பள்ளிக்கூடம் - நாவல் அறிமுகம்


பல புத்தகங்களை நாம் புரட்டுவோம், சில புத்தகங்கள் நம்மை புரட்டிப்போடும். இந்த புத்தகம் இரண்டாம் ரகம்.

முதலில் நான் ஒரு உண்மையைச் சொல்லி விடுகிறேன். ஐயா பா.செயப்பிரகாசம் கரிசல் எழுத்துலகை கட்டி எழுப்பியவர்களில் முக்கியமான எழுத்தாளர். மண் மனம் மாறாத எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பது போன்ற மேலோட்டமான தகவல்களன்றி அவரது எழுத்துக்களை அதிகம் வாசித்ததில்லை. முதன்முதலாக அவரது எழுத்துக்களை இந்த “பள்ளிக்கூடம்” நாவல் வழியே சமீபத்தில்தான் வாசித்தேன். பல நூறு சிறுகதைகளை, கட்டுரைகளை, கவிதைகளை எழுதியுள்ள ஐயா பா.செயப்பிரகாசத்திற்கும் இதுதான் முதல் நாவல். எழுத்துலகில் முதுபெரும் ஆளுமையான ஐயா பா.செயப்பிரகாசத்தின் எழுத்துக்களை விமர்சனம் செய்யவோ, மதிப்பிடவோ எனக்கு உண்மையில் இயலாது. இங்கு இந்நூலைப் பற்றிய வாசிப்பனுபவத்தைத் தருகிறேன், குறையிருந்தால் பொறுத்தருள்க!

இந்நாவல் சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களோடு விரிகிறது. அதுவரை தமிழ்நாட்டில் பொதுப்பள்ளிகள் என்னும் அரசுப்பள்ளிகளே கல்வி வழங்கும் சேவையைச் செய்து வந்தன. ஆனால் இந்நாவல் தொடங்குமிடம் அரசுப் பள்ளிகள் மட்டுமே என்னும் நிலை மாறி தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகும் ஆரம்ப காலகட்டம். தமிழ்நாட்டின் ஒரு சிறு நகரமான வில்வநத்தத்தின் அரசு உயர்நிலைப் பள்ளியே கதை மையம். இந்தப் பள்ளியே அனைத்துக்கும் சாட்சியாயிருப்பதால் நாவலுக்கும் “பள்ளிக்கூடம்” என்று பெயர் வைத்திருப்பார் போல நாவலாசிரியர்.

நாவலின் தலைப்பு பள்ளிக்கூடம் என்றிருப்பதால் வெறும் ஆசிரியர்கள், மாணவர்களோடு கதை நின்றிடவில்லை. பள்ளிக்கூடம் ஆலமரத்தின் மையத்தூணாய் இருக்க பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதியம், பெண்ணியம் என்று கதையின் போக்கு வளைந்து நெளிந்து கிளைபரப்பி விரிந்து கொண்டே செல்கிறது. எத்தனை கிளைபரப்பி நாவல் விரிந்தாலும் நாவலின் மையச்சரடாய் இருப்பது மனிதம்! புறக்கணிக்கப்படும் அரசுப்பள்ளிகள், பாதிக்கப்படும் ஆசிரியர்கள், மாணவர்கள், எளியவர்கள், பெண்கள் , என அனைவரையும் திகட்டத் திகட்ட நேசித்த ஒரு எளிய “மனிதனின்” எழுத்துக்களே இந்நாவல்.

நாவலின் கதைப் போக்கு சுருக்கமாய்….

வில்வநத்தம் ஒரு சிறு நகரம். சுற்று வட்டார கிராமங்கள் அனைத்துக்குமான அரசு உயர்நிலைப்பள்ளி அங்குள்ளது. சமீபகாலத்தில் அப்பகுதியில் பிரபலமான தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளால் அப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை இறங்குமுகமாக உள்ளது. அந்த சமயத்தில் அப்பள்ளிக்குத் தலைமை ஆசிரியராய் அப்துல் கனி வந்து சேர்கிறார். வேறெந்த தகுதியையும் விட ஒரு ஆசிரியராய் இருப்பதற்கான அடிப்படைத் தகுதியான “மாணவர்கள் மீதான அன்பு” அவரிடம் அதிகம் இருந்தது. கூடவே நல்ல நிர்வாகத்திறனும் இருந்தது. இது போதாதா? எப்படிபட்ட மோசமான பள்ளியையையும் கட்டி எழுப்ப.

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், அருகில் உள்ள சிற்றூர்களான கமலாபுரம், செங்குளம், புதுக் குடியிருப்பு போன்ற ஊர்களிலுள்ள தொடக்கப்பள்ளிகளில் பயின்று வில்வநத்தம் உயர்நிலைப் பள்ளிக்கு வந்து சேராத குழந்தைகளைப் பற்றிய தகவல் சேகரித்து பள்ளியில் சேர்க்கவும் ஊர் ஊராக ஆசிரியர் குழுவுடன் செல்கிறார் தலைமை ஆசிரியர் அப்துல் கனி. ஊர்களில் தன்னை பாசத்தோடும் மாமு என்று உறவு முறையோடும் உபசரிப்பதைக் கண்டு நெகிழ்ந்து போகிறார் அப்துல் கனி. உயர் சாதியினர் வசிக்கும் ஊர்களிலெல்லாம் மாணவர் சேர்க்கையில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கிறது. ஆசிரியர்கள் எல்லோரும் நல்லவிதமாக ஒத்துழைப்புத் தருகின்றனர். ஆசிரியர் குழு புதுக்குடியிருப்பு என்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் சேரிப்பகுதிக்குள் செல்லும்போது ஆசிரியர்களில் சிலரின் சாதிய முகம் எட்டிப்பார்க்கிறது. இவர்கள் அருகருகே உள்ள ஊர்களைச் சேர்ந்த உயர் சாதியினராய் இருக்கிறார்கள். இவர்களின் ஒத்துழைப்பு சரிவர கிடைக்காத நிலையிலும் தலைமை ஆசிரியர் அப்துல் கனி சேரியின் ஒவ்வொரு வீடாய் ஏறி இறங்கி வில்வநத்தம் பள்ளிக்கு மாணவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்கிறார்.

பள்ளியின் பல நாள் பிரச்சினையான தண்ணீர் பிரச்சினைக்கும் தீர்வு கண்டு பொது மக்களால் “பிள்ளைகளோட தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தந்தாரே பெரிய மனுஷன்” என்று போற்றப்படுகிறார். தலைமை ஆசிரியருக்கு முழு ஒத்துழைப்பைத் தருகிறார் பள்ளியின் தமிழாசிரியரும் முற்போக்கு எண்ணங்களைக கொண்டவருமான முத்துராக்கு. வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான ஆசிரியர் ஜான் என்பவரும் தலைமை ஆசிரியருடன் தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருக்கிறார். இவர்களின் செயல்பாடுகளால் மகிழ்வுற்று பெற்றோர் ஆசிரியர் கழகமும் துணைநிற்கிறது. இவ்வாறான செயல்பாடுகளால் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரிக்கிறது. இச்சமயத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கும் தம்பதியினர் தங்கள் குழந்தைகளை அவ்வூரின் தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள். அதோடல்லாமல் அந்த தனியார் ஆங்கிலப் பள்ளியில் அவ்வூரின் மற்ற பிள்ளைகளை சேர்ப்பதற்கு பிரச்சாரமும் செய்கிறார்கள். இது நாவலில் வேதனையான சம்பவம். அதையும் மீறி தலைமை ஆசிரியர் அப்துல் கனி மற்றும் பிற ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு பள்ளி மாணவர் எண்ணிக்கையிலும், தேர்ச்சியிலும் அபாரமான வளர்ச்சியை எட்டுகிறது.

தலைமை ஆசிரியர் அப்துல் கனிக்கு ஒரு சுவாரசியமான முன் கதையுண்டு. இவரின் போராட்ட குணம் இந்தப் பள்ளியை மட்டுமல்ல, இதற்கு முன்னரும் ஒரு பள்ளியை உயர்த்தியது. அது சென்னை புறநகரிலுள்ள ஒரு எம்எம்டியே மாநகராட்சி குடியிருப்பு பள்ளி. அங்கும் சுணங்கிங் கிடந்த ஒரு பள்ளியை தலை நிமிர வைக்க இவர் எடுத்த முன்னெடுப்புகள் ஆசிரியப் பணியிலுள்ளோருக்கு ஒரு பாடம். வீட்டில் படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு பள்ளியிலேயே இரவு சிறப்பு வகுப்பு நடத்தி அனைவரையும் தேர்ச்சி பெறச்செய்தது, பெற்றோர் ஆசிரியர் கழக ஒத்துழைப்புடன் பள்ளியில் கழிப்பிட வசதி, மின்விசிறி வசதி என தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளியை உயர்த்தியது என இவர் செய்த ஒவ்வொன்றும் புரட்சி. ஆனால் அந்தப் பள்ளியின் எதிரில் இருந்த சாராயக் கடையை அகற்ற எடுத்த முயற்சிகளால் அப்பகுதி கவுன்சிலரும், அந்த சாராயக் கடை முதலாளியுமான டில்லித்துரை என்பவனை எதிர்க்க வேண்டியதானது. இதுவே அவரை தண்ணியில்லாத காடான தற்போதைய வில்வநத்தம் பள்ளிக்கு இடம் மாற்றம் பெற்றுத் தந்தது. இங்கும் அவர் மற்றும் ஆசிரியர் குழுவின் அயராத உழைப்பால் உயர்நிலைப் பள்ளியியானது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது. இது நாவலின் கல்விப் போராட்ட கிளை.

இந்த நிலையில் தான் சாதியின் கோர முகம் வெளிப்படுகிறது. இதனை நூலின் முன்னுரையில் நூலாசிரியர் “வெளியில் அடர்த்தியாய் பெய்யும் பனி – வீட்டினுள் நடுக்கம் கொள்ள வைப்பது போல, கல்விப்புலத்தைச் சுற்றிச் சூழும் சாதியக் கசடு, கூடங்களுக்குள்ளும் இறங்குகிறது. வேர் முதல் நுனிவரை விசம் பாய்ச்சி கல்விக் கூடங்களை நீலம் பாரித்துப் போகச் செய்துள்ளது. உடலின் ஒரு பாகத்தில் ஊறல் ஆரம்பித்தால் மளமளவென உடல் முழுவதும் ஏறி சொறியச் சொறிய சுகமாகிறது. சொறியும் சுகத்தை அரசியல் சக்திகள் சிரத்தையாய் ஏற்று உலவுகின்றன. காதல் என்னும் பாலினப் பிரியத் தடுப்பு , நட்புக்கு அளவு, உறவுக்கு எல்லை, சமுதாய இணக்கத்துக்குச் சுவர், மனித குணவாகு சிதைப்பு – என சொறியும் சுகத்தை நீட்டித்துக் கொண்டே போகின்றன.” என்கிறார். ஆம் பள்ளியில் ஒரு காதல்... பருவ வயது ஈர்ப்பு. தனஞ்செயன் என்னும் மாணவன் - உருமிக்கார தாழ்ந்த சாதி, யசோதை என்னும் உயர் சாதிப் பெண்ணும் காதலிக்கிறார்கள். தனஞ்செயன் அருமையான குரல்வளம் கொண்டவன். பள்ளியின் கடவுள் வாழ்த்து பாடுபவன் அவனே. இதனால் அவன் மீது பலருக்கு ஈர்ப்பு அதிகம். ஒரு நாள் பள்ளியில் நடைபெறும் மாதாந்திர சபைகூடலில் “கலையே உன் விழி கூடக் கவிபாடுதே” என்று பழைய திரைப் படத்தின் காதல் பாட்டு பாட “உறுமிக்காரப் பயலுக்குத் திமிரு” என்று சபையை வழி நடத்திய ஆசிரியர் ரகுராம் திட்ட அன்றிலிருந்து கடவுள் வாழ்த்து பாடுவதையும் நிறுத்திக் கொள்கிறான்.

இந்த தனஞ்செயனுக்கும், யசோதைக்கும் பள்ளியில் உண்டான காதல் ஊருக்குள்ளும் தொடர, பெண்ணின் தந்தை பருத்தி குச்சியால் அடித்து துவைக்கிறார். தப்பி ஓடியவன், ஓடியவன்தான். பின் ஊருக்குள்ளும் வரவில்லை, பள்ளிக்குள்ளும் வரவில்லை. அத்தோடு முடிந்தது தனஞ்செயன் படிப்பு. இந்த சம்பவங்களால் நிலை குலைந்த யசோதா தற்கொலை முடிவை எடுக்க, ஆசிரியர் ஜானால் காப்பாற்றப்பட்டு தோழி ஒருத்தியின் வீட்டில் தங்க வைக்கப்படுகிறாள். இதைத் தெரிந்து கொண்ட யசோதையின் தந்தை தனது சாதியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் துணையுடன் பள்ளியே பார்த்து துடிக்க, கதறக் கதற இழுத்துச் செல்லப்பட்டு தனது சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கு அவசரம் அவசரமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். இது நாவலின் மறு கிளை.

இந்நாவல் தனம் என்னும் பெண்குழந்தை பள்ளியில் பருவமடைதலிலிருந்து தொடங்கும். பிறகு வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அழைத்துப் போக இனிப்பு வாழைப்பழத்தோடு வருகிறார் தனத்தின் தந்தை. இவரோடு தனத்தின் அத்தையும் தனத்தைவிட ஏழு வயது மூத்தளமான அன்னக்கிளியும் கூட வருகிறாள். இந்நாவலில் வரும் முற்போக்கு பெண்ணியச் சிந்தனை உள்ள முக்கியமான பெண் அன்னக்கிளி. இவள் தலைமையில் தனம், தனத்தின் தோழிகளான ரங்கா, வடிவு அணியினர் கிராமங்களில் ஆசிரியர் குழுவினரின் ஊர்வலத்திற்கு மிகுந்த பக்கபலமாக இருக்கின்றனர். இதில் கொஞ்சம் கொஞ்சமாக அன்னக்கிளிக்கும் ஆசிரியர் முத்துராக்குவிற்கும் பிரியம் ஏற்பட்டு தலைமை ஆசிரியர் அப்துல் கனியின் தலைமையில் திருமணம் செய்துகொள்கின்றனர். பின் அரசியல் சூழ்ச்சியால் நெடுந்தொலைவிலுள்ள தர்மபுரிக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார் ஆசிரியர் முத்துராக்கு.

காதலித்ததால் சாதிக் காரணம் காட்டி ஊரைவிட்டும் படிப்பைவிட்டும் விரட்டப்பட்ட தனஞ்சயன், பாம்புக்கடித்து தன் அண்ணன் இறந்து போன பிறகு தனது பெற்றோரைக் காப்பாற்ற ஊருக்குத் திரும்புகிறான். குலத்தொழிலான எந்த உருமித்தொழிலை தான் செய்யமாட்டேனென்றும், படித்து முன்னேறுவேன் என்றும் சொன்னானோ அதே அப்பனின் உருமித்தொழிலை இப்போது அவன் செய்கிறான். அவனை கீழ்சாதி என்று திட்டி பருத்திமாரால் அடித்து விரட்டிய யசோதையின் தந்தையும் இறந்து போகிறார்.

சாதியக் காரணத்தால் பள்ளியிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்ட யசோதை அவள் ஊரில் இருக்கப் பிடிக்காமல் கையில் குழந்தையுடன் இரவு முழுதும் பயணம் செய்து தர்மபுரிக்கு வந்து ஆசிரியர் முத்துராக்கும் அன்னக்கிளி தம்பதியிடம் தஞ்சமடைகிறாள். இவளைத்தேடி இவள் உறவினர்கள் வருவார்களே என்று அன்னக்கிளி பயப்பட எதற்கும், சுற்றுவட்டார மக்களைத் திரட்டி எதிர்தாக்குதலுக்கும் துணிகிறார் ஆசிரியர் முத்துராக்கு. இது நாவலின் மூன்றாவது கிளை. இத்துடன் இந்நாவல் நிறைவுறுகிறது. இவ்வாறு இந்நாவலை எனது வசதிக்காக நான் மூன்று பிரிவாக பிரித்துள்ளேன். ஆனால் இந்நாவல் இன்னும் பல தளங்களில் விரிந்துள்ளது.

இந்நாவலின் ஆசிரியரான ஐயா பா.செயப்பிரகாசம் தெளிவான கல்விப் பார்வையும், சமூகப் பார்வையும், அரசியல் பார்வையும் கொண ட மூத்த படைப்பாளி. இந்நாவல் முழுவதும் பல வித சிந்தனைத் தெறிப்புகளையும், பழமொழிகளையும், சொலவடைகளையும் நாவலின் ஓட்டம் கெடாமல் வழங்கியுள்ளார். இவையெல்லாம் ஆய்வு செய்து பல முனைவர் பட்டங்களை பெற்று விடலாம் போல இருக்கிறது. அவைகளில் சில இங்கே,

நம்பிக்கை பற்றி, ”என்னென்ன நம்பிக்கைகள் வாழ்வு நடப்பில் இருக்கின்றன. வாழ்வு என்பது நம்பிக்கைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றில்லாவிட்டால் நாளை; நாளை இல்லாவிட்டால் மற்றொரு நாள் வெளிச்சம் வருமென நம்பிக்கை சொல்கிறது”

ஒரு ஆசான் எவ்வாறு செயல்படவேண்டுமென்பதை ஒரு புஞ்சை சம்சாரியின் வார்த்தைகளில், “கம்மங்கருது பீட்டை பிடித்து, பால்கட்டி மணிபிடிக்கும் பருவத்தில் அதை நீவி வளர்க்கும் இளங்காற்றுப் போல ஆசான் செயல்பட வேண்டும். ஒருமுறை மக்கவிடப்பட்ட திறன் அம்மாடி என்றாலும் வராது; ஆத்தாடி என்றாலும் எழாது.” என்கிறார். என்ன சத்தியமான வார்த்தைகள்.

“இல்லாத வீட்டுப் பிள்ளைகளைத் தீப்பெட்டிக் கம்பெனி தின்றது போக, இருக்கிற வீட்டுப் பிள்ளைகளை வாரிக் கொண்டு செல்ல ஏழு மணிக்கு ஆங்கிலப்பள்ளி வேன்கள் வருகின்றன”

கோணல் மாணல் பேச்சுக்கு உவமையைப் பாருங்கள், “நடைமாடு மூத்திரம் பெய்வது போல் பேச்சு பேச்சு கோணல் மாணலாக நெளிவெடுத்துப் போயிற்று”. என்னே கூரிய அவதானிப்பு, கவித்துவம்!

”வாத்தியார் பேசாத வேளைகளில் பிரம்பு பேசுகிறது, பிரம்பு – ஒரு மொழிதான் பேசும். முதுகுத்தோல் வார்வாராய் உரிந்து போகும்படி அடித்து, பலரைப் பள்ளிக்கூடப்பக்கம் அண்டாமல் செய்யும் ஒரு மொழிதான் அதற்கு”. இந்த வரிகளைப் படிக்கும் போது கல்வியாளர், பேராசிரியர் ச.மாடசாமி ஐயா என் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.

பிள்ளைகளின் சூழலை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை, “பிள்ளைங்க எந்தக் குடும்பத்திலிருந்து வருகிறார்கள் என்பது அவதானிக்கப்பட வேண்டும். பள்ளிக்கு வந்து வாசிக்கும் பதமான உழவுக்கால் எல்லாக் குடும்பத்திலும் இருப்பதில்லை. நம்ம பாடு என்னைக்கு விடியும் வாதனை எப்ப முடியும் என்று கவலை கொண்டிருக்கிற குடும்பங்களிலிருந்து எடுத்தேறி வருகிறார்கள். ஒவ்வொரு பிள்ளையின் குடும்பச் சூழலையும் அவசியம் தெரிந்து கொள்ள கடமைப்பட்டவர்கள் ஆசிரியர்கள்”. எவ்வளவு எளிமையான வார்த்தைகளில் நமக்குக் கடத்துகிறார்.

பழக்கம் நம்மிடம் எவ்வாறு உருவாகிறது என்பதை , “மனசின் நடமாட்டம் , அனிச்சையாய் உடலின் நடமாட்டம் ஆகிவிடுகிறது. பிறகு எல்லாமும் எல்லாமும் அத்து வெறும் உடம்பாகிப் போக, அது சொல்கிறபடிக்கெல்லாம் மனுசப் பிறவி கேட்கத் தொடங்குகிறான்.” என்கிறார். இதுதான் பிராய்டின் சாரமோ!

இன்னும் எத்தனை எத்தனையோ சிந்தனை தெறிப்புகள், கவித்துவ வரிகள் இந்நாவலுக்குள் விரவிக்கிடக்கின்றன. இந்நாவலைப் படித்துவிட்டு இவரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனககுள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

படித்துப் பாருங்கள், ஒரு புது அனுபவம் கிடைக்கும். மீண்டும் சொல்கிறேன், 344 பக்கங்கள் கொண்ட நாவலின் சாராம்சத்தை உங்களுக்குக் கடத்த வேண்டுமென்பதே என் விருப்பம். இதை முழுமையாகச் செய்தேனா என்பது இந்நாவலை நீங்கள் படிப்பதில்தான் இருக்கிறது.

நன்றி: ராமமூர்த்தி நாகராஜன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்