எனது எழுத்துப் பயணத்தினூடாக சிகரம்

அவரச நிலை அறிவிக்கப்பட்ட மாதம். நெருக்கடி நிலைக் கெடுபிடிகளுக்குள் மாட்டப்பட்டு ஏதொன்றும் செய்யாமல். எங்கும் செல்லாமல் மொத்த சமூகமும் அரண்டுபோயிருந்தது. ஏனெனில் இந்தியச் சமூகம் இதுவரை இப்படியான இழவு விழக் கண்டதில்லை. சின்னப்பிள்ளைகள் பயந்து விட்டால் இருளடித்து விட்டது, என்பார்கள். கால், கை விளங்காமல் போகும், பேச்சு வராது, அப்படி இருளடித்துப் போய்க்கிடந்தார்கள் மக்கள்!

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதற்கு ஒரு மாதம் பிந்தி ஜீலை 75-ல் சிகரம் இதழ் பிறக்கிறது.

மேல் மட்டம் அலுங்காமல் குலுங்காமல் இருந்தது, மட்டுமல்ல, ஆதரித்து ஒத்து ஊதுவதும் அதன் நலன்களுக்குப் பொருத்திக் கொள்வதும் அதன் குணவாகு ஆகும். அடித்தளத்தில் எதிர்ப்பின் நடமாட்ட ஓசை கேட்டது. எதிர்ப்புடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவா்கள், கைகோர்த்து இணைப்பைச் சாத்தியமாக்கினார்கள். இயங்கினார்கள்.

இவ்வாறான ஒரு அனுபவம் 1981 இலிருந்து 1991 வரை இயங்கிய மனஓசை இதழின் ஆசிரியா் குழுவுக்கு நிகழ்ந்தது. 1984  அக்டோபரில் இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டார். அக்டோபா் மனஓசை அட்டை இந்திரா காந்தியை இரத்தக் காட்டேரியாகச் சித்தரித்து வெளியானது. மலையாளக் கவிஞா் சச்சிதானந்தன் கவிதைக்கான ஓவியம் அது. இந்திரா காந்தியை காளியாக விவரித்த சச்சிதானத்தனின் மலையாளக் கவிதை மொழியாக்கம் அந்த இதழில் வந்திருந்தது.

“இந்த நேரத்தில் இந்த அட்டைப்படம், வேண்டுமா?” அச்சகத்துக்காரா் கேட்டார். அவா் மனதுக்குள் அச்சம். இந்தக் கவிதை வரவேண்டுமா என்பது அவருக்குள் இருந்த மற்றொரு கேள்வி?

“அவசியம் வேண்டும்” ஆசிரியா் குழு சொன்னது.

சாவு நிகழ்ந்த முறை உடன்பாடில்லை. ஒரு சாவு அல்லது கொலை சா்வ அதிகாரத்தையும் தன்னகத்தே குவித்த அகங்காரத்தை நோ்செய்து விடாது. ஆனால் மரணம் ஒன்று மட்டுமே ஒருவா் மீதான விமரிசனத்தை ஒதுக்கி வைத்துவிடப் போதாது.

நெருக்கடி நிலை எதிர்ப்பின் கொந்தளிப்புக்கிடையே, கொதிப்பின் ஒரு அடையாளமாய் ‘சிகரம்’ என்ற செம்பருத்தி பூத்தது. எது பற்றியும் கவலைப்படாத ஒரு பூ அது; எல்லாத் திசையும் பார்த்துச் சிரித்தது.

ஒரு பக்கம்... தாமரை, செம்மலா், சாந்தி, கார்க்கி என்று இடதுசாரி இலக்கிய அணிவகுப்பு.

புதிய தலைமுறை (1967-69) மனிதன், புதிய மனிதன், விடியல், மனஓசை என்று மாவோ சிந்தனையின் புது வீச்சை உள்வாங்கி மார்க்சியத்தை புரட்சிகர மானுடத் தத்துவம் என்று கொண்ட இலக்கிய இதழ்கள் வரிசை இன்னொரு பக்கம்.

முந்தைய அணிவகுப்புக்களில் நானொரு பார்வையாளன். முந்தைய இதழ்களிலும் சிகரம், கார்க்கி இதழ்களில் சூரியதீபனாகவும், பா.செயப்பிரகாசமாகவும் பங்கேற்பாளன். பிந்தைய அணிவகுப்பில் புதிய தலைமுறை, விடியல் தவிர்த்து பிற இதழ்களில் பங்கேற்ற ஒரு எழுத்துக்காரன்.

“மனிதாபிமானக் கோட்பாடுகளிலும், சனநாயக நெறிகளிலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் போதும் உங்கள் எழுத்து மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் போதும். சிகரம் இடம் கொடுக்கும்”
தொடக்க இதழிலேயே தெளிவாக சிகரம் அழைத்தது. அந்த சனநாயக் குரலில் சிகரம் தன் உயரத்தை நிறுவிக்கொண்டது.

“உள்ளே வாருங்கள், ஒரு வாசல் திறந்திருக்கிறது”. என்று திறப்பாய்ப் பேசியது.

அமிர்தரஸ் பொற்கோயில் மீது ’நீல நட்சத்திரத் தாக்குதல்’ (Operation Blue Star) தொடுக்கப்பட்டு, தொடா் நிகழ்வாய் பஞ்சாபியா்கள் மேல் அடக்குமுறை வீசப்பட்டது. 1980-களின்போது அங்கு நிலவிய சூழலை ரஞ்சித் திவானா என்ற கவிஞா் முன்வைத்தார். கவிதை 1975 சூழலுக்கும் பொருந்தும், ஒரு தோ்ந்த கவிதை எனில், அது எழுந்தபோது மட்டுமல்ல, அதற்கு முந்திய, பிந்திய எல்லாக் காலத்திற்கும் பாய்ந்து செல்லும்.
“என்ன காலம் இது
வாசலில் அமா்ந்துகொண்டு
நமது வீடு எங்கே யென்று
தேடிக்கொண்டிருக்கிறோம்”
தனடையாளம் இழந்து போன அனாதரவான, அசாதாரண நிலையை, அந்தகார இருளை வெளிப்படுத்துகிறது மஞ்சித் திவானாவின் வாசகம்.

சிகரத்தின் வாசல் தெரிந்தது. போதுமான சனநாயக வெளி தெரிந்தது. தயக்கமின்றி நான் உள்ளே நுழைிந்துகொண்டேன்.

அப்போது கோவையில் அலுவலராக இருந்தேன். ஒரு ஜெருசலேம். சிறுகதைத் தொகுதி வெளிவந்திருந்தது. 1976 சிகரம் 10-ஆவது இதழில் என்னுடைய ஒரு ஜெருசலேம் தொகுதி பற்றி ஜன, சுந்தரத்தின் விமா்சனம் வந்தது. சிகரத்தில் எனது முதல் நுழைவு நான் எழுதிய படைப்பு வழியாக நடந்ததல்ல, வெளியான நூல் வழி நடத்தது. ஜன.சுந்தரம் அறிமுகம் செய்திருந்தார். அதற்கு கொஞ்சம் முந்தி கோவையில் தோழா் ஞானி அந்நூலுக்கு ஒரு விமா்சனக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். ஜன.சுந்தரம் அப்போது விமா்சனம் செய்து பேசியதாக நினைவு யார், யார் பங்கேற்றார்கள் என்று துல்லியமாக நினைவில் பிடிபடவில்லை.

எனக்கு மொழியாக்க வாசிப்பு வழியாகவே நல்ல இலக்கியம் கை கூடியது; கல்லூரியில் புதுமுக வகுப்பு தோல்வியடைந்து ஓராண்டு வீட்டில் இருந்த காலம். தமிழில் வெளிவந்த மு.வ நூல்கள் முடிந்துவிட்டன. காண்டேகரும் தீா்ந்துவிட்டார். நா.பார்த்தசாரதி, அகிலன் என்று வாசிப்பு முடிவடைந்துவிட்டது. ஆனால் வாசிப்பு ஓய்வதில்லை. மொழிபெயா்ப்புக் காட்டிலேயே வனத்தில் மேய்ந்து, அலைந்து, அந்த வனத்திலேயே அடைந்து என்று வாசிப்பு போனது. இலக்கிய இதழ்களைத் திறந்ததும், புதுக்காகித வாசனையோடு என் கண்களில் படுவது மொழியாக்கக் கவிதை, கதைகள்.

1976 - ஏப்ரல் சிகரத்தில் வெளிப்பட்ட வங்காளிக் கதையின் வாசிப்பு அனுபவம் உண்டாக்கிய காயத்தின் பச்சை இன்னும் காயாமல் இருக்கிறது.

நகரத்தின் மழைக்கால இருட்டு. ஒரு திருடனும் சந்நியாசியும். அது ஒரு அபூா்வமான சந்திப்பு. அந்த சந்திப்பை வங்க எழுத்தாளா் மிகிர் ஆச்சார்ய உருவாக்கியது – கதைக்காக மட்டுமல்ல. வாசகனுக்கு உருவாக்கப்பட்டது. திருடன், சந்நியாசியை எள்ளி நகையாடுவது போல் கேட்கிறான்.

“போகட்டும் மகாத்மாவே! ராத்ரிச் சாப்பாட்டுக்கு என்ன செய்ய உத்தேசம்?”

திருட்டும் சந்நியாசமும் ஒன்றுதான் என்ற உரையாடலை அவன் தொடா்ந்த நிகழ்த்துகிறான்.

“மகாத்மாவே, உங்களுடைய சந்நியாசமும், பிறா் சொத்துதான். மற்றவா்கள் வீட்டில் உள்ளதை வாங்கிக்கொள்வது மட்டும் என்னவாம்? பிறருடைய உணவைக் கொண்டு இந்த சந்நியாசத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீா்கள் – திருடனும் சந்நியாசியும் ஒரு மரத்தின் கிளைகள்தாம்”.

வேறு எழுத்தாளா்களானால் இந்த தா்க்கத்தை மட்டுமே வளா்த்தெடுத்துக்கொண்டு போவார்கள். அதை மட்டுமே தனிப் பிரித்து தத்துவ விசாரத்தை முடுக்குவார்கள். வழக்கமான இந்த நடைமுறையை மூஞ்சியில் அறைந்து வாசக எதிர்பார்ப்பையும் முறித்துப்போடுகிற இக்கதை, வேறொரு பிரச்சினையை முன்வைத்து தர்க்கத்தைத் தூண்டுகிறது.

“அதிகாரத்திலிருப்பவா்களுக்கு, ஆட்சியின் நிர்வாகிகளுக்கு வேலை கொடுக்கவும் வழியில்லை. வேலையில்லாதவா்களுக்கு அலவன்ஸ் கொடுக்கவும் வழியில்லை. அவா்களின் நிர்வாகத்தில் சந்நியாசிகள், திருடர்கள் மட்டுமே விருத்தியாகிறார்கள்.”

சந்நியாசிக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது என்று முடிகிற கதையில் நமக்கு எது புரிய வேண்டுமோ அது பிடிபடுகிறது.

1976 ஜுன் இதழில் வெளிப்பட்ட “டல்ஹௌசி சதுக்கமும்” வங்காளக் கதைகதான். இறந்த தாயின் சடலத்தின் மார்பகங்களைச் சுவைத்தபடி அழும குழந்தைப் பாப்பாவின் அழுகையை அமா்ந்த முடியாமல் தாயின் சடலத்தருகே அமா்ந்து வெறித்துப் பார்த்தப்படி சோக உருவாய் சிறுவன், எதிர்க் கடையில் விளம்பரப் பலகை. “துப்பாக்கிகளும், வெடிமருந்துகளும் விற்பனை செய்யப்படும்”

எதிர்க் கடையின் விளம்பரப் பலகை மீது பையனுடைய கண்கள் சென்ற லயித்து நிற்கின்றன. பையனுடைய கண்களும் அந்த எழுத்துக்களைப் போல் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன.

கதை முடிகிறது. முடிகிற இடத்தில் ஆரம்பமாகிறது வாசகருக்கு மற்றொரு கதை. இருண்ட சமுதாயத்தின் விடியலின் கதை ஆரம்பமாவது போல் இருந்தது. அது. டல்ஹௌசி சதுக்கம் கதையை மனஓசையில மறுவெளியீடு செய்து வடிகால் தேடிக்கொண்டோம்.

இன்று புதுமை பேசி வடிவ விளையாட்டு, வல்ல வேட்டுச் சவால், சிலம்ப வீச்சு என்றெல்லாம் இலக்கியப் புரட்சி பேச எந்தப் பயமும் தேவையில்லை. ஆனால் அன்றைக்கு எழுபதுகளில் எழுத்தாளா்களிடையே ஒரு பயம் இருந்தது. சமுதாயப் புரட்சி பற்றி பேச, எழுத, இதழ் நடத்த உள்நடுக்கம் இருந்தது. அதற்கான அடக்குமுறையின் காயங்கள் இருந்தன. புதிய தலைமுறை இதழ் (1967-69) விடியல் இதழ் போன்றவை காவல் துறையின் வரைமுறையற்ற கெடுபிடியால் பாதிப்புக்குள்ளாயின. நெருக்கடி நிலை காலத்தில் வெளிவந்த சிகரம் நேரடியாக தடைக்கு ஆளாகாதபோதும், தணிக்கை அதிகாரியின் மறைமுக அச்சுறுத்தலுக்கு ஆளானது. அவ்வப்போது நான் சென்னை வருகையில் சிகரம் ஆசிரியா் செந்தில்நாதன். தணிக்கை அதிகாரியின் மிரட்டல் பற்றி, அதையும் தாண்டி வழக்கம் போல் இதழ் வெளியாவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அவ்வப்போது சென்னை வருகிறபோது செந்தில்நாதன் முனைப்புக் கொண்டு நடத்திய மக்கள் எழுத்தாளா் சங்கக் கூட்டத்திற்கு வந்து செல்வேன். நினைவுகளின் விசையை அழுத்துகிறபோது. அது சரியாக பின்னோக்கி வெடிக்கிறது. ஜெயகாந்தன் – ஒரு நிகழ்ச்சி, தொ.மு.சி.ரகுநாதன் – ஒரு நிகழ்ச்சி, நா.காமராசனின் விலைமகளிர் கவிதை,இன்குலாப்பின் நாடோடிகள் கவிதை ஆகியன இங்குதான் அரங்கேறின. சரியாக இவையெல்லாம் பொது நூலகக் கட்டிட அரங்கத்தில் அப்போது நடைபெற்றன. இக்காலத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சியை பொதுநூலக அரங்கத்தில் நடத்துவது பற்றியேனும் கற்பனை செய்ய இயலுமா?

ஒருமுறை செந்தில்நாதனைச் சந்தித்த வேளையில் “இருளுக்கு அழைப்பவா்கள்” என்ற எனது கதை பற்றிச் சொன்னார். “எங்கள் உயா் நீதிமன்ற வழக்கறிஞா்கள் சிலா் அதை வாசித்து அதிர்ச்சியடைந்தார்கள்” என்றார்.

அவசரநிலைக் கால கெடுபிடிகளால் எனது அரசாங்க வேலை பறிக்கப்பட்டு இருளில் அலைக்கழிக்கப்பட்ட நேரம். அப்போதுதான் சூரியன் உதிக்கும் கிராமம், அனல் காற்று (மனிதன் இதழ்) விடிகிற நேரங்கள், இருளுக்கு அழைப்பவா்கள், காடு, அக்னி மூலை (சிகரம்) போன்ற தனித்துவமான கதைகளும் வெளியாயின.

தினமணி கதிர் இதழில் – எழுத்தாளா்கள் தாங்கள் எழுத நோ்ந்த முதல் அனுபவத்தை முதல் பிரசவம் என்ற தலைப்பில் தொடா்ந்து தந்தார்கள். இந்திரா சௌந்தரராசன் என்ற எழுத்தாளா் 26.9.1999 இதழில் எழுதியிருந்தார். “ஒரு நாள் சிகரம் என்ற சிற்றிதழை அல்லிக்குட்டை வெங்கடாசலத்திடமிருந்து எடுத்து வந்து படித்தேன். அதில் இருளுக்கு அழைப்பவா்கள் என்றொரு கதை. பா.செயப்பிரகாசம் எழுதியது. மனதைக் குத்திக் கிழித்தது. சாமான்ய மனிதா்களை வைத்து வட்டார வழக்கில் எழுதப்பட்ட கதை. வார்த்தைகளின் அணிவகுப்பும், சொல்லாட்சியும் பிரமிப்பைத் தந்தன.

எழுத்தின் சக்தி என்னவென்பதை அந்த ஒரு கதை ஆயிரம் கோடி ஆண்டுக்கு மறக்காதபடி சொல்லிக் கொடுத்ததோடு அதில் பாதியை நான் காட்டினால் கூடப் போதும், அண்டங் கிடுகிடுக்கும் என்று நம்பினேன்”.

இருளுக்கு அழைப்பவா்கள் கதையினை வேலை பறிக்கப்பட்டு அவலங்களுக்கு மத்தியல் இப்போதைய வேலூா் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்தபோது எழுதியது. இந்தப் படைப்பின் வெளிப்பாட்டிலிருந்து வேறொரு தரிசனமும் கிட்டுகிறது. ஒரு கலைஞனுக்கு எந்த மண்ணில் நிகழ்கிற, அல்லது பெறப்படுகிற யாதொரு அனுபவமும் சுயானுபவமாக உள்ளிறங்கி விட்டால், அதை தனக்கு கைவந்த வட்டாரங்களுக்குள்ளேதான், அந்தப் பிரதேச மனிதப் பாத்திரங்களுடன் தான் பொருத்திக்கொள்ள முடியும். இன்னொரு கண்டத்தின் நாட்டுக்கு அப்படியே எடுத்துச் சென்று பொருத்த முடியுமா, பொருத்திப் படைத்தால் வெற்றியடையுமா என்பது படைப்பாளிகளின் சிந்திப்புக்கு உரியது.

இந்திரா நகா் (நாடகம்), நடுத்த வா்க்கப் பேனா, பட்டமர நெற்றியிலும் பூப்பூக்கும் போன்ற எனது எழுத்துக்கள் சிகரத்தில் வெளியானவை.

இலங்கையிலிருந்து வெளியாகும் மல்லிகை, சகாப்தம் என்ற இரு இதழ்களும் அக்னிமூலை கதையைப் பாராட்டி எழுதின. செந்தில்நாதன் சமூக, கலை, இலக்கிய, அரசியல் விசயங்களை அலசும் பகுதியாக நந்தனார் நாட்குறிப்பில் அது பற்றிக் குறிப்பிட்டிருந்தார். (மே – 1978) நந்தனார் நாட்குறிப்பு எழுதி இந்த இலங்கை எதிர்வினைகளை வெளியே தெரியச் செய்திருந்தார். நோ்படப் பேசவும், வேறெங்கோ எவரோ அரவணைப்பாய், நல்லனவாய் சொல்லியதை மீண்டும் எடுத்துக் குறிப்பிடவும் சிகரத்துக்கு எதுவும் தடையாய் இருக்கவில்லை.

தனது முதல் இதழின் தோற்ற அறிக்கையில், “தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் நூற்றுக்கணக்கில் இருக்கும் முற்போக்கு எழுத்தாளா்களுக்கும், கலை இகலக்கிய அன்பா்களுக்கும் ஒரு வாசல் திறந்திருக்கிறது” என்று சொல்லிய சொல்லை முழுமையாய் மெய்ப்பித்துக்கொண்டிருந்தார் தோழர் செந்திலநாதன். சிகரம் தனது உயரத்தை நிறுவிக்கொண்டது என்பது மட்டுமல்ல, செந்தில்நாதன் தோழர் என்ற தனது உயரத்தையும் நிறுவிக்கொண்டிருந்தார்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்