விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்மம் - விடுதலைப் போராட்டத்திற்கு எதிராய்

பகிர் / Share:

“இனி ஈழவிடுதலை சாத்தியமா?” என்ற (ஆனந்த விகடன் 22-07-2009 ஷோபாசக்தி நேர்காணல்) கேள்விக்கு ‘இல்லை’ என வருகிறது ஷோபாசக்தியின் பதில். இறந்...
“இனி ஈழவிடுதலை சாத்தியமா?” என்ற (ஆனந்த விகடன் 22-07-2009 ஷோபாசக்தி நேர்காணல்) கேள்விக்கு ‘இல்லை’ என வருகிறது ஷோபாசக்தியின் பதில்.

இறந்து போனவர்களுக்கு ‘குழிப்பால்’ விடுதல், இறுதிச் சடங்குகளில் ஒன்று. ‘நாளைக்குப் பால்’ ‘நாளைக்குப்பால்’ - என்று மயானத்தில் அறிவிப்பார் வெட்டியான். இருபதாயிரம் போராளிகளின் கல்லறையிலும் ஒரு லட்சம் மக்களின் புதைகுழிகளிலும், ‘இல்லை’ என்ற பதில் மூலம் குழிப்பால் விடுகிற வேலையை இந்த வெட்டியான் செய்கிறார்.

போராடுகிறவர்களுக்குத் தான் விடுதலை சாத்தியம்.

விடுதலையே
மற்றவர்கள் உன்னிடம்
நம்பிக்கை இழந்தாலும்
என்றென்றைக்கும் நான் மட்டும்
நம்பிக்கை இழக்கப் போவதில்லை

போராட்டத்தின் மீது தொய்விலா நம்பிக்கை வைத்த வால்ட் விட்மன்களுக்கும், நசீம் இமத்துகளுக்கும், ஜீலியஸ் பூசிக்குகளுக்கும், இன்குலாப்புகளுக்கும், புதுவை இரத்தினதுரைக்கும் அது சாத்தியம். நம் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற விடுதலைக் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ளவன் அதற்கான வழி முறைகளைக் கண்டறிந்து மீண்டும் எழுந்து தீருவான்: மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவான். மீண்டும் மீண்டும் எழுதியும், பேசியும், வாழ்ந்தும் தீருவான்.

உலக வரைபடத்தில் செர்பினிய இனப்படுகொலைக்குப் பின் ‘இனி ஒரு போதும் இல்லை’ - என உலகம் உச்சரித்தது. இனி ஒரு போதும் நிகழக்கூடாது என்ற உலகவிருப்பம் அவ்வாறு உறுதியளித்தது. உச்சரித்த நாக்கின் ஈரம் உலருமுன்னே இலங்கை அந்த இடத்துக்கு வந்தது. இனப் படுகொலை நிகழ்த்திய செர்பினிய அதிபர் ஸ்லோபோடன் மிலோசாவிக்கின் கதாநாயக பீடத்தை இலங்கையின் ராசபக்ஷே பிடித்திருந்தான்.

செர்பினியா இனப்படுகொலைக்காக ஸ்லோபோடனை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் உலக அரசுகள் ஒன்றுபட்டு நிறுத்தின. சொல்ல முடியாத சோகக் கதைகளை இலங்கையில் விதைத்த ராசபக்ஷேயை அதுபோல் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்திப் பார்க்க உலக நாடுகள் தயாராக இல்லை. பயங்கரவாதம் எனும் ஒரு சொல்லைக் காட்டி, ராசபக்ஷேயை ஆதரிக்கத் தயாராயிருக்கின்றன. வன்னிக் காடுகளில் வாழ்வு சிதறடிக்கப்பட்டு அனாதரவாய் விடப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு நாளும் நாளும் இம்சித்துவரும் இந்த சர்வ உலகத்தின் பதிலென்ன?.

உலகம் போன வழியில் உள்ளுர் அறிவுஜீவிகளான அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, ஷோபாசக்தி - இன்னும் வெளிப்படாத பெயர்களுடன் பலரும் நடந்து கொண்டேயிருக்கிறார்கள். படுகொலைகளை நடத்திய ராசபக்ஷே அரசை - நேரடி நெறியாளனாக நின்று நிகழ்த்திய இந்தியாவை - இராணுவப் பின்புலமாய் நின்ற ஏகாதிபத்திய சீனாவை - இவர்கள் பயங்கரவாதிகள் என்று விமரிசித்ததில்லை - புலிகளின் பயங்கரவாதம் பற்றி கூச்சலிடும் இந்தப் புண்ணியவாளர்களுக்கு இதற்கு மூலமான இலங்கை அரச பயங்கரவாதமோ, உலக அரச பயங்கரவாதமோ அந்த அளவு தெரிவதில்லை. உலக பயங்கரவாதம் என்று வந்தால், கண்களில் வெண்ணை ஏந்திக் கொள்வார்கள். அ.மார்க்ஸ் உரத்துப் பேசாது ‘சைடு’ வாங்குவார். குருவை விட, சிஷ்யன் ஷோபாசக்தி அதிகமாக ஒதுங்குவார். ஆதவன் தீட்சண்யா பதினாறடி பின்னாலே போய் ஆளே தென்படமாட்டார். இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உறைந்து தேங்கியிருக்கும் துயரம் பற்றி - அதன் மீட்பு பற்றி சில முணு முணுப்புகள், மீதியெல்லாம் எதிர்க் குரல்தவிர இவர்களிடமிருந்து வேறு வெளிப்பட்டதில்லை.

“கடந்த முப்பது வருடங்களில் புலிகள் இயக்கம் ஈழத்தமிழர்களிடையே சனநாயகம், கருத்துரிமை போன்ற விழுமியங்களை ஒட்ட அழித்திருக்கிறது. சிவில் சமூகத்தின் ஒருபகுதியை அது பாஸிசத்தின் ஆதரவாளர்களாக்கியிருக்கிறது. தொழிற்சங்கம், சாதியொழிப்பு இயக்கங்கள், இடதுசாரி அரசியல் அமைப்புகள் போன்ற அத்தனை முற்போக்கு இயக்கங்களையும் புலிகள் இயக்கம் அழித்து அரசியலற்ற ஆயுதக் கலாசாரத்தில் மூழ்கிய புதிய தலைமுறைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது.” (தீராநதி ஜூலை 2009 பக்கம் 61) என்று சீறிப்பாய்கிற ஷோபாசக்திகள் - வெள்ளை வேன் கடத்தல்கள் _ கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி கும்பலால் அடையாளம் காட்டி உயிர் அழித்தல்கள் _ ‘புலிகள் கடலுக்கு; பெண்கள் உங்களுக்கு’ என கோத்தபய ராஜபக்சே முன்னுரைத்த மந்திரம் ராணுவத்தினரால் நடைமுறைப்படுத்தப்படும் காட்சிகள் _ இதற்காகவெல்லாம் இவர்களின் நெற்றிக் கண் திறவுபடவில்லை. புலிகள் என்றால் மட்டும் நெற்றிக்கண் நெருப்புதிர்க்கும்.

II

“யுத்தம் முடிவுக்கு வந்தது குறித்து ஒரு இலங்கைக் குடிமகனாக நான் நிம்மதியடைகிறேன்.” (தீராநதி - ஜூலை 2009 - பக்கம் 63) ஷோபா சக்தி தன்னை இலங்கைக் குடிமகன் என்று ஒப்புக் கொள்கிறார்.

(பிரான்சிலிருந்து சென்னை வந்த சுகன் இலங்கை தேசீயகீதம் இசைக்கிறார். சென்னை லயோலாக் கல்லூரி எதிரில் உள்ள அய்க்கப் அரங்கம் அதிர்ச்சியில் ஆடிப் போனது. லீனாமணிமேகலை ஏற்பாடு செய்த ஈழக் கவிதைகள் குறித்த விமர்சனக் கூட்டத்தில் இது நடந்தது. ஷோபா சக்தி, சுகன் இருவரும் புலிகளின் தோல்வியைக் கொண்டாட பிரான்சிலிருந்து இங்கு வந்திருக்கலாம்.)

நான் என்னை இந்தியக் குடிமகன் என்று ஒரு போதும் சொல்வதில்லை. முதலில் நான் மனிதன். இரண்டாவதாய் நான் தமிழன். பிறகு நான் சர்வதேச மனிதன். இடையிலுள்ள இந்தியன் என்பதை நீ விட்டு விட்டாயே என்கிறார்கள் சிலர். நான் இந்தியன் இல்லை. இந்தியனாக இருப்பவர் எவரும் மனிதனாக இல்லை. நான் தமிழனாக இருப்பதால் மனிதனாக இருக்கிறேன் என்பது இயல்பானது போலவே, இந்தியன் எவரும் மனிதனாக இல்லாததும் இயல்பானது.

இல்லையென்றால் இங்கே இருபது கிலோமீட்டர் தூரத்தில் பல்லாயிரக்கணக்கில் மனித உயிர்கள் கொத்துக் கொத்தாய் கருக்கப்பட்ட போது - கண் கொண்டு காணாமல், காது கொண்டு கேளாமல், கருத்து கொண்டு உணராமல் இருக்க முடியுமா? இருந்தார்கள். தமிழர்களாகக் கூட வேண்டாம்; உலகின் சக மனிதர்களாக பார்க்கவும் தயாராக இல்லை; இப்படி மரணத்தின் மேல் நின்று நர்த்தனமாடுகிற எந்த இந்தியனையும் மனிதன் என்று கூற நா கூசுகிறது.

இந்தியக் குடிமகனாக இருப்பதும், ஷோபா சக்தியின் இலங்கைக் குடிமகனாக இருப்பதும் ஒன்றே. இருவரும் மற்றவர்களின் மரணத்தில் சந்தோஷிக்கிறார்கள்.

“இரு தரப்புகளுமே ஒரு அரசியல தீர்வுக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டன” என்று நடுவராக முதன்மைப் பாத்திரம் ஆடிய நார்வேயின் ‘எரிக் சொல்ஹெய்ம்’ இன்று வரை சொல்கிறாராம். - (தீராநதி ஜூலை 2009 - பக்63)

நல்லது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை 2006-ல் தன்னிச்சையாக முறித்துக் கொண்ட ராசபக்ஷே நார்வேயை வெளியேற்றியபோது, ‘எரிக் சொல்ஹெய்ம்’ எதிர்த்துக் குரல் எழுப்ப- “வாயை மூடிக் கொண்டு ஒதுங்கியிருங்கள்” என்று தேசியய் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் அரட்டுப் போட்டதும், இந்தியா என்ற பெரிய அண்ணனை பகைத்துக் கொள்ள முடியாமல் எரிக் சொல்ஹெய்ம் ஒதுங்கிக் கொண்டதும் ஷோபா சக்தி மறைத்த உண்மைகள். இவர் இலங்கைக் குடிமகனாக இருப்பதே சரியானது.

இன்னும் புதைகுழிக்கு அனுப்பப்படாமல் மீந்திருக்கும் ஈழத் தமிழர்களின் விமோசனத்துக்கு வழி என்ன? ஷோபா சக்திகளும், அ.மார்க்ஸ_ம் குறிப்பிடுவது போல் உழைக்கும் மக்கள், இனம் கடந்து ஒன்றிணையாமல் வேறெந்த வழியாலும் தமிழ் மக்களுக்கும் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களுக்கும் விடிவில்லை என்ற வழியா?.

இலங்கையின் வரலாறு நெடுகலும் இதற்கு முன்னும் இப்போதும் எப்போதும் இனி உழைக்கும் மக்களின் ஒற்றுமை சாத்தியமில்லை. வரலாற்று ரீதியாய் உடைந்த மண்பாண்டத்தை ஒரே பாண்டமாக ஆக்க (வரலாற்றுக் காலம் தொட்டு அது உடைந்த மண்பாண்டம்) ஒட்டவைக்க, வனைந்து சேர்க்கும் குயவர் எவரும் இல்லை; வெல்டிங் செய்யவோ, பெவிகால் கொண்டு ஒட்டவோ, நூல் கொண்டு தைக்கவோ ஒற்றையாய் ஆக்க மார்க்சிய வழியில் ஒருவகையும் இல்லை. மார்க்சிய, லெனினியத்துக்கு எதிரான வல்லாதிக்க வழிகள் உண்டு.

“இனம் கடந்து ஒன்றிணைந்த உழைக்கும் மக்களின் அந்தப் பாரம்பரியத்தை மீட்டெடுக்காமல், வேறெந்த வழியாலும் தமிழ் மக்களுக்கும், இலங்கையின் ஒட்டு மொத்த மக்களுக்கும் விடிவு ஏற்படப் போவதில்லை. ஒடுக்கப்படும் சக்திகள் இனவாத அரசியலிலிருந்து மீண்டு வர வேண்டும்” - இது ஷோபா சக்தியின் வாசகம் (தீராநதி ஜூலை 2009 பக்கம் 63)

இனவாத அரசியலின் தோற்றுவாய் ஒடுக்கப்படும் சக்திகளான தமிழர்களிலிருந்து கிளைக்கவில்லை, இனவாத அரசியலின் வேர். “பிறக்கப் போகும் குழந்தை (துட்டகை முனு) தமிழர்களை அழித்து ஒன்றுபட்ட சமஸ்தானத்தை ஆண்டு புத்த சமயத்தை வளர்த்தெடுப்பான்” என்ற மஹாவம்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது. மஹாவம்சத்தின் பேரினவாதப் போதையில் ஊறிய அநாகரிக தர்மபாலர் முதல், “ஒரு சிங்களவனின் உயிருக்கு ஆயிரம் தமிழர்கள் சமம்” என்று 1958 - மே 26ல் அறிவித்த தல்பவலசீவன் சதேரா என்ற புத்தபிக்குவரை இந்த உளவியல் உச்சம் பெற்றுள்ளது.

மே 15 - 18 களில் முல்லைத்தீவு பகுதியில், குறிப்பாக முள்ளிவாய்க்காலில் 25 ஆயிரம் தமிழர்கள் படுகொலைக்குப் பின் சாதாரண சிங்களர்கள் கருத்துரைத்தார்கள்.

“இந்த சுதந்திர இலங்கை சிங்களவருக்குச் சொந்தமானது. இதில் தமிழர் உரிமை கொண்டாட முடியாது”.

“இலங்கையில் தமிழர் இருப்பது ஆபத்தானது. தமிழர் எல்லோரையும் அவர்களின் தேசமான இந்தியாவுக்கு விரட்ட வேண்டும்”.

தொலைக்காட்சியிலும், பத்திரிகை ஊடகங்களிலும் முழங்கிய சிங்கள வெகு மக்கள் கருத்தாக மட்டுமல்ல “தமிழர்களுக்குப் போவதற்கென்று ஒரு நாடு இருக்கிறது அது போல் இஸ்லாமியர்களுக்கும் இன்னொரு இடம் இருக்கிறது. ஆனால் சிங்களருக்கு இதுதான் நாடு” என்று இனப் படுகொலையை நடத்தி வெற்றி கொண்ட(?) உயர் இராணுவத்தளபதி பொன்சேகா வரை தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை உளவியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இனவாத அரசியலால் ஒடுக்கப்படும் சக்திகள் எதிர்வினையாற்றும். முப்பது ஆண்டுகளாய் அறவழியிலும், சற்றேறக்குறைய அதேயளவு ஆண்டுகளாய் ஆயுதப் போராட்ட முறையிலும் தமிழர்கள் எதிர்வினையாற்றினார்கள். தமிழ் எல்லையோரங்களில் சிங்களக் குடியேற்றம் நடந்ததில் - அதன் காரணமாக விடுதலைப் புலிகள் அவர்கள் மேல் எதிர்த்தாக்குதல் செய்தார்கள். மளமளவென விரிவடைந்த சிங்களக் குடியேற்றம் மட்டுப்பட்டதற்கு விடுதலைப் புலிகள் என்ற தடுப்பு அரண் இருந்தது. 30 ஆண்டுகள் நடந்த காந்திய வழிப் போராட்டத்தில் இந்தத் தடுப்பு அரண் உருவாகவில்லை. இனி எந்தத் தடையுமற்று, கிழக்கு போலவே, வடக்கு முழுவதும் சிங்கள வசந்தம் உருவாகும்.

உணர்வால், மொழியால், கலாச்சாரத்தால், நடைமுறைகளால் மஹாவம்சத்திலிருந்து புதிய அரசியல் யாப்பு வரையில் உருவாக்கப்பட்ட சிங்கள - பௌத்த பேரின அரசியலுக்குள்ளிருந்து இடதுசாரி அரசியல் மேலெழுந்து வரவில்லை. உழைக்கும் மக்களை ஒன்றிணைக்கும் இடதுசாரி அரசியலோ, அந்த வகை இயக்கங்களோ வாய்ப்பு அற்றுப் போனது. ஆயுத எழுச்சியில் தோன்றிய இடதுசாரிச் சிந்தனையான ஜே.வி.பி. கேவலமான இனவாத இயக்கமாக மாறியது. ஆட்சியிலிருக்கும் ராசபக்ஷேயின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ரணில் விக்கிரமசிங்கே பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி, புத்த பிக்குகளின் ‘ஜாதிக ஹெல உறுமய’ போன்ற இனவாதக் கட்சிகளே அங்கு கொடிகட்டிப் பறக்கின்றன.

ஒடுக்கப்படும் இனம் இந்த கொடிய சூழலை எப்படி எதிர் கொள்வது?

“ஒடுக்கும் பெருந்தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் புரட்சிக்குத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லும் பலத்துடன் இயங்கும் போது ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றிணைந்து போராட முடியும். அம்மாதிரி நிலைமைகளில் மட்டுமே ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஒன்றிணைந்த போராட்டத்தை நாம் கோர முடியும். அவ்வாறான பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான இயக்கங்கள் வலிமையாய்த் திரண்டிராத வேளையில் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை பக்கமே நாம் நிற்க முடியும்”. - என்று தேசிய இனப் பிரச்னையில் யதார்த்தமான, ஸ்தூலாமான நிலைமைகளை முன்வைத்த லெனினது கருத்தின் சாரம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இரு இனத்தின் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்கும் இடதுசாரி அரசியலோ, புரட்சிகர இயக்கங்களோ இல்லாத இன்றைய இலங்கையில் பெருந்தேசிய இனத்தின் வெறித்தனமே எஞ்சியுள்ள யதார்த்த நிலையில ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் ஒன்றிணைவு என்பதும், அவர்களின் விடிவு என்பதும் ஷோபா சக்தியின் ‘உடோப்பியா’ கற்பனைகளுக்கு எல்லை ஏது? லெனினுக்கு எதிர்த்திசையில் நடக்க எல்லா உரியையும் உண்டு - இடதுசாரி என்ற உரிமை கோராமல்.

1983-ஜூலை இனப்படுகொலையில் வெளிக்கடை சிறையில் வங்கொலை செய்யப்பட்ட தோழர். தங்கதுரை நீதிமன்ற உரையில் குறிப்பிட்டார். “விடுதலையை நாங்கள் பெறுவதன் மூலம் எமது லட்சியம் மட்டுமே நிறைவேறுவது அல்ல. சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மை செய்தவர்களாவோம். காரணம் அதன்பின் இனப் பிரச்னையை பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்களர் மத்தியில் எடுபடாது. அதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விசயங்களில அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலைமையைப் பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல், பொருளாதாரத் தளைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன் வருவர்”

தமிழர் விடுலை - சிங்களரை விடுதலை செய்யும் திறவுகோலைத் தன்னிடம் கொண்டுள்ளது. சிங்கள அதிகாரம் என்ற ஒற்றைப் பெருமலையைக் காட்டி, அவர்களை ஏமாற்ற அவர்களும் ஏமாற அம்மக்களை அடிமை நிலையில் வைத்திருப்பதை கண்டு கொள்ள வேண்டும். தமிழின விடுதலையே சிங்கள இனத்தின் விடுதலைக்கு நிபந்தனையாக அமைய முடியும் என்பது ஷோபா சக்திகளின் கற்பனாவாதத்திற்கு ஒத்துப் போகாது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக, ஷோபா சக்தி, அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, சுகன் போன்றோரிடம் உள்ளிறங்கியிருக்கும் வன்மம், விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானதாய் உருவெடுத்துள்ளது. கோட்பாடுகளிலிருந்தும், பருண்மையான நிலைமைகளிலிருந்தும் தான் தேசிய இன விடுதலையை தீர்மானிக்க வேண்டுமே தவிர, விடுதலைப் போராளிகளுடன் ஒன்றுபட முடியாத புள்ளியிலிருந்து அல்ல. இந்தப் புள்ளி தான் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான வெறுப்பாக உருவெடுக்கிறது.

இரு இனங்களின் உழைக்கும் மக்கள் ஒன்றிணைவு போன்ற கோணல் கோட்பாடுகளை சுமந்து நடந்தால், விடுதலைப் புலிகளின் பிழைகள் என்று குற்றம் சுமத்துகிறார்களே, அதனினும் மேலான பிழைகளாக - சொல்லமுடியாத விபரீதவிளைவுகளை உண்டுபண்னுவதாக - ராஜபக்ஷேக்களுக்கு அனுகூலமாகப் போய் முடியும்.

III

இனங்களுக்கிடையே வேற்றுமை நீங்கி, ஒரு மக்களாய், ஒரு தேசமாய் மேலாண்மை சக்திகளை எதிர்த்துப் போரிடும் குணம் பாட்டாளிவர்க்கத்துக்கு மட்டுமே உண்டு. குறிப்பாக, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களை விட, ஒடுக்கும் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களுக்குத் தான் அந்தக் கடமை உண்டு என்று மார்க்சிய-லெனினியம் காட்டுகிறது. நாமும் அவவாறே கருதுகிறோம்.

தேசம், தேசியஇனம் என்ற எல்லைகள் அனைத்தும் இற்றுவிடும் காலகட்டம் பிறப்பதை நாம் விரும்புகிறோம். அவை நிலைத்து நிற்பவை என்றோ, நிலைத்து நிற்கவேண்டுமென்றோ நாம் எண்ணவில்லை. ஆனால் ஒன்றின் வினைப்பாடு வரலாற்றிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னால், அதன் வரலாற்றுப் பாத்திரத்தை அது நிறைவு செய்ய வேண்டும். அவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரித்து அவற்றுக்கு முழுச் சுதந்திரமும் சனநாயகமும் வழங்கப்பட வேண்டும். நிறைவு செய்தபின், அவற்றின் வளர்ச்சிப் போக்கிலேயே அவை ஒன்றோடொன்று இணைவாகி கலந்து இனங்கள் இல்லாமல் போகும்.

தேசிய இனங்களை ஒடுக்குகிற கொள்கை என்பது தேசங்களைப் பிரிக்கின்ற கொள்கை என்றும், மக்களின் மனங்களைத் திட்டமிட்ட வகையில் கெடுக்கின்ற கொள்கை என்றும் லெனின் விளக்கப்படுத்துவார் (பாட்டாளிவர்க்க சர்வதேசியம், லெனின் கட்டுரைகள் - தொகுப்பு நூல்)

இரு இனங்கள் அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பல் தேசிய இனங்கள் ஒன்றாய்க் கலப்பது, தேசிய இன ஒடுக்குமுறையை நடத்தும் வல்லாதிக்கங்களால் அல்ல, மாறாக தேசிய இனங்கள் அனைத்தும் தத்தமது தேசிய விடுதலை என்ற இடை நிலையைக் கடந்த பின்பே ஒன்றிணைவு சாத்தியப்படும்.

“எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் கட்டத்தை கடந்த பின்னரே வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ, வர்க்கங்கள் இல்லாமல் ஆகுமோ, அது போல் ஒடுக்கப்படும் எல்லா தேசங்களுக்கும் முழு விடுதலை என்ற அதாவது பிரிந்து போவது என்றால் அதற்குத் தடையேதுமில்லை, சுதந்திரம் உண்டு என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் தேசங்கள் ஒன்று படுவது இரண்டறக் கலப்பது என்ற நிலையை அடைய முடியும”. (தேசியக்கொள்கையும் பாட்டாளிவர்க்க சர்வதேசிய வாதமும் - சில பிரச்னைகள் - லெனின்)

ஆதிக்க சக்திகளுக்கு அவ்வாறான நீண்டநெடிய சமுதாயக் கண்ணோட்டம் ஒரு நாளும் இருக்க முடியாது. தேசிய இனங்களின் வரலாற்றுக் கடமையை மதிப்பதில்லை; ஒடுக்குகிறார்கள். இலங்கையின் பேரின ஆளும் வர்க்கங்கள், இன்னொரு இனத்தைக் காட்டி, சொந்த இனத்தை மேய்ப்பவர்கள். நிலாவைக் காட்டி மழலைக்குச் சோறூட்டும் நல்லத்தனமான காரியம் அல்ல. நிலாவின் அழகில் அதுவும் குழந்தையின் இயல்பில் அதுவும் இயல்பாக வளருகின்றன. இது பூதம் வருவதாகக் காட்டி சிங்கள இனத்தை பயப்படுத்தி ஏய்க்கும் கயவாளித்தனத்தை பேரின ஆட்சி முன்னிறுத்துகிறது. இதற்கு துணைசெய்ய வெளிநாட்டு ஆதிக்கவாதிகளையும் ஒரு தீவை மொட்டையடிக்க அழைத்துக் கொண்டார்கள்.

தேசிய விடுதலையை வென்றெடுப்பதன் மூலம், வர்க்கப் போராட்ட முன்னெடுப்புக்கான தடை நீக்கம் பெறுகிறது. இந்த முதல் கட்டத்தை கடந்து செல்வதின் வழியே பிற அக முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழிகிடைத்துவிடுகிறது. உள் முரண்களே வலிமையான, பிரதான எதிரியாகி விடுமெனின் அப்போது அதைத் தீர்த்து முடிப்பது பிரதான கடமையாகிவிடுகிறது. இலங்கைத் தீவில், ஈழவிடுதலையைச் சென்றடைய இந்த வகை நியாயம் எதுவும் இருக்கவில்லை.

இனஒடுக்கு முறை சாதி பார்த்துக் கொண்டு வரவில்லை, இவன் தாழ்த்தப்பட்டவன், இவன் உயர் சாதி என்று வேறுபாடு பார்த்து ஒடுக்குமுறை நிகழ்த்தியதில்லை தமிழன் என்ற இன அடையாளத்துக்குள் தள்ளித்தான் அத்துமீறல் நடந்தது. இதனை நேரடியாய்த் தெரிந்த பின்னும், அனுபவித்த பின்னும் அதிலிருந்து தம்மை மட்டும் மீட்டுக் கொள்வதற்கு உயர் சாதியினரில், மேல்வர்க்கத்தினரில் ஒரு சிலர் அரசு பதவிகளும் அமைச்சுக்களும் பெற்று சிங்கள ஆதிக்கத்தை நயந்து போன காரணத்தினால் தமிழர் இந்தக் கதிக்கு ஆளானார்கள் என்பது கட்டாயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன், அது பிரிந்து போகும் உரிமையையும் அங்கீகரிப்பதே, பாட்டாளி வர்க்க சர்வதேசியமாகும் என லெனின் தெளிவாக வரையறுத்தார். “தேசிய ஒடுக்குமுறை இருக்கும் நிலையில் தேசியவிடுதலையைப் புற்க்கணிப்பது சோசலிஸ்டுகளின் கண்ணோட்டத்தில் தவறானது” என்று எச்சரித்த லெனின், “பொதுவான வரலாற்று ரீதியான நிலைமைகளையும், அரசு நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த நாட்டைச் சேர்ந்த மார்க்சியவாதிகளும் தமது தேசியத் திட்டத்தை வகுக்கும் பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

இலங்கைத் தீவில் வரலாற்றுக் காலந்தொட்டு இரு தேசங்கள் இருந்து வருகின்றன. ஒன்றுக்கொன்று இணக்கமற்ற இரு தேசங்கள். ஒன்று சிங்கள தேசம்; மற்றொன்று தமிழ்த்தேசம் பிரித்தானிய காலனிய ஆதிக்கம் கால்கொள்ளும் வரை தனித்தனி நாடுகள் - தனித்தனி அரசுகள் - தனித்தனி மொழி, நிலவியல், பண்பாட்டு முறைகள். கல்லுளிமங்கன் போனவழி காடுமேடெல்லாம் தவிடுபொடி என்ற பழமொழிக்கு தத்ரூபமான சாட்சியாக காலனியாதிக்கம் தனது வேட்டைக்கு ஒன்றுபட்ட நாட்டை உண்டாக்குகிறது. பிரிட்டனின் மேலாதிக்கத்தை எதிர்த்து, வீரமிகு எதிர்ப்பும் போரை நடத்தி மடிந்தவர்கள் அப்போதும் தமிழர்களே! எதிர்ப்பபை நசுக்கி அடிமைப்பட்ட ஒற்றைத் தேசத்தை பிரிட்டன் உருவாக்கியது வரலாற்றில் முதல் பிழை. 1948 இல் இலங்கையை விட்டு பிரிட்டன் வெளியேறிய போது, முன்னர் இருந்தது போல் இரு தேசங்களாக அவரவர் கையில் ஒப்படைக்காமல், சிஙகளப்பேரினத்தின் கையில் ஆட்சியை ஒப்படைசெய்தது - பிரிட்டன் விட்ட இரண்டாம் வரலாற்றுப் பிழை.

“நாங்கள் வரலாற்று ரீதியாக மாபெரும் பிழைசெய்து விட்டோம்” என்கிறார் ராகுல் சாய்ஸ் என்ற பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர். “தனித்தனி இரு நாடுகளை இணைத்து ஒரு நாடாக்கியது ஒரு வரலாற்றுப் பிழை. மிகப் பெரிய தவறு. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தனி அடையாளத்துடன் தனி எல்லைகளுடன், தனி அரசாட்சியுடன் வாழ்ந்தவர்கள். இங்கிருந்து போன எமது பிரிட்டீஷார், தமது வேட்டைக்காக ஒரே நாடாக்கி, சிங்களர் கையில் தானமளித்து விட்டு வந்தனர். அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, தமிழர் மீது நடக்கும் இன அடக்கு முறைகளுக்கெல்லாம் இது தான் காரணம்.”

“2007ல் மட்டும் ரூ700 போடி மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியதற்கு வெட்கப்படுகிறோம்” என்று குற்ற ஒப்புதல் அளித்தார் ராகுல் சாய்ஸ்.

பேரினவாத அரசாக தன்னைக் கட்டியமைத்தபடி உருவாகி வந்த சிங்கள அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டு வெதும்பிப் போனவர் சேர் ஐவர் இன்னிங்ஸ். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தார். சிங்களத் தலைவர்கள் கேட்டுக் கொண்டபடி, அவர் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை (சாசனம்) உருவாக்கித் தந்தார். ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பியவர், இலங்கையில் நடைபெற்று வரும் இனஒடுக்கு முறைகளை அறிந்து “இவ்வாறு தமிழர்களுக்கு கொடுமைகள் செய்யப்படும் என்று தெரிந்திருந்தால், இந்த அரசியல் யாப்பை எழுதியிருக்கவே மாட்டேன்” - என்று வருந்தினார்.

தேச உருவாக்கத்தின் வரலாற்று ரீதியான நிலைகளையும் அரசின் நிலைகளையும் கணக்கிலெடுத்துக் கொள் வேண்டும் என லெனின் சொல்வது இது தான். தேச உருவாக்கத்தின் போது, வரலாற்று ரீதியான நிலைகளை, அரசின் நிலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த நாட்டைச் சேர்ந்த மார்க்சியவாதிகளும் தமது தேசியத்திட்டத்தை வகுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இடித்துரைப்பதும் இதிலிருந்து தான்.

“சுயநிர்ணய உரிமையை அல்லது பிரிந்து போகும் உரிமையை மறுப்பதானது மேலோங்கி ஆட்சி புரியும் தேசத்தின் விசேட உரிமைகளை நடைமுறையில் ஆதரிப்பதாகவே முடியும்” என்றார் லெனின். ஆக எப்படிப் பார்த்தாலும் இனி தமிழீழவிடுதலை சாத்தியமே இல்லையென்று ஷோபா சக்திகள் சொல்கையில், மேலோங்கி ஆட்சிபுரியும் இலங்கை இனவாத அரசின் கூட்டாளியாய் கைகொடுக்கிற காரியமாக வெளிப்படுகிறது. இனவாத அரசியலிலிருந்து ஒடுக்கப்படும் இனம் மீண்டு வரவேண்டுமென்கிற போதனை அல்லது வேண்டுகோள், ஒடுக்கும் பேரினத்தை நோக்கி வைக்கப்படவில்லை என்பதையும் இதற்குள் ஒளிந்திருக்கும் ஓரவஞ்சகத்தையும் கண்டு கொள்ளமுடியும்.

பாட்டாளி வர்க்க ஒற்றுமையைப் பேணுவதில், சர்வ தேசியத்தைப் பாதுகாப்பதில் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளையே லெனின் முக்கியமானதாக முதலாவதாக கருதினார். “ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை சர்வதேசிய உணர்வில் பயிற்றுவிக்கும் போதே, ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்குப் பிரிந்து போகும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை ஆதரித்து அதற்காகப் போராட வேண்டும்” என்கிறார்.

ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்துக்கு பிரிந்து போகும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்கிற சிங்கள மக்களும் இல்லை. அவ்வாறு பயிற்றுவிக்கிற இயக்கங்களும் இல்லை. ஒடுக்கும் எம்மை நீங்கள் நயந்து வாழவேண்டுமென கட்டளையிடும் இனவாத இயக்கங்களே உள்ளன.

தொடர்ச்சியாய் லெனின் இன்னொன்றையும் முன்னுரைத்தார். “ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக சனநாயகவாதிகள் அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால், அவ்வாறு தவறிய ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையும் ஆகும்.” (தேசியக் கொள்கையும் பாட்டாளிவர்க்க சர்வ தேசியவாதமும் - சில பிரச்னைகள்)

ஒடுக்கும் தேசிய இன உழைக்கும் மக்கள், ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையே முதன்மையானதாய் லெனின் வைக்கிற போது - அதன் எதிர்த்திசையில் நின்று ஒடுக்கப்படும் சக்திகள் இனவாத அரசியலிலிருந்து மீண்டு வரவேண்டும் என ஷோபா சக்தி அறிவுரைக்கிறார். “ஆயுதப் போராட்டங்கள் இனி சாத்தியமே இல்லையா, அமைதிவழிப் போராட்டங்களால் இந்த அரசுகளை வழிக்குக் கொண்டு வந்தவிட இயலுமா என்கிற கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலில்லாத போதும் இன்றைய மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் லட்சியவதம் பேசிக் கொண்டிருந்தோமானால் அது மக்களின் அழிவிற்கே இட்டுச் செல்லும்.” (அ.மார்க்ஸ் நீராநதி - ஜூலை 2009)

ஒடுக்கப்படும் தேசிய இனம் விடுதலை பெறவேண்டுமென்று சொல்வதை லட்சியவாதம் எனகிறார் அ.மார்க்ஸ். லெனின் அன்று பேசிய லட்சியவாதத்தை இன்று புறக்கணிப்போம் என்கிற பொருள் இந்த வாசகத்தில் வாழுகிறது. அ.மார்க்ஸ், ஷோபா சக்தி, ஆதவன் தீட்சண்யா, போன்றோரிடமிருந்து வெளிப்படும் இத்தகைய கருத்துக்கள் ஒடுக்கும் இனத்தவரின் கருத்துக்களே என்பதில் துளியும் ஐயம் இல்லை. நீங்களெல்லாம் சிங்களர்களா என்று உடனே கொச்சைப்படுத்த வேண்டியதில்லை. லெனின் காட்டிய வழியிலேயே ஏகாதிபத்தியவாதிகள் என்போம், கயவர் என்போம்.

லண்டன் டைம்ஸ் இதழில் அடுத்தடுத்து இரு செய்திகள் வந்துள்ளன. ராசபக்ஷேயின் நேர்காணலில் வெளிப்பட்டுள்ளன அச் செய்திகள்.

  1. இலங்கையில் தமிழர்களுக்கென தனி மாநிலத்தை ஏற்படுத்தவோ அல்லது அவர்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கவோ வாய்ப்புக்கள் இல்லை.
  2. தமிழர் வாழும் வட மாநிலப் பகுதிகளில், சிங்களர் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தமுடியாது.
இராணுவக் காலடிகளின் கீழ் - சிங்களரின் நடுவில் தமிழரின் சுதந்திரத்தை முற்றாக உருவி எடுத்தபின் என்ன வாழ்வு மீதி? தமிழனின் மூச்சுச் சுவாசம், மூளைச் சிந்திப்பு எல்லாமும் சிங்களரின் கழுத்துப்பிடியில் இருக்க அவரவருக்கான உரையாடலை நிகழ்த்திக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் உலகநாடுகள். இந்த உலகத்தை வளைத்துப் போட ஈழத்தமிழனுக்கு கரங்கள் போதாது. நிகழ்த்தப்படப்போகும் வாழ்வியல் நெருக்கடியிலிருந்து - எல்லாமும் அற்ற சூனியத்திலிருந்து புறப்படும் ஒரு தமிழன் - எந்த இடத்திற்கு போய்ச் சேருவான்? தமிழன் மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனும்!



- சூரியதீபன்
நன்றி: கீற்று 

கருத்துகள் / Comments

அனைத்து இடுகைகளும் ஏற்றப்பட்டன / Loaded All Posts எந்த இடுகைகளும் கிடைக்கவில்லை அனைத்தையும் காண்க மேலும் படிக்கவும் மறுமொழி கூறு மறுமொழி ரத்துசெய் நீக்கு By முகப்பு பக்கங்கள் இடுகைகள் அனைத்தையும் காண்க உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது லேபிள் காப்பகம் / Archive தேடு / Search அனைத்து இடுகைகள் / All Posts உங்கள் கோரிக்கையுடன் பொருந்தக்கூடிய எந்த இடுகையும் கிடைக்கவில்லை முகப்பு / Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec சற்றுமுன் 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago பின்தொடர்பவர்கள் / Followers பின்தொடர் / Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content