பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2010 - இந்தியா

கி.ரா 88-வது பிறந்த நாள் விழா & கரிசல் கட்டளை இலக்கிய விருது வழங்கும் விழா - 16 செப்டம்பர் 2010

புதுச்சேரியில் கிரா.வின் அரசுக் குடியிருப்பில் ஓ-4 வீட்டின் மொட்டை மாடியில் கி.ரா 88-வது பிறந்த நாள் விழா நடந்தது. கி.ரா ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் (கடந்த 6 வருடங்களாக) கரிசல் கட்டளை இலக்கிய விருதை தரமான சிற்றிதழுக்கு வழங்குகிறார். பிறந்த நாள் விழாவை கி.ரா.வின் அபிமானிகளும், நண்பர்களும் தான் நடத்துகின்றனர். விழா நடக்கும் நாளுக்கு முன்பாக எல்லோருக்கும் செவி வழிச் செய்திகளாகப் போய்ச் சேரும்.





விழாவில் எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், கழனியூரன், குரு.ராதாகிருஷ்ணன், முனைவர் க.பஞ்சாங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆய்வாளர் சுப்ரமணியன் எழுதிய ' உபதேசியார் சவரிராயப்ப பிள்ளை வரலாறு ' நூலை குரு.ராதாகிருஷ்ணன் கி.ரா.வுக்கு அளித்தார். படத்தில் பா.செயப்பிரகாசம், கரிசல் கட்டளை இலக்கிய விருது பெறும் ' மந்திரச்சிமிழ் ' சிற்றிதழ் ஆசிரியர், முனைவர் க.பஞ்சாங்கம் ஆகியோர் இருக்கின்றனர்.


மாணவர் சாரங்கபாணி நினைவு நாள் - 15.03.2010



மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர் சாரங்கபாணி இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தாய்மொழிக் காக்க தன்னுயிரை தீயினுக்குக் கொடுத்து இந்தி ஆதிக்கத்தைத் தடுத்தான் என்பது மொழிப் போராட்ட வரலாறு. இதே நாளில் 1965இல் ஈகியாய் தமிழர் தம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவமணி சாரங்கபாணியின் நினைவு நாள் சிறப்புக் கூட்டம் மயிலாடுதுறை வருவாய் அலுவலர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திரு.நாக.இரகுபதி தலைமை தாங்கினார். இந்த விழாவில் ஏவிசிக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் த.செயராமன், தமிழறிஞர் முனைவர் கி.செம்பியன், மயிலாடுதுறை முத்தமிழ்மன்றத் தலைவர் சிவ.கோபாலகிருட்டினன், தமிழர் உரிமை இயக்க அமைப்பாளர் பேராசிரியர் இரா.முரளிதரன் ஆகியோர் உரையாற்றினார்கள். மொழிப் போராட்டக் களவீரர், எழுத்தாளர், கவிஞர் சூரியதீபன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவிற்கு ஏவிசி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு வரவேற்புரையாற்றினார். தமிழ்ச் சான்றோர் ந.கலியபெருமாள் நன்றி கூறினார். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் திரண்டுவந்து விழாவைச் சிறப்பித்தார்கள். தமிழ்த்திணையின் ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தமிழ்த்திணைக்காக ஒளிப்படங்களை எடுத்தார்.
- தமிழ்த்திணைக்காக மயிலாடுதுறையிலிருந்து நிலவன் (சிறப்புச் செய்தியாளர்)

நன்றி: தமிழ் பார்வை


இலக்கியம் நிகழ்ச்சி, புதுச்சேரி - ஏப்ரல் 2010

இலங்கை-மலையகத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவா ஈழத்து இலக்கியப் போக்குகள் குறித்து உரையாற்றுவார். எழுத்தாளர் சூரியதீபன் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா தலைமையில் விழா நடந்தது.


நன்றி: முனைவர் மு.இளங்கோவன்


கோவையில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கும், 13.06.2010 
13.06.2010 ஞாயிறு அன்று கோவையில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கும் நடைபெற்றது. தமிழ்நேயம் சஞ்சிகை இந்த நிகழ்ச்சியை ஒன்றிணைந்து நடத்தியது.

பூரணச்சந்திரன்,  பா.செயப்பிரகாசம், மற்றும் அருள்திரு பிலிப் சுதாகர், மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் ப.மருதநாயகம் போன்றவர்கள் இந்தக் கருத்தரங்கில் பங்கு கொண்டு உரையாற்றினர் .

புதுவை தமிழ்ப் படைப்பாளிகள் பேரவைத் தலைவர் பா.செயப்பிரகாசம், "தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தினமும் தாக்கப்படுகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. 133 நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க பள்ளிகள் இல்லை. இங்கு தமிழ்ப் பள்ளிகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி அளிக்க வேண்டும்" என்றார்.

விழாவில் தமிழ் மலர் 2010 என்னும் நூலை பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி வெளியிட்டார். தமிழ்நேயம் ஆசிரியர் கோவை ஞானி வரவேற்றார். ஈரோடு தமிழர் வாழ்வுரிமை இயக்க செயலர் கண.குறிஞ்சி ஆய்வுரை வழங்கினார். திண்டிவனம் மண் மொழி ஆசிரியர் ராசேந்திர சோழன், மருத்துவர் அரங்கசாமி, வெப்துனியா ஆசிரியர் அய்யநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ்க் கல்வி, தமிழ் வரலாறு, தமிழியக்கம், தமிழ் நாகரிகம் பற்றி தமிழறிஞர்களின் 22 ஆய்வுக்கட்டுரைகளும், சங்க இலக்கியம், புலம்பெயர் தமிழிலக்கியம் குறித்த தமிழியல் ஆய்வாளர்களின் 20 கட்டுரைகளும் தமிழ் மலர் 2010 நூலில் இடம் பெற்றுள்ளன.

நன்றி: தினமணி


தமிழக மக்கள் சார்பாக ஐ.நா.வுக்கு நன்றி - சென்னை யுனிசெஃபில் எழுத்தாளர்கள் கடிதம்
ஜுலை 08 , 2010

இலங்கையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று நடத்தப்பட்ட போர்க்குற்றம் தொடர்பாக ஐநா பொதுச்செயலர் பான்கிமூன் மூவர் குழு நியமித்ததற்கு நன்றி தெரிவித்து, சென்னை யுனிசெஃப்ப் அலுவலகத்தில் நேற்று எழுத்தாளர்கள் கடிதம் அளித்தனர்.

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், இயக்குநரும் பத்திரிகையாளருமான புகழேந்தி தங்கராஜ் தலைமையிலான குழுவினர், அடையாறில் உள்ள யுனிசெஃப் அலுவலகத்தில் உள்ள பொறுப்பாளரிடம் இக்கடிதத்தை வழங்கினார்.

அக்கடித விவரம்:

ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் உயர்திரு. பான் கீ மூன் அவர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களின் சார்பில் பணிவான வணக்கங்கள்.

2008 - 2009ல், இலங்கை அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையில் சம்பந்தப்பட்ட போர்க்குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க மூவர் குழு ஒன்றை நியமித்தமைக்காக 7 கோடி தமிழக மக்கள் சார்பில் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்றுகுவித்த இலங்கை, தன்னுடைய அராஜகமும் அத்துமீறலும் அம்பலமாகிவிடும் என்கிற அச்சத்தால்- ஐ.நா. குழுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இரு நாட்களுக்குமுன், 6.7.2010 அன்று, கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன், சமூக விரோத கும்பல் ஒன்றின் ரவுடியிசம் ராஜபக்சே அரசின் சார்பில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இலங்கை அமைச்சர் ஒருவரே அதற்குத் தலைமை தாங்கியிருப்பது, ஐ.நா.வுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வெளிப்படையான அச்சுறுத்தல். தமிழகத்தின் சார்பில், இலங்கை அரசின் இந்த அடாவடித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இலங்கையின் இத்தகைய மிரட்டல்களுக்குப் பணியாமல், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையைத் தாமதமில்லாமல் ஐ.நா. தொடங்கவேண்டும் என்று தாய்த் தமிழகத்தின் சார்பில் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் தமிழர்கள் எங்களது தொப்புள்கொடி உறவுகள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும், உலக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் உங்கள் வாயிலாக, ஐ.நா. நீதிவழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி