற்று தானே இயல்பாய் எடுத்துக் கொண்டுள்ளது: “ஒரு நடுகல்” என்று தலைப்பிருந்தாலும், மனித குல வரலாற்றில் புதைக்கப்பட்டவை கோடி, கோடி நடு கற்கள் என்ற அர்த்தம் தலைப்புக்குள் செருகப்பட்டிருக்கிறது.

சாதரணரின் வரலாறு அனைத்தும் வாய்மொழிகளாக வாழ்ந்து உதிர்ந்ததும், அரசர்கள், மேன்மக்கள் என்பாரான ஆதிக்கக் குடியினர் வரலாறெல்லாம் மேலாண்சக்திகளின் வரலாறாய் வாழ்ந்து நிலைப்பதும் என சமூக விஞ்ஞானம் எடுத்துரைத்தது. மார்க்சியம் முன் மொழிந்ததைக் கவிதை வழி மொழிந்திருக்கிறது. சமுதாய அறிவியல் உண்மையை வெளிப்படுத்துகிற அப்பொழுதில் கவிதைக்கு றெக்கைகள் முளைத்து விடுகின்றன. றெக்கைகளைத் தந்தது எது? சமுதாய வரலாற்று உண்மைகள் தாம்!

காடாகவொன்றோ, நாடாகவொன்றோ, மலையாகவொன்றோ, கடலாகவொன்றோ எதுவொன்றாக இருப்பினும் ஒரு சமுதாயம் தன்னைத்தானே, கட்டமைத்துக் கொள்வதில்லை. சமுதாயத்தைக் கட்டமைத்து உயிர் கொடுப்பது மனிதத் திரள்; அவர்தம் உழைப்பு. உழைப்பை நல்கி, சமுதாயத்தினை இயங்கச் செய்வோர் உரு இழந்தோராக; உழைப்பைக் கேவலப்படுத்துவோர் சமுதாயத்தை உருவாக்குவோராக அர்த்தப்படுத்தப்படுகின்றனர் தலைகீழாய் !

கவிதை இந்த வரலாறுக்குள் நுழைந்து உண்மையைத் தேடியெடுத்து, வெளியில் வைக்கிறது.

“இப்போது நீக்ரோக்களை அடிமையாக்குதல் நம் (வெள்ளைப் பிரபுக்கள்) உரிமை.அந்த உரிமையை நியாயப்படுத்தி ஒன்று சொல்வேன். ஐரோப்பாவின் வெள்ளையர்கள், அமெரிக்காவின் செவ்விந்தியர்களை விரட்டி ஓடச்செய்துவிட்டதால் விரிந்து பரந்த நிலங்களைப் பண்படுத்தவும், பயிர் செய்யவும் அந்த இடத்தில் ஆப்பிரிக்க நீக்ரோக்களைக் கொண்டு வருவதில் தப்பில்லை. கடவுள் ஒரு அறிவார்ந்த ஒரு மனிதர். கறுப்பு உடல்களைப் படைக்கிறபோது, அதற்குள் வெள்ளையான மனதை, அமைதி ததும்பும் ஆத்மாவைப் படைத்தார் ”.

கடவுளையும் தனக்கு ஏற்ற பொருத்தமான மனிதராகக் கண்ட இவர் – பிரான்சு  தேசத்தின் அரசியல் வித்தகரான மாண்டெஸ்கு பிரபு. தன்னுடைய எண்ணங்களின்படி, தனக்கு ஏற்ற கடவுளை மனிதன் படைக்கிறான் என்பதற்கு இது சான்று. பூர்வீகக் குடிகளின் அழித்தொழிப்பை, அடிமை முறையை ஆதரித்த இவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டத்தை யாத்த தாமஸ் ஜெபர்சன், அமெரி்க்காவின் தந்தை என அழைக்கப்படும் ஜார்ஜ் வாசிங்டன் ஆகியோருக்கு வழிகாட்டியாக, அவர்களைப் பாதித்தவராக ஆனார். அமெரி்க்காவை உருவாக்கும் உபதேசமானது இந்த வாசகம்.

பூர்வீகர்களான செவ்விந்தியர்கள் இப்போது அங்கு இல்லை. செவ்விந்தியர்களை அவர்களது மண்ணிலிருந்து விரட்டியபின்னர், பூர்வீகக் குடிகளின் தலைவன் சியாட்டில் பெயரை ஒரு நகருக்கு இட்டு, நகர நடுவில் அவனுக்கு ஒரு சிலை நிறுவி மதிப்பை உண்டாக்கிக் கொண்டனர். மதிப்பு உண்டாக்கியது அவனுக்குப் போலத் தெரியும்; ஆனால் பிரித்தானியா, பிரான்சு, இத்தாலி, டச்சு, போர்ச்சுகீசியர் என எல்லா ஐரோப்பியரும் அச்செயல் வழி தமக்கு மதிப்பைக் கூட்டிக் கொண்டனர். வெள்ளை ஆக்கிரமித்து சிவப்பை விரட்டியடித்தது. இன்று செவ்விந்தியர் காட்சிப் பொருளாக கனடாவின் ஒரு மூலையில்.

பூமியின் சொந்தக்காரர்களைக் கொன்றொழித்தபின், பூமியைப் பண்படுத்த உழைப்போர் தேவைப்பட்டனர். ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகள் கப்பல் கப்பலாய் இறக்குமதி செய்யப்பட்டனர். அடிமை வியாபாரிகளின் கொடுமைக்குப் பலியானோர் போக – இன்று அமெரிக்காவில் முப்பது மில்லியனுக்கும் மேல் – வெள்ளை இனத்தில் பாதியாய் ஆப்பிரிக்க கறுப்பர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தை (Declaration of independence and the constitution of United States) உருவாக்கிய தாமஸ் ஜெபர்ஸன், மெடிஸன் போன்ற யுத்தப் பிரபுக்கள் பலநூறு அடிமைகளை வைத்திருந்தனர். அடிமைகளின் விடுதலைக்குப் போராடினார் என்று ஆபிரகாம் லிங்கன் பற்றி உருவாக்கப்பட்ட பிம்பம் கற்பிதமானது: உண்மைக்கு எதிரானது. லிங்கன், ஒன்றுபட்ட அமெரிக்காவை உருவாக்கிட முனைந்தவேளையில் வெளிப்பட்ட உண்மை விகாரமானது.

“என் பிரதான நோக்கம் அமெரிக்கா ஒன்றியத்தைக் காப்பது.அடிமை முறையை ஒழிப்பதோ, காப்பதோ அல்ல. ஒற்றை அடிமையைக் கூட விடுதலை செய்யாமல், அமெரிக்க ஒன்றியத்தைக் காப்பாற்ற முடியுமானால் அதையே செய்வேன். அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்து நாட்டைக் காப்பாற்ற முடியுமென்றால், அதையே செய்வேன். சிலரை மட்டுமே விடுதலை செய்து, மீதியிருப்போரை அடிமைகளாக வைத்திருப்பதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவைக் காக்க முடியுமானால் அதையும் செய்வேன்.”

நம் கவனத்தைக் குவிக்க முடிகிற சமீபகால இரு நூற்றாண்டுகளின் சங்கதி இதுவாக இருக்கிறதென்றால், புக முடியாத, எட்டிப் பார்க்க முடியாத முடி மன்னர் காலம் பற்றி விவரிக்கத் தேவையில்லை. மக்களைக் கொன்ற இருட்டால் கடந்தகாலம் நெய்யப்பட்டுள்ளது. இதுவரை எழுதப்பட்ட, சொல்லப்பட்ட, வரலாறென்பது ஆடை போர்த்திய உடம்பு: ஆடையின் பளபளப்பை நீக்கிப் பார்க்கையில், வெட்டுப்பட்ட காயங்கள், தழும்புகள் ஆயிரம் காணப்படும்.

இந்த இருட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது இலக்குமி குமாரன் கவிதை.
ராசராசன் கட்டியபோது
கல் விழுந்து செத்த முனியனை
எந்தச் செப்பேட்டிலும் அழுத்தி வைக்கவில்லை
தஞ்சைக்கோபுரம் கட்டிய ராசராசன் பற்றி பெருமைக் கோபுரங்களை நாம் உயர்த்திக் கொண்டிருக்க, மண் சட்டி சுமந்த ஓவம்மா, சாந்து குழைத்த மாரிமுத்து – குறித்து செப்பேடுகள் எதுவும் பேசவில்லை. செப்பேடுகள் என்பவை இந்த மௌனத்தின் பாறை. யாரும் உடைத்தெறிய முன் வரவில்லை.
ஷாஜகான்,
புதை குழியை சலவைக் கல் கொண்டு
அலங்கரித்த போதும்
அங்ஙனமே ஆயிற்று
சலவைக்கல் கல்லறைகளை நிர்ணயிக்க மரித்த மனிதர்களை, அதன்கீழ் புதையுண்டு கிடக்கும் ஆத்மாக்களை எவரும் பேசியதில்லை: அழகின் பிரம்மாண்டம் மட்டுமே விதந்தோதின கவிதைகள்; ஆனால் அழகுப் பிரம்மாண்டங்களின் கீழ் புதைக்கப்பட்ட ஆத்மாக்களின் புதைகுழியைத் தோண்டி எடுத்து வீசும் பணியை மேற்கொள்கிறது இக் கவிதை.
முன்னருமென்ன
ஒளிருவாள் வீசி அருஞ்சமர் புரிந்த
காளையர்களின் லட்சியங்களை
யாதொரு கல்வெட்டும்
பொறித்துப் பதிக்கவில்லை;
ஒருவருக்குமான ஆவணங்களில்லை
நாடு கிடக்கிறது
வியர்வை உதிர்ப்போருக்காய் விரிந்து, விரிந்து
உள்ளது போதும் என்று எந்தவொரு குறுநில மன்னரோ, நிலப்பிரபுவோ, அரசனோ அமைவாய் இருந்த சரித்திரம் இல்லை: நியாயம், மண் கவரும் பேராசையில் உள்ளது. நாடு காப்போம், நாட்டுப்பற்று என்ற சொல்லாடல்களின் பின்னில் மண்ணாசை, பெண்ணாசை, புகழாசை நடைபோடுகிறது. மூவாசைகளால் ‘மாவீரர்கள்’ உருவாக்கப்படுகிறார்கள்.

சாதாரணவனை படையாய் முன்னிறுத்தி, அவன் பேரால் தலைமைகள் உருவாகிறார்கள். பெயர் தெரியாத அவனது ஆயிரமாயிரம் முகங்களுக்குள்ளிருந்து சீஸர் என்ற ஒரு முகம் முளைக்கிறது. பெயர் அறியப்படாத அந்த முகங்களுக்குள்ளிருந்து ஒரு இராசாசன் உருவாகிறான்.அடையாளமற்ற இலட்சோபலட்சம் உயிர்களின் பலியில், உடல்களின் புதைப்பில் இட்லர் என்ற உரு எழுந்து வருகிறது.
அவனில்லாமல் ஒரு இட்லர்
எப்படி உருவாகியிருக்க முடியும்?
அதற்காக அவன்
டாச்சொள-வில் வேட்டையாடப்பட்டான்
அவனில்லாமல் எப்படி
ஒரு  பேரரசர் உருவாகியிருக்கக் கூடும்?
போரில் அவனே
உடலை ஆயுதமாய்த் தருகிறான்
அவனின்றி தனியொரு சீஸர்
வீரனாய் உலா வந்திருக்க இயலாது
(உலகப்போர் வீரன் – பஃபி செயிண்ட் மேரி)
ஒரு ஆட்சித்தலைமைக்கு, அதிகார வெறியருக்கு, அடையாளமற்ற பலப்பல வீரர்களின் அழிவு அடையாளம் கொடுக்கிறது. ஒரு தாஜ் மஹாலாய், ஒரு தஞ்சைக் கோபுரமாய் ஒற்றை மனிதன் தலையெடுக்கிறான். அவன் தலையெடுப்பு, பலரின் தலை கொடுப்பில் நிறைவாகியது.தாஜ்மஹாலும், தஞ்சைக் கோபுரமும் ஒற்றை அதிகாரக் குவிப்பின் குறியீடாகின்றன.

வரலாற்றின் புரையோடிய இருட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார் – பஃபி செயிண்ட் மேரி என்ற செவ்விந்தியப் பாடகி. மூவாயிரம் ஆண்டுகளினும் கூடுதலாய் வேர் பிடித்து வாழ்ந்த அமெரிக்கப் பூர்வீகக் குடியினரான செவ்விந்தியரை, வேரோடு பிடுங்கி வீசிய அமெரிக்க கொலையாடலுக்கு எதிராய் எழுந்த குரல் அது. முகவரி இல்லாமல் செய்யப்பட்ட அந்தத் தொல்குடியின் கல்லறையிலிருந்து எழுந்து வந்து, 1960, 1970, 1980-களில் பிரசித்திப் பெற்ற பாப் பாடகியாய் விளங்கிய பஃபிசெயிண்ட் மேரி (இசை ஆர்வலர்கள் பஃபி என்று செல்லமாய்க் கொண்டாடுவார்கள்) ‘உலகப் போர் வீரன்’ – என்ற பாடலில் பேசினார்.
கனடாவுக்காக, பிரான்சு தேசத்துக்காக
அமெரிக்காவுக்காக, ருசியாவுக்காக
ஜப்பானுக்காக, அவன் போரிடுகிறான்
இந்த வழியில் யுத்தத்துக்கு
அவன் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறான்.
சாதாரணனின் இந்த எதிர்பார்ப்பு சாத்தியப்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, அவன் தொடர்ந்து யுத்தம் செய்து கொண்டே போகிறான். மரணித்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் பெயர் கூட வரலாற்றுப் புத்தக மடிப்புக்குள் பதிவாவதில்லை.
உச்சியில் நின்று
நிகழ்த்தப்படும் சண்டையில்
எந்தத் தொடர்புமற்று
தீயுண்டவனின்
மனதில் நேற்றென்ன இருந்ததென்று
எழுத இயலாமல் போகிறதெனக்கு இப்போதும்…
அப்போதைப்போல்
என்கிறார் இலக்குமி குமாரன் . இலக்குமி குமாரன் எழுந்து வருகிற இந்த இடம், வரலாற்றின் தோரணையை ஆட்டிப் பார்க்கிறது. முன்னர் எழுதப்பட்ட, முன்னர் பேசப்பட்ட, முன்னர் பதிவு செய்யப்பட்ட வரலாற்று உளவியல் சிக்கல், அவரையும் சிக்கலுக்குள்ளாக்கிறது.

வரலாற்றை வடிக்கும் இந்த உளவியல் சுருக்கு முடிச்சிலிருந்து விடுபடுதல் எவ்வாறு? இலக்குமி குமாரனின் கவித்துவமாய்ப் பீறிடும் கேள்விக்கு, பஃபியின் பாடல் பதிலாய் முளைக்கிறது
யுத்தத்தின் மூலம் யுத்தத்துக்கு முடிவு கொண்டு வந்து விட முடியும் என்று நம்புகிற, நம்ப வைக்கப்பட்டிருக்கிற சாதாரண மனிதனை அந்த எண்ணத் தொகுப்பிலிருந்து விடுவிப்பதன் மூலமே விடுவிக்க முடியும்.
அவனின்றிக் கொலையாடல்கள்
தொடர முடியாது
அவன் உலகின் போர்வீரன் (Universal Soldier)
அவனே குற்றம் சுமக்கவேண்டியவன்.
இனியும் கட்டளைகள்
மேலிருந்து,
தொலைதூரத்திலிருந்து இறங்குதல் கூடாது
அவனிடமிருந்து, உங்களிடமிருந்து
என்னிடமிருந்து உதிக்க வேண்டும்
சகோதரர்களே,
யுத்தத்துக்கு முடிவு கொண்டு வருவது
இதுகாறும் நடந்த வழியிலல்ல
ஒரு கவிதை எழுதும் வினாக்களுக்கு, இன்னொரு கவிதை விடையாகி, தொடர்ச்சி தரும் இந்த இணைவு அபூர்வம். உண்மை கவிதையாகப் பயணிக்கும் போதில் சாத்தியமாகிறது இந்த இணைவு.

தங்கள் பகுதியில் ஆற்றுமணல் கொள்ளை போவதை காணும் ஆற்றோர கிராம மக்கள் லாரிகளையும், ஒப்பந்தக்காரர்களையும் சிறைப்பிடித்து, கொள்ளையருக்கு உதவி செய்ய வரும் போலீசையும் அரசு அதிகாரிகளையும் முற்றுகையிடுகிறார்கள்.

சமீபத்தில்தான் கட்டி முடிக்கபட்ட மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி (Overhead tank) இடிந்து சரியப்போவதை – அதில் நடந்த ஊழலை எதிர்த்து சொந்த ஊராட்சி மன்றத் தலைவரை, துணையாய் இருந்த அதிகாரிகளைக் கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுகிற ஊர்மக்கள்.

காடுகள் அழிக்கப்படுவதால், சுற்றுச்சூழல் நாசத்தால், மலைகளிலிருந்தும், வனத்திலிருந்தும் இறங்கி வந்த விலங்குகள் வேளாண்மைப் பயிரை நாசம் செய்வதை விரட்டியடிப்பது மட்டுமல்ல; வனத்துறை அதிகாரிகளை மறித்து கேள்வி போடும் வட்டார மக்கள்.

‘கோமாரி’ நோய் வந்த ஆடுகள் கூட்டம் கூட்டமாய் செத்து விழ, முறையிட்ட பின்னும் கண்டு கொள்ளாமலிருக்கும் கால்நடை அதிகாரிகளை வரவழைக்க, செத்த ஆடுகளைச் சாலையில் பரப்பி மறியல் செய்யும் விவசாயிகள்.

இனியும் தொலைதூரத்திலிருந்து, வரும் கட்டளைகளை நாங்கள் ஏற்க முடியாது: இனி “கட்டளைகள் எம்மிடமிருந்து உதிக்கவேண்டும்: எங்கள் வாழ்வை நாங்களே நிறைவு செய்வோம்” என்று இவர்கள் சொல்கிறார்கள்.

அந்நியப்பட்டு நிற்கும் அரசை மட்டுமல்ல: விரோதமாக மாறியிருக்கும் அரசியல்வாதிகளையும் கைத்தலத்தில் கொண்டு வருகிற காரியம் செய்கிறார்கள். பகுதிகளில் சிறு சிறு அளவில் நடைபெறும் கிளர்ச்சிகள், உச்சாணியில் திமிராய் உட்கார்ந்திருக்கும் அதிகாரத்தினரைத் தம்மை நோக்கி கீழே இழுத்து வரும் முன்னெடுப்புகள் தாம்.

ஆளும் கட்சியியானால் கொள்ளையடிக்கவும், எதிர்க்கட்சிகளாய் இருந்தால் கொள்ளையில் பங்கு போடவும், அடுத்த தேர்தலுக்கான குயுக்திகளை வகுக்கவுமே அரசியல் இயக்கங்களுக்கு காலம் சரியாயிருக்கிறது. அங்கங்கு வெடிக்கும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு முன்னெடுக்கவோ, மக்கள் திரள் போராட்டங்களைத் திட்டமிட்டு நடத்தவோ, கவனமற்று வலிமையும் அற்று மக்களின் எதிர்நிலைப்பாடுகளில் இயங்குகின்றன.

மக்கள் தமது கையில் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கான இந்த முண்டுதல் சனநாயகத்தின் மொழி. தமக்கான சனநாயகத்தை நிறுவிக் கொள்கையில் வரலாற்றையும் தாமே பதிவு செய்துகொள்ளும் சனநாயகமும் பெறுவார்கள் என்பதை இவ்விரு கவிதைகளும் எடுத்துவருகின்றன.

கோயில் கட்டியபோது கல்விழுந்து செத்த முனியன், இனி செப்பேட்டில் தன்னைத்தானே பதிவு செய்து கொள்வான். ஷாஜகான் புதை குழியைச் சலவைக் கல் கொண்டு அலங்கரித்த மாரியம்மாள் இனி எழுதப்படும் வரலாற்றில் அவளே எழுத்தாக இருப்பாள்.

உண்மையைச் சுமந்து பயணிக்கும் கவிதைகள் நமக்குப் பக்கத்தில், நம்மில் பயணிக்கின்றன. எதிர்வரும் காலத்தில், ஏதாவதொரு சூழல் காரணமாய் படைப்பாளிகள் நம்மை (சமுதாயத்தை) கைவிட்டாலும் நாம் இத்தகு கவிதைகளைக் கைவிட முடியாது.

(கணையாழி, ஏப்ரல் 2019)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி