தலித் பிரச்சினை: புரிந்து கொள்ள மறுக்கும் அரசியல் தலைமைகள்

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு வரை வரலாற்றுப் பாத்திரம் வகித்த, வரலாற்றில் மதிக்கத்தக்க பெரியவர்கள் அந்த இனம் பற்றிப் பேசியதில்லை. இலக்கியத்திலும் அந்த மக்கள் பற்றி ஒரு மவுனம் கட்டமைக்கப்பட்டிருந்தது. கட்டமைக்கப்பட்ட மவுனத்தின் பின்னால் திட்டமிடப்பட்ட சதி உறைந்து நின்றது. யாரும் எவரும் வராதபோது, தங்களுக்காக தாங்களே பேசுதல் தவிர்க்க முடியாததொரு வரலாற்று விதியாயிற்று. கருத்தமைக்கூடுகளாய்க் கெட்டியான மேகங்களை உடைத்து மழை வீசியடித்தது போல, தமக்காகப் பேசி உடைத்து வெளிப்பட்டார்கள். கட்டமைக்கப்பட்ட மவுனத்தின் உடைப்பு, கொந்தளிப்பின் மொழியாக இருந்தது.

சிந்திப்புத் தளத்தில் தொடர்ந்து இயக்குவோர் அல்லது அவ்வாறு எண்ணப்படுகிற அரசியல் தலைமையினர், தலித் விடுதலை பற்றி என்ன கருத்துகளுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்?

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, மலையாளத்தில் வெளிவரும் புகழ்பெற்ற வார இதழான "மாத்ரு பூமி' இதழுக்குத் தனது 81 ஆவது பிறந்த நாள் நிகழ்வு தொடர்பாக அளித்த நேர்காணல், மொழியாக்கம் செய்யப்பட்டு “முரசொலி” இதழில் சூலை 21, 22, 23 2005 ஆகிய மூன்று நாட்களில் வெளிவந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த அவருடைய கருத்துகள், அவர் போன்ற அரசியல் கட்சித் தலைமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை பற்றி என்ன கருத்து கொண்டுள்ளார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.

"தலித் இலக்கியம்...?'' பற்றி அவர் முன் கேள்வி வைக்கப்படுகிறது.

"தலித் இலக்கியமென்பது, தனியாக வேறுபடுத்திப் பார்ப்பது சரியென எனக்குத் தோன்றவில்லை. இவர்கள் தலித் இலக்கியமென்று கூறுவதற்கு முன்னரே நான் எழுதிய "ஒரே ரத்தம்' போன்ற கதைகளெல்லாம் தலித்துகளுடைய வாழ்க்கையையும், வளர்ச்சியையும் பிரச்சினைகளையும், அடிப்படையாகக் கொண்டுள்ளவைதான்.''

மு. கருணாநிதி எழுதிய "ஒரே ரத்தம்' போன்ற கதைகள், அந்தப் பாத்தியதை கொண்டாடுகிற அளவுக்கு உண்மையான அர்த்தம் கொண்டவைதானா என்பது, ஆழமாக ஆராயப்பட வேண்டும். கருணாநிதியின் இந்த உரிமை கோரலின் நியாயப்பாடு பற்றி அதன் பின்னரே தீர்மானிக்க முடியும். தீண்டத்தகாதவர்கள் என்று சாதி ஒடுக்குதலுக்கு ஆளான மனிதக் கூட்டம் இந்திய பூமியைத் தவிர வேறெந்த பூமியிலும், இந்து மதத்தைத் தவிர வேறெந்த மதத்திலும் காணப்படவில்லை. உழைக்கும் வர்க்கத்தை விட கூடுதலாக இன்னொரு கொடுமைக்கு ஆளானவர்கள் இவர்கள். அடிப்படையில் சாதிக் கொடுமைதான் பொருளாதாரத்தில், வாழ் நிலையில், எல்லா வகையிலும் தாழ் நிலைக்குக் கொண்டு போய் நிறுத்தியது.

எனவே, தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள ஒரு சொல்லைத் தேடினார்கள். அது எந்த அகராதிக்குள்ளும் இல்லை. அகராதி கடந்த ஒரு சமுதாய வார்த்தையாக அது இருந்தது. "தலித்' என்ற சொல்லை அடையாளமாகக் கொண்டார்கள். தலித் இலக்கியம், அவர்களின் அந்த வாழ்வுக்குள்ளிருந்துதான் பிறந்தது. தலித் இலக்கியம் என்று தனியாக வேறுபடுத்திப் பார்ப்பது, தனக்கு சரியாகத் தோன்றவில்லை என்கிறார் கருணாநிதி. தங்களை வேறுபடுத்திக் கொள்ளத்தான் தலித் என்ற சொல்லை கைக்கொண்டார்கள். தலித் இலக்கியம் என்ற சொற் பயன்பாடு, தங்களை வேறுபடுத்திக் கொண்ட விழிப்பிலிருந்து பிறந்ததுதான்.

தீண்டாமை அவர்களுக்கு சாதியில் மட்டுமில்லை; அரசியலில், கல்வியில், அறிவுசார் துறைகளில், இலக்கியத்தில் நிரந்தரமாக நிலவுகிறது. எனவே, தலித் இலக்கியம் என்ற தனிப்பகுப்பு தேவையா, இல்லையா என்ற கேள்வி, தலித் விடுதலை தேவையா, இல்லையா என்ற கேள்வியின் தொடர் ஒலிப்பாகவே தோன்றுகிறது.

இலக்கியத்திலும் தீண்டாமை ஒரு கோட்பாடாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இலக்கியவாதிகள் சாதியத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது; அல்லது அதில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை சிறிதளவும் உணராதவர்களாகவே செயல்பட்டனர். இதுகாலம் வரை இருந்த பழைய மரபுகளையே இலக்கியம் எனக் கொண்டனர். அவ்வாறானவற்றை போஷித்து வளர்ப்பது தம் எழுத்துக்குப் பெருமை சேர்க்கும் என நினைத்தனர். சமூகத்தின் கடைநிலை மக்களுக்கு இடையே ஊடுருவி, கலந்து வாழ்ந்து, வாழ்வனுபவங்களைப் பெற முயலவோ, படைக்கவோ செய்தாரில்லை. இவ்வாறான இலக்கியவாதிகளின் தொடர்ச்சியே என்பதை இவ்வாறான பார்வைகளையே தானும் கொண்டிருக்கிறார் என்பதையே, தலித் இலக்கியம் என தனி வகைமை தேவையில்லை என்ற கருணாநிதியின் கூற்று வெளிப்படுத்துகிறது.

தலித் இலக்கியம் பற்றியது "மாத்ரு பூமி'யின் கேள்வி. ஆனால், தலித்துகளுக்கு வேறெவரையும்விட தான் அதிக காரியங்கள் ஆற்றியதாகப் பட்டியலிடுகிறார்: “நான் ஆட்சியிலிருந்தபோது தலித்துகளுக்கு மிகவும் அதிக அளவில் நன்மைகள் செய்திருக்கிறேன்...'' எனத் தொடங்கி வழக்கம் போல ஓராயிரம் முறை பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும் சொன்ன (தனது குடும்பத்தில் கலப்புத் திருமணம் செய்த) பட்டியலை மீண்டும் விரிவாகச் சொல்கிறார்.

நாமே சூடிக்கொள்வதல்ல மகுடம்; சமுதாய விடுதலையை முன்னெடுக்கும் ஒவ்வொரு போராட்ட காலடி வைப்பும், அவரவர் தலைக்கு மகுடம் கொண்டு வந்து சூடும். அடிப்படை முரணைத் தீர்க்க முயலாத எந்தச் செயலும், சமுதாயத்தின் அங்கீகாரம் பெற முடியாமல் போலிமை நீரில் மிதந்து தள்ளாடுகிறபோது, தானே பட்டியலிடுவது தவிர்க்க முடியாதது. எந்த ஒரு பிரச்சனை மேலெழும்போதும், தான் என்ன செய்தேன் என்று தன்னோடு தொடர்புபடுத்தி வெளிப்படுத்திக் கொள்வது, அவரது அரசியல் பாணி. இந்த பாணி அவரிடமிருந்து வெளிப்பட்டு, திராவிட அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் (இன்றுள்ள ஜெயலலிதா, வைகோ வரை) அரசியல் மரபாகவே மாறிவிட்டது.

எந்தக் கிராமத்திலும் ஊருக்கு நடுவிலில்லை சேரி; ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாய்க் கிடக்கிறது. அந்த மக்களுடைய சுவாசக் காற்றும் தம்மை அசுத்தம் செய்துவிடும் என்று ஊரின் ஒதுக்குப்புறமாய் கிடக்கிற அந்தத் தீண்டாமையின் தொடர்ச்சியால் இலவச வீடுகள், தொகுப்பு வீடுகள் என்ற நவீன சேரி உருவாக்கப்பட்டது. ஊருக்கு நடுவே சாதி இந்துக்கள் வாழும் பகுதிகளில் இடமிருந்தாலும் கட்டித்தரப்படவில்லை. அது வாழ்நாள் உரசலை உண்டாக்கும். ஆனால், சாதி ஒழிப்பு ஊருக்கு நடுவிலிருந்து தொடங்கப்பட வேண்டும். ஊர் நடுவே மய்யம் கொண்டு, ஊர் முழுவதும் கவிந்து நிற்கும் சாதிப் பிரிவினைக்குத் தோதாய் அதற்கு முதுகு தட்டிக் கொடுக்கும் காரியமாய் நவீன "காங்க்ரீட்' சேரியை உருவாக்கிய முன்னோடிப் பெருமை கருணாநிதிக்குரியது.

"காங்க்ரீட்' சேரியாக இருக்கும் வரை தொல்லை இல்லை. அதுவே "சமத்துவபுரமாக' பளபளப்புக் கொண்டபோது, சாதிப் பாகுபாடு அங்கேயும் தொடர் கதையானது; சாதி நாற்றம் மேலெழுந்து ஆடுகிற இடமாக "சமத்துவபுரம்' ஆனது. சிவகங்கை மாவட்டம் அரசனூர் சமத்துவபுரத்தில், பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்த தலித் குடும்பத்தினரைத் தாக்கி ஓட ஓட விரட்டியடித்த சம்பவம் கருணாநிதியின் ஆட்சிக் காலத்திலேயே நடந்தது. சாதிப்பாகுபாட்டை ஒழிக்காமல், சாதி தர்மத்தை அப்படியே வைத்துக் கொள்ளும்வரை எந்த சமத்துவபுரமும் உண்மையான சமத்துவத்தை அளிக்காது.

வேரை வெட்டாமல் முள்செடியின் பிராண்டலுக்கு மருந்து பூசுகிற தொடர் வேலை எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உவப்பானதுதான். சாதியைத் தக்க வைக்கும் நடவடிக்கையை, ஒடுக்கப்பட்ட ஜாதியின் மேம்பாடு என்று பெயர் ஈட்டிக் கொள்கிற சாதுரியமான முயற்சி இது. கருணாநிதியில் தொடங்கிய இந்த சாதியம், மாறி மாறி தமிழகத்தை அலைக்கழிக்கும் திராவிட அரசியல் கட்சிகளின் புனைவாக இன்றளவும் நிற்கிறது. தலித் பிரச்சினைகள் பற்றி கருணாநிதியிடம் மூன்று கேள்விகள் முன்வைக்கப்பட்டன. சுந்தரராமசாமி எழுதிய ஒரு கதையை சுட்டிக் காட்டி, "இப்போது தலித்துகளுக்கு எதிரான இலக்கிய நூற்கள் எழுதப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உண்டல்லவா... சுந்தரராமசாமி எழுதிய ஒரு கதைக்கு எதிராக தலித் அமைப்புகள் கண்டனப் பேரணிகள் நடத்தின... '' என்பது இரண்டாவது கேள்வி.

"எம்மைப் பொறுத்தவரையிலும், எமது அமைப்பைப் பொறுத்தவரையிலும், எல்லா வகையிலும் தலித்துகளுக்கு அனுகூலமாக இருக்க வேண்டும். நாங்கள் தலித்துகளைத் தனிப்பட்ட பிரிவினராக தரம் பிரித்து வேறுபடுத்திக் காண்பதில்லை. ஆனால், அவர்களே தங்களை வேறுபடுத்திக் கூறிக் கொள்ளும்போது, நாம் அவ்வாறு தலித் என்று பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இது, அவர்களுடைய உரிமைகளைக் காத்திடப் பயன்படுத்தப்படும் சொல்லாகவும் இப்போது இருக்கிறது.''

கருணாநிதி கூறுவது போல, தங்களை வேறுபடுத்திக் கொள்ளத்தான் தலித் என்ற சொல்லாக்கத்தை முன்னெடுத்தார்கள். மேல்நிலை வர்க்கத்தினருக்காக, மேல் சாதியினருக்காக, மேன்மக்கள் அரசியலை முன்வைக்கிற எல்லோரிடமிருந்தும் தலித்துகள் வேறுபடுகிறார்கள். வேறுபடுதல், வித்தியாசப்படுதல் என்பது அவர்களின் இயல்பு. அது அவர்களுக்கு வாழ்க்கை. வேறுபடுதலில்லாது அவர்களின் இருப்பு இல்லை. இந்த சொற்பயன்பாடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள மட்டுமல்ல; எல்லா நிலைகளிலும், எல்லா துறைகளிலும், எல்லா இழிவுகளிலிருந்தும் விடுதலை பெறுவது என்பதைக் குறிக்கும் கலக மொழி.

தலித் இலக்கியம் என்று தனியாக வேறுபடுத்துவதில் கருணாநிதிக்கு உடன்பாடில்லை. இக்கருத்து, தலித் அரசியல், தலித் விடுதலை எனத் தனியாக இல்லை. அதற்காகத் தான் இல்லை என்ற கருத்தாக்கத்திலிருந்து வருகிறது. தங்களின் எல்லா அரசியல் செயல்பாடுகளிலும் இதுவும் ஒரு பகுதி என்று எல்லா அரசியல்வாதிகளும் கருதுவதும், கருணாநிதி கருதுவதும் வேறுவேறல்ல. எல்லா வகையிலும் தலித்துகளுக்கு அனுகூலமாக இருக்க வேண்டும் என்ற கூற்றின் மூலம் இதைத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறார். "அனுகூலமாக இருத்தல்' என்பதை விளக்க வேண்டியதில்லை. எல்லாவகையிலும் முதன்மையாக வைத்தல் என்பது அதன் அர்த்தமல்ல; அது பத்தோடு பதினொன்றாகவும் இருக்கும். நூறோடு நூற்றியொன்றாகவும் இருக்கும் என்பது பொருள். அரசியல் ஏற்கனவே அப்படியிருந்தது; இனி அப்படி இருக்க முடியாது.

தொழிலாளி வர்க்கம் விடுதலையாகிற போது, தன்னை விடுதலை செய்து கொள்வது மட்டுமல்ல; முதலாளி என்ற இழிவையும் அது போக்கிவிடுகிறது. முதலாளி என்ற ஒரு சொல்லே இல்லாமல் ஆக்குவதன் மூலம் அதைச் செய்யும் என்கிறது மார்க்சிய சாரம். அதுபோல் எந்தப் பிரதான இழிவைத் தூக்கியெறிந்தால் முழுச் சமுதாயமும் விடுதலை பெறுமோ, அதைத் தூக்கி எறிவது இதன் காரணமாய் தாழ்த்தப்பட்டவர் என்ற இழிவு நீக்குதல் மட்டுமல்ல, மேன்மக்கள், உயர் சாதியினர் என்ற இழிவும் இல்லாமல் போகும்.

இழிவில் பிறந்து, இழிவில் வளர்ந்து, இழிவிலேயே வாழ்ந்து சுவாசமாகக் கொண்ட மனித சமூகப் பிரிவின் விடுதலை அது. இந்திய சமூகத்தில் குறிப்பாக தமிழ்ச் சமுதாயத்தில் அதைத் தாண்டிய மனித விடுதலை என்பது இருக்க முடியாது. பொத்தாம் பொதுவாக மனித குல விடுதலை என்பது இல்லை. தலித் விடுதலை என்பது, இந்த நூற்றாண்டின் குறிப்பான விடுதலையாக இருக்கிறது. இந்த நூற்றாண்டு, அதற்கான முன்னோடித் திசையைக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே விடுதலை நிகழ்த்தப் பட்டிருக்குமாயின் தலித் விடுதலை, எதிர்வரும் நூற்றாண்டுகளின் விடுதலையாக நூற்றாண்டுகளை விடுதலை செய்வதாக உலக வரலாற்றுத் தொகுப்பில் பதிவாகி இருக்கும்.

அரசியலில் நிறையபேர் சமகால சிந்தனையோட்டத்தில் இல்லை. எதிர்கால விடுதலை பற்றிய கண்ணோட்டம் இல்லை என்பதை பாப்பாபட்டி, கீரிப்பட்டி பற்றிய மூன்றாவது கேள்விக்கான கருணாநிதியின் பதில் உறுதிப்படுத்துகிறது. கேள்வி : "உங்களது அமைப்பு சாதிக் கெதிராகப் போராடும் போதும், மதுரை மாவட்டத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி போலுள்ள பஞ்சாயத்துகளில் தலித்துகள் தேர்தலில் கூடப் பங்கேற்பதற்கு அச்சப்படுகின்ற நிலையுள்ளதல்லவா?''

பதில்: ஒரு கிராமம் அப்படியிருப்பதால், தமிழ் நாடு முழுவதும் அப்படித்தான் என்று அர்த்தமல்ல. ஒரு கிராமத்தில் அனைவரும் பைத்தியக்காரர்களாகி விட்டனர் என்பதால், மற்ற இடங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் பைத்தியம் வரவேண்டும் என்பதில்லை. அந்த கிராமத்தின் உயர் சாதியினரான இந்துக்களில் சிலர் ஒன்றாய் இணைந்திருக்கிறார்கள். அப்போது தலித்துகள் அச்சப்படுகின்றனர். அவர்கள் பிரசிடென்ட் (தலைவர்) ஆகலாம். ஆனால், பிரசிடென்டானால், நாளை உனது தலை வெட்டப்படுமென்று அவர்கள் அச்சுறுத் தப்படுகின்றனர். தலையை இழப்பதற்கு யாருக்கும் விருப்பம் இருக்காதல்லவா?

உடனே கையெழுத்திட்டுக் கொடுத்து விடுகின்றனர். அது இப்போது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. அரசு அதற்கெதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதாலோ, காவல் துறையை இறக்கி விடுவதால், சட்ட விதிகளுக்கு ஒத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாலோ எந்தப் பயனும் இல்லை. அந்தக் கிராமத்தில் அனைத்து முக்கிய நபர்களையும் அழைத்துப் பேசி, சுமூகமான முறையில் அவர்களுக்கு விஷயங்களை விளக்கிப் புரிய வைக்க வேண்டும். அவசர கோலத்தில் ஏதாவது முடிவெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால், அராஜகம்தான் உருவாகும்.''

சட்டப் பூர்வ நடவடிக்கைக்குகூட தான் தயாரில்லை. அது போலவே அரசும் நிர்வாகமும் இருக்க வேண்டுமென்று கருதுகிறார். அவருடைய ஆசையை, ஜெயலலிதா அரசும் நிறைவேற்றி வருகிறது; இதுவரை அவர் வாய் திறந்து ஏதொன்றையும் பேசாமைக்கும், ஏதொன்றையும் செய்யாமைக்கும், இந்த செயலின்மைதான் அடிப்படை. புலிகளுக்கும் மான்களுக்குமான சமரசத்தை உண்டாக்க தீவிரமாக முயல்கிறார். முயல்வதுபோல் "பாவலா' காட்டி பிரச்சனையை அப்படியே படுக்கை நிலையிலேயே கிடத்தி, இரண்டு பக்க வாக்கு வங்கியையும் தனக்குச் சாதகமாக்கும் முனைப்பு வெட்டவெளிச்சமாகிறது.

இந்த ஊராட்சிகளில் நடக்கும் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து, 14.6.2005 அன்று மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள், பிற அமைப்புகளுடன் இணைந்து, தேசிய அளவில் பொது விசாரணையை ஏற்பாடு செய்திருந்தனர். நாள் முழுவதும் நடைபெற்ற மாநாட்டில் ஆதிக்க சாதியினர் பங்கேற்கவில்லை. பொதுவிசாரணையில் பங்கேற்க 18 உயரதிகாரிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஒருவர்கூட பங்கேற்கவில்லை. மக்கள்முன் நின்று, மக்களுக்குப் பதில் சொல்லும் வேலை தமக்கில்லை என்று கருதினார்கள் அதிகாரிகள்.

பொதுவிசாரணை மாநாட்டில், தமிழ் நாட்டின் பேரெடுத்த அரசியல் தலைமைகள் எவரும் கலந்து கொள்ளவில்லை. எல்லோருக்குமாய் அழைப்பு விடுக்கப்பட்ட போதும், கருணாநிதி போலவே இறுக்கமாய் அமர்ந்து கொண்டார்கள். இவர்கள் பெரும்பாலும் இடைநிலைச் சாதிகளிலிருந்து உருவானவர்கள். ஆனால், எல்லோருக்குள்ளும் ஓடுகிற சாதி இந்து மனோபாவம் ஓட்டுச் சேகரிப்பு அரசியலோடு இணைந்து தடுத்து, எல்லோரும் முன்னெடுப்பு என்று ஒன்று இல்லாமலே தானாகவே வரும் விடிவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஆதிக்க சாதிகள், ஆட்சித் தலைமை (எவர் வந்த போதும்), அரசியல் தலைமைகள் மூன்றும் கூட்டாக எதைக் கடக்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள்? பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சிகளில் ஆதிக்க சாதிகள் பத்தாவது ஆண்டைக் கடக்கக் காத்திருக்கிறார்கள். பத்து ஆண்டுகள் முடிந்து போனால், சுழற்சி முறையில் ஆதிக்கசாதி தலைவருக்கான ஊராட்சியாக மாறும் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்கள் பைத்தியம் இல்லை; காரியக்காரர்கள். ஆனால், கருணாநிதி அவர்களை பைத்தியக் காரர்களாகப் பார்த்து ஒதுங்கிக் கொள்கிறார். இந்த ஒதுக்கம்தான் அவருக்கும் வேண்டியது; அந்த சாதிக்கும் ஊட்டம் தருவது.

அந்த ஒரு கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் பைத்தியமாகிவிட்டனர் என்பதால், மற்ற இடங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் பைத்தியம் வரவேண்டுமென்பதில்லை என்கிறார். உண்மைதான். எல்லாக் கிராமங்களும் இந்தப் பைத்தியம் பிடித்துதான் ஆடிக் கொண்டிருக்கின்றன. அவசர கோலத்தில் ஏதாவது முடிவெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்திட முயன்றால் அராஜகம்தான் உருவாகும் என்று, ஏதொன்றையும் அசைக்காமல் பாதுகாப்பாக அமர்ந்து கொள்ளச் செய்திருக்கிறது.

மு. கருணாநிதி, அடுத்த தேர்தலுக்காகக் காத்திருக்கிறார் மற்றவர்கள் போலவே. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு: “அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கிறார்கள். மேதைகள் அடுத்த தலைமுறைகளைப் பற்றி சிந்திக்கிறார்கள்''

நன்றி:  தலித் முரசு - ஆகஸ்ட் 2005, கீற்று - 11 ஏப்ரல் 2010

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி