ஒரு மண்ணின் இரு தீராநதிகளைப் பேசும் வரலாறு


ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு குணவாகு உண்டு.

குளம்,கண்மாய், ஏரி, ஆறு, கடல் என நீர்வளம்: மரம், செடி, கொடி,தாவரம் என்பவையான நிலவளம்: இவையிரண்டின் கூட்டாய் சுட்டப்படும்.

புவியியலில் வேர் பிடித்து விருட்சமாகிறது வாழ்வியல்: வாழ்வியலின் ஊடாக வெளிப்படுகிறது மானுட குணம்.

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு தனீக்குணம் வெளிப்படும் எனக் கூறுவார்களே, அது வாழுதலும் வாழுதல் நிமித்தமுமான வாழ்வியலில் உண்டாகிற மக்களின் குணங்கள்தாம்.

இந்தியாவின் தென்மேற்கு எல்லையை அண்டக் கொடுத்தது போலுள்ள பிரதேசம் பஞ்சாப். தென்மேற்கிலிருந்து எது வந்தாலும் முதல் ”மொத்து” அதற்குத்தான். மத்திய ஆசியாவிலிருந்து, கிரேக்கத்திலிருந்து, ஆப்கானிலிருந்து அத்தனை பேரும் அந்த வழியாகத்தான் குதித்தார்கள். வாழ்வு தேடி வந்தவர்களும் உண்டு. நிலம் விழுங்கி அதிகாரப் பேயாட வந்த ஆக்கிரமிப்பாளர்களும் உண்டு. கைபர் கணவாய் வெளியிலிருந்து உள்ளே கை காட்டியது. ஐந்து நதி பாயும் பஞ்சாப் சீமை அவர்கள் குளித்தெழும் ரத்தக்குளமாகியது. படையெடுப்பு, தாக்குதல், வன்முறை - எப்போதும் எல்லையில் காத்திருக்க பஞ்சாபிகள் வாழ்க்கைக்காக போரை எதிர்கொண்டார்கள். அவர்கள் போரை வாழ்ந்தார்கள் - ஈழத்து மக்கள் போல. ஈழத்து தமிழ்மக்கள் சாவதினும் வாழ்வதற்குப் பயந்தார்கள். போரை எதிகொள்ளும் தொடர் நிகழ்வு இவ்விரு பிரதேச மக்களையும் சுருட்டி வளைத்து தனக்குள் அடக்கிக் கொண்டது. ஆக்கிரமிப்புப் போர், அதனை முறியடிக்க எதிர்த் தாக்குதல் என்னும் தொடர்நிகழ்வால் பஞ்சாப் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அச்சமற்ற வீரர்களாய் ஆனார்கள். பஞ்ச நதிகளின் ஒவ்வொரு பெண்ணும் போர்வீரனை விரும்பினாள். போருக்குச் செல்லும் போதும் தன்னை அள்ளிச் செல்ல வேண்டுமென வழக்கத்துக்கு மாறாக குரல் கொடுத்தாள். பெண்பேச்சு, பெண்பழக்க வழக்கம், பெண்மை என ஒன்று உண்டல்லவா, அந்த வழக்கதுக்கு மாறாக உருக் கொண்டாள் பஞ்சாப் மகள்.
“ நீலக் குதிரை ஓட்டிச் செல்பவனே
என்னையும் உன்
முதுகுச் சேனத்தில் கட்டிக் கொள்
இரவு இறங்குகிற போது
ஓ, நீலக் குதிரை வீரனே
என்னை வெளியே எடுத்து ஏந்திக் கொள் “
வீரமும் காதலும் தளும்பி வழிவது அந்த மண்னின் குணவாகு.

தமிழ் பேசும் நிலப்பகுதியின் ஒரு துண்டு புதுச்சேரி. இம்மண்ணின் குணங்களாக இரு நதிகள் பாய்கின்றன. விடுதலைத் தாகம்; அறிவுத் தாகம் என்னும் தீராநதிகள். பஞ்ச நதிகள் பாயும் நிலம் பஞ்சாப் என்றால், இவ்விரு நதிகள் பாயும் சேரி புதுச்சேரி. புதுச்சேரிக்கு புலம் பெயர்ந்து வந்த பெருந்தகைகளின் வரிசையைப் பார்த்தால் இவ்விரு தாகமும் சுமந்து வந்தவர்கள் என்பது தெரியும். செம்புலப் பெயல் நீர் போல கலந்தார்கள் எனில், புதுச்சேரி மண்ணின் வாகு அப்படி: புதுச்சேரியின் முன்னைய வரலாற்றைப் புரட்டினால், இருநூறு, முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னடந்தால் இந்த வீரத் தடங்கள் தென்படும். ”ஊரடங்கு உத்தரவு“ என்னும் இந்நூல் முந்திய தடத்தின் தொடர்ச்சி.

வட்டார வழக்கில் ”கால்மாடு, தலைமாடு” என்ற வழக்காறு பயன்பாடு உண்டு. இரவில் சிறுபிள்ளைகள் படுத்துத் தூங்குகையில்” கால்மாடு தலைமாடாக் கிடக்குறாங்க” என்பார்கள்.அது போல் நூலில் முதலில் வரவேண்டிய புதுச்சேரியின் போராட்டத் திறன் பற்றிய “பிரெஞ்சிந்திய புதுச்சேரி - ஒரு பார்வை” என்ற குறிப்பு, இறுதியில் பின்னிணைப்பாக தரப்பட்டிருக்கிறது. முன் பக்கங்களில் தொடக்கமாக வந்திருத்தல் வேண்டும். முன்னூறு ஆண்டுகளில் மாற்றி மாற்றி ஆதிக்கக்காரர்களின் கால்களில் மிதிபட்ட வரலாறு அது. படிப்பினைகள் உடையது. அதனைத் தொட்டுத் தொட்டு தொடர்ந்து நடந்தால், புதுச்சேரி அரசியலைப் புரிந்து கொள்ள ஆதாரமாய் அமைகிறது.

2

புதுச்சேரி மக்களை சாதாரண “உசுப்பிராணிகளாய்க்” கருதிய மொரார்ஜி தேசாய் எனற இந்தியப் பிரதமர் “புதுச்சேரி துண்டு, துக்காணிகளால் ஆனது. துண்டு, துக்காணிகளை அருகேயுள்ள மாநிலங்களோடு இணைக்கவேண்டும்” என அறிவித்தார்.

புதுச்சேரி ‘யூனியன் பிரதேசம்’: நடுவணரசின் நேரடி நிர்வாகம் எனப் பொருள். நடுவணரசு ஒரு சட்டாம் பிள்ளை. சட்டாம் பிள்ளையை மீறி வகுப்பில் ஒரு பிள்ளை சத்தம் காட்டக் கூடாது. இங்கு மாநில ஆளுநர் யார்? சட்டாம்பிள்ளையின் கையிலுள்ள பிரம்பு. இமாச்சலப் பிரதேசம். திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், அந்தமான் , சண்டிகார் - என இவை எல்லாமும் சட்டாம் பிள்ளை மேற்பார்வையில் இருக்கும் ஆளுகைப் பகுதிகள்: இங்கெல்லாம் ஒரு தலைமைச் செயலகம் உண்டு; நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. ஆனால் நடுவணரசினால் பிடித்து வைக்கப்பட்ட ஆளுநரின் உத்தரவுதான் ஓலை: அந்த ஓலை இருந்தால்தான் ஆட்சியில் எதுவும் செல்லுபடியாகும்.

இந்தத் தளைகளைத் தகர்த்து ‘புதுச்சேரிக்கு ”தனிமாநிலத் தகுதி வழங்க வேண்டும்’ - என்ற கோரிக்கை மக்களின் நெடுநாள் விருப்பம்: ஆனால் இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா மேகாலயா - ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு 1971 - 72ல் இந்திய அரசாங்கம் முழு மாநிலத் தகுதி வழங்கியது. அவ்வாறு வழங்கியது இயற்கை அமைப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டது எனக் காரணம் சொல்கிறது இந்திய அரசு. புதுச்சேரியின் இயற்கை அமைப்பு அப்படி இல்லையாம் (அது தான் மூன்று துண்டு, துக்காணியாகப் பிரிந்திருக்கிறதாம்).

பிரான்ஸ் நாட்டு வசம் இருந்த பகுதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கும் போது “பிரெஞ்ச இந்திய ஒப்பந்தம்” 1954-ல் நேருவால் கையொப்பமிடப்பட்டது: அதன்படி புதுச்சேரியை வேறொரு மாநிலத்துடன் இணைக்க வேண்டுமானால் மக்களது கருத்தை அறிய வேண்டும் என்பது உடன்பாட்டின் சாரம்: மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்காமல், ஒரு வரலாற்று உடன் படிக்கையை மாற்றியமைக்க முயன்ற பிரதமர் மொரார்ஜிக்கு, அப்போது தமிழக முதல்வராயிருந்த எம்.ஜி.ஆரின் உள்ளக்கிடக்கையும், உள்க்கூட்டும் இணவாயிருந்தன. புதுச்சேரி யூனியன் பிரதேசச் சட்டம் 1963-ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளையில், அப்போது நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் கடுமையாக எதிர்த்துப் பேசியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு வந்த போதும், மக்கள் கருத்தறிய ‘மகேசன்கள்’ தயாராயிருந்ததில்லை. வேறு வேறு மொழி பேசுகிற எல்லையோர மக்களிடம் மட்டும் பொது வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மையைக் கண்டறிந்து, அப்பகுதிகளை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்திருக்க வேண்டும். சனநாயக வழிமுறை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள், கண்ணகி கோயிலுள்ள பிரதேசங்கள் கேரளாவுக்குப் போயிருக்காது; சித்தூர், திருப்பதி - பகுதிகள் ஆந்திராவில் இணந்திருக்காது.

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மாநிலங்கள் போல் சுயாட்சித் தன்மை கொண்டவை அல்ல நம் மாநிலங்கள். மாநில அரசாட்சியைக் கலைக்கும் 356A அமெரிக்காவில் உண்டா? இந்தியாவில் கூட்டாட்சி என்பது பேருக்குத் தான். சனநாயக வழிப்பட்ட கூட்டாட்சித் தத்துவம் இல்லை.

“புதுச்சேரி அரசியல் குழப்பங்கள் இந்தியா முழுதும் எதிரொலிக்கத் தொடங்கியது. அப்போது புதுச்சேரியிலிருந்த அ.தி.மு.க ஆட்சி நிலைக்குமா, நிலைக்காதா என்ற கேள்விகள் கேட்கப்பட்ட நேரம். புதுச்சேரி அரசியல் குறித்து, குடியரசுத் தலைவரிடம் பேசிய பிரதமர் மொரார்ஜி தேசாய், புதுச்சேரியை அண்டை மாநிலங்களுடன் இணைத்துவிடுவது நல்லது என்று சொன்னதாக செய்தி வெளியானது”.

அடுத்த நாளிலேயே அனைவரும் ஒன்றிணைந்த போராட்டத் திட்டங்கள் தீட்டப்பட்டன. போர்க்களம் உருவாகியது; 1979-ம் ஆண்டு சனவரி 21-ஆம் நாள் முதல் சனவரி 31 வரை பத்து நாட்கள் புதுச்சேரியை உலுக்கிய நாட்கள், 1979 சனவரி 26-ல் நாடு முழுதும் குடியரசு நாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, புதுச்சேரி தடியடி தினத்தைக் கொண்டாடியது.

“உலகமெலாம் தூங்கிக் கொண்டிருக்கிற வேளையில், நாம் விழித்துக் கொண்டோம்” – இந்தியா விடுதலை பெற்றநாளில் உரையாற்றிய பிரதமர் நேருவின் வாசகம் இது. நள்ளிரவில் விழித்துக் கொண்டது இந்தியாதானா? விழித்திருந்தனர் புதுச்சேரி மக்கள்; குடியரசுநாள் கொண்டாடப்பட வேண்டிய 1979 சனவர் 26 நள்ளிரவு வேளையிலும் புதுச்சேரி மக்கள் அடக்குமுறையை எதிர் கொண்டிருந்தனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வீதிகளில் அடக்குமுறை பவனி வந்த போது ஒரு பள்ளிச் சிறுவனாக அதனை எதிர் கொள்கிறார் நூலாசிரியர். வீதியில் பூட்ஸ் கால்கள் கரகர ஒலி: கைகளில் லத்தி: வாசலில், கதவில் அடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கி. சிறுவனின் கண்ணெதிர் காட்சிகளாய் விரிகின்றன.

“இம்மண்ணின் மைந்தர்களால் முன்னெடுக்கப்பட்ட இணைப்பு எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற்றதின் காரணமாகப் புதுச்சேரி மண் இன்றளவும் யூனியன் பிரதேசமாகத் தனி இயல்புடன் உள்ளது. அந்தக் கால கட்டத்தில் மக்கள் மத்தியில் எழுச்சி உருவாகவில்லையென்றால், தமிழகத்துடன் புதுச்சேரி இணைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தின் ஒரு தாலுகாவாகவோ, பேரூராட்சியாகவோ, அல்லது ஒரு மாவட்டமாகவோ உருமாறி இருக்கும்.” என அபாயச் சங்கை ஊதி, வரலாற்றுப் பதிவு செய்திருப்பது அச்சிறுவன்தான்.

இணைப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் இரு முக்கிய கண்ணிகளை சுட்டிக் காட்டுதல் கடமை. ஒன்று - மக்கள் தலைவர் வ.சுப்பையா புதுச்சேரியின் சரித்திர பூர்வ உண்மைகளை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய விரிவான மடல் (பக்கம் 165 - 180) அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் நாடாளுமனர் உறுப்பினர் பூபேஸ்குப்தா, நாடளுமன்ற உறுப்பினர்களான ஏ.வி.பி. ஆசைத்தம்பி, வை.கோபால்சாமி போன்றோரை போராட்டத்துக்கு ஆதரவாய் நாட்டளுமன்றத்தில் முழங்க வைத்தது.

இரண்டாவது முக்கிய இணைப்புக் கண்ணி - இணைப்பு எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்த போது மாநில ஜனதா கட்சி எடுத்த நிலைபாடு. “புதுச்சேரியை அண்டை மாநிலங்களுடன் இணைக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை மத்தியில் ஆளும் ஜனதா கட்சியும் அரசும் தராவிட்டால் மாநில ஜனதா கட்சியை கலைத்து விடுவோம்” என கொடிபிடித்து நிமிர்ந்தார்கள். அறிவிப்புச் செய்யா விட்டால் பிப்ரவரி முதல் தேதி முதல் கட்சியைக் கலைத்து விடுவோம் என மாநிலத் தலைவர்கள் வெகுண்டார்கள்.

இதழியல், தகவல் தொடர்பில் முதுநிலைப் பட்டம்; சமூக, அரசியல் ஆய்வாளர், கட்டுரைகள், கதைகளின் படைப்பாளர், செய்தியாளர், 'நற்றிணை‘ ஆசிரியர் எனப் பல படிநிலை வளர்ச்சிகளின் உச்சத்தில் ஒரு வரலாற்றாசிரியராய். என்.எஸ்.எஸ்.பாண்டியனைக் காண்கிறோம். இன்றைய செய்தி நாளைய வரலாறு – என்ற சொல்லாடல் இன்றையதும், சற்று முன்னர் நடந்ததுமான செய்திகளைத் தொகுத்து சமகால வரலாறாக வடிவு பெற்றுள்ளது. சமகால வரலாற்றை நம்பகத் தன்மையுடன் தருவதில், சமகாலத்தை முன்வைத்துத எதிர்கால வரலாற்றை கையகப்படுத்தும் யுக்தி அடங்கியுள்ளது.

இணைப்பு எதிர்ப்புப் போராட்டத்தால், புதுச்சேரியின் தனித் தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது - இது நேர்மறைப் படிப்பினை.

நிலையான ஆட்சியும் உறுதித்தன்மையும் அற்ற ஒரு அரசியலால் இனி புதுச்சேரி சூழப்படக்கூடாது - இது எதிர்மறைப் படிப்பினை.

மாறி மாறி அரசியல் வாதிகள், ஆட்சியாளர்களின் கால்களில் பந்தாய் உருள்கிற புதுச்சேரி அரசியல் கவனிப்புக்குரியது. இந்த உதைபந்தை ஒரு புள்ளியில் நிறுத்தி எல்லைக்குள் உதைத்து தள்ள வேண்டியவர்கள் புதுச்சேரி மக்கள்.

செய்திகள், தரவுகள், நேர்காணல் (வாக்கு மூலம்), பகுப்பாய்வு, ஓரஞ்சாராமை, வரலாற்று நேர்மை – வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் முனைப்பு - எல்லாவற்றுக்கும் மேலாய் ஆண்டுக்கணக்கிலான உழைப்பு என அனைத்தின் இணைவு இந்நூல்.

ஊரடங்கு உத்தரவு (புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு)
ஆசிரியர் – பி.என்.எஸ்.பாண்டியன்
வெளியீடு – வெர்சோ பேஜஸ் : விலை ரூ 200/=
எண் 3, முதல்தளம், விமான தள சாலை,
முத்துலிங்கம் பேட்டை,
புதுச்சேரி- 605008 .
தொடர்புக்கு- 98946 60669

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

படைப்பாளியும் படைப்பும்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்