யுத்தம் தின்ற பெண்கள்


குழந்தைகள் சுறுசுறுப்பானவர்கள். குறும்புத்தனம் கொண்டவர்கள். ஓரிடத்தில் நிற்காமல் பறக்கும் அலைவை தட்டாம் பூச்சிகளுக்குத் தந்திருக்கக் கூடும். சர்ரென்று கீழிறங்கி, 'வுய்யென' மேலேறிப் பாய்வதை தைலான் பறவைகளுக்கு அளித்திருப்பார்கள்.
குறும்புத் தனம் செய் அது
மிகச் சரியானது
செங்குத்துச் சுவர்களின்
மேல் ஏறு!
மரங்களின் மேல் தாவு!
ஒரு கப்பலோட்டியைப் போல்
சைக்கிளை ஓட்டிச் செல்!
நீ அறிய வேண்டியது
இந்தக் கறுப்பு மண்ணிலே
உனக்கென ஒரு சொர்க்கத்தை
எப்படி உருவாக்கிக் கொள்ளவேண்டும்
என்பதைத்தான்
- துருக்கிக் கவிஞன் நசீம் இக்கத்தின் குழந்தைகள் இவர்கள். நம்முடைய குழந்தைகளும் காலில் கட்டிவிட்ட சக்கரங்களால் தமக்கென ஒரு சொர்க்கத்தை சமைத்துக் கொண்டே திரிவார்கள். அடக்க ஒடுக்கமாய் பணிவாய் இருப்பதில்லை. அப்படி இருந்தால் குழந்தையில்லை.

பதுங்குகுழி என்றால் என்ன? எங்கே இருக்கிறது? தரையில் கால் பரவாத சமூகவியல் மேதைகள், புத்தகப் புழுவாய் சுவாசிப்போர் புத்தகங்களுக்குள் தேடிக் கண்டுபிடிக்க முயலுவார்கள். தாள்களுக்குள் தேடினால் கிடைக்காது பதுங்குகுழி. அது பிறந்த இடம் ஈழம் என்று தமிழினத்தைச் சார்ந்த ஒரு குழந்தைக்கும் தெரியும். பதுங்குகுழி என்ற புதிய ஆயுதத்தை ஈழத்தமிழர்கள் கண்டுபிடித்தார்கள்.


பதுங்கு குழிகளுக்குள் அடக்கி வைக்க முயலுகையில், குழந்தைகள் மண்டை வெடிப்பதுபோல் துடிப்பார்கள். விளையாட வெளியேறுவார்கள். குண்டு வீசிய விமானம் கண்பார்வையிலிருந்து மறைந்ததும் வாராய் வாராய் எனக் கூப்பிடும் கட்டற்ற வெளியின் அழைப்புக்கு செவிமடுப்பார்கள். அந்தச் சுதந்திரத்தையாவது தருவோம் என எண்ணும் தாய்மார்கள் பிள்ளைகள் பாதுகாப்புக்காக வெளியே வருவார்கள்.

சம்பவம் நடந்த இடம் புதுக்குடியிருப்பு போகும் பாதையில் இரண்டு கல் தொலைவிலுள்ள சுதந்திரபுரம். அது 2009-ன் மே மாதம். மூன்று குழந்தைகளுடன் தாய் பதுங்கு குழியிலிருந்து வெளியே வருகிறாள். பிள்ளைகளுக்காக வெளியேறியவள், பத்து வயதுப்பையன் 'ஸெல்'லடிபட்டு ரத்தவிளாறாகக் கிடக்க, மீதியிருந்த இரண்டு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறாள். அவர்களைப் பாதுகாப்பாய் விட்டுவிட்டு திரும்பி வருகிறபோது, பத்து வயதுக்குழந்தை துடித்துத் துடித்துச் சாகிறது. ஒரு பிள்ளை அடிபட்டு விட்டதென்றால் அதைக் காப்பாற்ற ஓடுவாள் தாய். இங்கு இருக்கும் பிள்ளைகளும் இழந்துவிடக்கூடாதே என எண்ணி தப்பிக்க வைக்க ஓடும் தாயைக் காணுகிறோம். இறந்துபோன குழந்தையின் முன், மண்ணில் மண்டியிட்டு கதறிய தாயைக் கண்டபடி பலரும் கடந்து போனார்கள்.

கணவன், பிள்ளை, முதியவர்கள் ஆகியோரைக் காக்கும் பொறுப்பு என்பது ஈழத்தமிழ்ச் சமூகப் பெண்களின் உளவியல் அமைப்பு. இவர்களின் பாதுகாப்பை பிரதானக் கடமையாக ஏற்றுள்ளனர். அதற்கான அர்ப்பணிப்பு என்பதன் நீட்சியாகவே அவர்களின் விதிச்சக்கரம் முடிகிறது. 30 ஆண்டுகள் தமிழ்ச் சமூகத்தைப் புரட்டிப் போட்ட யுத்தம் வகைதொகையற்ற எல்லையில்லாத் தியாகத்துள்ளும் பெண்டிரை நிற்பாட்டிச் சென்றது. யுத்தத்தையும் குடும்பப் பாதுகாப்பையும் ஒரு சேர எதிர்கொள்ள தமிழ்ப்பெண்கள் பழகிவிட்டார்கள்.

ஒரு தாய் தலையில் கடைசியாய் எஞ்சியிருந்த சிறு மூட்டையை வலது கையில் பிடித்துக்கொண்டு, இடதுகையில் இரண்டு வயதுப் பையனை நடத்தியபடி ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடக்கிறாள். முன்னால் போகிறான் ஐந்து வயதுப் பையன். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போகையில் இரு கைகளையும் உயர்த்தியபடி செல்ல வேண்டும். சிங்களச் சிப்பாய் 'ஹேண்ட்ஸ் அப்' என கத்துகிறான். அவனுடைய கத்தலின் அர்த்தம் புரிகிறது ஐந்து வயதுப் பாலகனுக்கு. இரு கைகளையும் உயர்த்தினான். இரண்டு வயதுப் பிள்ளைக்குத் தெரியவில்லை. தாய் பதறியபடி, அச்சிறுபிள்ளையின் இரு கைகளையும் பிடித்து உயர்த்தி நிற்கிறாள். பிடிமானம் அற்ற மூட்டை கீழே விழுந்து விட்டது. பகையனைத்தும் ஒன்று திரண்டு மூட்டையாய் வந்ததுபோல், வன்மத்துடன் சிப்பாய் அதை நோக்கிச் சுட்டுத் தள்ளுகிறான். மூட்டைக்குள்ளிருந்த ஓட்டை உடைசல் பாத்திரங்கள் 'சலா' ரென்ற சத்தத்துடன் சிதறிப் பறந்தன.

இரண்டு வயது ஏதோன்றையும் புரிந்து கொள்ளும் வயதில்லை. எனக்கு என்ன நடக்கிறது? நீ என்னை எங்கே கொண்டுபோகிறாய் என்ற கேள்விகள்தான் அம்மாவைக் காணும் பார்வையில் வெளிப்படுகின்றன. இராணுவத்தானைக் காணும் சிறுவிழிகளில் அச்சமில்லை. வியப்புமட்டும் தொக்கிக்கிடக்க, அச்சமெல்லாம் இராணுத்தானுக்குத்தான். பெண்ணென்ற போதும் சிறுபாலகன் என்றபோதும் அவர்களுக்கு விடுதலைப் புலிகளாகவே தென்படுகிறார்கள். கருப்பையில் கிடக்கும் சிசுவென்றாலும் அவர்களுக்கு விடுதலைப்புலியே.

2

குரங்கு, புலி, சிங்கம் போன்ற மிருகங்கள் தன்னுடன் போட்டியிடும் ஆண் விலங்கை சண்டையில் வெல்லும். வெற்றிக்குப் பின் பெட்டையைப் புணர்ச்சி கொள்ளும். மிருகங்களின் இந்த உயரியல் குணாம்சம் மனித விலங்குகளிடம் நிலவுகிறது. ஒரு மக்கள் குழு அல்லது ஒரு இனக்குழு வெற்றி கொண்டதும், வெற்றியடைந்த ராணுவத்தின் யதார்த்த குணம் இதுவாகி விடுகிறது. தோல்வியடைந்த மக்களை அடிமைப்பட்ட சமூகமாக கருதி அவர்கள் மீது எல்லா வன்முறைகளையும் நிகழ்த்தும் உரிமை கொண்டதாகக் கருதுகிறார்கள். முதற்பலியாக இவர்கள் கையாள்வது பெண்களையே. தனித்தனியாகவும், கூட்டாகவும், பெண்களை வன்புணர்ச்சி கொள்கிறார்கள்.

இரண்டாம் உலகயுத்தத்தில் கொரியாவை சப்பான் கைப்பற்றியது. (அப்போது கொரியா பிரிவுபட்டிருக்கவில்லை. 1951-ல் தான் தென் கொரியா, வடகொரியா எனப் பிரிந்தது) வெற்றிபெற்ற சப்பானிய ராணுவத்தினரின் களைப்பைப் போக்க ராணுவத்தினரைச் சுகப்படுத்தும் பெண்கள் அணியை (Comfort Women) உருவாக்கினர். கைது செய்யப்பட்ட கொரியப் பெண்கள் காயமுற்ற சிப்பாய்களுக்கு முன் நிர்வாணமாக நடமாடப் பணிக்கப்பட்டார்கள். சிப்பாய்களின் காயங்களுக்கு மருந்திடுவது, கட்டுக்கட்டுவது, சிப்பாய்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வது என சேவை செய்தார்கள். சுருக்கமாகக் கூறின், இராணுவத்துக்கு 'பெண்கள்' சப்ளை செய்யப்பட்டார்கள். வாலிபப் பெண்கள் போதாமல் ஆனபோது, இன்னும் பூப்படையாத 11, 12, 13 வயதுச் சிறுமியர் கொண்டுவரப்பட்டார்கள்.

செர்பானியர்கள், போஸ்னியர் மீது நடத்திய இன ஒடுக்கமுறையின் போது, போஸ்னியாவின் இஸ்லாமியப் பெண்களை சிறைப்படுத்தி, இராணுவக் கொட்டடிகளில் கூட்டம் கூட்டமாய் கருத்தரிக்க வைத்தனர். ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் சிங்களக் கருவை தன் கருப்பையில் ஏந்தியிருக்க வேண்டுமென்ற சிங்களக் காடையர்களது செயல்கள் போல, அன்று பெரும்பான்மை இனமான செர்பானியர்கள் செய்தனர்.

பெண் போராளிகளை வன்புணர்ச்சி செய்கையில் சிங்களச் சிப்பாய்கள் கூடிக் களிப்பார்கள். புணர்ச்சி செய்வதை படம் எடுத்துக் கொண்டாடுவார்கள்.

பெண் போராளிகளிடமிருந்து கைப்பற்றிய 'வாக்கிடாக்கிகளில்' தளபதிகளின் எண்களை 'செட்' செய்து பிறகு அந்தப் போராளிகளை வன்புணர்ச்சி செய்கையில், அவர்களின் கத்தலையும் கதறலையும் அவைகளில் கேட்குமாறு செய்வார்கள். கேட்கும் தளபதிகள் துடித்துப் போவார்கள்.  பெண்கள் சுகிப்பும், பெண்களின் வேதனைக்குரல் கேட்டு புலிப்போராளிகளின் பித்துற்ற நிலையும் இருவெற்றிகளாய் கொள்ளப்பட்டன.
ஈழமண்ணில் எரியும் நெருப்பாய்
தமிழீழப் பெண்கள்
- மனித உரிமைப் பேராளி வழக்கறிஞர் பாண்டிமாதேவி இயக்கிய இந்த ஆவணப்படம் யுத்தம் தின்ற பெண்களைப் பற்றிப் பேசுகிறது. யுத்தம் நடந்த கணங்களிலும், யுத்தம் உச்சத்துக்குப் போன நாட்களிலும் களத்தில் பெண்கள் சந்தித்தவை மட்டுமே அல்ல. யுத்த ஓய்வுக்குப் பின்னான காலத்தில் தமிழ்ப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை ஆவணப்படம் விவரிக்கிறது.

ஈழத் தமிழ்ப்பெண்கள் வித்தியாசமானவர்கள். அறுபது ஆண்டுகளின் இன ஒடுக்குமுறையில் கருவாகி, எதிர்கொண்டு தங்களைத் தாங்களே வார்த்துக் கொண்டவர்கள். இந்த அவர்களின் தகைமையை 'எரியும் நெருப்பாய் தமிழீழப் பெண்கள்' என்ற தலைப்பு தாங்கிப் பிடிக்கிறது. தலைப்பு கோபத்தை மூட்டிய போதும், சட, படவென்று வெடிக்கும் சினமூட்டுதலினும் உட்கொண்டு உணர்தல் முதன்மையாய் நிறுத்தப்படுதலால், மெல்லிசாய் இழையோடும் சோக விவரணையும் பின்னணியில் ஒலிக்கும் குரலுமாய் தொடங்குகிறது.
மடிந்து போன கணவர்கள்,
தொலைந்து போன மழலைகள்,
பிரிந்து போன உறவுகள்,
ஏங்கித் தவிக்கும் இளங் கைம்பெண்கள்
லட்சம் தொட்டது
என சோகக்கவிதை கிளப்புகின்றன வரிகள்.

'சிங்கள அரசு செப்பிய பொய்யை இந்திய அரசு ஏற்று மொழிந்தது. உலகெங்கும் சாற்றிட முனைந்தது. யுத்தத்தின் போது மக்கள் யாரும் மாண்டிடவில்லை – சிங்கள அரசு செப்பிச் சிலிர்த்தது. உண்மை என்றது இந்திய உதடு, உண்மை அதிலே ஒரு துளி இல்லை' – என கூட்டுக் கொலையாளிகள் இருவரையும் 'சட்' டென்று நிறுத்துகிறது காட்சி. எவ்வளவு வன்மையான வாசகங்கள்! உண்மையை உச்சரிக்கும் ஒவ்வொரு வாசகமும் வன்மையானவை.

வீதிக்கு வீதி ராணுவக் காவல், பெண்கள் மீது வன்கொடுமை, வெள்ளை வேன் கடத்தல்கள், தாயும் மகளும் இராணுவத்தால் கர்ப்பம், அனைத்தையும் மறுக்கும் அரசு என காட்சி காட்சியாய் கட்டி அடுக்கப்படுகிறது. அடுக்குகள் ஆவணக் கட்டுமானமாய் நிமிர நிமிர்ந்து உட்காருகிறோம். இத்தனை கொடூரங்கள் ஆவணப்படுத்தப்பட்டபோதும் 'தனித்தமிழீழம் தீர்வாகாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் அரசியல் தீர்வு காணவேண்டும்' என்றபடி, வரலாறு அறியா காங்கிரஸ், பா.ஜ.க. பேசினால் பரவாயில்லை. எல்லாம் அறிந்த மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சியினரும் இந்த உபதேசிப்பு செய்கிறார்கள்.  இந்திய இடதுசாரிகளின் 'மேல்மன சோசலிசவாதமும், அடிமன சிங்கள இனவாதமும்' புரிந்து நமக்குப் புல்லரித்துப் போகிறது.

புகைப்படம் என்ற காட்சி ஊடகம் மட்டுமே அப்போது நடமாடிய காலம். அமெரிக்க விமானங்களிலிருந்து நழுவிய 'நாப்பாம்' குண்டுகளில் உடை எரிந்து உடல் எரிந்த தீக்காயங்களுடன் அம்மணமாய் ஓடிவரும் சிறுமியினதும் அவளை அருகணைந்து கதறி ஓடிவரும் பிள்ளைகளினதும் ஒற்றைப் புகைப்படம் அமெரிக்காவை குற்றங்களின் நிலமாய் ஆட்டிப் படைத்தது. இலங்கை இனப்படுகொலையின் போது தொலைக்காட்சி ஊடகங்கள் உலக அரங்கில் வீச்சோடு அசைந்து கொண்டிருந்தன. அதைக் கணக்கில் எடுக்காமல், சாட்சியமற்ற போரை நடத்தியதாய் இலங்கை கனவில் லயித்தது.
தமிழன் ரத்தம் தரையில் ஓடியது.
ஓடிய ரத்தம் உரிமைப் போருக்கு உரமானது.
சிங்கள ராணுவம் வேட்டைக்கு வந்தது.
புலிகள் கூட்டம் திருப்பியடித்தது
ஈழமண்ணில் இடியொலி கேட்டது
இந்திய மண்ணில் எதிரொலி கேட்டது
எதிரொலி என்ன? காலடியில் கதறும் குழந்தையை தோள் மேல் தூக்கிப் போட்டுத் தட்டிக் கொடுத்ததோ? இடுப்பில் இடுக்கி விழி நீர் துடைத்து ஆசுவாசம் கொள்ள வைத்ததோ? இவ்வாறெல்லாம் எதிரொலிக்குமென எண்ணுவது பேதமை. ஏதிலிகளாய் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம் என ஒன்றரை லட்சம் பேரை உள்ளே வாங்கி வைத்துக் கொண்டே, இன்னொரு இனிய முகத்தை இலங்கைக்குக் காட்டிற்று. இதை காட்சிகளும் உரையும் விளக்குப் பிடித்துக் காட்டுகின்றன.

'சிங்கள ராணுவம் சிறியவர், பெரியவர், பெண்கள் உயிரைக் குடித்தது. புலிகள் கூட்டம் புயலாய்க் கிளம்பியது. சிங்கள ராணுவம் வல்லுறவால் தமிழச்சிகள் மானம் அழித்தது. (உரை வடிவமும் காட்சி வடிவம் இணைந்து நடக்கின்றன). பெண் புலிகள் புதிதாய்ப் பிறந்தனர். நாச சிங்களர் நர்த்தனமாடினர். கொத்துக் குண்டுகளால் தமிழர் செத்து மடிந்தனர். அயலிடம் தேடிய மக்களை, புகலிடம் தருவதாய் அழைத்தது ராணுவம். போரற்ற பகுதி என்று புகுந்த மக்களை பொசுக்கித் தள்ளிற்று. மடிந்து போன கணவர்கள், தொலைந்துபோன மழலைகள், பிரிந்து போன உறவுகள், ஏங்கித் தவிக்கும், இளங் கைம்பெண்கள் இலட்சம் தொட்டது. கைம்பெண்கள் கடைச் சரக்காகினர். பிள்ளைகள் முன்னே பெற்றவர் அம்மணம். சிங்கள ராணுவம் ஏவிய கொடுமை. பார்த்திடப் பார்த்திட இதயம் இற்றது.

பாரோர் பார்த்து - எழுதுங்கள் தீர்ப்பு

இந்தப் புள்ளியில் காட்சி மாறுகிறது. உலகமய மகாமுனி மன்மோகனும் – சூனியக்காரி சோனியாவும் கொலையாளன் இராசபக்சஷேயை கும்பிட்டு கைகுலுக்கும் காட்சிகள் வருகின்றன.

'சிங்கள அரசு செப்பிய பொய்யை இந்திய அரசு ஏற்று மொழிந்தது. உலகெங்கும் சாற்றிட முனைந்தது. யுத்தத்தின் போது, மக்கள் யாரும் மாண்டிடவில்லை. சிங்கள அரசு செப்பிச் சிரித்தது. உண்மை அதிலே மெல்லப் புதைந்தது. ஊமைத் தமிழர் உயிர்கள் முடிந்த உண்மை மெல்ல வெளியே வந்தது' (இங்கே, சேனல்-4ன் இயக்குநர் கெலம் மெக்ரேயும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளையும் தரிசனமாகின்றனர் காட்சிகளில்) எவர் உலகுக்கு உண்மைகளைக் கொண்டு வந்து சேர்த்தார்களோ, அவர்கள் இதனால் கௌரவிக்கப்படுகின்றனர். போராளிகள் பற்றித் தெளிந்தவர்கள், 'பொடியர்கள்' வென்று வருவார்கள் என உறுதியாக நம்பினார்கள். ஆனால் சர்வதேச சதி வளையத்தை அவர்கள் அறியவில்லை. சனல்-4 வந்ததின் பின்தான் உலகம் அசைந்தது. அதன் முன்னர் கூவிக்கூவிப் பார்த்தும் தமிழர் கூவல் எட்டியதில்லை உலகின் காதுகளில்.

1948-லிருந்து தொடங்கிற்று இலங்கையின் ஓரவஞ்சனைகள். 'நேருவந்தார், சாஸ்திரி வந்தார்,  இந்திரா வந்தார் எதுவும் அசையவில்லை' என்று சிறுசிறு வார்த்தைகள். சின்ன சின்னத் துண்டுகளாய் உதிரும் வார்த்தைகளில் நெருப்பு கோர்க்கப்படுகிறது. அரசூர் தில்லை நாயகத்தின் உரைவடிவம் கேட்கையில், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளான புதுமைப்பித்தனும் கி. ராஜநாராயணனும் நினைவில் தோன்றுகிறார்கள். சபாஷ், பேஷ் – போன்ற மக்கள் மொழியை அதிகமாய்க் கையாண்ட படைப்பு மன்னர்கள் இவர்கள் தாம். ஆரசூர் தில்லை நாயகத்தின் உரைத்திறனுக்கும் சபாஷீம் பேஷீம்!

ஆரம்பத்தில் பேராசிரியர் சரசுவதி குறிப்பிடுவது போல், ஈழச் சகோதரிகள் மீது ஏவிவிட்ட வங்கொடுமையின் வரலாற்றில் சிறுதுளி இது. கையிழந்து, காலிழந்து, கணவனிழந்து, மகனிழந்து, உற்றார், உறவிழந்து, யுத்தத்தின் பின்னரும் நீடிக்கும் அப்பெண்களின் வாதனைகளை நேரில் போய் கண்டுவந்த மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், தொண்டு நிறுவனப் பணியாளர்கள், கிறித்துவப் பாதிரிகள், களத்திலே நின்ற சகோதரிகள் – ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும் மே 19-க்குப் பின்னான கொடும் நிலமைகள் முன்வருகின்றன. ஓராண்டு, ஈராண்டு அல்ல, நான்கு ஆண்டுகள் கடந்தே வெளிப்படுத்தல் சாத்தியமாகியுள்ளது.

களத்தில் இப்போதும் நிற்கிற சகோதரிகளின் வார்த்தைகள் உயிர்ப்புள்ளவை. ஒரு சகோதரியின் வாக்குமூலம் 'முள்ளியவளை, மாஞ்சோலையில் சிங்களக்குடியேற்றங்கள் முழுசாய் நடக்குது. தமிழர்களது காணிகளை எடுத்து, அங்கே சிங்கள ஆட்களை குடியேத்துறாங்க. வன்னி, மாத்தளன், புதுக்குடியிருப்பு – பகுதிகளில் இந்திய அரசின் வீட்டுத் திட்டம் முக்கால்வாசி சிங்கள ஆட்களுக்குத்தான் போகுது. மன்னாரில் இந்திய வீட்டுத் திட்டத்தில் வீடுகள் கொடுத்து, சிங்கள ஆட்களைக் குடியேற்றி அங்க 'மக்கள் வங்கி' என்றும் 'ஓப்பன் பண்ணி', லோன் கொடுத்து எல்லா வசதியும் செய்து கொடுக்கிறாங்க. வட மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம் ஆன இரண்டு பக்கங்களிலும் சாலையெல்லாம் போட்டுக் கொடுத்திருக்காங்க. புதுக்குடியிருப்பு, மாத்தளன், முள்ளியவளை பகுதிகள்ல நாங்க எங்கட இடங்களைக் காணபோகம்னா போகமுடியாது. ஆமியோட அனுமதி வேணும், சிங்கள ஆட்களோட சம்போர்ட் இல்லாம நாங்க அங்க போகமுடியாது. நிம்போடி என்ற அனுமதி பாஸ் இல்லாம எங்க சொந்த காணிகளைப் பாக்க முடியாது. இப்படிப்பட்ட கொடுமைகளையெல்லாம் நாங்க அனுபவிக்கிறோம். இப்பவும் நடந்துக்கிட்டிருக்கு'

'இலங்கைக்கான இந்திய வீட்டுத் திட்டம்' என அறிவிப்புப் பலகை காட்டுகிறது. 'இலங்கையில் இலங்கையர் மட்டுமே உண்டு. இலங்கையில் சிங்களரோ, தமிழரோ, இஸ்லாமியரோ இல்லை' என்று இராசபக்ஷேக்கள் சொன்னபோதும், சொன்னதன் முழுப்பொருள் 'இங்கு சிங்களர் மட்டுமே இலங்கையர்' என்பதுதான். இலங்கைக்கான இந்திய வீட்டுத்திட்டம் என்பது தருக்க ரீதியாய் சென்று சேர வேண்டிய ஆட்களுக்கு போய்ச் சேருகிறது என்பது தெளிவாகிவிடுகிறது.

சிங்கள அரசின் கொடுங்கோல் முகாமலிருந்து தப்பிவந்த ஈழச்சகோதரிகள் மூவர் வாக்குமூலம் தருகிறார்கள். அவர்கள் பெண் போராளிகள்.

'பிள்ளைகளுக்கு (போராளிகள்) புனர்வாழ்வு என்று சொல்லி, தையல், கம்ப்யூட்டர் கற்றுக் கொடுப்பதாக அழைத்துச் செல்கிறார்கள். புனர்வாழ்வு மையத்தில் ஒரு வருசம் கழித்து வெளியே விடுகிறார்கள். நாங்கள் ஐ.நா. சபைக்கு அறிவிக்க வேண்டும் (அவன் கொடுக்கும் உதவித் தொகைக்காக) என்று அடுத்த கட்டமாய் பெண்களை கூட்டிச் செல்கிறார்கள். ஆனால் அந்தப் பிள்ளைகளுக்கு அடுத்த கட்டவாழ்வு தெரியவில்லை. வீடுகளில், உறவுகளில் ஒதுக்கப்படுகிறார்கள். 'நீங்க ஜெயிலில் இருந்திட்டு வந்தீங்க. உங்களை எப்படி வச்சிருந்தாங்கன்னு தெரியாது என்று ஒதுக்குகிறார்கள். பெண் போராளிகளுக்கு இரண்டு லட்சம், ஆண் போராளிகளுக்கு ஒன்றரை லட்சம் கடன் கொடுக்கிறார்கள். யாருக்கு? இராணுவத்துக்கும் உளவுத்துறைக்கும் சார்பாய் யார் செயல்படுகிறார்களோ அவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

'நான் கூட மாறி நிக்கிறேன். இயக்கத்தவங்களை நாங்க காட்டிக் கொடுத்தோம். பிறகு அவர்களைப் பிடித்து சித்திரவதை செய்தாங்க' என்று ஒரு சகோதரி பேசுகிறார்.

'அவன் இராணுவ முகாமுக்குப் பின்னால் நடத்துகிற விபச்சார விடுதிக்கு வரணும். அவன் கூப்பிடுகிற நேரமெல்லாம் வரணும். நீ லோன் கட்டாட்டாலும் பரவாயில்லை. நீ எங்களோட இருக்கணும் என்றான். நீ கொடுக்கிற 2 லட்சம் காசுக்காக மானத்தை இழக்கணுமா, சாவதே மேல் என்று தூக்கியெறிஞ்சிட்டு வந்திட்டேன்' என்பது இன்னொரு சகோதரியின் ஒப்புதல்.

கைம்பெண் நிலையை நிறுவ இயலாமலும், கையறு நிலையிலும் அரசு தரும் சலுகையை அடைய முடியாமலும் வாழ்வுக்கும் சாவுக்குமிடையே சுழன்று சுழன்று தவிக்கும் பெண்களின் வதைகளைப் பேசுகிறது படம். இவர்கள் சரிநிகர் சமானமாய் சமர்புரிந்த பெண்புலிகள். அங்கம் இழந்து, ஆதரவற்று, அரசு உதவிக்காய் உடலை விற்றும், விசாரணை என்ற பெயரில் உறிஞ்சியபின் விடுவிக்கப்பட்டும் வெம்புகிறவர்கள்.

ஆவணப்படம் வேறு, குறும்படம் வேறு, திரைப்படம் வேறு - மூன்றும் காட்சி ஊடகம் என்னும் ஒரு கொடியில் பூத்த மலர்கள் என்றாலும் வாசம் தனித்தனி. சுவை தனித்தனி. காட்சி ஊடகத்தின், குறிப்பாய் ஆவணப்பட கலைத் தொழில் நுட்பம் அறியாத ஒரு குழுவினர் பண்ணிய காரியமாய்த் தோன்றவில்லை. புதிய குழுவினருக்கு இத்தனை வல்லமையா? உண்மைகளைச் சேர்க்க வேண்டிய இடத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்ற உணர்த்தி இருந்துவிட்டால், எல்லா வல்லமையும் குவிந்து கொட்டிவிடும். ஒரு படைப்பில் உன்னதம் தானே உருவாகிவிடும். கூட்டுழைப்பால் இதனை நிரூபணமாக்கியுள்ளார் பாண்டிமாதேவி.

ஒரு கலைப்படைப்பு, படைத்தவருக்கும் பார்ப்பவருக்கும் மனநிறைவு அளிப்பது மட்டுமல்ல, மன உளைச்சலையும் தந்து நின்றால், அது வெற்றி. மனநிறைவும், மன உளைச்சலும் கொள்ளச் செய்ததற்காக பாண்டிமாதேவியும் குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள்.

பின்னிருந்து உற்சாசகப்படுத்தி மேற்பார்வையாற்றிய நாடு கடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் பேரா.சரசுவதி நினைக்கப்படுகிறார் இங்கு.

எதைப் படிப்பது என்பதற்கு ஒரு ஞானம் வேண்டும் என்பார்கள். அதுபோலவே, எதைப் பார்ப்பது என்கிற ஞானத்துக்கும் இந்த மாதிரி ஆவணப்படம் ஒரு முன்சான்று.

ஆவணப்படம் - ஈழமண்ணில் எரியும்நெருப்பாய் தமிழீழப்பெண்கள்.
இயக்கம்            - பாண்டிமாதேவி
தயாரிப்பு          - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம், தமிழ்நாடு.
தொடர்புக்கு    - 9444145803, 9444065666

நன்றி: பொங்குதமிழ் - 24 மே 2013

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

படைப்பாளியும் படைப்பும்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்