ஜெயமோகன் விருது மறுப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் ‘வெண்முரசு‘ படைப்புக்குக் கிடைத்த ”பத்மஸ்ரீ விருதினை” மறுத்துள்ளதைப் பாராட்டலாம் என்று பார்த்தால், ‘அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை‘ என்பது போல், உள்ளே எல்லாம் சொத்தையாய்த் தெரிகிறது. விருது பெற ஒரு பாரம்பரியம்(?) உள்ளது போலவே, பலபக்கப் பெருமைகொண்ட விருது மறுப்புப் பாரம்பரியம் ஒன்றும் உள்ளது. வெள்ளையர் ஆட்சியின்போது ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களின் விருது மறுப்புப் புள்ளியிலிருந்து தொடங்கிய அது. நாடு விடுதலை பெற்றதாகச் சொல்லப்படும் பின்னரும் ஆட்சியாளர்கள், மதவாத சக்திகளின் அச்சுறுத்தலுக்கு எதிராய் எழுத்துலகில் மையம் கொண்டு தொடருகிறது.

மஹாபாரதத்தில் நிறைய நிறைய ஞான இயலும் மெய்யியலும் அடங்கியுள்ளதாக கருதி ஜெயமோகன் எழுதியது வெண்முரசு. இந்த விருது அதற்கு மதச் சாயம் பூசி விடுமோ’ என்பது அவரது அச்சம். “எனது நண்பர்கள் உள்ளிட்ட எதிர்க் கூட்டம் விருது பெறுவதால் கடுமையாக விமரிசிப்பர்” என ஒப்புக்கொள்கிறார்.

“அரசியலில் ஈடுபடுவதும் கட்சிநிலை எடுப்பதும் எழுத்தாளனின் இயல்புக்கு மாறானது“ என அறிக்கையில் ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பது ”எங்கப்பன் குதிருக்குள் இல்லை, நான் அதில் இல்லை” என்கிற ஒப்புதல்.மக்கள் சார்ந்த. அரசியல் நிலைப்பாடு வேறு, அரசியல்கட்சி நிலைப்பாடு வேறு. ஒரு எழுத்துக்காரன், மக்கள் நலன் விழையும் அரசியலிருந்து விலகாது நிற்க வேண்டும்; ஒரு குழு, ஒரு கட்சி, சாதி, மதவாதம் சார்ந்ததாக அது சுருக்கப்பட்டுவிடக் கூடாது. தொண்ணூறு சதமானம் இவ்வாறானவையாகவே நடப்புகளிருக்கின்றன.

”இந்த அரசு இந்திய மக்களால் சனநாயக முறையில் தேர்வு செய்யப் பட்டது. எனவே என் முடிவு அரசுக்கு எதிரானது அல்ல” என்ற விளக்கம் “சபாஷ்” போடச் சொல்கிறது. அரசுக்கும் அரசின் சனநாயகமற்ற செயல்களுக்கும் இந்தஅரசினை இயக்கும் மதவாதக் கூட்டத்துக்கும் எதிரானது எனது இந்த மறுப்பு என அவர் முழக்கம் வைப்பார் எனவெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இலக்கியமான ’வெண்முரசு’ எந்த வகையிலும் சிறுமைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த விருது மறுப்பு.

நல்லது, நாளை சாகித்திய அகாதமி விருது வழங்கப்படுகிற போது, அது இந்த நூலுக்கும் வழங்கப்படலாம்; வேறு எழுத்துக்களுக்கும் கிடைக்கலாம். அல்லது அகில உலக விருதும் கிடைக்கலாம். அவ்வாறு வழங்கப் பெறும்போது ”இலக்கியமான என் எழுத்து எந்த வகையிலும் சிறுமைப்படக் கூடாது” என்று சூரத்தனம் காட்டுவாரா?

அதுதான் அவரே “இப்பிரச்சினையில் இனிமேல் எந்தக் கேள்விக்கும் விடை அளிக்கமாட்டேன்” என்று தெளிவாய் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

- பா.செயப்பிரகாசம் முகநூல் (26 ஜனவரி 2016)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

ஜெயந்தன் - நினைக்கப்படும்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்