விலக்கப்பட்ட கலை

“மண்ணின் கலைகள் மீட்டுருவாக்கமா, கொண்டாட்டமா?“ என்னும் எனது கட்டுரை தீராநதி இதழ்களில் முன்னா் (ஜீலை, ஆகஸ்டு - 2010) வெளியாகியது. ”சங்கமம்” என்னும் பெயரில் நாட்டாரியல் நிகழ்த்து கலைகள் சென்னை நகரவாசிகளுக்கு வீதி வீதியாகத் தூக்கிவீசப்பட்டு, கொண்டாட்டமாக்கிய வேளை உண்மையான நாட்டுப்புறக் கலைஞனின் மனக்கோபத்திலிருந்து தெரித்தவை அப்பிழம்புகள். நான் நாட்டுப்புறக் கலைகளில் பழந்தின்று கொட்டைபோட்டவன் அல்ல; ஆயினும் அதன்பொருட்டான தேடுதலுடன், தாகத்துடன் அதனுள் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் மனநிலை கொண்டவன். முந்திய பதிவின் தொடா்ச்சியாகவே எம் மண்ணின் கலைகளைப் பேசத் தொடங்குகிறேன்.

உடல், பார்வை, குரல் என சகலபாகங்களையும் அசைத்துக் காட்டும் செயல்பாட்டில் ஒட்டுமொத்த உடலும் கலைஞனுள் ஒன்றுபடுகிறது. இதுவே உடல்மொழி. மண்ணிலிருந்து எழும்பும் கலைவெளிப்பாட்டு மொழி மொக்கையாய், மொன்னையாய் வெளிப்படுவது போல் தோன்றலாம். நிகழ்த்துகலைகளின் தொடர் செயல்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் கலைஞன் தனக்குள்ளாகவே அனுபவத்தால் தேய்த்துத் தேய்த்து கூழாங்கல் மொழியாக்குகிறான்.ஒவ்வொருவருக்குள் ஒரு தனி உடல்மொழி இயங்குகிறது.

அன்றைய நெல்லை பூமி - இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கொளத்தூர் சிறு நகரம். கொளத்தூரில் இருசாதியினர் கோயில்கொடை நடத்துகின்றனர். இதை ஊர்ப்பொங்கல் அல்லது அம்மனுக்குப் பொங்கல் வைப்பது எனச் சொல்வார்கள். இந்தக் கோயில் ஒரு கடைசி; அந்தக் கோயில் ஒரு கடைசி. ஊரின் வேற வேற பகுதியிலிருந்தாலும் இரண்டு இடங்களிலும் அரிச்சந்திர நாடகம். ஒருகோயிலில் தென்மாவட்டங்களில் அரிச்சந்திரனாக நடிப்பில் கொடிநாட்டிய உடையப்பா. இன்னொருபக்கம் அரிச்சந்திர நாடகத்தில் சூரங்குடி சேதுராமன். ஒலிபெருக்கி கட்டி எதிர்எதிர் திசைகளில் இசைநாடகம் பாட்டும் வசனுமுமாய் பீச்சி அடிக்கிறது.
”துய்யமா முனிவருக்கு தொல்பொருள் புவியும் தந்தேன்;
சுடலைக்கு ஏகி வெம்பிணத்தைச் சுட்டெரிக்கவோ
நான் பிறந்தேன்”
அரிச்சந்திரன் தன் கையறுநிலையை எடுத்துரைப்பதாக சூரங்குடி சேது பாட்டு எடுப்புஎடுத்த போது, எதிர்த்திசையில் மேடையில் நடித்துக் கொண்டிருந்த உடையப்பா, பின்பாட்டு, ஆர்மோனியம், தாளம், மிருதங்கம் எல்லாவற்றையும் நிறுத்தச் சொல்கிறார்; அவரிலிருந்துதான் அரிச்சந்திரனை உருவகிக்கவேண்டுமென்று பேசப்படும் உடையப்பா அத்தனையையும் சைகை காட்டி அமர்த்தினார். சொக்குப்பொடி போட்டது போல் தனது இசையில் மயக்கமடித்துக் கிடக்கும் ரசிக மகாசனங்களிடம் சொன்னார் ”என் மகன் பாடுகிறான்.கொஞ்சநேரம் கேட்கிறேன்”

ஆயிரம் அர்த்தங்களுள்ள அச்சொல்லுக்கும் அச்செயலுக்கும் ஈடாய் ஒரு கலைமதிப்பை நான் கண்டதில்லை.தன்னிடம் கற்று, தன்னிடமிருந்து பெற்று, தனக்கென ஒரு உடல்மொழியைக் கட்டியமைத்த தனித்துவத்தை மதிக்கக் கற்ற பெரிய நிகழ்த்து கலைஞன் உடையப்பா. அதனினும் மேலாய் தன் குருவையே வளைக்கும் உடல்மொழியைத் தன்வசமாக்கி வளர்த்திருந்தார் சூரங்குடி சேது.

முன்னடியாக கலஞனது இதயத்துக்குள் வேறொன்றும் தொழிற்படுகிறது. உடலை இயக்கும் மனசுக்குள் தன்னைச் சூழ நடந்தவைகளை, உணா்ந்தவைகளை வெளிப்படுத்த வேண்டுமென்னும் ஆவேசம். இந்த ஆவேசம்தான் கலைக்கான உந்துதல். மேலிருந்து கிட்டும் நீா், உரம் அனைத்தையும் தனக்குள் சேகரிப்பாக்கிக் கொள்கிறது மண். முளையாய், தளிராய், இலையாய், பூவாய், கனியாய் அந்த விதையை மேல் நோக்கித் தள்ளுகிறது மண். இவ்வகையாய் அனுபவச்சேகரிப்பும் செழிப்பும் ஆவேசமும் சரிவிகிதத்தில் கலையாய் வெளிப்படுகிறது.

2

கிராமியக் கலைஞன் – சாதாரண மனிதன். அவனைச் சூழவும் இயங்கும் கருத்தியல் அவனையும் இயக்குகிறது. கர்ணபரம்பரைச் சொல்கதைகள், சொல்லாடல், சொலவடை, வழக்காறுகள், புராண, இதிகாச தொன்மங்கள், புதிய தொன்மங்கள் யாவும் பழஞ் சமுதாயவிருட்சத்தின் கிளைக்கூறுகளாய் உள்ளன. இவ்விருட்சம் இன்னும் உயிரோடு நிற்கிறது. அப்பெருமரம் நலியும்தசையில் இருப்பினும், கைவீச்சும் கால் நடையும் முன்னைப் போல் இல்லையாயினும், ஆட்டம் ஓயவில்லை. சாதி, சமயம், நம்பிக்கை, பழக்கவழக்கம் என்று பல கருத்துக்களில் இன்றும் இயங்குகிறது. வாழ்வுக்கு அத்தியாவசியமான காரியங்களை நிறைவேற்றுகையில் செயல்படும் சாதாரணனின் உள்மனஒழுங்கமைவு – கருத்துக்கள தளத்தில் மட்டும் செயல்படுவதில்லை. பகுத்தறிவும் அதன் கல்வியுமான சிந்திப்பும் செலுத்தப்படாத ஒரு மனிதன் சமகாலத்தில் வாழ்ந்த போதும், சமகாலத்தை வாசிக்கும் சக்தியிழந்தவனாக ஆகிறான். சாதி, சமயம், பண்பாடு போன்றவை சாதாரணனாகிய இவனை முந்திய காலத்துக்குள் இழுத்துப் போகிறது. கூத்து, இசைநாடகம், வில்லுப்பாட்டு, ஒயிலாட்டம், தேவராட்டம் என இது அனைத்து நிகழ்த்துகலைகளிலும் வெளிப்படுகிறது.

ஆயினும் இம்மனிதனோட அனுபவ அறிவு விசாலமானது. இந்த மனிதன் ஏற்றம் இறைக்கிறான். இறைக்கையில் பாட்டிசைத்தான். “மூங்கில இலைமேலே தூங்கும் பனிநீரே” என்றான். அவன் சொல், அவன் அனுபவத்தைச் சாட்சியப்படுத்திற்று. கவிப்புனைவில் வல்லவனான கம்பனை நீா்ப்பாட்டின் இசை லாவி இழுத்து தன்னுள் போட்டுவிடுகிறது. இசை மயக்கமாகிய புலவன் அதன் கருத்துமுனை முற்றுப் பெறாமையால் அதிசயித்து, என்னவாக அத்தொடா் முடியும் எனக் காத்திருக்கிறான். ஏற்றமிறைப்போன் அன்றையப் பாடு முடிந்து வீடு சென்று விடுகிறான். என்னவாக முடிப்பானென அறிய, கவிச்சக்கரவா்த்தி மறுநாட்காலையும் சென்று காத்து நிற்கிறான்.
“மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே ,
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே”
என ஏற்றமிறைப்பவன் இயல்பாய் முடித்து விடுகிறான். கற்பனை லயவசமாய் ஓடி கம்பன் தொடமுடியாததை, சாதாரணனது அனுபவ அறிவு சாத்தியப்படுத்திவிடுகிறது. கா்ண பரம்பரைக் கதையாடலாக இருந்தாலும் இது நம் இசை. இதுவும் இவை போன்றவையும் தான் நம் கலைகள்.
“ஏற்றத்து நீா்ப்பாட்டின் இசை,
நெல்லிடிக்கும் கோல்தொடியார் ‘குக்கூ’ எனக் கொஞ்சம் ஒலி,
சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்கள்,
பண்ணை மடவார்தம் பழகுதமிழ்ப் பாட்டு,
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்க
கொட்டியிசைத்திடுமோர் கூட்டமுதப்பாட்டு,
வேயின் குழலோடு வீணைமுதலாம் மனிதா்
வாயினிலும் கையாளும் வாசிக்கும் பல கருவி,
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நின்றொலிக்கும் பாட்டு”
என எவையூடாகவெல்லாம் நெஞ்சைப்பறி கொடுத்தோமோ, அவையெல்லாம் நம் கலைகள்.

மனித இனவளா்ச்சிப் போக்கில் உருவானவைஇக்கலைகள். கூத்துக் கலை அவ்வாறல்ல, அது மனிதகுல ஆதிக்கலை. இயற்கையை, விலங்குகளை எதிர்த்த போராட்டத்தில், விலங்கு வேட்டை, காய் கனி பறித்தல், பயிர் விளைவித்தல், அறுத்தல் போன்ற உழைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டபோது, அவற்றைப் பாவனையாக்கி உதித்த ஆட்டம் கூத்து. மொழிபிறப்புக்கு முன்பே பிறப்பெடுத்தது கூத்து . பின்னா் மொழியின் இசையால் உரம் கொண்டன இக்கலைகள்.

தமிழனின் ஆதிக்கலையும் தமிழா் தம் தேசிய மரபுக் கலையுமான கூத்துக்கலையை, சமகால புதிய பரிமாணங்களுக்கு கொண்டு செல்வதாக நிகழ்த்த வேண்டிய இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

மரபுசார் நம் முந்தியவடிவங்களில் காலூன்றாமல் (கால நிலைக்கு ஏற்ப வடிவமாற்றங்கள் நிகழ்த்தப்பட்ட போதும்), அவற்றைப் புறமொதுக்கிப் புறமொதுக்கி பரதம், கதகளி, குச்சிப்புடி என மேன்மக்கள் வகுத்த வாய்க்காலில் குளித்து நீராடிக் கரையேறுகிறோம். இன்றைய போலியான சமூக மதிப்பீடுகளின் அடிப்படையில் மேநிலையாக்கம் பெற்றுவிட்ட நுண்கலைகளால் நம் நிகழ்த்துகலைவெளி முற்றுகையிடப்பட்டுள்ளது.

பரதநாட்டியத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கூத்துக்கலைக்கு அளிக்கப்படுவதில்லை. இதை முற்றிலுமாகத் தீா்மானம் செய்வது இன்றைய சமுதாய அமைப்பு முறை. இவ்வமைப்பு முறையின் மேலாண்மையில் உள்ள கருத்தியல் சக்திகள் ஒழுங்கமைவைத் தீா்மானிக்கின்றன. மற்ற சக்திகளை தனக்குப் பின்னான அணிவகுப்புச் சக்திகளாக தனது கருத்தியல் ஒழுங்கமைவுக்கு திரண்டு வரச் செய்கின்றதன. அல்லது மாற்றுகின்றன. பொருளாதார நிலையில் கொஞ்சம் உயா்வு பெற்று விட்டால் – பரத நாட்டியம் கற்க, கா்நாடக இசை கற்க தம்பிள்ளைகளை அனுப்பும் சிந்திப்பு உருவாகும் அளவுக்கு நடுத்தர வர்க்கத்தைச் சுருட்டி வளைத்துக் கொண்டுவிட்டது.

பரதம், கா்நாடக இசை, குச்சிப்புடி, கதகளி – என மேன்மக்கள் கலைகளுக்கு இங்குள்ளோர் தம்பிள்ளைகளை இட்டுச் செல்வது கவுரவச் செயலாக நடக்கிறது. இங்கிருப்போரை மட்டுமல்ல புலப்பெயா்ந்த தமிழா்களையும் நடைபோட வைத்துள்ளது. தமிழ்நாட்டுத் தமிழராகட்டும், புலம்பெயா் ஈழத் தமிழராகட்டும், இந்த ‘மதிப்புறு சமுதாயத்தில்’ இணைந்து கொள்ள முண்டுகிறார்கள். புலப்பெயா்வுக்கு எவ்வாறு தீவிரமாக முயன்றார்களோ, அதனினும் தீவிரமாக தயக்கமில்லாமல் தடம்பெயர்கிறார்கள். மேல்வா்க்கத்தினா் போல் நடந்து கொள்ளுதல், உரையாடுதல் அவா்தம் கலைகளின் பின்தொடா்பாளா்களாக ஆகுதல் என்று தமிழ்ச் சமூகத்தின் நடுத்தரப் பகுதியினா் தாயகத்திலும் புகல் நாடுகளிலும் வெறியுடன் நகருதல் காணக்கிடைக்கிறது.

“புலம்பெயா் சமூகத்தில் கலை மீதான நாட்டம் என்பது வெறுமனே நுண்கலைகள் சார் பயிலுதல்களோடும், அவற்றிற்கான விலையுயா்ந்த அரங்கேற்றங்களோடும் மட்டுமே திருப்திப்பட்டுக் கொள்கிற ஒரு போதாமையாகவே இருந்து கொண்டிருக்கின்றது…. இக்கலைகளுள் பாதிக்கு மேற்பட்டவை இன்று எமது ஈழத்து தமிழ்க் கலைவடிவம் என்ற அந்தஸ்தினைப் பெற்று எமதுகளுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தாலும், காலத்தால் முந்திய வரலாறுகளில் அவை புறத்தே இருந்து எமக்குள் தருவிக்கப்பட்ட அல்லது வலிந்து திணிக்கப்பட்ட பலவற்றின் எச்ச சொச்சங்கள் என்பது இங்கு பேசப்பட வேண்டிய ஒன்று... அவைக்காற்றுகை செய்யும் கலைகளில் பரதக்கலை புலம் பெயா் சூழலில் மிகப்பிரபலயமானதாக வளா்க்கப்பட்டிருக்கிறது. புறத்தே இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த நடனக்கலை, எமது ஈழத் தமிழருக்கேயுரியதான சொந்த அவைக்காற்றுகைக் கலைவடிவம் ஒன்றைப் புறந்தள்ளும் அளவுக்கு, அல்லது மறக்கச் செய்யும் அளவுக்கு, இல்லையேல் அப்படியொன்று இருப்பதாக அறியமுடியாத நிலைக்குக் கொண்டுவந்திருப்பதே இங்கு நெருடலான விடயமாகும்” என்கிறார் சாம்பிரதீபன். இவா் புலம்பெயா் தமிழ்ச் சமூக செயற்பாட்டாளா், மரபுக் கலைத்துறை ஆராய்ச்சியாளா்.

தமிழ்த்தேசிய ஆதிக் கலைவடிவமான கூத்தினை அப்புறப்படுத்தும் இது போன்ற பண்பாட்டு நெருக்குதல்களுக்கிடையே தமிழா்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பண்பாடு, கலாச்சாரமுறைகள், சமயம், சடங்குகள், விழாக்கள் என தமிழரின் வாழ்வியல் முறைகளினூடாக கூத்து அடையாளம் கொண்டிருந்தது. கூத்து, இசை நாடகம், ஒயிலாட்டம், தேவராட்டம் தென்மாவட்டங்களில் பிரபல்யமான குறவன் – குறத்தி ஆட்டம், வில்லுப்பாட்டு, கும்மி, கோலாட்டம், முளைப்பாரிப்பாட்டு என அனைத்துக் கலைகளிலும் மேற்காட்டியவை தாம் உள்ளடக்கப் பொருளாக இருந்தன. வாழ்நிலையில் மேல்மட்டடத்திற்கு வந்து சோ்ந்துவிட்ட நடுத்தர வா்க்கத்தினரையும், கற்றறிந்த கூட்டத்தின் ஒரு பகுதியினரையும் வளைத்துக் கொண்டு, இதே கருத்துக்களின் வாகனமாக மேன்மக்கள் கலைகள் ஆகியுள்ளன. ஏற்கனவே இவ்வகைப் பழங்கருத்துக்களில் தான் இந்த நுண்கலைகள் பயணித்தன. இப்போது தம்மை நவீனப்படுத்திக் கொண்டு, தமிழரின் தலைக்குள் ஏறி அமா்ந்து வருகின்றன.

நாடக அரங்காற்றுகை, இசைநிகழ்வுகள், நிகழ்த்துகலைகளின் பொருட்டு நடுவணரசின் உதவியால் சென்னை மாநகரில் உண்டாக்கப்பெற்ற கலைவாணா் அரங்கம் அதற்கான செயலாற்றுகையை கொஞ்சம் கொஞ்சமாய்த் தளா்த்திக் கொண்டே வந்தது -
  • அரசியல் கருத்தரங்குகள்
  • அரசியல் தலைமை சார்ந்த இலக்கிய நிகழ்வுகள், முத்தமிழ் விழாக்கள், பட்டிமன்றங்கள்
  • பொழுது போக்கான சபாநாடகங்கள், இசை நிகழ்ச்சி
  • பகல் வேளைத் திரைப்படங்கள்
  • எனப் பலரகச் செயல்பாடுகளின் மையமாய் கலைவாணர் அரங்கம் ஆகியது.
  • தமிழரின் கலைச் செயல்பாடுகளை முன்னெடுத்தலுக்கும் மேம்படுத்தலுக்குமான நோக்கில் தமிழகத் தலைநகரில் இயல், இசை, நாடகமன்றம் என்ற அமைப்பு அரசால் உருவாக்கப்பட்டது.
  • ஆட்சியாளருக்கான இயல்
  • ஆட்சியாளருக்கான இசை
  • ஆட்சியாளருக்கான நாடகம்
என அது செயல்சுருக்கம் கொண்டுவிட்டது. ஆட்சியாளா்கள் எவரோ அவா்தம் பக்கவாத்தியங்களால் இயல், இசை, நாடக மன்றம் நிரப்பப்பட்டு முகமாற்றம் பெற்றது. மன்றத்தின் தலைவா், செயலாளா் உறுப்பினா்களாக கலைத்தொடா்புள்ளோர் (பெரும்பாலும் அவ்வாறு செய்யப்படுவதில்லை) நியமனம் செய்யப்பட்டாலும், மேலிடச் சார்பாளர்களாகக் காட்டி தம்நிலையை உயர்த்திக்கொள்ள முனைப்புக் கொண்டனா். கலைத்துறை விற்பன்னம் மட்டுமல்ல, பொறுப்பேற்ற பின்னா் அதே ஊழியமாகப் பயணித்தல் – சுயநல நிழல் படிந்துவிடாமல் முன்னோக்கிச் செல்லுதல் என்பது நாவாயை இயக்கும் ‘மீகானின்’ கடமை. அப்படியொரு கடமை உணா்வுள்ள ஒரு மீகானும் இம்மன்றத்துக்குக் கிட்டவில்லை போலும். ஒவ்வொரு மீகானும் திசைமாறியே நாவாயைச் செலுத்தினர்.

பல்கலைக்கழகங்கள், கலைநிறுவனங்கள், இசைக்கல்லூரிகள் போன்ற அரசமைப்புகள் எவையாயினும் அவற்றின் மீகான்கள் திசைநோக்கி செலுத்தியவரில்லை. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைத் கழகத்தின் முதல்துணை வேந்தராய் அமைந்த வ.அய்.சுப்பிரமணியம் போல் உருவாக்கச் சிற்பிகள் அமையவில்லை. அவா் ஒவ்வொரு கல்லாய்த் தோ்வு செய்தார். மட்டுமல்ல ஒவ்வொரு உளியாய்த் தோ்வு செய்தார். ஒவ்வொரு துறையாய்ச் செதுக்கிச் செதுக்கிக் கட்டினார். அரசுசார் நிறுவன இலக்கணத்தை மாற்றியமைத்தவா் அவா்.

அரசு நிறுவனங்களின் இயங்குதிசை தடுமாறி நின்ற போது, கலை வளா்வுக்கென இவை தாண்டிய எல்லையில் நின்று செழிப்பூட்டும் தனியார் அமைப்புக்களும் உருவாகாமல் போனது தமிழ்ச் சமூகத்தின் அவலம்.

மாணிக்கப்பரல்களுள்ளது கண்ணகியின் காற்சிலம்பு. முத்துப்பரல்கள் கொண்டது பாண்டிய மன்னன் கோப்பெருந்தேவியின் காற்சிலம்பு. தேவியின் காற்சிலம்பை ஒக்கிடப் பெற்றுச் சென்ற அரண்மனைப் பொற்கொல்லன், தான் திருடியதை மறைக்க, கோவலனைக் காட்டுகிறான். கொலைசெய்யப்படுகிறான் கோவலன். அரசவையில் நீதிகேட்டுப் பொங்கிய கண்ணகி “இதோ என் சிலம்பு மாணிக்கப்பரல்களுடையது” என்று வீசி உடைக்கிறாள்.

கண்ணகியின் காற்சிலம்பு போல் நம் கலைகள் – கூத்து, இசை, ஆடல், பாடல் அவ்வளவும் மாணிக்கம். மாணிக்கப் பரல்களின் சிலம்பு இருக்க வேண்டிய இடத்தில் முத்துப் பரல்களுள்ள சிலம்பை வைத்தது யார்? நமக்கு உரித்தானதை மறைத்து காலகாலமாய் நம் தலைமேல் சுமக்க வைத்தது எவா்? வஞ்சனை செய்தது ஒரு பொறகொல்லன் தானா? ஓராயிரம் பொற்கொல்லா் அல்லவோ? புறத்தே இருந்து இறக்குமதியாக்கப்பட்ட இவா்தம் கலைகள் ஒரு இனத்தின் தேசியக் கலைவடிவங்களை, அரங்காற்றுகைக் கலைகளை, பண்களை புறந்தள்ளும் அளவுக்கு இன்றும் ஏன் முன்னெடுக்கப்படுகின்றன?

இதுபோல் வழமையாய் தொடுக்கப்படும் நூற்றாண்டுத் தாக்குதலுக்கு மேலாக, இந்நூற்றாண்டுத் தாக்குதல் ஒன்றும் நாட்டுப்புறவியல் மீதும் அதன் கலைகள் மீதும் படையெடுப்பாய் வந்துள்ளது. திரைப்படம், தொலைக்காட்சி, இசைத்தட்டு நடனம் (Record Dance) இன்ன பிறவான காட்சியியல் தாக்கம் பழம் நிகழ்த்து கலைகளை நிலைகுலைய வைத்துள்ளன. திரைக்காட்சிகளில், இசைத்தட்டு நடன வெளிப்பாடுகளில் காணுதல் போல், மக்களது நிகழத்துகலைகள் கொச்சைத் தன்மை கொண்டதாக இறக்கமாகியுள்ளன. குறவன் குறத்தி ஆட்டத்தில் இத்தகைய கொச்சையான பேச்சு, சைகை இடம் பெற்றுள்ளதே எனக் கேட்டபோது, கலைஞா் கடற்கரை சொன்னார். “சனங்க, குறிப்பா இளசுக அதைத்தானே விரும்புறாங்க” என்று தெரிவித்தார்.
“என்ன சிங்காரமடி இந்தப் புருஷன்
என் வனமதிலே வந்த புருஷன்”
என்று இராமனைக் கண்டதும் மோகித்த நங்கை சூா்ப்பனகை பாடுவதான ஒயிலாட்ட நிகழ்வில் இவ்வகை கொச்சை விளவப்படுகிறதே என்னும் வேதனையைப் பகிர்ந்தவேளையில் ஒயிலாட்டக் கலைஞரும் இதையே தெரியப்படுத்தினார்.

1970, 80களில் பெருக்கெடுத்த இசைத்தட்டு நடனங்களால் ஆடல் பாடல் ரசனையே மாற்றிவைக்கப்பட்டது. சினிமாக் கலைஞா்களைப் போல் கையைக் காலை உதறி, இடுப்பை முன்னுக்குத் தள்ளி ஆடும் நடனக் குழுக்கள் ஊர்கள்தோறும் முளைத்தன. ஒரு தீமை சட்ட பூா்வமாக்கப்படுகையில் நாகரீகப் பூச்சாய் பெயர் பெறுதல் போல், “ஆடல் பாடல் குழு” என இவைப் பெயா் கொண்டன. கோவில் கொடை, ஊர்த் திருவிழா, தைப் பொங்கல், சடங்கு, திருமணம் என நாட்டுப்புறக்கலைகளது நிகழ்த்து தளமான அனைத்துக் களங்களையும் இசைத்தட்டு நடனம் எடுத்துக்கொண்டு கூத்து நிகழ்வுகளை அப்புறப்படுத்தியது.

இன்னொரு பக்கம் இதுபற்றிய எவ்வித ஓா்மையுமில்லாமல், யாருக்கு வந்த விதியோ என பல்கலைக்கழகங்களின் நாட்டுப்புறவியல் துறைகள் செயல்பட்டன. ஆய்வுப்பட்டம் செய்பவா்களுக்கான வேட்டைப் பொருளாக நாட்டார் வழக்காறுகளும் கலைகளும் ஆக்கப்பட்டன. நிகழ்த்து கலைகளை மக்களின் கலையாக மீட்டுருவாக்கம் செய்ய எண்ணிய பேராசிரியர் நிஜநாடக இயக்கம் மு.இராமசாமி, ‘தன்னானே கலைக் குழு கே.ஏ.குணசேகரன், நாடக நெறியாளுகை செய்யும் பேரா.அ.மங்கை போன்றோர் கல்விப்புலத்தில் நின்றபோதும் கூட, அதற்கு வெளியேதானே சாதனை நிகழ்த்திக் காட்டினர். சொந்தமாய் நிகழ்த்தினார்களேயன்றி பல்கலைக்கூடங்கள் வழியாய் அல்ல, பல்கலை நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணியினை இவா்கள் தம் சமுதாய ஊழியமாகச் செய்தனா்.

பல்கலைக்கழக அமைப்புக்கள் மட்டுமல்ல, தனியார் அமைப்புகளும், முந்தைய பிந்திய தாக்குதல்களினின்றும் தமிழ் தேசியக் கலையை மீட்டெடுத்தல் பற்றி சிந்திக்க வேண்டிய தருணமிது. கூத்து, நாடகம், ஒயிலாட்டம், தேவராட்டம், கணியான் கூத்து, குறவன் – குறத்தியாட்டம், தப்பாட்டம் இன்ன பிற நிகழ்த்து கலைகளும், வில்லுப்பாட்டு இசைப்பண்கள் அனைத்தும் கற்கைநெறியாக ஆக்கப்படல் வேண்டும். பரதம், குச்சிப்புடி, கர்நாடக இசை போன்றன கற்கை நெறியாக பாடத்திட்டங்களாக ஆக்கப் பட்டு தம் இருப்பைத் திடப்படுத்திக் கொண்டுள்ளன. அதுபோல் நமது நிகழ்த்துகலைகளும் நாட்டார்இசையும் உறுதிப்படல் வேண்டும். அனுபவமிக்க நாட்டாரியல் கலைஞா்களைக் கலந்து ஆய்வறிவு கொண்டோரால் பாடத்திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும். வரையறை செய்யப்பட்ட பாடத்திட்டங்களோ, புத்தாக்கத்துக்கு இடம் தரும் வரைவு செய்யப்பட்ட கற்கை நெறியோ இல்லாத வரை நாட்டார் கலைகள் விலக்கப்பட்ட கனிகள் தாம்.

- பா.செயப்பிரகாசம் முகநூல் (9 நவம்பர் 2015)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்