கி.ரா மீது வன்கொடுமைச் சட்ட வழக்கும் வரலாற்றுச் சிறப்புமிகு தீர்ப்பும்


மே ஏழு 2015 - நாங்கள் உறைந்து போயிருந்தோம். மதுரை நடுவா் நீதிமன்றத்திலிருந்து புதுச்சேரியிலிருக்கும் கி.ரா.வுக்கு ’சம்மன்’ வந்தது.

மூன்று ஆண்டுகள் முன் கி.ரா குடும்பத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வாழ்வுக்குத் துணையாய் வந்தவா் என்று மட்டும் அவரைக் குறிப்பிடுவதில்லை; வாழ்நாள் முழுக்க கி.ரா எழுத்துக்கும் இணையாய் நடந்துவந்தவா் கணவதி அம்மா. புதுச்சேரி அரசுக் குடியிருப்பு அடுக்குமாடி வீட்டில் விடிகாலையில் மாடிப் படியிலிருந்து இறங்குகையில், கடைசிப்படி என்று நினைத்துக் கால்வைத்து சறுக்கி விழுந்துவிடுகிறார்; இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது.

அரசு மருத்துவமனை, புதுவைக் கடற்கரை ஒட்டியுள்ள ‘தாயாரம்மா’ மருத்துவமனை, எலும்பு மருத்துவம் என அலைந்து கொண்டிருந்த கி.ரா.வுடன் நாங்களும் அலைந்து கொண்டிருந்தோம். “இடி விழுந்தான் கூத்தை இருந்திருந்து பாரு” என்கிற மாதிரி ஆகியது. அன்று முதலாய் இடுப்பு வேதனை குணமாகவில்லை.

எந்தக் கவலையும் லவலேசமும் வெளிக்காட்டிக் கொண்டவரில்லை கி.ரா. இந்த இடியிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறார் என நாங்கள் எண்ணியவேளை - நெஞ்சாங்குலை ரணமாகிற கல்லெறியாக இந்த சம்மன் வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யுமாறு, கி.ரா பதில் மனு தாக்கல் செய்கிறார். மதுரையில் இலக்கிய வாசிப்புக்கொண்ட உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ராமச்சந்திரனைப் பார்த்து பதில்மனு தாக்கல் செய்து , வழக்கைத் தொடரந்து கவனித்துக் கொள்கிறார் கி.ரா.வுக்கு கடப்பாடுடைய அகரம் பதிப்பகம் மீரா.கதிர்.

’சண்டே இந்தியன்’, 30 செப்டம்பா் 2012 இதழில் கி.ரா நேர்காணல் ”வர வரக் கண்டறி மனமே“ வெளியாகியிருந்தது. நேர்காணல் செய்தவர் எழுத்தாளர் அப்பணசாமி.

“கரிசல் பகுதியின் தலித் வாழ்க்கை பற்றி எழுத நீங்கள் அதிகம் பிரயாசைப்படவில்லையே?” (கி.ரா பதில் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.)

2012ல் நோ்காணல் வெளிவந்தது. 2015 மே 7-ல் கி.ரா.மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவாகி நடுவர் நீதிமன்றத்திலிருந்து சம்மன் வருகிறது. குறிவைத்துக் கத்தி வீச, மூன்று வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தக் கத்தியை வேறு யாரோதான் வீசியவர் கையில் தந்திருக்கவேண்டும்.

மக்கள் சக்தி பெருக்கெடுக்கும் வாய்க்கால்கள் பிரிக்கப் படாமல், தன் வாயில் அனைத்தையும் கவ்விக் கொண்டிருக்கிற ராட்சத நண்டு அரசு என்பது. அரசின் ராட்சதத் தனத்தினால் விளைந்த வினைகள் பாவப்பட்ட விவசாயிகளின் வாதனைகளாய் – ’கதவு, கரண்ட், மாயமான்’ கதைகளாக கி.ரா. எழுத்தில் மையம் கொண்டன. எடுத்த எடுப்பில் ஒரு பார்வைக்கு சபிக்கப்பட்ட விவசாயிகளின் அவலங்கள் போல் கதைகள் தென்படலாம்: அடியோட்டமாக அதிகார அரசியலின் எதிர்ப்புக்குரல் அதற்குள் ஓடுகிறது. அன்றையக் கதைகள் முதல், தமிழ் இந்துவில் வெளியான “பெண்ணெனும் பெருங்கதை”வரை, தனி மனிதன், குடும்பம், அரசு ஈறாக எந்தரூபத்தில் வந்தாலும் ’வெனைகாரப் பயலான அதிகாரத்தை ‘எதிர்த்த எழுத்தாகவே’ கி.ரா எழுத்து வருகிறது: அவர் எழுத்து முன்னோக்கி ஓடும் நதி.

பன்னிரெண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத் தலைவர், வீட்டில் தீப்பிடித்தவுடன் ஓடிஓடிப் பிள்ளைகளைத் தூக்கிவந்து காப்பாற்றுகிறார். ஒன்பது வயதுடைய நான்காவது பையன் ராகவன் உள்ளே அகப்பட்டுக் கொள்கிறான். பெரியம்மை போட்டிருந்த அந்தக் குழந்தையை ‘நீண்ட தலைவாழைக் குருத்திலையில், நிறைய விளக்கெண்ணெய் தடவி, பிறந்த மேனியாகப் படுக்க வைத்திருந்தார்கள்’. ஊரார் கூடி, அந்த நள்ளிரவில் நெருப்பை அனைத்த பிறகு எங்கும் இருட்டு. தீப்பிடித்த வீட்டிற்குள் உள்ளே தலைமயிரும் ஆடையும் இல்லாமல் கரிக்கட்டையாய்க் கருகிப் போன இரண்டு பிரேதங்கள், ஒன்றையொன்று சேர்த்துக் கட்டிப் பின்னிக் கொண்டு கிடந்தன. அம்மை கண்ட குழந்தையைத் தூக்க உள்ளே உயிரைப் பணயம் வைத்துப் புகுந்தது வேறு யாருமல்ல, அந்த ஊர்ச் சேரிப்பெண். பிச்சை எடுப்பவள்.

இறந்து கிடந்த பிரேதங்களில் இன்னொன்று யாருடையது என்று வெகுநேரம் கழித்துத்தான் எல்லோருக்கும் தெரிய வந்தது. நெருப்பில் உருகி இணைந்த அந்த ‘ரெட்டை உடலை’ நீளமான ஒரு கம்பில் துணியில் தொட்டில் கட்டி, அதில் இரண்டு பிரேதங்களையும் போட்டு புஜங்களில் கம்பைத் தூக்கிச் சுமந்து சென்று தகனம் செய்தார்கள். உயிர் எரியும் நேரத்தில் சாதியாவது, தீண்டாமையாவது!

’கிடை’ கதை - பண்ணைவீட்டு வாலிபத்தால் சீரழிவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட ’சிவனி’, உயர் சாதி அக்கிரமத்தை எதிர்த்து பேயாடுகிறதாக முடிகிற குறுநாவல். அது ஒரு குறியீடு. நேரடி வார்த்தைகள் ஒதுங்கி ஓரம்கொள்ள, கலைநேர்த்தியுடன் வெளிப்பட்ட காட்சிப்படுத்தல்.

கி.ரா.வின் “நெருப்பு” சிறுகதை, குறுநாவலான ’கிடை’, போன்ற கி.ரா.வின் படைப்புக்களை வாசித்தவர்கள் எவரும் இந்த வழக்குப்போடும் புள்ளியில் வந்து நின்றிருக்க மாட்டார்கள்.

தலித்துகள் மட்டுமல்ல, பெண்டிர், திருநங்கையர், விளிம்புநிலை மாந்தர்களெல்லாம் கி.ரா எழுத்துக்களில் தூக்கிப் பிடிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையானது. செருப்பைத் தூக்கச் சொல்லும் புதுமாப்பிள்ளை பரசு நாயக்கரை, ‘நீரு ஆம்பிளையானா என்னைக் கூப்பிடக் கூடாது’ என்று தூக்கி எறிந்துவிட்டுப் போகும் பெண் அவள்; எத்தனையோ பேர் எடுத்துரைத்தும் அவள் திரும்ப பரசு நாயக்கருடன் சேர்ந்து வாழவேயில்லை. அவள் ஒருத்தி என்றில்லை. சுயம் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களின் எதிர்ப்புக் குரலை, தன் சுயத்தை மதிக்கிற ஆணோடு இணைந்து கொள்கிறவளாக, இல்லையெனில் ஒதுக்கித் தள்ளுகிறவளாக காட்டுகிறார். வைராக்கியமும் வீறாப்பும் பெண்களுக்கு அவசியமற்றது எனக் கருதும் ஆண்கள் உள்ளனர். அவை யாவும் ஆண் சென்மத்துக்கு உரித்தானது என்று ’பட்டா’ போட்டுக் கொடுத்துள்ளதாக கருதுகின்றனர். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இவர்கள் கைவசம் உள்ள ‘பட்டா’ செல்லாக்காலம் இது .

தமிழிலக்கிய முன்னோடிகளில் ஒருவரான கி.ரா ”வீழ்வேனென நினைத்தாயோ” என்ற வீரியம் மிகக்கொண்ட வரிகளுக்கு வாழும் சாட்சியாய் 97 வயதிலும் எழுத்தைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்.

இந்த வன்கொடுமைச் சட்ட வழக்கை –
”கி. ரா மீது வன்கொடுமைச் சட்டம் மற்றும் இந்தியச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய போதிய முகாந்திரம் இல்லை. அவருக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்வதே, நீதித்துறை அவருக்குச் செய்யும் கவுரவம் எனக் கருதுகிறது”
என்று தள்ளுபடி செய்கிறார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்.

சிலருடைய கவனத்திற்குக் கொண்டுசென்றும், கி.ரா மீதான வன்கொடுமைச் சட்ட வழக்கின்மீது எதிர்வினையாற்றாத இலக்கியவாதிகளின் மவுனத்துக்கும் சேர்த்து அடி கொடுத்திருக்கிறது தீர்ப்பு.

2

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமினாதன் 16-10- 2019 அன்று வழங்கிய தீர்ப்பு (மொழியாக்கத்துக்கு துணை செய்தவர்கள்: வழக்குரைஞர் பொ.வே.ஆனந்த கிருட்டிணன் & வழக்குரைஞர் ம.ஆ.சிநேகா, திருப்பத்தூர்) -
“கருத்து வெளிப்பாட்டின் மீது , உச்சமான (Extreme) அச்சுறுத்தல் வன்முறை; அடிப்படை மனித உரிமைகள் காப்பதற்குப் பலர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.‘சுதந்திரமான உரையாடல்’ கொலையாளிக்கான அழைப்பு (Assassin’s veto) எனத் ’திமோதி கார்ட்டன் ஆஷ்’ தனது கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.எழுத்தாளர் சல்மான் ருஷ்டியைக் கொல்ல ஈரான் அதிபர் அயாத்துல்லா கொமானி, ‘பஃவா’ விதித்தபோது, “இலக்கிய விமர்சனத்துக்கான உச்சபட்ச தண்டனை கொலை” என எழுத்தாளர் வி.எஸ்.நைபால் தெரிவித்தார். பொது நிகழ்வில் ஒரு உரையாளரைப் பேசவிடாமல் மௌனிக்கச் செய்தல் “அதிகாரத்தனம்” (Heckler’s veto) என அமெரிக்க கருத்துரிமைப் போராளி ஹாரி கால்வின் ஜீனியர் விவரிக்கிறார். இவை அனைத்தும் வழக்குக் தொடுப்பவரின் அதிகாரம் எனக் கூறமுடியும். நியாயபூர்வ கருத்து வெளிப்பாடுகளுக்கு எதிராகச் சட்டப்படியான குற்றவியல் நடவடிக்கையைக் கட்டமைப்பதாகும் இது.

”வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா, திரைக்கலைஞர் அபர்ணாசென், இயக்குநர் மணிரத்னம் போன்ற கருத்துரிமையாளர் 49 பேர்களுக்கு எதிராக, முஸாபூர் நீதிமன்றத்தில் அண்மையில் பதிவு செய்த வழக்கு ஒரு சான்று. இந்திய அரசின் குறிப்பிட்ட சில நடைமுறைகள் குறித்து, விமரிசித்து இவர்கள் இந்தியப் பிரதமருக்கு சான்றாதாரத்துடன் வெளிப்படையாய் ஒரு கடிதம் வரைந்தார்கள்.சுதீர்குமார் ஓஜா என்ற வழக்குரைஞர் இவர்களுக்கு எதிராக முஸாபர் நீதிமன்றத்தில் தேசத் துரோக வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இவர்கள் மீது தேசத்துரோகம், பொது அமைதிக்குக் கேடு விளைவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்தல், வேண்டுமென்றே அவமானப்படுத்தல், சமுதாயச் சீரியல்பைக் குலைத்தல் போன்ற பிரிவுகளில் வழக்குத் தொடர அனுமதிக்கப்பட்டது. இது ’அறிவுசார் சமூகத்துக்கு’ மிகுந்த மனவேதனையை உருவாக்கியது. இந்த வழக்குப் பதிவு இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்டாலும், வழக்குத் தொடுத்த ஓஜோ மீண்டும் நீதிமன்றம் செல்வேன் என்று அறிவித்துள்ளார்.

”புகழ் பெற்ற ஓவியர் ஹீசேன் மீதான வழக்கை இங்கு நினைவு கூறல் பொருத்தமானது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நீதிமன்றங்களில் அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவரது சில ஓவியங்கள் ஆபாசமானவை, கொச்சையானவை எனக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆபாசம் என்றால் என்ன என்பதைத் தெளிவாக விளக்கி, அதன் அடிப்படையில் அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்தார் டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல். இந்த முக்கியத்துவமிக்க தீர்ப்பின் இறுதி வாசகம் கூறியது, “90 வயதின் ஓவியர் தன் இல்லத்தில் இருந்தவாறே கலைப்பணியைத் தொடரத் தகுதியானவர்”.
(ஓவியர் ஹூசேன் இல்லத்தின் மீது கல்லெறித் தாக்குதல் செய்தனர் இந்துத்வ கருத்தியலாளர்கள் என்பது இவ்விடத்தில் நினைவு கூறத் தக்கது - கட்டுரையாளர்)

”கி.ரா மீதான வழக்கு இதிலிருந்து வித்தியாசமானதல்ல; கி.ரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகள் வரிசையில் முன்னிலை வகிப்பவர். அவருடைய “கோபல்லபுரம்” நாவலின் ஆங்கில மொழியாக்கம், பெங்குயின் இந்தியா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

“1922-இல் பிறந்த கி.ராஜநாராயணன், தன் வறண்ட கரிசல் மண்ணின் அபூர்வமான நாட்டுப்புறக் கதைகள், வழக்காறுகளை ஐந்து தலைமுறைகளாகத் தொடர்ந்து சேகரித்து வருபவர். கி.ரா ஒரு நேர்த்தியான கதைசொல்லி. 1958-இல் வெளியான ‘மாயமான்’ சிறுகதை, தமிழிலக்கியப் பொற்காலத்தின் முத்திரை பதித்த கதை. அவருடைய நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு ‘எங்கே போகின்றன மந்திகள்?’ (Where are you going monkeys?) என்ற தலைப்பில் ஆங்கில மொழியாக்கம் கண்டுள்ளது. மதிப்புறு கலைமாமணி விருது, சாகித்திய அகாதமி விருதுகளின் சொந்தக்காரர்.”
என்ற ஆங்கில மொழியாக்க நாவல் மதிப்புரை கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

"இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘ஞான பீட விருதுக்கு’ ஏக தகுதியுடைவர் கி.ரா" என்ற சூழல் தமிழ் வட்டாரத்தில் நிலவி வருகிறது. இத்தகு நிறைகளும் தகுதிகளும், மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை வழக்குப் பதிவு செய்வதினின்றும் தடுக்கவில்லை.2012, செப்டம்பர் 30, “சண்டே இந்தியன்” வார இதழில் வெளிவந்த அவருடைய நேர்காணல் அதற்கு மூலமாய் அமைந்தது.

“நீங்கள் ஏன் தலித் வாழ்க்கையைப் பற்றி எழுதவில்லை?” –
என்ற கேள்விக்குக் கி.ரா அளித்த பதில், “எனக்கு அவர்கள் மொழி தெரியாது. ஆகவே அவர்களுடைய வாழ்வை என்னால் விவரிக்க இயலாது” எனத் தெரிவித்திருந்தார்.

(பள்ளர்களில் இரண்டு வகை இருக்கிறார்கள். ஆத்தா பள்ளர் என்று ஒரு இனம்; அஞ்ஞா பள்ளர் என்று ஒரு இனம். இதுவே நமக்குத் தெரியாதில்லையா? இப்ப பசு அம்மான்னு கத்துதுன்னு சொல்றோம்; எருமாடு “ஞ்ஞா” என்றுதான் சொல்லும். இத வச்சு அவங்களுக்குள்ள பிரிவு இருக்கு. அதவொட்டி பழக்க வழக்கங்கள் மாறுது. அவங்க பேச்சு மொழிகள்ள வித்தியாசம் தெரியும். இப்படி அந்த மொழி தெரியாம நா அவங்க வாழ்க்கையை எழுத முடியாது. தலித் வாழ்க்கையை அவங்கதான் எழுதணும்.”: சண்டே இந்தியன், நேர்காணல், பக்.36, செப்டம்பர் 30, 2012 - கட்டுரையாளர்)

“வழக்குத் தொடுத்தவர் இரு விசயங்களை ஆட்சேபகரமாகக் கருதுகிறார். புகார்தாரர் ‘பள்ளர்’ சமுதாயத்தைச் சார்ந்தவர்.தாழ்த்தப்பட்ட இனப்பட்டியலில் அது வருகிறது.அவர்கள் தங்களை ‘தேவேந்திர குல வேளாளர்’ எனப் பெருமையுடன் அழைத்துக் கொள்கிறார்கள்.பட்டியலினத்தவர் என்ற பிரிவிலிருந்து தங்களை நீக்கி, தனிப்பிரிவில் சேர்க்க வேண்டுமென அதில் ஒரு பிரிவினர் கோரிக்கை வைக்கிறார்கள்.மனுதாரர் சுட்டிக்காட்டும் ஒரு விசயம் – ‘தலித்’ என்ற சொற்பயன்பாடு ‘மும்பை உயர் நீதிமன்றத்தால்’ வெறுப்புக்குரிய ஒரு சொல்லாகக் கருதப்பட்டுள்ளது. அரசின் ஆணைகள் அச்சொற் பயன்பாடு குறித்தும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளன. ஆனால் ‘தலித்’ பற்றி குறிப்பிடுகிறபோது ‘அவன்’ என்று வெளிப்படுத்துகிறார்” என்பது வழக்குத் தொடுத்தவரின் குற்றச்சாட்டு.
(“ஏன்னா அது எனக்குத் தெரியாது. அவனோட மொழி எனக்குத் தெரியாது.ஆத்தான்னு சொல்றோம். அம்மான்னு சொல்றோம். அஞ்ஞா அப்படீன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?” – கி.ரா. நேர்காணல், சண்டே இந்தியன், பக்.36: கட்டுரையாளர்)

“ஆங்கிலத்தில் தன்னிலை ஒருமையில் ‘நான்’ (I) ; முன்னிலை ஒருமை ‘நீ’ (you). படர்க்கையில் ஆண்பால் எனில் ‘அவன்’ (He). ஆங்கிலத்தில் படர்க்கையில் He என்ற ஒற்றைச் சொல் மட்டுமே உள்ளது. தமிழில் படர்க்கை ஒருமையில் உள்ள ‘அவன்’ என்பது, ‘அவர்’ என மரியாதைச் சொல்லாகவும் ‘அவன்’ என மரியாதையற்ற சொல்லாகவும் இருவகையாகப் பயன்படுத்தமுடியும். பயன்படுத்தும் இடத்தை முன்னிட்டு ‘அவன்’ என்ற சொல் மதிப்புறு சொல்லாகவும் வெளிப்படுகிறது. வேண்டுமென்றே எங்களை அவமானப்படுத்துவதற்காக ‘அவன்’ என்று சொல்கிறார் என்பது புகார்தாரரின் புகார். வன்முறை தடுப்புச்சட்டம், 1989-இன் கீழ் வருவதால் பிரிவு 156(3) குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் படி இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு அது PRC எண் 80/2014 என கோப்புக்கு எடுக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சம்மன் அனுப்பப்படுகிறது.

”மனுதாரர் வழக்குத் தொடுத்தபோது, நடைமுறையிலிருந்த தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989, பிரிவு 3-இல் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. அச்சட்டத்தின்படி, தாழ்த்தப்பட்டோர் அல்லாத எவராயினும் தாழ்த்தப்பட்டோரை இழிவு செய்யும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமானப்படுத்துவாராயின், ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுக் காலம் தண்டனைக்குரியவராவார். திருத்தப்படாத சட்டத்தின்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் அல்லாத ஒருவர், பொது இடத்தில் வேண்டுமென்றே அவமானப்படுத்திப் பேசுதல், அபராதத் தொகையுடன் ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் தண்டனைக்குரியதாகும்.

”இப்பிரச்சனையில் தீர்ப்புக் கூறுமுன் ’செகன்னாத்’ என்ற இளம் தமிழறிஞரின் துணையைத் தேர்ந்தேன். அவரது கூற்றுப்படி ‘அவன்’ என்ற ஆண்பால் சொல், பொருளடக்கத்தை ஒட்டி தமிழிலக்கியப் பரப்பில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சினத்தின் வெளிப்பாடாகவும், அவமரியாதையின் வெளிப்பாடாகவும் வந்துள்ளது. சங்க இலக்கியம் முதலாகச் சமகாலம் வரை, போற்றத்தக்க, ஆளுமை கொண்டவர்களைக் குறிப்பிடவும் ‘அவன்’ என்ற ஆண்பால் ஒருமைச் சொல் கையாளப்பட்டுள்ளது. புறநானூற்றுப் பாடல் 72, “மாங்குடி மருதன் தலைவனாக” என்றுரைக்கிறது.
“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்” (திருக்குறள்-388)
திருவாசகத்தில் “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்ற வாசகம் வருகிறது. நம்மாழ்வார் திருவாய்மொழியின் முதற்பாடல் -
“உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடிதொழுது எழுஎன் மனனே”
சேக்கிழாரின் பெரியபுராணம், “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்கிறது; கடவுள் கூட ‘அவன்’ என்றழைக்கப்படுதலை மேற்காட்டிய சான்றுகள் மெய்ப்பிக்கின்றன.
“வேதமறிந்தவன் பார்ப்பான் – பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதிநிலை தவறாமல் – தண்ட நேமங்கள்
செய்வான் நாயக்கன்”
என்கிறார் பாரதியார். அவருடைய தாசனான பாரதிதாசன் தன் வழிகாட்டி பாரதியை
“பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
அவன் ஒரு செந்தமிழ்த் தேனி, சிந்துக்குத் தந்தை” 
என்று பாடுகிறார்.

மேற்காட்டிய அனைத்து எடுத்துக்காட்டுகளும் ‘அவன்’ என்ற சொல் அவமானப்படுத்தும் வார்த்தையல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. மற்றொரு பக்கம் அது ‘தோழமைச் சொல்லாகவும்’ வெளிப்படுகிறது.

”2002 – 1LR 2 Del 237 (D.P.Vats vs State) என்ற வழக்கில் டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் மற்றொரு தெளிவும் கிடைக்கிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களில் ஒருவரையோ, அல்லது ஒரு குழுவையோ நேரடியாகக் குறிக்காத பட்சத்தில் அது ஒரு குற்றச் சொல்லாகக் கருதப்படல் கூடாது. ஒரு சொல்லாடல் ஒரு குழுவுக்கு எதிராய் வெளிப்பட்டபோதும் குற்றமாக எண்ணப்படக் கூடாது.

”இவ்வழக்கில் கவனிக்கத்தக்க முக்கியமான அம்சம் ஒன்றுள்ளது. மாண்புமிகு டெல்லி உயர்நீதி மன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் ஆயத்தின் தீர்ப்பில், பட்டியலினத்தின் ஒரு உறுப்பினருக்கு முரண்பட்ட வகையில் பட்டியலினத்தைச் சார்ந்த ஒருவரையோ அல்லது ஒரு குழுவையோ எதிர்த்து வார்த்தைப் பிரயோகம் செய்வது குற்றம் என நிரூபிக்கப்படாத வரையில், இப்பிரிவு 3(1) (X) குற்றமாகக் கருதப்படாது. இதில் ஒரு உறுப்பினர் என்ற சொல் மிக நுணுக்கமான முக்கியத்துவமுடைய சொல்லாகும். அச்சொல்லாடல் ஒரு குழுவையோ, பொதுமக்களையோ அல்லாமல் ஒரு தனி மனிதருக்கு எதிராக உபயோகப் படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படாத வரையில் அது குற்றமாக எண்ணப்படல் கூடாது. பொதுமைப் படுத்தப்பட்ட வார்த்தைகளால் எல்லோரையும் குறிப்பிட்டு, தனிநபரைக் குறிப்பிடாமல் கூறப்படும் சொல்லாடல் குற்றமாகாது. பகுத்தறியும் அறிவு மிகுந்த ஒருவர் உள்நோக்கத்தோடு, சாதியின் பெயரில் அவமானப்படுத்தும், அச்சுறுத்தும் இழிசொற்களை ஒரு தனிநபரைப் பற்றிப் பயன்படுத்தினால் மட்டுமே இப்பிரிவின்படி குற்றமாகும். ஒரு குழுவைப் பொதுவாகக் குறிப்பிடுவது இப்பிரிவின்படி குற்றமாகாது.

”எக்கோணத்திலிருந்து நோக்கியபோதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-இன் சிறுகூறும் இவ்வழக்கில் தென்படவில்லை. அடுத்த கேள்வி, இந்திய குற்றவியல் சட்டம் 504-இன் கூறுகள் உள்ளதா என்ற கேள்வி.

“வேண்டுமென்றே ஒருவரை அவமானப்படுத்துவது, அது அவரைப் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் செயல்படத் தூண்டுவது; அல்லது அவரை வேறு குற்றங்களைச் செய்ய வழிவகுக்கும் என்பதை அறிந்தே செய்வது, குறைந்தபட்சம் இரு ஆண்டுகளும் அபராதத் தொகையுமான சிறைத் தண்டனைக்குரியது” என 504 சட்டப்பிரிவு சொல்கிறது.

2013(14), Sec.44, (Fiona Shrikandi Vs State of Maharastra and others) வழக்கில், உச்ச நீதிமன்றம் கீழ்க்காணும் தீர்ப்பை வழங்கியது.

“இந்திய குற்றவியல் சட்டம்பிரிவு 504-ன் கீழ்க்காணும் கூறுகள் கொண்டுள்ளது:
  1. வேண்டுமென்றே அவமானப்படுத்தல்
  2. அவமானத்துக்குள்ளானவரைப் பாதிப்புக்குள்ளாக்கிக் கேடு செய்யத் தூண்டுதல் 
  3. அத்தனிநபர் பொது அமைதியைக் குலைப்பதாகவோ, அல்லது வேறு எதிர்வினைகள் ஆற்றவோ செய்யக்கூடும் என்பதை அறிந்தே செய்தல்: இவ்வாறான சூழலில், வேண்டுமென்றே ஒருவரை அவமரியாதைப்படுத்துவது 504 இ.பி.கோ.வின் கூறுகளை நிறைவுசெய்கின்றது.அதன் முக்கிய அம்சம் அது வேண்டுமென்றே ஒருவரை அவமானப்படுத்துவது என்னும் நோக்கில் செயற்படுதல்”
“மேற்கண்ட தீர்ப்பின் விளக்கத்தின் அடிப்படையில் பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் வகையில் ஒருவரைத் தூண்டிவிடும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் 90 வயதைக் கடந்துள்ளார். அவரது நேர்காணலை வெளியிட்டு அந்த வார இதழ் 90-ஐக் கொண்டாடியுள்ளது. சில குறிப்பிட்ட கேள்விகளை அவர் முன் வைத்த போது, தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியலைத் தன்னால் ஏன் சித்தரிக்க முடியவில்லை என்பதை அவர் விளக்கியுள்ளார். தாழ்த்தப்பட்டோரை இழிவுபடுத்த வேண்டுமென்னும் உள்நோக்கம் அவருக்கில்லை. ஆகவே 504 பிரிவின் அத்தியாவசியக் கூறுகள் இவ்வழக்கில் உறுதிப்படவில்லை.

”மனுதாரரின் புகாரில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள், புகார்கள் குறித்து மட்டுமே நீதிமன்ற நடுவர் கவனம் கொண்டுள்ளார். வழக்கைத் தொடரப் போதுமான ஆதாரம் உள்ளதா என்பதை மேலெழுந்தவாரியாக பரிசீலித்துள்ளார். வழக்கின் சாதக, பாதக அம்சங்களைக் குறித்து விவாதிக்கும் நிலையில் அவருடைய எல்லைகள் இல்லை.குற்றஞ் சாட்டப்பட்டவர் தனக்குச் சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடும். ஆயினும் இதில் நடுவரிடம் விரிவான உரையாடலை எதிர்பார்க்க இயலாது.

”கருத்துச் சுதந்திரம் தொடர்பான தெளிவான விசயங்களில் மேற்கண்ட அளவீடுகளை, இயந்திர கதியாகப் பொருத்திப் பார்க்கக்கூடாது. பேச்சுரிமை மீதான தாக்குதல் இப்போது நாகரீகமாகிப்போனது. போதுமான ஆதாரம் வழக்குத் தொடுக்க உள்ளதா என விவேகமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு புகார்தாரரின் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை என்பதை நடுவர் கவனித்திருக்கவேண்டும். தீய உள்நோக்கமுடன் இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும் நடுவர் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

முஸாபர் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (FIR) மீது, வரலாற்றாளர் ராமச்சந்திர குஹாவின் வாசகம் வருமாறு:
“கருத்துரிமையை ஒடுக்க, கட்சிகளைக் கடந்து அனைத்து அரசியல்வாதிகளும் காலனியகால அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்துவது ஆச்சரியம் அளிக்கவில்லை. சனநாயக வெளி இவ்வாறான செயல்களால் சுருக்கப்படுவது கண்டும் நீதித்துறை அசைவின்றி இருப்பது அதிருப்தியை உருவாக்குகிறது. சனநாயகத்தின், சுதந்திரத்தின் குரல்களை ஒடுக்கும் அதிகார உள்நோக்கத்துடன் தொடுக்கப்படும் வழக்குகளுக்கு நீதித்துறையில் இடமில்லை; தீங்கு செய்கிற போக்குகளைத் தடுத்து நிறுத்த கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கவேண்டும். பலியெடுக்கும், வஞ்சம் தீர்க்கும் மனக்கணக்குகள் கொண்ட அரசியல்வாதிகள் மிகுதியாகி வருகின்றனர்.இச்சூழலில் மக்களின் சுதந்திரத்துக்கும் கருத்துரிமைக்கும் நீதிமன்றங்கள் சட்டப்பூர்வப் பாதுகாவலர்களாய் செயல்படுவதையே குடிமக்கள் எதிர்நோக்குகிறார்கள். இத்தொடர்பில், காந்தி 1910-இல் ஆசைப்பட்டதை, நம் காலத்திலேனும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். “ஒவ்வொரு மனிதனும் ஆணாயினும், பெண்ணாயினும் அவரவர் விரும்பிய கருத்தைத் தேர்வு செய்வது, செயலாற்றுவது, செயலாற்றுகையில் உடல் ரீதியான வன்முறை பிரயோகிப்போ, வன்முறைப் பரப்புரையோ கூடாது’.

”இம்மாதிரியான கருத்துரிமை மறுப்பு விசயங்களில் குற்றவியல் நீதிமன்ற நடுவரோ, காவல்துறையோ அவசரகதியில் செயலாற்ற கருத்துச் செலுத்தக் கூடாது. புகார்கள் ஒவ்வொரு முறை வருகிறபோதும் கருத்துரிமை தொடர்பான தங்கள் அறிவைத் தூசிதட்டி மேம்படுத்திக் கொள்ளவேண்டும். இதன் தொடர்பில் ஒவ்வொரு நீதிபதியையும், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், பெருமாள் முருகன் வழக்கில் வழங்கிய சிறப்புமிகு தீர்ப்பின் வாசகங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்வேன். மட்டுமல்ல, கவுதம் பாட்டியாவின் துன்புறுத்தல், அதிர்ச்சி அல்லது சீர்குலைவு (Offend, Shock or Disturb) என்ற நூலையும், அபிநவ் சந்திர சூட் வரைந்த குடியரசு அல்லது மறுப்பு (Republic or Rhetoric) என்ற நூலையும் நீதிபதிகள் வாசிக்க வேண்டும். எப்போதெல்லாம் இந்த முதல் மனுதாரர் போன்றவர்களின் கைகளில் விளையாட்டுப் பொருளாக நீதிமன்றம் ஆக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் நீதியின் மரியாதையும், நாட்டின் இதயத் துடிப்பும் கேள்விக் குறியாகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வெளிப்படையான பேச்சுரிமை, கருத்துரிமை தொடர்பான மோசமான தாக்குதல் தொடுத்த செய்தித் தொழில் நுட்பச் சட்டம் 2000, பிரிவு 66-A, சட்ட விரோதமானது என்ற தீர்ப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும். இது போன்ற புகார்கள், வழக்குகள் அடிப்படை உரிமைகளை மூச்சுத் திணறச் செய்பவை என்பதை நீதிபதிகள் உணரவேண்டும். புதிய நுட்பமான அணுகுமுறையைக் கையாளுபவர்களாக, உரிமைக் காப்பாளர்களாக ஆதல் அவசியம்.

”கலை ஆளுமைகள், எழுத்தாளுமைகள், இலக்கிய ஆளுமைகளைக் கவுரவித்தல் ஒரு நாகரீக சமுதாயத்தின் அடையாளம். கி.ரா.வுக்கு இப்போது 97 வயது. அண்மையில் அவருடைய துணைவியை இழந்துள்ளார். அவரைப் பக்கவாத நோய் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்வதே, நீதித்துறை அவருக்குச் செய்யும் கவுரவம் எனக் கருதுகிறது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டவாறு, அவருக்கு எதிரான வன்முறைக் குற்றச்சாட்டுக்களில் சிறிய அளவும் உண்மையில்லை. இந்த வழக்குத் தொடுப்புச் சட்டப்பூர்வ நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்குக் கொண்டது. எனவே நீதி காக்கும் நோக்கில் இவ்வழக்கு ரத்து செய்யப்படுகிறது.”

- காக்கை சிறகினிலே (ஜனவரி 2020)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்