குழந்தைகள் பெண்கள் தேர்வுகள்!


குழந்தைகளின் கல்வி விஷயத்தில் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி நாம் பேசுவதில்லை. குறிப்பாக, குழந்தைகள் தேர்வுக்குத் தயாராகும் சமயங்களில் பெற்றோரின் நிலையைப் பார்க்கும்போது கல்விமுறையில் இருக்கும் குறைபாடுகளை நன்கு உணர முடிகிறது. பெற்றோர்கள் தேர்வு அறைகளில் மாணவ, மாணவிகளாய் உட்காரவில்லையே தவிர, மனதளவில் அங்குதான் இருக்கிறார்கள். தேர்வெழுதித் திரும்பும் குழந்தைக்காகக் கல்வி வளாகங்களின் சுற்றுச் சுவருக்கு வெளியில், சாலை மரத்தடி நிழல்களில் காத்திருக்கின்றனர். 

இந்தப் போக்கு கிராமங்கள் வரை பரவியிருக்கிறது. சிற்றுந்துகள், உள்ளுர் வாகனங்கள், ஆட்டோ, வேன், புறநகர்ப் பேருந்துகள் என எல்லாவற்றிலும் பிள்ளைகளைத் திணித்து அனுப்ப பெற்றோர் கூட்டம் முண்டுவதைத் தினமும் பார்க்க முடிகிறது. சாலை நெரிசலில் பள்ளி வாகன அடையாளத்தில் முந்துகின்றன மஞ்சள் நிற வாகனங்கள். காலை 7 மணிக்கு ஏற்றிவிடப்படும் பிள்ளைகள், வாகனங்களிலேயே தூங்கிப்போகிறார்கள். பள்ளிக்கூடம் வந்ததும், தூக்கம் ‘சட்’ டென்று கலைய, பிஞ்சுகளுக்கு மொத்த உலகின் மேலும் எரிச்சல் உண்டாகிறது. மறுபுறம், பேருந்தில் பயணிக்கும் களைப்பிலும் தன் குழந்தை, தேர்வுச் சிரத்தையற்றுத் தூங்கிவிடக் கூடாதே என்பது பெற்றோருடைய கவலை. இவ்விஷயத்தில் பெரிதும் சிரத்தை எடுத்துக்கொள்வதும் சிரமங்களை அனுபவிப்பதும் பெண்கள்தான்!

பெண்களின் துயரம்
குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்துவதற்காகவே அன்றாடக் கடமைக்காகப் பல தாய்மார்கள் தாங்கள் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டார்கள். எங்கள் உறவுக்காரப் பெண்ணின் மகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதுகிறாள். மூத்த பையன் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறான். இருவரையும் தேர்வுக்குத் தயார் செய்வதற்காகவே, கணிசமான வருவாய் தந்த மென்பொருள் பொறியாளர் பணியை விட்டுவிட்டார் அவர்.

வீட்டில் முடங்குவது, வேலையை விடுவது என்று குழந்தை வளர்ப்புக்காக வீட்டின் மூலைச் சமையலறையில் மீண்டும் பெண் அடைக்கப்படுகிறாள். பெண்தான் குடும்பம், பெண்தான் எல்லாம் என்ற பழைய கருத்துநிலைக்கே இன்றைய கல்விமுறையும் பாடங்களும் தேர்வுகளும் பெண்ணைக் கொண்டுசெல்கின்றன எனலாம். எந்த வீட்டிலும் பிள்ளைகள் கல்விக்காக ஆண்கள் வேலையைத் துறப்பதில்லை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?

அருகாமைப் பள்ளிகள்
பேச வேண்டிய இன்னொரு பிரச்சினை, வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையில் உள்ள தொலைவு. கல்வி நிலையத்துக்குச் செல்ல ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. என் உறவினரின் மருமகள் வாடகை அதிகமாயிருந்தபோதும் பள்ளிக்கு அருகில் வீடு மாற்றிப் போய்விட்டார். சீரான ஓட்டத்திலிருக்கும் வாழ்வு முறையைக்கூட தூக்கியெறிந்து பந்தாடிவிட்டன நமது கல்வி முறையும் அதன் உச்சமான தேர்வு முறையும்.

கோத்தாரி கமிஷன் முதல் கல்வியாளர்கள் வரை அருகமைப் பள்ளி பற்றிப் பேசினார்கள். அருகமைப் பள்ளிகள் கல்வி நடைமுறைக்கு வந்திருந்தால், வீடுமாற்றமோ, மஞ்சள் வாகனங்களோ தேவைப்பட்டிருக்காது. இன்றைய கல்வி முறையில் தங்கள் குழந்தைகளைக் கரைசேர்க்க சாமானியர்களும் உழைத்துப் பிழைக்கும் மக்களும் நடுத்தர வர்க்கமும் படும் பாடு சொல்லி மாளாது.

இரண்டு குழந்தைகளைப் பராமரித்து கல்விச் செலவுசெய்து பள்ளிக்கு அனுப்ப முடியாதென ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்ளும் குடும்பங்கள் பெருகிவருகின்றன. ‘ஒன்றுக்கு மேல் என்றும் வேண்டாம்’ என்ற ரீதியில் அந்தக் குடும்பங்கள் எடுக்கும் முடிவில், பெயரெழுதப்படாத குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலகங்களாய்க் கல்வி நிலையங்கள் மாறியிருக்கின்றன.

நீட் எனும் சவால் 
இத்தனைப் பிரச்சினைகளுக்கு நடுவே, இப்போது ‘நீட்’ எனும் பெருஞ்சுமையும் பெற்றோர்களின் மூளைகள், தோள்கள்மீது ஏற்றப்பட்டுள்ளது. ‘நீட்’ சவாலுக்கு அழைப்பது மாணவர்களை மட்டுமல்ல. அவர்களின் கல்விக்குப் பொறுப்பாக உள்ள பெற்றோர்களையும்தான். ‘நீட்’ தேர்வுக்குப் பயிற்சியளிப்பதற்காகவே ஆயிரக்கணக்கில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் புறப்பட்டுள்ளன. இப்போது, பள்ளிக்கூடங்களுக்கு மட்டுமின்றி பயிற்சி நிறுவனங்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், அனைவரும் நகரத்தில் வாழ்வதில்லை; அனைவரும் வசதி படைத்தவர்களில்லை. கிராமப்புற சாமானியர்களுக்கு இந்தப் புதிய சவாலை எதிர்கொள்ளும் பலமில்லை. இதனால், எத்தனையோ மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவுகளைக் கைவிட்டுவிட்டார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016- ல் 38 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்கள்; நீட் தேர்வு எழுதிய 2017-ல் ஒன்பது பேர்தான் தேர்வாகியுள்ளனர். இந்தக் கொடுமையை என்னவென்று உரைப்பது?

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்கள் முற்போக்காக இருப்பதாகவும், பதின்ம வயதுகளை அறிவின் உச்சபட்ச அறுபதுகளாக ஆக்குவதாகவும் சிலர் வக்காலத்து வாங்குகிறார்கள். ஆட்சியாளர்களின் கருத்தியல், கொள்கைகளுக்கு இசைவாக கல்விப்புலமும் பாடத்திட்டங்களும் எப்படி மாற்றப்படுகின்றன என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. 

கல்வி என்பது...
மத்திய அரசின் கல்வித் திட்டங்களோ, மாநிலக் கல்விக் கொள்கையோ எதுவாயினும் வளருகிற இளம் நெஞ்சுக்கு வாழ்வியல் நம்பிக்கையைத் தர வேண்டும். தற்போதைய தேர்வுகளும் மதிப்பெண்களும் வாழ்வியல் நம்பிக்கையைத் தருவதில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. தேர்வுகளுக்கும் மதிப்பெண்களுக்கும் அப்பால் வேறெங்கொ தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது வாழ்வு!

அரசு மக்களுக்குத் தர வேண்டிய கடமைகளில் முக்கியமானது கல்வி. குழந்தைகளை நல்ல மனிதர்களாக வளர்ப்பது எப்படி என்பதில் கருத்துச் செலுத்துவதுதான் சரியான கல்விமுறை. மானுடமெனும் பொதுச் சமூகத்துக்குப் பொருந்தும் மனிதகுண வார்ப்புகளை உருவாக்குவதே வகுப்பறைக் கடமை. மாணவப் பருவத்தில் ஆளுமைப் பண்பை உருவாக்கவும், அவர்களிடம் வெளிப்படும் ஒளிக்கீற்றைக் கண்டறிந்து அதை வளர்த்தெடுக்கவும் ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.

விலை கொடுத்து வாங்குவதல்ல கல்வி. மீன்குஞ்சுகளை மொத்தமாய் ஒரு குடுவைக்குள் கொட்டி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, சுவாசிக்க காற்றில்லாது முட்டி மேலேற வேண்டும் என்று சொல்வதல்ல கல்வியின் வேலை. மீன்களை அதனதன் கடல்களில் சுதந்திரமாக உலவவிட வேண்டும். அதுதான் எதிர்காலத் தலைமுறையின் வளத்துக்கு உத்தரவாதம் தரும்!

- பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், 
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் 
மாணவர் தலைவர்களுள் ஒருவர்.

நன்றி: இந்து தமிழ் - 4 ஏப்ரல் 2018

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

இலக்கியப் பிரச்சினைகள் - தலித் எழுத்து

பா.செயப்பிரகாசம் நூல்கள்

கி.ரா.வின்‌ கன்னிமை