பாலியத்தின் உறவாடி: தோப்பில்

(கடலோர கிராமத்தின் கதை சொல்லி தோப்பில் முகமது மீரான் என்னும் நூலில் வெளியான கட்டுரை.)



எழுத்துலகில் மிளிர் கற்களாய்ப் பிரவேசித்தவர்களில் ஒவ்வொருவராய் உதிர்ந்து வருகிறார்கள். இலக்கிய நடமாட்டத்தில் எனக்குக் கொஞ்சம் முன்போ, பின்போ எட்டுப் போட ஆரம்பித்தவர்கள். அவர்களைப் பார்த்து, ‘அடடே, இவ்வளவு உச்சத்துக்கு நாம் போகமுடியவில்லையே’ என மலைத்துப்போய் நின்றவன். என் பார்வை முன்பாகவே எட்டடியோ, பதினாறடியோ பாய்ந்து, உண்மையில் பறத்தல் பயணம் நிகழ்த்திக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவராய் வாழ்விடமிருந்து, என்னிலிருந்து நீங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலாவதாய் - தனது படைப்புச் சாதனைகள், சமூகச் செயற்பாடுகளின் உச்சத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட இன்குலாப்; அடுத்து தமிழ்ப் பண்பாட்டுக் கதைசொல்லி மா.அரங்கநாதன். இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி என அறிவிக்கும் அரசியல் சட்டப் பிரிவை எரித்து, மாணவ இந்தி எதிர்ப்புப் போராளியாய் உருக்கொண்டு, இலட்சிய வேகம் மிகுந்த , புத்தார்வமுள்ள சோதனைக் கவிஞராக  மலர்ந்த  நா.காமராசன், கல்லூரி நாட்களில்  புதிய கவித்துவச் சிந்தனைகளின் ஊற்றாக , உவமைகள், உருவகங்கள், படிமங்களின் கவிஞராய் சிகரம் கொண்ட அப்துல்ரகுமான்.

1970-களின் தொடக்கத்தில்  தி.க.சி பொறுப்பேற்றிருந்த ‘தாமரை’ இதழின் வளமான காலத்தில் நானும் ‘பிரபஞ்ச கவியும்’ எழுத நுழைந்தோம். “வைத்தியலிங்கம் என்பவர் தாமரைக்கு எழுதுகிறார்; புதுவை சென்றால் அவரைச் சந்தியுங்கள்” என்று கால்காசு கடுதாசி எழுதினார் தி.க.சி. கைபேசிகள் இல்லாத காலம்; அப்போது ‘கால்காசு’ கடுதாசி என்கிற அஞ்சலட்டை இருந்தது; அது 1973; இது 2019. பிரபஞ்சன் என்ற பிரமாண்டம் இல்லை.

மதுரை ‘வக்பு வாரியக் கல்லூரி’யில் தமிழ்த்துறையில் 70-களில் பயிற்றுநராக (Tutor) பணியாற்றிக் கொண்டிருந்தேன். அது இஸ்லாமியக் கல்லூரியாதலின் முகமது பாரூக் என்பவர் தமிழ்த்துறைத் தலைவர். கல்லூரி முழுதும் நட்புச்சோலையாய் இஸ்லாமிய மணம் கமழ்ந்தது. இந்த முகமது பாரூக் பற்றி இர.பிரபா ‘தினமணி கதிரில்’ வெளிவந்த தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். அவர் நெல்லையிலுள்ள ‘சதகத்துல்லா வாப்பா கல்லூரி’யின் தமிழ்த்துறைத் தலைவரான பிற்பாடு, தோப்பில் முகம்மது மீரானின் ‘கடலோர கிராமத்தின் கதை’யை உரையாற்றும் இடங்களிலெல்லாம் எடுத்துச் சென்றதாய் குறிப்பிடுகிறார் இர.பிரபா. கலகலப்பான, கம்பீரமான இலக்கியப் பேச்சாளராக பாரூக் என்ற இனிய நண்பரை அறிவேன். முகமது பாரூக் நவீன இலக்கிய வாசிப்பாளராய், மீரானைக்  கொண்டாடுகிற உரையாடியாய்த் திகழத் தொடங்கினார் என்பதின் சாட்சியாகிறது இக்குறிப்பிடல்.

கி.ரா பள்ளிக்கூடம் எட்டிப் பார்க்காதவர்; தோப்பில் சுமாராகப் படித்து பள்ளி இறுதி வகுப்பு, திருவனந்தபுரத்தில்  இளங்கலை (வணிகவியல்) கற்றார். தமிழில் சற்றும் தடம் பதிக்காமல் முதலில்  மீரான் எட்டு வைத்த இடம் ‘மலையாளம்’. தமிழிலக்கியவாதிகள் மத்தியில் எது, எங்கிருந்து, யாரால் வருவது இலக்கியம் என்று பல்விதக் கோணங்களில் சூடு பறக்க விவாதித்துக் கொண்டிருந்த சூழலில், அவ்வளவாக ஏடறியாமல், எழுத்தறியாமல் இருவரும் அனுபவ அறிவால் உச்சம் கண்டனர். வாசிப்பின் வழியாகக் கல்விப் பயிற்றுவித்துக் கொண்டவர்கள்; ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பார்கள். படிப்பு அதிகமானாலே திருகல் முருகல் வரும்; ‘அறப்படித்தவன் சந்தைக்குப் போன கதை’தான்; இவன் சந்தைக்குள் கால் வைத்தால், வாங்கவும் மாட்டான்; விற்கவும் மாட்டான். அப்படிப்பட்ட ‘கூடுதல்’ எழுத்துக்காரர்கள், வாசிப்பாளர்கள் நிறைந்த தமிழுலகில் இவர்கள் எழுதுவதைப் பார்த்து “புரியவே மாட்டேங்குதே” என்றார்கள்.

ஓர் அகத்திணை அல்லது புறத்திணைப் பாடலில் பொருள் விளங்காத சொல் தென்படுகிறது; என்ன செய்கிறோம்? கை விரல்கள் அகராதியின் பக்கங்களைப் புரட்டுகின்றன. அது போலத் தான் கிராமிய வழக்குச் சொற்கள்; பொருள் தெரியவில்லை என்கிற போது, தேடும் உணர்வோ தெரிந்தவர்களிடம் இந்தச் சொல்லுக்கு, இன்ன வழக்காறுக்கு என்ன பொருள் என்று விசாரிக்கும் தாகமோ நம்மிடம் அறுகிப் போய்விட்டது. துணை செய்ய ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வட்டார வழக்குச் சொல்லகராதிகளும் வெளியாகியுள்ளன.   இத்தளத்தில் ” கரிசல் வழக்குச் சொல்லகராதி” ஒன்றை முதலில் வெளியிட்டு பேர் தட்டிக்கொண்டு போனவர்கள் கி.ரா.வும், வெளியிட்ட அன்னம் பதிப்பகத்து கவிஞர் மீராவும்.

கி.ரா.வுக்கு அடுத்த நிலையில் வட்டார வழக்கை எழுத்து மொழியில் பயன்படுத்தியவர் தோப்பில்; சிறுகதைகள், புதினங்களில் வரும் பாத்திரங்களின் பேச்சுமொழி மட்டுமல்ல; ஆசிரிய எழுத்தும் வழக்காற்று மொழியிலே பெரும்பாலும் வரும். கி.ரா, தோப்பில் இரண்டு பேரும் தாம் எழுத நினைத்த யாதொன்றையும் அந்த மக்கள் மொழியில் எழுதியவர்கள். கிராமங்களின் கதையை, கிராமத்து வழக்குச் சொற்களில் தந்தனர். மீரான் ‘கடலோர கிராமத்தின் கதை’யைத் தன் மக்களின் மொழியில் எழுதினார்.

யதார்த்தவாதம் தோற்றம் கொண்டபோது, தமிழிப் படைப்பிலக்கியப் பரப்பில் ”வாழ்விலிருந்து இலக்கியம் கோட்பாடு”   நிலை நிறுத்தப்பட்டது. அவ்விருட்சத்தின் விழுதுகளை லாவகமாகக் கைப்பற்றி, அதில் பொன்னூஞ்சல் கட்டி ஒய்யாரமாய் ஆடியவர்களில் தோப்பிலுக்கு முக்கியமான இடமுண்டு. அவருக்கு எது தெரிந்ததோ, சாத்தியப்பட்டதோ, தோதானதோ அந்த மொழியைத் தன் வசப்படுத்திக் கொண்டார். அவருக்குள் நிழலாடிய தேங்காய்ப்பட்டணத்தின் மொழி; தென்கோடி அரபிக்கடலும் வங்கக்கடலும் கொஞ்சிக் குலாவும் உப்புக் காற்றின் மொழி. துள்ளித்துடித்து மரித்துக் கிடக்கும் கருவாட்டு வாடையின் மானுட மொழி.

மிகச் சரியான எடுத்துக்காட்டு ‘தங்கராசு’ கதை. ‘சட்டிக்குள் மசியும் கீரையிலும் அரசியல் உண்டு; கட்டிக்கொள்ளும் கோவணத் துணியிலும் அரசியல் உண்டு’ என்பது போல், கல்விப் புல அரசியலை இந்தக் கதை நுட்பமாய் பிளந்து வைக்கிறது. கல்வியை வைத்து எவ்வளவோ துட்டுப் பார்க்கலாம் என்னும் அரசியல்; கல்விப் புலம் வணிக வளாகங்களின் நேரடிப் புலமாய் ஆகிவிட்டதை – ஆறாம் வகுப்புக்குப் போக ஆசைப்படும் தங்கராசும் அவனது தாயும் ஒவ்வொரு பள்ளிக்கூடமாய் முட்டி மோதி, மண்டியிடாத குறை. நம்பிக்கையின்  முழங்கால்கள் ஒடிந்து, முட்டிச் சில்லுகள் பெயர்ந்து, தவழ்ந்து தவழ்ந்து வெளியேறுகிறார்கள்.

“பெலேய், இனி வாத்தியாராவ மாட்டயா?”

அம்மாவின் ஆசைக் கனவு. காதில் முழங்கிக் கொண்டேயிருந்தது. ஒரு பள்ளியும் கிடைக்காத தங்கராசு, அவன் அவனுக்கே பதில் சொன்னான்;

“நான் அண்டி ஆப்பீசில் அண்டி (முந்திரிக் கொட்டை) உடைக்கப் போவேன்; மாலை பட்டணம் காலில் குளிப்பேன். பணிக்கருடைய சாயாக் கடையில் தினமும் ஒரு சாயா குடிப்பேன். கேஸ் கிடைக்காதபோது, போலீஸ்காரர்கள் ஊதச் சொல்வார்கள்; ஊதுவேன். குடிக்காத என்னை குடித்ததாகப் பிடித்துச் செல்வார்கள். அம்மா, இனியொருமுறை டவுனுக்குச் செல்வார்கள். அம்மா, இனியொருமுறை டவுனுக்கு வருவது, என்னுடைய பிரேதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக.”

- இக்கதையின் விளம்பலில் வாழ்க்கையிலிருந்து இலக்கியம் கிடைத்ததுபோல், மொழியும் அங்கிருந்த ஊற்றுக் கண்ணிலிருந்து வழிந்து கொட்டுகிறது.

ஆழ் மனதின் மொழிக் கிடங்கிற்குள்ளே சேகரமாகியிருக்கும் நினைவுப் பொதிகளைக் கட்டவிழ்த்துப் பார்க்க எல்லோருக்கும் வாய்ப்பதில்லை; எல்லோருக்குள்ளும் பாலியம்  ஓர் அலாதியான பருவம் தான்; சமூகத்தோடு முட்டி மோதித் தனக்கான நிலைப்பாட்டை உணர ஆயத்தமாகும் காலம் அது; ஒவ்வொருவருக்கும் பாலியம் அவர்தம் பெற்ற அனுபவங்களைப் பொறுத்து மாறுபடும்; அந்தவகையில், எழுத்துக் கலைஞர்களுக்கும் ஒரு பாலியமிருக்கும். தோப்பில் முகம்மது மீரானுக்கு ஒரு பாலிய காலம் இருந்தது; அப்போதும் பள்ளிகள் இருந்தன; கல்வியும் இருந்தது. கல்வி இலவசமாய்க் கிடைத்தது. அவர்களின் சிறுவயதின் பருவத்தையும், இன்றைக்கிருக்கும் சின்னஞ்சிறுசுகளின் பரிதவிப்பு நிலையையும் அனுபவங்களால் அவ்வப்போது ஒப்பிட்டுக் காணுகிறார். இங்கு பாலியகால அனுபவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பசுமரத்தாணி போல் பதிந்தவை பொடிப்பருவ நிகழ்வுகள்; ரப்பர் மரங்களில் ஆணி அடித்த துளைகளில் கொஞ்சம் கொஞ்சமாய் பால் கசிவது போல், இளம்பருவ அனுபவங்கள் வயோதிகத்திலும் பெருக்கெடுத்தோடும் வற்றாத சுனைநீர். எழுத்தாளர்கள் மனதின் குவியலிலிருந்து தங்களுக்குத் தேவையானவற்றைப் பொறுக்கிக் கொள்கிறார்கள். சின்னதும் பெரியதுமாய் ரப்பர் பந்துகளைத் திரட்சியாய் உருட்டி, அடித்து மேலெழச் செய்கிறார்கள். இந்தப் பரவசத்தை பாலிய அனுபவங்களே ஏந்திக்கொள்கின்றன.

கி.ரா புதுச்சேரிக்குக் குடிபெயர்வாகி நகர வாழ்க்கைக்குள் கரைந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. அதுபோல தேங்காய்ப்பட்டணக் கிராமத்து  தோப்பில் திருநெல்வேலி பேட்டைக்குப் பெயர்ந்து 30 ஆண்டுகள் கூடுதலாகவே ஆகியிருந்தது. ‘கடலோர கிராமத்தின் கதை’ முதல் ‘அஞ்சு வண்ணம் தெரு’ புதினம் வரை, இடைக்கிடை வெளியான கதைத் தொகுப்புகளின் கூட்டுடன், தேங்காய்ப்பட்டிணக் கிராமத்தின் பாலிய, பதின்ம வயது வாழ்க்கை அனுபவங்கள் பேசப்பட்டிருக்கும். நகர வாழ்க்கைக்குள் வந்த பின்னும் பலரின் தேடலுக்குள் அவரவரின் பாலிய காலத்துக் கிராமங்களின் நினைவுப் பொய்கையில் மூழ்கி எழுந்து வரத் தோதுபடுகிறது. பாலிய காலமும், அதனைத் தொட்டு கொடுக்குப் பிடித்தபடி நீளும் பதின்ம காலமும் - நாம் தொட முடிகிற ஒரு முற்பிறவி. தன்னிலிருந்து கழற்றிவிடப்பட்டதாய்க் கருதப்படும் இந்த முற்பிறவியின் ஞாபக அடுக்குகளிலிருந்து ஒவ்வொன்றாய் உருவி படைப்புகளாக்கிக் கொள்கின்றனர்.

சில ஆண்டுகள் முன்பு, 2007-ல், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் ஒரு கருத்தரங்கம்; பொன்னீலன், தோப்பில் முகம்மது மீரான், மாலன், நான் உட்பட கலந்துகொண்டு உரை நிகழ்த்தினோம். நான் பேசுகையில், ஒவ்வொருவராய் விளித்துப் பேச முயன்றபோது, என்னைக் காட்டிலும் இரு வயது குறைவான தோப்பில் முகம்மது மீரானை நோக்கி, “எனக்கு இளையவர் நீங்கள்: உங்களைத் தம்பி மீரான் அவர்களே என அழைக்கவா?” எனக் கேட்டேன். “அடடே, அது எனக்குத் தெரியாதே, தாராளமாய்ச் சொல்லுங்க அண்ணே” என்றார்.
அண்ணன் இருக்கிறார்; தம்பி இல்லை.
தம்பி என்பது வயதில்; அண்ணன் என்பது சாதனைகளில் !
எழுத்துலகச் சாதனைகளில் அவர் அண்ணன்!

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

இலக்கியப் பிரச்சினைகள் - தலித் எழுத்து

பா.செயப்பிரகாசம் நூல்கள்

கி.ரா.வின்‌ கன்னிமை