போராட்டக் களங்களின் சகபயணி

 
“கவிஞனின் பணி
கவிதை மட்டுமா?
ஒரு போராட்டத்தை முன்னின்று
நடத்தவும் வேண்டும்”
- வியட்னாம் புரட்சியாளர் ஹோசிமின்.
“எழுத்தாளன் என்பவன் பழங்கால ஞானி போல் மனசாட்சியுடன் இயங்கவேண்டும்”
- ஆப்பிரிக்க கென்ய எழுத்தாளர் கூகிவாதியாங்கோ.
இவ்வாசகங்களின் சாட்சியாய் தமிழிலக்கியவாதிகளில் நான் கண்டவர் இருவர் - பாவலர் இன்குலாப், எழுத்தாளர் அஸ்வகோஷ் என்ற இராசேந்திரசோழன்.

எதுகை மோனைகளில் ‘அந்தர் பல்டி’ அடித்து, தனிமனிதத் துதிபாடும் எழுத்துக்களும், புராணப்புளுகுப் பேச்சுக்களும், வெட்டிப் பட்டிமன்றங்களும், மதியச் சாப்பாட்டுக்குப் பின்னான அரைத்தூக்க ஆராய்ச்சிகளும் கலை இலக்கியக் கொடியேற்றிப் பெருமிதம் கொண்டிருந்த நாட்களில் இவர்களுடைய வருகை நிகழ்ந்தது.

‘யாருக்கு கலை, இலக்கியம்? எந்த நோக்கத்திற்காக?’ என்ற திசைப் புறக்கணிப்புச் செய்து, ‘கலை கலைக்காக’ என்னும் கொள்கையில் மயிர் பிளக்கும் வாதங்களில் ஒரு பகுதியினர் மூழ்கிக் கொண்டிருக்கையில் இவர்கள் தோன்றினர். நிலம் பார்த்து நீர் வழங்கும் மழை மேகங்கள் போல் இவர்கள் பயணிப்பு நடந்தது.

கவிதைகளில் தொடங்கினார் இன்குலாப்; கட்டுரை, பாடல், இதழியல் ஆசிரியர் என விரிவு கொண்டார்; பிந்தைய நாட்களில் ஔவை, குறிஞ்சிப்பாட்டு, மணிமேகலை என நாடக உருவாக்கத்தில் கவனம் பதித்தார். திசை திரும்பல் அல்ல; திசை அறிதல். தன்னின் திசை அறிதலில் தெளிவு இருந்ததால். மக்களின் பிரச்சனைக் களங்களில் போராளியாக நின்றிட எத்தனையோ படைப்பாக்க ஊடகங்களில், நாடகத்தைக் கைக்கொண்டார்.

அஸ்வகோஷ் என்ற இராசேந்திரசோழன் எழுபதுகளில் எழுத்தைத் தொடங்கினார்; சிறுகதைகளில் தடம் பதித்தார்; புதினம், நாடகம், கட்டுரைப் பதிவுகளில் அகலிப்புக் கொண்டார். மண்மொழி – இதழின் ஆசிரியர். உலகளாவிய மார்க்சியத்தை உட்செறித்து, தமிழகம் அளாவிய தேசியத்தில் ஊன்றி நின்ற செயற்பாட்டாளர். அவருடைய ஒரு கதை தோன்றிய இதழின் பெயர் ”பிரச்சினை”. தேசியம் பற்றிய கருத்துநிலை வேரூன்றிய பின் அவர் ஆசிரியராய் கையிலெடுத்து நடத்திய இதழ் ”மண்மொழி”. தொடங்கிய புள்ளியும் வந்தடைந்த எல்லையும் இதழ்களினால் அறியப்படும். ’பிரச்சினையின்’ வளர்ச்சி ’மண்ணின் மொழி’. இரண்டும் முரண்பட்டவை என முண்டாசு கட்டி முழங்கிய மார்க்சிஸ்டுகள் இன்று அந்த இடத்துக்கு வந்தடைந்துள்ளனர்.

இலட்சிய முழக்கத்தில் வேகம் கொண்ட சிலர் இடையில் இல்லாது போயினர்; ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோ கோரியின் கவிதை இப்படிச் சொல்கிறது.
“கொஞ்ச தூரம் நம்மோடு வருவார்கள்; பிறகு
நெஞ்சதிரப் பின்வாங்குவார்கள்
நம் எதிரே முள்ளால் முடிசூடி
சிலுவையைச் சுமந்தபடி
யாராவது ஒரு தோழன்
வந்தவுடன்”
- தளர்வு, சோர்வு, தொய்வு எனப் பின்வாங்காமல், முன்னோடும் கிளிகளென ஓடிக்கொண்டிருந்த இவ்விருவரையும் கண்டேன்.

1975-இல் நெருக்கடி நிலை அறிவிப்பு: தி.மு.க ஆட்சிக் கட்டிலேறிய பின்னர் உருவாக்கப்பட்ட துறை மக்கள் தொடர்புத் துறையாதலால், ஆட்சியைக் கலைத்த கையோடு அலுவல் செய்த அத்துனை பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டோம். நெருக்கடி நிலை என்ற வெட்டரிவாளினால் வாழ்வு துண்டிக்கப்பட்டு, அளவிடமுடியாத் துயரின் வெப்பத்தில் இருந்தபோது நான் எழுதியவை, ‘சூரியன் உதிக்கும் வீடு’, ‘இருளுக்கு அழைப்பவர்கள்’ போன்ற இன்னும் சில சிறுகதைகள்; ‘இந்திரா நகர்’ என்னும் குறு நாடகம்‘. அப்போது புதுச்சேரியில் என் தமையனார் இல்லத்தில் தங்கியிருந்தபோது, சென்னை செல்லும் பேருந்தில் அஸ்வகோஷ் தோழரைப் பயணத்தில் சந்தித்து உரையாடினேன்.

நெருக்கடிநிலை திரும்பப் பெறப்பட்டு, 1977-இல் நாங்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டோம். அ.தி.மு.க ஆட்சியின் கருணையால் அல்ல; நீதிமன்றத் தீர்ப்பினால் கிடைத்தது மறுவாழ்வு.

நெருக்கடிநிலை முடிந்து, சென்னையில் மறுபடி அலுவலர் பணியில் அமர்ந்தபோது, அமைந்தகரை அருகிலுள்ள மேத்தா நகரில் குடியிருந்த நாட்களில், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றும் புதுவை ஞானம் வருவார்; சமுதாய அக்கறையுடைய இலக்கிய வெளிப்பாடு பற்றி எங்கள் உரையாடல் மையம் கொண்டிருக்கும். உரையாடல் வட்டத்துக்கு ‘யதார்த்த இலக்கியம், முற்போக்குப் பார்வை, இடதுசாரி நோக்கு’ எனப் பெயரிட்டுக் கொள்ளலாம். அவையான திசையில்தான் பயணப்பட்டுக் கொண்டிருந்தோம்.

அமைந்தகரையை ஒட்டிய செனாய் நகரில் திரு.வி.க பூங்கா; அங்கு சண்முகம் என்ற நண்பர், ‘பிரச்சனை’ இதழின் ஆசிரியர்; தொழிலாளித் தோழர்; சண்முகத்தை புதுவை ஞானம் அறிமுகப்படுத்தி, ‘பிரச்சனை’ இதழ்கள் சிலவற்றைப் பெறச் செய்தார். முற்போக்கு இலக்கிய வட்டத்துடனான தொடர்பில் செயற்பட்டுக் கொண்டிருந்தார் சண்முகம். ‘பிரச்சனை’ இதழ், இதன் பெயர்க்காரணமாக – Registrar of Books என்ற நீதிமன்ற வளாகத்தின் ஒரு பிரிவில் பதிவுச் சிக்கல் ஏற்பட்டது; பின்னர் ‘உதயம்’ எனப் பெயர் மாற்றம் செய்து தொடர்ந்தது. இவை புதுவை ஞானம் வழி எனக்குத் தெரிய வந்தது.

‘பிரச்சனை’, ‘உதயம்’ ஆகிய இதழ்களில் வெளியான அஷ்வகோஷின் எழுத்துக்களை நான் வாசித்துள்ளேன். நேருக்கு நேர் காண இயலாமற் போயினும் அவரது எழுத்துக்களை வாசித்து வந்ததின்வழி அவருடனான தொடர்பிலிருந்தேன்; அவசரநிலைக்கு முன்னரும் பின்னரும் அவரது எழுத்துக்களினூடாகப் பயணம் செய்தேன்.

என் முதல் கதை, ‘குற்றம்’, ‘தாமரை’ இலக்கிய இதழில் 1971 மே மாதத்தில் வந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் ‘தாமரை’, ‘செம்மலர்’, ‘பிரச்சனை’, ‘உதயம்’ போன்ற இடதுசாரி இதழ்களிலும், ‘கசடதபற’ போன்ற வலதுசாரி இதழிலும் அவரது படைப்புக்கள் இடம்பெற்றன. ‘கசடதபற’ இலக்கிய ஆக்கத்தில் ஒரு சோதனை முயற்சியாக இருந்தது; ஆனால் கருத்து நிலையில், அன்றைக்குப் பாய்ச்சல் கொண்டிருந்த யதார்த்தவாத நிலைப்பாடோ, ’வாழ்விலிருந்து இலக்கியம்’ என்ற மக்கள் நிலைப்பாடோ ’கசடதபற’ கொண்டிருந்ததில்லை என்று இப்போதும் கருதுகிறேன்.

ஒரு படைப்பாளி – கலைஞனாய், எழுத்தாளனாய், இலக்கிவாதியாய் இருக்கலாம்; அவரது கலைத்திறன், எழுத்தாளுமை, அறிவின் வீச்சு மாத்திரம் கணக்கிற்கொள்ளப்பட்டு மதிப்பிடல் நடக்கிறது. எத்தனை கவிதைத் தொகுப்புக்கள், எத்தனை கதைத் தொகுப்புக்கள், நாவல்கள், கட்டுரை நூல்கள் என எழுத்தை மதிப்பிடுகிறார்கள். படைப்பில் எந்தக் ’கலைப் புள்ளி’ உச்சமாய் நிற்கிறதோ, அதைச் சொல்லி சொல்லி, எழுதி எழுதி மாய்கிறார்கள்.

பிரதியை மதிப்பிடு; பிரதியைத் தந்த எழுத்தாளனையல்ல என்ற ஒதுக்கம் மிக லாவகமாய் கையாளப்படுகிறது. ’பிரதியைப் பேசல்’ என்ற கோட்பாடு தமிழிலக்கியத்தின் நவீன கோட்பாடாக மாறியுள்ளது. இந்த ஒதுக்கம் வெகு அபாயகரமான அறிவிப்பைப் பேசு பொருளாகக் கொண்டுள்ளது. பிரதியைத் தந்த ஒருவரது சமூகச் செயற்பாடுகள் குறிக்கப்படாமல், கவனம் கொள்ளப்படாமல், விலக்கம் கொள்ளப்படுகிறது. தமிழிலக்கியவாதிகள் முணு முணுக்கும் ஒரு மந்திரம் “மௌனியை வாசிக்காமல் நான் கதையெழுத பேனா தொடுவதில்லை” என்பது. மௌனியின் சமூகச் செயல்பாடு யாது? கண் முன்னரேயே அத்தனை பெரிய விடுதலைப் போராட்டம் கொந்தளிப்புக் கொண்டிருந்த வேளையில், அதன் சமகாலத்தில் சுயமரியாதைக் கோட்பாடு முன்னகர்த்தப்பட்ட காலத்தில் - படைப்பாளியாய் வாழ்ந்தவர் மௌனி - அம்மாபெரும் தவமுனி எந்த மூலையில் ஆசிரமம் அமைத்து யாது தவம் மேற்கொண்டிருந்தார்?

ஜி.நாகராசன் எழுத்துக்களைக் கொண்டாடுபவர்கள், இச்சமூகத்தினூடு அவர் ஊடாட்டம் என்ன என்பதைப் பேசுவதைத் தவிர்க்கிறார்கள். உதிரிகளின் வாழ்க்கையை எழுதுவது வேறு, உதிரியாகவே வாழ்வது வேறு. இங்கு எழுத்தாளனைப் பார்க்காதீர்கள்; எழுத்தைப் பாருங்கள் என்கிற ‘பிரதி’ வழிபாடு, ரொம்பச் சௌகரியமாய் எழுத்தாளனைத் தப்பிக்கச் செய்யும் குயுக்தியாகப் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகையோர் எழுத்துலகின் பிரம்மராட்சசுகளாகப் பேசப்படுகிறார்கள்; இவர்கள் அகவயமாய் எழும் உள் முரண்களை எழுதியவர்கள். உள் முரண்களை பூதாகரமாக வளர்த்துக் காட்டியவர்கள்; வெளிப்போராட்டத்தை, வெளிச்சமுதாயத்தில் நிகழும் குலுங்கல்களை பேசு பொருளாகக் கொள்ளவில்லை; பல பொழுதுகளில் உள்முரண் சித்திரிப்புகள் மாயைத் தோற்றம் கொண்டுவிடுகின்றன. வாசகன் புதர் விலக்கி, புதர் விலக்கிப் போனால், அங்கு ஒன்றும் தென்படுவதில்லை. திகைத்து நிற்கும் வாசகன் மீது, தனக்குரிய பயணத்தை மேற்கொள்ள மறுக்கிறான் என பழி சுமத்தப்படுகிறது. நவீன இலக்கியத்தின் ‘மோஸ்தராக’ இது வளர்ந்துள்ளது.

அஸ்வகோஷ் ஒரு எழுத்தாளனாக வெளிப்பட்டு, சமூகச் செயற்பாட்டாளனாய் விரிவு கொண்டவர். எழுத்து என்ற ஒரு முகம் மட்டும் உரியவர் அல்லர்; சொற்பொழிவாளர், மண்மொழி இதழாசிரியர், தமிழ் தேசியப் போராளி, ஈழ விடுதலைக் குரலாளர் எனப் பன்முகச் செயற்பாடுகளுக்காக கொண்டாடப்படவேண்டியவர். அவ்வாறு பேசப்படுதல் நியாய பூர்வமானது.

படைப்பிலக்கியம் என்ற ஒன்றில் அவருடன் இணைந்ததை விட, சமூகச் செயல்பாட்டில் பல காலம் சக போராளியாய் பயணித்த அனுபவங்கள் எனக்கானவை.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி:
காலச்சுவடு இதழ் நடத்திய, 2000-த்தில் ‘தமிழ் இனி மாநாடு’ சென்னையில் மூன்று நாட்கள் நிகழ்வுற்ற போது, உலகெங்குமிருந்து தமிழ் ஆய்வாளர்கள், படைப்பாளிகள் பங்கேற்று பதிவுகள் செய்தனர். இரண்டாம் நாள் அரங்கில் மதிய உணவுக்குப்பின் நடைபெற்ற அமர்வில் இராசேந்திரசோழனும் நானும் ‘மார்க்சிய அழகியல்’ என்னும் தலைப்பில் கட்டுரை படித்தோம்.

அதனைத் தொடர்ந்து ‘முற்போக்கு கலை இலக்கயத்தளத்தில்’ நமக்கென ஒரு அமைப்பு உருவாக்கிடும் அவசியம் குறித்து எங்களுக்குள் உரையாடல் நிகழ்கிறது. இராசேந்திரசோழன், இன்குலாப், ஓவியர் புகழேந்தி, ஜெயந்தன், புகழேந்தி தங்கராஜ் போன்ற சிலர் கூடிப் பேசினோம். ‘தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி’ எனப் பெயர் வைக்கலாம் எனக் கவிஞர் இன்குலாப் தெரிவித்தார். இராசேந்திரசோழன் அமைப்பாளர். சூரியதீபன் செயலாளர். இன்குலாப், ஜெயந்தன், ஓவியர் சந்தானம், ஓவியர் புகழேந்தி போன்ற உறுப்பினர்களுடன். தமிழினம், மொழி, பண்பாட்டுத் துறைகளில் செயற்படுதல் என்னும் குறிக்கோளுடன் 2000-ல் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி உதயமாகிறது.

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தயாரித்து இயக்கிய, ‘காற்றுக்கென்ன வேலி’ படம் தணிக்கை அலுவலகத்தில் பிரச்சனையானது. தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் முதற் போராட்டம் ‘காற்றுக்கென்ன வேலி’ திரைப்படத் தணிக்கையை எதிர்த்து அமைந்தது; ஈழப்போரில் காயமுற்று தமிழகக் கடற்கரையில் வந்தடையும் அகதிகளுக்கு, நாகப்பட்டிணத்திலுள்ள ”மகாத்மா காந்தி மருத்துவமனையில்” மனித நேய மருத்துவரான சுபாஷ் சந்திரபோஸ் உதவி புரிவதாகக் கதை. ஈழத்தமிருக்கு உதவிக்கரம் நீட்டுவதாகப் பாவலா பண்ணினாலும், அது காங்கிரஸ், பா.ச.க என எந்தப்பெயரிலான நடுவணரசாகவும் இருப்பினும், வாய் கருப்பட்டி ,கை கருணைக்கிழங்கு தான். பேச்சு கருப்பட்டியாய் இனித்தாலும், காரியம் அத்தனையும் கருணைக்கிழங்காய் அரிப்பெடுக்க வைத்து அலையக்குலையச் செய்யும். தமிழரைப் பகையாளியாய்ப் பார்ப்பது நடுவணரசுக்கு உடன்பாடான கொள்கை. உடன்பாடற்ற முரணான கொள்கைக்குத் தணிக்கைத்துறை எவ்வாறு ஒப்புதல் தரும்.

தணிக்கைத்துறையின் சூழ்ச்சியைத் திரைப்பட வர்த்தக அரங்க முற்றத்தில் 2000 செப்டம்பரில் முன்னணியின் செயலர் என்ற வகையில் நான் தலைமையேற்க, பாரதிராஜா, பாக்யராஜ், ஆர்.சி.சக்தி, சேகர் போன்ற திரைத்துறை இயக்குநர்கள், இன்குலாப், மு.மேத்தா போன்ற இலக்கியவாதிகள் பங்கேற்ற கண்டனக்கூட்டம், நடைபெற்றது. அன்று மாலையே சென்னைக் கடற்கரை காந்தி சிலையின் பின்புறம் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அனுமதிக்காவிடினும் தடையை மீறி நடத்துவதென தமிழ்ப் படைப்பாளிகளும் திரைப் படைப்பாளிகளும் இணைந்து தீர்மானித்தனர். காவல்துறை அனுமதிக்காதென்பது அனைவரும் முன்னக்கூட்டி அறிந்தது தான்; தடுத்துப் பார்த்தும் பாரதிராஜா போன்ற திரைப்படைப்பாளிகள் உரையாற்றியதைக் காவல்துறையால் ஏதும் செய்யவில்லை.

2002-இல் குஜராத்தில் நில நடுக்கம். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு. சொந்த மண்ணில் அகதிகளாய் அலைக்கழிப்பு. வலியும் துயரமும் நிறைந்த வாழ்வை நேரில் கண்டு ஓவியங்களாய் மீள எடுத்து வந்தார் ஓவியர் புகழேந்தி. ‘சிதைந்த கூடு’ – ஓவியக் கண்காட்சி தியாகராய நகரில் வெங்கட்ரமணா சாலையிலுள்ள தியாகராயர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி ஏற்பாடு செய்தது. முன்னணியினர் பலரும் பங்கேற்றனர்.

கருத்துச் சுதந்திரம் தனிமனிதரால், அரசால், அரசு நிறுவனங்களால் பாதிப்புக்குள்ளாகும் வேளையில் படைப்பாளிகள் முன்னணி கண்டித்து அறிக்கை வெளியிட்டது.

தமிழகத்தில் ஜெயலலிதா அரசின் கொடிய ஆட்சி கருத்துரிமைப் பறிப்புத் தாண்டவம் நடத்திக் கொண்டிருந்தது. கருத்துச் சுதந்திரப் பறிப்பை எதிர்த்துத் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி – கலைவாணர் அரங்கத்தின் முன்னிருந்த ஒரு அரங்கில் கருத்தரங்கினை ஏற்பாடு செய்தது; பேரா.கல்விமணி, எழுத்தாளர் அமரந்தா, இராசேந்திரசோழன் உள்ளிட்டோர் பங்கேற்றோம்.

அரங்க மேடையில் பெப்சிகோலாவின் ‘அகோபினா (Aquafina)’ தண்ணீர்க் குடுவை வைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களில் ஒரு இளைஞர் அந்தக் குடுவையில் ஒப்பப்பட்டிருந்த விளம்பரத்தாளை அகற்றி, மேடையில் மீண்டும் கொண்டுவந்து வைத்தார். இராசேந்திரசோழன் உரையில் அதுபற்றிய குறிப்பு இருந்தது. ‘ஆக்கிரமிப்பு, உரிமைப்பறிப்பு என்பதெல்லாம் அரூபமாய் எங்கோ நடப்பதில்லை. நம் கண்ணெதிரில் நம் வாழ்வில் அந்தத் தாக்குதல் நடக்கிறது. அந்த நண்பர் விளம்பரத்தாளினைக் கிழித்தெறிந்தது மூலம், போர்க்குணம் நம் ஒவ்வொரு நகர்விலும் செயலிலும் இயல்பான ஒன்றாய் ஆகியிருக்க வேண்டுமென்பதை நமக்கு உணர்த்துகிறது’ என்றார் இராசேந்திரநோழன்.

ஈழத்தில் சிங்கள இனவெறி இராணுவம் நடத்தும் படுகொலைகளைக் கண்டித்து 24.10.2008-இல் தமிழகத் தலைநகர் மட்டுமன்று ; தமிழகத்தின் பல நகரங்களிலும் அனைத்துக் கட்சியினரும் இணைந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழினப் பகைவர்களான காங்கிரஸ், பாரதிய சனதாக் கட்சிகள் பங்கேற்கவில்லை. அன்று பார்த்து பிற்பகலில் சென்னையில் பெருமழை கொட்டி முழக்கியது.

வாழ்வா? சாவா? என்ற புள்ளியில் ஈழப் போராளிகளும், தமிழரை இனவழிப்புச் செய்தே தீர்வது என்ற எல்லையில் சிங்களப் படைகளும் என யுத்தம் உச்சத்திலிருந்த காலம். மு.திருநாவுக்கரசின் “இந்தியாவைத் தொடர்ந்து தோற்கடிக்கும் சிங்கள ராசதந்திரம்” என்னும் எட்டு பக்க சிறு வெளியீட்டைப் பத்தாயிரம் படிகள் அச்சிட்டு மனிதச் சங்கிலியில் கொட்டும் மழையில் விநியோகித்தோம்.

மு.திருநாவுக்கரசின்” இந்தியவும் ஈழ விடுதலைப் போராட்டமும்” என்னும் 32 பக்கச் சிறுநூல், ‘இந்திய சாத்தான் படை’ ஈழத்தில் குதித்து வெறியாட்டம் நடத்திய இரு ஆண்டுகளுக்கு முன்னர் 1985-ல் ஈழத்தில் வெளியாகியிருந்தது. இந்தியாவின் சூழ்ச்ச்சியை தெளிவாய் அம்பலபடுத்தியிருந்தது. 2008-ல் போர் உச்சம் கொண்டபோது இந்நூல் பரவலாய் தமிழ் வாசிப்புக்குக் கொண்டு செல்லப்பட வேண்டுமென்னும் சீரிய நோக்கில், பத்து ரூபாய் விலையில் மறு பதிப்புச் செய்து டிசம்பர் 2008-ல் தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி விநியோகித்தது.

இவ்விரு வெளியீடுகளும் மறுபதிப்பாக வர வேண்டிய காலகட்டம் இது என்னும் தனது பெருவிருப்பை வெளிப்படுத்தி – எங்களுக்கு பிரான்சிலிருந்து கிறிஸ்டோபர் பிரான்சிஸ் என்ற கி.பி.அரவிந்தன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்ததோடு மட்டுமல்லாமல், வெளியீட்டுக்கு ஆகும் தொகையினையும் உதவியிருந்தார்.

குறிப்பாக தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியினர் ஈழத்தமிழர் பிரச்சினையின் பொருட்டு ஒருநாள் தொடர்முழக்கப் போராட்டம் நடத்துவோமென இராசேந்திரசோழன் யோசனை தெரிவித்தார். அதன்படி சென்னையில் சேப்பாக்கம் கிரிக்கெட் திடலின் முன்புறத்தில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தினோம்.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் கிளை என தமிழகத்தின் வேறு பகுதிகளில் தோற்றுவிக்கப்படவில்லை. எனினும் அபூர்வமான நிகழ்வு போல், வேலூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் கவிஞர் ந.சுப்புலட்சுமி தலைமையில் புதிய கிளை தோற்றுவிக்கப்பட்டது. என்னுடைய பெயர் அழைப்பிதழில் இருந்தும் செல்ல இயலாது போயிற்று. தோழர் நா.சுப்புலட்சுமி தலைமையேற்க, தோழர்கள் இன்குலாப், இராசேந்திரசோழன் கிளை திறப்பு விழா உரையாற்றினார்கள்.

தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் உதயம் முதலாய் மேற்கொண்ட அனைத்துச் செயல்படுதல்களும், பின்னரான காரியங்களும் இராசேந்திரசோழன், இன்குலாப், பா.செயப்பிரகாசம் என மூவரின் பங்களிப்பினால் நிறைவேறின என்பது குறிக்கப்பட வேண்டியதாகும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து ஓரங்குலமும் உயர்த்த மாட்டோம் என கேரளம் முறண்டு பிடித்துக் கொண்டிருந்தது; கேரள அரசு மட்டுமல்ல, அம்மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் இதில் ஒருமித்த குரலுடனும் கரங்களோடும் நின்றது மட்டுமல்லாமல், புதிய அணை கட்டியே தீருவோமெனவும் பிடிவாதமாய் நின்றார்கள். தமிழகதின் 5 மாவட்ட விவசாய மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தனர். கேரள அரசின் அடாவடித்தனத்தினைக் கண்டிக்கும் முகமாக 2007, மே 9-ஆம் நாள் மதுரையில் ஆர்ப்பாட்டம், மறியல் நடத்துவதென முடிவு செய்து முன்னெடுத்தார் பழ.நெடுமாறன். மதுரை தமுக்கம் மைதானத்தின் முன்புறம் நிற்கும் தமிழன்னை சிலையிலிருந்து ஒரு 500 மீட்டர் தொலைவிலிருந்தது முல்லை பெரியாறு பொதுப்பணித் துறை அலுவலகம். தமிழன்னை சிலையிலிருந்து நீதி கேட்பது பொருத்தப்பாடாக அமையுமெனக் கருதி முன்னெடுக்கப் பெற்ற போராட்டத்தினை இராசேந்திரசோழன் ஒருங்கிணைப்புச் செய்து, முழக்கங்கள் எழுப்பினார். அனைவரும் கைது செய்யப்பட்டு தல்லாகுளம் திடலருகிலிருந்த ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டோம்.

மே 9, 2007 - மதுரை நகருக்கு ஒரு துயர நாளாக அமைந்தது. அன்றுதான் மதுரையிலிருந்து வெளியாகும் ’தினகரன் நாளிதழ்’ அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி தீக்கொளுத்திய கறுப்பு நாள். கருத்துச் சுதந்திரம் தீக்குளியலான அந்நாளில், அலுவலகப் பணியாளகள் மூவரும் உயிருடன் எரிந்து கருகினர். தமுக்கம் மைதானம் முன்பு நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், சாலையில் அராஜகவாதிகளின் வாகனங்கள் அங்குமிங்குமாகப் பறந்த காட்சிக்கு போராட்டக்காரர்களாகிய நாங்கள் சாட்சியானோம்.
 

2

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு சனவரி 2010- இல் நடத்தப்பெறும் எனத் தமிழக முதல்வர் கருணாநிதி, 2009  செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அறிவித்தார். ’உலகத் தமிழ் ஆராய்ச்சி அமைப்பின்’ தலைவரான நொபாரு கராஷிமா உலகத் தமிழ் மாநாட்டினை நடத்த கால அவகாசம் போதாதென, சனவரி 2011-இல் நடத்திக் கொள்ளலாமென மறுத்துரைத்தார். ஒப்புதல் அளிக்காததின் வழி, தன்னுடையவும் உலகத் தமிழாராய்ச்சி அமைப்பினுடையவும் தற்சார்பு நிலையை உறுதி செய்தார். சனவரி என்றால் சட்டப்பேரவைத் தேர்தல் வந்துவிடும் என்று வெளிப்படையாக சொன்ன முதல்வர் கருணாநிதி, ‘முதலாவது உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு’ எனப் பெயர் மாற்றினார் (உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டினை நடத்த யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை).

‘முதலாவது உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு’ எனக் கருணாநிதி அறிவித்தவுடன் தமிழுணர்வும் சுயமரியாதையும் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி சார்பில் 23.09.2009 அன்று எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் அடங்கிய ஒரு ஆலோசனைக் கூட்டத்தினை நடத்திட அழைப்பு விடுக்கப்பட்டது.

அன்புடையீர் வணக்கம்,
மூன்று லட்சம் ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணிலேயே முள்வேலி முகாம்களுக்குள் வதைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழக காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாற்று உரிமை பறிபோய் தமிழக விவசாயிகள் வறுமைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் அன்றாடம் இலங்கை கப்பற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி, அவர்களின் வாழ்வாதாரம் பறிபோய்க்கொண்டிருக்கிறது.

தமிழகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில், தமிழக மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேடும் போக்கில் தமிழக முதல்வர் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதாக அறிவிப்புச் செய்திருப்பது, மனசாட்சி உள்ள கலை இலக்கியவாதிகளால் ஏற்றுக்கொள்ள இயலுமா?

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் 27.09.2009 ஞாயிறு காலை 10.00 மணியளவில் சென்னை எழும்பூரிலுள்ள ’ இக்சா’ மையத்தில் நடைபெறும்.

தாங்கள் தவறாது கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது மேலானஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இராசேந்திரசோழன்  - அமைப்பாளர்
சூரியதீபன் - செயலாளர்

அறிக்கை எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது: கைபேசி, குறுந்தகவல் வழியாகவும் தெரிவிக்கப்பட்டது.

எதிர் வினையாற்றலுக்கான கலந்துரையாடல் கூட்டம் அது. 27.09.2009 அன்று சென்னை எழும்பூரிலுள்ள ‘இக்ஷா’ மைய நிருவாகத்தினரை மிரட்டி முன்பதிவு செய்யப்பட்ட அரங்கினை ரத்து செய்ய வைத்தது காவல்துறை.

மக்கள் கண்காணிப்பகத்தின் தலைவர் தோழர் ஹென்றி திபேன் ஷெனாய் நகரிலுள்ள மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் கூட்டத்தை நடத்த மாற்று ஏற்பாடு செய்து தந்தார். ‘இக்ஷா’ மையம் போலவே, ஷெனாய் நகர் மக்கள் கண்காணிப்பு அலுவலகத்தையும் காவல்துறையினர் சுற்றி வளைத்திருந்தனர்.

இக்கூட்டத்தில், எதிர் வினையாற்றலும் பணிக்காக அனைவருமிணைந்த ஒரு புதிய அமைப்பினைத் தொடங்க முடிவு செய்யப்பட்டு ‘தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர் கூட்டமைப்பு’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. கூட்டமைப்பில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களாக பேரா.சரசுவதி, இன்குலாப், இராசேந்திரசோழன், சூரியதீபன், பொன்.ஏழுமலை ஆகிய ஐவர் தேர்வு செய்யப்பட்டனர்.

27.09.2009 அன்று நான்கு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டமைப்பில் வைக்கப்பட்ட ஆலோசனையின்படி 04.10.2009 அன்று கோவையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பெற்றது. கோவை ஞானி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், வழக்குரைஞர்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் என ஐம்பது பேர் பங்கேற்றனர். சென்னையிலிருந்து பேரா.சரசுவதி, சூரியதீபன், பொன்.ஏழுமலை ஆகியோர் சென்று கலந்து கொண்ட இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் கண.குறிஞ்சி ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

“நடை பிணங்கள் மீதும், எலும்புக்கூடுகள் மீதும் நடக்க இருக்கிறது செம்மொழித் தமிழ் மாநாடு” என்ற இருபக்க துண்டறிக்கை 5000 படிகள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுதும் விநியோகம் செய்யப்பட்டது.

உலகெங்குமுள்ள தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகளுக்கு ஒரு வேண்டுகோள் – எனும் அடிப்படையில்,
“பழி எனின் உலகுடன் பெறினும்”
என்ற நான்கு பக்கக் கடிதம், ஆயிரம் படிகள் அச்சிடப்பட்டு உலகெங்குமுள்ள தமிழறிஞர்களுக்கு மட்டுமல்லாது, தமிழகத்திலுள்ள கலை இலக்கியவாதிகளுக்கும் (11.11.2009) அனுப்பி வைக்கப்பெற்றது. இக்கடிதம் தமிழறிஞர் ம.லெ.தங்கப்பா அவர்களால் ஆங்கில ஆக்கம் செய்யப்பட்டு, ஆங்கில ஆக்கம் நொபுரு காரஷிமா, ஜார்ஜ் ஆர்ட் (அமெரிக்கா), குரோ (பிரான்சு) போன்று பல நாடுகளிலுமுள்ள நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மின்னஞ்சல்வழி அனுப்பப்பட்டது.

27.09.2009, 08.11.2009, 05.12.2009, 07.03.2010 என நான்குமுறை தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பெற்றன. மூன்றாம் முறையாக தமிழ்த் தேசிய அமைப்புக்கள், கலை இலக்கிய அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள் எனப் பலரும் கலந்துகொண்ட கூட்டம் பேரா.சரசுவதி இல்லத்தில் நடந்தது.

சனவரி 25, 2010 இந்தி எதிர்ப்பு ஈகியர் நாள்; சனவரி 29 முத்துக்குமார் ஓராண்டு நினைவு நாள் தொடர்பாக அமைப்புக்குள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களைச் செம்மொழி மாநாட்டு எதிர்ப்புக் கூட்டங்களாக மையப்படுத்தி நடத்தும் முக்கிய முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

கோவையில் 412 பக்கங்களில் தமிழ்க் கல்வி, தமிழர் நாகரிகம் – சங்க இலக்கியம், தற்கால இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், கவிதைகள், நூலரங்கு நினைவுக் குறிப்புகள் எனத் தமிழறிஞர்களின் ஆய்வுத் தொகுப்பாகத் ‘தமிழ் மலர் 2010’ எனும் நூலைத் தனியோரு மனிதராய் அளப்பரிய முயற்சி எடுத்து ஞானி கொண்டு வந்தார். ‘தமிழ் மலர் 2010’ நூல் வெளியீடும், கருத்தரங்கும் 13.06.2010 அன்று கோவையில் நடைபெற்றது. அமைப்பின் சார்பில் இராசேந்திரசோழன், சூரியதீபன் ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

3

நம் திட்டமிடலையும் தாண்டி, நம் மனத் திடத்தையும் எள்ளி நகையாடி முதுமை நம் மீது கவிகிறது. இளமையிலிருந்து இந்நாள்வரை கண் துஞ்சாது, உடல் நோவு கருதாது ஆற்றிய பணி மலைபோல் நிமிர்ந்திருந்த போதும், முதுமை உடலை வளைத்துவிடுகிறது. முதுமையின் வண்ணங்கள் இனியன அல்ல. முதுமையின் நிறம் கறுப்பு; அது கன்னங்கரிய இருள். மலைச்சரிவின் கீழிருக்கும் பள்ளத்தாக்கு அல்ல; சரிந்து சரிந்து பாதாளக்குகைக்குக் கொண்டு போய்த் தள்ளும் சரிவு.
இனி இந்த மனதில் கவிதை இல்லை...
"மணமில்லை தேனில்லை இனிமையில்லை.
இனி இந்த மனதில் கனவுகளும் பூக்களும்
மழையும் விடியலும் மீதமில்லை;
அழகில்லை, பூப்போல் கையணைக்க -
அனுராகமில்லை, கண்ணீருமில்லை,
விரகமும் அச்சமும் சுமூக மோகங்களும் -
நோவும் குற்றஞ் சுமத்தலும் முற்றுமில்லை...
இனி இந்த மனதில் கவிதையில்லை...
இருண்ட மனதில் இனி பண்டிகையில்லை -
சிரிப்பில்லை, களிப்பில்லை, சிறகுமில்லை -
மலர் தேடி ஓடும் மலைச்சரிவில்,
நிழல் பரப்பி நின்ற மாந்தோப்பில் -
வளைந்த இலவமரக் கொம்பில் கட்டிய ஊஞ்சலில்
ஆட்டமில்லை, பாட்டமில்லை;
அன்பு நிறைந்த மெலிந்த கையால்
அம்மா பரிமாறும் பதமான சோறும்,
ஒரு பிரளயத்தில் மிதந்து போகும்
ஒரு காலகட்டம் விழிமூடிட -
இருண்டுவிட்ட மனதில்
இனி பண்டிகை இல்லை...
இனி இந்த மனதில் கவிதை இல்லை...
இங்கு என்னிடத்தில் வேறொன்றுமில்லை...
கவிதைக்காக கை நீட்டி நிற்பவனே,
வெறும் கையனாய்ப் போ, திரும்பிப் போ...”
மலையாளம்: சுகுதமாரி; தமிழில்: இளம்பாரதி.
இனி என்னால் எதுவும் செய்ய இயலாது; வெறும் புலம்பல் மட்டும் மீதமிருக்கும் வாழ்வு; இனி என்னிடமிருந்து – இந்த வற்றிப்போன அமுதசுரபியிடமிருந்து என்னென்ன எதிர்நோக்குகிறாயோ அந்தக் கனவுகள் எதுவும் கைவசப்படாது. வெறும் கையனாய்த் திரும்பிப் போ எனச் சொல்லி, முதுமையை எதிர்கொள், முதுமை பழகு என்கிறது கவிதை.

நம்முடைய சிந்தனைகள் வீரியமிக்கவை; காற்றினும் வேகம் கொண்டவை; ஆனால் வினையாற்றும் உடல் எல்லாத் தருணமும் கைகொடுப்பதில்லை. திட்டமிடுகிறோம்; திட்டமிடுதலை நிறைவு செய்ய உடற்திடம் காணோம். மனசின் கால்கள் அகலிப்புக் கொள்கிறாற் போல், உடல் திறன் அகலிப்புக் கொள்வதில்லை. தொட்டால் சிணுங்கி போல், ‘வெடுக் வெடுக்’கென மன உளைச்சலும் பதகளிப்புமாகி, மனசின் விசாலம் சிறுத்து உடலின் சிறுசிறு உறுப்புக்களும் வலுவிழந்து போகின்றன.

‘அஸ்வகோஷ்’ என்னும் தொடக்கநாள் சிறுகதைகளின் படைப்பாளியைத், இராசேந்திரசோழன் என்னும் துடிப்புமிக்க களப்போராளியைத் தீண்டும்போது - நத்தை தன் கூட்டுக்குள் சிலிர்த்து அடக்கிக்கொள்வதைப் போல் ஒடுங்கச் செய்துள்ளது முதுமை. மனம் ஓர் ஆற்றல்மிகு கோடாரி; கூர்ப்பு உள்ளவரை எத்தகைய சிக்கல்களையும் பிளந்து கூறுபோட்டுவிடும்; மழுங்கிப் போகும்பட்சத்தில் ‘நினைவுகள்’ என்னும் சம்மட்டியடி சேர்ந்தால் ஆப்பாக மாற்றுவடிவம் எடுத்துக்கொள்ளும். இராசேந்திரசோழன் என்கிற ஆளுமைக்குள் இன்றைக்கு வந்து போகும் தூண்டலுக்கு, செயலூக்கத்துக்கு இது பொருந்தும். முதிர்ந்த விதைதான் செக்குக்கு உதவும்; இங்கு செக்கில் பிழிபட்ட எண்ணெய்யாய் அவரின் சிந்திப்பு கலப்படமின்றி இருக்கிறது என்பது கண்கூடு.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்