தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்கள்

தமிழர் - சிங்களர் என்னும் ஈரின மக்கள் ஓரு தீவுக்குள் வாழ்ந்தனர். சிங்களப் பேரினத்தின் அனைத்துப் பகைச் செயல்களுக்கும் ஆக்கிரமிப்புக்கும் அது மூலப் புள்ளியானது. இரு இனங்கள்-இரு நாடுகள் என தீவு பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்படியொன்று நேர்ந்தால் அது பிரிப்பு அல்ல; புதிய தோற்றம்; புதிய வடிவமைப்பு. எழுத்தாளர் சதத் ஹஸன் மாண்டோ சொன்னது உண்மையாகியிருக்கும்: அவர் சொன்னார்:  “இரு நாடுகள் பிரிந்தன என்று எழுதாதே, இரு நாடுகள் உதயமாகின என்று எழுது”.

தனித் தனி எல்லை, தனித்தனி ஆட்சி என்று வழிவழி வந்ததை தனது வேட்டைக்காடாய் ஆக்கிட பிரித்தனியா ஒரே நாடாக்கியது.   பிரித்தானிய ஆதிக்கம்  வெளியேறுகையில் தனித்தனி நாடுகளாக்கி அவரவர் கையில் ஒப்படைத்திருக்க வேண்டும். காலனி ஆதிக்க நலன்களால் அறக்கோட்பாடுகள்   வெகுதூரம் விலக்கிவைக்கப்பட்டன: அல்லது காணாமல் ஆக்கப்பட்டன.

கென்ய ஏழுத்தாளரான கூஹி-வா-தியாங்கோ காலனியாதிக்க எதிரர்ப்பில் உருவாகி வளர்ந்தவர். கென்ய நாட்டின் விடுதலைப்போராட்டமும் கூஹியின் வரலாறும் ஒன்றாக எழுதப்படும் ஏன்று சொல்வார்கள். காலனியாதிக்கத்துக்கும் அறநெறிக்கும்  வெகுதொலைவு என்று கண்டவர்:

“என் சொந்த நாட்டுக்கு முன்வாசல் வழியாக ஆனுப்பி வைக்கப்பட்டால், இந்த நாட்டின் பின்வாசல் வழியாக மீண்டும் நுழைவேன். முன்னைக் காட்டிலும் வேரூன்றக் கூடிய விதைகளை விதைப்பேன்”

சிலுவையில் தொங்கும் சாத்தான் என்ற நாவலில் பன்னாட்டு மூலதனம் (ஏகாதிபத்தியம்) சொல்வதாக இந்த வாசகத்தை தந்திருந்தார் கூஹி.

தனது கால்கள் பதிந்த தேசங்கள் எங்கெங்கு உண்டுமோ அங்கெல்லாம்  இந்தப் பின்வாசல் கொள்ளைத் தத்துவத்தை செயல்படுத்தியது   பிரிட்டன் மட்டுமல்ல,   விரிவாதிக்க நலன்கொண்ட அனைத்து வலரசுகளும்   இந்த பின்வாசல் தத்துவத்தை விடாப்பிடியாக  கொண்டிருந்தன.

இலங்கையில் ஒரு இனத்தின் கையில் அரசியல் அதிகாரத்தையும், மற்றொரு இனத்தை அதிகாரம் ஏதுமில்லா  வெறும் மக்கள் தொகுதியாகவும்  கையளித்துச் சென்றது பிரிட்டன்.

இதை மறுகணக்கீடு செய்து, உணர்ந்து பார்த்து, இது வரலாற்றுப் பிழை என்று சொல்ல மனச்சாட்சியுள்ள ஒருவருக்கு ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அந்த மனச்சாட்சியுள்ள மனிதர் பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பெண்மணி ராக்கேல் சாய்ஸ்.

“தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தனியரசாட்சி செய்து - தனித்த அடையாளங்களுடன்  வாழ்ந்தவர்கள். பிரித்தானியர் இலங்கை புகுமுன், ஒரு லட்சம் தமிழர்கள் தனியாட்சி நடத்தினர். தமது லாபத்திற்காக பிரித்தானியர்  ஒரே நாடாக இணைத்துக்கொண்டார்கள். இது ஒரு வரலாற்றுப்பிழை. நாங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுகையில் சிங்களர் கையில் அதிகாரத்தை ஒப்படை செய்து வெளியேறியது மாபெரும் வரலாற்றுப் பிழை. விடுதலை பெற்ற நாளிலிருந்து தமிழர் மீது நடக்கும் இன அடக்கு முறைக்கு இதுவே தொடக்கம்.“

ராக்கேல் சாய்ஸ் அதற்காக தமிழ்ச் சமுதாயத்திடம் மன்னிப்புக் கோரினார்.  ஜெனிவாவில் ஐ.நா.மன்றத்தின் முன் தீக்குளித்து சாவு எய்திய லண்டனைச் சேர்ந்த முருகதாசன் நினைவேந்தல் கூட்டம் லண்டனில் நடைபெறுகையில் பங்கேற்ற அவர், “இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்ட உங்களனைவரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்....  2007-ல்  எனது  கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியிலிருந்த போது,  ஈவிரக்கமற்ற  ஒடுக்குமுறைக்கு ஆதரவாக இலங்கைக்கு பிரிட்டன் 700 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் வழங்கியதற்காக வெட்கப்படுகிறேன்” என்றார்.

18,19-ஆம் நூற்றாண்டுகளில் காலனயாதிக்க மனோபாவமும், 20-ம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய உளவியலலையும் கட்டமைத்துக் கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த ராக்கேல் சாய்ஸ் போன்றோரிடம் வந்திருக்கிற இந்த மீள்சிந்தனை நமக்கு வியப்பைத் தருகிறது. ரிஷிகள், முனிபுங்கவர், ஞானிகள், வேதவிற்பன்னர்கள், கீதோபதேசங்கள் ஊருவாக்கிய ஆரிய தர்மக் கலாச்சாரத்தில் ஊறி ஊருவான இந்திய அரசியல் தலைமகளுக்கு கொஞ்சமும்   மனச்சாட்சியற்றுப்போனது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதலாளித்துவப் பிரதிநிதியான பிரிட்டனை வியப்போடும் பாராம்பரிய கலாச்சாரத்தில் கனிந்த இந்தியாவை அதிர்ச்சியோடும் ஏதிர்கொள்கிறான் இன்றைய தமிழன்.

2

அதிகாரத்துக்கு வந்தபின் 2006-ல் போர்நிறுத்த ஓப்பந்தத்தை தன்னிச்சையாக முறித்துக்கொண்டான் ராஜபக்சே. கிழக்கு மாகாணம் சம்பூர், மூதூர் பகுதிகளில் தாக்குதல் செய்து, விடுதலைப் புலிகளை ராணுவம் வெளியேற்றிய போது   ராஜபச்ஷே, சரத்பொன்சேகா என்ற இரு ரத்தக் காட்டேரிகளுடன்   இந்தியாவும் கைகோர்த்திருந்தது. அதற்குக் காணிக்கையாய் சம்பூர் கிழக்கில் இந்திய அனல்மின் நிலையம் அமைக்க 672 ஹெக்டேர் சதுர கி.மீ. இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டது.சம்பூர், மூதூர் பகுதிகளில் 14- கிராமங்களில் வசித்த இருபதாயிரம் தமிழர்களும் வெளியேற்றப்பட்டு அகதிகளாகினர்.

2006-முதல் சிங்கள அரசுக்கு தாக்குதல் காலமாகவும் - தமிழர்களுக்கு எதிர்வினைகளின் காலமாகவும் உருவெடுத்தது.செஞ்சோலைச் சிறுமிகள் 62 பேர் விமானக்குண்டு வீச்சால் கொல்லப்பட்டனர். தமிழகமெங்கும் கணடனக்குரல்கள் உயர்ந்தன.

செஞ்சோலைச் சிறுமிகள் கொல்லப்பட்ட நாள் முதல் கண்கள் நம்முடைய முகத்திலிருந்தாலும் நம்முடையதாக இல்லை. காதுகள் நம் காதுகளாக இல்லை. எல்லாமும் ஈழம் நோக்கியே திரும்பியிருந்தன. எந்தப் பொழுதில் எந்தச் சேதி வருமோ என ஈழத்திசை பார்த்து நின்றன. வாய்களும் பாவப்பட்ட மக்களின் துயரம் பற்றிப் பேசும் வாய்களாகிப்போயின.

அமைதிப் பேச்சினை பிரதானப் பணியாய் முன்னெடுத்த சுப.தமிழ்ச்செல்வன் தனது அலுவலகத்திலிருந்த போது,  விமானங்கள் குறிவைத்து தாக்கி உயிர் பறிக்கப்பட்டார். தமிழகத்தில் ஒரு போராளியின் சாவுக்கு கண்ணீர் சிந்தவும் அனுமதியில்லை. ஆனால் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் கவிதை எழுத சிறப்புச் சலுகை! எமக்கு சென்னை புழல் சிறை!

12 நவம்பர் 2007ல் பழ.நெடுமாறன், வை.கோ, பெ.மணியரசன், கி.தா.பச்சையப்பன், இராசேந்திர சோழன், சூரியதீபன், புரட்சிகர இளைஞர் முன்னணியினர் என 360க்கும் மேல் கைதாகினர்.

செஞ்சோலைச் சிறுமிகள் கருக்கப்பட்ட நாளில், உலகம் கண்ணீர் தத்தளிக்க நின்றது. ’காந்தியும் புத்தரும் எம்மிரு கருணை தீபங்கள்‘  எனக்  கொண்டாடும்   இந்தியாவிடமிருந்து ஒரு துளி நீரும் வெளிப்படவில்லை; சுப.தமிழ்செல்வன் கொலையுண்ட போதும் கண்டிக்க இந்திய உதடுகள் பிரியவில்லை.

இத்தனை காலமாய் இத்தனை கொடூரங்களையும் ஒளிந்து   செய்துகொண்டிருந்த இந்தியா யுத்தத்தின் நேரடிநெறியாளன் என்ற உண்மை ராடார்களைப் புலிகள் தாக்கியழித்தபோது  வெளிப்பட்டது  காயம்பட்டவர்களில் இந்தியப் பொறியாளர்களிருந்தனர். அவர்கள் தான் ராடார்களை இயக்கினர்.  கேள்வி எழும்பியபோது அவர்கள் மட்டுமேயல்ல, இன்னும் 260 ராணுவ வல்லுநர்கள் அங்கிருந்து   இலங்கை இராணுவத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற அதிர்ச்சிப் பதில் வந்தது.

இந்தியா வழங்கும் இராணுவ உதவிகளைக் கண்டித்து, சென்னையில், நெடுமாறன் தலைமையிலான தமிழ்த்தேசிய இயக்கமும், தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகளும் நடத்திய ஆர்ப்பாட்டம்  தமிழகமெங்கும்   தொடர் நிகழ்வாகியது.

ஈழத்தமிழர் மீதான சிங்கள அரசின் போரை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தை நோக்கி 12-11-2008 அன்று பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தமிழ்த் தேசிய அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.


சென்னை அண்ணா சாலை பெரியார் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக சென்று தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு முன்பு இந்திய அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். காவல்துறையின் தடையை மீறி இவ்வார்ப்பட்டம் நடைபெறும் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.

ஈழத்தமிழர் அவலம் துடைக்க தமிழ்ச் சமூகத்தின் பல கரங்கள் நீண்டன. வருடம் பல லட்ச ரூபாய் ஊதியமாகப் பெற்றுக் கொண்டிருக்கிற கணினிப் பொறியாளர்கள் (I.T. Software Engineers) 12.12.2008 அன்று சென்னை கோயம்பேட்டில் ஒரு நாள் உண்ணா நோன்பு மேற்கொண்டனர். அதே நாளில் தோழர் தியாகு தலைமையில் அம்பத்தூர்ப் பகுதி தமிழ்க்கலை இலக்கியப் பேரவையினர் ஒருநாள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  20 நாட்கள் முன்னதாக தியாகராயநகர்  பனகல் பூங்கா அருகி கணிணித் துறையினர் (17.11.21008) ஓரு பிற்பகலில் மனிதச் சங்கிலியில் கைகோர்த்தனர்.

தமிழகத்திலுள்ள 221 ஓவியர்கள் ஈழத்தில் போரிடும் உடன்பிறப்புகளுக்காக 14.11.2008 முதல் 21.11.2008 வரை ஓவியப் படையல் செய்து, ஓவியங்கள் விற்ற தொகையினை ஈழத்துக்கு அனுப்பிட ஏற்பாடு செய்தனர்.

திரைக் கலைஞர்களின் ஓன்றுபட்ட குரல்   பிரமிக்க வைத்தது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்கள் அமைப்பு, நடிகர் சங்கம், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சங்கமித்து எழுப்பிய குரல் ,டெல்லியை எட்டியதோ என்னவோ, நிச்சயம் ஈழத்தை எட்டியிருக்கும்.

போரை நிறுத்து என்ற எழுச்சி தமிழகத்தில் கனலாய் ஏழுந்தபோது, 22.09.09 அன்று தமிழப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் சென்னையில் ஒருநாள் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தப் பெற்றது. அக்-2, காந்தி பிறந்த நாளில், இந்திய பொதுவுடைமைக்கட்சி அனைத்துக் கட்சியினரையும் இணைத்துப் பங்கேற்கச் செய்த (தி.மு.க. காங்கிரஸ், அ.தி.மு.க.வினர் கலந்துகொள்ளாத)  ஒருநாள் உண்ணா நோன்பு வரலாற்றில் ஓரு திருப்புமுனை.

ஏந்தக் குரலும் கேட்காத ஜென்மம் ஒன்று இருந்தது என்றால்  - அது இந்தியா.

தமிழகத்தில் எத்தனை அதிர்வுகள் நிகழ்ந்தாலும் அசையாது கல்லுகுத்தி போல் ஒருவர் உட்கார்ந்திருந்தாரெனில் அவர் முதல்வர் கருணாநிதி.

தன் பங்குக்கு சில நாடகங்களை ஒன்றன்பின் ஒன்றாய் அவர் அரங்கேற்றினார். இந்தியப் பொதுவுடைமைக்கட்சி அக்டோபர் 2-ல் வெற்றிகரமாய் நடத்திய போராட்டத்துக்குப் பின், அக்டோபர்-6 ஆம் நாளே மயிலை மாங்கொல்லையில் தி.மு.க கூட்டம்.

ஆக்டோபர் 14-ல் அனைத்துக்கட்சியினரையும் கூட்டி முதல்வர் கருணாநிதி ஓரு தீர்மானம் நிறைவேற்றினார். “பதினைந்து நாளில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வில்லையென்றால் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள்” என்றந்தத்  தீர்மானம் சொல்லியது. ஆனால் நடைமுறைக்குப் போகாமல்  துரோகமாய் முடிந்தது.

24.10.2008ல் அனைத்து கட்சியினரும் இணைந்த மனிதச் சங்கிலி தமிழகத் தலைநகரில் மட்டுமல்ல, தமிழகமெங்கும் நடந்தன.

அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கைகள் 8.12.2008 அன்றும் மீனவர் அமைப்புகள், பர்மாத் தமிழர்கள், அகதி முகாம் தமிழர்கள் என ஆங்காங்கே ஆதரவுப் போராட்டங்கள் மேற்கொண்டனர்.

ஈழத்தமிழர் தோழமைக்குரல் சார்பில் படைப்பாளிகள், தமிழுணர்வாளர்கள் 150 பேர் டெல்லி சென்று பிப்ரவரி 18-ல் நாடாளுமன்றத்தின் முன் இருநாட்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிகழ்வினை தியாகு, எழுத்தாளர் சூரியதீபன், கவிஞர் தாமரை போன்றோர் முன்னணியில் நின்று நடத்தினர்.

விழுப்புரத்தை மையமாய்க் கொண்டு இயங்கும் தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு பிப்ரவரி-4 அன்று சென்னையில் உண்ணாநோன்பை நடத்திக் காட்டியது.

பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தனித்தனியே போராட்டக் களங்களை முன்னெடுத்தன.  ஒன்றிணைந்து தமிழர்  ஓருங்கிணைப்புக்குழு ஏன்ற பெயரில் களம் கண்டன. ஈழத் தமிழர் விடுதலைக்கு உரமிடும் எழுச்சிகள் புலம்பெயர் நாடுகளில் விசைபெற்று மேலேறிக்கொண்டிருந்தன. தாயகத் தமிழரின் எழுச்சிகளின் உச்சநிலையாக ஈலங்கைத் தமிழர் பாதுகாப்பு ஈயக்கம் தோற்றமெடுத்தது.

தமிழ்நாடு வணிகர் சங்கம்
வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனும், அவரது வணிகர்சங்கமும் மானசீகமாயும், செயல்வழியாகவும் ஈழவிடுதலைக்கு ஆதரவினை வழங்கிக்கொண்டிருந்தார்கள். சனவரியில் தமிழகமெங்கும் கடையடைப்புச் செய்து ஈழத்தமிழரோடு நாங்களும் என நிரூபணம் செய்தனர். மொழிக்காய் உயிர்நீத்த ஈகியர் நினைவுநாள் கூட்டத்தினை சென்னைமயிலை மாங்கொல்லையில் சனவரி 16-இல் நடத்திக்காட்டினர்.

மகளிர் ‘சாகும்வரைபட்டினிப்போர்’
“சோனியாவே போரை நிறுத்து” என்ற ஒற்றை முழக்கத்தினை முன்வைத்துத் தமிழகத்திலுள்ள பெண்கள் அமைப்புகள் இணைந்து சென்னையில் ஜூலை 12-இல் சாகும்வரை பட்டினிப்போர் தொடங்கினர். ”அந்த ஓர்உயிர் மட்டும்தான் உயிரா” என்று சோனியாகாந்தியை நோக்கிக் குரல் எழுப்பினர். அந்த ஓர்உயிருக்காக ஈழத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மக்கள் என எத்தனை உயிர்களைப் பலிகொள்ள சிங்கள இனவெறி அரசுக்குத்  துணைசெய்கிறீர்கள் எனக் கேள்விஎழுப்பி நீதிகேட்டுப் போராடினர். ஒரு பெண்ணாக அவரை அவதானிப்பதால், சோனியாவின் தாயுள்ளத்தை நோக்கி வேண்டுகோள் வைத்து 25 பெண்கள் சாகும்வரை பட்டினிப் போரைத் தொடர்ந்தனர். நூறுபெண்கள், அவர்களுக்குத் துணையாகத் தொடர்உண்ணா நோன்பு இருந்தனர்; பேராசிரியர் சரசுவதி, பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் ஷீலா, வழக்கறிஞர் பாண்டிமாதேவி, நீலவல்லி, பழனியம்மாள், கவிதா, காமேஸ்வரி போன்ற முன்னணிப் போராளிகள் பங்கேற்று நடத்திய போராட்டம் தமிழகத்தை உலுக்கியது. சென்னையை வெப்பப்படுத்திய அந்தப் பொறி சென்னைக்குள் பல்வேறு வடிவங்களில் வெடித்துப் பெருகியது. மகளிர்மட்டுமே தலைமையேற்று அவர்களைமட்டுமே ஒருங்கிணைத்து ஏப்ரல் 12 முதல் 26-ஆம் நாள்வரை நடைபெற்ற பட்டினிப்போர் வரலாற்றில் முக்கியப் பதிவாகக்   குறிக்கப்படும்.

இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்
தாயகத்தமிழரின் எழுச்சிகளை உச்சநிலைக்குக் கொண்டுசெல்லும் ஒருபதிவாக இலங்கைத்தமிழர் பாதுகாப்புஇயக்கம் 28.1.2009 அன்று உருவாக்கப்பெற்றது. பழ.நெடுமாறன் ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், திண்டிவனம் இராமமூர்த்தி மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தோரும் பங்கேற்க 28.1.2009-இல் சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பெற்றது. பழ.நெடுமாறன் தலைமையில் இயங்கிய அந்த இயக்கம், ஈழத்தமிழருக்கான ஆதரவுப் போராட்டங்களை மட்டுமல்ல, இந்திய-இலங்கைஅரசுகளின் கூட்டுச்சதிகளை அம்பலப்படுத்திடும் தடுப்பு அரணாகவும் வளர்ந்துகொண்டிருந்தது.


சென்னை சாஸ்திரிபவன் முற்றத்தில் இருபத்தி எட்டு வயது முத்துக்குமார் 2009 சனவரி 29இம் நாள் காலை 10.30 மணிக்கு தன்உடலையே ஒருசுடராய் ஏந்தி உலகுக்குத் தெரியப்படுத்தித் தீக்குளித்து வீரச்சாவு அடைந்தார். முத்துக்குமாரின் உடலைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து எரியூட்டுதல், ஈகச்சாம்பல் கரைப்பு, ஈகச் சாம்பலைத் தமிழகமெங்கும் எடுத்துச்செல்லல், இறுதியாய் இராமேசுவரத்தில் கரைப்பு என அனைத்துப் பணிகளையும் பழ.நெடுமாறன் தலைமையிலான இலங்கைத் தமிழர்பாதுகாப்பு இயக்கம் எடுத்துச்செய்தது.

முத்துக்குமார் என்ற மாவீரன் தொடங்கிவைத்த போர்க்களத்தில் அடுத்தடுத்து பதினாறு பேர் உயிராயுதம் ஏந்தி ஈகியரானார்கள். அவர்களின் வீரச்சாவுக்கு நினைவஞ்சலி செய்வது முதலான பணிகளை இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் முன்னின்று செய்தது.
 • 04.02.2009   தமிழகமெங்கும் பொது வேலை நிறுத்தத்துக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்து, வெற்றிகரமாக நடத்திக் காட்டியது.
 • 07.02.2009 தமிழகமெங்கும் கறுப்புக்கொடி ஊர்வலம்
 • 10.02.2009 சென்னையில் மாபெரும் மக்கள்திரள் பேரணி
 • 17.02.2009 தமிழகமெங்கும் மனிதச் சங்கிலிப் போராட்டம்
 • 18.02.2009 அய்.நா செயலாளர் நாயகத்திற்கு மின்னஞ்சல் வேண்டுகோள்
 • 19.02.2009 கோவை மக்கள்திரள் பேரணி
 • 20.02.2009 அமெரிக்கத் துணைத்தூதுவருடன் சந்திப்பு
 • 24.02.2009 மதுரை மக்கள்திரள் பேரணி
 • 27.02.2009 சென்னையில் ஈழத்தமிழருக்காகப் போராடிய வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து  மாவட்ட வட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன் தடையை மீறி ஆர்ப்பாட்டங்கள்
 • 28.02.2009 தூத்துக்குடியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜிக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 • 01.03.2009 அய்.நா செயலாளர் நாயகம், அமெரிக்கக் குடியரசுத் தலைவர், ருசியக் குடியரசுத் தலைவர்களிடம் அளிக்க 2 கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்
 • 03.03.2009 பிரிட்டிஷ் துணைத் தூதுவருடன் சந்திப்பு
 • 04.03.2009 தூத்துக்குடி மக்கள்திரள் பேரணி
 • 05.03.2009 திருச்சியில் மக்கள்திரள் பேரணி
 • 09.03.2009 சப்பானியத் துணைத் தூதுவருடன் சந்திப்பு
 • 10.03.2009 புதுவையில் பிரான்சு துணைத் தூதுவருடன் சந்திப்பு – வேலூரில் மக்கள் திரள் பேரணி
 • 11.03.2009 சேலம் மக்கள்திரள் பேரணி
 • 16.03.2009 புதுச்சேரி மக்கள்திரள் பேரணி
 • 20.03.2009 சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில்சம்பத் விடுதலையை வலியுறுத்திச் சென்னையில் ஆர்ப்பாட்டம்
 • 24.07.2009 முள்வேலிமுகாம் தமிழர்களை உடனடியாக விடுவிக்க அய்.நா பேரவை உரியநடவடிக்கை எடுக்க வலியுறுத்திச் சென்னையில் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம்
 • 20.08.2019 சென்னையில் மாபெரும்மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் பிரகடனம் வெளியிடப்பட்டது.
 • 10.10.2009 முள் வேலி முகாம் தமிழர்களை விடுவிக்க இந்திய-தமிழக அரசுகள் அவசர நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி 10.10.2009 மாலை 4 மணிக்கு சென்னையில் ஆர்ப்பாட்டமும் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டமும்
 • 27.10.2009 முதல் 29.10.2009 வரை: இலங்கைத்தமிழர்பாதுகாப்பு இயக்கத்தலைவர்கள் திரு வை.கோ, மருத்துவர் இராமதாசு,  தோழர் தா.பாண்டியன், ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு பழ.நெடுமாறன் ஆகியோர் முறையே சென்னை, இராமேசுவரம், கன்னியாகுமாரி, கோவை ஆகிய ஊர்களிலிருந்து திருச்சி நோக்கி விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டனர். இறுதியாகத் திருச்சியில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 • 27.11.2009 சிங்களப்படையால் கொல்லப்பட்ட இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கும், போராளிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டிலும் உலகநாடுகளிலும் தீக்குளித்து உயிரீகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 28 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் நவம்பர் 27-ஆம் நாளன்று தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்கள்,  நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அன்றிரவு தமிழர் வீடுகளில் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன.
இலங்கைத் தமிழர்பாதுகாப்பு இயக்கத்தின் பணி ஒருகட்டத்தில் தொடங்கி, இன்னொருகட்டத்தில் முடிவு பெறுவதில்லை. ஈழத்தமிழருக்காய்த் தனி ஈழம் பெறும்வரை  போராட்ட எல்லைகள் நீண்டு செல்லும்.

மே 2, 2008 அன்று ஈழத்தமிழரை அழிப்பதற்காக இந்திய இராணுவ வாகனங்களில் இலங்கைக்கு ஆயுதங்கள் கோயம்புத்தூர் வழியாக கொச்சிக்கு எடுத்துச் செல்லப்படுவதாய் தகவல் கிடைத்தது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் தமிழுணர்வாளர்கள் திரண்டு ஆயுதங்கள் ஏற்றிவந்த இராணுவ வாகனங்களை மறித்தனர். போராளி தனலட்சுமி ஊட்பட 56 பேர் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கு.இராமகிருட்டிணன் உட்பட 5 பேர் மேல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போடப்பட்டது.

ஈழத் தமிழர் தோழமைக் குரல் எழுந்துகொண்டிருந்த வேளை-எதிரான துரோகக் குரல்களும் எழுந்து வந்தன. வரலாறு ஒன்றைப் பதிவு செய்து ஒன்றை மறைக்கக்கூடாது. வங்கக் கடலின் இன்னொரு கரையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மரணத்துக்குள் போய்க் கொண்டிருந்த வேளையில், அதே கடலின் இக்கரையில் உண்ணா நோன்பினை கருணாநிதி அரங்கேற்றிக் கொண்டிருந்தமை துரோகத்தின் உச்சம் எனலாம். இந்திய விரிவாக்கக் கனவின் விசுவாசமிக்க ஊழியனாக கருணாநிதி தன்னை ஆக்கிக்கொண்டிருந்தார்.

ஈழத்தமிழர்கள் மரணத்தில் பிறந்தார்கள். மரணத்தில் வாழ்ந்தார்கள். சாவதற்கு அவர்கள் பயந்ததில்லை. வாழ்வதற்குத்தான் அஞ்சினார்கள்.

வாழ்க்கை பற்றிய அவர்களின் பயமும், போராட்டமும் மனித உரிமைகளுக்காக நிற்கிற அமெரிக்க சட்ட வல்லுநரான புருஸ்பெயினை தட்டியெழுப்பியபோது போல - ராக்கெல் சாய்ஸ் எனும் பிரிட்டன் நாடாளுமன்றப் பெண்மணியின் மனச்சாட்சியை உசுப்பிவிட்டதுபோல - இதயமுள்ளவர்களை மட்டுமே அசைத்திடும் எதுவும்  இந்திய அரசாங்க ஆட்சியாளர்களைத் தொடவில்லை.

முதலாளித்துவ நாடுகளிலுள்ளோரிடம் கருத்து மாற்றம் தானே உருவாகிடவில்லை. ஒவ்வொரு தமிழனும் தன் எதிர்ப்பை தீவிரப்படுத்திய போராட்டங்கள்தாம் கருத்து மாற்றத்துக்கான அடிப்படை ஆகின.

அரசியல் என்பது அறநெறிவழிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடு இருக்க முடியாது.  அதைச் சாத்தியப்படுத்த முயலவேண்டும்.   இந்திய ஞானமும் இந்திய மரபுச் சிந்தனையும் கொண்டதாக பெருமைப்பட்டுக் கொள்கிற  ஆரிய அரசியல் தலைமைகள் அதைச் சாத்தியப்படுத்த விரும்பவில்லை.   இந்திய வல்லாதிக்கத்துக்கான சாலைகளை விரிவுப்படுத்திக் கொண்டே போகிற போது, அரசியல் அறநெறி எனும் ஒற்றையடிப் பாதை அழிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்திய விரிவாக்கமே குறியென அலைகிற மௌனச் சாமியார் மன்மோகன் சிங்கும், அழுகுணிச் சித்தர் கருணாநிதியும் இன அழிப்பின் மூலம் அறநெறி அரசியல் அழிப்பைச் செய்தவர்கள்.

ஈழத் தமிழர்கள் - இனியொரு விதி செய்யக் கடமைப்பட்டவர்கள்.    இனியொருக் காலமும் சிங்களருடனோ, சிங்கள தேசத்துக்குள்ளேயோ தம் வாழ்வோ, நாடோ இல்லை என்பதை நிரூபிக்க மீண்டும்  எழுவார்கள். உலகமுழுதும் அதற்கான அரசியல் தந்திரக் கண்ணிகளை இணைத்து அழுத்தம் தந்து, தனி ஈழச் சரித்திரதைத் தொடருவார்கள்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்