தான் பெற்ற குழந்தையை தானே உயிரழித்தல் சரியா?

அரசியல் சட்டத்தின் 17-வது பகுதி, 343 லிருந்து 351 வரையிலான பிரிவு தேவநாகரி எழுத்திலான இந்திதான் மத்திய அரசின் ஆட்சி மொழியாக இருக்கும் என வரையறுத்துச் சொல்கிறது. இந்தி புழக்கத்தில் வரும் 1965 வரை 15 ஆண்டுகள் ஆங்கிலம் ஆட்சி மொழியாக பயன்படுத்தப்படும் என பிரிவு 343 வரையறுக்கிறது. குடியரசுத் தலைவராக இருந்த ராசேந்திர பிரசாத் “1965 சனவரிக்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும். ஆட்சிமொழியாக ஆங்கிலம் நீடிக்காது” என 1959-ல் நாடாளுமன்ற உரையில் வெளிப்படுத்தினார்.

1965–க்கு முன்பும் தமிழ் மொழியை விலக்கி வைத்திருந்த இருண்ட காலமான 1938, 1948, 1956-களில் தமிழாசிரியர்கள், அறிஞர்கள் சமஸ்கிருதமய சருமநோயை அகற்றும் மருந்தாக தமிழைக் கைக்கொண்டனர்; தமிழின் பழம் பெருமை, தனிச்சிறப்பியல்புகள், தமிழர் வீரம் என முன்னிறுத்தி மொழிப்பற்றூட்டினர். சொரணையற்றுக் கிடந்த இனம் சுய நினைவு பெறும் வகையில் இவர்கள் ஏந்திய மொழியுணர்வு என்னும் சூட்டுக் கோல் தான் 1965 இந்தி ஆதிக்க எதிர்ப்புக்கு மூல வேர். பள்ளிகளில் எங்களின் பதின்ம வயதுகளில் மொழிப் போராட்டம் என்ற வெடி மருந்தை முதலில் கெட்டித்து தந்தவர்கள் நாவலர் க.சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காலவர் கி.ஆ.பெ.விசுவநாதம், மறைமலையடிகள், பாவேந்தர் பாரதிதாசன், மொழிஞாயிறு பாவாணர், இலக்குவனார், பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ் முன்னோடிகள்தாம். தமிழ்த் தளத்தில் இவர்கள் மூட்டிய வெப்பம், பெரியார், அண்ணா போன்ற அரசியல் இயங்குதளத்துக்குக் கடத்தப்பட்டு மக்கள் மயமாயிற்று.


ஊர்வலம், பொதுக்கூட்டம், பேரணி, மாநாடு, எழுத்து, சொற்பெருக்கு போன்ற பல வடிவங்கள்; அஞ்சல் அலுவலகம் முன் மறியல், தொடர்வண்டி, நிலையங்களில் இந்தி தார் பூசி அழிப்பு, அணி அணியாய் சட்ட எரிப்பு - போன்ற முன்திட்ட நடவடிக்கைகளால் கட்டம் கட்டமாய் வெடிமருந்தைக் கிட்டித்தவர்கள் அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள்; வெடிமருந்துக் குவியலில் தீப்பற்ற வைத்தது மாணவர்கள்.

1965 இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாணவர் போராட்டம் - மொழிவழி தேசிய இனப் போராட்டம் ஒன்றுள்ளது என்பதை உலகுக்கு உணர்த்தியது. ’டைம்’ போன்ற உலக வார இதழில் போராட்டச் செய்தி படத்துடன் வெளியாயிற்று. தேசிய இனப் போராட்டம் ஒன்றினை இந்தியாவின் பிற மாநிலங்கள் முதன்முதலாக வியப்பேறிய விழிகளுடன் பார்த்தன.

1965-களின் முன் மாணவர், இளையோர், மக்கள் திரளை போர்க்களம் நோக்கி நடத்திச் சென்ற தமிழறிஞர்கள் போல், தி.மு.க.வினர் போல், இன்று முன்னெடுக்க அந்த ஒருவர் யார்? ஒருவரா? பலராகிய கூட்டு ஆற்றலா?

2


இந்தி மொழிக்கு சமத்துவமற்ற உயர்நிலை கொடுக்கப்பட்டுள்ளதைக் எதிர்த்து 1965 சனவரி 25-ல் தமிழக மாணவர் போராட்டம் வீண்போகவில்லை. 1976-ஆம் ஆண்டு இந்தி ஆட்சி மொழிச் சட்ட ஆணையம் திருத்த விதிகளை வெளியிட்டது.

”இந்தி ஆட்சிமொழிச் சட்டம் - தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களுக்கு மட்டும் செல்லும்“ என திருத்த விதிகள் அறிவித்தன. இந்தியாவின் ஆட்சி மொழிச் சட்டம் 1963 இன் கீழ் வகுக்கப்பட்ட, அலுவல் மொழிகள் விதிமுறைகள் 1976 - Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976 மிகத் தெளிவாக இந்தி அலுவல்மொழி என்பது தமிழகத்துக்குப் பொருந்தாது என வரையறுக்கிறது. மத்திய அரசின் இணையதளத்தி்ல இது வெளியிடப்பட்டுள்ளது ’They shall extend to the whole of India, except the State of Tamilnadu’. (இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும், தமிழ்நாடு மாநிலம் நீங்கலாக):
2(b)- இல் கூறியவாறு, தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசாங்கத்தின் அமைச்சகம் அல்லது அலுவலகம், மத்திய அரசாங்கம் நியமிக்கும் எந்த ஒரு ஆணையமும் குழுவும் தீர்ப்பாயமும், மத்திய அரசாங்கத்துக்கு உடைமையான அல்லது அதன் கட்டுப்பாட்டிலிருக்கிற எந்த ஒரு தொழிற்கழகமும் தொழில்நிறுவனமும் - ஆகிய அனைத்துக்கும் இந்த விதிமுறை பொருந்தும். Ministry, Department or office of the Central Government, any office of a Commission, Committee or Tribunal appointed by the Central Government; and any office of a corporation or company owned or controlled by the Central Government .
“இந்திய அரசு இந்திபேசும் மாநிலங்களோடு இந்தியில் மட்டுமே தொடர்பு கொள்ளும்; இந்தி பேசாத தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்களோடு இந்தியிலும் ஆங்கிலத்திலும் தொடர்புகொள்ளும். தமிழ்நாட்டோடு ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்பு கொள்ளும். தமிழ்நாடு நடுவணரசோடு தமிழிலும் ஆங்கிலதிலும் தொடர்பு கொள்ளலாம்” என 1976 இந்தி ஆட்சி ஆணையம் வகுத்த எல்லையை அழித்து, மார்ச் 31-ல் வெயிட்ட நடுவணரசின் ஆணைகள் என்பது தன் குழந்தையைத் தானே கொல்லும் ஒரு கொலைக் கருவிதான். இதில் ஒரு வேதனை தரும் அம்சம், இந்த 1976 திருத்தத்தினை இதுவரை தமிழ்நாடு அரசும் மாற்றி மாற்றி ஆட்சிக்கு வந்த இரு கழகங்களும் நடைமுறைப் படுத்தவில்லை என்பது.

செப்டெம்பர் 14-ல் இந்தி நாள் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டின் சாஸ்திரிபவனிலுள்ள நிறுவனங்கள் பதிவுத்துறை (Registeror of Companies Act) மார்ச் 26-ல் இந்தி நாள் கொண்டாடியது. இவ்விழாவில் பங்கேற்க, மோடி அரசு பொறுப்பேற்ற சில நாட்களில் சென்னை வந்த ’நடுவண் அமைச்சர் பன்சால்’ வன்மையான சொற்களில் அத்துறையில் பணிபுரியும் தமிழக ஊழியர்களை மிரட்டினார். இந்தி நாளை கண்டிப்பாகக் கொண்டாட வேண்டுமென்றும், இந்தி தெரியாதவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளவேண்டுமென்றும், இந்தியில்தான் நடுவணரசோடு தொடர்பு கொள்ளவேண்டுமெனவும்’ பேசியிருக்கிறார். 1976- இந்திமொழி ஆட்சி ஆணைய திருத்த விதிமுறைகள் இந்த மிரட்டல்கார அமச்சருக்கும் தெரியும்.

அஞ்சல் நிலையங்களில், வங்கிகளில்,தொடர்வண்டி நிலையங்களில், விமானப் பயணங்களில் இங்கெல்லாம் இந்தத் திருத்தச் சட்டம் மீறப்படுகிறது.

மே 27, 2014 அன்று இந்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. ”இந்திய அரசு சார்ந்த அறிவிப்புகள் அனைத்தும் சமூக வலைத் தளங்களில் இந்தி மொழியிலேயே வெளியிடப்பட வேண்டும். அரசு சார்பில் சமூக ஊடகங்களில் இந்தியில் எழுதுவோர் இந்தியிலும் எழுதலாம். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுவோர் இந்தியிலும் எழுத வேண்டும்” என அறிவிப்பு வந்தது. கடுமையான எதிர்ப்பு காரணமாய், பா.ஜ.க அரசு “இந்த அறிவிப்பு இந்தி பேசும் மாநிலங்களைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டதாகும்” என வினோதமான விளக்கத்தை அளித்தது. ஆனால் நடுவணரசின் நகர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ”இந்த அறிக்கை காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை வெளியான நாள் மார்ச் 2014. அப்போது நாங்கள் ஆட்சியில் இல்லை. தேவையில்லாத பழி எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது” என வெளிப்படுத்தினார். அதே தான் இப்போதும் அரங்கேறியுள்ளது - மாநில மொழிகளை அலட்சியமாய் தூக்கி எறியும் பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது அப்போது காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம்.


1965 இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாணவர் போராட்டம் - மொழிவழி தேசிய இனப் போராட்டம் ஒன்றுள்ளது என்பதை உலகுக்கு உணர்த்தியது. ’டைம்’ போன்ற உலக வார இதழில் போராட்டச் செய்தி படத்துடன் வெளியாயிற்று. தேசிய இனப் போராட்டம் ஒன்றினை இந்தியாவின் பிற மாநிலங்கள் முதன்முதலாக வியப்பேறிய விழிகளுடன் பார்த்தன.

1965-களின் முன் மாணவர்களை, இளையோரை, மக்களை போர்க்களம் நோக்கி நடத்திச் சென்ற தமிழ்ச்சான்றோர்கள் போல், தி.மு.க.வினர் போல் இன்று முன்னெடுக்க இருக்கிறார்களா? அந்த ஒருவர் யார்? ஒருவரா? பலராகிய கூட்டு ஆற்றலா?

3

உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருந்தாலும் ’காவிரி எமக்கே சொந்தம்; துளித்தண்ணீர் தர மாட்டோம்’ என்னும் கர்நாடக ஆட்டத்தால் ஆங்காரம் கொண்டெழுந்த விவசாயிகளின் டெல்லிப் போராட்டம்; ’டெல்டா’ படுகையில் மீத்தேன் எடுப்பை எதிர்க்கும் விவசாயிகளின் உக்கிரம்; நெடுவாசல் கைட்ரோ கார்பன் தீராப் போர்; ஒவ்வொரு மதுக்கடையாய் விரட்டி விரட்டியடிக்கும் பெண்கள்; சாலையை மறித்துக் கிடக்கும் காலிக் குடங்கள்; கனிமக் கொள்ளையை எதிர்த்து அங்கங்கு வாழும் மக்கள் போராட்டம் - எல்லாவிதத்திலும் வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறியது போல் தமிழர்கள் நீங்கள் வகுத்த எல்லா அற எல்லைகளிலிருந்தும் வெளியேறினால் என்ன செய்யப் போகிறீர்கள்? ஆனால் எந்தப் போராட்டங்களிலும் இன்றைய அரசியல் கட்சிகள் இல்லை என்பது ஒரு முரண்நகை; இவர்கள் எல்லாப் போராட்டங்களிலும் தெய்வங்களைப் போல் தரிசனமாகி ஆசி வழங்குகின்றனர்; எங்களின் உறுதுணையும் வழி நடத்தலும் அற்று இப்போராட்டங்களை எப்படி நடத்தப் போயிற்று என மக்கள் மேல் சாபமும் இவர்களுக்கு உட்கோபமாய் ஓடுகிறது.

இதுபோன்ற செயல் முறைகளிலிருந்து, சாபவிமோட்சனம் பெறுவது போல இந்தி ஆதிக்கத்தை விரட்ட இப்போதாவது ஒன்றிணைந்து பேசுவார்களா? டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டும் ஒரு போராட்டம் மட்டுமேயல்ல; தமிழகத்தின் கொந்தளிப்பான பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும் இன்று சகலரையும் இணைக்கும் கூட்டுப் போராட்டங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் 1965 மாணவர் போராட்டத்துக்கு மூலவெடிமருந்தைக் கிட்டித்த தி.மு.க இப்போது போராட்டத் திட்டத்தை அறிவிக்கவில்லை. பதிலாக மாவட்டந்தோறும் கருத்தரங்குகளை நடத்தத் தீர்மானிக்கிறது. எவ்வளவு வேகமாய் மத்திய அரசு பந்தை அடித்து இந்தி பேசாத மக்களின் எல்லைக்குள் தள்ளியிருக்கிறதோ, அதில் நூறில் ஒரு பங்கு எதிர்வினையைக் கூட எந்தக் கட்சிகளும் இங்கு எடுக்கவில்லை.

அரசியல்வாதிகள் அனைவரும் கடக்க முடியாத ’தூரம்’ ஒன்றை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ’அரசியல் அதிகாரத்தில் பங்கேற்பு’ என்ற தூரத்தைக் கடக்க முழுமூச்சாய் இறங்கியுள்ளார்கள். இந்த எல்லைக்கு உள் அமைவாகவே தங்களின் நிகழ்வு நிரலை வகுத்துக் கொள்கிறார்கள். அதன் ஒரு வெளிப்பாடாக மட்டுமே தி.மு.க.வின் நடவடிக்கை அமைந்துள்ளது. அதிகாரத்தில் பங்கேற்பு - என்ற சுயநல அரசியலிலிருந்த விலகி நிற்பது மட்டுமே - மக்களின் பணியை தலைமேற்போட்டு செய்ய அடிப்படையாகும். அரசியல் என்ற அறவியலின் மூலக் கூறு இது.

மொழிப்பற்று அற்றவர்கள், இன உணர்வில்லாதவர்கள் என ஒதுக்கப்பட்ட பொதுவுடையாளர்கள் கூட மொழிக்காக, தம் இனத்துக்காக கேரளத்தில் சாதிப்பதை நாம் ஏன் சாதிக்க இயலாமற் போயிற்று?

நடுவணரசு கொண்டுவரும் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் பிரதானமாகப் பேசப்படுவது - இந்தி அறிந்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் இனி இந்தியிலேயே நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்: எழுத்து வடிவில் அளிக்கும் விடைகளை இந்தியில் மட்டுமே அளிக்கவேண்டும் என்ற கட்டளை. இங்கு இந்தி பேசத் தெரிந்தவர்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப் பட்டிருக்கிறார்கள். இந்தி அறியாத பிற உறுப்பினர்களின் ஜனநாயகம் கருதப்படவில்லை;

மாநில மொழிகளின் உரிமைகளை முற்றாக நீக்கம் செய்கின்ற இந்த ஆணைகளை நாம் எத்தகைய எதிர் வினைகளால் எதிர்கொள்ளப் போகிறோம்? நாடாளுமன்றத்துக்குள்ளிருந்து நமது போர்க்களத்தை ஆரம்பிக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் நம் தாய்மொழியிலேயே பேசுதல்தான் தீர்வு. ”எனக்கு ஆங்கிலமும் வராது. இந்தியும் தெரியாது” என்ற தருக்கத்தை முன்வைத்து நட்டுக்க நிற்பதில்தான் இந்தித் திணிப்பாளர்களுக்கு நமது ஜனநாயக நியாயத்தை உணர்த்த முடியும். ”1976 திருத்தத்திற்கு ஆதரவாக நின்று நான் என் தமிழில் பேசுகிறேன்” என்று அடித்துப் பேச வேண்டும்.

’ஒற்றை இந்தியா’ கோட்பாடு பா.ஜ.க.வின் குடைக்கீழ் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. மற்ற தேசிய இனங்களின் மொழியுரிமைகளைப் பறிப்பது - அதன் மூலம் மற்ற இனத்தாரின் வாழ்வியலை மறுப்பது என்ற அதிகார அத்துமீறல்களை எதிர்த்துப் போர்க்களத்தைத் திறக்கப்போகிற அந்த ஒருவர் யார்? அவர் ஒருவரா, இல்லை ஒன்றிணைந்த பலரா?

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

படைப்பாளியும் படைப்பும்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்