தீவின் கூக்குரல்

கடல்மேல் ஆரஞ்சு வண்ணத்தில், ஆரஞ்சு வடிவ முழு நிலா. மார்ச் 19-ல் வழக்கமான வட்டத்தினும் பதினாறு மடங்கு பெரிய நிலா தெரியுமென்றார்கள். கச்சத் தீவுக்கு வந்தது காணக் கிடைக்காத சந்திரோதயத்தைக் காண வந்தது போலாயிற்று. அன்றும், மறுநாளும் கச்சத் தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா.

கடற்கரை மணல் பொது பொதுவென்று ஏந்திக் கொள்ள பௌர்ணமியில் படுத்துத் தூங்கினோம். காலடியில் பத்தடியில் கடல். பக்கத்தில் ஒரு பள்ளம் எதற்காக வெட்டியது என்று தெரியவில்லை. பக்கத்தில் படுத்த ரகு சொன்னார்.

“இன்னும் தோண்டினால் எலும்புக்கூடுகள் கிடைக்கும்’’

“யாருடையது?’’

"ஈழத் தமிழர்களுடையது; தமிழக மீனவர்களுடைய எலும்புகள் கிடைக்க வாய்ப்பில்லை. சுட்டுக்கொன்றதும், சடலங்களை தமிழக‌ மீனவர்கள் கரைக்கு எடுத்து வந்து விடுவார்கள்"

தோண்டியெடுத்ததில் குவிந்த மணல் மேடு இடுப்பளவு உயரமிருக்கும். மணல் மேட்டைக் கரைத்து பௌர்ணமி ஏற்றத்தில் சீறிய அலைகள்- பள்ளத்தை நிறைத்திருந்தது.

விடிகாலையில் தேவலாயத்தின் திருப்பலி சிறப்பு நிகழ்ச்சிப் பாட்டு எழுப்பியது. காலையில் ஐந்தடி தொலைவாய் குறைந்து போன கடலும், சத்தம் கொடுத்து எழுப்புகிறது. எழுந்து, உட்கார்ந்து கிழக்குத் திசையைக் கண்டோம். பூர்ணிமை வட்டம் மெல்ல மெல்ல மேற்குத் திசையில் நழுவிக் கொண்டிருக்க, கிழக்கில் செஞ்சாந்துக் கலசமாய் வந்தது சூரியன். கடல் நீரை முட்டி உடைத்த முட்டை போல் வெளிக்காட்டிய செஞ்சூரியனை மறைக்க அவ்வப்போது படையெடுக்கும் கடல் மேகங்கள் வரவில்லை.

அந்த 20-ம் தேதி காலை 7.30 மணி நடுப்பகல் சூரியனாய் உருமாற்றம் கொண்டிருக்க, இரக்கமற்ற வெயில் மண்டையைப் பிளந்தது. ஆலயத்தின் முன் கூடியிருந்தார்கள் தமிழர்கள். இங்கிருந்து போனவர்கள், அங்கு நெடுந்தீவு, யாழ்ப்பாணம் வட்டாரத்திலிருந்தும் வந்தவர்கள். போன வருடத்தைக் காட்டிலும் அங்கிருந்து வந்தோர், இந்த வருடம் குறைவு.

அந்தோணியார் திருத்தல யாத்திரை என்று முகப்பில் எழுதியிருந்த, சிறு ஓடுகள் வேய்ந்த கொட்டகை அது. ஒரே ஒரு ஹால் போன்ற இடமும், முன் வராண்டாவும் இதுதான் ஆலயம். உச்சியில் பெரிய சிலுவை.

2004-ல் மாதாவின் சொரூபம் (படம்) மதுரையிலுள்ள சில தமிழ் உணர்வாளர்களால் கொண்டு வந்து தரப்பட்டது. அதைக் கொண்டு வந்து அங்கு நிறுவியர் பாதிரியார் அமல்ராஜ். அந்த சொரூபத்தின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுகின்றனர். சுள்ளென்று தைத்த காலை வெயிலில் சிறப்புத் திருப்பலி மன்றாட்டு நடந்து கொண்டிருந்த வேளையில் இலங்கைக் கடற்படையின் படகு வந்தது. செய்தியாளர்கள், தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர்கள் அதிலிருந்து இறங்கினார்கள். முன்னே வந்தது மணியோசை என்று தெரிந்தது. அடுத்து வந்த இன்னொரு கடற்படைப் படகிலிருந்து, இலங்கை ராணுவ ஜெனரல் மகேந்திரகுதிர் சிங்கே, வடக்குக் கடற்படை கமாண்டர் சுசித் வீர சேகர, யாழ் மாவட்ட ஆட்சியர் இமல்டா சுகுமார், யாழ் மாவட்ட நீதிபதி அனந்தராஜ், பலாலி விமானநிலைய இராணுவ அதிகாரிகள் என்று அடுத்த படகு இறக்கியது. படகிலிருந்து கரை வரை விரிக்கப்பட்ட பலகை அவர்களை சேறுபடாமல் கால்கள் நனையாமல் கொண்டு சேர்த்தது.

இலவசத்துக்குப் பறப்பவர்கள் தமிழர்கள் என்று உயர் அதிகாரச் சிங்களவருக்குப் புரிந்திருந்தது. செய்தியாளர்கள் வந்த படகிலும் இவர்கள் வந்த படகிலிருந்தும் ஒரு எலுமிச்சம் பழ சாதம், ரொட்டி, முட்டை, ஒரு தண்ணீர் புட்டி என்று உணவுப்பொட்டலங்களை இறக்கினார்கள். அதைப் பார்த்து பெருங்கூட்டம் திசை திரும்பியது.

மேல்நிலை அதிகாரிகள் வருவதோ, சோற்றுப் பொட்டலங்கள் விநியோகிப்பதோ இதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லை. இந்த ஆண்டு டிராக்டர்களில் கொண்டு வந்த குடிநீர் வசதி செய்யப்பட்டது. வாயில் வைக்க முடியாத சவருத் தண்ணீயென்றாலும் குடிநீர் விநியோகம் நடந்தது.

அண்மையில் சப்பான் நாட்டைச் சுழற்றியடித்தது சுனாமி. உயிரிழந்தவர் போக, உணவும் குடிநீரும் இல்லாமல் உயிருள்ளோர் அலைந்த காட்சி கல்லையும் கரைய வைத்தது. வாழ்க்கையே அந்து போய்க்கிடக்கும் அந்த நிலையில், திறந்து வைத்த கடைகள் முன்னால் வரிசையில் நின்று, உணவும் உடையும் குடிநீரும் மக்கள் வாங்கிச்சென்றனர். இலவசத்துக்கு பேயாய் அலையும் அல்லது இது போன்ற சூழல்களில் பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்லும் நம்மையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது.

“மாண்புமிகு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே, வருக, வருக” என ஆலயத்துக்கு முன்னுள்ள திடலில் டிஜிட்டல் விளம்பரப் பலகை நட்டியிருந்தார்கள். இப்படிக்கு நெடுந்தீவு மக்கள் எனப் போட்டிருக்க, டக்ளஸ் தேவானந்தா வராமலிருந்தததற்கான காரணம் புரியவில்லை. அச்சம் காரணமாக இருக்கக்கூடும் என சிந்திக்க வேண்டி வந்தது. கொலையுண்ட விடுதலைப் புலிகள் எழுந்து வரப் போவதில்லை. வழிபாட்டுக்கு வந்திருந்த மக்களும் துப்பாக்கிகளோடு வரவில்லை. ராசபக்ஷே பெரிதாகவும் டக்ளஸ் அடுத்த சைஸிலும், டிஜிட்டல் பதாகையில் கண் சிமிட்டியபடி இருக்க, நாலாயிரம் மக்களும் நடந்து கடக்கையில் புழுதி வாரித் தூற்றியடித்தது.

நெடுந்தீவு, யாழ்ப்பாணம் நகர் வட்டாரங்களிலிருந்த வந்தோரும், தமிழகத்திலிருந்து போயிருந்த எல்லோரும் துப்பாக்கியுடன் வருகிறார்களா என்று சோதிக்கப்பட்ட பின்பே, உள்ளே அனுமதிக்கப்பட்டோம். பரிசோதனை என்ற பெயரில் அத்தனை கெடுபிடிகள் நடந்தன. முந்தியிருந்த அ.தி.மு.க ஆட்சியில் (2001-2006) இதனினும் கூடுதலான கெடுபிடிகள் நடத்தப்பட்டனவாம்.

மார்ச் 19, 2011-ல் ராமேஸ்வரம் புறநகர்ப் பகுதியிலுள்ள வேர்க்கோடு தேவலாயத்தில் காலை ஆறு மணிக்கு இருந்தோம். எங்களுக்கு முன்பே சிவகங்கை மறைமாவட்ட பங்குத் தந்தை, பாதிரியார் அமல்ராஜ் வந்திருந்தவர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். புனித அந்தோணியார் யாத்திரை தலத்துக்கு வருகிறவர்கள் பட்டியல் அவரிடம் இருந்தது. ஒரு அடையாள அட்டையின் நகல், மூன்று புகைப்படங்கள், விண்ணப்பத்துடன் அவருக்கு தொலையச்சு நகல் மூலமாக அனுப்பியிருந்தோம். ஒரு புகைப்படம் மாவட்ட ஆட்சியருக்கு. மற்றொன்று காவல்துறைக்கு, மூன்றாவது படம்-கடலோர காவற்படைக்கு.

வேர்க்கோடு ஆலயத்திலிருந்து கூட்டமாய் காலை ஆறரை மணிக்கு கடற்கரைக்கு கூட்டிப்போனார் தந்தை அமல்ராஜ்.

இளஞ்சிவப்பில் லைப் ஜாக்கெட் கட்டாயமாய் அணிய வேண்டுமாம். நான் சும்மா இல்லை.

“எனக்கு நீச்சல் தெரியும், எதற்கு லைப் ஜாக்கெட்"

பக்கத்தில் வந்த முரளி சொன்னார்.

“ஒங்களுக்கு நீச்சல் தெரியுமா, தெரியாதா என்பது அவனுக்கு (அரசாங்கம்) தெரியாது) பிறகு படகு கவிழ்ந்தால் எவ்வளவு நேரம்தான் நீந்துவீர்கள்?"

எங்கள் ஒவ்வொருவரிடத்தும், புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டையை அமல்ராஜ் கொடுத்திருந்தார். காவல்துறையினர் வரிசையாய் அமர்ந்து புகைப்படத்தையும் முகத்தையும் பார்த்து சோதனை செய்தனர். பைகள் துழாவி எடுக்கப்பட்டு, தலைகீழாய்க் கொட்டப்பட்டன. எங்களுடன் வந்தவர் பிரபாகரன்.

“பிரபாகரன் பெயரா?”

“ஆமாம்”

இவர் அந்தப் பிரபாகரன் இல்லை.

“நீங்கதானா பிரபாகரன்”

“ ஆமாம் நான் நானேதான்”

முகத்தையும் படத்தையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, பிறகு முகவரியை சரி பார்த்தார்கள்.

அடுத்த கட்டம் சுங்கச் சோதனை.

“தங்கம் இருக்கா?”

“கரன்சி கட்டாய் இருக்கா?”

இருந்தால் அங்கு பதிவு செய்து விட்டுச் செல்லச் சொன்னார்கள்.

படகில் எங்களோடு இரு பாதிரியார்கள். படகு இயக்குபவர்கள் சேர்த்து, மொத்தம் 27 பேர். படகில் ஏறு முன் ஒரு முறை பெயர்களை, அடையாள அட்டையை சரி பார்த்து அனுமதித்தது போலீஸ்.

படகு புறப்பட்டு கொஞ்சம் தொலைவு போனதுபோது இந்திய கப்பற்படை ரோந்துப் படகு மறித்தது. “இதற்கு மேல் போகக்கூடாது” என்ற அறிவிப்பு. ஐந்து படகுகளாய் சேர்ந்து சேர்ந்து போக அனுமதித்தார்கள். ஆளுக்கொரு திசையில் வேகமெடுத்த படகுகளை இப்போது மறுபடி மறித்தது இந்தியக் கடற்படைக் கப்பல்.

“எண் 33 கடலோரக் காவல்படை கப்பல் தெரிகிறதா? அங்கே போங்கள்” என்று விரட்டுகிறான். எண் 33க்கு அருகாமையில் போனபோது எத்தனை பேர் என்று ஒலிபெருக்கியில் கேட்க “27” என்றார் படகு கேப்டன் அந்தோணி. கப்பலில் இருந்தபடியே எண்ணிவிட்டு “சரி போ” என்றார்கள்.

இந்திய எல்லையைத் தாண்டிய பின் இலங்கைக் கடற்படையின் மறிப்பு. கப்பலின் அருகிலிருந்த ரோந்துப் படகு எங்கள் பக்கம் வந்தது. இந்திய கடற்படையின் மீது நம்பிக்கை இல்லை.

எங்கள் படகினுள்ளே தாவி சோதனை போட்டார்கள்.

1974 வரை நம் கைவசமிருந்த கச்சத்தீவு இலங்கைக்கு கைமாறியதற்கு ஒரு கதை இருந்தது. இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்க தேசத்தை உருவாக்கிய பின் பாகிஸ்தான் இந்தியா மீது வன்மங் கொண்டது. இந்தியாவை எப்போதும் நடுக்கத்தில் வைத்திருக்க இலங்கையில் விமானதளம் அமைக்க இடம் கேட்டது. இலங்கையும் சம்மதிக்க, ஒப்பந்தம் போட இருப்பது தெரிந்த அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகாவுடன் பேசினார். கச்சத் தீவை எங்களுக்குத் தந்தால் பாகிஸ்தான் விமானதளத்துக்கு அனுமதிக்க மாட்டோம் எனறு சிறிமாவோ பேரம் பேச பேரத்துக்கு சம்மதித்தார் இந்திரகாந்தி. தமிழக எல்லையைச் சேர்ந்த கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. தமிழக அரசோ தமிழக அரசியல் தலைமைகளோ, மக்களோ யாரையும் ஒப்புக்கு கூட கேட்கவில்லை. இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடித்து வரும் சிங்கள ராசதந்திரத்தின் வெற்றி இது.

பின்னர் 1976-ல் மீண்டும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. தமிழக மீனவர்கள் கச்சத் தீவு கடற்கரையில் போய் வலைகளை உலர்த்தவும், ஆண்டுக்கு ஒருமுறை கச்சத் தீவில் நடக்கும் அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் இருநாட்டுக் கிறித்துவர்கள் பங்கேற்கலாம் எனவும் புதிய விதிகள் சேர்க்கப்பட்டன.

1983-ல் இலங்கையில் சிங்களர்கள் தமிழினப் படுகொலையை நடத்தியபோது கச்சத் தீவு அந்தோணியார் திருவிழாவைத் தடை செய்தது இலங்கை. 20 ஆண்டுகளாய் முடக்கப்பட்ட திருவிழா 2022 நார்வே ஒப்பந்தத்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பின் முதன் முதலாக நடைபெற்றது. அப்போது பங்குத் தந்தை அமல்ராஜ் தலைமையில் 16 பேர்தான் சென்றனர். ஈழப்பகுதியிலிருந்து நிறையப்பேர் வந்து தரிசித்துச் சென்றனர் என அமல்ராஜ் தெரிவிக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் இங்குள்ள பாதிரியார் அமல்ராஜும் யாழ்ப்பாணத்திலும் நெடுந்தீவிலுமிருக்கிற பாதிரியார்களும் முன்முயற்சி எடுத்து நடத்துகிறார்கள். ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு எதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதுமான கருத்து நிலைகொண்டிருந்த ஜெயலலிதா அரசின் காலத்தில் தந்தை அமல்ராஜ் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டார். விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கி கொண்டு அந்தோணியார் திருவிழாவை நடத்த அளவுக்கதிமாக ஆர்வம் காட்டுவதாக க்யூ பிராஞ்ச் குற்றம் சுமத்தியது. ஒவ்வொரு அண்டும் அந்தோணியார் திருவிழாவைக் கொண்டாட இரு நாட்டு கிறித்துவர்களும் ஒன்று சேரலாம் என ஒப்பந்தம் மூன்றாவது விதியில் உள்ளதாக அதற்கான பணிகளையே தான்செய்வதாக அமல்ராஜ் விளக்கம் அளித்தார். அ.தி.மு.க அரசு இருந்தவரை அவர் மீது ஒரு கண் வைத்து கண்காணித்தபடியே இருந்தது.

கரையில் இறக்கிவிடப்பட்ட நாங்கள் கச்சத்தீவின் வெப்பத்தால் வறுக்கப்பட்டோம். தாகமெடுத்தது. ராமேஸ்வரம் கடற்கரையில் சோதனை செய்த போலீசார் நாங்கள் வாங்கி வைத்த தண்ணீர் பாக்கெட்டுகளை எடுத்துக் கீழே எறிந்தார்கள். தண்ணீர் பாக்கெட்டுகள் கொண்டு போகக்கூடாதாம். ஆனால் தண்ணீர்ப் பாட்டில்கள் கொண்டு போகலாமாம். இரண்டுமே பிளாஸ்டிக்தானே என்ற எதிர்க் கேள்விக்கு பதில்சொல்ல வாய் இல்லை

வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு குழுவும் இடம் தேடிக்கொண்டிருந்தது. அங்கங்கே தெரிந்த சில மரங்களின் கீழ் செடி கொடிகளை வெட்டி, புதர் நீக்கி இடம் அமைத்தார்கள். நாங்கள் நடந்து கொஞ்ச தூரம்போய் ஒரு இடம் கண்டு பிடித்தோம். இண்டம் புதர். வெட்டுக்கத்தி கடன் வாங்கி புதர் நீக்கி, கீழே தூசி துப்பட்டை சுத்தமாக்கி மேலிருந்த கொடிகள் செடிகள் குடையாய் கவிழ்ந்த குளுமையில் உட்கார்ந்தோம்.

எங்களுக்கு எதிரிலிருந்த மரத்தடியில் செடி கொடிகளை அறுத்து இருப்பிடம் உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் நெடுந்தீவுக்காரர்கள். இருப்பிடம் தயாரித்து முடிந்ததும் நனைந்துபோன துணிகளைப் பிழிந்து காயப் போட்டார்கள். இரண்டு பக்கம் சட்டிகள் போல் மிதக்க நடுவாக தற்காலிக ஒரு மிதவைப் பாலம் அமைந்திருந்தார்கள் இலங்கைக் கடற்படையினர். மிதக்கும் பாலத்தில் ஒருவர் பின் ஒருவராக இடைவெளிவிட்டு நடந்துவர வேண்டும். அதுவும் நடுவாக நடந்து செல்ல வேண்டும். பெரிய படகிலிருந்து இறக்கிவிடப்பட்டு அதில் நடந்து வந்தவர்கள் மிதவைப் பாலம் ஒரு பக்கமாய்ச் சாய தண்ணீரில் விழுந்து எழுந்தார்கள்.

“பெண்டு பிள்ளைகளெல்லாம் பயந்து போயினம்” என்றார் நெடுந்தீவு இளைஞர் பரிதாபமாய். அதே நேரத்தில் காலில் சிறு தூசும் ஒரு துளித் தண்ணியும் படாதபடி கடற்படகிலிருந்து மேல் மட்ட அதிகாரிகள் இறங்கி வந்தது நினைவில் வந்தது.

நாங்கள் கொண்டு போயிருந்த சோற்றுப் பொட்டலங்களைப் பிரித்து சாப்பிட உட்கார்ந்தபோது எதிரிலிருந்தவர்கள் இன்னும் துணிகளைக் காயவைத்துக் கொண்டிருந்தார்கள்.

`சாப்பிடறீங்களா அய்யா” என்று கேட்டோம்.
`
“நாங்க கொண்டு வந்திருக்கம்தானே. இன்னும் கண நேரம் செல்லும். நீங்க சாப்பிடுங்கோ”

அவர்கள் நாவில் உதிர்ந்த ஈழத்தமிழ் எங்கள் உயிர்தடவி இளக்கியது.

கமல், சதீஷ் வன்னியில் இருந்து வந்த பையன்கள். இப்போது யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். சனார்த்தனம் என்ற இளைஞன் மாலையில் கடற்கரையில் இவர்கள் கிடைத்தான்.

“சினிமா பாப்பீங்களா, உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?”

என்று பேசத் தொடங்கினோம். சினிமா என்பது, சமகாலத்தின் மிகப் பெரிய வெளி , அதற்குள் எல்லோரும் இருந்தார்கள் அல்லது அதற்குள் இல்லாத ஒருவரும் இல்லை எனச் சொல்லாம்.

பல விசயங்களைப் பேசிப் பேசி மையப் புள்ளிக்கு வந்தோம். இந்தியாவில் நாங்கள் இரண்டாந்தர குடிமக்களாய் ஒதுக்கப்படுகிறோம் என்று விளக்கியபோது

“நீங்க சொல்றது நெஜந்தான் அண்ணை. இங்க நாங்க அடிமையாட்டம் இருக்கிறம்” என்றான் சதீஷ்,

முன்பு இவர்கள் கொழும்பு போனால், ஒரு பொருளை என்ன விலைக்குக் கேட்டாலும் சிங்களர் கொடுத்தார்கள். அப்போது தமிழன் என்றால் சிங்களருக்கு ஒரு அரண் (பயம்) இருந்தது. ஒவ்வொரு தமிழனையும் அவர்கள் புலிகளாகப் பார்த்தார்கள்.

"அண்டைக்கு எங்கட ஆட்சி நடந்தது. அதான் பயந்தாங்கள்” என்கிறான் சனார்த்தனம்.

இப்போது யாழ்ப்பாணத்தில் சிங்களரின் வியாபாரப் படையெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது. வேண்டிய பொருளை அவர்கள் நினைத்த விலைக்கு எடுத்துக் கொண்டு போகிறார்கள்.

"அவங்களுக்கு நீங்கதானே கடைகள விடுறீங்க, வீடு வாடகைக்கு விடுறீங்க” என்றபோது

“எதிர்த்தப் பேச முடியாது. பேசினா மேலிடத்துக்கு கொண்டு போய் கொன்னு போடுவாங்களண்ணை" என்றான் சதீஷ்.

நாங்க பேசிக்கொண்டிருந்தபோது கிடைத்த இன்னொருவர் செகன். அவர் தனியார் கல்லூரிப் பகுதிநேர ஆசிரியர்.

சொந்த பூமியில் அவர்கள் நடுக்கத்துடன் வாழுகிறார்கள். எந்த வீட்டையும் எந்த இடத்தையும் சிங்களர் நினைத்தால் எடுத்துக் கொள்வார்கள். அந்த அட்டூழியம் செய்ய ராணுவம் துணை வரும். பொதுப்பிரச்சனை என்று வெளிப்பட முடியாது. பேசுவோர் காணாமல் போய்விடுவார்கள் என்ற அச்சம். தன் வாழ்வை, தன் உயிரை தக்க வைத்துக்கொள்ள தமிழர்கள் தவிதாயப்படுகிறார்கள். பெற்றோர்கள் பையன்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் குறியாயிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் பையன்கள் வாழவே முடியாது. பொது விசயங்களில் அக்கறை கொள்ளுதல், எதிர்த்துக் கேட்பது, போராடுதல் என்ற பையன்களுக்குரிய குணங்களோடு இருப்பவர்கள் வாழ முடியாது.

இளைஞன், இளைஞனாக இருந்தால் முதலில் காட்டிக் கொடுப்பவர்கள் வருவார்கள். இரண்டாவதாய் இராணுவம் வரும். கடைசியாய் டக்ளஸின் ஆட்களால் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டு காணாமல் போவார்கள்.

தோற்றுப் போய்விட்டோம் என்ற உணர்வு அவர்கள் பேச்சில் வெளிப்பட்டது. “பெரிசு நிறையப் பிழைகள் விட்டிட்டாங்க அண்ணை” என்றார் செகன் (விடுதலைப் புலிகளை அவர்கள் அடையாளப்படுத்துகிற சொல் பெரிசு)

விடுதலைப் புலிகள் சரியாகச் செயல்படவில்லை மிகச் சரியாக செயல்பட்டிருப்பார்களானால் மக்களுக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்காது என்ற ஆதங்கம் அவர்களுக்குள் இருக்கிறது. சர்வதேச சதி, இந்திய வஞ்சகம் என்றெல்லாம் நான் பேச முயன்றபோது-

“என்னவானாலும் இருக்கட்டும், சொந்த மக்களை விட பலம் வேறென்ன பூமியில்”

என்று பதில் வைத்தார் செகன்.

கிளிநொச்சியிலிருந்து யாழ் செல்லும் ஏ 9 சாலையில் ஓமந்தை தாண்டியதும் முறிகண்டி கோயில். சாலையின் இடதுபக்கம் உள்ள பிரபலமான கோயில். அந்த வழியாய்ப் பயணிப்பவர்கள் வாகனங்களில் இருந்து இறங்கி வழிபடாமல் செல்வதில்லை. அதைச் சுற்றி சில ஏக்கர் நிலம் கோயிலுக்குச் சொந்தம். ஒரு தனிப்பட்டவரின் கோயில் அது. கோயிலுக்குச் சொந்தக்காரர் இப்போது லண்டனில் வசிக்கிறார். கோயிலையும் கோயிலைச் சுற்றியுள்ள நிலத்தையும் விலைக்கு வாங்கி சிங்கள முதலாளிகள் சுற்றுலாத் தலமாக ஆக்க முயற்சி செய்கிறார்கள் சிங்கள முதலாளிகள் கோயிலுக்குச் சொந்தக்காரர் விற்பதாக இல்லை.

“விற்றுவிட்டு நான் லண்டனில் சுகவாசியாக இருப்பேன். ஆனால் எனது மக்களை அவர்கள் கொன்று போடுவார்கள்."

விற்பதில்லை என்பதில் அவர் உறுதியாக நிற்கிறார். விலைக்கு வாங்கி விட்டால் கோயில் பக்கத்திலேயே புத்த விகாரை கட்டுவது சிங்களத் திட்டம். இப்போது இப்போது கோயில் எதிரில் பெரிய சுற்றுலா விடுதியை (ஓட்டல்) கட்டிவிட்டார்கள் சிங்களர்கள். எல்லாம் போச்சு என்றார்கள் எங்களின் எதிரில் அமர்ந்தவர்கள்.

இரண்டு இனத்துக்குமிடையே பகைமை மூட்டுவதில் இலங்கை குறியாக இருக்கிறது. குறிப்பாக மீனவர்களிடையே கலகம் மூட்டுவதில் வல்லமை கொண்டிருக்கிறார்கள்.

தங்களையே போன்ற மீனவர்களுடன் பகைமையை இலங்கை மீனவர்கள் விரும்பவில்லை. தங்கள் கடல் வளத்தை இழக்கவும் விரும்பவில்லை. எங்கள் விசைப் படகைச் செலுத்திவந்த அந்தோணியும் மற்ற நான்கு பேரும் சொன்னார்கள்.

"நாங்க அவங்களோட சண்டை போடுவமா? எங்க தண்ணியில மீன்பாடில்லை. பத்துப் படகு,இருபது இருந்தா எங்க கடலுக்குள்ளேயே பிடிக்கலாம். நாங்க 500 பேர் ; விசைப்படகில் சில பேர் ரெட்டைமடி (வலை) போடுவாங்க அதனால கச்சத் தீவைத் தாண்டித்தான் போய்ப் பிடிக்கணும். இந்தக் கச்சாலை மீன் பிடிச்சா வெலை கிடைக்காது. எறால் கிடைக்கனும்னா எல்லை தாண்டித்தான் போகனும்."

நம்முடைய மீனவர்கள் பக்கம் நியாயமிருக்கிறது. கச்சத் தீவைக் கைமாற்றியவர்கள் இதை பற்றி யோசித்திருக்க வேண்டும். கச்சத் தீவு நம்மிடம் இருந்திருந்தால் எல்லை தாண்டிப் போகிறார்கள் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கொட்டுகிற உளறலையெல்லாம் கேக்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது.

எல்லைகளற்றது மீனவர் உலகம். எதுவரை மீன் கிடைக்கிறதோ அதுதான் மீன் பிடி எல்லை. தண்ணீரில் எல்லை வகுத்து, வாழ்வாதாரத்தை சிதைக்கிற கொடுமையை நம் மீனவர்களும் பேசினார்கள். நெடுந்தீவு, யாழ் தமிழர்களும் கேட்டார்கள்.

இனப் பகைமை எல்லையற்று விரித்துச் செய்வது சிங்கள அரசு என்பதற்கு இருதயராஜ் என்பவரின் வாழ்க்கை ஒரு சாட்சியம். கச்சத் தீவு திருப்பலி சிறப்பு நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். இருதயராஜ் அகதியாக மண்டபம் முகாமில் மூன்று வருடங்கள் வாழ்ந்தவர். பிறகு முகாமை விட்டு வெளியேறி வெளிப்பதிவில் தூத்துக்குடியில் 12 வருசங்களாக இருக்கிறார். அவர் வியாபார நிமித்தம் சிங்கப்பூரிலிருந்து இந்த ஜனவரி 24ம் நாள் கொழும்பு வந்திருக்கிறார். விமானத்தில் இவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்த ஆள் ஒரு சிங்களர். கொழும்பு போலிஸ் மா அதிபரின் (இங்கு டி.ஐ.ஜி போல) மருமகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பேச்சுக் கொடுக்கையில் இக்னேசியஸ் யார், எப்படிப்பட்டட ஆள் என்ற பக்க விபரங்களையெல்லாம், விமானத்தில் விஸ்கி வரவழைத்து மேலதிகமாய்ச் சாப்பிட வைத்து மயக்கத்தில் கறந்துகொண்டார். கொழும்பில் வேறெங்கும் தங்க வேண்டாம். என் வீட்டிலேயே தங்கலாம். போலிஸ் மா அதிபர் மூலமாய் எல்லா உதவிகளும் செய்வதாக அழைத்துச் சென்றிருக்கிறார்.

இக்னேசியஸை இருக்கச்செய்த இடம் சொந்த வீடல்ல. அருகில் வீடுகளும் இல்லை. தன்னைக் கடத்திக்கொண்டு வந்திருக்கிறான் என்பது இருதயராஜுக்குப் புரிந்துபோனது. பூட்டி வைத்து விட்டு வெளியே போனவன் இரவு வந்திருக்கிறான். 25 லட்சம் ரூபாய் கொடுத்தால் வெளியே விடுவேன் என்றிருக்கிறான். என்னிடம் பணம் இல்லை என்று இக்னேசியஸ் சொல்ல அப்படியென்றால் இங்கேயே கெட என்று மறுபடி பூட்டி விட்டு வெளியில் சென்றான். அடுத்த நாள் காலையில் வந்தவனிடம் சிங்கப்பூரில் வாங்கி வந்த 12 பவுன் நகை இருக்கிறது இதை எடுத்துக்கொண்டு விட்டு விடு என்று முறையிட்டிருக்கிறார். 12 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு இன்னும் 5 லட்ச ரூபாய் வேண்டும் கொடு என்று மிரட்டினான்.

இருந்ததெல்லாம் இந்த நகைதான் என்று இருதயராஜ் அழுதபோது யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் இருக்கிறார்கள்தானே அவர்களிடம் வாங்கிக்கொடு என்று இவரிடமிருந்து பறித்து வைத்துக்கொண்ட கைபேசியை அவர் கையில் கொடுத்து விட்டு வெளியேறியிருக்கிறான்.

யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர்களைத் தொடர்பு கொண்டு ரூ 5 லட்சத்தை எப்படியாவது தயார் செய்து தன் கணக்கில் போடுமாறு தெரிவித்துள்ளார். அதை காசோலையாக அவனுக்குக் கொடுத்தபோதும் தான் கடத்தி வைக்கப்பட்டுள்ளதை உறவினர்களுக்குத் தெரிவிக்கவில்லை. தெரிவித்தால் அவருடைய உயிர் இருக்காது என்பது தெரிந்த விசயம். பண இழப்போடு உயிரிழப்பும் ஏற்பட வேண்டுமா என நினைத்தார். அந்த 5 லட்சம் ரூபாயையும் பெற்றுக்கொண்டு இன்னும் ஒரு லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினானாம் கொழும்பு போலிஸ் மா அதிபரின் மருமகன். கடைசியில் கையில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் மோதிரத்தை பிடுங்கிக் கொண்டு அனுப்பியிருக்கிறான்.

“அவன் போலிஸ் மா அதிபரின் மருமகன் தானா? தெரியுமா?" எங்களுடைய கேள்விக்கு பதில் சொன்னார்.

"அவன் போலீஸ் வாகனத்தில்தான் வந்தான். போனான். அவன் கையில் துப்பாக்கி. அதைக் காட்டி மிரட்டினான்’’

ஆள்கடத்தல், பணம் பறித்தல், தாதாக்களின் பயமுறுத்தல், காணாமல் போதல், கொல்லப்படுதல், பாலியல் வன்முறை எனப் பலவகையிலும் தமிழர்களை என்னென்ன தினுசுகளில் செய்யத் திறனுண்டோ அத்தனை முறைகளிலும் செய்ய சிங்கள அதிகாரம் பின்னிப் பிணைந்து நிற்கிறது.

19ம் நாள் இரவில் திருப்பலி நிகழ்ச்சியின்போது யாழ்ப்பாண பாதிரியார் நடத்திய மன்றாட்டில் வெளிப்பட்ட சில வாசகங்கள் எங்களுக்கும் ஈழத் தமிழ் உறவுகளுக்கும் முக்கியமானவை.
அருள் நிறைந்த மரியே,
அத்திஷ்ட மரியாளே
தேவனுடைய மாதாவே
பெண்களுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவரே
உம்முடைய சிறுவயிற்றின் கனியாகிய
ஏசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே
யார் யாரெல்லாம் வாழ்க்கைப் போராட்டத்தில்
துன்பங்களால் துயருறுகிறார்களோ
அவர்களுக்காக பிரார்த்திப்போம்
ஆமென்
இறந்து போனவர்களை நினைத்துப் பார்த்தோம்
இயற்கை உற்பாதமான சுனாமியால்
உயிரிழந்தோரை நினைத்துப் பார்த்தோம்
வாழ்க்கைப் போராட்டத்தில் தொழில்செய்கிறபோது
இறந்த போனவர்களை
யுத்தத்தில்கொல்லப்பட்டு மரித்தவர்களை
நினைத்துப் பார்த்தோம்
அருள்நிறைந்த மரியே,அத்திஷ்ட மாதாவே
பெண்களில் ஆசிர்வதிக்கப்பட்டவரே
இறந்து போனவர்களும் கொல்லப்பட்டவர்களும்
சிலுவையில் அறையப்பட்டவர்களே
இவர்களுக்காக பிரார்த்திப்போம்
யுத்தத்திலே உறவுகளை இழந்தவர்கள்,
தாய்,தந்தையரைப் பறிகொடுத்தவர்கள்
இவர்களும் சிலுவையில் அறையப்பட்டவர்களே
இவர்களுக்காக எங்கள் மன்றாட்டை
ஏற்றுக்கொள்ளும்
ஆமென்
போரிலே உடல் உறுப்புக்களை இழந்தவர்கள்
இரசாயனக் குண்டு வீச்சினால் பார்வை பறிபோனவர்கள்
அனாதையாக்கப்பட்டவர்கள்
இவர்களும் சிலுவையில்அறையப்பட்டவர்களே
இப்போதும் இந்த மரண நேரத்திலும்
அவர்களுக்காக வேண்டிக் கொள்கிறோம்
முகாம்களில் அல்லற்படும் எமது இனமக்களுக்காக
சித்திரவதை முகாம்களில் துன்புறுத்தப்படும் எம் மக்களுக்காக
கற்பழிக்கப்பட்ட எங்கள் சகோதரிகளுக்காக
அருள்நிறைந்த மரியே, அத்தியஷ்ட மரியாளே
தேவனுடைய மாதாவே
பெண்களுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவரே
இப்போதும் இந்த மரண நேரத்திலும்
எங்கள் மன்றாட்டை ஏற்றுக்கொள்வீராக
ஆமென்
இந்த மன்றாட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு பாதிரியார் சமர்ப்பித்தது.

“மிகப் பெரிய சித்திவதைகளைப் பட்ட எமது இன மக்களின் உணர்வுகளோடு, இந்தியாவிலிருந்து வந்த உறவுகளின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதாக இச்சமய நிகழ்வை நடத்தினோம்’’

தனியாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கையில் பாதிரியார் தெரிவித்தார்.

இராணுவக் கட்டுக்கோப்பில் நடந்த விழாவில் தமிழர்களின் கோபக்குரலையும் உள் உணர்வுகளையும் தாபத்தையும் வெளிப்படுத்தியதாக சிலுவைப்பாட்டினை நடத்திய பாதிரியார்கள்- அவர்கள் தமிழகத்திலிருந்து வந்திருந்தாலும், யாழ்ப்பாணம், நெடுந்தீவிலிருந்து வந்தவர்களானாலும் மனிதநேயம் கொண்டவர்கள்; அதனால் தமிழ்ச் சமூகத்தின் மீது தணியாத அக்கறை உள்ளவர்கள்; அதனால் முதலில் அவர்கள் தமிழர்கள்.

இராணுவக் கட்டுக்கோப்புக்குள் நடந்த விழாவில் இலங்கை அரசை விமரிசித்து பாதிரியார் மன்றாட்டு நடத்தினார் என்ற செய்தி மேலிடத்துக்குப் போகலாம். இலங்கை உளவுத் துறையினரும் வந்திருந்தார்கள். பொது நலன்களின் பொருட்டு அரசை எதிர்த்துப் பேசுகிறவர்களைப் போலவே பாதிரியாரும் காணாமல் போகலாம்.

ஒரு பாதிரியாரை சாதாரணனைப் போல் காணாமல் போகச் செய்வது எளிதானதும் சாதாரணமானதுமான வேலையல்ல.

ராசபக்ஷே போன்ற முரடர்கள் மீசை வைத்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; முகத்துக்கு மேலே மூளையும் கொண்டிருக்கிறார்கள்.

நன்றி: கீற்று - 26 ஏப்ரல் 2011

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்